Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் வரதராஜப்பெருமாள் குளோபல் தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு மாகாண சபையை தமிழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் வரதராஜப்பெருமாள் குளோபல் தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வி

03 April 10 01:30 am (BST)

தமிழர்களின் 50 வருடக் கனவை நிறைவேற்றியதாக குறிப்பிடும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் ஈழப்பிரகடனத்தை செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தவர். இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றபடி இயங்குகிறார் எனக் குற்றங்கள் சாட்டபட்டடிருந்த நிலையில் இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நாட்டுக்கு மீள திரும்பியிருக்கிறார். வடக்கு கிழக்கு மாகாண சபையை தமழர்கள் கை தவற விட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடும் வரதராஜப்பெருமாளை குளோபல் தமிழ் செய்திகளுக்காக யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்து இந்த நேர்காணலை நடத்தியிருந்தேன்.

தீபச்செல்வன் :

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்தீர்கள். இணைந்திருந்த தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு தற்பொழுது பிரிக்கப்பட்டிருக்கிறது. ஈழப்போராட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணசபையை பெற்றது மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு வெற்றியாகவும் கருதப்படுகிறது. இப்பொழுது எதுவுமற்ற ஒரு தோல்வி நிலையில் நாம் இருக்கிறோம் என நினைக்கிறேன். இந்த அடிப்படையில் நீங்கள் முதலமைச்சராக இருந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை எப்படி பார்க்கிறீர்கள்?

வரதராஜப்பெருமாள் :

எமக்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாக அதை நான் பார்க்கிறேன். ஆனால் அதை சரியாக பயன்படுத்த தமிழ் மக்கள் தவறிவிட்டார்கள் என்பதுதான் மிக கவலைக்குரிய விடயம். அது மட்டுமல்ல வடக்கு கிழக்கு மாகாண சபையை சீரழித்து இல்லாமல் பண்ணுவதிலும் எம்மில் ஒரு பகுதியினர் அந்த நோக்கம் கொண்ட சிங்களவர்களில் ஒரு பகுதியினருக்கு ஒத்துழைத்து விட்டார்கள் என்பதும் கவலைக்குரிய விடயம். அதன் பின்னர் சில வருடங்களுக்கு முன்பு ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு இன்று வட மாகாணம் வேறு கிழக்கு மாகாணம் வேறு என்று போய் விட்டது. வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் தமிழர்களுடைய தாயகம் என்பது தமிழர்களின் 50 வருடக் கனவு. அதை நாங்கள் நிறைவேற்றினோம்.

