Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் புத்தர்: த.அகிலன் (ஆனந்த விகடனுக்காக)

Featured Replies

வாசித்ததில் பகிர விரும்பியது

அரசியல் புத்தர்: த.அகிலன் (ஆனந்த விகடனுக்காக)

புத்தர் ஒரு சுவாரஸ்யமான ஆள்தான். அவரை எனக்கு நல்லாப் பிடிக்கும். யசோதராவை நித்திரையாக்கிப்போட்டு, நைஸா பின் கதவு வழியா எஸ்கேப்பாகும்போது புத்தர் நினைச்சிருப்பார், 'இண்டையோட இந்த அரசியல் சனியனைத் துறக்கிறேன்' என்பதாய். ஆனால், விதி யாரைவிட்டது? புத்தர் அரசியலைவிட்டுப் பேரரசியலை உருவாக்கிவிட்டார்.

ஆனாலும் புத்தர் அறியார், அழகும் சாந்தமும் நிரம்பிய தனது உருவம் வெறும் எல்லைக் கல்லாகச் சுருங்கிவிட்டதை. இன்றைக்குப் புத்தர் சிலை என்பது இலங்கையில் எல்லைக் கல். விகாரை என்பது காவல் கொட்டில். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு கையாலாகாதவராக புத்தர் சிரித்துக்கொண்டு இருந்தாலும், நான் அவரைப் பெரிதும் விரும்புகிறேன். அவர் அளவுக்குத் தன்னைப் பிறர் இஷ்டத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிற ஆள் வேறு யாரும் கிடையாது.

கிளிநொச்சியில் முன்பு ஒரு சிங்கள மகா வித்தியாலயம் இருந்தது. அதன் அதிபராக ஒரு பிக்கு இருந்தார். அவரைப் பெரியம்மாக்கள் எல்லாம் 'சாது, சாது' எண்டு கூப்பிடுவினம். நான் அவருடைய வீட்டுக்கு இரண்டொரு தடவை போயிருக்கிறேன். அது ஒரு மாந்திரீகக் குகைபோல இருப்பதாய்த் தோன்றும். நான் ஒரு நோஞ்சான் பொடியனாய் இருந்ததால், சளி, காய்ச்சல், இருமல் அது இதெண்டு எல்லா வருத்தங்களுக்கும் என் மேல் பிரியமான பிரியம் இருந்தது. எனக்கு வருத்தம் வந்தால், அம்மா முதல் கூட்டிக்கொண்டு போற இடம் சுப்பையற்ற சாந்தி கிளினிக். வருத்தம் மாறினோண்ண, முதல் கூட்டிக்கொண்டு போறது சாதுவிட்ட. அவர் தகடு, கூடு எல்லாம் இடுப்பில்வைத்துக் கட்டிவிடுவார். அதுக்குப் பிறகு வருத்தங்கள் அண்டாது எண்டது அம்மாவின் பெரு நம்பிக்கை. வருத்தங்கள் அண்டுதோ இல்லையோ, சாது கட்டின கூடுகளும் தகடுகளும், என் இடுப்பில அண்டு அண்டெண்டு அண்டியது.

வட பகுதிகளில் இருந்து முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டார்கள். அநேகமாகப் பிற இனத்தவர்கள் அனைவருமே புலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறிவிட்டார்கள். ஆனால், பிக்குவை அவர்களால் வெளியேற்ற முடியவில்லை (அவர் தமிழ்ப் பௌத்தரும் அல்ல) அல்லது பிக்கு வெளியேற விரும்பவில்லை. அவர் ஓர் அதிசயம்போல அங்கே நடமாடினார். முள்ளிவாய்க்காலில் புலிகளின் இறுதி வீழ்ச்சி வரைக்கும் பிக்கு வன்னியில்தான் இருந்தார். தன்னைப் புலிகள் நாகரிகமாகவும் மரியாதையாகவும் நடத்தினார்கள் என்பதையும் வெளி உலகுக்குச் சொன்னார். கடைசி வரைக்கும் அம்மாவைப்போல பலபேர் பிக்குவிடம் தங்கள் பிள்ளைகளுக்கு மந்திரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதைவிட முக்கியமான விசயம், பிக்கு வன்னியில் இருக்கும் வரைக்கும் மொட்டைத் தலையும் காவியுமாகத் தன் அடையாளங்களோடேயே உலாவினார். தன் அடையாளங்கள் எதனையும் துறக்கவும் இல்லை, துறக்க நிர்ப்பந்திக்கப்படவும் இல்லை.

