Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதன்மையானது என்றால் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதன்மையானது என்றால் என்ன?

கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவது தான்.

சோபாக்க எனும் பிக்குவிடம் ஒரு முறை 'முதன்மையானது என்றால் என்ன?' எனப் புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் 'எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும் என்றாராம்.

இந்தக் கதையையே இலங்கையோடு ஒப்பிட்டு நோக்கினால், கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவது தான். விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளானது அந்த இனப்பிரச்சினையின் நோய் அறிகுறியொன்றென்பதைப் புரிந்து கொள்ளாதோர் இருந்தனரெனின் அவர்கள் தீவிர இனவாதிகளும் தற்சார்புவாதிகளும் மட்டும் தான்.

பண்டாரநாயக்கா, கூட்டமைப்பு முறையில் அதிகாரத்தைப் பிரேரித்ததில் இருந்து மகிந்த ராஜபக்ச நவீன யுத்தத்தின் மூலம் கலகக்காரர்களைக் கூட்டாகப் படுகொலை செய்தது வரையில் நோயையும் நோய்க்காரணியையும் இல்லாது ஒழிப்பதற்காக பலவிதமான பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டோம்.

பிரிவினைவாதிகளான எல்ரிரியினர் இருக்கும் போது ஆட்சி அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொடுப்பதனூடாக வடக்கு கிழக்கின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுத்தால் நாடு பிளவுபடுவதைத் தவிர்க்க முடியாது போய்விடும் என்பது தான் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தின் பிரபல்யமான கோட்பாடாக் காணப்பட்டது. அதனால் அரசியல் தீர்வொன்றை அளிப்பதற்காக விடுதலைப் புலிகளை அழிப்பது பிரதான நிபந்தனையாக அடையாளம் காணப்பட்டது. மிக மோசமான அழிவுகளுடன் கூடிய நான்காம் ஈழ யுத்தமானது, அந்தச் சிந்தனையின் பெறுபேறாகத் தான் உண்டானது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. அதாவது நோய் அறிகுறியானது இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிந்து இப்போது ஒன்றரை வருட காலமமாகிறது. யுத்தத்தை வென்றெடுப்பதற்காக அனைத்து ஊடகங்களையும் உபயோகித்து நாடு முழுவதும் சிங்கள பௌத்த வகுப்புவாதத்தை அரசாங்கம் கட்டி எழுப்பியது. இதனூடாகத் தூண்டப்பட்ட மக்களின் கருத்துக்களையும் ஆவேசத்தையும் பயன்படுத்தியது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு மட்டுமல்ல. அந்த வகுப்புவாதக் கிளர்ச்சிகளையே பயன்படுத்தி 'தேசத்தின் மீட்பர்' என்ற விம்பமொன்றைக்கட்டி எழுப்பியதன் ஊடாக 2010 ஜனாதிபதித் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுக் கொள்ள மகிந்த ராஜபக்சவால் முடிந்தது. அதற்கு அடுத்தபடியாக அவரது அரசியல் கூட்டணிக்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பங்கு பலத்தை ஏற்படுத்திக் கொண்டதும் அந்த மக்கள் ஆணையின் தயவினால் தான். அதற்குப் பிறகு 18ஆம் அரசியல் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வந்து காலவரையறையற்ற முழுமையான ஏகாதிபத்திய ஜனாதிபதி பதவியைக் கட்டி எழுப்பியது வரைக்கும் பயன்படுத்திக் கொண்டது இந்த 'தேசத்தின் மீட்பர்' என்ற விம்பத்தைத் தான். இறுதியில் என்ன நடந்திருக்கிறது? வகுப்புவாத திசைப்படுத்தலின் வழியே நாட்டின் பெரும்பான்மையான சிங்களமக்கள் கொடுத்த ஆணையானது, மகிந்த ராஜபச்சவின் பதவியை முடிவற்றதும் காலவரையறை அற்றதுமாக ஆக்கிக் கொள்வதற்காக மட்டும் பாவித்துக் கொள்வது தான். நோய் அப்படியே இருக்கிறது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பிற்பாடு ஒன்றரை வருடங்கள் கடந்தும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாங்கள் முன்வைத்திருக்கக் கூடிய ஒரு அடிச் சுவடாவது உள்ளதா?

இடம் பெயர்ந்திருக்கும் மக்களுக்காக வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தும் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தும் கிடைக்கும் உணவு மற்றும் கூரைத் தகடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தவாறு, அகதி முகாம்களிலிருந்து அவர்களை வெளியேற்றி மந்த கதியோடும் நிறையக் குறைகளோடும் மீள் குடியமர்த்தல் மாத்திரம் நடைபெறுகின்றது. அந்த நிகழ்வுகள் நடைபெறுவது கூட முற்று முழுதாக சிங்கள பௌத்த ஆதிபத்தியமனது

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களின் மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்ட நிலையில் தான். யுத்தம் நடந்த பிரதேசங்களின் முழுமையான கட்டுப்பாடு இன்னும் இராணுவத்தின் கைகளில் தான் தங்கியிருக்கின்றது. பொது ஆட்சிமைப்பு நிகழ்வதாக தென்பட்ட போதும் அது இராணுவ அதிகாரிகளின் தீர்ப்புக்களுக்கும் திட்டங்களுக்கும் கீழே தான். தமிழ் மக்கள் நிலையான இராணுவ முகாம்கள் இருக்கும் எல்லைக்குள் தான் மீண்டும் குடியமர்த்தப்படுகிறார்கள்.