அது மட்டுமல்ல திருகோணமலைதான் தமிழர்களின் தலைநகரமாக இருக்க வேண்டும் என்பதும் 50 வருடக் கனவுகளாக இருக்கின்றன. அதையும் நாங்கள் நிறைவேற்றினோம். அந்த நிறைவேற்றப்பட்ட கனவுகள் மீண்டும் கனவுகளாகவே கலைந்து விட்டன. உடனடியாக வடக்கு கிழக்கு இணைந்த சபையை பெற முடியுமா என்பதில் பல சந்தேகங்கள் உளளன. அந்தக் காலகட்டம் வர வேண்டும் அதை சிங்கள மக்களும் ஏற்க வேண்டும். அதை சிங்கள தலைவர்களும் ஏற்க வேண்டும். தமிழர்களும் அதற்காக தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். வெறுமனே வடக்கு கிழக்கு மாகாண சபை இணைக்கப்படுவதல்ல. அதிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதில் முஸ்லீம் மக்களுக்கு சில அச்சங்கள் இருக்கின்றன. அவர்களது அச்சத்திற்கும் தீர்வு காணப்பட வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்தால் சிங்கள மக்கள் பாதுகாப்பாக வாழ முடியுமா என்று அவர்களுக்கும் அச்சம் இருக்கிறது. இல்லை பாதுகாப்பாக வாழ முடியும் என்பதை நாங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு நிறைந்த அதிகாரத்தை கொடுத்தால் அது பிரிவினைக்கு வழி வகுக்குமே என்று சிங்கள மக்களுக்கு அச்சம் ஏற்படலாம். ஆப்படி நடக்காது இந்த நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்திருந்தால் இந்த நாட்டுக்கு இன்னும் ஒற்றுமைக்கு அது வழி வகுக்கும் என்று நம்ப வைக்க வேண்டும். அப்படியான சூழல் ஏற்படும் பொழுது மீண்டும் ஒரு வடக்கு கிழக்கு மாகாணத்தை இணைக்க முடியும். இதில் இன்னும் ஒரு விடயம் இருக்கிறது. மாநில அரசுக்குரிய நிர்வாக திறமை, வல்லமை கொண்ட தமிழர்களை எல்லாம் அந்த மாகாண சபை கொண்டிருந்தது. அப்படி பட்டவர்கள் மீண்டும் வர வேண்டும்., செயற்பட வேண்டும்., அப்படி பட்டவர்கள் தமிழ் சமூதாயத்தில் உருவாக வேண்டும். கடந்த கால யுத்தத்தினால் அவ்வாறான நிர்வாக திறமை கொண்ட தமிழர்களின் வளர்ச்சி என்பது குன்றிப் போய்விட்டது. கல்வியில் வளர்ச்சி கொண்ட இளைஞர்கள் இங்கு படித்து விட்டு வெளிநாடு செல்லும் நிலமை ஏற்பட்டு விட்டது. இந்த நாட்டிலுள்ள மக்களினுடைய வளர்ச்சிக்கும் தமிழர்களுடைய வளர்ச்சிக்கும் இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்கும் பாடுபடும் வகையில் முன்னேற்றமுள்ள இளைஞர்கள் வரவேண்டும். அப்படி வருகிற போது சுயாட்சியுடைய நிறைந்த அதிகாரங்களைக் கொண்ட மாநில அமைப்பை கொண்டு வந்தால் அது தமிழர்களுக்கு பயன்படும்.

ஜீரிஎன்னிற்காக தீபச்செல்வன் :

நீங்கள் ஈழப் பிரகடனம் ஒன்றை செய்து விட்டு இந்தியாவுக்கு சென்றிருந்தீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் திரும்பி வந்துள்ள சூழலில் மகிந்தராஜபக்ஷ ஒற்றை ஆட்சிக்குள் தீர்வை முன் வைக்கிறார். எதையும் வழங்காமல் மக்கள்சபை பற்றிக் குறிப்பிடுகிறார். அப்படி இருக்க அதிகாரப்பரவலாக்கம், நிருவாகப்பரவலாக்கம் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணசபை எந்தளவு சாத்தியத்தை கொண்டிருக்கிறது?

வரதராஜப்பெருமாள் :

முதலில் நான் ஒரு விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கல்விமான்கள், படித்த மாணவர்கள், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள், அரசியலில் ஆற்றல் கொண்ட அறிவு கொண்டவர்கள் நான் ஈழப் பிரகடனம் செய்ததிற்கு முதலில் என்னால் முன் வைக்கப்பட்ட 19 அம்சக் கோரிக்கையை வாசிக்க வேண்டும். அதை மறைப்பதற்காகத்தான் பெருமாள் ஈழப்பிரகடனம் செய்தார் என்று பிரேமதாசா பிரசாரம் செய்தார். பிரேமதாசாவுக்கு அதில் ஒரு நோக்கம் இருந்தது. 19 அம்சக் கோரிக்கையை உலகம் அறிய விடாது தடுப்பது அவரது நோக்கமாக இருந்தது. அதேபோல விடுதலைப் புலிகளும் அந்த நியாயமான கோரிக்கையை தமிழர்கள் அறியாமல் பண்ணி விட்டார்கள். அவர்கள் அதை கொச்சைப் படுத்துவதற்காக பெருமாள் ஈழப்பிரகடனம் செய்தார் ஓடிவிட்டார் என்றார்கள். பெருமாள் ஈழப்பிரகடனம் செய்தது சரியா பிழையா எனறு சொல்லவில்லை. ஓடிவிட்டார் என்பதற்காகவே அவர்கள் முக்கியத்துவம் படுத்தினார்கள். அதனால் மீண்டும் இன் அந்தப் 19 அம்சக் கோரிக்கையை வாசிக்கும்படி தமிழ் மக்களை, கல்விமான்களை, அரசியல் ஆர்வம் கொண்டவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

