Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசா இல்லாமல் வெளிநாட்டில் குடியேற..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகனே மனோகரா… எடு கப்பல் நங்கூரத்தை!

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Viruvirupu, Thursday 05 May 2011, 07:46 GMT

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெளிநாடு ஒன்றில் குடியேறுவதற்கு 2 வழிகள் இருக்கின்றன. ஒன்று நேர்வழி. குடியேற விரும்பும் நாட்டிடம் விசாவுக்கு விண்ணப்பித்து, அங்கே குடியேறுவது. இது எல்லோராலும் முடியக்கூடிய காரியமல்ல என்பது ஒரு விஷயம். அடுத்த விஷயம், இதற்கு அதிக கால அவகாசமும் (சில சந்தர்ப்பங்களில் வருடங்கள்) எடுக்கும்.

இந்த இடத்தில்தான் வருகின்றது இரண்டாவது வழி.

இரண்டாவது வழி கொஞ்சம் தடாலடியான வழி. அனுமதியையெல்லாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். என் வழி தனி வழி என்று தாங்களே நேரடியாகப் போய் இறங்குவது. விசாவும் தேவையில்லை, அதற்காகக் காத்திருக்கவும் தேவையில்லை!

அட… இந்த வழி நன்றாக இருக்கிறதே என்று யாராவது நினைத்தால் இந்தக் கட்டுரையை அவசியம் படிப்பது நல்லது. காரணம், இந்த இரண்டாவது வழியில் ஆபத்துகள் அதிகம். ரிஸ்க்கும் அதிகம். போகும் பாதை பற்றியெல்லாம் கொஞ்சம் விஷயமும் தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அதிஷ்டமும் இருக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருப்பவர்களில் பலர் போனது இப்படித்தான்!

இன்று பல்வேறு மேலை நாடுகளில் குடியேறி வாழ்க்கை நடத்துபவர்களில் மிகப் பெரிய சதவீதத்தினர் இப்படிக் கள்ளமாகப் போய்க் குடியேறியவர்கள் என்பது உண்மைதான்.

அவர்கள் போன பாதை எப்படியிருந்தாலும், காலப்போக்கில் அவர்களும் மற்றய குடியேற்றவாசிகளைப் போல மதிக்கப்பட்டு அந்தந்த நாடுகளின் பிரஜாவுரிமை பெற்று வாழ்வதும் உண்மைதான்.

ஆனால்…

அவர்களில் பலருக்கு அந்தந்தக் காலப்பகுதியில் இருந்த அரசியல் சூழ்நிலைகள் ஒரு பக்கமாகக் கை கொடுத்தன. அந்தந்தக் காலப்பகுதியில் இருந்த சுலபமான பயணப் பாதைகள் மறுபக்கமாகக் கை கொடுத்தன.

அப்படியிருந்தும் ஒரு சிலருக்கு அதுகூட வெற்றியைக் கொடுக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் அதிஷ்டம் கை கொடுக்கவில்லை என்பதுதான் அர்த்தம்.

1980களில் தொடங்கி 90கள் வரை இப்படி வெளிநாடு செல்வது அப்படியொன்றும் பெரிய காரியமாக இருக்கவில்லை. கள்ளத்தனமாகப் பயணம் செய்ய மிகச் சுலபமான விமானத் தடங்கள் இருந்தன. பயண ரூட்கள் இருந்தன. மூக்கைப் பிடித்தால் வாயை ஆவெனத் திறக்கத் தெரியாத ஆட்களையும் சில விமானத் தடங்கள் அலுங்காமல் நலுங்காமல் கொண்டுபோய் இறக்கிவிட்டன.

இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் எல்லாம் நேரில் பார்த்த விதத்தில்தான்.

விமான நிலையத்தில் திடீரென ஒருநாள் 50 பேர் வந்திறங்குவார்கள்!

1988ல் இருந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக கனேடிய விமான நிறுவனம் ஒன்றில் அதுவும் விமான நிலையத்தில் வேலை செய்த காரணத்தால் நேரில் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பம் அது. ஒரே விமானத்தில் ஒரே சமயத்தில் சுமார் 50 பேர் டொரண்டோ விமான நிலையத்தில் வந்திறங்கியபோதுகூட அங்கே கடமையில் இருந்திருக்கிறேன்.

அதைவிட ஒரு காலப்பகுதியில் வேலைக்குப் போகும் ஒவ்வொரு நாளும் அந்த ஷிஃப்ட் முடிவதற்குள் குறைந்தபட்சம் ஓரிருவராவது வந்திறங்குவதுகூட சகஜமாக இருந்தது. நான் வேலை செய்யும் விமான நிறுவனம் தலையைப் பிய்த்துக் கொள்ளும். பல மாதங்களாகவே அவர்களுக்கு அதெல்லாம் எப்படி நடக்கிறது என்றே புரியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள்.

இதில் விமான நிறுவனத்துக்கு என்ன பிரச்சினை? வேறொன்றுமில்லை. அபராதம் செலுத்த வேண்டும்.

கனேடியக் குடிவரவுக் குற்றவியல் சட்டப்படி வருடத் தொடக்கத்தில் (ஜனவரி 1ம் திகதி) இருந்து மீட்டர் ஓடத் தொடங்கும்.

