Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதற்கும் காரணம் பிரபாகரன்தான் என்று கூறுவாரா? கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 இலட்சம் ஈழத் தமிழர்களில் 1,19,000 பேரை அவர்கள் வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தியுள்ளோம் என்று சிறிலங்க அரசு கூறியுள்ள நிலையில், முகாமிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் இன்னல்களை நேரில் கண்டு விவரித்துள்ளது கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இணையத் தளம். கிரவுண்ட் வியூவ்ஸ் என்கிற இந்த இணையத் தளத்தை சிறிலங்கப் பத்திரிக்கையாளர்களே நடத்திவருகின்றனர். இதன் ஒரு பத்திரிக்கையாளருக்கு கடந்த வாரம் மாணிக்கம் பண்ணை முகாமிற்கும், கிளிநொச்சி, மன்னார் பகுதிகளுக்குச் சென்றுவரும் வாய்ப்பு கிட்டியுள்ளது. தனது பயணத்தில் கண்டதை உள்ளது உள்ளவாறு விவரித்துள்ளார். அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று தமிழகத்தின் முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்கு இந்தியா உதவுவதாக ஒரு தோற்றமும் காட்டப்படுகிறது. அவர்களின் மறுவாழ்விற்காக உதவுகிறோம் என்று சிறிலங்க சிங்கள அரசும் கூறுகிறது. ஆனால் மீள் குடியமர்த்தல் என்ற பெயரில் அவர்கள் அனுபவித்துவரும் துயரத்தை இந்தப் பத்திரிக்கையாளர் விவரித்துள்ளார். அந்த விவரிப்பின் முக்கியப் பகுதிகள் இங்கு அளிக்கப்பட்டுள்ளது. “கடந்த வாரம் எங்களில் சிலர் மன்னார், கிளிநொச்சி பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் வாய்ப்பைப் பெற்றோம். வன்னியிலுள்ள மனிக் ஃபார்ம் என்றழைக்கப்படும் மாணிக்கம் பண்ணைக்கும் அழைத்துச் செல்லப்பட்டோம். மாணிக்கம் பண்ணையிலிருந்து வெளியேற்றப்படும் மக்களை பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பு (International Organization for Migrants) பேருந்துகளில் ஏற்றி, அவர்கள் வாழ்விடங்களுக்கோ அல்லது வேறொரு தற்காலிக முகாமான வவுனியா ஊரகப் பேரவைக்கோ அல்லது அம்மக்களை மறு சோதனைக்கு உட்படுத்தவோ கொண்டு செல்கிறது. நாங்கள் கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு வவுனியா வந்தோம். அப்போது அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மாணிக்கம் பண்ணையிலிருந்து இடம்பெயர்ந்தோர் பேருந்துகளில் அங்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வவுனியா ஊரகப் பேரவை மைதானத்திலிருந்த கூரையின் கீழ் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களைக் கொண்டு வந்த பேருந்துகளில் ஐஓஎம் என்று பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பின் பெயர் ஒட்டப்பட்டிருந்தது.

அவர்கள் யாரோடும் எங்களால் பேச முடியவில்லை, அவர்களைச் சுற்றி சிறிலங்க இராணுவத்தினர் நின்றுகொண்டிருந்தனர். சிறிது நேர முயற்சிக்குப் பின் 13 பேரிடம் பேசினேன். அவர்களில் பலர் பெண்கள். இவர்களின் குடும்பத்தில் குறைந்தது ஒருவராவது போரிலோ அல்லது அதற்கு முன்னரோ கொல்லப்பட்டவர்களாகவோ அல்லது சோதனைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு மீ்ண்டும் திரும்பதவராகவோ இருப்பதை அறிந்தோம். தங்கள் குடும்ப உறுப்பினர் திரும்பாதது குறித்து இரண்டு பெண்கள் மட்டுமே பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்திடம் புகார் செய்ய முடிந்தது. தன்னுடைய சகோதரி ஒருவரை (விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்) பம்பை மது மறுவாழ்வு மையத்தில் ஒரு முறை பார்த்ததாகவும், அவரைக் காண மறுமுறை சென்றபோது, அவரை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறிய அதிகாரி ஒருவர், மேற்கொண்டு எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லையென்றும் கூறியதாக எங்களிடம் கூறினார்.

மற்றொரு பெண் கருவுற்று இருந்தார். முகாமின் 4வது மண்டலத்தில் இருந்தபோது அவருடைய கணவரை இராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர், இதுவரை திரும்பவில்லை. இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. வவுனியாவில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள (இருந்த) தனது வீட்டிற்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் மானிக் ஃபார்மில் உள்ளவர்களை மட்டுமே மீள் குடியமர்த்துகிறார்கள் என்றும், தங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்று அச்சம் தெரிவித்தார்.

