Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சியோனிஸ்டுகளும், இஸ்ரேலும் - சில குறிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சியோனிஸ்டுகளும், இஸ்ரேலும் - சில குறிப்புகள்

தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு யூதர்கள், பாலஸ்தீனர்களின் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. யூதர்கள் இஸ்ரேலை உருவாக்கியது பற்றிய ஒப்பீடு தமிழ் பேசும் மக்களுக்கு அறிமுகமாகியுள்ளது போன்ற ஒப்பீட்டு முயற்சியல்ல இப்பிரதி. வெறுமனே ஒப்பீடுகளில் மிதப்பதால் மனித இனம் விடுதலையை பெறவும் முடியாது. 1948 வரையில் இஸ்ரேல் என்பது கனவாக இருந்தது. அதற்காக யூதர்கள் உலகமெங்குமிருந்து ஒன்றுதிரண்டு உழைத்தார்கள். இன்று அமெரிக்க அரசியலில் கருத்துக்களை உருவாக்கி, கொள்கை முடிவுகளை எடுக்க வைக்கிற பெரும்பலம் கொண்டவர்களாக யூதர்கள் இருக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய சர்வதேச மனித உரிமை குற்றங்களை ஐ.நா.மனித உரிமை சபை நியமித்த ‘கோல்டு ஸ்டோன் விசாரணை அறிக்கை’ இவ்வருடத்தில் சுட்டிக்காட்டியது. உடனடியாக இஸ்ரேலை காப்பாற்ற தனது அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா. அரபு நாடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சிறிய நாடான இஸ்ரேலின் பாதுகாப்பு தந்திர பொறிமுறை அதன் ஆயுதங்களைக் காட்டிலும் அமெரிக்காவின் ஆதரவில் தங்கியுள்ளது. உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்களால் இவ்வளவு பலத்தையும், ஆதரவையும் எப்படி திரட்ட முடிந்தது? இந்த கேள்விக்கான விடை 18 நூற்றாண்டுகள் கழித்து யூதர்கள் இஸ்ரேலை நிறுவ முன்னெடுத்த திட்டங்களில், நகர்வுகளில் அடங்கியுள்ளது. கி.பி 70ஆம் ஆண்டில் எருசலேம் நகரம் ரோமை பேரரசின் முற்றுகைக்குள் சென்றது. எருசலேம் ஆலயம் அழிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து யூதர்கள் உலகமெங்கும் சிதறினார்கள். ஆனால் அவர்கள் தங்களது கலாச்சாரம், பண்பாட்டை கைவிடவில்லை. யூத சமூகத்தில் நாடு திரும்பும் வேட்கையும், கனவும் தலைமுறைகளை கடந்து தொடர்ந்தது.

சியோனிஸ்டு இயக்கத்தின் துவக்கம்

இஸ்ரேலுக்கான ஆதரவைத் திரட்டும் வேலை 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கியது. யூதர்களுக்கான நாட்டை உருவாக்கும் கனவை வளர்த்தெடுத்து பல நாடுகளின் ஆதரவை திரட்டும் வேலையில் ஈடுபட யூதர்கள் 1897ல் சியோனிஸ்ட் இயக்கத்தை (Zionist movement) உருவாக்கினார்கள். யூதர்களின் நாட்டை உருவாக்க சியோனிஸ்ட் அமைப்பும், சியோனிஸ்டு யூதர்களும் ஈடுபட்டனர். ‘சியோனிஸ்ட்’ (Zionist) என்னும் சொற்பதம் எருசலேம் (Jerusalem) நகரின் அருகிலுள்ள சியோன் மலையை (Zion) நினைவுபடுத்துகிறது. சியோன் மலை இஸ்ரேலிய மக்களையும், எருசலேமையும் குறிப்பிடும் குறியீடாக யூதர்களின் மத நூல்களிலும், கிறித்தவர்களின் மத நூல்களிலும் பயன்படுத்தப்படுகிறது. யூதர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து இஸ்ரேலை நிறுவ இக்கலாச்சார குறியீடு பெயரில் ‘சியோனிஸ்ட் இயக்கம்’ உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் சிதறியிருந்த யூதர்களின் மனங்களில் தங்களுக்கான நாட்டை உருவாக்க, அதற்காக உழைக்க இக்கலாச்சார குறியீடு தூண்டியது. அதற்காக உழைக்க சியோனிஸ்டு இயக்கம் உலக அளவில் யூதர்களை திரட்டியது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிழக்கு ஐரோப்பாவில் குறிப்பாக போலந்து, ரசியா, ரொமானியாவில் வாழ்ந்த யூதர்கள் இணைந்து ‘சியோனுக்குப் போகும்’ நோக்கத்துடன் ‘சியோன் விரும்பிகள்’ (Lovers of Zion) சங்கங்களை உருவாக்கத் துவங்கினார்கள். அவர்கள் பெரும்பாலும் வர்த்தகத்தில் ஈடுபட்டதால் பணக்காரர்களாக இருந்தனர். டெல் அவிவ் அருகிலுள்ள யாஃபா நகரில் விவசாய பாடசாலையை 1870ல் யூதர்கள் உருவாக்கினர். யாஃபா நகரில் 10 ஹெக்டேர் நிலத்தை சர் மோசஸ் மாண்ட்பியோர் என்கிற யூதர் வாங்கினார். ரசியாவில் இரண்டாம் சார் மன்னன் அலெக்சாந்தரின் கொலையைத் தொடர்ந்து 1881-1882 வரையில் யூதர்களுக்கு எதிராக கலவரங்கள் நடந்தன. அதற்குப் பிறகு சியோனுக்கு திரும்பும் நோக்கம் யூதர்களிடம் மேலும் வலுவடைந்தது. 1882ல் டாக்டர்.யூதா லெய்ப் பென்ஸ்கர் எழுதிய கட்டுரையில் யூதர்களுக்கான நாடு, சுய விடுதலை ஆகிய கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் செல்வது ஆரம்பமானது. ‘சிரியா மற்றும் பாலஸ்தீன யூத விவசாயிகள் மற்றும் கலைஞர்களுக்கான ஆதரவு அமைப்பு’ ரசியாவில் அரசின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டது.