முதலாவது பயணியை பாஸ்போட் இல்லாமல் கொண்டுவந்து இறக்கும்போது (பயணி விமானத்தில் ஏறியதும் பாஸ்போட்டைக் கிழித்து உருத்தெரியாமல் செய்துவிடுவார்) அபராதம் 200 டொலர்.

அதன்பின்தான் மீட்டர் சென்னை ஆட்டோ மீட்டர்போல வேகமாக ஓடத் தொடங்கும். 10 பயணிகள் வந்திறங்கியதும் அபராதம் ஒரு பயணிக்கு 300 டொலராகும். இந்த ரேட்டில் போனால் செப்டெம்பர் மாதமளவில் பாஸ்போட் இல்லாமல் வந்திறங்கும் ஒவ்வொரு பயணிக்கும் அந்தப் பயணியைக் கொண்டுவந்து சேர்க்கும் விமான நிறுவனம் 1500 டொலர்வரை அபராதம் கட்டவேண்டியிருக்கும். வருடம் முடியும்போது அபராதம் பயணிக்கு 2500 டொலருக்கு எகிறிவிட்டிருக்கும். (பயணிக்காக வாங்கப்பட்ட டிக்கட்டின் மதிப்பே 1000 டொலர்தான்.)

இந்தப் பலவருட விமான நிலைய அனுபவங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் இங்கே ஒரு தொடராக எழுதும் உத்தேசம் இருக்கிறது. எனவே அதை இப்போது விலாவாரியாகப் பார்க்க வேண்டாம். நான் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு காலத்தில் கள்ளத்தனமாக வெளிநாடு செல்வது கடினமான காரியமல்ல என்பதைத்தான்.

ஆனால் இன்று நிலைமை? பலரும் நினைப்பதுபோல அவ்வளவு சுலபமாக இல்லை.

இன்டியானா ஜோன்ஸ் பாணியின் சாகசப் பயணம்!

இன்றுகூட விமான மார்க்கமாக கள்ளத்தனமாக வந்திறங்கும் ஆட்கள் சொற்ப அளவில் இருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் அதீத திட்டமிடல் தேவை. எனவே வந்திறங்கும் ஆட்கள் மிகமிகக் குறைவு (விமான நிறுவனங்கள் அப்பாடா என்று மூச்சு விடுகின்றன)

இன்று கள்ளத்தனமாகச் செல்ல வேண்டுமென்றால் இந்த விமான நிலையத்தில் ஏறினோமா… ட்ரான்சிட் எல்லாம் சேர்த்து 20 மணி நேரத்தில் போகவேண்டிய இடத்தில் போய் இறங்கினோமா… என்று சுலபமல்ல. (இன்றுகூட அப்படி வந்திறங்கும் கில்லாடிகளும் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்)

ஆகாய மார்க்கமாகத் தொடங்கி… தரை மார்க்கமாகத் தொடர்ந்து… கடல் மார்க்கமாகவும் பயணித்து… அந்தக்கால இன்டியானா ஜோன்ஸ் படம்போல சாகசப் பயணம்தான்!

சமீப நாட்களில் தென்கிழக்காசிய நாடுகளில் (மலேசியா, தாய்லாந்து) கப்பல் மூலமாகப் பெரும் எண்ணிக்கையில் பயணிக்கும் இலங்கைத் தமிழர்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் பிரபல்யம். இவர்களின் இலக்கு அவுஸ்திரேலியா அல்லது கனடா சென்றடைவது.

மகனே மனோகரா… எடு கப்பலை!

இதோ கப்பல் புறப்படுகின்றது… இன்னும் 3 நாட்களில் கனடாவின் மேற்குத் துறைமுகமான வான்கூவரைச் சென்றடைந்துவிடும் என்றெல்லாம் கிரிக்கட் நேர்முக வர்ணணைபோல ஊடகங்களில் பரபரப்பாகச் செய்தி வருமளவுக்கு ஓரளவு வெளிப்படையாகவே நடக்கும் விவகாரம் இது.

அடுத்த கப்பல் தயாராகிக் கொண்டிருக்கின்றது… ஓரிரு வாரங்களில் பயணம் தொடங்கிவிடும் என்ற செய்திகூட கனேடியத் தேசியப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருக்கிறது.

கனடா தனது அதிகாரிகளை தென்கிழக்காசிய நாடுகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அவுஸ்திரேலியா தன்பங்குக்கு இப்படியான ஆபத்தான வழிகளில் பயணிக்க வேண்டாம் என்று இலங்கையில் பிரச்சாரம் செய்கிறது. தொடக்கத்திலேயே தடுத்து விடலாம் என்ற நோக்கம்.

இதில் எமது ஊடகங்கள் தென்கிழக்காசியாவிலிருந்து ஆரம்பிக்கும் இப்படியான பாதைகளில் பயணிக்கும் முயற்சிகளைப் பற்றி மாத்திரமே செய்தி வெளியிடுவது வழக்கம். ஆனால் வேறு பாதைகள் ஊடாகவும் பயணங்களும் பயண முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அவை தமிழ் ஊடகங்களில் வெளியாவதில்லை காரணம் இந்தப் பாதைகளில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் செல்ல முயற்சிப்பதுதான்.

