Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதன், ஜனவரி 6, 2010 09:00 | நிருபர் கயல்விழி

முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன்

(இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்)

கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் தாக்கத்தாலும் ஏற்பட்ட அதிர்ச்சி, சோகம், மனத்தளர்ச்சி ஆகியவற்றை தமிழீழத்திலும், உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களது மனங்களிலிருந்து என்றென்றும் அழித்தொழிக்க முடியாது. முப்பது வருடங்களுக்கும் மேலாக இலங்கையரசையும் அதன் ஆட்சியாளர்களையும் உறக்கமின்றி திகைக்கவைத்தது மட்டுமன்றி, உலகநாடுகள் பலதும் பொருளாதார, ஆயுத மற்றும் படையுதவிகளையும் செய்து பராமரித்து வந்த இலங்கையின் இராணுவத்தை நிலைகுலையச் செய்த வீரம் செறிந்த ஒரு இயக்கத்தைப் பற்றி, இன்று பல்வேறு ஊடகங்கள் தங்களுக்கு தெரிந்த வகையில், பல்வேறு தவறான செய்திகளை வெளியிட்டு ஈழத்தமிழர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்ற இந்நிலையில், தமிழீழ மக்களின் தற்போதைய உண்மை நிலையையும், அவர்களுக்காக காத்திருக்கும் எதிர்காலம் பற்றியும் எந்தபக்கமும் சாராமல் நடுநிலைமையோடு நின்று மீள்பார்வை செய்வதற்கு இது தகுந்த நேரம் எனலாம்.

இலங்கையில் தமிழீழம் என்ற கோட்பாடு திடீரெனத் தோன்றிய ஒரு கருத்து அல்ல. ஈழத்தமிழர்கள், போர்த்துகீசியர்கள், ஒல்லாந்தர்கள் காலம் வரையும் தமது சொந்த அரசையும் (யாழ் அரசு, கோட்டை அரசு, கண்டி அரசு, வன்னி சிற்றரசு என) இறையாண்மையையும் பேணி வந்தவர்கள் என்பது சரித்திரம் அறிந்த உண்மை. ஆனால் அந்த இறையாண்மையுள்ள தமிழீழத்தின் நிலைப்பாட்டை, சிங்கள ஆதிக்க வெறி பிடித்த பேரினவாத அரசாங்கங்களிடம் நிலைநாட்டுவதற்கு அளப்பரிய தியாகம் அவசியம் என ஈழத்தின் தந்தை செல்வநாயகம் மற்றும் வி.நவரத்தினம் போன்ற தமிழீழ அரசியல்வாதிகள் பலரும் முன்பே வலியுறுத்தி இருந்தனர்.

இந்த அடிப்படையில், தமிழீழ இறையாண்மைக்காகவும், தன்மானமிக்க தமிழர்களின் எதிர்காலத்திற்காகவும் ஏறத்தாழ 33 வருடங்களாக ஆயதமேந்தி போராடி 33,000 மாவீரர்களின் உயிர்களையும் அதுமட்டுமன்றி பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் உயிர்களையும் தியாகம் செய்து, முள்ளிவாய்க்கால் போரின் இறுதிவரை, தங்களது ஆயுதங்களை மௌனிக்கின்ற நிலையை எடுக்கும் வரையும் விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிராபகரன் அவர்கள் அந்தக் கொள்கையை அதுவரைக்கும், சர்வதேச அரசுகளின் அழுத்தங்களையும் மீறி, தளராது வைத்திருந்ததை நாம் அறிவோம். சர்வதேச தமிழ் சமுதாயத்திடம் குறிப்பாக இளையோர்களிடம் அந்தக் கொள்கையை கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில் அவர் குறிப்பிட்டதை உலகமெங்கும் வாழும் எட்டு கோடித் தமிழர்கள் ஒருவரும் மறவோம்.