வடக்கு கிழக்கு இணைப்பது மீண்டும் சாத்தியமா எனறு கேட்டீர்கள். இலங்கையில் ஒற்றை ஆட்சிக்குள் எவ்வளவு அதிகபட்ச அதிகாரங்களை எடுக்க முடியுமோ அதை நாங்கள் எடுக்க வேண்டும். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் சமஷ்டிக்காக போராட வேண்டும். சமஷ்டி வரும்வரை நாங்கள் எதையும் ஏற்க மாட்டோம் என்று இருக்க கூடாது. தனிநாடு கிடைக்கும் வரை எதையும் ஏற்க மாட்டோம் என்று கூறி கடைசியாய் இருந்த வடக்கு கிழக்கு மாகாணத்தையும் கோட்டை விட்டு விட்டோம். மீண்டும் சமஷ்டி கிடைக்கும் வரை நாங்கள் எதையும் ஏற்க மாட்டோம் என்று இருக்க கூடாது. 13ஆவது திருத்தச் சட்டம் ஒற்றை ஆட்சிக்குள்தான் இருக்கிறது. இன்று ஐக்கிய ராய்ச்சியத்தில் பிரிட்டன், ஸ்கொட்லன்ட் இருக்கிறது. வேல்ஸ் இருக்கிறது. வடஅயர்லாந் இருக்கிறது. அவை எல்லாம் நிறைந்த அதிகாரங்களுடன் இருக்கின்றன. உங்களுக்கு தெரியும் ஸ்கொட்லாந்துக்கு தனி கிரிக்கட் அணியே உள்ளது. இந்தியாவில் கூட இல்லை. அமெரிக்கா கூட இதற்கு ஒத்துழைக்காது. ஆனால் பிரிட்டிஷ் ராஜ்சியம் ஒற்றையாற்சிக்குள் உட்பட்டது. இந்தியா சமஷ்டி அமைப்பு கொண்டதல்ல. சமஷ்டி மாதிரியான அமைப்பு கொண்டது. அங்குகூட ஒரு முதலமைச்சர் என்பது நிறைந்த அதிகாரம் கொண்ட பதவி. தமிழ் நாட்டு முதலமைச்சரிடம் முப்படைகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் ஒரு லட்சம் பொலிஸ்படைகள் உள்ளன. விவசாயத்தில் எதை செய்ய வேண்டுமோ அது அவருடைய அதிகாரம். மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமோ அது அவருடைய அதிகாரம். எந்த வீதியில் வீடுகள் போட வேண்டுமோ அது அவருடைய அதிகாரம். உள்ளுராட்சி மன்றங்கள் அவருடைய அதிகாரம். இப்படி ஒற்றை ஆட்சிக்குள்ளேயும் மிக உயர்ந்த பட்ச அதிகாரங்களை நாம் பெற முடியும்.

அவற்றைப் பெறுவதில் தவறில்லை. பெற்ற பின்னர் ஒன்றையும் கேட்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் பெறக்கூடியது எல்லாம் பெற வேண்டும். இன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நான் அதை தரமாட்டேன். போலிஸ் அதிகாரத்தை தர மாட்டேன் என்று சொலல்லாம். அவர் எதை தரமாட்டார் என்பதில் நாங்கள் நேரத்தை செலவழிக்க தேவையில்லை. அவர் எதை தரத் தயாராக இருக்கிறார் என்று கேளுங்கள். அதை முதல் கையில் எடுப்போம். பின்னர் அவர் தரத் தயாராக இல்லாததைப் பற்றி அவருடன் பேசிக் கொள்ளலாம். அல்லது அவர் நாளை பதவியில் இல்லாமல்போய் இன்னொரு ஜனாதிபதி வரும் பொழுது அவர் அவற்றை தரக்கூடும். இது ஜனநாயகத் தேர்தல் அமைப்பு. இதில் பல உறவுகளும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை எல்லாம் புரிந்து கொண்டு நீண்டகால இலக்கோடு இந்த அதிகாரப் பரவலாக்கத்தை பெறுவதில் தமிழ் மக்கள், தமிழ் தலைவர்கள் செயற்பட வேண்டும்.

