Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18, 2009: துப்பாக்கிகளின் இறுதிச் சத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1

அதே நிலவு. அதே சூரியன். அதே கடற்கரை. அதே மணல்மேடுகள். அதே நட்சத்திரங்கள்.

ஆனால் இப்போதங்கே...

அதே காற்றில்லை. அதே நாட்களில்லை. அதே இரவுகள் இல்லை. அங்கிருந்த அதே மனிதர்களில்லை. அந்த மனிதர்கள் வாழ்ந்த அடையாளங்களோ எச்சங்களோ எதுவும் இல்லை. அவர்களை நினைவுகூரக்கூடிய எந்தச் சுவடும் அங்கில்லை.

இப்போதங்கே நடந்து கொண்டிருப்பது Opration Wipe.

எல்லாவற்றையும் அழித்தல். எந்தச் சுவடும் மிஞ்சிவிடாமல் அழிக்கும் நடவடிக்கை. போர்க் காலத்தில் நடந்த குற்றங்களை ஆதாரப்படுத்தக்கூடிய எந்தச் சுவடும் அங்கே மிஞ்சிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையின் விளைவான நடவடிக்கை.

இந்த நடவடிக்கைக்காக ஏராளம் துருப்புகள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

2009 மே மாதத்தில் இந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த படையணிகள் வேறு. இப்போது இயங்கிக் கொண்டிருக்கிற படையணிகள் வேறு.

அப்போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். அவர் ஈழப்போராட்டத்தை நசித்த ஒரு முக்கிய புல்டோசர் என்கிறார்கள். சரணடைந்திருந்த புலிகளில் பெரும்பாலானவர்களையும் மக்களையும் கொன்றவர்களில் இந்தப் புல்டோசருக்குப் பெரும் பங்குண்டு.

ஒருபோது, எதைப்பற்றிய கவலைகளுமின்றிக் கொலையே தொழிலெனக் கொண்டு நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட மனிதர்களையிட்டு இப்போது கொன்றவர்களே கலங்குகின்றனர்.

அன்றைய மகிழ்ச்சியும் வெற்றிக் களிப்பும் இன்று கலக்கமும் நிம்மதியின்மையுமாக மாறியிருக்கின்றன. அவை இன்று அபாயக் கயிறாக மாறியிருக்கின்றன.

அந்த அபாயக் கயிறு இப்பொழுது சுருக்கிடக் காத்திருக்கிறது. அதனால், தடயங்களைத் துடைத்தழிக்கின்றன படைகள்.

'போரின் வெற்றியை விடவும் போர்க்குற்றங்கள் பற்றிய கலக்கம் பெரிது' என்று இப்போதுதான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

வரலாறுதான் எத்தனை விசித்திரமானது!

அது யார் யாருக்காகவோ எப்படித்தான் சுற்றினாலும் ஒரு கட்டத்தில் மக்களிடம் வந்து நின்றே ஆகவேண்டும். அந்தக் கட்டம் இப்பொழுது வந்திருக்கிறது.

2

ஒரு காலம் அந்தக் கடற்கரையில் அமைதி அலைகள்தான் அடித்தன.

முல்லைத்தீவுப் பட்டினத்துக்கு வடக்கே – சாலை, அம்பலவன்பொக்கணை, மாத்தளன், வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் என்று நீண்டிருக்கும் அந்தக் கடற்கரைக் கிராமங்களில், கடலோடிகள் ஈரத்தோடிருந்தார்கள்.

நல்ல வளமாகத் தொழில் நடந்தது. வளமாகத் தொழில் நடந்தால் வாழ்க்கையும் செழிக்குமல்லவா. அது அப்படிச் செழித்துத்தானிருந்தன.

இந்தச் சிறு கடலோரக் கிராமங்களில் பனைகள் காய்த்துக் கொட்டின. சிறுகாடுகளில் அதிகமாக நின்ற நாவல் மரங்கள் பழுத்துச் சொரிந்தன. மீனுக்குப் பஞ்மில்லை. அங்கிருந்த வயல்கள் விளைந்ததால், அரிசிக்கும் பஞ்சமில்லை.

கள்ளும் கூழும் பாட்டும் கூத்துமாக அங்கே நாட்கள் கழிந்தன.

