Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய கீதமும் சிங்களமும்: ஒரு சர்ச்சை

Featured Replies

தேசிய கீதம் இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தியை வெளியிட, அது தவறு...அவ்வாறான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என இரண்டு அமைச்சர்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இந்தச் சர்ச்சைக்கு முடிவைக்கட்டி அரசின் இனவாத முகத்தை மறைப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.

தேசிய கீதம் தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் எதனையாவது நிறைவேற்றியதா இல்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டிருக்கின்றது என்பது உண்மை. அத்துடன் தேசிய கீதத்தை சிங்கள மொழி மூலமாக மட்டுமே இசைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி மகிந்தர ராஜபக்ஷவே அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் தமிழ் மொழி மூலமாக தேசிய கீதம் இசைக்கப்படுவதற்குத் தடை விதிக்க அவர் முற்பட்டுள்ளார் என்பதும் புலனாகின்றது.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்ழக ஒன்றியத்தில் உரையாற்ற அழைக்கப்பட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புலம் பெயர்ந்த தமிழர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அந்த உரையை நிகழ்த்த முடியாமல் திரும்பிய பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது தொடர்பான தமது யோசனைகளைச் சமர்ப்பித்து உரையாற்றினார். லண்டனில் இடம்பெற்ற நிகழ்வுகள் உள்நாட்டில் ஒரு வித கடும்போக்கில் செல்வதற்கு மகிந்த ராஜபக்ஷவை நிர்ப்பந்தித்திருக்கலாம் என இதன் மூலம் கருதப்படலாம்.

அத்துடன் ஜனாதிபதியின் இந்தப் பிரேரணையை ஆமோதித்து உரையாற்றியவராக விமல் வீரவன்சவே இருந்துள்ளார். இதுவும் இனவாத நோக்குடன் அரசாங்கம் செயற்படுகின்றதா என்ற சந்தேகங்களை அதிகரிப்பதாகவே அமைந்திருந்தது.

இந்தப் பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்த காரணங்கள் சுவாரஸ்யமானவை. அவர் எந்தளவுக்கு உலக அறிவு அற்றவராக வெறுமனே இனவாத நோக்குடன் செயற்படுகின்றார் என்பதையும் இது புலப்படுத்தியது. எந்த ஒரு நாட்டிலும் தேசிய கீதம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் இசைக்கப்படுவதில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஒரு நாட்டுக்கு இரண்டு தேசிய கீதங்கள் இருக்க முடியாது எனவும் தனது உரையின் போது வலியுறுத்தினார்.

அனைவரும் ஒரே நாடு என்ற கருத்துடன் செயற்பட வேண்டும் எனவும், அழைப்பு விடுத்த ஜனாதிபதி, தேசிய கீதம் தொடர்பிலான இந்தச் சர்ச்சைக்கு விரைந்த தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அமைச்சரவையைக் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனை வழிமொழிந்து உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, தேசிய கீதம் ஒரு மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன், இந்தியாவில் 200 வரையிலான மொழிகள் இருக்கின்ற போதிலும், பெரும்பான்மை இனத்தவர்கள் பேசும் இந்தி மொழியிலேயே தேசிய கீதம் இசைக்கப்படுவதாகத் தெரிவித்து தன்னுடைய அறியாமையை உலகறியச் செய்தார்.

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்பட்ட இந்த உதாரணங்கள் தவறானவை என்பதை ஜனாதிபதியோ அல்லது அமைச்சர் வீரவன்சவோ அறிந்திருக்கவில்லை என்பதுதான் பரிதாபகரமானது. உண்மையில் கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தேசிய கீதம் அந்தந்த நாடுகளில் உள்ள சுதேசிய மொழிகளில் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. வௌ;வேறான மொழிகளைப் பேசும் இனக்குழுக்களுக்கு அவர்களுடைய மொழியிலேயே தேசிய கீதத்தைப் பாடுவதற்கான உரிமையை வழங்கியிருப்பதன் மூலமாக அந்த நாடுகளில் தேசிய ஒருமைப்பாடு பேணப்படுகின்றது. சிறுபான்மையினக் குழுக்களும் அந்த நாடு தங்களுடையது என்ற உரிமையுடன் செயற்படுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தைப் பொறுத்தவரையில் அந்நாட்டின் தேசிய கீதம் அந்நாட்டுப் பழங்குடி இன மக்களின் மொழியான மவுரியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் பாடப்படுகின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

