Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!

Featured Replies

அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!

Egypt-1.jpg

ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது‘ என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படி நடக்கும் என ஏகாதிபத்தியங்கள் முன்பே கணித்திருந்ததோ இல்லையோ அதை நிச்சயம் விரும்பவில்லை. தங்களால் முடிந்தவரை புரட்சி வராமல் பார்த்துக் கொள்ள எவ்வளவோ முயற்சித்தன. கலகமாகவும், சின்ன எழுச்சியாகவும் மறைத்து மூடிவிட முயன்றன. ஆனால், ஒன்றிணைந்த மக்களின் தொடர் போராட்டமும், சலிப்படையாத எழுச்சியும் புரட்சிக்கான கருவை எகிப்தில் விதைத்துவிட்டன.

இனி அமெரிக்காவின் தலைமையில் ஏகாதிபத்திய நாடுகள் ஒன்றிணைந்து எகிப்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சரி அல்லது இப்போதைய அதிபர் ஹோஸ்னி முபாரக்கையே தொடர்ந்து ஆட்சி நடத்த முட்டுக் கொடுத்தாலும் சரி, அதிபராக இருப்பவரின் கழுத்தில் உழைக்கும் மக்களின் வெப்ப மூச்சு வீசிக் கொண்டே இருக்கும். அந்த வெப்பம், எப்போது வேண்டுமானாலும் தன் கழுத்தை நெறிக்கலாம் என்ற அச்சத்திலேயே அதிபர் ஆட்சி நடத்த வேண்டும்.

ஏனெனில் எகிப்தில் இன்றைய தினம் போராடுபவர்கள் மசூதிக்கு சென்று தொழுகை மட்டும் நடத்திவிட்டு செல்லக்கூடிய ‘இஸ்லாமியர்கள்’ அல்ல. இவ்வளவு வருடங்களும் அரபு உலகின் ஆளும் வர்க்கமும், அமெரிக்காவும் மதத்தை வைத்து ஏமாற்றி வந்த தந்திரங்கள் இப்போது பலிக்கவில்லை.

எகிப்தில் இன்று போராடுபவர்கள் தொழிலாளர்கள், கூலிகள், வேலையில்லா பட்டதாரிகள், கல்லூரி படிக்கும் மாணவ – மாணவிகள். மொத்தத்தில் அடித்தட்டு உழைக்கும் மக்கள்தான் எகிப்தில் 90% வாழ்கிறார்கள். இந்த வர்க்க உணர்வைத்தான் எகிப்து மக்களிடம் ஜனவரி 25ஆம் தேதி முதல் நடந்து வரும் மக்கள் எழுச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

எகிப்திய தொழிலாளர் வர்க்கம் இன்றைய தினம் அணிதிரண்டு தங்கள் எதிர்கால பயணத்துக்கான முதல் அடியை எடுத்து வைத்திருப்பது நிச்சயம் அசாரணமான ஒன்று. இன்று ஆட்சி மாற்றம், அரசாங்க மாற்றம் என்பாதாக இருக்கும் எகிப்தின் போராட்டம் விரைவிலேயே இல்லை தாமதமாகவோ அடிப்படையான சமூக மாற்றத்தை நோக்கி சென்றாலும் செல்லலாம் என்ற உண்மை அமெரிக்காவை பிடித்து ஆட்டுகிறது. இருபதாம் நூற்றாண்டோடு கம்யூனிசம் ஒழிந்துவிட்டது என்று இறுமாந்திருந்தவர்களின் இதயம் இப்போதைய எகிப்தின் எழுச்சியால் பதட்டமடைந்திருக்கிறது.

இந்த உண்மையை சற்று தாமதமாக புரிந்து கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. அதன் விளைவாக வெள்ளை மாளிகை முன்பைவிட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைபேசிகள் ஓயாமல் மத்திய கிழக்கு நாடுகளை தொடர்பு கொண்டபடியே இருக்கின்றன. அந்தந்த நாட்டு அதிபர், மன்னர்களுடன் விடாமல் உரையாடிக் கொண்டிருக்கின்றன. யேமன், துருக்கி, ஜோர்டான், அல்ஜீரியா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து மக்கள் எழுச்சி ஏற்படலாம் என்ற அச்சம், அமெரிக்காவின் சாம்ராஜ்ஜியத்தில் காய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதை தடுப்பதற்கான – தணிப்பதற்கான – நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது.

இதன் ஊடாக அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் எகிப்தை ஒட்டி தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்துவிட்டன. ஜனநாயகத்துக்கு எதிராக, மக்கள் உணர்வுக்கு முரணாக, சர்வாதிகாரத்துக்கு மறைமுக ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தி விட்டார்கள். எகிப்து நிகழ்வுகளை ஏகாதிபத்தியங்கள் அணுகுவதிலிருந்தே இதை புரிந்து கொள்ளலாம்.