இன்று மிகப் பெரிய அளவில் ஓடிக்கொண்டிருப்பது தென்கிழக்காசிய நாட்டிலிருந்து செல்லும் பாதையல்ல… ஆபிரிக்கா ஊடாகச் செல்லும் பாதையே! ஆனால் இதில் பயணிக்கும் தமிழர்கள் மிகச் சொற்பமே. வேறு நாட்டவர்கள் அதிகம் முயற்சிக்கும் பாதைகள் இவை.

அந்தப் பிரபலமான பயணப் பாதை எது?

ஆபிரிக்காவில் ஆரம்பிக்கிறது அந்தப் பாதை. வட ஆபிரிக்க நாடுகளான அல்ஜீரியா, லிபியா, டூனீசியா, மொராக்கோ ஆகியவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட நாட்டின் ஊடாக தரை வழியாகப் பயணம் தொடர்கிறது. பின்னர் மத்திய தரைக்கடல் வழியாக நீர்ப்பகுதியைத் தாண்டி ஐரோப்பாவுக்குள் போய்ச் சேர்கிறது இந்தப் பாதை!

பல ஐரோப்பிய நாடுகள் இந்தப் பாதையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக இறங்கியுள்ளன. ஆனால் இதன் ஊடாக முயற்சி செய்வோரை யாராலும் முழுமையாக நிறுத்த முடியவில்லை என்பதே உண்மை.

மத்திய தரைக்கடல் வழியாக நீர்ப்பகுதியைத் தாண்டி ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிப்பவர்களைக் கட்டுப்படுத்த இப்போது வெவ்வேறு நாடுகளால் கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஐரோப்பிய நாடுகள்தான் முதலில் முயற்சியெடுத்தனர். அதற்கு ஆபிரிக்க நாடுகள் ஒத்துழைப்புக் கொடுத்தன என வட ஆபிரிக்க நாடுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பாதையில் பயணிப்பவர்களில் பல்வேறு நாட்டவர்களும் இருந்தாலும் அல்ஜீரியர்களே அதிகம்.

அல்ஜீரியா கடலை அண்டிய நாடாக இருந்தபோதிலும் அல்ஜீரியக் கடலோரமாக யாரும் வெளியே முயற்சிப்பதில்லை. காரணம் கடலோரக் காவல் அதிகம். அதன் ஊடாக உச்சிக்கொண்டு செல்வது சுலபமல்ல. ஆனால் அல்ஜீரியாவுக்கு அண்மையிலுள்ள வட ஆபிரிக்க நாடுகள் சில கடலோரக் காவல் பாதுகாப்பில் பலவீனமானவை.

பக்கத்து நாட்டின் கடற்கரையால் எஸ்கேப்!

இதனால் அல்ஜீரியாவிலிருந்து தரை வழியாக அந்த நாடுகளுக்குப் பயணித்து, அதன் பின்னரே கடலில் இறங்குவதுதான் தற்போதய நடைமுறை. வட ஆபிரிக்க நாடுகளிடையே தரை வழியாக எல்லையைக் கடப்பதில் எந்தச் சிக்கலும் கிடையாது. சிக்கலே கடலில்தான் ஆரம்பிக்கிறது.

சிக்கல் என்னவென்றால் இதில் மாட்டிக் கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதுவாவது பரவாயில்லை… மத்திய தரைக் கடலின் வீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத சிறிய கப்பல்கள் அல்லது படகுகளில் செல்பவர்கள் பாதி வழியில் ஜலசமாதி அடையக்கூடிய அபாயமும் உண்டு! கடலில் ரிஸ்க் அதிகம்.

ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்ற தமிழ்ப்பட ஹீரோவின் பஞ்ச் டயலாக் உங்களுக்கு வேண்டுமானால் பிடித்திருக்கலாம். ஆனால் அதே பஞ்ச் டயலாக் மத்திய தரைக் கடலுக்கும் பிடித்திருக்கும் என்று சொல்லமுடியாது.

சமீபத்தில் அல்ஜீரியப் பத்திரிகையில் வெளியான இரு செய்திகளைப் பாருங்கள். ஒரு செய்தியில் அல்ஜீரியரான உஸ்மானி என்பவர் தனது தாயகத்திலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியேறும் ஆசையுடன் கள்ளத்தனமாக கடல் மார்க்கமாக வெளியேற முயன்றார். ஆனால், அந்த முயற்சியில் அவர் வெற்றி பெறமுடியவில்லை. தற்போது சிறையில் உள்ளார். இரண்டாவது செய்தியில் மார்வன் பெலாபட் என்பவரும் அவரைப் போல முயற்சித்தவரே. ஆனால் இவரோ சிறையில் இல்லை. மாறாக ஆளையே காணவில்லை!

அடப்பாவி… இதுவா அதன் அர்த்தம்?

அல்ஜீரியப் பத்திரிகைகளில் இப்படியான செய்திகள் வருவது சகஜம். அல்ஜீரியப் பத்திரிகைகள் இப்படியான செய்திகளைப் பிரசுரிக்கும்போது குறிப்பிட்ட ஒரு சொல்லைப் பயன்படுத்துவது அங்கு பிரபல்யம். அந்தச் சொல் ஹராகா! மெகரூப் அரபி மொழியில் இதற்கு அர்த்தம் (கையைச்) சுட்டுக் கொண்டவர்கள் என்பதே.