வழித் துணையாய் வந்த புத்தர்!

இலங்கைத் தீவில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் ஏற்படுகிற சீஸன் சமாதானங்களின் கடைசி சீஸனான 2002-2006 பருவகாலத்தில் நான் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் அடிக்கடி போய் வந்தேன். புலிகளிடம் பாஸ் காட்டாமலும், ராணுவத்திடம் இலங்கை தேசிய அடையாள அட்டையைக் காட்டாமலும் யாரும் அந்த இடங்களைக் கடந்து போக முடியாது. 2006-ல் குலுக்கிய கைகள் குலுக்கியபடியே இருக்க... உள்ளே சனத்துக்கு எலும்புகள் உடைந்துகொண்டு இருந்தன. தேசிய அடையாள அட்டை இல்லாமல் முகமாலை ராணுவச் சோதனைச் சாவடியைக் கடப்பது என்பது சிம்ம சொப்பனம். அந்த நேரம் பார்த்து எனது தேசிய அடையாள அட்டை தொலைந்துபோனது. ஆனால், அவசரமாக யாழ்ப்பாணம் போக வேண்டும் எண்ட ஒரு இக்கட்டான நிலைமையில் நான் புத்தரைத் துணைக்கு அழைத்தேன். மனுசன் அதே புன்னகையுடன் வழித் துணையாய் வந்தார். ஜெயமோகனின் 'நெடுஞ்சாலைப் புத்தரின் நூறு முகங்கள்' என்ற கவிதைத் தொகுதியில் புத்தர்தான் அட்டைப்படம். அதைக் கையில் எடுத்தபடி முகமாலைச் சோதனைச் சாவடிக்குப் போனேன். அடையாள அட்டை கேட்ட ராணுவ வீரனிடம் 'தொலைந்துவிட்டது' என்றேன் தைரியமாக. அவன் புத்தகத்தில் இருந்த புத்தரையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தான். சிங்களத்தில் ஏதோ கேட்டான். நான் சிரித்தேன். விட்டுவிட்டான். பிறகு, அந்தப் புத்தகத்தையும் வன்னியையும்விட்டு வெளியேறுமாறு யுத்தம் என்னை நிர்ப்பந்தித்தது. ஆனாலும், புத்தரை எனக்குப் பிடித்திருந்தது.

புத்தர் என்னைத் துரோகியாக்கின கதை!

கனநாள் கழிச்சு இலங்கை திரும்பினேன். சந்திக்கு சந்தி மறிச்சு அடையாள அட்டை கேட்காத இலங்கை. ஆனாலும், பதற்றம் உள்ளோடிக்கொண்டு இருக்கிறது. ஒளித்துவைக்கப்பட்டு இருக்கும் ரகசிய உறவைப்போல தமிழன் என்கிற நினைப்பே உள்ளுக்குள் உறுத்துகிறது. நான் இருக்கிற ஆற்றங்கரையில் ஒரு புத்தர். போகவும் வரவும் என்னைப் பாத்துச் சிரிச்சுக்கொண்டே இருந்தார் வெள்ளைப் புத்தர். எனக்கு இவரை இப்பவும்பிடிச்சி ருந்தது. திடீரென ஒருநாள் பார்த்தால் புத்தரின் அழகிய புன்னகையைப் போத்தி மூடி இருந்தது காவித் துணி.