ஜீரிஎன்னிற்காக தீபச்செல்வன் :

மே 17 இன் பின்னர் ஈழப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் முடிந்து போயிருந்தது. தமிழ் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் மேலும் தேவைப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. இந்தச் சூழலில் அதற்கான அவசியத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

வரதராஜப்பெருமாள் :

என்றுமே ஒற்றுமைப் படுவதற்கான அவசியம் இருந்திருக்கிறது. ஒரு கையில் ஐந்து விரல்கள் உள்ளன. ஒவ்வொரு விரல்களுக்கும் தனித்தனி பலம் இருக்கிறது. இதை நான் வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்த காலத்திலும் அதற்கு முன்பும் ஒற்றுமை பற்றிச் சொல்லுகிறபோது நான் குறிப்பிட்ட உதாரணம். ஐந்து விரல்களில் பெருவிரல் மிகப் பலமானது. அதற்காக மிச்சம் நாலு விரல்களையும் வெட்டி விட முடியாது. பெரு விரலை மட்டும் வைத்திருந்தால் அது கையாகாது. அதுதான் ஒற்றுமை. அது மே 17 இற்கு பிறகு மட்டுமல்ல தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் அது தேவைப்படுகிறது.

83 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழ தேச விடுதலை முன்னணி என்ற ஒன்றை உருவாக்க எவ்வளவோ பாடு பட்டு உருவாக்கினோம். ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, ரெலோ, ஈரோஸ் என்று சேர்ந்து அதற்கு பிறகு புளொட், தமிழர் கூட்டணியுடன் அதை விரிவாக்க முயற்சித்தோம் அதற்கிடையில் புலிகளும் தாங்களாக முன்வந்து இணைந்தார்கள். எங்களை முதலில் சேருங்கள் என்று அவர்கள் கேட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து மற்றவர்களையும் சேர்க்க வேண்டும் என்று சொன்னோம். பிறகு வடக்கு கிழக்கு மாகாணசபை அமைந்த காலத்தில் இந்திய இலங்கை ஒப்பந்த்தின் பிறகு நாங்கள் மட்டும் மாகாண சபையை அமைக்கவில்லை. தமிழர் கூட்டணியை எத்தனையோ தடைவ கேட்டோம். நீங்கள் வந்து தேர்தலில் போட்டியிடுங்கள். நீங்கள் வந்து மாகாண ஆட்சியை நடத்துங்கள் நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கிறோம். அப்பொழுது விடுதலைப் புலிகள் அதற்கு தயாராக இல்லாமல் பயமுறுத்திக் கொண்டிருந்ததினால் களத்து வேலைகளை நாங்கள் பார்க்கிறோம் என்றோம். மற்ற இயக்கங்களையும் கேட்டோம். ஆக ஈ.என்.டி.எல்.எப் மட்டுமே தயாராக இருந்தது. அதேவேளை முஸ்லீம் கட்சிகளை கேட்டோம். அதற்கு முஸ்லீம் காங்கிரஸ் மட்டுமே அதற்கு தயாராக இருந்தது. அப்பொழுது மகாணசபையை எதிர்த்திருந்த எஸ்.எல்.பி, ஜே.வி.பி ஐயும் தேர்தலில் பங்கு பெறக் கேட்டோம். மகாணசபையில் நாங்கள் குழுநிலைப் போக்குடையவர்களாக நடந்து கொள்ளவில்லை. முஸ்லீம் காங்கிரஸ் ஊடன் மிக அணைவாகவே நடந்து கொண்டோம். அதற்கு பின்னர் அவர்கள் எங்களைப் பற்றி தவறான பிரசாரங்களை செய்தது வேறு விடயம்.