வட ஆபிரிக்கக் கடலோரமாக கள்ளத்தனமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயற்சி செய்பவர்களில் பெரும்பாலான ஆட்கள் இளைஞர்கள். பெரும்பாலும் மத்திய தரைக்கடலைக் கள்ளத்தனமாகக் கடப்பதே இவர்களது பாதை. இவர்களில் பலரது முயற்சி அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை.

அல்ஜீரியாவைப் பொறுத்தவரை வெளிநாட்டில் கள்ளத்தனமாகக் குடியேறுவது ஒன்றும் பரம ரகசியமான விஷயமல்ல. பலர் புறப்படுமுன் வெளிப்படையாக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விருந்தெல்லாம் கொடுத்து விட்டே விடைபெற்றுக்கொண்டு புறப்படுகின்றனர். இதனால் இந்த ஆபத்தான பயணமே ஓர் உணர்ச்சிபூர்வமான செயலாக அவர்களுக்கு மாறிவிடுகிறது.

வெற்றிகரமாகக் கடலைத் தாண்டிவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால் கடலைத் தாண்டுவதில் வெற்றிபெற முடியாதவர்களுக்குக் கோபமும் அவமானமுமே மிஞ்சுகிறது. அவர்களால் மீண்டும் தமது ஊரில் தலைகாட்ட முடியாத நிலை ஏற்படுகின்றது. இத்தகையோர் கோபத்தில் தங்களது அல்ஜீரிய அடையாள அட்டைகளை எரித்து விடுவதும் நடைபெறுவதுண்டு. (அல்ஜீரியாவுக்கு அருகிலுள்ள நாடு ஒன்றில் கைது செய்யப்படும்போது ஒரு அல்ஜீரியப் பிரஜையிடம் தேசிய அடையாள அட்டை இல்லாவிட்டால் அவர் அல்ஜீரியாவுக்கு நாடுகடத்தப்பட மாட்டார்!)

“அல்ஜீரியாவிலிருந்து சமீபகாலமாக கடலைக் கடந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் கள்ளத்தனமாகக் குடியேறச் செல்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. ஆனால் இப்படிக் கள்ளத்தனமான வழிகளில் நாடு விட்டு நாடு செல்பவர்கள் எப்போது எப்படி ஆபத்து வரும் என அறிய முடியாத வகையில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. சிலர் போய்ச் சேர்கிறார்கள். சிலர் கைது செய்யப்படுகிறார்கள். வேறு சிலர் கடலில் காணாமல் போகிறார்கள்” என்கிறார் காமெல் பெலாபட்.

இவரது மகன் மார்வன் பெலாபட் (25 வயது) கடந்த ஏப்ரலில் கள்ளத்தனமாக ஐரோப்பாவுக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவரது கதி என்ன என்று இதுவரைத் தெரியவில்லை. ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து அவர் தொடர்பு கொள்ளவுமில்லை. சிறையில் இருப்பதாகத் தகவலுமில்லை.

இந்தப் பயணம் எவ்வளவு கடினமானது என்பதை இந்தப் பயணம் மேற்கொள்பவர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். இப்படி எத்தனை பேர் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்றனர் அல்லது இந்த முயற்சியில் காணாமல் போனார்கள் என்பது பற்றி யாருமே கணக்குச் சொல்ல முடியாது.

இந்த ரகசியப் பாதை அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?

வட ஆபிரிக்க நாடுகளின் கரையிலிருந்து கடலைக் கடந்து ஐரோப்பா செல்லும் இந்தப் பாதையின் ஊடாக ஆயிரக் கணக்கில் ஆட்கள் வந்து சேர்ந்த பின்னர்தான் இந்தப் பாதை பற்றிய விஷயம் அதிகாரிகளின் கவனத்தைக் கவர்ந்தது. ஆயிரக் கணக்கில் ஆட்கள் திடீரென வந்திராவிட்டால் இந்தப் பாதை பற்றி யாரும் பெரிதாக அக்கறை எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

இதை ஐ.நா.வுக்கான அகதிகள் அமைப்பு அலுவலக அதிகாரிகள் ஒப்புக் கொள்கின்றனர். அரசுகள், சமூக சேவை அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பு வைத்து அகதிகள் வருகை பற்றி அறிவதுதான் இந்தச் சர்வதேச அமைப்பின் பிரதான வேலை.

ஐ.நா.வுக்கான அகதிகள் அமைப்பு 2008ம் ஆண்டு சார்டினா தீவில்அலுவலகம் ஒன்றைத் திறந்து அகதிகள் வருகை குறித்துக் கண்காணித்து வருகிறது. சார்டினா தீவு மெடிட்டரேனியன் கடலில் உள்ள இரண்டாவது பெரிய தீவு. ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்குக் கடல் மார்க்கமாகக் களவாகச் செல்லும்போது இந்தத் தீவு இருக்கும் கடற் பகுதியைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருக்கும்.