ரசியாவில் சட்டரீதியாக செயல்படும் அனுமதி கிடைத்தவுடன் ரசியாவில் வாழ்ந்த யூதர்களிடமிருந்து பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான திட்டங்களை உருவாக்க பண வசூலை துவக்கினார்கள். பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியிருப்புகளை உருவாக்கவும், விவசாயத்திற்கும் இவ்வமைப்புகள் திட்டங்களை செயல்படுத்தின. 1882ல் பாலஸ்தீனத்தில் 2200 ஹெக்டேர் நிலத்தை சில யூதர்கள் வாங்கினார்கள். ரசிய கலவரத்துக்குப் பிறகு ரசியாவிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் குடிபுகுவது பெருகியது. அவர்களுக்கு சியோனிஸ்ட் அமைப்பு மற்றும் சியோன் விரும்பிகள் சங்கங்கள் பாலஸ்தீனத்தில் குடிபுக உதவிகளை செய்தன. துவக்கத்தில் சியோனிஸ்டுகளிற்கு யூதர்கள் அனைவரிடமும் ஆதரவு இருக்கவில்லை. உலகமெங்கும் சுமார் ஒன்றரை கோடி யூதர்கள் இருந்த 1921ம் ஆண்டில் சியோனிஸ்டு இயக்கத்தில் 7 லட்சத்து 70 ஆயிரம் யூதர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். பெரும்பான்மையான யூத மக்கள் யூதர்களுக்கு தனிநாடு வேண்டுமென்ற சியோனிஸ்டுகளின் கொள்கையை ஆதரிக்கவில்லை. யூதர்களுக்கான நாடு கொள்கையை கைவிடாமல்; சியோனிஸ்டுகள் பலமான திட்டங்களை முன்னெடுத்தனர். யூத மக்களிடம் அக்கொள்கையை பரப்பி அவர்களை இணைப்பதிலும், உலக நாடுகளின் ஆதரவை திரட்டவும் பல்வேறு வழிகளையும், திட்டங்களையும் முன்னெடுத்தனர்.

யூத தேசிய நிதியும், பாலஸ்தீனத்தில் யூதர்களின் குடியேற்றமும்

சியோனிஸ்ட் இயக்கத்தின் 5வது உலக மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் பாசல் நகரில் 1901ல் நடைபெற்றது. அம்மாநாட்டில் யூதர்களுக்கான நாட்டிற்கு நிலங்களை வாங்குவதற்காக பொதுநிதியை உருவாக்க நீண்ட விவாதம் நடைபெற்றது. அதன் முடிவில் ‘யூத தேசிய நிதி’ உருவாக்கப்பட்டது. அந்த நிதி யூத மக்கள் அனைவருக்குமான பொது நிதியாக முடிவானது. 2 லட்சம் பவுண்ட்களுடன் நிதி துவங்கியது. 10, 20 என்று ஒவ்வொருவரும் வழங்கிய நிதி யூதர்களின் கனவை நோக்கிய திட்டங்களுக்கு செலவிடப்பட்டது. யூதர்கள் தங்களது தேசிய நிதி பங்களிப்பிற்கு கொடுத்த பெயர் செக்கெல். பின்னர் இஸ்ரேலின் நாணயத்திற்கு செக்கெல் என்று பெயர் சூட்டினார்கள். யூத தேசிய நிதியை நிர்வகிக்கும் தலைமையகம் எருசலேமாக உருவானது. 1902 முதல் சியோனிஸ்ட் ஆவணங்களுக்கான சிறப்பு முத்திரைகள் வெளிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதிலிருந்து கிடைத்த பணமும் யூத தேசிய நிதியில் சேர்ந்தது. யூத தேசிய நிதிக்கு கிடைத்த நன்கொடையை வைத்து 50 ஏக்கர் நிலத்தை ஹதேராவில் முதல் முறையாக வாங்கினார்கள். தொடர்ந்து யூத தேசிய நிதி (Jewish National Fund) மூலம் பல பகுதிகளில் பெருமளவு நிலங்களை வாங்கினார்கள். நிலங்களோடு கட்டமைப்புகளையும் உருவாக்க ஆரம்பித்தனர். வாங்கிய நிலத்தில் ஆலீவ் மரத்தோட்டங்கள், காடுகள், பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்களை உருவாக்கினார்கள். யூத தேசிய நிதி உருவாக்கப்பட்ட முதல் பத்து ஆண்டுகளில் சுமார் 85 ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியிருந்தனர். 1921ல் யூத தேசிய நிதியத்திடம் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாகியிருந்தது. அப்போது 76 நாடுகளில் வாழ்ந்த யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை கோடி.