ஆந்த மாகாண சபையை எப்படியாவது குழப்பி விடுவதற்கு பிரேமதாசா முயற்சித் பொழுது புலிகளும் அதற்கு ஒத்துழைத்தார்கள். புலிகளுடனும் நாங்கள் பகிரங்கமாக கோரினோம். மகாணசபையில் எங்களிடமிருக்கும் 38 உறுப்பினர்களுக்கும் உரிய ஆசனங்களையும் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்று. அப்பொழுதும் அவர்கள் விட்டுக் கொடுத்து ஒற்றுமைக்காக தயாராக இல்லை. அவர்கள் வெறும் பெருவிரல் மட்டும் போதும் மற்ற விரல்கள் எல்லாம் வெட்டி விட வேண்டும் என்று நினைத்தார்கள்.

இப்பொழுதும் சொல்லுகிறேன். தமிழர்கள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். ஆனால் அது தேர்தல் கால ஒற்றுமையை நான் சொல்லவில்லை. தமிழர்களது உரிமைக்கான குரலை ஒலிப்பதற்கான ஒற்றுமை. அரசாங்கத்திற்கு முன்னாலும் சரி இந்தியாவுக்கு முன்னாலும் சரி உலக நாடுகளுக்கு முன்னாலும் சரி நாங்கள் ஒற்றைக் குரலில் ஒலிப்பதற்கு நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். தேர்தல் வரும் பொழுது நீங்கள் ஐம்பது கட்சிகளாக நின்று போட்டி போட்டுக் கொள்ளுங்கள். அதில் எங்களுக்கு கவலை கிடையாது. ஏனென்றால் அது ஒவ்வொருவரது ஜனநாயக உரிமை. யாரை தெரிவு செய்வது என்பது தமிழ் மக்களின் உரிமை. அரசியலை முன்னேற்ற பொருளாதாரத்தை முன்னேற்ற சாதியப் பிரச்சிழனையை ஒழிக்க நாம் ஒற்றுமைப்பட வேண்டும்.

ஜீரிஎன்னிற்காக தீபச்செல்வன் :

80 களில் நடந்த தமிழ் தேசிய இராணுவ உருவாக்கதில் பொழுது நீங்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதைப்போல பின்னர் தமீழ விடுதலைப் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபடும் பொழுது அதை நீங்கள் கடுமையாக விமர்சித்திருந்தீர்கள்? இந்த இரண்டு விடயங்களுக்கும் இடையில் என்ன வேறுபாடு?

வரதராஜப்பெருமாள் :

முதல் கட்டமாக நாங்கள் பலபேரை இணைத்திருந்தோம். மூவாயரம் பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அரசாங்கத்தில் அந்த மூவாயிரம் பேரை அங்கரித்து உடனடியாக ஒரு தொண்டர் படையை அமைக்க திட்டமிட்டோம். குடிமக்கள் படை எனறு அதற்கு பெயர் வைத்தோம். அது சட்ட விரோதமான படையல்ல. அதற்கு அரசாங்கம் சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்தது. பின்னர் நெருக்கடி ஒன்று ஏற்பட்ட பொழுது மீண்டும் நாங்கள் அரசாங்கததிடம் கேட்டோம். அப்பொழுது 64 ஆயிரம் பேர் இராணுவத்தில் இருந்தார்கள். நாங்கள் அதில் 20 ஆயிரம் பேரை தமிழ் பேசும் மக்கள் சார்பாக கேட்டோம். அப்பொழுது நாங்கள் கணக்கு பார்த்த பொழுது .06 வீதம்தான் தமிழர்கள் இராணுவத்தில் இருந்தார்கள். அப்பொழுது 27 ஆயரம் பேர் இலங்கையல் பொலிஸ் பதவியில் இருக்கும் பொழுது 9 ஆயிரம் பேரையாவது தமிழ் பேசும் மக்கிளல் இருந்து சேர்த்துக் கொள்ள கோரியிருந்தோம். அவர்கள் அதை மறுக்க முடியாது ஒத்துக் கொண்டார்கள். ஆனால் எங்களிடம் ஆட்கள் இல்லை. அதேவேளை மாநல ஆட்சிக்கும் மாநில ஆட்சி அமைக்க பொலிஸ் படைகளுக்கும் ஆட்கள் தேவைப்பட்டன. இதற்காக ஆட்களை விரைவாக திரட்ட வேண்டிய தேவை இருந்தது. அது மாகாண சபையின் முடிவாக இருக்கவில்லை. அது கட்சியின் முடிவாகவே பலவநதாமாக ஆட்சேட்பு நடந்தது.

