Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிறவி நடிகர் சிவாஜி ! - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி! எஸ்.ரஜத்

Featured Replies

பிறவி நடிகர் சிவாஜி ! - நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேட்டி! எஸ்.ரஜத்

அக்.,1 நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் !

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பரம ரசிகரும், 37 படங்களில் அவரோடு இணைந்து நடித்திருப்பவரும், சிவாஜி குடும்பத்தினரால் அவரது மூத்த மகன் என்று கருதப்படுபவரும், ஐம்பது ஆண்டுகளாக தமிழ் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து சாதனை செய்து வருபவருமான ஒய்.ஜி.மகேந்திரன், சிவாஜி யின் அரிய பண்புகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை யும் நினைவு கூர்கிறார்:

"நமஸ்காரம் சார்... என் பெயர் சிவாஜி கணேசன். 1952ம் வருடத்திலிருந்து நடிச்சிட்டிருக்கேன். எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் போன்ற பெரிய ஆர்ட்டிஸ்ட் களுடன் கூட நடித்திருக்கேன். இன்னிக்கு, ஒய்.ஜி.மகேந்திரன் என்ற பிசி நடிகருக்காக, மேக்-அப் எல்லாம் போட்டுண்டு, இரண்டு மணி நேரமா வெயிட் பண்றேன். ரொம்ப சந்தோஷம்...' என்றார் சிவாஜி.

டைரக்டர் யோகானந்த் இயக்கத்தில், பல்லாவரத்தில் கிராண்ட் ட்ரங்க் ரோடு அருகே, "சுமங்கலி' படத்தின் ஷூட்டிங். சிவாஜி இருக்கும் படப்பிடிப் பிற்கு எப்போது சென் றாலும், அவர் கால் தொட்டு வணங்கிவிட்டுத் தான் உள்ளே செல்வேன்; அன்றும் அப்படித்தான் செய்தேன். அவர் மேற்கண்ட வாசகங்களைச் சொன்னதும், அரண்டு போனேன்.

"அப்படிச் சொல்லாதீங்க சார்... கே.பாலாஜி சாரின், "சட்டம்' படத்திற்கு காலை ஏழு மணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் ஷூட்டிங். ஒரு மணி நேரத்திலேயே விட்டுடறேன்னு சொன்னார். அங்கே முடிக்க பத்து மணி ஆயிடுத்து... சிவாஜி கூட பத்து மணிக்கு ஷூட்டிங்ன்னு சொன்னேன். அவர்கிட்டே நான் சொல்லிக்கறேன்னு பாலாஜி சொன்னாரு. ஒர்க் முடிந்ததும் ஓடி வர்றேன் சார்...' என்றேன்.

"சரி விடு... அவன் அப்படித் தான்!' என்றார் சிவாஜி. "சீக்கிரம் போய் டிரஸ் மாத்திக்கிட்டு வா...' என்றார். தயாரிப்பாளரும், நடிகருமான கே.பாலாஜி, சிவாஜிக்கு ரொம்ப நெருக்கம்.

சிவாஜிக்கு குழந்தை மனசு. வந்த வேகத்திலேயே, கோபம் போய் விட்டது. சுமங்கலி படத்தில் அவர் லாரி டிரைவர்; நான் அவருக்கு உதவியாளர். இருவரும் ஜாலியாக பாடிக் கொண்டு நடிக்க வேண்டிய பாடல் காட்சி. லேட்டாக ஆரம்பித்தாலும், அன்று மாலைக்குள்ளாக பாடல் முழுவதும் எடுத்தாகி விட்டது.

என்னைப் பொறுத்த வரை சிவாஜி சாதாரண மாக இருந்தால், "வாடா, பரதேசி, பைத்தியக் காரா...' என்று அன்பாக கூப்பிடுவார்; "சார்' என்று அழைத்தால், கோபம் அல்லது ஏதோ பிரச்னை என்று அர்த்தம்.

தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து, இன்னும் சிறப்பாக நடிக்க, "டிப்ஸ்' கொடுப்பதில், சிவாஜிக்கு நிகர் சிவாஜி தான். தாங்கள் நடித்த படங்களிலேயே தங்களுக்கு மிகவும் பிடித்த, புகழ் பெற்றுக் கொடுத்த நல்ல படம் எது என்று நடிகர்களிடம் கேட்டால், அவர்கள் சொல்வது, சிவாஜியுடன் நடித்த படங்களாகத்தான் இருக்கும். "முரடன் முத்து' படத்தில், சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு விட்டது. நடக்கவே கூட கஷ்டப்பட்டார். அன்று இரவு, "நவராத்திரி' படப்பிடிப்பு. கால் வலி அதிகம் இருந்தாலும், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் என்பதால், கட்டாயம் படப்பிடிப்பிற்கு சென்றாக வேண்டும் என்ற நிலை. சிவாஜிக்கு அன்று குஷ்டரோகி வேடம். கால் மரத்துப் போகும் போது சிலர், "விந்தி, விந்தி' நடப்பர். அதை கவனித்திருந்த சிவாஜி, அதை மனதில் கொண்டு, "விந்தி, விந்தி' நடந்து, ஏ.பி.நாகராஜனிடமிருந்து பாராட்டு பெற்றார். கடந்த 1975ல், எனக்கும், சுதாவிற்கும் திருமணம் நடந்தது. முகூர்த்ததிற்கு முதல் ஆளாக வந்தவர்கள், சிவாஜியும், அவர் மனைவி கமலாவும் தான். ஆண்டாள் அலங்காரத்தில் சுதாவை, எங்கள் உறவினர் நடிகை வைஜெயந்தி மாலா அழைத்து வந்தார். சுதா வருவதைப் பார்த்து லேசாக கை தட்டிய சிவாஜி, "பியூட்டிபுல்... லவ்லி' என்றார். சில ஆங்கில வார்த்தைகளை சிவாஜி உச்சரிக்கும் போது, அதற்கு தனி சிறப்பு கிடைக்கும். "லவ்லி' என்று அழுத்தமாக அவர் பேசியது அலாதி வேல்யூ. அடுத்து தான் கிளைமாக்ஸ்... என்னை கிட்டே அழைத்து, "டேய்... இது உனக்கு டூ மச் இல்லே!' என கிண்டலடித்தார். அதே போல, 1998ல், என் மகள் மதுவந்திக்கும், நடிகை சாவித்ரியின் பேரன் அருணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. காஞ்சி ஓட்டலில் நடந்த அந்த விழாவிற்காக, தஞ்சாவூரிலிருந்து காரில் வந்தார் சிவாஜி. நேராக காஞ்சி ஓட்டலில் வந்து இறங்கினார். "நான் இங்கே வரவில்லை என்றால், இரண்டு பேர் என்னைத் திட்டுவாங்க. இவங்க அப்பன் (ஒய்.ஜி.பி.,) ஆவியாக வந்து திட்டுவான்; இந்த பரதேசி, நேரே வந்து திட்டுவான்...' என்றார் சிவாஜி. ஒரு பெரிய ரசிகன் தான், தலை சிறந்த கலைஞனாக வர முடியும் என்பது, சிவாஜி யிடமிருந்து நான் கற்றுக் கொண்ட முதல் பாடம். ஒருமுறை எங்கள் நாடகத்திற்கு வந்தபோது, பைஜாமா, ஜிப்பா அணிந்து ஸ்மார்ட்டாக இருந்த இந்தி இளைஞரை, தன்னுடன் அழைத்து வந்தார். அவர் தன்னுடைய விசிறி என்றும், இந்தி திரையுலகில் பெரிய ஆளாக வருவார் என்றும் சொன்னார். அவர் தான் பின், பெரிய ஹீரோவாகி, இந்தியாவின் சிறந்த நடிகர் என்ற, "பாரத்' விருது பெற்ற நடிகர் சஞ்சீவ்குமார்.