ஒவ்வொருவருக்கும் யூதர்களின் நாடு பற்றிய விழிப்புணர்வை உருவாக்க திட்டத்தை உருவாக்கினார்கள். யூத தேசிய நிதியத்திற்காக யூதர்களுக்கு சொந்தமான வீடுகள், மத நிலையங்கள், அலுவலகங்கள், பாடசாலைகள், வியாபார நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் நீல நிற உண்டியல் வைக்கப்பட்டது. பாலினம், வயது ஆகிய எந்த வேறுபாடுமில்லாமல் யூதர்களின் நிலத்தை உருவாக்க அனைவரும் ஈடுபடுத்தப்பட்டனர். இளவயதினர்களுக்கு சியோனிஸ்டு இயக்கம் தனியாக திட்டங்களை நடத்தியது. ஜனவரி 1926ல் யூத தேசிய நிதி அமெரிக்காவின் ஆதரவுடன் செயல்பட ஆரம்பித்தது. வனம், நீர், சுற்றுலா, பொழுதுபோக்கு, கல்வி, ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்கள்.

1927ற்குள் 50 ஆயிரம் எக்கர் நிலத்தில் 50 யூத குடியிருப்புகள் உருவாக்கப்பட்டிருந்தது. 1935ற்குள் 1750 ஏக்கர் நிலத்தில் சுமார் 17 லட்சம் மரங்களை நட்டிருக்கிறார்கள். நீர் ஆதாரங்களை உருவாக்கினார்கள். 1935ல் யூதர்களிடம் 89,500 ஏக்கர் நிலமிருந்தது. யூதர்களின் குடியேற்றத்திற்கு பிரிட்டன் அதிகாரம் தடைகளை விதித்திருந்தது. 1904ல் பாலஸ்தீனத்தில் சுமார் 35 ஆயிரம் யூதர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்திலிருந்து பல நாடுகளுக்கும் திரும்பப் போயிருந்தனர். ஆனால் யூத தேசிய நிதியை ஏற்படுத்தி தொடர்ந்து நிலங்களை வாங்கி குடியேற்றங்களை உருவாக்கியதால் 1939ற்குள் 4 லட்சத்து 50 ஆயிரம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். அவர்களில் சுமார் 10 விழுக்காடு யூதர்கள் யூத தேசிய நிதிக்கு சொந்தமான நிலத்தில் இருந்தனர். பிரிட்டன் யூதர்கள் புதிய குடியிருப்புகளை உருவாக்க தடை விதித்தது. ஆனாலும் பிரிட்டனின் தடையை மீறி யூதர்கள் பெருமளவில் நிலங்களை வாங்கினார்கள். அவற்றில் குடியிருப்புகள், கட்டுமானங்களை கட்டத் திட்டமிட்டார்கள். இரவில் ஒரேயடியாக 10 நகரங்களை யூத தேசிய நிதிக்கு சொந்தமான நிலத்தில் கட்டி எழுப்பியிருந்தனர். டெல் அவிவ் நகரும் யூத தேசிய நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது தான். யூதர்களுக்கான நாட்டை உருவாக்கும் இந்த வேகமும், வேட்கையும் தான் இஸ்ரேலை உருவாக்கியது. 1939ல் இரண்டாம் உலகப் போர் துவங்கியது. அப்போதும் யூத தேசிய நிதிக்கான நன்கொடைகள் அதிகமாக குவிந்தது.

இட்லரின் இன அழிப்பு கொடுமைகளுக்குப் பிறகு யூதர்களின் பெரும்பகுதியினர் அமெரிக்கா மற்றும் பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்தனர். பாலஸ்தீனத்தில் நுழைய சட்டப்புறம்பான வழிகளையும் பயன்படுத்தினார்கள். 1939ல் ஐரோப்பாவிலிருந்து யூதர்களைக் காப்பாற்றி கடல் வழியாக கொண்டு சென்று பாலஸ்தீனத்திற்குள் குடியேற்றினார்கள். கடல் பயணங்கள் சாத்தியமில்லாத போது அரபு நாடுகளில் தங்கியிருந்த யூதர்களை நிலம் வழியாக குடியேற்றினார்கள். இவை அனைத்தும் சட்டத்துக்கு எதிராக செய்யப்பட்ட குடிபெயர்வுகள். 1945 துவங்கி மூன்று ஆண்டுகளில் 70 ஆயிரம் யூதர்களை வட ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து 65 முறை கடல் பயணங்கள் மூலம் பாலஸ்தீனத்திற்குள் குடியேற்றினார்கள். இதற்காக கப்பலை வாங்கவும், மாலுமிகளை நியமிக்கவும், சைப்பிரசில் இடைத்தங்கல் முகாம்களோடு தொடர்பு கொள்ளவும் தனியாக குழுக்களும், அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்திலும் சியோனிஸ்ட் இயக்கத்தின் பங்கிருந்தது.