பலவந்தமாக ஆட்களைப் பிடிப்போம். பிறகு பிரச்சாரம் செய்வோம். அதில் விலகுபவர்கள் விலகலாம். அப்படியான முயற்சியை பல கட்சிகள் செய்தன. அன்று தமிழ் மக்களைப் பாதுகாக்க இலங்கை அரசுடன் எதிர் கொள்ளக்கூடிய மாநில படையை உருவாக்குவதுதான் அதன் நோக்கம். அதில் பல நடமுறைத் தவறுகள் உள்ளன. யதார்த்தத்தில் அப்படி வைத்து செயற்படுத்த முடியுமா என்பது பின்னர் பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது.

ஆனால் விடுதலைப் புலிகள் இளைஞர்களைப் பிடித்து இரண்டு வாரம் பயிற்சி கொடுத்து போர்க்களத்தில் அவர்களை முன்னரண்களுக்கு அவர்கள் அனுப்பப்பட்டார்கள். தனிநாட்டுக்காக போராடுகிறோம் என்பதற்காக பொருத்தமான போர் வீரர்களாக மாற்றாமல் முன்னுக்கு போ என முன்னுக்கும் மரணம் பின்னுக்கும் மரணம் என நிலமை இருந்தது. அதை எதிர்த்து பெற்றோர்கள் போன பொழுது முன்னர் பெற்றோர்கள் போன பொழுது பல இளைஞர்கள் விடுவிக்கப்பட்டார்கள். இங்கு பெற்றோர்களே விடுபட முடியாமல் போனார்கள். இறந்த முப்பதாயிரம் பேரில் 29 ஆயிரம் பேர்தான் தமீழம் கிடைக்கும் என நம்பியிருப்பார்கள். தமீழம் கிடைக்காது என்று நம்பாதவர்களாலேயே இவர்கள் இப்படி கையாளப்பட்டார்கள். இது இரண்டும் ஒரே விடயமாக குறிப்பிட முடியாது. இதில் முழுச் சமுதாயமுமே அவலத்தை சந்தித்தது. நாங்கள் செய்த பரிசோதனை வேறு இப்படியான பரிசோதனை வேறு. இப்படியான பரிசோதனைகள் இனியும் நடக்க கூடாது.

ஜீரிஎன்னிற்காக தீபச்செல்வன் :

நீங்கள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோனவர் என்ற கூறப்படுகிறது அதைப் பற்றி குறிப்பிடுங்கள்?

வரதராஜப்பெருமாள் :

இந்தியா எனக்கு துணை செய்தது உன்மை ஆனால் நான் இந்தியாவுக்கு துணை செய்யவில்லை. இந்தியா பெரிய நாடு. 1200 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு. ஆந்த நாட்டுக்கு என்னைப்போன்ற தனி மனுசன் துணை செய்ய வேண்டுமா? 15 லட்சம் படை வீரர்கள் அவர்களிடம் இருக்கின்றன. நான் அவர்களிடம் துணை போகவில்லை. அது பொய்யான கருத்து. ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக இந்தியாவை பயன்படுத்த வேண்டும். அதைக் குறித்து என்னால் இந்தியாவுடன் பேச முடியும்.

ஜீரிஎன்னிற்காக தீபச்செல்வன் :

தமிழ் மக்களின் அரசியலில் எதாவது தொடர்ந்து செய்யும் எண்ணங்கள் இருக்கின்றதா?