மாற்றமாக இருப்பது என்னவெனில் முன்பு சில மீற்றர்கள் இடைவெளியில் பாதை நெடுகத் தரித்து நின்று, தமிழர் வீடுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கிடையிலான இடைவெளி அதிகரித்திருப்பது மட்டுமே. இதற்கு முன்பும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதைப் போல தமிழ்ப பெயர்களை கொண்ட வீதிகள் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்படுகின்றன. வீதிகள் தோறும் பரந்திருக்கும் இராணுவத்தினரால் நடாத்தப்படும் மக்களுக்கான விடுதிகள் முன்னேற்றமடைந்து இராணுவ முகாமைத்துவத்துடன் கூடிய நட்சத்திர ஹோட்டல்களாக மாறி இருக்கின்றன. வடக்குகிழக்கு பிரதேசங்களில் அதிகளவு இடங்கள் குடியிருப்பதற்காகவும் முதலீடு செய்வதற்காகவும் கொள்வனவாளர்களிடம் திறந்து விடப்பட்டிருக்கிறது. அறுகம்பை பாசிக்குடா போன்ற கடற்கரையோரப் பிரதேசங்கள் மிகப் பெரிய ஹோட்டல்களுக்காக இப்போதே ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்த உடனேயே இவை வலுவானதும் அத்தியாவசியமானதுமான பொருளாதார முன்னேற்றமொன்றின் காட்சி எனத் தர்க்கிக்க முடியும் எனினும், அம் முன்னேற்றத்தின் பலனை அனுபவிப்பது பொதுமக்களைக் கொன்று குவித்த யுத்தம் ஒன்றில் தம் வாழ்க்கையையும் சொத்துக்களையும் இழந்து இடம் பெயர்ந்திருக்கும் அப்பிரதேசத்து தமிழ் மக்கள் அல்ல என்பது வெளிப்படையானது. குறைந்தபட்சம் யாழ்ப்பாண நகர சபைக்குட்பட்ட பிரதேங்களில் வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கும் கட்டுப்பாடுகளற்று தெற்கிலிருந்து வரும் சுற்றுலா வியாபாரிகள் கூட அம் மக்களது பார்வைக்குத் தென்படுவது தங்களது பூர்வீக நிலத்தை அரசின் உதவியோடு வந்து கைப்பற்றிக் கொண்டிருக்கும் வெளியூர் வாசிகள் எனத் தானே?

இவை எவை குறித்தும் இப்போது வெளிப்படையான விமர்சனமோ எதிர்ப்போ தமிழ் மக்களிடமிருந்து எழாது என்பது உண்மை. எனினும் இச்செயலானது விடுதலைப் புலிகளின் அழிவு மிக்க ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றியமைக்காக அரசுக்குக் காட்டும் எல்லையற்ற நன்றிக் கடன் எனத் தவறாகப் புரிந்து கொள்ளாதிருப்பது சிறந்ததாகும். தமிழ் மக்களை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்தருப்பது அவர்களுக்குச் செய்த பெரும் உபகாரம் என்று அர்த்தம் கற்பித்தபடி நிம்மதி அடையும் ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு அது அவ்வாறில்லை எனச் சிந்திப்பதற்கு தூண்டக் கூடிய எண்ணத் திரட்டுக்களை 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு' வின் முன்பாக அளித்த சாட்சியங்களூடக மக்கள் தெரிவித்தனர். அன்றாடம் வெளியே தென்படாத போதும் அவர்கள் தங்கள் உரிமை குறித்து எந்தளவு விழிப்போடு இருக்கிறார்கள் என்பதை சிங்கள ஊடகங்களில் திட்டமிட்டே பிரசுரிக்கப்படாமல் தவிர்க்கப்படும் அவர்களது சாட்சியங்களிலிருந்து புலனாகிறது. துங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பலவந்தமாக விடுதலைப் புலிப் படைக்கு சேர்த்துக் கொண்டது, மனிதக் கேடயமாகத் தங்களைப் பாவித்துக் கொண்டமை குறித்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்வதோடு, இந்த ஆட்சியில் இராணுவத்தின் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் அவர்கள் வெளிப்படுத்தும் குற்றச்சாட்டுக்களும் எதிர்ப்பும் பலம் மிக்கவை.

