Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காட்டிக் கொடுத்த கருணாவைக் காட்டிக் கொடுத்த சிங்கள இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, June 5, 2011, 16:06கட்டுரைகள்

‘முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்’ என்பார்கள். ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை இது பொய்த்த பழமொழியாகிவிட்டது. வன்னிப் படுகொலைகள் தொடர்பில் உள்ளுரிலாவது சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற வேண்டுமென்ற குறைந்தபட்சக் கோரிக்கை உள்ளுரிலும் சர்வதேசத்திலும் அன்று முன்வைக்கப்பட்படிருந்த போது அனைத்தினையும் புறந்தள்ளி சர்வதேச ஜனநாயகம் பேசிய சிறிலங்கா அரசு இன்று சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது.

யுத்தக் குற்றம் தொடர்பாக ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அன்று சிறிலங்கா அரசு ஏற்று நடந்திருந்தால் பிரச்சினைகள் இன்று இவ்வளவு பெரிதாக விஸ்பரூபம் எடுத்திருக்காமலும் இருந்திருக்கலாம். இந்த விடயத்தில் தங்களது முன்கையை நீட்டாததன் காரணமாகவே இன்று சர்வதேசம் முழங்கையை நீட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஐ.நா சபையின் மனித உரிமைப் பேரவையிலும் ஐரோப்பியப் பாராளுமன்றத்திலும் சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அடுக்கடுக்காகக் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா அரசு இப்போது இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருந்தது. ஓக்ஸிஜன் கொடுத்துச் சில நாடுகள் சிறிலங்கா அரசைக் காப்பாற்ற முயற்சித்தாலும் அது வேலை செய்யவில்லை. வன்னிப் படுகொலைகள் தொடர்பில் விசாரணை வேண்டுமெனத் தெரிவித்த எந்த நாடும் தனது கோரிக்கையில் இருந்து விலகிச் செல்லவில்லை. சர்வதேச விசாரணையின் அவசியத்தை அவை மீண்டும் மீண்டும் இடித்துரைக்கின்றன.

வன்னி யுத்தக் குற்றத்துக்குத் துணை போன சில நாடுகளும் சிறிலங்காவில் தமது காரியங்களைச் சாதிக்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த ஓரிரு நாடுகளும் சிறிலங்காவுக்கு வக்காளத்து வாங்கியும் அவற்றின் குரல்கள் பலவீனமடைந்தே காணப்பட்டன. இதன் மூலம் சிறிலங்கா அரசு பாரிய ஏமாற்றத்துக்குள்ளாகி நிலை குனிந்து தடுமாறுகிறது.

யுத்த விசாரணை கோரிக்கையில் விடாப்பிடியான நிலை

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என அந்த நாடு அறிவித்து விட்டது. மனித உரிமைகள் மீறப்பட்டதற்கான ஆதாரங்களையும் அந்த அறிக்கை கொண்டிருப்பதால் ராஜபக்ச அரசு இந்த விடயத்தில் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் வலியுறுத்தியுள்ளார்.மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தெளிவாக தெரிந்த நிலையில், அது குறித்து வெளிப்படையான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதும் அவரது வாதம்.

இதே கருத்தினையே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் அதற்கு வெளியிலும் பல நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன. சிறிலங்கா அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட நியாயங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு அதன் குரல்வளையே நசுக்கப்பட்டன.

‘இலங்கையின் கொலைக்களங்கள்’ சிறிலங்காவுக்கு இன்னொரு அதிர்ச்சி

இதேவேளை, இடிக்கு மேல் இடியாக சிறிலங்கா அரசுக்கு மேலும் பல சோதனைகளைக் கொண்ட காலமாக இது அமைந்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புதிய சர்ச்சைக்குரிய திரைப்படம் ஒன்றும் ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் திரையிடப்பட்டது.

‘இலங்கையின் கொலைக்களங்கள’; என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் அரச படைகள் தமிழ்க் கைதிகளை சுட்டுக் கொல்லும் அதிர்ச்சியூட்டும் ஈவிரக்கமற்ற வீடியோ காட்சிகள் இடம்பெற்றிருந்தன எனத் தெரிவிக்கப்படுகிறது. மானுட குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமிக்க குற்றங்களுக்கு ஆதாரமாக இருப்பதாக இந்தப் படத்தை தயாரித்தவர்களும் பார்த்தவர்களும் மனித உரிமை அமைப்புகளும் கூறியுள்ளதுடன் இந்தக் குற்றச்சாட்டுகளை ஐ.நா மன்றம் விசாரிக்க வேண்டும் என்று அவை குரல் எழுப்புகின்றன.