கிளிநொச்சியிலுள்ள துணுக்கை என்ற இடத்திற்குச் சென்றோம். ஆச்சரியமான விடயமாக அங்கு பல வீடுகள் அப்படியே இருந்தன. முள்வேலி முகாம்களில் இருந்து தங்களுடைய இல்லங்களுக்குத் திரும்பிய மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். ஆயினும் அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படவில்லை. இங்கு வந்தப் பிறகும் தாங்கள் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

இந்தியா செய்த உதவியல்ல!

துணுக்காயில் மீள் குடியமர்த்தப்பட்ட 1,200 குடும்பங்களுக்கும் ரூ.5,000 ரொக்கமும், சில மாதங்களுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 ஆயிரம் வைப்புத் தொகை வங்கியில் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த உதவிக்கான நிதிகள் குறித்து ஆழமாக விசாரித்ததில், மீள் குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் (UNHCR) மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் ரூ.25,000 கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இதைத்தான் சிறிலங்க அரசின் மீள் குடியமர்த்தல் அமைச்சகத்தின் மூலம் இம்மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது!

இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில மாதங்களுக்கான உணவுப் பொருட்களை (ரேஷன்) ஐ.நா.வின் உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாகும் (இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உணவே வன்னி முகாம்களில் இருப்போருக்கு அளிக்கப்படுகிறது).

இந்த ரூ.25,000 தொகை 2001இல் ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியோடு நடந்த வடகிழக்கு சமூக மறுவாழ்வு மேம்பாட்டு அமைப்பின் பரிந்துரையின் படி நிர்ணயிக்கப்பட்டதாகும் என்றும் தெரியவந்தது.

அகதிகளுக்கு அளிக்கப்படும் நிவாரணங்கள் அனைத்தும் பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பிடமிருந்தோ அல்லது ஐ.நா.விடமிருந்தோதான் கிடைத்து வருகிறது என்பதையும் அறிந்தோம்.

(ஈழத் தமிழர்கள் தகரத்தைத் தாண்டி வேறு எதையும் இந்தியா கொடுக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. அப்படியானால் அவர்களுக்காக சிறிலங்க அரசிற்குக் கொடுக்கப்பட்ட ரூ.500 கோடி என்ன ஆனது?) தாங்கள் வாழ்ந்த ஊர்களுக்கு கொண்டு செல்லவில்லையெனில் வன்னி முகாம்களில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று 4,6,7வது மண்டல முகாம் மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட மக்கள் மற்ற இடங்களில் அனுபவித்துவரும் துயரத்தை தாங்கள் அறிந்திருப்பதாகத் தெரிவித்தனர். இதனை அவர்கள் எங்களிடம் கூறும்போது அவர்களையும், எங்களையும் இராணுவத்தினர் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். ஆயினும் அவர்கள் துணிச்சலாகப் பேசினர். தங்களது குடும்பத்தைச் சேர்ந்த இளம் வயதினர் - ஆண்களும் பெண்களும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு எவரும் திரும்பவில்லை என்று பலரும் தெரிவித்தனர். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் வவுனியா முகாமில் உள்ளார்களா என்று பார்த்துத் தெரிவிக்குமாறு சில பெண்கள் பெயர்களை எழுதி எங்களிடம் அளித்தனர். அப்படிப்பட்ட 14 தற்காலிக முகாம்கள் அப்பகுதியில் உள்ளதாகவும் எங்களுக்குத் தெரிவித்தனர்.

அவர்கள் அளித்த பெயர் பட்டியலை வைத்துக்கொண்டு வெளியே செல்லாதீர்கள், உங்களுக்குப் பிரச்சனையாகிவிடும் என்று அங்கு சேவையாற்றிடும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர் கூறினார்.

இவ்வாறு விசாரணைக்கு அழைத்துச் செல்பவர்கள் திருப்பாதது குறித்தும், மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பாதது குறித்தும் பன்னாட்டு அமைப்புகளிடம் புகார் செய்யவில்லையா என்று கேட்டதற்கு. பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்தினர் உட்பட எந்த அமைப்பினரையும் முகாம் மக்களோடு பேச கடந்த ஜூலை முதலே அனுமதிக்கவில்லை என்று தெரிவித்தனர்.