சனங்கள் வயலோடும் கடலோடும் பனையோடும் காட்டோடும் கலந்து வாழ்ந்தார்கள். தாராளமாக உண்டு குடித்தார்கள். இரவு பகலாக கடலிலும் வயலிலும் பனையிலும் காட்டிலும் உழைத்தார்கள். ஆசைக்கேற்ற விதமாக வாழ்ந்து கழித்தார்கள்.

அங்கே (முள்ளிவாய்க்கால், பொக்கணை, இரட்டை வாய்க்காலில்) மின்சாரமில்லை. தொலைபேசி இல்லை. போக்குவரத்துக்கு நல்ல சாலைகள் இல்லை. மருத்துவமனைகூட அங்கே பெரிதாக இல்லை என்ற வருத்தமெல்லாம் அங்கே யாருக்கும் இருந்ததில்லை. ஆனால், எல்லா வளங்களோடும் தாங்கள் வாழ்வதாக – ஒரு நிறைவோடு அவர்கள் வாழ்ந்தார்கள்.

அவர்களுக்கு வற்றாத கடலிருந்தது. வானைத் தொடும் பனைகள் இருந்தன. கடலோடும் பனையோடும் உறவாடி வரும் காற்றிருந்தது. கடலில் இருந்து எழுந்து வரும் சூரியன் இருந்தது. எப்பொழுதும் குளிர்ந்தேயிருக்கும் நிலவிருந்தது. கால்களை ஆறவைப்பதற்கு மணல் இருந்தது. போதாக்குறைக்கு வானம் நிரம்ப நட்சத்திரங்கள் இருந்தன. கடலுக்கும் ஊருக்கும் அரண்போலக் காடிருந்தது. அந்தக் காட்டில் நறுமணம் வீசும் பூக்களிருந்தன. சீசனுக்குப் பழங்களும் பழுத்தன.

கவலைகளில்லாத காலம் அது.

பின்னர் கடலில் இரத்தம் பெருக்கெடுக்கக் காடேறிகள் திரிந்தார்கள். நிலைமை மாறியது. காற்றுக்கூடக் கலவரமடைந்தது. 'முல்லைக் கடலில் நேவிக்காரர்' என்று கடலில் இறங்காமற் கரையில் வாடத் தொடங்கினர் கடலோடிகள்.

கரை நீளத்துக்கு வள்ளங்கள் கவிழ்க்கப்பட்டிருந்தன. வலைகள் வெயிலில் காய்ந்தன. அல்லது அவை விரிக்கப்படாமலே வாடிக் கொட்டில்களில் கட்டிவைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கொடுமையைப் போக்கவென அந்தக் கடற்கரையில் போராளிகள் வந்திறங்கினார்கள். பிறகு, அந்தப் பகுதி போர்ப்பாசறைகளாகவும் பிரதான தளங்களாகவும் மாறியது. சனங்களும் போராளிகளும் ஒன்றாக – அன்போடிருந்தார்கள். போகப் போகக் கடலில் கடற்படையின் ஆதிக்கம் மெல்லத் தணிந்தது.

படிப்படியாக அங்கே - கடற்புலிகளின் முக்கிய தளங்களும் பாசறைகளும் பெருகின.

அம்பலவன் பொக்கணைக்கு அடுத்ததாக இருக்கிறது சாலை. சாலையே கடற்புலிகளின் பிரதான தளமிருந்த பகுதியாகும். கடற்புலிகளின் மையப்பகுதியாக இருந்த இந்தப் பகுதியிலேயே புலிகளின் விநியோக நடவடிக்கைகளும் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கான புலிகளின் கடல்வழிப் போக்குவரத்துகளும் நடந்தன.

இதனால், இந்தப் பகுதியை இலக்கு வைத்து இலங்கைப் படைகள் தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தன. சாலையில் குண்டு வீசப்படாத நாட்களே இல்லையென்றொரு காலம் இருந்தது.

ஆனாலும் அங்கே எல்லாம் சீராகத்தான் நடந்தன.

கப்பல்கள் வந்து போயின. பயிற்சிகள் தொடர்ந்து நடந்தன. போர்ப்படகுகளைப் புதிதாகக் கட்டும் பணிகள் நடந்து கொண்டேயிருந்தன.

கடலோடிகள் தொழிலுக்குப் போனார்கள். வயல் விளைந்தது. பனைகளில் கள் ஊறியது. கடற்கரையிலிருந்து சந்தைக்குப் பொருட்கள் போயின. சனங்கள் இரவையும் பகலையும் ஆழ்ந்தனுபவித்தார்கள்.