கூட்டுறவு விவசாய பண்ணைகள்

கலிலேயா கடற்கரை பகுதியில் 1909ல் முதல் விவசாய கூட்டுறவு பண்ணை உருவாக்கப்பட்டது. அங்கே வேலை செய்த யூதர்களில் பலர் கடுமையான உழைப்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் யோர்தான் நாட்டின் நகரங்களுக்கும், புலம்பெயர் தேசங்களுக்கும் சென்றனர். 1914ல் அந்த கூட்டுப்பண்ணையில் 50 யூதர்கள் மட்டுமே வேலை செய்தனர். ஒரேயடியாக நாட்டை உருவாக்ககுவதற்கு பதிலாக சிறிய சிறிய திட்டங்களாக உருவாக்கி, அவற்றில் யூதர்கள் அனைவரையும் ஈடுபட வைத்து, யூத ஒற்றுமையை உருவாக்கினார்கள். அதன் பிறகு அனைத்து யூதர்களையும் ஒருங்கிணைப்பது அவர்களுக்கு எளிதாக இருந்தது. தனித்தனியாக நிலங்களை வாங்கும் போது தனிநபர்களால் விவசாயத்திற்கு தேவையான முதலீடு, உழைப்பு மற்றும் குடியிருப்புகளின் பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகும். ஆனால் கூட்டுறவு விவசாய முறையில் உழைப்பு, உற்பத்தி வலுவடைவது ஒருபுறம். கூட்டுறவு விவசாய முறையில் யூதர்களை ஒற்றுமையாக இணைத்து கூட்டாக செயல்படும் வாய்ப்பு இருந்தது. இந்த கூட்டுறவு முறையினால் அயல்நாடுகளிலிருந்து வந்து நிலங்களில் குடியேறுகிற யூதர்களின் வருமானம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது நோக்கமாக இருந்தது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். துவக்கத்தில் கூட்டுறவு பண்ணைகளில் சோசலிச சிந்தனைத் தாக்கம் இருந்தது. இஸ்ரேல் நாடாக உருவாகிய பிறகு கூட்டுறவு விவசாயம் குறைந்து தனியார்மயம் வளர்க்கப்பட்டது.

யூதர்களுக்கு ஆதரவான பிரிட்டனின் பால்பஃர் பிரகடனம்

1917ல் அறிவியலாளரும், சியோனிஸ்டு இயக்கத்தின் தலைவர் செய்ம் வெய்ஸ்மன் பாலஸ்தீனத்தில் யூதர்களின் நாட்டை நிறுவ ஆதரவை பிரகடனம் செய்ய பிரிட்டன் அரசை வற்புறுத்தி அதில் வெற்றியும் பெற்றிருந்தார். லண்டனில் வசித்த லார்டு ரோத்ஸ்சைல்டு வீட்டிற்கு பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆர்தர் பால்பஃர் நவம்பர் 2, 1917ல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதம் தான் பால்பஃர் பிரகடனம். யூதர்களின் நாடு அதுவரையில் சியோனிஸ்ட் இயக்கம் மற்றும் யூதர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் பால்பஃர் பிரகடனம் மூலம் பிரிட்டன் யூதர்களுக்கான நாட்டிற்கான முதல் அங்கீகாரம். உலகின் வல்லரசு நாடான பிரிட்டனின் ஆதரவைப் பெற யூதர்கள் தந்திரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். லார்டு ரோத்ஸ்சைல்டு சியோனிஸ்ட், பெரும் பணக்காரர், வங்கி உரிமையாளர், உயிரியலாளர், அரசியல்வாதி ஆகிய பலமுகங்களைக் கொண்டவர். பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராக 11 வருடங்கள் பணியாற்றியிருந்தார். லார்டு ரோத்ஸ்சைல்டு யூதர்களுக்கான நாட்டை உருவாக்க தனது அரசியல், சமூக செல்வாக்கைப் பயன்படுத்தினார். முதல் உலக யுத்தம் நடந்த அவ்வேளை மத்திய கிழக்கில் பிரிட்டன் போரில் தொய்வு நிலையில் இருந்தது. பிரிட்டனுக்குத் தேவையான ஆதரவை திரட்டும் நிலையில் சியோனிஸ்ட் இயக்கம் அமெரிக்காவில் பலமாகவும், அரசியல் அழுத்தம் கொடுக்கும் செல்வாக்குடனும் இருந்தது. யூதர்களின் நாட்டை பிரிட்டன் ஆதரிப்பதன் மூலம் யூதர்கள் அமெரிக்காவை பிரிட்டனுக்கு ஆதரவாக போரில் இறங்க வைக்கமுடியுமென்று பிரிட்டனுக்கு நம்பிக்கையளித்தனர்.