மேல்நோக்கிப் பார்க்கும்போது நகைப்பிற்கொத்த பிரச்சனையாகத் தோன்றினாலும், ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் பிரச்சனை என்ற கோணத்தில் “புலிகள் முள்ளிவாய்க்கால் (வன்னி) யுத்தத்தில் வெற்றியடைந்திருந்தால் அவர்களது (அல்லது ஈழத்தமிழரின்) நிலை என்னவாகியிருக்கும்?” என்ற கேள்வியையும் அதன் பதிலையும் நாம் ஆராய்ந்தோமானால், பல சுவையான காரணங்களை நாம் அவதானிக்க முடியும். அதனுடன் இக்கட்டான பலகேள்விகளும் ஒன்றிற்குமேல் ஒன்றாக எழலாம்.

1. முள்ளிவாய்க்கால் போரில் விடுதலைப்புலிகள் வெற்றி ஈட்டியிருந்தால், உலகம், தமிழீழம் என ஒரு தனிநாட்டை ஏற்றிருக்குமா?

2. உலகத்தில் இயங்கும் வெளிநாட்டுச் சக்திகள் யுத்தம் முடிந்துவிட்டது என அறிந்த பின்னும் இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் ஆயுதம், படைகள் ஆகியவற்றை வழங்கி வருவதை நிறுத்துவார்களா?

3. உலகநாடுகள் தங்களது இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் முண்ணுக்குப் பின்னாகப் பேசுவதுபோல் எந்த ஒரு நாடேனும், புலிகள் ஒரு விடுதலை இயக்கமே அன்றி அது பயங்கரவாத இயக்கம் அல்ல என மாற்றச் சொல்ல இயலுமா?

4. முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னர், தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களையும், இனஒழிப்பு நடவடிக்கைகளையும், இனம் கண்டு நடவடிக்கை எடுக்க உலகம் தயாரா?

பொதுவாக, மேற்கூறிய எல்லாக் கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்ற ஒரு வார்த்தைதான் உலக நாடுகள் அனைத்திடமிருந்தும் வரக்கூடிய பதிலாக அமையும் என்பதில் நம்மனைவருக்கும் எள்ளளவும் சந்தேகம் இராது. அப்படியே ஒரிருநாடுகள் ‘தர்மம்’ எனும் அடிப்படையில் செயற்பட எத்தனித்தாலும் அவற்றின் சுயநலம் அவ்வாறு செயற்படவிடுமா?; என்பது சந்தேகித்திற்குரியதே. உலகநாடுகளின் நீதியோ, தர்மமோ, ஒரு சிறிய நாட்டில் வசிக்கும், அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒர் இனம், தனது இனத்தைக் காப்பதற்கு நிகழ்த்தும் போராட்டத்தை, அந்தக் கோணத்தில் பார்ப்பதற்குப் பதிலாக, தமது அரசியல், பொருளாதார, பூகோள ரீதியில், சுரண்டும் மனப்பான்மையுடன் நோக்குதல் என்பது காலங்காலமாக சரித்திராசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்ட ஓர் உண்மையாகும். எனவே, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் போரில் (அல்லது 4ம் கட்ட ஈழப்போரில்) வெற்றியடைந்திருந்தால், தமிழீழம் உருவாகியிருக்கும் என்று நாம் நினைத்திருந்தோமானால், அது உலக அரசியலை சரிவர நாம் புரிந்துக்கொள்ளவில்லை என்பதே அர்த்தமாகும். அதையே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், அப்படியான முள்ளிவாய்கால் வெற்றியானது, புலம்பெயர் சமூகத்திற்கு, அரசியல் ரீதியாகத் தமிழீழத்தைக் கோருவதற்கு, மேலுமோர் உந்துசக்தியாக மட்டுமே இருந்திருக்கும் என்றே அவர் நினைத்திருப்பார். ஆனால், வல்லரசுகள் அடங்கிய 20 நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த போரில், பயங்கரவாதிகள் என முத்திரைக் குத்தப்பட்ட ஒரு இயக்கம் அவர்களை எதிர்த்து வெற்றி பெறுவதை அவர்கள் சகித்துக் கொள்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? அவர்களின் ஆணவமும் குறுகிய மனப்பான்மையும் அதற்கு இடம் கொடுக்காது. அப்படியான வெற்றியை வைத்து அரசியல் பேச முயலும் புலம்பெயர் சமுதாயத்தின்மீதும், உலகநாடுகள் ‘பயங்கரவாத’ முத்திரையைக் குத்தி அதன் கண்ணூடாகத்தான் தமிழீழ பிரச்சினையையும் நோக்கியருப்பார்கள் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நைஜீரியாவில் ‘BIAFRA’ போரின்போது நடைபெற்ற இப்படியான ஒரு சோக நிகழ்வையும் அதன் போராட்ட வரலாற்றையும் உற்று நோக்கினால், பயங்கரவாதம் என்ற சர்ச்சைகளே இல்லாத அந்த நாட்களில்கூட, உலகநாடுகள் ஒரு விடுதலைப் போராட்டத்தை எப்படி கையாண்டன என்பதே, நமக்கு தௌ;ளத்தெளிவாக பறைசாற்றும் சான்றுகளாகும்..

