Jump to content

மல்லிகையின் 45 ஆம் ஆண்டு மலர்


Recommended Posts

கலைக்கேசரி 2/13/2010

மல்லிகையின் 45 ஆம் ஆண்டு மலரைப் பார்த்த போது அதன் ஆசிரியரது 50 ஆம் ஆண்டை நோக்கி நடைபோடும் வரலாறு என்பது கண்முன்னே வந்து போனது. மிகச் சிரமமிக்க பணியிது. இலக்கியம் படைப்பதென்பது வருமானத்தைப் பொறுத்த விடயமல்ல. அர்ப்பணிப்பின் ஒரு பகுதி. அத்தியாகத்தின் ஊடாக வளர்ந்த ஒன்றுதான் மல்லிகையும்.

ஆசிரியர் டொமினிக் ஜீவா மூன்றாம் பக்கத்தில் தனது எழுத்தில் நம்பிக்கை ஊற்றைத் திறக்கிறார். இந்த 45 ஆண்டு கால தனது இதழியல் பயணத்தில் மல்லிகை தொடர்பான ஆவணப்படுத்தப்படக் கூடிய பல தகவல்களைத் தொட்டிருக்கிறார். கடந்த கால யுத்த நிஷ்டூரங்களுக்கு மத்தியிலும் அவர் வடக்கிலும், கொழும்பு மத்திய பகுதியிலும் மல்லிகையை வளர்த்தெடுத்த வரலாற்றை வரைந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து தான் இடம்பெயர்ந்து கொழும்பு வீதிகளில் சுற்றிக்கொண்டிருந்தபோது துரை விஸ்வநாதனின் தோழமை கிடைத்தமை பற்றியும், ஆசிரியரின் திக்கற்ற நிலை கண்டு துரை அவர்கள் மல்லிகையின் வளர்ச்சிக்காக ஐம்பதாயிரம் ரூபாய் தொகையை ஆசிரியரிடம் கொடுத்து மல்லிகையை கொண்டு செல்ல உதவியமை பற்றியும் டொமினிக் ஜீவா அவர்கள் இதில் தன் எழுத்துக்கள் மூலம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். சர்வதேச எழுத்தாளர் ஒன்று கூடல் பற்றிய குறிப்புகளும் முதல் பக்கம் அமையப்பெற்றுள்ளது. இது குறித்த விரிவான கட்டுரையொன்றும் முருகபூபதியின் எழுத்தில் ஆண்டுமலர் பதிவு செய்துள்ளது.

மொத்தம் 11 சிறுகதைகள் மல்லிகை ஆண்டுமலரை அலங்கரித்துள்ளது " இரத்தம் குடிப்பதானது', "குருதட்சணை', "முக்கூடல்', "விதி', "தலை', "உறவுகளைத்தேடும் ஆவிகள்', "உரிமைகள் உயிர்தெழும்போது', "யாரோடு நோவேன்', "நந்திக்கடல் அருகாக', "வாழ்க்கையின் ரணங்கள்', "அங்கும் இங்கும்' ஆகியன குறிப்பிடத்தக்கவாகும். இதில் க. சட்டநாதனின் "முக்கூடல்' சிறுகதை லதா பாத்திரத்தின் ஊடாக இலக்கிய ரசனையினையும், முரளி, சியாமளன் என்கின்ற நண்பர்களிடையே உள்ள குணாதிசயங்களையும், இலக்கியப் புரிதலையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. உள்ளோட்டமாக அந்த இரு நண்பர்களிடையே உள்ள காதலை முக்கியப்படுத்தி காதலுக்குரியவளை வெளிச்சப்படுத்துகிறது இக்கதை. ஆனந்தியின் "குருதட்சணை' சரளா டீச்சரின் குறுகிய மனத்தோலை உரித்துக்காட்டுகிறது. இவ்வகையான சரளாக்கள் உயர் கல்லூரிகளில் இருக்கும் வரை உயர எண்ணும் ஏழை மாணவர்களால் முடியாது என்ற கருத்தியலைக் கொண்டுள்ளது. கம்ப வாரிதி இ.ஜெயராஜின் "விதி'யும் பழைய கனவொன்றில் நிஜங்களை தரிசிக்க வைக்கிறது. யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் "தலை' சிறுகதை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னனான சங்கிலியனை அடையாளம் செய்கிறது.