இந்தக் கடினமான கடல் வழியின் ஊடாக வெற்றிகரமாகச் சென்று ஐரோப்பிய நாடு ஒன்றைச் சென்றடைந்த பின்னரும் சிலருக்கு வேறு ஒரு சிக்கலும் இருக்கிறது. அது குறிப்பிட்ட அந்த நபர் தமது நாட்டுக்குள் அனுமதிக்கப்பட முடியாது என சம்மந்தப்பட்ட நாடு கருதினால் அவரை மீண்டும் அவரது சொந்த நாட்டுக்கே நாடு கடத்த முடியும்.

இது மிகச் சிலருக்கே பொருந்தும் ஒரு நடைமுறை. குறிப்பிட்ட நபர்மீது ஏற்கனவே அவர் குடியேறவுள்ள நாட்டில் கிரிமினல் வழக்கு ஏதாவது பதிவாகியிருந்தாலோ அல்லது அந்த நபர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆதாரம் இருந்தாலோ இந்த நாடுகடத்தலை ஐரோப்பிய நாடுகள் செய்வது வழக்கம்.

ஹோஷினி அலி என்பவர் அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸ்ஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வேலை செய்கிறார். ஐரோப்பாவரை வெற்றிகரமாகச் சென்றுவிட்ட ஆட்களில் சிலரை அவ்வப்போது அந்த ஐரோப்பிய நாடுகள் தமது செலவிலேயே திரும்பி அனுப்புவதைத் தான் பார்த்திருப்பதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

ஆனால் இப்படி திரும்பி அனுப்பப்படுபவர்களிடம் பேசிப்பார்த்ததில் இப்படி அனுப்பப்படுபவர்கள் மிகச் சிலரே என்றும், அனுப்பப்படாதவர்களின் எண்ணிக்கைதான் கணிசமாக உள்ளது எனத் தாம் அறிந்ததாகவும் கூறுகிறார் ஹோஷினி அலி.

எப்போதிலிருந்து இந்தப் பாதையில் ஆட்கள் போகிறார்கள்?

இந்தப் பாதை பிரபலமாக ஓடத் தொடங்கியதே 2007ம் ஆண்டில்தான். அப்போது இந்தப் பாதையில் சென்றவர்கள் சென்றடைந்த ஐரோப்பிய நாடு இத்தாலி.

2007ம் ஆண்டு பலரும் வெற்றிகரமாகக் கடலைக் கடந்து இத்தாலிக்குள் போய்ச் சேர்ந்துள்ளனர். கடலைக் கடந்து தமது நாட்டுக்குள் வந்தவர்களில் அல்ஜீரியாவிலிருந்து மாத்திரம் 1762 பேர் வந்துள்ளனர் என இத்தாலிய உட்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 2008ல் எண்ணிக்கை 2019 ஆக உயர்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டுக்கு முன் இந்தப் பாதையின் ஊடாக ஒன்றிரண்டு பேர்தான் இத்தாலிக்குச் சென்றிருக்கின்றனர்.

எது எப்படியோ, அல்ஜீரியாவைப் பொறுத்தவரை அங்கிருந்து கள்ளத்தனமாக வெளியேறி ஐரோப்பா செல்ல முயற்சிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்பதை ஐ.நா.வுக்கான அகதிகள் அமைப்பு முதல் சம்மந்தப்பட்ட ஐரோப்பிய நாடுகள்வரை அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். இது யாராலும் தடுக்க முடியாத பாதையாகவே இருக்கிறது.

ஆனால் இப்படி ஐரோப்பாவிற்குள் நுழையப் புறப்பட்டு வருபவர்களை, வழியில் இருக்கும் நாடுகள் பிடித்து ஆங்காங்கே முகாம் அமைத்து தங்கவைத்து விட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் மற்றய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

இது கிட்டத்தட்ட அவுஸ்திரேலியா தமது நாட்டுக்கு வரும் இலங்கையர்களை இடையே மறிக்குமாறு இந்தோனேசியாவுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது போலத்தான்.

சமீப காலத்தில் எகிறும் எண்ணிக்கை

இப்படியான அழுத்தங்கள் எல்லாவற்றையும் மீறி மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்குக் கள்ளத்தனமாக வருபவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கும், வட ஆபிரிக்க நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன எனவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

இந்தக் கடற்பாதைகள் பயன்படுத்தப்படுவதற்கு முன், அதாவது 2007ம் ஆண்டுக்கு முன் ஆபிரிக்காவிலிருந்து யாருமே ஐரோப்பாவுக்குக் கள்ளத்தனமாகச் செல்லவில்லையா?

நிச்சயமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அதுவும் ஆயிரக்கணக்கில் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது. ஆனால் அது கடல் பாதையல்ல. விமானம் மூலமாக நடைபெற்றுக்கொண்டிருந்த பூர்விகப் பாதை!

அந்த நாளைய சுலபமான (பூர்விகப்) பாதை எது?

அப்போதெல்லாம் அநேக நாட்டு பாஸ்போட்களுக்கு மொரக்கோ செல்ல விசா தேவையில்லை என்ற நிலை இருந்தது. மொரக்கோவுக்கும் ஸ்பெயினுக்குமிடையே போக்குவரத்து மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் அதிகம். இதனால் மொரக்கோவிலிருந்து விமானம் மூலம் ஸ்பெயின் செல்வதில் கட்டுப்பாடுகள் பெருமளவில் இருக்கவில்லை.