Egypt-3.jpg

உண்மையில் எகிப்தின் மக்கள் எழுச்சியை, ‘மேட் இன் அமெரிக்கா’ (Made in America) என்று பறைசாற்றத்தான் அமெரிக்கா விரும்பியது. ஜனவரி மாத நடுப்பகுதியில் வட ஆப்பிரிக்க தேசமும், எகிப்துக்கு அருகாமையில் இருக்கும் நாடுமான துனிசியாவில் மக்கள் கிளர்ந்து எழுவதற்கு முன்பே -

எகிப்தில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கலாம் என்று அமெரிக்கா கணித்திருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே எகிப்தின் நிலை சரியாக இல்லை. ரோமர்களின் காலத்தில் பண்டைய எகிப்து, ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியமாக விளங்கியது. அப்படிப்பட்ட உணவுக் களஞ்சியமாக எகிப்து இன்று இல்லை. உலகமயம், தாராளமயம் என மறுகாலனியாதிக்க கொள்கைகள் எகிப்தை நாசம் செய்துவிட்டன. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையேற்றம், வேலையில்லா பிரச்னை, வருமானக் குறைவு, விலைபோகும் கல்வி என மக்களை வாட்டும் பிரச்னைகளே அரசாங்கத்தின் கருவூலத்தில் இன்று நிரம்பி வழிகின்றன.

அரபு தொழிலாளர் அமைப்பின் (ALO) சமீபத்திய தேசிய கருத்தரங்கில் வெளிவந்த புள்ளிவிவரங்கள் இதை தெளிவாக படம்பிடித்து காட்டுகின்றன. எகிப்து மக்களிடையே காணப்படும் சமூக நிலைமைகள் மிக மோசமாக உள்ளன என்றும், நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதத்திற்கும் மேலாக இருக்கிறது என்றும் அந்த விவரங்கள் முகத்தில் அறைகின்றன. அதாவது 8.5 கோடி மக்கள் வாழும் எகிப்தில் கிட்டத்தட்ட 43 சதவிகிதத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். அதேபோல் உலகளவில் மனித உரிமை மீறல்களும், சித்திரவதைகளும், காவல்நிலையத்தில் நடக்கும் படுகொலைகளும் அதிகமாக நடைபெறும் நாடுகளில் எகிப்தும் ஒன்று.

இதனையொட்டியே இணையதள சமூக வலைத்தளமான ‘ஃபேஸ் புக்’கில் ‘ஏப்ரல் 6 இயக்கம்’ தோன்றியது. எகிப்திலுள்ள El-Mahalla El-Kubra என்ற தொழில் நகரத்தில் உரிமை கேட்டு போராடிய தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2008ல் அகமத் மஹர் என்பவரால் இத்தளம் உருவாக்கப்பட்டது. படித்த, இணையதளம் பயன்படுத்தக் கூடிய எகிப்து இளைஞர்கள் மெல்ல மெல்ல இத்தளத்தில் சேர ஆரம்பித்தார்கள். டிவிட்டர் தளத்திலும் கால் பதித்தார்கள். ப்ளாக் என்னும் வலைத்தளங்களையும் தனித்தனியே உருவாக்கினார்கள். நாட்கள் செல்லச் செல்ல அரசாங்கத்துக்கு எதிரான தளமாக ‘ஏப்ரல் 6 இயக்கம்’ உருவாகியது. எந்தக் கட்சியையும் சார்ந்தவர்களாக இவர்கள் முன்னிறுத்திக் கொள்ளாதது இவர்களின் பலமாயிற்று. எல்லாக் கட்சிகளையும் பார்த்து மக்கள் சலித்திருந்தார்கள் என்பதுதான் இவர்களது கட்சி சார்பற்ற பலத்தின் அடிப்படை. அதே நேரம் இந்த இளைஞர்கள் முபாரக்கை மாற்ற வேண்டும் என்பதைத் தாண்டி வேறு காத்திரமான அரசியல், சமூக மாற்றத்தை கோரியவர்கள் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்வது நல்லது.

இதை மோப்பம் பிடித்த அமெரிக்கா, ஃபேஸ் புக்கிலும், வலைத்தளங்களிலும் (ப்ளாக்) துடிப்புடன் இயங்கும் சில இளைஞர்களை தங்கள் செலவில், தங்கள் நாட்டுக்கு அழைத்து இணையதள தொழில்நுட்பங்களை பயிற்றுவித்தது. ஹிலாரி கிளிண்டன் போன்றவர்கள் கூட இவர்களுடன் சில மணி நேரங்களை செலவிட்டார். எகிப்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் உருவாக வேண்டும் என்பது குறித்த கலந்துரையாடல் இச்சந்திப்பின் ஹைலைட்டாக அமைந்தது. அதாவது, கம்யூனிசம் கூறுவது போன்ற அடிப்படை சமுகத்தை மாற்றும் புரட்சி சார்பாக இளைஞர்கள் சென்றுவிடக் கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது. அரசு மாற்றமல்ல; ஆட்சி மாற்றமே தேவை என்பதான கருத்துக்கு அந்த இளைஞர்கள் குழு வந்ததும் – வர வைத்ததும் – எகிப்துக்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

Hillary-Clinton-with-bloggers.jpg

ஹிலரி கிளின்டனுடன் எகிப்திய பிளாகர்கள்

முபாரக்கை ஆதரித்த அமெரிக்கா அவரை மாற்றுவதையும் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதில் பெரிய முரண்பாடு ஏதுமில்லை. முடிந்த வரை முபாரக், அவர் போய்விட்டால் தனக்கு விசுவாசியான அடுத்த நபர் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம் மற்றும் நடைமுறை. இதனால் உலகமெங்கும் உள்ள மக்கள் போராட்டங்களை காயடித்து அதை வெறுமனே ஒரு அடையாள எதிர்ப்பாக மட்டும் மாற்றுவதற்கு அமெரிக்கா எப்போதும் முயல்கிறது. இப்படித்தான் எகிப்தின் விவகாரத்திலும் அது தனது மூக்கை நுழைத்தது.