மன்னாரில் கட்டுப்பாடுகள்

மன்னாருக்குச் சென்றோம், அங்கு கடந்த 12 ஆண்டுகளாக போய் வந்திருக்கின்றேன், ஆனால் இதுநாள் வரை பெறாத பாதுகாப்பு அனுபவத்தைப் பெற்றேன். எங்களிடம் இருந்த தேச அடையாள அட்டையை மன்னார் தீவின் நுழைவிலேயே பறித்துக் கொண்டு, தற்காலிக அடையாள அட்டையை வழங்கினர்.

மன்னாருக்கு அங்கு வரும் வெளியாருக்கு மட்டும் இப்படி தற்காலிக அடையாள அட்டை வழங்குகின்றனர். அதில் எத்தனை நாட்கள் மன்னாரில் இருப்பீர்கள் என்பது குறிக்கப்படுகிறது. எங்கே தங்கப்போகிறீர்கள், என்ன காரணத்திற்காக வந்தீர்கள் என்றரெல்லாம் கேள்வி கேட்டனர். அப்போது அங்கே வந்த ஒரு பெண்ணை அதிக காலம் தங்கி விட்டாய் என்று கூறி அவளின் அடையாள அட்டையை இராணுவத்தினர் தர மறுத்தனர். இருவருக்கும் இடையே மொழிப் பிரச்சனை வேறு. என்னோடு வந்தவர் தலையிட்டுப் பிரச்சனையைத் தீர்த்தார். எங்களோடு வந்த சிங்களப் பெண், இராணுவத்தினரை நோக்கி சிங்களத்திலேயே திட்டித் தீர்த்தார். காரணம்: அவருக்கு தவறான அடையாள அட்டையை இராணுவத்தினர் கொடுத்தது!

மன்னாரில் எங்களோடு எந்த அதிகாரியும் பேச மறுத்தனர். இராணுவத்தினருக்கும் நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்ட மோதலால் இந்த நிலை. அங்கு பாதுகாப்பில் இருந்த அதிபர் அதிரடிப் படை (Presidential Task Force) அளித்த கடிதத்தை வைத்திருந்தால்தான் சேவைகளிலோ அல்லது மறுசீரமைப்புத் தொடர்பான நடவடிக்கைகளிலோ ஈடுபட அனுமதிக்கப்படுகின்றனர்.

இங்குள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு எந்த நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை, அவைகளைப் பெறுவதற்கு வசதியும் இல்லை. “ வன்னி முகாமில் இருந்தபோதாவது சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத்தது, இங்கு அதுவும் இல்லை” என்று ஒரு பெண்மணி பரிதாபத்துடன் கூறினார்.

“உறவினர்களுடன் தங்கச் சொல்கின்றனர், எவ்வளவு நாட்களுக்கு அவர்கள் எங்களுக்கு சோறு போடுவார்கள்” என்று அந்தப் பெண்மணி கருவுற்று இருந்தார். இப்படி உறவினர்களுடன் வாழ்ந்து வருபவர்கள் பற்றிய விவரங்கள் ஏதும் இருக்குமா என்று சேவையமைப்புகளின் ஊழியர்களிடம் கேட்டதற்கு அப்படி ஏதும் இல்லை என்று கூறினர்.

மன்னாரின் தெற்கே உள்ள மூசாலை, வடக்கே உள்ள அடம்பன் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். மூசாலையில் 651 தமிழ்க் குடும்பங்களும், 700 முஸ்லீம் குடும்பங்களும் மீள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். தங்களுக்கு வழங்கப்பட்ட 15 தகரங்களைக் கொண்டு 16க்கு 12 சதுர அடி அளவிற்கு குடிசைகளை அமைத்துக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு தரை போட்டுக்கொள்ள ரூ.5,000மும், 5 மூட்டை சிமெண்டும் அளிக்கப்பட்டிருந்தது. காட்டிலிருந்து கட்டைகளை வெட்டி வந்து அமைக்கப்பட்ட இந்தக் குடிசைகளுக்கு துணியால் சுற்றி மறைப்பு கட்டியிருந்தனர்.

தங்களுக்கு கழிவறை வசதியில்லை என்றும், இரவு நேரத்தில் காட்டிற்குச் சென்று - பூச்சி, பாம்பு, யானை அச்சுறுத்தல்களுக்கு இடையே - கழிக்கச் செல்ல வேண்டியதுள்ளது என்றும் பெண்கள் கூறினர். ஆனால் இங்குள்ள கிராமங்களுக்கு இடையே இராணுவ முகாம் நிரந்தரமாக அமைக்க கான்கிரீட் கட்டடங்கள் எழுப்பும் வேலை நடைபெற்று வருகிறது!