கடலிலே அட்டகாசம் செய்யும் கடற்படையை வழிமறித்துப் போரிட்டுப் புலிகள் வெற்றி கொண்டார்கள்.

நிலவும் வெண்ணுரை பொங்கும் அலையும் ஓங்கி வளர்ந்த பனைகளும் சிறு காடும் இடையிடையே வீடுகளும் என்றிருந்த இந்தச் சிறு கடலோரக் கிராமங்களில் இலகுவாக எண்ணிவிடக்கூடிய அளவுக்கே ஆட்கள் இருந்தனர்.

மிஞ்சி மிஞ்சிப் போனால், ஆகக் கூடியது 800 பேர்வரையிலேயே இந்தக் கிராமங்களில் இருந்திருக்கிறார்கள். பனைகளுக்கும் பெரிய மரங்களுக்கும் இடையில் இருக்கும் சின்னஞ்சிறிய குளங்களில் அழகாகப் பூத்திருந்தன செந்தாமரைகள்.

இந்தக் கடலோரக் கிராமங்களை நோக்கியே பெரிய படையெடுப்பு நடந்தது. சனங்கள் முழு வன்னியிலிருந்தும் ஒதுங்கி ஒதுங்கி இந்தச் சிறிய கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அப்படி வந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல. ஒரு சில ஆயிரமும் அல்ல. லட்சக்கணக்கானவர்கள்.

ஒரு சிறு குடிசையை அமைத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கோ அல்லது ஒரு மலக்குழியை அமைத்துக் கொள்வற்கேற்ற மாதிரியோ அங்கே இடமிருக்கவில்லை. சில இடங்களில் சனங்கள் விலத்திச் செல்வதற்கே வழியில்லை. அவ்வளவு நெருக்கம். அவ்வளவு நெரிசல்.

சுமக்க முடியாத அத்தனை பாரச் சுமைகளோடும் அங்கே வந்த சனங்கள் களைப்பினால் வீழ்ந்து படுத்தனர். இனிப் போவதற்கிடமில்லை என்று கடல் சொன்னது. இனி மீள்வதற்கு வழியில்லை என்று கரை சொன்னது.

வழிகள் எதுவுமற்ற அந்த மணல் வெளியில் முப்பது ஆண்டுகாலப் போராட்டத்தின் உயிர்ப்பு மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. போராளிகள் உற்சாகத்தை இழந்து கொண்டிருந்தார்கள். ஆனாலும் போர் நடந்து கொண்டிருந்தது.

பனைகள் தறிக்கப்பட்டு மரண அபாயத்துக்குக் கவசமாக்கப்பட்டன. மரங்கள் எல்லாம் இரண்டொரு நாட்களிலேயே காணாமற் போய்விட்டன. வெட்டவெளியாகிய அந்த மணற் பகுதியில் எங்கே பார்த்தாலும் சனங்கள்.

காயங்களோடும் துக்கங்களோடும் பசித்த வயிற்றோடும் போக்கிடமின்றியும் வந்து சேர்ந்த சனங்கள் அத்தனை பேரையும் இந்தக் கிராமங்கள் ஏற்றுக் கொண்டன.

என்றபோதும் அங்கே சனங்கள் ஆறக்கூடியதாகவோ ஓயக்கூடியதாகவோ நிலைமை இருக்கவில்லை. சாவு துரத்திக் கொண்டேயிருந்தது. மரணம் அங்கே குதித்து விளையாடியது. காயங்களும் வலியும் சனங்களை வாட்டியெடுத்தன.

ஆனாலும் அங்கே - அந்த ஒடுங்கிய கடற்கரையில், கொழுத்தும் வெயிலும் கொட்டும் மழையும் நிறைந்த கடற்கரையில், மணல் மேடுகளும் புதைகுழிகளும் நிரம்பிய கடற்கரையில், வானத்துக்கும் அப்பால் நீலமாகவே விரிந்திருக்கும் மாபெரும் சமுத்திரக்கரையில், சனங்கள் நிறைந்திருந்தார்கள்.