நாம் முள்ளிவாய்க்காலில் வெற்றியடைந்திருந்தால்.. என்ற பிரம்மையை ஒரு புறம் வைத்துவிட்டு, மீண்டும் யதார்த்த நிலையை இனி நோக்குவது பொருத்தமாயிருக்கும். இந்நிலையில் போரின் பின்விளைவுகளை அதாவது இலங்கை, இந்தியா, வெளிநாடுகள் ஆகியவற்றின் தனித்தனி நிலைப்பாடுகள் அடங்கிய மூன்று கோணங்களில் பார்க்கலாம். இக்கட்டுரையை வாசித்தபின் தமிழ் உறவுகள், தமது சொந்த அனுமானங்களைத் தடையின்றி உறுதிப்படுத்துவார்கள். அதாவது முள்ளிவாய்க்கால் போரின் முடிவு முற்றிலும் அழிவுசார்ந்ததா அல்லது அதனால் ஏதேனும் அரசியல் ரீதியான விளைவுகள் உருவாகியுள்ளனவா? எனத் தீர்மானிப்பார்கள்.

இலங்கையின் நிலைமை: ஈழத்தமிழ் மக்களின் ஆயதப் போராட்டம் தொடங்கிய நாள் முதல், இலங்கை உலகநாடுகள் பலவற்றிடம் உதவி எதிர்பார்த்து பிச்சசைப்பாத்திரம் ஏந்தித்திரிந்தது என்பது அனைவரும் அறிந்ததே. யார் எந்த வகையில் உதவிகளை அளித்தாலும் அதை ஏற்பதே இலங்கை அரசின் கொள்கையாக இருந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் இதற்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். உண்மையை கூறுவோமானால், இலங்கையின் அத்தகைய நிலை, கணிசமான பலனை நீண்டகாலமாக அதற்கு கொடுத்து வந்தது என்பதே உண்மை. ஆனால் அதே நேரத்தில், உதவிகளைப் பெற்ற போதிலும், அந்த நாடுகளிடம் தனது எந்தவிதமான பிடிகளையும் கொடுக்காத வகையில் தன்னை பாதுகாத்துக் கொண்டது இலங்கை. ஆனால், யுத்தத்தின் கடைசி மாதங்களில், இவ்விதக் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையரசால் நடக்க முடியவில்லை. காரணம் விடுதலைப்புலிகளின் தாக்குதலின் உத்வேகம் என்பதே உண்மை. இதனால், விடுதலைப்புலிகளைச் சமாளிப்பதற்கு பெருந்தொகை கொண்ட பொருளாதார நிர்ப்பந்தத்திற்கும் நெருக்கடிக்கும் இலங்கையரசு தள்ளப்பட்டது. ஆனால், இலங்கைக்கு அத்தகைய பெருந்தொகையைச் சீனாவினால் மட்டுமே கொடுத்து உதவமுடிந்தது. இதற்கு பரிகாரமாக, ராஜபக்ஷே இலங்கை முழுவதையும் சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கும் தயாராக இருந்திருப்பார் என்பதே அவரது தற்போதைய போக்கு எடுத்துக்காட்டுகிறது. 25,000 க்கும் மேற்பட்ட சீனத் தொழிலாளர்களை (அல்லது படையினரை?) இலங்கைக்குள் வரவழைத்ததைவிட நமக்கு வேறென்ன உதாரணம் தேவை. இதே பாணியில், இலங்கையின் முன்னாள் சிங்கள பேரினவாத ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, “புலிகளை வெல்வதாயின் நான் பிசாசின் உதவியைக்கூட நாடத்தயார்” என முன்னர் ஒரு முறை கூறியது ஞாபகமிருக்கலாம்.. ஆனால் வித்தியாசம் என்னவென்றால் ஜே.ஆர்.ஜே வார்த்தை ஜாலம் மட்டுமே காண்பித்து வந்தார். ஆனால் மகிந்தா ராஜபக்ஷே அதை நடைமுறையிலேயே காண்பித்துவிட்டார். எனவே, புலிகளின் போர் தந்திரம், ஈழத்தமிழ் உறவுகள் நினைப்பதுபோல் வீண்போனதும் முடிந்து போனதும் அல்ல. புலிகள் இலங்கையரசை, சீனாவின் பிடியில் தள்ளியவுடன், தமிழர்களுடைய பிரச்சினைகளை செவிமடுக்க மறுத்த எத்தனையோ நாடுகள், தமிழர்களின் பிரச்சனைகளை கேட்கவும், தீர்க்கவும் முன்வருவதை நாம் அனைவரும் பார்த்து வருகின்றோம்.