ஆனால் மூசாலையில் இவர்களைக் குடியமர்த்த ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது நிர்வாகம். ஆனால் சாலை வசதிகள் கூட இல்லை!

கள்ளிமோடை என்ற இடத்தில் உள்ள தற்காலிக முகாமைக் கண்டோம். அங்கு நாங்கள் கேட்ட சத்தம் பயங்கரமாக இருந்தது. அங்கு இரண்டு தமிழ் பேசும் நபர்கள் பேருந்தில் வந்திறங்கும் மக்களை சோதனை செய்வதாகக் கூறினர். அவர்களை அழைத்து வந்த பன்னாட்டு இடம்பெயர்வு அமைப்பினர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டதற்கு, எவரும் இல்லை என்று கிண்டலாக ஒருவர் பதிலளித்தார்.

சிறிது நேரத்தில் பேருந்தில் ஏற மறுத்து ஒரு பெண் அடம் பிடித்தார். அவரை மற்றவர்கள் சாந்தப்படுத்தி பேருந்தில் ஏற்றினர். “இப்போது புரிகிறதா ஏன் அந்தப் பெண் பேருந்தில் ஏற மறுக்கிறார் என்று” என அந்த நபர் என்னைப் பார்த்துக் கூறினார். தங்கள் வாழ்விடங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பேருந்தில் ஏற்றப்படுவோரை பல இடங்களில் இவ்வாறு சோதிக்கின்றனர் என்றும், அப்போது பலர் கடத்தப்படுகின்றனர் அல்லது காணாமல் போகின்றனர் என்று அங்கு பணியாற்றிடும் ஒரு தொண்டு நிறுவன ஊழியர் கூறினார்.

அடம்பனில் எந்த கட்டடமும் இல்லை, அங்கு கொண்டு வரப்பட்ட மக்கள் அனைவரும் அரசு கட்டடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த கட்டடத்திற்கு மேற்கூரை இல்லை, சுற்றிலும் வனம். சிலர் கூடாரத்தில் தங்கியிருந்தனர். சிலர் மரங்களின் கீழ் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நாங்கள் சென்றிருந்தபோது மன்னாரில் தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்தது.

FILEஉயிலங்குளம் அருகே கண்ணி வெடி எச்சரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அங்குள்ள குருகுலம் பள்ளிக்கு மாணவர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். கூரையற்ற பள்ளி அது!

நாங்கள் தனது குழந்தையோடு மட்டுமே இருந்த பல பெண்களைப் பார்த்தோம். தனக்கு அளிக்கப்பட்ட தகரங்களில் ஆடையின் ஒரு முனையைக் கட்டி, மற்றோரு முனையை மரத்தில் கட்டி, அந்தத் தொட்டிலில் குழந்தையை இட்டுவிட்டு, வீடு கட்ட மரம் எடுக்க காட்டை நோக்கி நடந்தாள் ஒரு பெண்.

உழைத்துத் தங்களைக் காப்பாற்றக் கூடிய ஆணோ பெண்ணோ இல்லாத பல குடும்பங்களைக் கண்டோம். போரிலோ அதற்கு முன்னரோ அவர்களை இழந்துள்ளனர் அல்லது பாதுகாப்புப் படையினர் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டு வராதவர்கள். தங்கள் வாழ்விடத்திற்கு வந்தவர்களின் வாழ்வு நாம் நம்புவதுபோல மகிழ்ச்சியானதாக இல்லை.

வீடின்றி, பள்ளியின்றி, மருத்துவமனையின்றி, குடிக்க நல்ல நீர் இன்றி, மின்சாரமின்றி, பிழைக்க வழியேதுமின்றி, சுதந்திரமாக நடமாட உரிமையின்றி... இடம் பெயர்ந்தோர் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பிவிட்டார்கள் என்று கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது என்று தெரியவில்லை” என்று கூறி முடித்துள்ளார்.

வன்னி முகாம்களில் இருந்து தமிழர்களை 4 நாட்களில் விடுவித்தார் என்று போற்றப்படும், “அங்கு எல்லாம் நன்றாக உள்ளது” என்று கூறும் தமிழக முதல்வர் கருணாநிதி இதையெல்லாம் அறிவாரா? மத்திய அரசு வழங்கிய நிதியுதவி எங்கே சென்றது என்று கேட்பாரா? அல்லது இதற்கும் காரணம் பிரபாகரன்தான் என்று கூறுவாரா?

நன்றி thedipaar.com

படங்களைப் பார்வையிட‌ http://www.thedipaar.com/news/news.php?id=10507&cat=eelam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.