துனிசியாவில் மக்கள் எழுச்சி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் நிகழ்ந்தது. இதனையடுத்து துனிசிய அதிபர், பென் அலி சவூதி அரேபியாவுக்கு ஓடிப் போனார். இந்த நிகழ்வு படித்த – குறிப்பாக இணையதள பயன்பாடுள்ள – எகிப்து மக்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.

காரணம், கடந்த டிசம்பர் மாதம் காலித் சைத் என்னும் எகிப்திய இளைஞன் போலீஸ் வன்முறைக்கு பலியாகி இருந்தான். போலீசாரின் அத்துமீறல் குறித்த வீடியோவை இணையத்தில் அவன் வெளியிட்டதால், காவலர்களால் அவன் கொல்லப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால், காலித் சைத் போதைப்பொருள் உட்கொண்டதால்தான் மரணமடைந்தான் என போலீஸ் கதைவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த எகிப்து இளைஞர்கள், ஜனவரி 25ம் தேதியை ஆர்ப்பாட்டத்துக்கான நாளாக ‘ஏப்ரல் 6 இயக்க’த்தின் தளமான ‘ஃபேஸ் புக்’கில் அறிவித்தார்கள். ஜனவரி 25ம் தேதியை போலீசுக்கு எதிரான நாளாக அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கு காரணமிருக்கிறது. அன்றுதான் ஆண்டுதோறும் எகிப்தில் ‘போலீஸ் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. தவிர, அன்று தேசிய விடுமுறையும் கூட.

எனவேதான் காவலர்களுக்கான நாளில், காவலர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை கடைப்பிடிக்க முடிவு செய்தார்கள். இதற்கு மக்களிடம் பெருமளவு ஆதரவு கிடைத்தது. எதிர்க் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் களமிறங்க முடிவு செய்தன. ஆனால், ‘துனிசிய மாதிரி’யாக இல்லாமல், ஆட்சி மாற்றமாக இது நடைபெற வேண்டும் என திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். அதற்கேற்ப ‘மாற்றீட்டு பாராளுமன்றம்’ என்கிற ‘மக்கள் பாராளுமன்றத்தை’ முன்னிலைப்படுத்தினார்கள். அதாவது எதிர்க் கட்சிகளை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் பங்கேற்கும் விதமாக அந்த அறிக்கை இருந்தது.

Egypt-6.jpg

உஷாரான அதிபர் ஹோஸ்னி முபாரக், ஜனவரி 25 அன்று காவலர்களை எகிப்து முழுக்க, அனைத்து நகரங்களிலும் ஆயுதங்களுடன் நிறுத்தினார். எந்த காவலருக்கும் அன்று விடுமுறை தரப்படவில்லை. விடுமுறையில் இருந்தவர்களும் கட்டாயமாக பணிக்கு அழைக்கப்பட்டார்கள்.

விபரீதத்தை உணர்ந்த அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்தப் போராட்டம் அரசுக்கு எதிராக செல்லாதபடியும், ஆட்சிக்கு எதிராக மட்டுமே இருக்கும்படியும் தனது இணையதள விசுவாசிகள் மூலம் பார்த்துக் கொண்டது.

ஒருவேளை மக்கள் எழுச்சி நூறு சதவிகிதம் இருந்தால், ஹோஸ்னி முபாரக்கை பதவியிலிருந்து இறக்கிவிட்டு வேறு நபரை ஆட்சியில் அமர்த்தலாம். அதன் மூலம் எகிப்து மக்களின் கொந்தளிப்பை மட்டுப்படுத்தி, மக்கள் எழுச்சியை, ‘மேட் இன் அமெரிக்கா’ (Made in America) ஆக மாற்றலாம் என கணக்குப் போட்டது.

ஆனால், அது தப்புக் கணக்காகிவிட்டது. தனித்தனியாக மக்கள் சிதறி இருக்கும்வரைதான் ஏகாதிபத்தியம் வெற்றி பெறும். அதுவே மக்கள் திரளாக அவர்கள் ஒன்றிணைந்துவிட்டால், எப்படிப்பட்ட சூப்பர் பவர் ஏகாதிபத்தியமும் தவிடு பொடியாகிவிடும்.