பிரிட்டனுக்கு ஆதரவாக துருக்கியை எதிர்த்துப் போரிடவும் பாலஸ்தீனத்திலிருந்த யூதர்கள் தயாரானார்கள். அதைப் போல ரசியாவிலிருந்த யூதர்கள் போல்ஸ்விக் புரட்சியில் பங்கெடுத்தனர். அதனால் ரசியா முதல் உலகப் போரில் தொடர்ந்து போரிட ரசியாவில் குடியிருந்த யூதர்கள் செல்வாக்கு செலுத்துவார்களென்று பிரிட்டனுக்கு நம்பிக்கையூட்டினார்கள். பிரிட்டன் யூதர்களுக்கு ஆதரவளிக்காமல் போனால் ஜெர்மனி பாலஸ்தீனத்தை கைப்பற்றுமென்றும் சியோனிஸ்டுகள் பிரிட்டனுக்குத் தெரிவித்தனர். அப்போதைய பிரிட்டன் பிரதமர் லாய்டு ஜார்ஜ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பால்பஃர் கிறிஸ்தவ வழிபாட்டில் தீவிரமாக இருந்தனர். அவர்களிடம் மத நம்பிக்கையை பயன்படுத்தி ‘யூதர்களை அவர்களது தாய்நிலத்தில் மீண்டும் குடியேற்றுவதன் மத ரீதியான’ விளக்கங்களை சொல்லி ஆதரவைத் திரட்டினார்கள். இவை எல்லாவற்றிற்கும் நேரடி சந்திப்புகள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தினார்கள். யூதர்கள் செய்த இந்த அரசியலின் விளைவாக யூதர்களுக்கான நாடு பற்றிய விருப்பத்தை பால்பஃர் பிரகடனம் வழியாக பிரிட்டன் வெளியிட்டது. முதலாம் உலகப்போருக்குப் பின்னர் உருவான நாடுகளின் கூட்டமைப்பு (பின்னர் அது ஐ.நா சபையாக உருவெடுத்தது) 1922ல் பால்பஃர் பிரகடனத்தை அங்கீகரித்து பாலஸ்தீனத்தை ஆளும் பொறுப்பை பிரிட்டனுக்கு வழங்கியது.

பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்ததும் யூதர்களின் நம்பிக்கை அதிகமானது. சியோனிஸ்டுகளுக்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது. 1930களில் இதனால் பல நாடுகளிலிருந்தும் பாலஸ்தீனத்திற்கு குடிபுகுந்த யூதர்கள் எண்ணிக்கை அதிகமானது. அதைத் தொடர்ந்து விழிப்படைந்த பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் மத்தியில் 1936ல் மோதல் துவங்கியது. மோதலை நிறுத்துவதற்காக பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் குடிபெயர்வதற்கு 1939ல் பிரிட்டன் கட்டுப்பாடுகளை விதித்தது.

யூதர்களின் அமெரிக்க ஆதரவு

உடனடியாக அமெரிக்காவில் ஏற்கனவே அரசியல், ஊடகம், தொழில்த்துறை ஆகிய அனைத்திலும் ஊடுருவி செல்வாக்கு செலுத்திய சியோனிஸ்ட் யூதர்கள் அமெரிக்க அரசின் ஆதரவை திரட்டும் வேலையில் இறங்கினார்கள். தங்களுக்கு அமெரிக்க செனட்டர்களிடம் ஆதரவு திரட்டினார்கள். அதற்காக தொடர்ந்து சந்திப்புகள், கூட்டங்கள், கடிதம் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்க அதிபர் ட்ருமன் செனட்டராக இருக்கும் போதே அவருடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்கினார்கள். ட்ருமன் அமெரிக்க அதிபரானதும் யூதர்களுக்கு சுய நிர்ணய உரிமை இருப்பதாக குறிப்பிட்டு பால்பஃர் பிரகடனத்தை அங்கீகரித்தார். இட்லரின் கொடுமைகளுக்கு ஆளானதால் யூதர்களுக்கு என்று தனிநாடு அவசியம் என்னும் கருத்து ட்ரூமன் நம்பினார்.

ட்ரூமனை தங்களுக்கு ஆதரவாக்குவதற்கு சியோனிஸ்டுகள் பலவிதமான அரசியல் அழுத்தங்களையும், தந்திரங்களையும் கையாண்டார்கள். அரபு நாடுகளுக்கும், சோவியத் ரசியாவிற்கும் மத்தியில் கூட்டு வலுவடைந்து வருவதாக ட்ரூமனின் ஆட்சியின்போது வெளியுறவுத்துறையும், பாதுகாப்புத் துறையும் நம்ப வைக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவுக்கு எண்ணை விநியோகம் தடைபடுமென்று கருத்து உருவாக்கப்பட்டது. அவற்றை எதிர்கொள்ள மத்திய கிழக்கில் அமெரிக்கா யூதர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தப்பட்டது. அமெரிக்காவின் தலையீடு துவங்கியது. பிரிட்டனும், அமெரிக்காவும் இணைந்து ‘ஆங்கிலோ-அமெரிக்கன் விசாரணைக் குழு’ அமைத்தன. அக்குழு 1946ல் பாலஸ்தீனம் பற்றிய சில பரிந்துரைகளை வைத்தது. யூதர்கள் அல்லது அரபு மொழி பேசும் பாலஸ்தீனர்களுக்கான தனிநாடுகள் பாலஸ்தீனத்தில் உருவானால் பொது அமைதி கெட்டு குழப்பங்களும், மோதல்களும் நடைபெறும் ஆகையால் யூதர்கள் மற்றும் அரபு மொழி பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கை உடன்படிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை உருவாகுக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. யூதர்களை பாலஸ்தீனத்தில் குடிபுக அனுமதிக்க வேண்டும், தன்னாட்சியுரிமையுடன் இரு மாநிலங்கள் உருவாக்க வேண்டும். எருசலேம், பெத்லெகேம், நெகெவ், தெற்கு பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளை நிர்வகிக்க வலுவான மைய அரசு ஒன்றையும் உருவாக்க வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்தது.