கொழும்பில் அரசு சார்பிலான கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டு இருந்தன. மே 18 தமிழனை வெண்ட தினம் எண்ட கொண்டாட்டம். நான் அப்பதான் புத்தரைச் சரியா மதிச்சன். 'அட, இந்த மனுசன் அப்பாவிகளைப் படுகொலை செய்த நாட்களைத் தன் மக்கள் வெற்றிநாளாகக் கொண்டாடுகிற அநியாயத்தைக் காணச் சகியா மல் கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்குதே' எண்டு. 'இதைத்தவற விடக் கூடாது. விட்டா மனுஷன் நாளைக்குத் திரும்பவும் சிரிக்கத் தொடங்கியிரும்' எண்டு நினைச்சு, உடனே என்ர மொபைலால படம் எடுத்தேன். எடுத்து முடிக்கேக்க ஒருத்தர் என்னை 'மல்லி மல்லி' எண்டு கூப்பிட்டார். அவர் சிங்களர். கோபமாக எதையோ கேட்க, இந்தாள் எதுக்குக் கோவப்படுது என எனக்கு விளங்கேல்ல. அந்தாள் திரும்பவும் மறிச்சுப் பேசிச்சிது. அப்பத்தான் எனக்கு விளங்குச்சு, நான் புத்தருக்குக் குண்டு வைக்கத்தான் போட்டோ எடுக்குறன் எண்டு, அந்த ஆள் நினைச்சிருக்குது. நான் பாட்டுக்கும் கெத்தான ஆள் மாதிரி முறைச்சுக்கொண்டு என்ர பாட்டுக்கு நடக்க வெளிக்கிட்டன். ஆனால், அந்தாள்ரோட் டால போன ஒரு ஓட்டோக்காரனை மறிச்சு தன்ர ஆவே சத்தை அவனுக்கும் பற்றவைக்கும் முயற்சியில் இருந்துச்சு. நான் நடையின்ர வேகத்தைக் கூட்டி... பிறகு, வீட்டடிக்கு வரேக்க எப்படி வந்திருப்பன் எண்டதை நினைச்சுப் பாருங்கோ.

இப்புடி எல்லாம் றிஸ்க் எடுத்து அந்தாளைப் படமெடுத்து, அதை நான் என்ர ஃபேஸ்புக்கில் போட்டன். உடனே, என்ர நண்பர் ஒருத்தர், 'ஓ உங்களுக்கு இப்பப் புத்தரைத்தானே பிடிக்கும்' எண்டு எழுதினார். எனக்குச் சத்தியமா விளங்கேல்ல, எனக்குப் புத்தரைப் பிடிச்சா அவருக்கு என்ன பிரச்னை எண்டு. புத்தரைப் பிடிச்சிருக்கெண்டு சொல்லுறவன் எல்லாம் தமிழ் விரோதியா? எங்களிடம்தான் புத்தர் என்ன மாதிரியான அரசியலாகிப்போனார்? எனக்கு அப்பத்தான் விளங்கிச்சு, முகமாலைச் சோதனைச் சாவடியில் என்னைக் காப்பாத்தின புத்தர், முகப் புத்தகத்தில் என்னைக் கைவிட்டிட்டார் எண்டு. டக்கெண்டு இன்னொண்டும் எனக்குத் தோணிச்சு... எங்களிட்ட இருக்கிறது ஒரு ஒடுக்கப்படும் இனத்தின்ர வலி மாத்திரமல்ல... இனவாதமும்தான். அது சிங்கள இனவாதத்துக்குக் சற்றேறக்குறையச் சமமானது. கருணையற்றதும், கொடுரமானதும், மன்னிக்க முடியாததுமான இனவாதம் யார் பக்கம் இருந்தால் என்ன? கனவில் வந்த புத்தர் கேட்டார், 'இப்பத் தெரியுதா நான் ஏன் இலங்கைத் தீவின் குடிகளைக் கைகழுவிவிட்டேன் எண்டு?'

புத்தர் ஒரு பிரசாரப் பீரங்கி!