வரதராஜப்பெருமாள் :

தமிழ் மக்களின் அரசியலில் எதிர்காலத்தில் முன்னேற்ற கரமான மாற்றத்தை செய்ய இருக்கிறேன். இலங்கையில் அரச முறையில் ஒருமாற்றம் வரவேண்டும். 87 இற்கு முன்பு ஒரு பாராளமன்றம், 87 இன் பின்னர் ஒரு மாகாணசபை என்று மாற்றம் பெற்றது. அது ஒரு ஆட்சி முறையினுடைய வளர்ச்சி. ஏங்கள் கோரிக்கை எல்லாம் மாகாணங்களுக்கு அதிகாரம் போதாது. ஏனக்கும் உங்களுக்கும் எல்லோருக்கும் ஒரு பொறுப்பிருக்கிறது. இந்த மாகாண சபைக்கான அதிகாரங்களை பெறுவதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்பது. சேயற்பட வேண்டும். போராட வேண்டும். சிங்கள முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் அடுத்த கட்ட சமூதாய வளர்ச்சியில் எனது பாத்திரமும் இருக்கும்.

2ஆம் இணைப்பு:‐ சமஷ்டி முறைமை ஆட்சியினால் நாடு பிளவடையாது – வரதராஜா பெருமாள்

நமஷ்டி முறைமை ஆட்சியினால் நாடு பிளவடையாதென வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பரவலாக்களின் முதல் கட்டமாக 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல பாகங்களிலும் அதிகார பரவலாக்கல் முறைமைகள் வித்தியாசமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை பரீட்சார்த்தமாக அமுல்படுத்தினால் அது நீண்ட காலத்திற்கு நீடிக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கை மீள இணைப்பது தொடர்பிலான கோரிக்கை கிழக்கிலிருந்து முன்வைக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை ஐக்கியப்படுத்துவது மிகவும் அவசியமானதென அவர் தெரிவித்துள்ளார்.

புவியியல் ரீதியில் ஒன்றிணைந்திருந்த போதிலும், மனோ ரீதியில் பிளவுபட்ட ஓர் நிலைமையே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பௌதீக ரீதியில் மட்டுமன்றி மக்களின் உளப்பாங்கின் அடிப்படையில் ஒரே நாடு என்ற எண்ணக்கரு உதயமாக வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வி ஒன்றின் போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமஷ்டி முறை ஆட்சியின் மூலம் நாடு பிளவடையும் என்ற எண்ணமே அனேகமான தெற்கு மக்களிடையே காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் மக்களிடையே சமஷ்டி முறைமை குறித்து தெளிவான விளக்கம் ஏற்பட்டால், தற்போது காணப்படுவதனைவிடவும் பல்லின மக்களிடையே அதிகளவு பிணைப்பு ஏற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

02 April 10 02:02 pm (BST)

தமிழ் மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்த தான் இலங்கை திரும்பியிருப்பதாக கூறுகிறார் வரதர்:‐

தமிழ் மக்களுக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தவும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சரியான தலைமைகளை புதிய தமுறையில் இருந்து உருவாக்கவும், தமிழர்களின் அரசியல் பொருளாதார சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு ஒரு ஊன்றுகொலாக இருப்பதற்கும் நான் மீண்டும் வந்திருக்கிறேன் என வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் நான் ஒரு மந்திரக்கோலையும் கொண்டு வரவில்லை அனால் மக்களுடன் இணைந்து செயற்பட்டு நல்லதொரு சிறந்த எதிர்காலத்தை மக்களுக்கு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். கடந்தகாலத்தில் பெடியங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள் என்று இருந்ததைப் போல் எதிர்காலத்தில் இருக்கக்கூடாது.

தமிழ்ச் சமூகத்தில் உள்ள கல்விமான்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் முதலானோர்களுக்கு இந்த சமூகத்திற்கு எதிர்கால நம்பிக்கையைக் கொடுப்பதற்கு பாரிய வரலாற்றுக்கடமை உண்டு.

http://globaltamilnews.net/tamil_news1.php?nid=22700&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.