செங்கை ஆழியானின் "நந்திக்கடல் அருகாக' கதையானது ஈழத்தின் இறுதி யுத்த நிலைப்பாட்டை கருவாக்கியுள்ளது. ஏனைய சிறுகதைகளும் கூட சமூகத்தின் தாக்க கருவூலங்களை கொண்டுள்ளது எனலாம்.

"இலக்கியமும் மொழிபெயர்ப்பும்' மலர் ஏந்தியிருக்கும் அருமையான கட்டுரை. கனகசபாபதி நாகேஸ்வரன் எழுதியுள்ளார். ஹீபுரு மொழியில் பைபிளை 1488 ஆம் ஆண்டு ஹீபுருபன்டச்சு என்பவர் மொழிபெயர்த்து தந்துள்ளார் என்ற தகவலோடு அரிய பல மொழி பெயர்ப்புத் தகவல்களை கட்டுரை கூறுகிறது. பயன்மிக்கது. "அம்பேத்காரும், எம்.சி. சுப்பிரமணியமும்', தலைப்பில் ந. இரவீந்திரன் பதிவு செய்திருக்கும் கட்டுரை அவசியமாக இளந்தலைமுறையினர் படித்தறிய வேண்டியதொன்று. "போலித்தன அடையாளங்களை வெறுத்து போற்றத் தக்க கலைஞன் லடிஸ்' தலைப்பிலான கட்டுரை இலங்கை மேடை நாடகத்துறையின் கொழும்புக் கலைஞரான லடிஸ் வீரமணி குறித்த பல தகவல்களை ஏ.எஸ்.எம். நவாஸின் பேனா பதிவு செய்திருக்கிறது. வை.சாரங்கனின் இரு கவிதைகளும் முழுப்பக்கத்தை முடித்திருக்கிறது. வாசிப்பதற்கும் ரசிப்பதற்கும் சிறந்தவை அவ்விரு கவிதைகளும், நெடுந்தீவு மகேஷின் "யாவருமே மனிதராவோம்' என்ற கவிதையும், ஈழக்கவியின் "இரவின் மழையில்' கவிதையும் ரசிக்கும் மனங்களை குளிர்விப்பன. ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து "காலையுணவு'ம் கவிதையாய் தரிசனம் தர அதை தமிழில் தந்திருக்கிறார் கெகிராவ சுலைஹா. நல்ல கவிதை.

இன்னும் சின்னராஜா விமலன், பிரகலாத ஆனந்த், மு.பஷீர், சோ.பத்மநாதன், தெளிவத்தை ஜோசப், இணுவில் மாறன், மா.பாலசிங்கம், மேமன் கவி, வேல் அமுதன், சந்திரகாந்தா, முருகானந்தன், கெக்கிராவ சஹானா ஆகியோரின் எழுத்துக்களும், பல்வித படைப்புகளாக மலருக்கு காத்திரம் சேர்க்கிறது. மேல் மாகாண தமிழ் சாஹித்திய விழாவில் எல்பின்ஸ்டன் தியேட்டரில் மேடையேறிய வீதி நாடகத்தின் சிறிய விமர்சனமாக டொமினிக் ஜீவாவின் பேனாவும் பேசுகிறது. மிக ஆழமான படைப்புக்கள் இம்முறை மல்லிகை ஆண்டுமலரை அலங்கரித்திருந்தபோதும், சிறுகதைகளுக்கான ஓவியங்களை வழமை போல் இம்முறையும் மல்லிகை ஆண்டு மலரில் தருவதற்கு இடமளிக்கவில்லை. அடுத்த ஆண்டு மலரிலாவது அதை நிறைவேற்றுமா? ஆண்டு மலரின் விலை ஏற்றப்படாத அதே விலையாக 200/= மட்டுமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகையின் 45 ஆம் ஆண்டு மலர்வுக்கு எம் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

இலங்கையில் இருக்கும் காலம் வரைக்கும் மல்லிகை இதழை தொடர்ந்து வாசிக்க கூடியதாக இருந்தது. இங்கு கனடாவில் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்து பண்டிதப்பண்டாரங்கள் என்று ஜயா இந்த இதழில் ஒருத்தரையும் திட்டவில்லையா?

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றி. தமிழில் வெளி வந்து கொண்டிருக்கும் அற்புதமான சஞ்சிகை. இலக்கிய வட்டாரதில் அதிகம் பேசப் படுகின்ற சஞ்சிகையும் மல்லிகையாய்த்தானிருக்குமென்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.