படிக்காத மேதை படத்தைப் பற்றி விமர்சனம் செய்த போது, "குமுதம்' இதழில், "இந்தப் படத்தில் சிவாஜியை நாங்கள் பார்க்கவில்லை; ரங்கன் என்ற வேலைக்காரரை மட்டும் தான் பார்த்தோம்!' என்று சிறப்பாக எழுதியிருந்தனர். "உன்னை நீ மறந்துவிடு; கேரக்டரோடு ஐக்கியப்படுத்திக்கோ...' என்பது சிவாஜியின் தாரக மந்திரம். "உத்தம புத்திரன்' என்ற மாபெரும் வெற்றிப் படத்தில், பார்த்திபன், விக்கிரமன் என்று இரட்டை வேடங்களில் சிவாஜி தூள் கிளப்பியிருப்பார். நல்லவன் பார்த்திபனும், கெட்டவனான விக்கிரமனும் (இருவரும் இளவரசர்கள்) பத்மினியை சந்திப்பர். "பத்மினியுடன் பேசும் போது, பார்த்திபன், பார்த்திபன் தோற்றத்தில் விக்கிரமன் இரண்டிற்கும் எப்படி வித்தியாசம் காட்டினீர்கள்...' என அவரை கேட்டேன்."பார்த்திபன், பத்மினியுடன் பேசும் போது, அவன் கண்ணில் காதல் உணர்வு தெரியும்; பார்த்திபனாக வரும் விக்கிரமன் பேசும் போது, அவன் கண்ணில் காமம் தான் தெரியும்!' என்றார்; அது தான் சிவாஜி. "இரண்டு, மூன்று வேடங்கள் செய்யும் போது, கண்ணில், நடையில், குரலில், பாடி லாங்குவேஜில், பாவனைகளில் வித்தியாசங் களை காண்பிக்க வேண்டும். அப்போது தான், நன்றாக இருக்கும்...' என்று, எனக்கு விளக்கினார் சிவாஜி.

அவர் சொன்ன நுணுக்கங்களைப் பின்பற்றித் தான், "அந்த ஏழு நாட்கள்' நாடகத்தில், ஏழு பாத்திரங்களிலும், "வெங்கடாத்ரி' நாடகத்தில் மூன்று பாத்திரங்களிலும் வெற்றிகரமாக நடித்தேன். அவர் சொன்னதில் பத்து சதவீதம் செய்தாலே, ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறலாம். அவர் ஒரு பிறவி நடிகர்.

"பரீட்சைக்கு நேரமாச்சு' என்ற எங்கள் குழுவின் வெற்றி நாடகத்தை படமாக்க பேசிக் கொண்டிருந்த சமயம். வேறொரு படத்திற்கு ஷூட்டிங்கிற்காக, நாங்கள் இருவரும் பெங்களூருக்கு சென்றிருந்தோம். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பே லொகேஷனுக்கு வரச் சொன்னார். படப்பிடிப்பு நேரத்தில், அந்தப் படத்தைத் தவிர, வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது என்பது அவரின் கட்டுப்பாடு.

"பரீட்சைக்கு நேரமாச்சு' நாடக கதையை முழுமையாக அவருக்கு சொன்னேன்; உன்னிப் பாக கேட்டார். இந்த கதையை படமாக எடுக்கலாமா, இல்லையா என்று எதுவும் சொல்லவில்லை. படப்பிடிப்பு முடியும் போது, அவருடைய உதவியாளர், "நாளைக்கும் காலை 7.30 மணிக்கு உங்களை வரச் சொன்னார்...' என்று தகவல் கொடுத்தார்; நானும் சென்றேன்.

"நேத்து நீ சொன்ன கதையில், நரசிம்மாச்சாரி என்ற கேரக்டர் பற்றி நான் புரிந்து கொண்டதைச் சொல்றேன்... நீ சரியா இருக்கான்னு பாரு...' என்று விவரமாக சொல்ல ஆரம்பித்தார். முழுமையாக சொல்லி முடித்ததும், "இது தாண்டா என் ரோல்!' என முடித்தார். எனக்கு இன்ப அதிர்ச்சி. "நீங்க அந்த கேரக்டரை எங்கேயோ கொண்டு போயிட்டீங்க. நாங்க கூட இவ்வளவு நினைக்கலை...' என்றேன்.

அவர் அந்த கேரக்டரை செய்வது நிச்சயமாகி விட்டது. எனக்கு மகிழ்ச்சி. "ஏண்டா இன்னும் நிக்கறே?' என்றார். "இல்லை சார்...' இழுத்தேன். "வரது குட்டி கேரக்டரை நீ தான் பண்றே போ...' என்று உத்தரவாதம் அளித்தார். அந்த நாடகத்தின், படத்தின் மூலக்கதை என்னுடையது. திரைக்கதை, "வியட்நாம் வீடு' சுந்தரம்.