2007க்கு முன் கள்ளத்தனமாக ஐரோப்பா சென்ற பலரும் இந்த விமானப் பாதையைத்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

மொராக்கோவரை விசா சிக்கல் ஏதுமின்றி வந்து, அங்கிருந்து ஸ்பெயின் நகரமான மாட்ரிட் ட்ரான்சிட் வழியாக ஐரோப்பா செல்வதுதான் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தப்படும் மார்க்கமாக இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இதன் ஊடாகவும் ஆயிரக்கணக்கில் ஆட்கள் படையெடுக்க விமான நிலைய நடைமுறைகள் இறுக்கமடைந்து விட்டன. இப்போது இந்தப் பாதை முன்புபோலச் சுலபமானதல்ல.

இப்படியாக, கள்ளத்தனமாக ஐரோப்பாவைச் சென்றடையும் பூர்வீகமாகச் செல்லக்கூடிய விமானப் பாதைகள் அடைக்கப்பட்டு விடவே, கடல் மார்க்கத்தை நம்புவதைத் தவிர சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு வழியில்லை என்றாகி விட்டது.

இக்கட்டுரையில் சிறையில் இருப்பதாக நாம் குறிப்பிட்ட உஸ்மானி என்ற நபர் ஏதோ ஒரு தடவை கடலைக் கடக்க முயற்சித்து அகப்பட்டுக்கொண்ட ஆளல்ல! இவர் கஜனி முகமது போல அடிக்கடி படையெடுத்தவர். அடிக்கடி ஐரோப்பாவுக்குக் கள்ளத்தனமாகச் செல்ல முயற்சித்தவர்.

காலநிலையும் வில்லனாகலாம்!

கடந்த செப்டெம்பரில் அனபா என்ற துறைமுக நகரைச் சேர்ந்த நண்பர்களுடன் இவர் ஒரு சிறிய படகில் கடல் மார்க்கமாக ஐரோப்பாவிற்குள் கள்ளத்தனமாகச் செல்ல முயன்றார். அப்போது கடலோரக் காவல் படையினரில் கண்களில் இவரது படகு சிக்கவில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக காலநிலை சரியில்லாததால் அவர் தனது முயற்சியைக் கைவிட்டுப் படகைத் திருப்ப நேர்ந்தது.

பின்னர் டிசம்பரில் இவர் மீண்டும் செல்ல முயன்றபோது கரைக்காவல் படையினர் இவர் சென்ற படகை இடைமறித்துப் பிடித்து விட்டனர். ஆனால் கைது செய்யாமல் படகைக் கரைக்குத் திருப்புமாறு உத்தரவிட்டனர். ஜனவரி மாதம் 3வது தடவையாக மீண்டும் செல்ல முயற்சித்தார்.

இம்முறை அவர் தனியாக முயற்சி செய்யவில்லை. இதற்கென இருக்கும் ஏஜன்ட் ஒருவரின் முலமாகச் செல்ல முயன்றார். இவரும் இவரது மைத்துனரும் ஏஜன்ட் ஒருவருக்கு தலா 60 ஆயிரம் தினார்கள் கொடுத்து கள்ளத்தனமாகச் செல்ல முயன்றனர். படகில் ஏறிய இவ்விருவரையும் வேறு சுமார் 30 பேரையும் இவரது ஏஜன்ட் சார்டினியா தீவுக்கு அருகேவரை கொண்டுசென்ற நிலையில் இத்தாலியக் கடற்காவற் படையினரால் தடுக்கப்பட்டனர்.

மொத்தத்தில் உஸ்மானி மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர்ந்தார். அதுமாத்திரமல்ல இம்முறை சிறையிலும் அடைக்கப்பட்டு விட்டார்.

திடீரென ஏன் சிறைவாசம்? காரணம் இருக்கிறது. தனது நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளியேறுபவர்களைக் கட்டுப்படுத்த அல்ஜீரியா புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துவிட்டது.

தண்டனை சீரியசாகின்றது!

அல்ஜீரிய அரசு 2 ஆண்டுகளுக்கு முன் இப்படி கள்ளத்தனமாக ஐரோப்பாவில் குடியேறச் செல்பவர்களுக்கு ‘பட்வா’ என்ற தடையை விதித்தது. அது வெறும் தடையே தவிர அதற்குப் பெரிதாகத் தண்டனை ஏதுமில்லை. ஆனால் இப்போது ஐரோப்பிய அரசுகளின் அழுத்தம் காரணமாக பட்வா என்ற தடை கிரிமினல் குற்றமாக ஆக்கிச் சட்டம் இயற்றப்பட்டது.