தீவு முழுமையையும் ஆளும் சிங்களவர்களின் கனவானது, துட்டகைமுனுவில் தொடங்குகிறது. இந்து மகா சமுத்திரமும் தமிழனும் தன்னை நீட்டி நிமிர்ந்து தூங்கவிடவில்லை எனும் துட்டகைமுனுவின் அங்கலாய்ப்புதான் தீவைச் சிங்களவர்கள் விழுங்கத் தொடங்கியதன் ஆரம்பம். தமிழர்களோடு சமாதானமாகப் போய்விடச் சொன்னமைக்காக அப்பனையே தூக்கி உள்ளே போட்டவன் முனு. அத்தனை தீவிர இனவாதியான துட்டகைமுனுவிடம்கூட வீரர்களை மதிக்கிற பண்புஇருந்த தாகச் சொல்கிறது இலங்கைத் தீவின் வரலாறு. தமிழ் மன்னன் எல்லாளனுடனான இறுதிப் போரின்போது அவனை வஞ்ச கமாக வீழ்த்திய முனு, அந்த மாபெரும் வீரனின் சமாதியைத் தன் குடிகள் எல்லோரும் வணங்கிச் செல்ல வேண்டும் எனப் பணித்தான். வழிவழியான சிங்களவர்களின் பழக்கங்களில் எல்லாளன் சமாதிக்கான மரியாதை செய்யும் வழக்கம் இப்போதும் தொடர்கிறது. துட்டகை முனுவின் வாரிசு எனப் போற்றப்படுகிற இன்றைய சிங்கள அரசோ, தமிழ் வீரர்களின் கல்லறைகளைத் தோண்டி எடுக்கிறது.

தீவு முழுமையும் வெற்றியின் நினைவுச் சிற்பங்களாகவும், நினைவுத் தூபிகளாகவும் பிரமாண்டமாக நிறுவப்படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் மாவீரர் துயிலும் இல்லங்கள் எனப் போற்றப்பட்ட இடங்கள் இப்போது காணாமல்போகின்றன. மாறாக, அரச படைகளின் இறந்துபோன வீரர்களின் நினைவிடங்கள் தமிழர் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. போராளிகளின் கல்லறைகளைக் கலைத்துப் போடுவதற்கு அரசு சொல்கிற காரணம், 'அது ஒரு கெட்ட காலம். அதை நினைவுகொள்ள வைத்திருக்கும் சகலத்தையும் அகற்ற வேண்டும்' என்பதே. ஆனால், அவை வெறும் கல்லறைகள் இல்லை. உள்ளே இருப்பது தமிழ்ச் சனங்களின் பிள்ளைகள். இப்போது அந்தச் சனங்களுக்குப் பிள்ளைகளும் இல்லை, பிள்ளை களின் கல்லறையும் இல்லை என்றாகியது. புத்தர், பௌத்தர் களின் கடவுளாக இருப்பினும், தமிழர் பகுதிகளில் அவர் ஒரு பிரசாரகரைப்போலவே பயன்படுத்தப்படுகிறார். படையினர் வழிபடுவதற்கு என சொல்லப்பட்டாலும் அரச மரங்களின் கீழெல்லாம் அவரே வீடு கட்டிக்கொள்வதால், வீட்டுச் சொந்தக்காரர்களான பிள்ளையார், வைரவர் போன்றவர்கள் வீடு கிடைக்காமல் திண்டாடுகின் றனர். பௌத்த விகாரைகளும், ஆங்காங்கே நிறுவப்படும் புத்தரின் சிலைகளும் தமிழர்களுக்குச் சொல்ல விரும்பும் செய்தி, 'நீங்கள் வெற்றிகொள்ளப்பட்டவர்கள்' என்பதே.

எல்லா நேரமும் ஏ9

தீவின் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலைக்கு ஈழப் போரில் பெரிய பாத்திரம் உண்டு. வெற்றி, தோல்விகள் பல சமயங்களில் இந்தச் சாலையை வைத்தே முடிவாகின. தசாப்தங்களாக நீண்ட ஈழப் போரில் இந்த நெடுஞ்சாலையின் வழியான பயணம் என்பது சனங்களுக்கு இயல்பானதாக இருக்கவில்லை. ஒருவர் கொழும்பில் இருந்து வன்னியை ஊடறுத்து தரை வழியாக யாழ்ப்பாணம் போக வேண்டும் எனில், படையினரின் சோதனைச் சாவடி, பிறகு, புலிகளின் சோதனைச் சாவடி, பிறகு திரும்பவும் புலிகளின் சோதனைச் சாவடி, மறுபடியும் படையினரின் சோதனைச் சாவடி என நான்கு சோதனைகளைக் கடந்தே ஆக வேண்டும். இது தவிர, எங்கு வேண்டுமானாலும் படையினரால் மறிக்கப்பட்டு சோதனையிடப்படலாம். போர்க்காலத்தில் காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரையும்தான் இந்தச் சாலை திறந்திருக்கும். அதற்குதான் இவ்வளவு பாடு. சில தீவிரமான போர்க் காலங்களில் ஏ9 காலவரையறையற்று இழுத்து மூடப்பட்டதும் உண்டு. ஆனால், இப்போது 24 மணி நேரமும் போக்குவரத்துக்காக வீதி திறக்கப்பட்டு இருக்கிறது. ஓமந்தையில் மட்டும் ஒரு சோதனைச் சாவடியைப் படையினர் இன்னமும் வைத்திருக்கின்றனர்.