விடுதலைப்புலிகளின் போராட்டத்தினால், இலங்கை மட்டுமே ஓர் நிர்பந்தத்திற்;குள் தள்ளப்படவில்லை. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான் உண்மை. இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, அடிப்படையில், தமிழீழம் அமைக்கும் கொள்கைக்கு எதிராகவே இருந்து வருவதை நாம் அறிவோம். இலங்கையில் தமிழீழம் உருவானால், அது தமிழ் நாட்டில் பிரிவினைவாதத்தினை ஊக்குவிக்கும் என்ற தேவையற்ற பயம் இதற்கு ஒருகாரணமாய் இருந்திருக்கலாம். இந்திரா பிரதமராக இருந்தபோது, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து, வங்கதேச விடுதலைக்கு உதவியபோது, அதே வங்கமொழி பேசும் மக்களை உள்ளடக்கியதும், வங்கதேசம் பிரிவதற்கு மிகவும் உதவியாக இருந்த இந்தியநாட்டின் ஒரு மாநிலமாகவும் இருந்த மேற்குவங்கம் தனிநாடாகப் பிரிந்து போய்விடவில்லை. மேலும் தமிழ்நாட்டில், அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என தனித்தமிழ்நாடு கோரிய கட்சிகள், தடைச்சட்டம் வந்ததும், 1962 களிலேயே திராவிடநாடு கோரிக்கையை சுலபமாக கைவிட்டுவிட்டனர். அதன்பின்னர், அழகு தமிழிழ், மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி! என்று முழங்கிய போதிலும், திராவிடக் கட்சிகளால் வெற்றிபெற முடியவில்லை. கூட்டாட்சிக்குப் பதிலாக கூட்டணி ஆட்சியில் பங்குமட்டுமே பெறமுடிந்தது.