பசித்த மனிதர்கள். களைத்த மனிதர்கள். துயரத்தால் சல்லடையாக்கப்பட்ட மனிதர்கள். சாவினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த மனிதர்கள். இந்த உலகத்தினால் கைவிடப்பட்டிருந்த மனிதர்கள். விடுதலைத் தாகத்துக்காகவே தங்களின் தலைகளைப் பலியிட வேண்டிய தண்டனை விதிக்கப்பட்டிருந்த மனிதர்கள். பல்லாயிரக்கணக்கானவர்களின் விருப்பங்களுக்காகவும் கனவுகளுக்காகவும் சிலுவைகளைச் சுமந்த மனிதர்கள்....

இந்த மனிதர்கள் தாங்கள் மனிதர்களாகவே வாழ விரும்பியவர்கள். யாருக்கும் தீங்கிழைக்க விரும்பாதவர்கள். உழைத்துக் களைத்தவர்கள். இருளிலும் புழுதியிலும் வாழச் சபிக்கப்பட்டவர்கள். இனவாதத்துக்கும் ஏகாதிபத்தியங்களுக்குமாகப் பிழியப்பட்டவர்கள்.

இந்தச் சனங்களை இலக்கு வைத்துப் பீரங்கிகள் முழங்கின. அவர்களின் தலைகளைக் குறி வைத்துத் துப்பாக்கிகள் இயங்கின. சனங்களின் தலைகளுக்காகவே இறுதிப் போர் நடந்தது. தலைகளின் எண்ணிக்கைக்காகவே போரும் போட்டிகளும் நடந்தன.

இதற்காகப் பாவப்பட்ட சனங்கள், சுற்றிவளைக்கப்பட்டு மரணக்குழியில் வீழத்தப்பட்டார்கள். குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோயாளிகள் என எந்த வேறுபாடும் பார்க்கப்படவில்லை. கொலை வெறியின் முன்னே வேறுபாடுகளும் கருணையும் இல்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது. யாரும் இதைப் பற்றிக் கேட்கவில்லை. இந்தக் கொடுமை பகிரங்கமாகவே இந்த உலகத்தில் அரங்கேறியது.

வன்னியில் அப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று இந்த உலகத்துக்கு நன்றாகத் தெரியும். தெரிந்தபோதும் அத்தனை புலன்களையும் அடக்கிக் கொண்டேயிருந்தது இந்த உலகம். இதற்குக் காரணம், எல்லோருக்கும் அவரவர் நலன்கள் முக்கியமாக இருந்தன என்பதேயாகும்.

ஆகவே நீதியும் நியாயமும் மனிதாபிமானமும் மனச்சாட்சியும் மனித உரிமை மீறல்களும் கருணையும் பெரிதாகப்படவில்லை.

அநீதியைப் பற்றி யாரும் அதிகமாகக் கவலைப்படவில்லை.

கொலையைப் பற்றியும் கொடுமைகளைப் பற்றியும் யாரும் அதிகம் உளப்பூர்வமாக வருந்தவில்லை.

அப்படியொரு வருத்தம் உளப்பூர்வமாக இருந்திருக்குமானால், இப்போது போர்க்குற்றங்களைப் பற்றி யாரும் பேச வேண்டிவந்திருக்காது.

அல்லது, அத்தனை ஆயிரக்கணக்கான சனங்கள் பலியிடப்பட்டிருக்க மாட்டார்கள். பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்களின் உறவுகளை இழந்திருக்க மாட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்து தவிக்க வேண்டியிருந்திருக்காது.

3

மரண அபாயமும் உயிர் வலியும் பசியும் அச்சமும் நிச்சயமின்மையும் சூழ்ந்திருந்தபோதும் அந்த நாட்கள் வலியனவாக இருந்தன.

இறுதிப் போர் என்பது எல்லா நிர்ணயங்களையும் தகர்த்துச் சிதைத்தது. போராளிகள் ஒருபக்கம் இலங்கைப் படையினருடன் அந்தக்கணத்திலும் போரிட்டுக் கொண்டிருந்தனர்.

இறுதியாக ஒரு புலி வீரன் இருக்கும்வரை புலிகள் போரிட்டுக் கொண்டேயிருப்பர் என்று விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் சொல்வதை நிரூபிக்கும் விதமாக புலிகளின் தாக்குதல்கள் அமைந்திருந்தன.

முடிந்தவரை எதிரியை எதிர்ப்பது என்பதே அதன் நோக்கம். 1970 களின் முற்பகுதியில் இளம்பிராயத்தில் தலைவர் பிரபாகரன் கொண்டிருந்த இந்த எண்ணம் ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நிதர்சனமாக நடந்து கொண்டிருந்தது.

