Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடாநாடு கிடக்கிற கிடையில...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாடு கிடக்கிற கிடையில...

அதிகளவிலான மனவெழுச்சிகளுக்கு உள்ளாகும் கட்டிளமைப் பருவ வயதினரில் கிரகப்பிரவேசம் செய்கின்ற காதல், கத்தி நிலையை ஒத்திருக்கிறது. கத்தியை நன்மைக்கும் பயன்படுத்தலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். அது கத்தியை கையாளுகின்ற நபரின் புத்தியில்தான் தங்கியிருக்கின்றது.

நாளைக்குக் காதலர் தினம். உலகம் முழுவதும் உள்ள காதல் காய்ச்சல் பீடித்தவர்கள் நாளைய தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். விடுதிகள் (hotels), பூங்காக்கள், கடற்கரைகள் மாத்திரமன்றி அச்சு, மின்னியல் ஊடகங்கள் கூட நாளைய நாளை சிறப்பிக்கத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ரோஜாப் பூ விற்பனையாளர்கள், வாழ்த்து அட்டை விற்பனையாளர்கள் என அனைவரும் காதலர் தினத்தையொட்டி ஒரு கை பார்த்துவிடுவதென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.இவர்கள் இப்படியென்றால் இந்தத் தினத்தின் கதாநாயகர்களாக விளங்கும் இளைய பதின்ம வயதினர் இன்னும் பலத்த "டென்ஷ"னோடு நாளைய புலர்விற்காகக் காத்திருக்கின்றார்கள்.நாளைக்குக் காதல்கள் பரிமாறப்பட இருக்கின்றன.

"நாங்கள் என்ன குறைஞ்ச ஆக்களோ'' எனும் விதத்தில் யாழ்ப்பாண இளைய சமுதாயமும் தமது வித்துவத்தைக் காட்ட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. நாளைக்குக் காலை குடாநாட்டு வீதிகளில் வலம் வந்தீர்களேயானால், உங்கள் வாகன "டயரி"ல் மிதிபடுகிற மாதிரி வாழ்த்தோ கவிதையோ வரையப்பட்டுக் காணப்படலாம். நாளைய தினத்தைச் சிறப்பிக்கிறவர்களின் ஆங்கில முதலெழுத்துக்கள் கூட அழகாக எழுதப்பட்டு (கவனம் அது உங்கள் மகளுடைய அல்லது மகனுடையதாகக் கூட இருக்கலாம்) உங்கள் மிதியடி ஆசீர்வாதத்திற்காக காத்துக் கொண்டிருப்பதை நீங்கள் அனுபவிக்கலாம்.இத்தகைய அரிய, பெரிய காரியத்தைச் செய்வதற்காக நமது இளைய சமுதாயம் இன்றிரவு தீந்தை (paintட்) வாளிகளுடன் வசந்தம் வீசத் தவறிய வீதிகள் தோறும் அலைந்து தமது கைங்கரியத்தைக் காட்ட இருக்கிறது. போதாக்குறைக்கு வீட்டு மதில்கள், கைவிடப்பட்ட கட்டடச்சுவர்கள், மின்சாரக் கம்பங்கள் என்பவற்றிலும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு முந்தி ஏதாவது கருமம் நாளைக்கு அரங்கேறியிருக்கும். பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிலையங்கள் என்பவற்றிலெல்லாம் நாளைக்கு ஏதாவது "நரித்தனம்" நடைபெறாமல் விடாது என்றே நம்பப்படுகின்றது

.

காதல் உணர்வுகளுக்குள் ஓர் உணர்வாகப் புகுந்து நின்று உவகையும் தருகின்றது. ரகளையும் செய்கின்றது. அது இலக்கியம், வரலாறு, விஞ்ஞானம் என்று எல்லாவற்றினுள்ளும் வேர் நுழைத்து விழுது பரப்பி நிற்பதனால்தான், அதனுடைய அடிமுடி தேடுவது பெருத்த காரியமாகிப் போய்விட்டது.

வலன்ரைன் என்கிற சோகம் காதலர் தினம் என்று சிறப்பிக்கப்படும் "வலன்ஸ் டைன்ஸ் டே" எப்படி உருவானது?