ஆரம்பக் காலத்தில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையானது, குறுகிய கண்ணோட்டங்கள் கொண்ட தற்போதைய நிலைப்பாடு போல், எதுவும் பெரிதாகப் பாதிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்திராகாந்தி அம்மையார் காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவின் இராணுவ நிலைப்பாட்டில் மிகுந்த அக்கறையுடனும் அவதானத்துடனும் இருந்துவந்தது. இதனால் முக்கிய கேந்திர இராணுவக் கட்டுமானங்களை, சீனா, பாக்கிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால், தென்னிந்தியாவில் பெங்களுரில் நிறுவியதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய நிலையில், சோனியா அம்மையாரின் கண்கானிப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ அல்லது இந்திய அரசாங்கமோ, சீனா, இந்தியாவின் வாசற்படிவரை வந்து நிற்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. சோனியா அம்மையாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் புலிகளை இலங்கையில் அழிப்பதில்தான் எல்லாக் கொள்கையிலும் முதன்மைபெற வேண்டிய கொள்கைபோல் அமைந்தது எனக்கூறின் அது மிகையாகாது. ஏதோவொரு வகையில், சீனாவிற்கு தலைசாய்க்கும் இலங்கையரசை காலப்போக்கில் தன்வசமாக்கலாம் என்றவொரு அசட்டு நம்பிக்கை இந்தியாவிற்கு இருந்துவருகின்றது என்றுதான் கூறவேண்டும். இலங்கையின் எல்லா எல்லைகளிலும் (கச்சைத்தீவிலும் கூட) சீனா நுழைந்ததை இந்தியாவால் விமர்சிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத நிலை உருவாகிவிட்டதே தற்போதைய அதிர்ச்சிகலந்த உண்மை. சீனாவின் இத்தகைய ஆதிக்கம், இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்திய சமுத்திரத்தில் ஆர்வம் கொண்ட ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இப்பிரச்சனையில், தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட பல புத்திசீவிகளின் புத்திமதிகளைக்கூட கேட்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமையவில்லை. ‘எதிரிக்கு எதிரி தனது நண்பன்’ என்கிற வட்டார வார்த்தைக்கிணங்க, புலிகளுக்கு எதிராக, இலங்கையை ஆதரிப்பதில் மட்;டுமே, இந்திய அரசின் நாட்டம் சென்றது. “தன்னுடைய மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனப் பிழையாக இருந்தால்போதும்” என இந்தியா கருதி வருவது மட்டுமன்றி சீனாவிலும் பார்க்க இலங்கையிடம் கூடியநட்பு வைத்தால் எல்லா பிரச்சினைகளும் தானாக தீர்ந்துவிடும் என இந்தியா நம்பி வருவதே இந்தியா செய்துவரும் வரலாற்றுப் பிழையாகும். இலங்கையை, சரித்திர ரீதியாக நாம் பார்த்தோமானால், அது ஓருபோதும், இந்தியாவை தனது நட்பு நாடாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாரணமாக கடந்தகாலத்தில் நடந்துமுடிந்த சீன-இந்தியப் போராக இருந்தாலும் சரி அல்லது இந்தியா-பாக்கிஸ்தான் போராக இருந்தாலும் சரி அவற்றில் இலங்கையின் ஆதரவு நிலை என்பது இந்தியாவிற்கெதிராகவே அமைந்திருந்தது இதனை எடுத்துக்காட்டும். இந்திய வம்சாவழியினராகிய மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு கைப்பற்றியபோதே, இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் எதிரான கொள்கைகள், சிங்கள மக்களிடையே ஆழமாக வேறூன்றி இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது.பின்னாளில் உருவான ஜே.வி.பி இயக்கம், இப்பகை உணர்வினை சிங்கள மக்களிடையே மேலும் வளர்த்ததை ஈழத்தமிழ் உறவுகள் நன்கறிவார்கள்..

இராஜிவ்காந்தியை ஒரு கடைநிலை இராணுவத்தினன் அடிக்க முற்பட்டதற்கும் இது அடிப்படைக் காரணம் எனலாம். இந்திய பிரதமரை அவமானப்படுத்த முயன்ற ஒருவனை தண்டிப்பதற்குப் பதில், இலங்கை அரசு, அவனுக்கு, அதன் பின்பு, பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என்றுகூட வதந்திகள் பரவின. இப்படியாக இந்தியாவிற்கு எதிராகவே காலங்காலமாக நடந்துவரும் இலங்கையின் நட்பை, இந்தியா எதிர்பார்ப்பது பகற்கனவாகலாம் என பல அரசியல்வாதிகள் கருதுகின்றனர். எனவே, மேற்கூறியவற்றை நாம் உற்றுநோக்கினோமானால், புலிகளை துரத்தும் வேட்டையில், இந்தியாவும் இலங்கையும் தமது சொந்தப் பாதுகாப்பு வேலிகளைத் தாமே மேய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதை, உணரலாம்.