முழுப் பூசனிக்காயையே சோற்றுக்குள் புதைக்க சிறிலங்கா எடுத்த முயற்சி இதன் மூலம் படுதோல்வியடைந்து கண் பிதுங்கி நிற்கிறது.

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் அதிரடித் தீர்மானங்கள்

இது ஒரு புறமிருக்க, ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சிறிலங்கா அரசின் யுத்தக் குற்றங்கள் குழிதோன்றி எடுக்கப்பட்டன. அவை அங்கும் நாற்றம் அடிக்கத் தவறவில்லை. அதில் கலந்து கொண்ட பல்நாட்டுப் பிரதிநிதிகளும் இலங்கைமீது சுட்டு விரலை நீட்டினர். இறுதியில் சில தீர்மானங்களையும் ஐரோப்பிய யூனியன் நிறைவேற்றத் தவறவில்லை.

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தின் ஐக்கிய இடது ஃநோடிக் கிறீன் இடது தரப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வரலாற்றுச் சான்றுக்காக இங்கே பதியப்படுகிறது.

1. இலங்கையிலுள்ள சகல சிறுபான்மையினரதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

2. வடக்கு-கிழக்கில் இராணுவம் நிலைகொண்டிருக்கும் தளங்களை அரசாங்கம் மூடிவிட வேண்டும்.

3. தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.;

4. தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும்.

5. ஆயுதங்கள்,இராணுவத் தளபாடங்களை விற்பனை செய்தல், இலங்கைப் படையினருக்குப் பயிற்சியளித்தல்,வர்த்தக நிதி ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்குதல் என்பவற்றுக்கு எதிராகவும் இங்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

.

அரசுக்குக் கசப்பாக அமைந்துவிட்ட ‘போர் அனுபவ மகாநாடு’

இது இவ்வாறிருக்க,சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக இங்கு இடம்பெற்ற ‘போர் அனுபவ மகாநாடு’ கூட அரசு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை என்றே கூற வேண்டும். இவ்வாறொனதொரு மகாநாடு இன்றைய சூழலில் பொருத்தமானதல்ல என்று பெரும்பாலான அரசு தரப்பு அமைச்சர்களின் ஆலோசனைகளும் நிராகரிக்கப்பட்ட நிலையே இந்த மகாநாடு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை அமர்வு மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக் கூட்டம் ஆகியவற்றில் சிறிலங்கா விடயங்கள் தொடர்பில் கழுகுப் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த சர்வதேசத்ததுக்கு சிறிலங்கா அரசின் போர் அனுபவ மகாநாடு இமயமலையில் ஏறும் எறும்பாகவே காணப்பட்டது.

.

வன்னி இறுதி யுத்தம் தொடர்பில் சிறிலங்கா இராணுவத் தரப்பினரிடம் சரமாரியாக இங்கு தொடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத பலர் தொடை நடுங்கிகளாக திணறிக் கொண்டிருந்தனர்.

இமெல்டாவின் காவல் தெய்வங்களான சிறிலங்கா படை

யாழ். மாவட்ட அரசாங்க அதிபரான இமெல்டா சுகுமார் என்ற தமிழிச்சி ஆற்றிய உரை, தெரிவித்திருந்த கருத்துகள் சிங்கள அரசு சொல்லிக் கொடுத்தனையும் விட மிக அற்புதமாக இருந்ததாக சிங்கள தரப்பினால் மெச்சப்பட்டது.

எதிர்கால தமிழ்ச் சமூகம் இவ்வாறான இனத் துரோகிகளை இனங்கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வரலாற்று ஆவணமாக அது பதியப்பட வேண்டும் என்பதற்காக அவர் ஆற்றிய உரையின் சில பகுதிகளை இங்கு பதிவு செய்வது அவசியமாகிறது.

“உண்மையை உலகிற்கு கூறி வருவதால் யுத்தம் நடைபெற்ற காலத்திலிருந்து இன்று வரை பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறேன்.

உண்மைகளை உள்ளபடி உலகுக்கு எடுத்துக் கூறுவதால் பல பிரச்சினைகளுக்கு நான் முகம் கொடுக்கிறேன். இப்பொழுதும் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலின் மத்தியிலேயே நான் வாழ்கிறேன். இருந்த போதிலும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பின் மத்தியில் மக்கள் சேவை செய்யக் கிடைத்திருக்கின்றமையால் மகிழ்ச்சியடைகிறேன்.