இந்த புரட்சிக்கான விதையை நடைமுறையிலிருந்து கற்றுக் கொண்ட எகிப்து மக்கள், மீண்டும் அதையே நடைமுறையாக்கினார்கள். நகரம் முழுக்க காவலர்கள் ஆயுதங்களுடன் நிரம்பியிருந்தது அவர்களது கொந்தளிப்பை அதிகரித்தது. தனித்தனியாக இருக்கும்வரைதானே பயம்? ஒன்றாக சேர்ந்து சாலையில் இறங்கினால்…

இறங்கினார்கள். மெல்ல மெல்ல முன்னேறினார்கள்.

1977ல் நடந்த ரொட்டி எழுச்சிக்குப் பின், எகிப்தில் பேரணி நடத்தவும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் சட்டப்படி தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்தை மக்கள் மீறினார்கள். விளைவு… 30 ஆண்டுகளாக எகிப்து கண்டிராத மக்கள் போராட்டத்தை – எழுச்சியை – அன்றைய தினம் கண்டது.

ஆம், எந்த காவலர்களை பார்த்து இத்தனை ஆண்டுகளாக பயந்து நடுங்கினார்களோ… அதே காவலர்கள் முன்பு தைரியமாக தடையை மீறினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையினர் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதற்கு முன்பு எந்த அரசியல் போராட்டத்திலும் கலந்து கொள்ளாதவர்கள். எந்தக் கட்சியின் உறுப்பினர்களாகவும் இல்லாதவர்கள். அதுமட்டுமல்ல, தங்கள் வாழ்நாளில் எந்தவொரு மக்கள் எழுச்சியையும் அவர்கள் கண்ணால் பார்த்ததும் இல்லை; காதால் கேட்டதுமில்லை. அஹ்மத் அஷ்ரப் என்னும் 26 வயது வங்கி ஊழியர், ‘நாங்கள்தான் இப்போது சாலையை கட்டுப்படுத்துகிறோம். காவலர்கள் அல்ல…’ என்று பெருமிதத்துடன் அன்றைய தினம் குறித்து ஊடகங்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

எந்த மத அமைப்பும் அம்மக்களை வழி நடத்தவில்லை. தொழிலாளர்களும், வேலையில்லா பட்டதாரிகளும், அடித்தட்டு உழைக்கும் மக்களும்தான் இந்த எழுச்சியை வழிநடத்தி இருக்கிறார்கள்.

சுதந்திரத்தின் சுவையை மட்டுமல்ல, கூட்டிணைவின் மகிழ்ச்சியையும் அன்றைய தினம் எகிப்து மக்கள் யாரும் கற்றுத் தராமலேயே உணர்ந்தார்கள். காவலர்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆங்காங்கே மக்கள் பலியானபோதும் ஆர்ப்பாட்டத்தை அவர்கள் நிறுத்தவும் இல்லை. சிதறி ஓடவும் இல்லை.

அலெக்சாந்திரியா நகரில் வயதான பெண்கள், வீட்டு பால்கனியில் நின்றபடி அழுகிய தக்காளிகளையும், கல்லையும் காவலர்கள் மீது வீசினார்கள். இப்படியாக ஜனவரி 25 ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த எகிப்து மக்களின் எழுச்சியாக உருவெடுத்தது.

Egypt-7.jpg

வரலாறு முழுக்கவே மக்கள் திரள் ஒன்றிணைந்து இதுநாள் வரை தங்களை பிணைத்திருந்த அச்சம் என்னும் சங்கிலியை அறுத்து எறியும்போது, பூமிப் பந்திலுள்ள எந்த ஆற்றலும் – சக்தியும் – அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பின் வாங்குகிறது என பதிவு செய்திருக்கிறது. அந்தப் பதிவு மீண்டும் எகிப்து வரலாற்றில் எழுதப்பட்டது.

அன்று மாலை அரசு தொலைக்காட்சி முன்பு தோன்றிய அதிபர் ஹோஸ்னி முபாரக், ஆட்சியிலிருந்து தான் விலகப் போவதில்லை என்றும், மக்களின் பிரச்னைகளை தீர்க்க துணை அதிபராக ஓமர் சுலைமானை நியமிப்பதாகவும் அறிவித்ததுடன், தனது அமைச்சரவையை கலைப்பதாகவும், விரைவில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் உரையாற்றினார். இது மக்களின் கோபத்தை அதிகரிக்கவே வழி வகுத்தது.

இரவு வீடு திரும்பியவர்கள் மீண்டும் சாலையில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்தார்கள். இது அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது.

ஃபேஸ் புக், டிவிட்டர், ப்ளாக்… என இணையத்திலுள்ள சகல வலைத்தளங்களிலும் இளைஞர்கள் போராட்டத்தை குறித்து விவாதித்தார்கள். 26 பக்க போராட்ட வழிமுறைகள் பிடிஎஃப் ஆக மின்னஞ்சலில் சுற்றுக்கு விட்டார்கள். படித்தவர்கள் அதை தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஃபார்வர்ட் செய்தார்கள்.

அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் தூதுவர் உடனடியாக விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். இதன் மூலம், எகிப்தை உண்மையில் ஆள்பவர்கள் யார் என்பது வெட்ட வெளிச்சமானது. மத்திய கிழக்கு நாடுகளின் தளப் பிரதேசமாக எகிப்தை ‘நிர்வாகம்’ செய்து வரும் அமெரிக்கா, இந்த மக்கள் எழுச்சியால் கவலையடைந்தது. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக இராணுவ தளவாடங்களை அதிகளவு அமெரிக்கா விற்பது எகிப்துக்குத்தான். அந்நாட்டில் இருக்கும் சூயஸ் கால்வாய், அமெரிக்காவின் வணிகத்துக்கு தேவை. அத்துடன் இஸ்ரேலினால் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களின் காசா பகுதி, சூயஸ் கால்வாயை ஒட்டியே இருக்கிறது. எனவே எக்காரணம் கொண்டும் எகிப்தை இழக்க அமெரிக்கா தயாராக இல்லை.

அதேபோல் பாலஸ்தீனியர்களை அடக்கவும், அரபு நாடுகளை மிரட்டவும் இஸ்ரேலுக்கு தனது அண்டை நாடான எகிப்தின் துணை தேவை. எனவே எகிப்துடன் ஈருடல் ஓருயிர் என்ற நட்பையே இஸ்ரேல் கடைபிடித்து வருகிறது. இப்போது எகிப்தின் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஓமர் சுலைமான், அப்பட்டமான சிஐஏ கைக்கூலி. எகிப்தின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி. மனித உரிமை மீறலுக்கும் அரசியல் படுகொலைகளுக்கும் காரணமானவர். இஸ்ரேலின் அனைத்து அராஜக – அடாவடித்தனங்களுக்கும் துணை போனவர்.

எனவே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த எகிப்து தங்கள் கையை விட்டு போகாமல் இருக்க, அமெரிக்காவும், இஸ்ரேலும் தங்கள் விசுவாசியும், நீண்ட ஆண்டுகள் நண்பருமான ஹோஸ்னி முபாரக்கை கை கழுவ இப்போது தயாராகிவிட்டன. இதன் மூலம் புரட்சி ஏற்படாமல், வெறும் ஆட்சி மாற்றத்தின் மூலம் மக்களின் கோபத்தை தணிக்கலாம் என முடிவு செய்துவிட்டன. அமெரிக்க – இங்கிலாந்து வெளியுறவுத் துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஊடகங்களுக்கு தரும் பேட்டியை நாள்தோறும் உன்னிப்பாக கவனித்து வருபவர்கள் இதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அதன் பலனாக இப்போது எகிப்தின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்ற சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் தலைவருமான எல்பரதேய் ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறார். இவர், துனிசிய புரட்சி நடந்த ஈரம் காய்வதற்குள் ‘கார்டியன்’ இதழுக்கு, ‘எகிப்தும் ஒரு துனிசிய வகையிலான வெடிப்பை எதிர்நோக்கியிருக்கிறது’ என்று எச்சரித்தவர்தான். கூடவே ‘துனிசிய முன்மாதிரி போல் அல்லாமல், ஒழுங்கான முறையில் மாற்றம் வரும் என்று, தான் நம்புவதாகவும், இருக்கும் முறையில் இருந்தே மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தேவையான வழிவகைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும்’ குறிப்பிட்டு, மக்கள் புரட்சியில் தனக்கு நம்பிக்கையில்லை என்பதையும், அமெரிக்காவுக்கு தான் விசுவாசமானவன்தான் என்பதையும் அறிவித்தவர்தான்.

இதுபோன்ற எடுபிடிக்காகவே காத்திருந்த அமெரிக்கா, எல்பரதேய்யை எகிப்துக்கு அனுப்பியது. நடக்கப் போவதை ஓரளவுக்கு ஊகித்துவிட்ட ஹோஸ்னி முபாரக், உடனே அவரை வீட்டுக் காவலில் வைத்தார்.

Egypt-2.jpg

இந்நிலையில்தான் வெள்ளிக்கிழமை (28.01.2011) விடிந்தது. அன்றைய தொழுகை முடிந்ததும் அதிபருக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி மக்கள், சாலையில் இறங்கி ஊர்வலம் போக ஆரம்பித்தார்கள். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டார்கள். நகரங்களில் இருந்த ஆளுங்கட்சி அலுவலகம் தீக்கரையானது. அரசியல் கைதிகள், சிறைச்சாலையை கைப்பற்றி வெளியே வந்தார்கள்.

அரசாங்கமும் சும்மா இருக்கவில்லை. குற்றவாளிகளை விடுதலை செய்து, மக்களின் உடமைகளை திருடச் சொன்னது. சீருடை அணிந்த காவலர்களில் சிலரும் இந்த வழிப்பறியில் – கொள்ளையில் இறங்கினார்கள். மக்கள் அவர்களை கைது செய்தார்கள். தங்களுக்குள்ளாகவே குழுவை அமைத்து தங்கள் உடமைகளை கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு பாதுகாத்துக் கொண்டார்கள்.