முள்ளிவாய்க்கால் போரின் விளைவுகள் ஈழத்தமிழருக்கு சர்வதேச சமூகத்தில் சாதகமேனும் விளைந்திருக்குமா எனப் பார்த்தால், சர்வதேச சமாதானத்தை தூக்கிப்பிடிப்பதாக கூறிக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் தற்போதைய நடைமுறைகளும் அவற்றின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளையும் சற்று உற்று நோக்குவோம்.

1. சர்வதேச சமூகம், தற்போது, விழிப்படைந்து மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடக்கின்றன என ஒவ்வொருவராக உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். அத்தோடு அதை நிரூபித்து இலங்கை அரசின் மகிந்த ராஜபக்ஷே, சரத்பொன்சேகா, கோத்தபாய ராஜபக்ஷே ஆகியோரைக் குற்றக்கூண்டில் நிறுத்துவதற்குச் சாட்சிகளைச் சேர்ப்பதிலும் ஆவலாக இருக்கின்றனர். இதன்பொருட்டு அரசியல் பிரச்சாரங்களை செய்வதோடு பத்திரிகையாளர்கள், அரசு சார்பற்ற அமைப்பாளர்கள், தனிப்பட்ட மக்கள் ஆகியோரிடமிருந்து கிடைக்கக்கூடிய சாட்சிகளையும் சேகரிக்கின்றனர்.

2. இனப்படுகொலை தடுப்பு அமைப்புகளும் தற்போது ஊக்கத்துடன் செயல்களில் இறங்க முற்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழருக்கெதிராக எடுத்த நடவடிக்கைகளை (உதாரணமாக மலையகத் தமிழரின் வாக்குரிமையை பறித்தமை, யாழ்பொதுநூல் நிலையத்தையும், வழிபாட்டுத் தலங்களையும் எரித்தமை, கல்விநிலையம், மருத்துவமனைகளை தாக்கியழித்தமை) வரிசைப்படுத்தி, இலங்கை அரசை குற்றக்கூண்டில் நிறுத்தும் பணிகளை உலகளாவிய ரீதியில் செயற்படுத்த தொடங்கியுள்ளனர்.

3. 100,000 மேல் அப்பாவி பொது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நாம் முறையே வெளிக்கொணர்ந்து நிருபிக்கும் பட்ஜத்தில், இச்சம்பவம் ஐ.நா.வின் சட்டப்பிரகாரம் நமக்கு சட்டமூலமாக இலங்கைத் தீவினில் இருந்து பிரிந்து தமிழிழம் அமைக்க வலுச் சேர்க்கும் என்பது நிச்சயம்.

4. இலங்கையில், முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில், ஐக்கிய நாடுகள் பிரகடனப்படுத்திய பாதுகாப்பானது என வரையறுக்கப்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறல் செயல்களை புரிந்த இலங்கையை எந்தவிதத்திலேயும் கண்டிக்கத் தவறிய ஐ.நா- வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் மற்றும் அவரது ஆலோசகர் நம்பியார் ஆகியோர் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் எண்ணம் சர்வதேச சமூகத்தினரிடையே தற்போது வேகமாகப் பரவி வருகின்றது.

5. ஐரோப்பாவில் இலங்கைக்கு வழங்கி வந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