தோல்வி நிச்சயமாகி விட்டது. இனிமேல் படையினரை வெல்வது கடினம் என்று தெரிந்த பிறகும் தாக்குதல்கள் நிற்கவில்லை.

அதாவது 1974 இல் தூக்கப்பட்ட துப்பாக்கி அப்போதும் இயங்கிக் கொண்டேயிருந்தது.

ஏறக்குறைய அந்த நாட்கள் - இன்னும் சரியாகச் சொன்னால் அந்த நாள் - மே 18 - இறுதியாகப் புலிகளின் துப்பாக்கிகள் முழங்கும் நாட்களாக - நாளாக இருந்தது.

சனங்கள் முற்றாக நம்பிக்கை இழந்து – செயலிழந்து எதிர்த்தரப்பிடம் மண்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்த மாதிரியான ஒரு கட்டத்தை வாழ்வில் சந்திப்பதென்பது அத்தனை எளிதானதல்ல.

போராட்டத்தின் மிகப் பெரிய இடர்களையும் வலிகளையும் சந்தித்த அனுபவத்தையுடைய போராளிகளும் மக்களும் அன்று சந்தித்த நிலையும் மனச் சூழலும் வேறாக இருந்தது.

இந்த நெருக்கடி மாறக்கூடியதாக இல்லை. இது மீளக் கடினமான ஒரு விளிம்பில் நிற்கும் நிலை. அபாய நிலை.

அதுவரை செய்த தியாகங்கள் அத்தனையும் பெறுமதியற்றுப் போகும் ஒரு நீதியற்ற தருணம் அது.

பெற்ற வெற்றிகளும் செய்த வீரச் சாதனைகளும் உலர்ந்து சருகாகிப் போவதை அந்தக் கணத்தில் பலரும் உணர்ந்தனர்.

இது மாபெரும் துக்கத்தைத் தந்தது.

ஒரு பெரிய போராட்ட இயக்கத்தின் வீழ்ச்சியும் ஒரு புதிய வாழ்க்கை முறையின் முடிவும் மிகச் சாதாரணமாக முடிந்து விடுவதைப் போல இருந்தது அப்பொழுது.

ஆனால், இந்த நிலை ஏற்படுத்திய துக்கமும் வெறுமையும் ஆற்றாமையும் சாதாரணமானதேயல்ல.

வலி. மாபெரும் வலி.

கண்ணுக்கு முன்னே எல்லாம் சிதைந்து வழி மாறி, திசை மாறி ஒழுங்குகள் கெட்டு....

யாரும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லையென்ற நிலைமை உருவான கணங்கள் அவை.

எதிரியே மீட்பர் என்று வடிவம்மாறிய நிலை.

போரின் தோல்வி என்பது இத்தகைய நிலை மாற்றத்தை ஏற்படுத்தி விடுவதுண்டு.

ஆனால், இது நீதியின் அடிப்படையில் நடப்பதல்ல. அல்லது விருப்பங்களின் விதிப்படியும் நிகழ்வதில்லை.

எத்தனையோ இடர்களின் மத்தியிலும் விடுதலைத் தாகத்தோடு நடந்த இந்த மக்கள் அன்று – அந்தப் பொழுதில் நடைப் பிணங்களாகி – எதிரியிடம் மண்டியிட்டனர்.

அவர்களுடைய நிலத்திலேயே அவர்கள் அடிமைகளாகினர். இல்லையில்லை. அவர்கள் அடிமைகளாக்கப்பட்டனர்.

எதிரியிடம் சிக்கிய மக்கள் போராளிகளைப் பற்றிக் கவலை கொண்டமை என்பது மேலும் துயரம் நிரம்பியது.

போராளிகளிற் பலருக்கும் என்ன செய்வது? அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாத நிலை.

அவர்களிற் சிலர் மனம்போன போக்கில் இயங்கினார்கள்.

போரின் இறுதிக் கட்டத்துக்கேயுரிய மூர்க்கத்தில் படையினர்.

கையறு நிலையில் மக்களும் போராளிகளும்.

அது மூச்சுத் திணறும் நிலை.

அத்தனை ஆண்டுகால முயற்சிகளும் உழைப்பும் இறுதி மூச்சில் திணறிக்கொண்டிருந்தது.