அவை இதுவரை வெளிவராத யுத்தத்தின் இனனொரு முகத்தைக் காட்டிக் கொடுக்கின்றன. தங்களது பிள்ளைகளைக் கணவர்களை, உறவினர்களை இராணுவத்திடம் ஒப்படைத்தும் அவர்களுக்கு என்ன நடந்ததென்று இன்னும் தெரியவில்லையென்பது அவர்களது பாரதூரமான குற்றச்சாட்டு. இடைக்கிடையே கடத்தப்பட்டுப் பின்னர் காணாமற் போனவர்கள் குறித்த குற்றச்சாட்டை விடவும், இராணுவத்திடம் ஒப்படைத்த பிறகு காணாமற் போவது குறித்த குற்றச்சாட்டு பாரதூரமானது. அவர்களது இன்னுமொரு ஏற்றச்சாட்டு என்னவெனில் தடைசெய்யப்பட்டிருக்கும் திரள் குண்டுகள் மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் இராணுவத்தால் தமக்கெதிராகப் பாவிக்கப்பட்டது குறித்ததாகும். அவ்வாறே தங்களை இலக்கு வைத்து ஷெல் வீச்சுக்களை நடத்தியதாகவும் அதனால் தினமொன்றுக்கு நூற்றுக் கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். தாங்கள் மீள் குடியேற்றத்துக்காகச் சென்ற போது தங்கள் வீடுகளிலிருந்த கூரையோடுகள் இராணுவக் காவல் நிலையங்களின் கூரைகளில் இருந்ததாக அவர்கள் சொல்கி;றனர்.

யுத்தம் குறித்து அரசு சொல்லும் புள்ளி விபரங்களையும், வரைபடங்களையும் மட்டும் ஒப்பிக்கும் அநேக ஊடகங்களுக்கு உண்மையிலேயே யுத்தம் எவ்வளவு பயங்கரமனதென மீண்டும் சிந்தித்துப் பார்க்க அச்சாட்சிகளால் வாய்ப்பொன்று பெற்றுத் தரப்படுகிறது. அதுவும் அவர்கள் எவ்விதப் பாதுகாப்புமற்ற இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பிரதேசமொன்றின் சாதாரண மக்களாக வசித்துக் கொண்டுதான் இவற்றைச் சொல்கிறார்கள். சாட்சி கூறியதன் பிற்பாடு அரசின் இராணுவம் அல்லது வேறு அதிகாரங்களிடமிருந்து வரக்கூடிய இன்னல்களுப்கு எதிராக எந்தப் பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. அமைச்சர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இச்சாட்சியங்களுக்குத் தகுந்த பாதுகாப்பைப் பெற்றுத்தருமாறு பாராளுமன்றத்தில் கேட்டிருந்தது இதனால்தான். உரிய பாதுகாப்பை வழங்கினால் இதைவிடவும் பல விடயங்கள் அவர்களிடமிருந்து வெளிப்படக் கூடும்.

பாதைகள் சீரமைப்பதாலோ, பேரூந்து நிலையங்களைக் கட்டுவதாலோ வடக்கிலிருந்து தெற்கிற்கு நூற்றுக்கணக்கான பேரூந்துகளை ஓட விடுவதனாலோ மிக விசாலமான ஹோட்டல்களையும் வங்கிகளையும் கட்டியெழுப்புவதனாலோ தங்களது உரிமை குறித்த விழிப்புணர்வுகளை மழுங்கடிப்பதற்கு அவர்கள் இடங் கொடுக்க மாட்டார்கள் என்பது இந்த வரையறுக்கப்பட்ட வாக்கு மூலங்கள் மூலமாகத் தெரிகிறது.

தங்களுக்கு வரலாற்று ரீதியாக நடந்த அசாதாரணங்கள் பற்றிய விழிப்புநிலை இன்னமும் அவர்களிடம் இருக்கிறது. யுத்தத்தை வென்றெடுத்த பிறகு தற்போது அபிவிருத்தி என்று சொல்லிக் கொள்வதால் மாத்திரம் இலங்கையில் பெரியதொரு ஆச்சரியம் நிகழ்ந்து விடப் போவதில்லை. யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும் என்பதைப் போல இவ்விசாலமான அபிவிருத்தித் திட்டங்களின் கமிசன் பணம் எவ்வளவு, தனிமனித ஆதாரம் எவ்வளவு ஆகியன வெளிவரவும் இன்னும் காலமெடுக்கக் கூடும்.

எனினும், உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை என்னவெனில் பௌதிக நடைமுறைக்குச் சமமாக மனித உரிமைகளிலும் முன்னேற்றம் இருக்க வேண்டும் என்பதுதான். அந்நிலைமைக்கு முதலாவது நிபந்தனையானது நாம் மறந்துபோயும் கைவிட்டிருக்கும் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களுக்காக அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாகும். அதை வேண்டுமென்றே புறக்கணிப்பதானது அபிவிருத்தி ஊடாக கைப்பற்றிக் கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பவற்றை இன்னுமொரு மோதலொன்றின் இரையாக்கி அழிந்து செல்வதற்கு இடமளிப்பதே.

கே.டபிள்யூ. ஜனறஞ்சன, ராவய

தமிழில்: எம்.ரிஷான் ஷெரிப்

நன்றி: காலச்சுவடு

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/57889/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.