"வலன்ரைன்" எனும் கிறிஸ்தவ மதகுருவை நினைவுகூரும் நாளாகவே இது அமைகிறது. உரோம சாம்ராஜ்ஜியத்தை கிளாடியஸ் ii ஆட்சி செய்த காலத்தில், திருமணமாகாத ஆண்கள் சிறந்த படைவீரர்களாக இருப்பதைக் கண்டார். எனவே இளம் ஆண்கள் திருமண பந்தத்தில் இணையக் கூடாதென சட்டம் பிறப்பித்தார். அக்காலத்தில் அங்கிருந்த இந்த "வலன்ரைன்" பாதிரியார் அரசனின் இந்த நிபந்தனையால் கவலையுற்று படை வீரர்களுக்குத் திருமணங்களை இரகசியமாக நடத்தி வைத்தார். எனினும் இவர் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். அப்பேர்ப்பட்ட அவலத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் தினம்தான் நாளைக்கு அகக்களிப்புடன் கொண்டாடப்பட இருக்கின்றது.மேற்குலகு சார்ந்த இந்தத் தினம், படிப்படியாக நமது கீழைத்தேய நாடுகளுக்கும் பரவி ஏதோ முக்கியமான ஒரு தினத்தைக் கடைப்பிடிப்பது போல பரபரப்புடன் பின்பற்றப்பட்டு வருகின்றது.

பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எதிர்காலத்தில் நிலைமை மோசமடைவதைத் தவிர்க்கவும் என ஐ.நா. சபை அங்கீகரித்துள்ள பல சர்வதேச தினங்கள் இன்று கண்டுகொள்ளப்படாமலே இருக்கின்றன.

மறக்கப்பட்ட தினங்கள்

ஐப்பசி 16இல் அறிவிக்கப்பட்டுள்ள வறுமை ஒழிப்பிற்கான சர்வதேச தினத்தையோ, கார்த்திகை 16இல் நினைவு கூரப்படும் சகிப்புத் தன்மைக்கான சர்வதேச தினத்தையோ கார்த்திகை 25இல் அறிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தையோ இன்று எவரும் கண்டுகொண்டதாகத் தகவல் கிடையாது. என்று அத்தினமோ, அன்றைய தினத்தில் மாத்திரம் பத்திரிகையில் ஒரு கட்டுரை, வானொலி செய்தியில் ஒரு தொகுப்பு, ஒரு பேரணி, ஒரு சுவரொட்டி என அன்றே நினைவு கூரப்பட்டு அன்றே மறக்கப்பட்டு விடுகின்ற தினங்களாகவே இவை இருக்கின்றன. அத்தகைய தினங்களில் சில எங்களைப் பற்றியவையாகவும் கட்டாயம் எங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியவையாகக் கூட இருக்கின்றன. ஆனால், நாம் அவற்றைப் பற்றிக் கவலையேபடுவதில்லை. காதலைப் பற்றிக் குறிப்பிடுவது இபத்தியின் நோக்கமன்று ஆதலால் நீங்கள் காதலைப் பற்றி தெரியாதவராக இருந்தால்(?) இன்றைய, நாளைய பத்திரிகைகளில் வருகின்ற கவிதைப் பகுதியை பார்த்தோ அல்லது தொலைக்காட்சி வானொலி என்பவற்றை முடுக்கிவிட்டோ காதல் பற்றிய அறிவை (?) வளர்த்துக் கொள்ளலாம்.

அதிகளவிலான மனவெழுச்சிகளுக்கு உள்ளாகும் கட்டிளமைப் பருவவயதினரில் கிரகப்பிரவேசம் செய்கின்ற காதல், கத்தி நிலையை ஒத்திருக்கிறது. கத்தியை நன்மைக்கும் பயன்படுத்தலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். அது கத்தியை கையாளுகின்ற நபரின் புத்தியில்தான் தங்கியிருக்கின்றது

.

நன்மையா? தீமையா?

காதலினால் நன்மை விளைந்தால் (?) உண்மையில் அது வரவேற்கத்தக்கது. மாத்திரமன்றி அதுவே அதன் சுபாவம் என்று கூறி ஒதுக்கிவிடலாம். ஆனால் தீமை விளைந்தால்...(?)

குடாநாட்டு இளம் வயதினரின் இன்றைய நிலை, எவராலும் திருப்தி அடையக்கூடிய வகையில் இல்லை. அதற்கு வலுசேர்க்குமாப்போல் அண்மையில் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் வெளியிட்ட அறிக்கை தாங்கிவந்த விடயங்கள் குடாநாடு குட்டிச்சுவராகிப் போவதை எண்பித்து நிற்கின்றன.