ஜனவரி 31ம் தேதி முடிய பொது மக்களுக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 150 பேர் பலியாகியுள்ளனர். 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இது அறிவிக்கப்பட்ட கணக்கு மட்டுமே. பலியானோர் எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கக் கூடும். என்றாலும், இந்த எண்ணிக்கை எந்தவிதத்திலும் எகிப்து மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவில்லை. பலியானோரின் சடலத்தையே, உணர்வெழுச்சிக்கான ஆயுதமாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். காயமடைந்தோரும், ரத்தம் வழிய வழிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். நாள்தோறும் அலைகடலென திரண்டு வரும் மக்களை கட்டுப்படுத்த வழியின்றி பாதுகாப்புப் படை திகைத்து நிற்கிறது.

நேர்மையான பல காவலர்கள் மக்களுடன் இணைந்து இப்போது போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்த வேண்டிய இராணுவ வீரர்கள், அமைதி காக்கிறார்கள். மக்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று பகிரங்கமாக இராணுவம் அறிவித்திருப்பது முபாரக்குக்கு மட்டுமல்ல அமெரிக்காவிற்கும் பிரச்சினைக்குரிய ஒன்று.

ஆனால், முன்னாள் விமானப்படை அதிகாரியான ஹோஸ்னி முபாரக்கால் இதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. தரைப்படை அமைதிகாத்தால் என்ன… விமானப்படையை அனுப்புகிறேன்… மக்கள் பயத்துடன் கலைந்து செல்வார்கள் என போர் விமானங்களை நகரங்களின் மீது பறக்க விட்டிருக்கிறார். முதலில் அதிர்ந்த மக்கள், பிறகு இந்த போர் விமானங்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘முதலில் நாங்கள் பயந்தோம். ஆனால், இப்போது இசையை ரசிப்பது போல் போர் விமானங்களின் ஒலியை ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்’ என்கிறார்கள்!

அரசின் சமூக – அரசியல் – ஆட்சி இயக்கமே இராணுவத்தின் பாதுகாப்பில்தான் மையம் கொண்டிருக்கிறது. இந்த அச்சு இன்று எகிப்தில் மாறியிருக்கிறது. இராணுவ தளவாடங்கள் வேண்டுமானால் அமெரிக்காவில் தயாரானதாக இருக்கலாம். ஆனால், இராணுவ வீரர்கள் எகிப்தின் அடித்தட்டு, நடுத்தர மக்கள்தானே? எகிப்தின் மக்கள் எழுச்சியால் ஈர்க்கப்பட்ட இராணுவ வீரர்கள் – இதுநாள் வரை அரசின் துருப்பாக இருந்தவர்கள் – வர்க்க அடிப்படையில் மக்களுடன் இரண்டற கலந்துவிட்டார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மக்களுடன் இராணுவம் தொடர்பு கொள்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு புரட்சி வலிமை பெறும் என்பது விதி. அந்த விதி, எகிப்தில் இப்போது மையம் கொண்டிருக்கிறது. கிடைத்த உணவை மக்களுடன் இணைந்து இராணுவ வீரர்களும், காவலர்களும் பகிர்ந்து உண்ணும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

இதோ வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்த எல்பரதேய், ஏதோ தான்தான் இந்த மக்கள் எழுச்சியை வழிநடத்துவது போல் ஊடகங்களுக்கு பேட்டியளித்தும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தும் தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சிக்கிறார். ஆனால், எகிப்து மக்கள் இவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. காரணம், பலருக்கு இவர் யார் என்றே தெரியவில்!

Egypt-4.jpg

எகிப்தின் இன்றைய மக்கள் எழுச்சியை யாரும், எந்தக் கட்சியும் முன்னின்று நடத்தவில்லை. எனவே மக்கள் மெல்ல சோர்வடைந்து பின்வாங்கி விடுவார்கள் என்று நம்பிய ஹோஸ்னி முபாரக், இப்போது மூக்குடைந்திருக்கிறார். நாள்தோறும் முந்தைய நாளின் தீவிரத்தை விட அதிக வலிமையுடன் அனைத்து நகர தெருக்களிலும் மக்கள் இறங்கி போராடுகிறார்கள். தலைநகர் கெய்ரோவிலுள்ள தாஹீர் சதுக்கத்தை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இத்தனைக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தொடர் போராட்டத்தினால் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் சமைக்க பொருட்களில்லை. உணவு விடுதிகள் திறக்கப்படவேயில்லை. ஆயினும் கிடைத்ததை பகிர்ந்துக் கொண்டு சோர்வடையாமல் உறுதியுடன் போராடி வருகிறார்கள்.

இராணுவம் தன்னை கைவிட்ட நிலையில், இப்போது ஹோஸ்னி முபாரக், தனது ஆதரவாளர்களை போராடும் மக்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் நிறுத்தியிருக்கிறார். உண்மையில் இந்த ஆதரவாளர் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் காவலர்கள்தான். முபாரக்கின் விசுவாசிகள்தான். சிவிலியன் உடையில் சாலையில் நடமாடும் இந்த அதிபரின் ஆதரவாளர் குழுவுக்கும், மக்கள் திரளுக்கும் இடையில் பிப்ரவரி மாத தொடக்கம் முதல் மோதல் நடந்து வருகிறது. இதில் பலர் காயமுற்றனர். சிலர் பலியாகினர். அருகிலுள்ள மசூதியை மருத்துவமனையாக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எகிப்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக புரட்சியை உயர்த்திப் பிடித்திருக்கும் மக்கள் திரளுக்கும் – எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் அதிபரின் ஆதரவாளர் குழுவுக்கும் இடையில் மோதலும் உயிர்ச்சேதமும் இனிவரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும். ஆனால், அதிபரின் இந்தச் செயலே மக்கள் புரட்சியை மேலும் செழுமைப்படுத்தும். அரசின் குண்டாந்தடிகள்தானே புரட்சியை வலிமையாக்குகின்றன?