6. இவற்றோடு மட்டும் நின்றுவிடாமல், மேற்கு உலக நாடுகளுக்கும் இந்தியாவிற்குமிடையே ஓர் சிறிய இராஜதந்திர விரிசலைக்கூட முள்ளிவாய்க்கால் போர் ஏற்படுத்தியது எனக் கூறலாம். 2011-ல் நடக்கவிருக்கும் பொதுநல வாய (Common Wealth)நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு 45 நாடுகளின் ஆதரவைத் திரட்டிய இந்தியா, டிரினிடாடில் நடந்த பொதுநல வாய பிரதமரின் மாநாட்டில், வெற்றிபெற இயலவில்லை. இதனால், இந்தியா ஒரு பாரிய இராஜதந்திர பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. காரணம் பிரித்தானியா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் இலங்கை ஓர் போர்க் குற்றம் நடத்திய நாடு என்ற வகையில் இம்மாநாட்டை அங்கு நடத்த முடியாது என உறுதியாகவும் கடுமையாகவும் ஆட்சேபித்தனர். இதனால் இம்மாநாடு இலங்கையிலிருந்து அகற்றப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இது புலம்பெயர்வாழ் ஈழத்தமிழரின் இடைவிடாத அழுத்தத்தினால் விளைந்த பலன்களில் ஒன்று எனக் கூறலாம்.

7. இந்தியா, இலங்கையின் அரசியலில் தலையிட்டதால் அடைந்த பின்னடைவு மேற்கூறிய பிரச்சனையுடன் முடிந்துவிட்டது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் நேர்முகமாகவும் மறைமுகமாகவும் உதவி செய்த வகையில், இந்தியாவும் ஒரு காரணகர்த்தா ஆகலாம் என்ற இன்னொரு குற்றப்பத்திரிகையும் உலகநாடுகளிடமிருந்து பெறவேண்டிவருமோ என அனுபவம் மிகுந்த அரசியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இப்பிரச்சினை உலக அரசியல் அரங்கில் வெளிக்கொணரப்பட்டால், இந்திய அரசுக்கு ஒரு இராஜதந்திர பின்னடைவையும் அல்லாது அத்தோடு காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றின் அந்திமத்தையும் உருவாக்கக்கூடும். எனினும், இம்முயற்சியின் பெறுபேறு புலம்பெயர்வாழ் தமிழ் மக்களிடத்தும் மற்றும் தமிழ் நாட்டு மக்களிடத்தும் தங்கி உள்ளது.

8. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழீழத்தை ஜனநாயக ரீதியில் அமைக்கும் பொறுப்பு புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. “புலிகள் அழிந்து விட்டார்கள்” என சிறிலங்கா அரசே கொக்கரிக்கும் நிலையில், இனிமேல் வெளிநாட்டு அரசுகள் “பயங்கரவாதம்” எனும் வாதத்தை தமிழ் மக்கள் மீதோ அல்லது தமிழீழம் கோரும் அமைப்புகள் மீதோ கொண்டுவர முடியாது. அத்தோடு மனித உரிமை மீறல்களையும் இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து நடத்தும் ஓர் அரசின்கீழ் அல்லது அரசுடன் தமிழ் மக்கள் இனிமேலும் ஒருங்கிணைந்து வாழ முடியாது என்பதும், இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்பது உலகில் ஒரு பண்பாகக் கடைபிடிக்கும் நாளில், இன்று சிங்கள இனவெறி அரசானது இனஅழிப்புக் கொள்கையின் ஒரு திட்டமாக மாவீரர் துயிலும் இல்லங்களை புல்டோசர்களால் தகர்த்து எறிந்திருப்பதிலிருந்து ஐயமின்றி நிருபணம் ஆகிவிட்டது என்று, கடல்கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் ஜனநாயக வழியில் தமது தமிழீழ இலட்சிய வேட்கையை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர். தமிழீழம் ஒன்றே தமது தீர்க்கமான முடிவு என (1976-ல் முன்மொழியப்பட்டு 1977 இலங்கைப் பொதுத்தேர்தலின் மூலம் உறுதி செய்யப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில்) உலகத் தமிழ் மக்கள் ஒருமித்து நிற்கின்றனர். இன்று பிரான்சு, நார்வே, கனடா ஆகிய நாடுகளில் பொதுவாக்கெடுப்பு (கருத்துக்கணிப்பு) மூலம் 99மூ தமது ஆதரவுக் குரலை எழுப்பி உள்ளனர். பிரித்தானியா, ஜெர்மனி உட்பட ஏனைய நாடுகளும் இதே வழியில் பின்செல்ல அணிவகுத்து நிற்கின்றன. “ஜனநாயக வழியை பின்பற்ற வேண்டும்” எனக் கொக்கரிக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இந்நடவடிக்கை ஓர் கண்திறப்பாக அமையும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்கள்மீது தரங்குறைந்த அரைகுறைத் தீர்வுகளை திணிக்க யோசிக்கும் அரசியல்வாதிகளுக்கு இத்தகைய நடவடிக்கை ஒரு சம்மட்டி அடியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