புதிய சட்டத்தின்படி ஒரு அல்ஜீரியப் பிரஜை சட்டவிரோதமாக எந்தவொரு நாட்டை விட்டு வெளியேறினாலும் அச்செயல் 20,000 முதல் 60,000 தினார்கள் அபராதம் விதிக்கப்படக் கூடிய குற்றம் அல்லது 6 மாதச் சிறைத்தண்டனைக்குரியது என்பது இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. உஸ்மானி இந்த மாத இறுதியில் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

சட்டவிரோதமாக வெளியேற முயன்று அகப்பட்டால் ஏதோ ஒரு சிறிய தொகையை அபராதமாக விதிப்பதுதான் முன்பு வழக்கம். நீதித்துறை அமைச்சர் தயூப் பெலாய்ஜ் ”மனிதர்களைத் திட்டமிட்டுத் திரட்டிச் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்புவதைத் தடுக்க இதுபோன்ற ஒரு சட்டம் இருப்பது அவசியம்” என இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

வட ஆபிரிக்க நாடுகள் விவகாரங்களுக்கான அல்ஜீரிய அமைச்சரான அப்தெல் காதர் மெஷாஹெல், ”கள்ளத்தனமானக் குடியேற்றத்தைத் தடுக்க ஐரோப்பிய நாடுகள் நவீன அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்” என ஐரோப்பிய நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அல்ஜீரியர்கள் வேறு நாடு ஒன்றின் ஊடாகவே ஐரோப்பா செல்ல முயல்வதால் அந்தந்த நாடுகளில் அவர்களைக் கைது செய்யக்கூடிய நடைமுறை வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.

”இதற்காகச் சர்வதேசச் சட்டங்கள் சட்டங்கள் இயற்ற வேண்டும். அதே சமயம் லிபியா, டூனீசியா போன்ற நாடுகளின் ஊடாக வெளியேற முயல்பவர்களை அந்தந்த நாடுகளிலேயே அடைத்து வைக்கத் தடுப்பு முகாம்கள் அமைக்க வேண்டும். இதற்காக ஐரோப்பிய நாடுகளுடன் வட ஆபிரிக்க நாடுகள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

நீங்கள் பணம் கொடுங்கள்… நாங்கள் தடுக்கின்றோம்

இந்தக் கோரிக்கையின் பின்னால் இருப்பது இந்த விவகாரங்களுக்கான நிதியுதவியை ஐரோப்பிய நாடுகள் செய்ய வேண்டும் என்பதுதான் என்பதில் எவ்வித ரகசியமும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் இதற்கு நிதியுதவி செய்ய அநேக ஐரோப்பிய நாடுகள் தயாராகவே இருக்கின்றன.

அல்ஜீரியாவின் பழைமை வாய்ந்த எதிர்க்கட்சியான சோஷலிஸ்ட் போர்ஸஸ் பிராண்ட் கட்சியின் பொதுச் செயலாளரான கரீம் தாபூ, இதிலுள்ள அடிப்படையான காரணத்தை முதலில் கவனிக்க வேண்டும் என்கிறார்.

அல்ஜீரியர்கள் ஏன் வெளிநாடு ஒன்றுக்கு இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொண்டு செல்லத் துணிகிறார்கள் என்பதற்கான காரணத்தையும் ஆராய வேண்டும் என்பது அவரது கருத்து.

”அல்ஜீரியப் பிரஜைகள் ஐரோப்பாவுக்குத் கள்ளத்தனமாகச் செல்வதற்குக் காரணம் உள்நாட்டில் வேலை வாய்ப்புக் கிடைக்காததும், உள்நாட்டு வேலை பற்றிய தவறான அபிப்பிராயத்திலிருந்து அவர்கள் மீளாததும்தான்” எனக் கூறும் அவர், ”அல்ஜீரியாவில் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க ஐரோப்பா உதவாததும் இதற்கு ஒரு காரணமாகும்” எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அல்ஜீரியாவுக்கு ஐரோப்பிய யூனியன் கடந்த ஆண்டு 79 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்தது. அல்ஜீரியாவில் வேலை வாய்ப்பின்மை 11 சதவீகிதம் என அதிகாரபூர்வ தகவல்களிலிருந்து தெரியவருகிறது. ஆனால், வேலைவாய்ப்பின்மை உண்மையில் இன்னும் அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஐரோப்பிய நிதியுதவி அதிகரிக்கப்பட்டால் அல்ஜீரியாவின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதனால் அல்ஜீரியாவிலிருந்து வெளியேறத் துடிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்பது அரசின் கோரிக்கையாக இருக்கிறது.

ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜன்ட்கள்

அல்ஜீரியர்களை கள்ளத்தனமாக ஐரோப்பாவிற்குக் கொண்டு சேர்க்கும் வேலை ஒரு பெரிய தொழிலாகவே உருவெடுத்து விட்டது. இதற்காக பல ஏஜன்ட்கள் வெளிப்படையாகவே இயங்குகிறார்கள்” என்கிறார் அலி பென்ஷாத். இவர் தெற்கு பிரான்ஸில் உள்ள புரோவென்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சியாளர்.

கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் பெரும்பாலும் இளைஞர்கள்தான் அல்ஜீரியாவிலிருந்து ஐரோப்பாவிற்குக் கள்ளத்தனமாகச் செல்ல முயற்சிக்கின்றனர். இதிலுள்ள மிக ஆச்சரியமான ஒரு தரவு இவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 40 சதவீதத்தினர் பல்கலைக்கழகங்களில் படித்தவர்களாக இருக்கின்றனர்.