அக்குழுவின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்குப் பிறகு வன்முறை தாக்குதல்கள் அதிகமானது. அதனால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற முடிவெடுத்து, ஏப்பிரல் 2, 1947ல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சிறப்புக்குழுவை உருவாக்க தீர்மானம் கொண்டுவந்தது. அக்குழு முன்வைத்த யோசனைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஐக்கிய நாடுகள் சபையில் யூதர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் தனிநாடும், எருசலேம் சர்வதேச பகுதியாகவும் அறிவிக்கலாமென்று ஐ.நா தீர்மானம் எண் 181 பரிந்துரைத்தது. ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. இதற்கிடையே சியோனிஸ்டுகள் ட்ரூமனிடம் தங்களது செல்வாக்கு மற்றும் அழுத்தங்களை செலுத்த தவறவில்லை. இந்த நிலையில் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறும் காலக்கெடுவும் வந்தது. மே 14, 1948ல் டெல் அவிவ் அருங்காட்சியகத்தில் கூடிய சியோனிஸ்டு யூத மக்கள் பேரவை இஸ்ராயேல் நாட்டை நிறுவியுள்ளதாக பிரகடனத்தை வெளியிட்டது. பாலஸ்தீனம் மீதான பிரிட்டனின் அதிகாரம் முடிவிற்கு வந்த தினத்தில் இப்பிரகடனம் வெளியானது. உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்கா அதிபர் ட்ரூமன் இஸ்ரேலை அதே இரவில் அங்கீகரித்தார். ட்ரூமனின் அங்கீகார அறிவிப்பு ஊடகங்களுக்கு வெளியாகும் வரையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கும், அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதிகளுக்கும் கூட ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் கடந்து மற்றொரு வல்லரசான சோவியத் ரசியா அங்கீகரித்தது. இஸ்ரேல் பிரகடனம் செய்யப்பட்ட போது சுமார் 350 யூத குடியிருப்புகளும், 6 லட்சத்து 50 ஆயிரம் யூதர்களும் குடிபுகுந்திருந்தனர். அவற்றுள் 233 யூத குடியிருப்பு நகரங்கள் யூத தேசிய நிதியால் உருவாக்கப்பட்டவை.

முற்றுகைக்குள் பாலஸ்தீனர்கள்

அரபு-இஸ்ரேல் மோதல் துவங்கியது. 1948ல் சுமார் 7 லட்சம் பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர். 1967ல் சிரியா, யோர்தான், எகிப்து ஆகிய நாடுகளுடன் இஸ்ரேல் போரிட்டது. அப்போரின் முடிவில் காசா பகுதி, கிழக்கு எருசலேம், மேற்கு கரையோரம் ஆகிய பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. சுமார் 30 லட்சம் பாலஸ்தீனர்களின் சுதந்திரம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் பறிக்கப்பட்டது. இதுபற்றி விவாதிக்க நவம்பர் 1967ல் ஐ.நா பாதுகாப்புச் சபை கூடி விவாதித்தது. இக்கூட்டத்தில் இஸ்ரேலும் அழைக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேற வேண்டும். அப்பகுதி நாடுகளின் எல்லை, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று வற்புறுத்தியது ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் எண் 242. ஆனால் இன்றும் காசா பகுதி, கிழக்கு எருசலேம், மேற்கு கரையோரம் ஆகிய பகுதிகள் இஸ்ரேலின் முற்றுகைக்குள்ளும், ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது. இதனால் பாலஸ்தீனர்களின் வாழ்க்கை இயல்பாக இல்லை. பாலஸ்தீன மக்களின் வளங்களை இஸ்ரேல் சுரண்டுகிறது. இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதல்கள், பாலஸ்தீன ஆயுதப் போராட்ட இயக்கங்களின் எதிர்தாக்குதல்கள் என்று சமாதானத்தையும், மனித உரிமைகளையும் இழந்துள்ளனர் அம்மக்கள். இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன இயக்கங்களால் நடத்தப்படுகிற தற்கொலை தாக்குதல்களும், ராக்கெட்களும் இஸ்ரேலிய மக்களையும் பாதிக்கிறது. ஆனாலும் பாதிப்புகளின் கொடூரமும், உக்கிரமான மனித உரிமை மீறல்களும் பாலஸ்தீனர்களையே வதைக்கிறது.

பாலஸ்தீன பகுதிகளுக்கு உணவு, மருந்து, அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் உட்பட அனைத்தையும் இஸ்ரேலிய ராணுவத்தின் சோதனை கெடுபிடிகளை கடந்தே கொண்டு செல்ல முடியும். ஆனால் பாலஸ்தீன மக்களின் நடமாடும் உரிமையை மறுத்து நூற்றுக்கணக்கான தடுப்பு அரண்களையும், சுற்றுச்சுவர்களையும், ராணுவக் கெடுபிடிகளையும் உருவாக்கி தடுக்கிறது இஸ்ரேல். அம்மக்களுக்கு உணவு, மருந்து உட்பட எதுவும் சரியாக கிடைப்பதில்லை. உயிரைக் காப்பாற்ற அவசர மருத்துவ ஊர்திகள் இத்தடைகளை கடந்து செல்வது எளிதல்ல. அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படும் அம்மக்கள் நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் பயணம் செல்ல வேண்டிய கொடூரமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி நீண்ட தொலைவு பயணத்திற்கான பணச்செலவு அவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் வேலை செய்ய முடியாதபடி இந்த தடுப்பு அரண்களும், சுவர்களும், ராணுவக் கெடுபிடியும் உள்ளது. பாலஸ்தீனர்களில் 65 விழுக்காடு மக்கள் வேலையில்லாமை மற்றும், 75 விழுக்காடு மக்கள் வறுமையிலும் வாடுகிறார்கள்.