கொழும்பில் தமிழர்கள் வாழும் வெள்ளவத்தைப் பகுதியில் இரவு 8 மணியானால் யாழ்ப்பாணம் போகும் பேருந்துகளினால் பாதை நிறைகிறது. மக்கள் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கின்றனர். போர் இரவு களில் தூங்கிக்கிடந்த வீதி இப் போது எந்நேரமும் விழித்துக்கிடக்கிறது. சோதனைச் சாவடி களும், சோதனைகளும் குறைந்து இருக்கின்றன. நான் நாடு திரும்பி இருக்கிற இந்த ஒரு வாரத்தில், என்னிடம் யாரும் அடையாள அட்டைகளைக் கேட்கவில்லை. ஆனாலும், நான் பத்திரமாக அட்டையை எடுத்துச் சட்டைப் பையில் வைத்துக்கொள்கிறேன்.

ஏனெனில், எந்தக் கணமும் நான் சந்தேகிக்கப்படலாம். தீவின் யதார்த்த நிலைமை இதுதான். யாரோ எங்களைக் கண்காணிக்கிறார்கள் என்ற பதற்றம் இன்னமும் மிச்சமிருக் கிறது. அது தொடரும் வரையில், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே நிகழ்ந்து கொண்டு இருக்கும் பகடை ஆட்டம் முடியப்போவது இல்லை!

vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நகைச்சுவை இழையோடுவதும், வலிகளையும் உள்ளடக்கியதுமான ஒரு நல்ல கட்டுரை. இணைப்பிற்கு நன்றிகள் நிழலி..!

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் அஹிம்சையானவரா? ஆசையில்லாதவரா? :wub:

இருக்கும் இடத்தை சுற்றிலும் காணிகளைக் கபளீகரம் செய்கிறார், கொலை, கொள்ளையே கொள்கையை கொண்ட புத்தாக்களை நிறையவே உருவாக்கி விட்டார்!

ஏதோவோர் அரசின் கீழ் இருந்து புத்தி பெற்றாராம், அதனால் நாட்டில,வீட்டில, ரோட்டில இருக்கிற அரசுகளை அரசு ஆக்கிரமித்து அவரையும் அதில் சிறையிட்டு அரச காவலுமிட்டு ஆணவமாய் சிரிக்கிறது! :wub:

ஆயினும் அஹிம்சையை போதித்த அந்த புத்தரை எனக்கும் மிகமிகப் பிடிக்கும்! :lol:

ஈழத் தமிழரை பொறுத்தவரை - இன்று புத்தர் ஒரு ஆக்கிரமிப்புச் சின்னமாகவே காட்சியளிக்கிறார்.

அவரது போதனைகள் நல்லது என்று கூறி ஆக்கிரமிப்பாளரை அப்படியே விட்டுவிட ஈழத் தமிழர் தயாரில்லை.

புத்தருக்கு இந்த இழிபதவியை தேடிக்கொடுத்தவர்கள், சிங்கள பௌத்த இனப் படுகொலையாளர்கள்.

அதற்கு துணை போனவர்கள் இந்திய இனப்படுகொலையாளர்கள்.

புத்தர் அவர் வால்கள்=பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள்,புத்த வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், .....,

இது எப்படி இருக்கு :rolleyes::lol::lol::D

அவரது போதனைகள் நல்லது என்று கூறி ஆக்கிரமிப்பாளரை அப்படியே விட்டுவிட ஈழத் தமிழர் தயாரில்லை.

ஈழத்தமிழர் தயார் என்றாலும் ,புலத்தில் இருக்கும் நாம் தயாரில்லை கணனியில் போராடி புத்தர் சிலையை அகற்றியே தீர்வோம் இது புத்தர் மேல் ஆணை (சத்தியம்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.