என்றபோதும் தாக்குதல்கள் நடந்து கொண்டேயிருந்தன. எந்தத் திக்கில் மோதல் நடக்கிறது என்று சரியாகத் தெரியாத நிலை.

எட்டுத் திக்கிலும் மோதல்கள்.

அது இறுதிக் கணத்தின் கடைசி முயற்சி என்பதால் எல்லாத் திக்கிலும் உடைப்புகளை நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. போராளிகள் கடைசிச் சாத்தியங்களைத் தேடிக் கொண்டேயிருந்தனர்.

சாத்தியமற்ற நிலைமையிலும் சாத்தியங்களை உருவாக்கிய அனுபவங்களையுடைய விடுதலைப் புலிகளுக்கு –

விடுதலைப் பிரதேசத்தையும் தனியான நிர்வாக அலகையும் கொண்டிருந்த போராட்ட அமைப்புக்கு –

விடுதலையைச் சாத்தியமாக்கும் தருணங்களைக் கொண்டிருந்த ஒரு விடுதலை இயக்கத்துக்கு –

அது எல்லாச் சாத்தியங்களையும் இல்லாமற் செய்யும் ஒரு கொடுமையான தருணமாகியது.

ஆமாம். அது இறுதிக் கணந்தான்.

விடுதலையே மூச்சென வாழ்ந்தவர்கள் அனைவருக்குமான இறுதிக் கணம்.

நம்பிக்கையே வாழ்வெனக் கொண்டவர்கள் அனைவருக்குமான இறுதிக் கணம்.

மே என்பது உலக வரலாற்றில் தொழிலாளர் விடுதலைக்கான குறியீடாகக் கொள்ளப்பட்ட வரலாற்றை மாற்றி,

மே என்பது இனப்படுகொலைக்கும் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதற்கும் குறியீடாக மாறியது

உலக வரலாற்றில் மேலும் ஒரு கொடுமை – மேலும் ஒரு அநீதி – மேலும் ஒரு நியாயமறுப்பு அரங்கேறியது.

சனங்கள் முற்றாகவே அன்று தோற்கடிக்கப்பட்டார்கள்.

4

அதற்குப் பிறகு - இன்று எல்லாமே மாறிவிட்டன.

அன்றைக்கு லட்சம் மனிதர்கள் அலைந்த இடத்தில் இப்போது மயான அமைதி.

அன்றைக்குப் போராளிகளாகப் புலிகள் நின்ற இடத்தில் இப்பொழுது படையினர்.

அன்று மக்கள் வாழ்ந்த இடங்களில் இப்போது புதைகுழிகளும் எலும்புக்கூடுகளும்.

ஆனால், என்னதான் மாறினாலும் அங்கே அன்று சிந்திய இரத்தமும் கண்ணீரும் இன்னும் வற்றவில்லை.

ஓவியம்: ஓவியர் புகழேந்தி

- பொங்குதமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் இங்கு தமிழர்களை வெல்லப்படவில்லை. அவர்கள் போர் தர்மங்களை மீறி அழிக்கப்பட்டார்கள் என்பது தான் உண்மை ஆயுதம் இன்றி களத்தில் நின்ற துரியோதனன் படையை அன் பாண்டவர்கள் இன்றுபோய் நாளை வாருங்கள் என்று அனுப்பியது தான் டீபார் போர்மம் போர் தர்மம். உலகம் தன் பலம் அனைத்தையும் பிரயோகித்து தமிழர் பிணங்களின் மேல் ஏறிநின்றது போரல்ல. அதர்மம். தர்மத்தைச் சூது வெல்லும் தர்மம் மறுபடியும் வெல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் அழித்தல். எந்தச் சுவடும் மிஞ்சிவிடாமல் அழிக்கும் நடவடிக்கை. போர்க் காலத்தில் நடந்த குற்றங்களை ஆதாரப்படுத்தக்கூடிய எந்தச் சுவடும் அங்கே மிஞ்சிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையின் விளைவான நடவடிக்கை

இது தான் நடந்த உண்மை! இது யாரால் நடத்தப் பட்டது என்பது நாங்கள் நன்கறிந்த உண்மை.

இதை உலகத்துக்குத் தெரியப் படுத்துவதே நம் மீதுள்ள பணி!!!

இதைச் சரியாகச் செய்தோமானால், மிகுதி தன் பாட்டில் நடைபெறும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.