கோல்டு ஸ்டோன் விசாரணை அறிக்கை

டிசம்பர் 2008ல் காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் மனித உரிமைக் குற்றங்களை கண்டறிய தென்னாப்பிரிக்க நீதிபதி கோல்டு ஸ்டோன் தலைமையில் குழுவை ஐ.நா மனித உரிமை சபை நியமித்தது. அக்குழு விசாரணையின் முடிவில் 575 பக்கங்களில் அறிக்கையை ஐ.நா மனித உரிமை சபையிடம் கையளித்தது. ஆனால் அந்த அறிக்கையை இஸ்ரேலும், அமெரிக்காவும் நிராகரித்தன. அவ்வறிக்கையில் இஸ்ரேல் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிராக நடந்துகொண்டதை விரிவாக பட்டியலிட்டிருக்கிறது. அவற்றில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துகிற பொருளாதார தடைகள், மின்சார தடை, எரிபொருள் தடை, மீன்பிடி தடை உட்பட அனைத்து மனிதாபிமான தடைகளையும் விவரித்து அவை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்பதை தெரிவித்தது. ஆனால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பலம் ஐ.நாவிடம் இல்லை. இஸ்ரேலின் மனித உரிமைக் குற்றங்களை விசாரிப்பதற்காக பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டு வந்த தீர்மானங்களை அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் புறக்கணிக்கிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் இஸ்லாமிய மற்றும் பல நாடுகளும் இருக்கிற போதிலும் சர்வதேச விசாரணையை நடைபெற வைப்பது எளிதல்ல. அதற்கு காரணம் அமெரிக்காவிலுள்ள யூதர்களும், யூத அமைப்புகளும் தொடர்ந்து அமெரிக்காவை தங்கள் பக்கமாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

காசா பகுதில் விமான தாக்குதல்கள், பீரங்கி தாக்குதல்கள், கனரக ஆயுதங்களின் தாக்குதல்களை இஸ்ரேலிய படைகள் செய்திருந்தது. அவற்றில் 1444 பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன அரசின் கட்டுமானங்கள், பாலஸ்தீன காவல்துறை, நிர்வாக அலுவலகங்கள் ஆகியவையும் தாக்குதலுக்குள்ளானது. பாலஸ்தீனர்களின் ராணுவ முக்கியத்துவமில்லாத கட்டுமானங்கள் மற்றும் விவசாய நிலங்களையும் இஸ்ரேலின் தாக்குதல்கள் அழித்திருந்தன. இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 240 பேர் பாலஸ்தீன காவல்த்துறையை சார்ந்தவர்கள். பாலஸ்தீன போராளிகள் பொதுமக்களுக்கு மத்தியிலிருந்து மக்களை கேடயமாக வைத்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியிருந்தது. அதன் நிமித்தமாகவே இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடுப்பதாகவும் பரப்புரைகள் நடந்தன. ஆனால் கோல்டு ஸ்டோன் அறிக்கையில் பாலஸ்தீன போராளிகள் நகர்ப்புறங்களில் மக்களுக்கு மத்தியிலிருந்து ஏவுகணைகளை வீசியதை தெரிவித்தது. அதே வேளை மக்களை தாக்குதல் நடந்த பகுதிகளுக்கு செல்ல பாலஸ்தீன போராளிகள் வற்புறுத்தியதாக ஆதாரமில்லை என்று தெரிவித்திருந்தது.

இந்தியா உட்பட உலக நாடுகள் ஆதரவுடன் வன்னி மக்கள் மீது சிறீலங்கா அரசு நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த இஸ்ரேலைப் போல ‘மனிதக் கேடயங்கள்’ பரப்புரையை இந்திய ஊடகங்களும், இந்திய அரசும் நடத்தியது கவனிக்கத்தக்கது. ஆனால் அப்போது ஐ.நாவும், மேற்குலக நாடுகளும் மக்கள் அடர்த்தியான குடியிருப்புகள், பாதுகாப்பு வலையம், மருத்துவமனைகள், பாடசாலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திய சிறீலங்காவிற்கு ஆதரவாக நின்றன. மக்கள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கு சிறீலங்கா மீது கடுமையான அழுத்தங்களை பயன்படுத்தவில்லை. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க சிங்கள பேரினவாத அரசுக்கு ஆயுதங்கள், ஆலோசனைகளை கொடுத்த நாடுகளின் வரிசையில் இஸ்ரேலும் இடம்பெற்றது. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசியல் லாபங்களுக்கு ஏற்ப நடத்தப்படுகிற அரசியல் விளையாட்டுகள். அவை வெற்றிபெறுவதில் ஊடகங்களின் பங்குண்டு.