இவற்றைவிட முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இசை அமைக்கப்பட்டுப் பாடப்பட்டுள்ளது. ஈழத் தமிழரான பிரபல பாடகரும் பேராசிரியருமான நித்தி கனகரட்ணம்தான் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கோரிக்கையின் பெயரில் அந்நாட்டுத் தேசிய கீதத்தை தமிழாக்கம் செய்யும் பொறுப்பை ஏற்றிருந்தார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தேசிய கீதம் வங்காள மொழியிலேயே உள்ளது. ரவீநதிரநாத தாகூர் தன்னுடைய தாய் மொழியில் எழுதிய இந்தியாவின் தேசிய கீதத்தை அந்நாட்டின் பெரும்பான்மையின மக்களாகவுள்ள இந்தி பேசும் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்தியாவில் 100 வரையிலான மொழிகள் வழக்கில் இருப்பதால் அவை அனைத்துக்கும் மொழிபெயர்ப்புக்களை வழங்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்றுதான். ஆனால் சிறுபான்மையினரின் மொழியில் உள்ள தேசிய கீதத்தை பெரும்பான்மையினராக உள்ள இந்தி பேசும் மக்கள் ஏற்றுக்கொண்டு தம்முடைய பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் இரண்டு மொழிகள் மட்டுமே உள்ள நிலையில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதங்கள் இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான். இப்போது தமிழில் இருக்கக்கூடாது எனக் கோருவதன் பின்னணியில் இனவாதம் இருப்பதையும் தெளிவாகப் பரிந்துகொள்ள முடிகின்றது.

இலங்கையில் தேசிய கீதம் சிங்கள மொழியில்தான் இசைக்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை எனக் கூறப்பட்டாலும் கூட, அது தொடர்பான தீர்மானம் ஒன்று ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டு இரண்டு சிங்கள அமைச்சர்களைத் தவிர ஏனைய அமைச்சர்கள் அனைவரும் அதற்கு ஆதரவளித்திருப்பதே சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்வதற்கு சிங்களம் தயாராக இல்லை என்பதைத்தான் பறைசாற்றியிருக்கின்றது.

1956 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவினால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்த்துக்கு ஒப்பானதாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இந்த யோசனைகளும் அமைந்திருக்கின்றது எனக் கூறுவதில் நிறைய அர்த்தங்கள் உள்ளன.

போருக்குப் பிந்திய காலப்பகுதியில் இனநல்லுறவைப் பேணக்கூடிய விதமான செயற்பாடுகளையே முன்னெடுக்கப்போவதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கம், சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளும் இவ்வாறான திணிப்புக்கள் நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்வதற்கு மட்டுமே உதவுவதாக அமையும். சிறுபான்மையினரைத் தாம் அங்கீகரிப்பதற்குத் தயாராகவில்லை என்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் மகிந்த ராஜபக்ஷவின் இவ்வாறான செயற்பாடுகள் சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துவதுடன் அரசுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு அவர்களைத் தூண்டுவதாகவும் அமைந்திருக்கும்.

இந்த நிலையில் இந்தத் தேசிய கீதத்தின் பின்னணி பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

இலங்கைக்கு பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற சுதந்திரதின வைபவத்தில் பாடுவதற்கு இலங்கையிடம் தேசிய கீதம் எதுவும் இருக்கவில்லை. தேசிய கீதம் ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து அரசாங்கம் வைத்த போட்டிக்கு வந்த கீதங்களில் ஒன்றுதான் ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாத என்ற கீதமாகும். நடுவர்கள் இனைத் தெரிவு செய்த பின்னர் அமைச்சரையும் அதனை ஏற்றது.