கடினமான இந்தக் கடற் பயணத்தை மேற்கொண்டு செல்பவர்களில் பெண்கள் இருப்பது அரிதுதான். சர்வதேச நிறுவனங்களிடமிருந்து சேகரித்த தகவல்களை வைத்துப் பார்த்ததில் 12 பெண்கள் கடந்த ஆண்டு இத்தாலிக்குக் கள்ளத்தனமாகச் சென்றுள்ளனர் எனத் தெரிகின்றது. இளம் வயதினர் அதிகம் வசிக்கும் அல்ஜீரியாவில் இளைஞர்கள் வெளிநாட்டில் குடியேற முண்டியடிக்க இளம் பெண்கள் நாட்டின் பாதுகாப்புப் படைகள் உட்பட கிட்டத்தட்ட சகல வேலைகளிலும் இருக்கிறார்கள்.

மார்வன் பெலாபட் தனது தந்தை நடத்தும் கிராபிக் டிசைன் நிறுவனத்தில் உதவியாளராக இருந்தவர். இவர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல 3 தடவை முறைப்படி விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் விசா கிடைக்காததால் கடல் மார்க்கமாகப் புறப்பட்டுவிட்டார்.

”இதற்குக் காரணமே அல்ஜீரியாவைப் பொறுத்தவரை இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள ஒருவகை மனஅழுத்தம்தான்” என்கிறார் பென்ஷாத். அல்ஜீரிய நாட்டவரின் தேசிய சராசரி வயது 26.6 ஆண்டுகள்தான். இளைஞர்கள் அதிகமாகவுள்ள ஒரு நாட்டில் சாதாரணமாக ஏற்படக்கூடிய நாட்டைவிட்டு வெளியேறும் இச்சைதான் இது என்பது அவரது கருத்து.

அல்ஜீரியா 1962ல் சுதந்திரம் பெற்றபின் அரசியல் காரணமாகச் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. 2009ல் ஜனாதிபதி அப்டெல் அஜீஸ் பௌடிபிலிக்கா மீண்டும் ஜனாதிபதியாகியிருக்கிறார். தனது நாட்டின் பிரஜைகளின் மனவேட்டத்தை இவர் புரிந்துகொள்கிறாரில்லை என்பதே இவர்மீது வைக்கப்பட்டுள்ள பரவலான குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதற்கு விசித்திரமான காரணம் ஒன்றும் கூறப்படுகின்றது.

அது என்ன தெரியுமா? இளைஞர்கள் அதிகமுள்ள, தேசிய சராசரி வயது 26.6 ஆகவுள்ள ஒருநாட்டில் வசிக்கும் பெரும்பாலான அல்ஜீரியர்கள் பிறப்பதற்கு முன்பே இவர் பதவிக்கு வந்தவர் (தற்போதய வயது 73)

வெளிநாடு செல்வதாக கூறி சென்றவர் கடலில் காணாமல் போய்விட்ட மார்வன் பெலாபட் பற்றிக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். இப்போது இவரைப்போல கள்ளத்தனமாக வெளிநாடு செல்ல முயன்று காணாமல் போனவர்களின் குடும்பங்கள் ஒரு சிலவற்றிற்கு மார்வனின் தந்தை அதிகாரபூர்வப் பேச்சாளராகி விட்டார்.

60 வயதிலும் அவர் பல சிரமங்களுக்கிடையே இந்தச் சேவையைச் செய்து வரும் இவர் ஸ்பெயின், இத்தாலி கடற்கரைகளில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை அடையாளம் காண அல்ஜீரிய அரசு ஒத்துழைப்புத் தரவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார். ஒருவேளை அல்ஜீரிய அரசு ஒத்துழைத்திருந்தால், எனது மகனை அந்த பிணக்குவியலில் அடையாளம் காண வாய்ப்புக் கிடைத்திருக்குமோ தெரியாது எனக் கண்கலங்கக் கூறுகிறார் அவர்.

அல்ஜீரியாவிலிருந்து கள்ளத்தனமாக ஐரோப்பா செல்ல முயன்றவர்களில் சிலர் லிபியா, டூனிஷியா போன்ற நாடுகளில் எவ்விதப் பதிவுகளும் இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என அல்ஜீரியாவில் ஒரு வதந்தி நிலவுகிறது. இந்த வதந்தியில் உண்மை இருக்குமா என்று கூட இவர் ஆராய்ந்து பார்த்து வருகிறார்.

மகனைப் பிரிந்து வாழும் தனது மனைவியை ஆற்றாமை தாளாமல் ஒருமுறை கடற்கரைக்குக் கூட்டிச்சென்றார் மார்வன் பெலாபட்டின் தந்தை. அந்தக் கடலைப் பார்த்தபோது அவரது மனதில் பல்வேறு உணர்ச்சிகள் ஏற்பட்டன. ஒரு காலத்தில் இதே கடல் தனது மகனுக்கு நல்வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கப்போகும் கடவுள்போல அவருக்குத் தெரிந்திருந்தது. இப்போது அதே கடல் அவருக்கு வெறுப்பை அதிகரிக்கும் சூனியமாகத் தெரிகின்றது.

கடலில் கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒரு படகு மிதந்து செல்வதை அவர் கண்டார். இந்தப் படகு இன்னும் எத்தனை அப்பாவிகளை ஏற்றிச் சென்று கடலில் தொலைக்குமோ என்ற வெறுப்பே அவருக்கு ஏற்பட்டது.

நன்றி-

விறுவிறுப்பு.கொம்

http://viruvirupu.com/2011/05/05/239/

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.