இஸ்ரேலின் ஊடக பரப்புரைகள்

அமெரிக்க மக்களுக்கும், உலகிற்கும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள், ஆக்கிரமிப்புகளை வெளியிடாமல் இருப்பதற்காக ஊடகவியலாளர்களோடு இஸ்ரேலின் பரப்புரைக் குழு உறவுகளை நெருக்கமாக உருவாக்கியுள்ளது. மோதல்கள், தாக்குதல்கள், ஆக்கிரமிப்புகளில் ஊடகங்கள் வகிக்கிற பங்கையும், அரசியலையும் மக்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். போரில் அல்லது ஆக்கிரமிப்புகளில் மக்கள் எத்தகைய செய்திகளை அறிய வேண்டும், எப்படி அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை ஊடக நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. ஆக்கிரமிப்பு மற்றும் போரின் போது ஊடகங்களில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வார்த்தையிலும் அரசியல் மறைந்துள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளையும், தாக்குதல்களை சிஎன்என் தொலைக்காட்சி பலமுறை ‘தற்காப்பு நடவடிக்கை’ என்று விவரித்திருந்தது. வன்முறைகளில்லாத பாலஸ்தீன கிளர்ச்சிகளும், எதிர்ப்புகளும் பயங்கரவாதமாக காட்சிப்படுத்தப்பட்டன.

பாலஸ்தீனர்களது குடியிருப்புகள், நிலங்களை சியோனிஸ்டுகளும் இஸ்ரேலிய ராணுவத்தினரும் அழிக்கிறார்கள். பாலஸ்தீன மக்களின் குடியிருப்புகள் மீது இஸ்ரேலிய விமானங்களும், பீரங்கிகளும், எந்திர துப்பாக்கிகளும் குண்டுகளை வீசுகின்றன. ஆனால் பாலஸ்தீனர்களின் தரப்பு நியாயம் ஊடகங்களில் வெளிவராதபடி இஸ்ரேல் பரப்புரைகளை நடத்துகிறது. 1982ல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிப்பு செய்த போது இஸ்ரேலின் ஊடக பரப்புரை அமெரிக்காவில் துவக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவான பரப்புரைகளை முன்னெடுக்கிற ‘அமெரிக்க இஸ்ரேலி பொது விவகாரக் குழு’ இஸ்ரேலுக்கு ஆதரவை திரட்டுவதோடு நிறுத்தவில்லை. இஸ்ரேலின் மீது குற்றம் சுமத்துகிற செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களைக் கண்டித்து போராட்டங்கள் நடத்துவது, நெருக்கடி கொடுப்பது ஆகியவற்றிலும் ஈடுபடுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள இஸ்ரேலுக்கு ஆதரவான பலமான அமைப்பாக இது உருவெடுத்துள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகமெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் திரண்டு தங்களுக்கான கனவு தேசத்தை உருவாக்க இணைந்த ஒற்றுமையும், அரசியல் பலமும் உலகமெங்கும் விடுதலைக்காக போராடுகிற மக்களுக்கு உதாரணமாக இருக்கலாம். ஆனால் யூதர்களது வரலாற்றிலிருந்து முரண்பாடுகளையும் அடையாளம் காண வேண்டும். அத்தகைய முரண்பாடுகள் மனிதகுல வளர்ச்சிக்கும், மனித விடுதலைக்கும் பெரிய தடைகளாக இருப்பவை. அத்தகைய முரண்பாடுகளோடு அனைத்து மக்களுக்குமான நிரந்தர விடுதலையை அடைய முடியாது. யூதர்கள் இரண்டாம் உலகப் போரின் போது இட்லரின் வதை முகாம்களில் சித்திரவதைக்குள்ளான மக்கள் உருவாக்கிய இஸ்ரேல் இன்று பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மறுத்து, மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுவது அத்தகையது. பாலஸ்தீனர்களின் விடுதலை, உரிமைகளை மறுப்பதால் மோதல் நீங்காமல் இன்றும் தொடர்கிறது. நீண்ட காலமாக தங்களது நிலத்திலிருந்து அகற்றப்பட்ட மக்கள் ஆதிக்க சக்தியாகி அடக்குமுறை ஆயுதத்தை பயன்படுத்துவது எவ்வளவு பெரிய முரண்பாடு. அதிகாரங்கள் நகர்த்தப்படுவதால் மட்டுமே மனித இனம் விடுதலையை அடைய முடியாது. அடிமையாக இருந்த மக்கள் அதிகாரங்களை கைப்பற்றும் போது மனித விடுதலையை மையப்படுத்தும் அரசியல் வடிவம் உருவாகாமல் போனால் அவர்களே ஆதிக்க சக்திகளாகி அடக்குமுறையாளர்களாகிறார்கள். யூதர்களின் வரலாறு உலகிற்கு இதை உணர்த்துகிறது.

தகவல் உதவி:

http://english.aljazeera.net/

http://www2.ohchr.org/english/bodies/hrcouncil/specialsession/9/FactFindingMission.htm

http://www.un.org

http://www.trumanlibrary.org/

http://www.palestinefacts.org/

http://www.jnf.org

http://www.mfa.gov.il

- யோ.திருவள்ளுவர்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1630:2009-12-14-01-43-37&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த யூதர்கள்? – ஒரு வரலாறு

“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

`பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.

பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன் படி ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.

சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.

1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர். முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.

டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. இருப்பினும் அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள்.( யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், யாஹ்வே அல்லது எல்(ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.

கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும். இன்று இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.

யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில் யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா( மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரை யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும், (அல்ஜீரியா-மொரோக்கோ) குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.

நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை. யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.

இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது. முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.

கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது. உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது. தமது ஆக்கிரமிப்பை, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமை(அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.

உசாத்துணை தொடுப்புகள் :

Jew from Wikipedia

A Resource for Turkic and Jewish History in Russia and Ukraine

Israel deliberately forgets its history

http://kadayanalluraqsha.com/?p=42

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.