1905ல், ரஷ்யாவில் புரட்சி நடந்ததும் அப்போது மன்னராக இருந்த ஜார் இரண்டாம் நிக்கோலஸ், அக்டோபர் அறிக்கையை வெளியிட்டு என்னவெல்லாம் தேனொழுக மக்களிடம் பேசினாரோ அதையே இப்போது ஹோஸ்னி முபாரக் எதிரொலிக்கிறார். ‘இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்துவேன். என்னை நம்புங்கள்…’ என்ற அதிபரின் இரண்டாவது உரையும் உழைக்கும் மக்களை சமாதானப்படுத்தவில்லை. மக்கள் எழுச்சியை மட்டுப்படுத்தவில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தை ஓரளவு அதிபரின் இந்த இரண்டாவது உரை ஊசலாட வைத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. என்றாலும் நடுத்தர வர்க்கம் இன்னமும் களத்திலிருந்து பின்வாங்கவில்லை.

மாக்கியவெல்லி ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பார். ‘மக்களிடம் அன்பை பொழிவது அரசாங்கத்தின் வேலையல்ல. பயத்தை உண்டாக்குவதே எந்தவொரு அரசாங்கம் நிலவவும் அடிப்படை…’ என்று. இதுநாள்வரை ஹோஸ்னி முபாரக்கும் பயம் காட்டித்தான் வந்தார். இப்போது அது தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் அவரை பயமுறுத்தி வருகிறார்கள்!

‘மன்னிக்கவும் முபாரக். உன்னை நாங்கள் நம்பவில்லை. உடனே அதிபர் பதவியை விட்டு விலகு. உனக்காக விமானம் காத்திருக்கிறது…’ என ஒரே குரலில் கோஷமிடுகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமெரிக்க இராணுவம், தயார் நிலையில் இருக்கிறது. ஹோஸ்னி முபாரக், பதவி விலகி வேறொரு நாட்டில் தஞ்சம் அடைய வேண்டியதுதான் பாக்கி. அடுத்த நொடியே எகிப்தை தன் கட்டுப்பாட்டுக்குள் அமெரிக்கா கொண்டு வந்துவிடும். ஏனெனில் அரசு மாற்றத்தை அது விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்தையே அது விரும்புகிறது. அதனாலேயே எல்பரதேய்யை ஆதரிக்கிறது. அதேநேரம் இப்போது துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஓமர் சுலைமான் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் முபாரக்குக்கு பரிந்துரை செய்திருக்கிறது. இன்னொரு நாசர், இன்னொரு கோமேனி அரபு நாடுகளில் உருவாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

என்ன சவூதி அரேபியாவில் ஹோஸ்னி முபாரக் தஞ்சமடைந்தால், துனிசிய முன்னாள் அதிபர் பென் அலியுடன் தேநீர் அருந்தியபடி ‘மலரும் நினைவுகளை’ பகிர்ந்துக் கொண்டு மாலைப் பொழுதை கழிக்கலாம். இல்லாவிட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை. எஞ்சிய வாழ்நாளை மனமுவந்து அவர் கழிக்கும்படி அமெரிக்கா ஏற்பாடு செய்து தந்துவிடும்.

ஆனால், எகிப்து?

இந்தக் கேள்விதான் உலகம் முழுக்க தொக்கி நிற்கிறது. முக்கியமாக ‘இஸ்லாம் சகோதரத்துவ கட்சி’ இன்னமும் செல்வாக்குடன் எகிப்தில் இருக்கிறது. எல்பரதேய் போலவே இக்கட்சியும் ‘துனிசிய மாதிரி’ புரட்சியை விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறது. எகிப்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் ஹோஸ்னி முபாரக்தான் காரணம் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறது.

ஜனவரி 25 அன்று ஆரம்பித்து இன்று வரை தொடரும் மக்கள் எழுச்சியில் – புரட்சியில் – அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்கள் எதிரொலிக்கவேயில்லை. ஆளுங் கட்சி அலுவலகத்தை தீக்கரையாக்கிய மக்கள், அமெரிக்க தூதரகத்துக்கு ஒரு சின்ன கீறலைக் கூட ஏற்படுத்தவில்லை. சிறந்த அதிபர் என உலக வங்கி ஹோஸ்னி முபாரக்குக்கு விருது கொடுத்து கெளரவித்திருக்கிறது. அந்தளவுக்கு மறுகாலனியாதிக்க கொள்கைகளை முழு மூச்சுடன் அவர் எகிப்தில் அமல்படுத்தியிருக்கிறார். அதனால்தான் வேலையில்லா திண்டாட்டமும், தொழிலாளர்களின் வேலை பறிப்பும், ஏழ்மையும், உயர் கல்வி கட்டண உயர்வும், உணவுப் பொருட்களின் விலையேற்றமும் நிகழ்ந்தன.