அக்காலத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய ஆனந்த சமரக்கோன் என்ற பழம் பெரும் சிங்களக் கவிஞரே இலங்கையின் இந்தத் தேசிய கீதத்தை இயற்றியவர். இதற்கான இசையையும் இவரே வழங்கினார். 1940 களில் இவர் இயற்றிய “நமோ..நமோ மாதா..” என்ற பாடல் 1946 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1952 ஆம் ஆண்டுதான் இது தேசிய கீதமாக ஏற்றக்கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும் இவரது பாடல் வரிகளை சிங்களர்கள் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாதா என்பதற்குப் பதிலாக சிறீலங்கா எனக் குறிப்பிடப்பட வேண்டும் என அவர்கள் வாதிட்டார்கள். இந்த வாதம் கடுமையானதாகத் தொடர்ந்த நிலையில், ஆனந்த சமரக்கோனின் சம்மதம் இன்றியே அவரது பாடல்வரிகள் மாற்றப்பட்டபோது அவர் அதிர்ச்சியடைந்தார். ஆத்திரமடைந்தார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்தப் பின்னணியிலேயே 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு அவர் தற்கொலை செய்துகொண்டார். தான் இயற்றி, இசை அமைத்த தேசிய கீதம் தன்னுடைய அனுமதியோ சம்மதமோ இல்லாமல் மாற்றப்பட்டமை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தக் கவலையிலேயே அளவுக்கதிகமான மாத்திரைகளை உட்கொண்டு அவர் தனது உயிரைப் போக்கிக்கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்தத் தேசிய கீதத்தை பின்னர் தமிழில் மொழிபெயர்த்தவர், அந்தக் காலப் பகுதியில் கொழும்பு சாஹிரா கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய முதுதமிழ்ப் புலவர் நல்லதம்பி என்பவராவர்.

இன ஐக்கியத்தின் சின்னமாக விளங்கிய சாஹிராவில் பணியாற்றிய அவர், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பெரும் மதிப்பையும் நல்லபிமானத்தையும் பெற்றவர். அவரது தமிழ் வாசகங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு இசையும் அமைக்கப்பட்டு பாடப்படுகின்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரச வைபவங்களில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது, தமிழர்கள் அதிகளவில் உள்ள வடக்கு கிழக்கில் தமிழ் மொழி மூலமாகவே தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது.

இதனை இப்போது சர்ச்சைக்குள்ளாக்க வேண்டும் என்ற தேவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு இப்போது ஏன் திடீரென ஏற்பட்டது என்பதுதான் தெரியவில்லை!

ஒரே நாடு ஒரே தேசிய கீதம் எனக் கூறிக்கொள்வதும் அதனைத் தமிழர்கள் மீது திணிக்க முற்படுவதும் தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுவதற்குப் பதிலாக பிளவையே அதிகப்படுத்துவதாக இருக்கும் என அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருப்பதை புறக்கணித்துவிட முடியாது.

இந்த இடத்தில் மற்றொரு முக்கிய கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது. ஜனாதிபதி அமைச்சரவையில் கொண்டுவந்த இந்தப் பிரேரணையை அமைச்சர்களான வாசுதேவ நாயணக்காரவும், ராஜித சேனாரட்ணவும் மட்டுமே எதிர்த்தாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. தமிழ்பேசும் அமைச்சர்கள் பலர் அமைச்சரவை அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்ட அமைச்சர்களாக இருந்தும் இதனை அவர்கள் எதிர்க்கத் துணியவில்லை.

மொழி உரிமையைப் பாதுகாப்பதை விட அமைச்சர் பதவிகளைப் பாதுகாத்துக்கொள்வதில்தான் அவர்களுடைய முழுக்கவனமும் இருக்கின்றது என்பதை இதன் மூலம் அவர்கள் மீண்டும் பகிரங்கப்படுத்திவிட்டார்கள். சமூகத்தின் நலன்களுக்காகத்தான் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டோம் எனக் கூறும் தேவானந்தா, தொண்டமான் மற்றும் ஹக்கீம் போன்றவர்களின் பதில்தான் என்ன?

http://www.pooraayam.com/news-analysis/1705-2010-12-13-20-50-56.html

கொழும்பிலிருந்து

பூராயத்துக்காக அபிமாறன்

நன்றி.

பல அறியவேண்டிய தகவல்களை தாங்கிய கட்டுரை.

இதை முக்கியமாக சிங்களவர்கள் வாசித்தால் ( மொழிபெயர்த்தால் ) நன்றாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.