18 வயதிற்கு கீழ்ப்பட்ட, 247 பேர் கர்ப்பம் தரித்திருக்கின்றனர். 54 பேர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 14 பேர் திருமணம் செய்யாமலே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். உடல் ரீதியான துஷ்பிரயோகத்தினால் 11 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மார்கழி 31 ஆம் திகதி வரையிலாக உள்ள தகவல்களை வைத்து மேற்படி அறிக்கை வெளிப்படுத் தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மாத்திரமன்று, நாளாந்த நடைமுறை வாழ்வில் நாம் சந்திக்கின்ற பல சம்பவங்களும் கூட ,யாழின் இளைய சமுதாயம் பற்றிய பெருத்த கேள்வியை எழுப்புகின்றன.இன்றைக்கு வீதிகளில் இறங்கினோமானால் சில காலங்களுக்கு முன்பு இராணுவ வாகன தொடரணி போனதை ஞாபகமூட்டுமாப்போல் மோட்டார் சைக்கிள் இளைஞர்களின் சவாரிப் பாய்ச்சலையே காணக் கிடைக்கிறது. அதிலும் தலைக்கவசம் அணியாத தலைகளும் உள்ளடக்கம். சரி அப்படி அணிந்திருந்தாலும் அதனுள் செல்லிடப்பேசி ஒன்று செருகிவைக்கப்பட்டிருப்பதும் பிரயாணத்தின்போது சுவாரஸ்யமாக அனுபவிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.

இளசுகளின் தான்தோன்றித்தனம்

தினசரிப் பத்திரிகைகளைப் புரட்டி விபத்துச்சார்ந்த அதுவும் குடாநாட்டுப் பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பிடிக்கும் மோட்டார் சைக்கிள் விபத்துச் செய்திகளை வாசித்து பார்த்தீர்களானால், அதில் அடைப்புக்குறிக்குள் பாதிக்கப்பட்டவரின் வயதைக் குறிப்பிட்டிருப்பார்கள் அல்லவா? அந்த வயதுப் பெறுமானம் 18 தொடக்கம் 30 வரைக்கும் பரவலாகக் காணப்படும்.எங்காவது திருடர் பொலிஸாரால் பிடிக்கப்பட்டதாகவோ பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டதாகவோ செய்தி இருக்கிறதா, அடைப்புக்குறிக்குள் மேற்சொன்ன வயதுப் பெறுமானம் காணப்படும்.மாலை மயங்கும் நேரத்தில் குடாநாட்டு நகர்ப்புற மதுபானக் கடைகளை நோட்டம் விட்டுப் பாருங்கள். நல்லூர் திருவிழாவின் சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் வரிசையாக நெருக்கி சைக்கிள்களை அடுக்கி வைத்திருப்பது போல சைக்கிள்களும், மோட்டார் சைக்கிள்களும் தொகையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை வைத்தே உள்ளே உள்ள திருவிழா நெருக்கடியை ஊகித்துக்கொள்ளலாம். தென்பகுதியிலிருந்து வந்த சிங்களச் சுற்றுலாப் பிரயாணிகளா இதில் ஈடுபடுகிறார்கள்? இல்லை. யாழ்ப்பாண இளைய சமுதாயமென யாரை மேலே இனங் காட்டினேமோ அவர்களே இவர்கள்.

பொது இடங்களில் கூடிநின்று தெருவில் போகின்ற பெண்களை சில்மிசம் செய்கின்ற இளைய சமுதாயத்தின் கொட்டத்தை அடக்குவதற்குப் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு யாழ். சமூகம் ஆளாகியிருக்கின்றமையையிட்டு வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கின்றது.

யுவதிகளின் போக்கு

இளைஞர்கள் இப்படியென்றால் யுவதிகள்..?