ஹோஸ்னி முபாரக் போய் எல்பரதேய் அல்லது வேறு யார் அதிபரானாலும் இதேநிலைதான் தொடரும். பஞ்சமும் பசியும் ஒழிய வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தீர்வாகாது. நிலவும் அரசமைப்பு மாற வேண்டும். சமூக மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு புரட்சிகர கம்யூனிச கட்சியின் கீழ் உழைக்கும் மக்கள் ஒன்று திரள வேண்டும்.

திரள்வார்கள். பல ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதானே மக்கள் திரளின் வலிமையை, இராணுவத்தை எதிர்க்கும் பலத்தை, வர்க்க உணர்வின் எழுச்சியை, ஒவ்வொரு எகிப்தியனும் உணர்ந்திருக்கிறான்? இந்த உணர்வு நிச்சயம் அரசமைப்பு மாற்றத்துக்கு வருங்காலத்தில் வழிவகுக்கும். இன்று கருநிலையில் இருக்கும் புரட்சி நாளை செயல் வடிவம் பெறும்.

சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி பிரான்ஸ், இங்கிலாந்து அரசின் ஏகபோகத்தை ஒழித்த நாசர் ஆண்ட மண்ணல்லவா எகிப்து? ஸ்டாலினை நேசித்த நாசர் பிறந்த பூமி, இன்று ஒவ்வொருவரையும் புரட்சியாளனாக உருவாக்கியிருக்கிறது.

நேற்று துனிசியா. இன்று எகிப்து. நாளை? அல்ஜீரியா, யேமன், ஜோர்டான் என அடுத்தடுத்து பல நாடுகள், நாட்டு மக்கள், எழுச்சிக்காக – புரட்சிக்காக காத்திருக்கிறார்கள். துனிசிய நடைமுறை எகிப்தின் வர்க்க அணி சேர்க்கைக்கு வழிவகுத்தது. எகிப்தின் நடைமுறை நாளை பிற நாடுகளில் நடைபெறப் போகும் மக்கள் எழுச்சியில் எதிரொலிக்கப் போகிறது.

முதல் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்தியங்கள், ஒன்றுபட்ட அரபு நாடுகளை துண்டாடி, பெயரளவுக்கு சுதந்திரம் கொடுத்து தங்களுக்குள் பங்கீடு செய்து கொண்டன. அதற்கு தோதாக சர்வாதிகாரிகளையும், மன்னர்களையும் ஆட்சியில் அமர்த்தி பாதுகாத்தன. அதன்மூலம் தங்களுக்கான சுரண்டல் காலனியாக மாற்றின. மறுகாலனியாதிக்கத்தை அறிமுகப்படுத்தி நாட்டின் வளத்தை உறிஞ்சின. ஏகாதிபத்தியங்கள் செய்த அந்தப் பங்கீட்டை – மறுகாலனியாதிக்கத்தை – இப்போது மக்கள் ஒன்றுதிரண்டு புரட்சிக்கான கருநிலையில் மறுவார்ப்பு செய்து வருகிறார்கள்.

‘நியூயார்க் டைம்ஸ்’ சுட்டிக் காட்டியுள்ளபடி, அரபு நாடுகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தலைமைக்காக மீண்டும் எகிப்தையே இன்று எதிர்நோக்கியிருக்கின்றன.

மக்கள் திரளின் மீது நம்பிக்கைக் கொண்டு சோர்ந்து போகாமல் தீரமுடன் களத்தில் நிற்கும் ஒவ்வொரு எகிப்தியனுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.

_______________________________________________

- அறிவுச்செல்வன்

http://www.vinavu.com/2011/02/07/egypt/

இந்த எகிப்திய மக்கள் புரட்சி வெற்றியளிக்க வேண்டும். அது சீனாவின் "தியன் மென்" சதுக்கத்தில் டாங்கிகளால் மாணவர்கள் அழிக்கப்பட்டது போன்று ஆகிவிடக்கூட்டது.

வெற்றி பெரும் பட்சத்தில், உலகின் எதிர்காலம் பெரும் மாறுதல்களை சந்திக்கும். வல்லரசுகளின் செல்வாக்குகள் உலகளாவிய ரீதியில் நலிந்த மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வைக்கும்.

கீழே சில எகிப்திய மக்களின் கூற்றுக்கள்:

“We got a message from Tunis” , “And the message was: Don’t burn yourself up; burn up the fear that is inside you” - Hosam Khalaf, a 50-year-old engineer

“When we meet God, we will at least be able to say: ‘We tried to do something.’ ” - Hosam Khalaf, a 50-year-old engineer

“This is the first time in my life I get to say what I think in public” - Remon Shenoda, a software engineer.

‘The Nile can bend and turn, but what is impossible is that it would ever dry up’ - Egyptian poem. “The same is true of the river of freedom that is loose here now. Maybe you can bend it for a while, or turn it, but it is not going to dry up.” - Professor Mamoun Fandy.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.