மேற்பட்ட கருத்துகளை நோக்கின், முள்ளிவாய்க்கால் போரில் தமிழினத்திற்கு பல நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன என ஓருவர் கருதினாலும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் ஏற்பட்ட பாரிய மனித இழப்புக்களையும், 300,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்வேலிகளின்பின் பட்ட வதைகளையும், அவலங்களையும், என்றும் எவராலும் ஈடு செய்ய முடியாது என்பது கசப்பான உண்மை. எந்தப் போரிலும் மனித உயிரிழப்பு ஓர் தடுக்க முடியாத அம்சம் என சிலர் ஆறதல் அடையக்கூடும். ஆனாலும் இன்னும் இராணுவச் சித்திரவதைக்குள் உட்பட்டிருக்கும் பல்லாயிரம் போராளிகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது அலட்சியப்படுத்தக்கூடிய பிரச்சனையல்ல.

எனவே, ஈழத்தமிழ் உறவுகள் மேற்கூறிய பிரச்சனைகளை ஆராய்ந்து உணர்ச்சிவசப்படாத வகையில் ஓர் அமைதியான முடிவுக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் இக்கட்டுரையை முடிக்கின்றேன். இதை எழுதும்போது ஆங்கிலத்தில் ஒரு பழமொழி நினைவிற்கு வருகின்றது “every cloud has a silver lining” அதாவது எந்த கருமேகத்தையும் ஒரு வெள்ளி மின்னல்கீறு சூழ்ந்து இருக்கும் என்பதே அதன் விளக்கமாகும்.

நன்றி - பதிவு இணையம்

  • 3 weeks later...

ஒன்று நடந்தபின் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்தி எழுதலாம்.

பேராசிரியர் தீரன் மதிப்புக்குரியவர். ஆனாலும் அவர் எழுதும் போது, போராட்ட வெற்றி அர்த்தமற்றதாகவே போகும் என தொனிப்பது, 30 வருட போராட்டத்தையும், போராட்டத்தின் நோக்கத்தையும் கொச்சைப்படுத்துவதாகவே படுகிறது. சீன அரசின் வருகையால் போராட்டம் வெற்றிபெற்றதாக கூற முனைவது நகைப்புக்கு உரியது.

இவ்வாறு நடந்தபின் ஒவ்வொன்றையும் விதண்டா வாதத்தின் மூலம் நியாயப்படுத்தும் தமிழனின் புத்தி மாறும் வரை நாம் கடந்தகாலங்களில் விட்ட தவறை உணரவோ அல்லது சரியான பாதையில் செல்லவோ உதவப் போவதில்லை. இது தமிழ் சினிமா அல்ல.

அவர் சீனாவை மறைமுகமாக பிசாசுக்கு ஒப்பிடுவதையும், அவருக்கு வடமாகாண பாதைகள், தெற்கு துறைமுக, புத்தளம் நிலக்கரி மின்சார திட்டங்களில் சீனாவின் பங்களிப்பு கசப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மாறாக, தமிழர் படுகொலையில் வட இந்திய ஹிந்தி வெறியர்களால் நடாத்தப்படும் மத்திய அரசின் பாத்திரத்தை ஒன்றும் தெரியாதவர் போல் மறைத்துவிட்டது மிக கவலையான விடயம் தான். சீனாவைப் பற்றி இவ்வளவு அறிந்தவர், இலங்கையில் இந்திய "ரோ" பயங்கரவாதிகளின் ஈடுபாட்டை மறைத்தது, அவரே கூறிக்கொள்ளும் அவரது நடுநிலையை கேள்விக்குறியாக்குகிறது.

Edited by Aasaan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.