நாகரீகமான ஆடைகளுடன் ஆலயங்களில் வழிபடவருமாறு விநயமாக வேண்டுகோள் விடுக்கவேண்டிய தேவை இன்று ஆலய நிர்வாகங்களுக்கு அவசியமானதாகிப் போய்விட்டது. திரைப்படப் படக் காட்சிக்குப் பயன்படுத்திய சிக்கன

கலாசார(?) ஆடைகள் மாதிரியைப் (மொடல்) பின்பற்றி, துச்சாதனன் இன்றித் தம்மைத் தாமே துகிலுரியும் மாதர், இன்று நம்மத்தியில் பரவலாக உள்ளனர். அதுவும் தேவாலயங்களில் நிலைமை மோசமடைவதால், ஆலய பலிபீடத்தில் நின்று குருவானவர் அபாய சங்கு ஊதவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

சினிமாவின் ஆதிக்கம் யாழ்ப்பாணத்தில் தாராளமாகவே கடை விரித்திருக்கிறது. திரையிலும் தொலைக்காட்சியிலும் வந்துபோன தென்னிந்திய திரைப்பட கதாநாயகர்கள் இப்போது கிராமப் புறங்களிலும் தெருக்களிலும் சந்திகளிலும் மறுபிறவி எடுத்திருக்கின்றனர் என்று அன்பர் ஒருவர் கூறியது ஏறக்குறைய சரியாகத்தான் இருக்கிறது. இன்றைய இளந் தலைமுறையினரின் நெற்றியில் திருநீறைக் காண்பதென்பது அபூர்வ நிகழ்வாக மாறிவிட்டது.அரசினால் தேசிய மட்டத்தில் நடத்தப்படுகின்ற தரம் 5, க.பொ.த சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் முதலிடங்களை அலங்கரித்த காலம்போய், முதல் பத்து இடங்களில் ஒரு இடத்தையேனும் அலங்கரிப்பதற்கு இன்று படாதபாடு படவேண்டியிருக்கின்றது. அதுகூட இன்று எட்டாக்கனி என்கிற நிலையை எட்டியிருக்கின்றோம்.

யுத்தம் பிரசவித்துச் சென்றுள்ள அதிகளவான விதவைகள் குறித்து அதிலும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் பற்றிச் சமூகத்தில் தோன்றும் விழிப்புணர்வு வெறும் பூச்சியமாகவே இருக்கிறது. இவர்கள் அரசின் கைகளை எதிர்பார்க்கின்ற நிலையே நிலவுகின்றது. இவர்களின் மறுவாழ்வு குறித்து இன்றைய இளைய சமுதாயம் கிஞ்சித்தும் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை.

சட்டவிரோதக் கருக்கலைப்பிற்கு இட்டுச் செல்கின்ற காதல்கள் இன்று சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. மறுபுறத்தில் இளவயது விவாகரத்துக்கள் பெருகிவருவதாக சமுதாய அனுதாபிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தப் பத்தியில் இளைய சமுதாயத்தினர் என விளித்திருப்பது வேறு எவரையுமல்லர். உங்கள் பிள்ளைகளைத்தான், அல்லது உங்கள் சகோதர சகோதரிகளைத்தான், அல்லது..? உங்களைத்தான்.

விழிப்புணர்வு நாளே சிறந்தது

குடாநாட்டுக் குற்றச் செல்கள் பற்றிப் பிரதமர் தி.மு.ஜயரட்ன "யானை வால் மயிர் உதிர்விற்குச் சமன்'' என எமது பிரச்சினையை மலிவாகச் சொல்லி விட்டார் என அறியும் பொழுது எமக்குப் பொத்துக் கொண்டு கோபம் வருகின்றது. ஆனால் நாம் அவரிலும் விட மோசமான கவனயீனத்துடன் இருக்கிறோம். குடாநாட்டு இளையோர் விவகாரம் இந்த நிலையில் இருக்கையிலேயே நாளைக்கு நாம் காதலர் தினத்தைக் கொண்டாட(?) இருக்கிறோம்.

குடாநாட்டின் நடைமுறைச் சூழ்நிலையில் ஒவ்வொருநாள் விடிகாலையிலும் வீட்டிற்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட கிணறுகளுக்குச் சென்று காணாமற்போனோர் சடலமாகத் தன்னும் மிதக்கிறார்களோ என்று பார்க்கவேண்டிய பரிதாப நிலையில், நாளைய தினத்தை காதலை வெளிப்படுத்துவது, உள்வாங்குவது போன்ற பாரம்பரிய நடைமுறைகளுடன் கொண்டாடாமல், இளைய சமுதாயம் பற்றி விழிப்புணர்வு நாளாக அனுஷ்டிப்பதே சாலச் சிறந்தது மாத்திரமல்ல காலத்தின் தேவையுமாகும்.

நன்றி - உதயன் இணையம்

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.