அந்தப் படத்தில் எனக்கு இரண்டு கேரக்டர்கள். ஒன்று மாணவன்; மற்றொன்று ரவுடி. படப்பிடிப்பில், ரவுடி எப்படி நடக்க வேண்டும் என்று சிவாஜி செய்து காட்டினார். "படிச்சவனுக்கும், படிக்காதவனுக்கும், நடையில் நிறைய வித்தியாசம் இருக்கு தெரியுமா...' என்று சொல்லிவிட்டு, பஞ்சக்கச்சம் வேஷ்டி கட்டியிருந்த நரசிம்மாச்சாரி, பேட்டை ரவுடியாக நடித்துக் காண்பித்தார். "பரீட்சைக்கு நேரமாச்சு' படம் ரிலீசான போது, அவருடைய சாந்தி தியேட்டரின் முதல் நாள் ÷ஷாவிற்கு இருவரும் சென்றிருந்தோம். அவர் சொல்லிக் கொடுத்த மாதிரி, ரவுடியின் நடையை, பாடி லாங்குவேஜ் செய்திருந்தேன். தியேட்டரில், கதவுக்கு அருகே போடப்பட்டி ருந்த நாற்காலியில் அமர்ந்த அவர், ரவுடி அறிமுக காட்சியில் என்ட்ரி ஆனதும், தியேட்டரில் நிறைய கைதட்டல். என்னைப் பார்த்து, "சொன்னேன் பார்த்தியா?' என்று பெருமிதமாக சொன்னார். அந்தப்படம் 97 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இயக்கம், தயாரிப்பு முக்தா ஸ்ரீநிவாசன்.

நடிப்பதை சிவாஜி சற்று குறைத்துக் கொண்ட போது, மாதம் ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்று அவரோடு இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருப்பேன். பொதுவாக இரவு 7.30 மணிக்கு அவர் மாடிக்கு போய்விட்டால் யாரும் டிஸ்டர்ப் செய்ய மாட்டார்கள். "வேற யார் வந்தாலும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்; அந்தப் பைத்தியக்காரன் ஒய்.ஜி.மகேந்திரன் வந்தால், மேலே அனுப்பு. என்னைப் பார்க்காமல் அவன் போகக் கூடாது...' என்று சொல்வார். எனக்கு கிடைத்த பொன்னான சலுகை அது.

கடந்த 2001 ஜூலை 21ம் தேதி சிவாஜி மறைந்தார். 2002லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளில், என் இசைக் குழுவினரோடு, சிவாஜியின் பிரபல படப் பாடல்கள் நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். அன்று மாலை நிகழ்ச்சி முழுவதற்கும் நான் ட்ரம்ஸ் வாசிப்பேன். சென்னை காமராஜ் அரங்கமே நிரம்பி வழியும். அவர் கூட நடித்த நடிகர், நடிகை களுக்கு, "சிவாஜி அவார்டு ஆப் எக்சலன்ஸ்' என்ற விருதை வழங்கி கவுரவிக்கிறோம். பிரபு, ராம்குமார் நிகழ்ச்சியில் பங்கேற்று, விருதை வழங்குவர்.

தஞ்சாவூரிலிருந்து சிவாஜியின் உறவினர்கள், நண்பர்கள் என்று நூறு பேர் விழாவிற்காக, பிரத்யேகமாக வருவர். என் ஆசானுக்கு, கலையுலக தந்தைக்கு, நான் மனதார செய்யும் அஞ்சலி இது."உங்க அம்மா என்னை ஏமாத்திட்டாங்க... நீ எனக்குத் தான் பிறந்திருக்கணும்...' என்று உணர்ச்சி வசப்பட்டு, கமலா அம்மா சொல்லி யிருக்கிறார். சிவாஜியின் மகள்கள் சாந்தி, தேன்மொழி, மகன்கள் ராம்குமார், பிரபு, என்னை மூத்த சகோதரனாகத் தான் இன்றும் கருதுகின்றனர். அது நான் செய்த பாக்கியம்.

நன்றி

தினமலர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிக்க நல்லாயிருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.