2002ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை முல்லைத்தீவு அரச அதிபராக நான் கடமையாற்றியிருக்கிறேன். இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் நான் அங்குதான் கடமையாற்றினேன். புலிகளின் பிடிக்குள் மக்கள் சிக்கித் தவித்த காலத்திலும் மக்களின் நலனில் அரசு கவனம் செலுத்தி வந்தது. குறிப்பாக எங்களுக்கு உயர்மட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. குறைந்தது மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டோம். அதுமட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கு தேவையாக மருந்துப் பொருட்களையும் சேமித்து வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தோம். யுத்தம் நடைபெற்ற காலத்திலும் மக்களின் நலனில் அரச அதிகாரிகளும் படைகளும் அக்கறை செலுத்தினார்கள் என்பதற்று இது நல்லதொரு எடுத்துக்காட்டு.

இறுதி யுத்த காலகட்டத்தில் மக்களை வெளியேற்றுமாறு படையதிகாரிகள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் என்னால் அதனை செய்யமுடியவில்லை. காரணம் விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக பிடித்து வைத்திருந்தமையே. வெளியேற துடித்த அப்பாவி பொதுமக்களை விடுதலைப் புலிகள் வெளியேறாமல் தடுத்தனர்.

.

மக்களின் பயன்பாட்டுக்காக மனிதாபிமான அடிப்படையில் இராணுவத்தினரால் வழங்கப்பட்ட சீமெந்துகளையும் ஜெனரேற்றர்களையும் புலிகளே அதிகளவில் பயன்படுத்தினர். பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சீமெந்து பக்கெட்டுகளில் தங்களின் பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகளை புலிகள் அமைத்தனர். அதேபோல் ஜெனரேற்றர்களையும் அவர்களே பயன்படுத்தினார்கள்.

இருந்த போதிலும் அமைதியாக இருந்து மக்கள் சேவையினை நாங்கள் செய்துவந்தோம். இதற்காக படையினருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இராணுவத்தினர் மிகவும் மனிதாபிமானத்துடனும் ஒழுக்கமாகவும் நடந்துகொண்டனர். இதனால் தான் மக்கள் சேவையினை எங்களால் தொடர்ந்து செய்ய முடிந்தது. நான் முல்லைத்தீவில் அரச அதிபராக கடமையாற்றிய எட்டு வருடங்களில் 7ää000 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுத்திருக்கிறேன்.

.

22,000 குடும்பங்கள் வாழ்ந்த பிரதேசத்தில் குறிப்பிட்ட காலத்தில் 7,000 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுத்தமை அரசாங்கத்தின் நல்லெண்ணத்துக்கு தக்க சான்றாக அமையும். அதுமட்டுமல்லாமல் பெருமளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் பாரியளவில் நிதியுதவி செய்திருந்தது. அந்த நிதியுதவியினைக் கொண்டு ஏராளமான அபிவிருத்தி நடவடிக்கைளை முன்னெடுத்தோம். இந்த அபிவிருத்திகள் தொடர்பாக மாதாந்த அறிக்கைகளை நான் அரசுக்கு வழங்கிவந்தேன்.

புலிகளின் மறைந்த தலைவர்களில் ஒருவரான தமிழ்ச்செல்வன் என்னை பலமுறை பயமுறுத்தியிருக்கிறார். எக்காரணம் கொண்டும் அபிவிருத்தி பற்றிய அறிக்கைகளை யாருக்கும் வழங்க வேண்டாம் என்று அவர் என்னை அச்சுறுத்தினார். அரசு செய்கின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளிக்கொணர்ந்தால் தங்களின் இயக்கத்துக்கு அவப்பெயர் வரும் என அவர்கள் அஞ்சினார்கள்.

அன்றும் எனது சேவையினை சரிவர செய்யவிடாமல் அச்சுறுத்தினார்கள். இன்றும் என்னை அச்சுறுத்துகிறார்கள். ஆனால் படையினரின் உதவியுடன் இன்றும் என்னால் மக்கள் சேவையினை செய்யக்கூடியதாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் மக்கள் சேவகர்கள். ஆகையினால் எங்களால் முடிந்தளவு மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறோம்.

இப்பொழுதும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறோம். கல்வி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தி வருகிறோம். இப்பொழுது சுமுகமான நிலை காணப்படுவதற்கு உதவிய படையினருக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று அவர் உரையாற்றியிருந்தார்.

காட்டிக் கொடுத்த கருணாவைக் காட்டிக் கொடுத்த சிங்கள இராணுவம்

இது தவிர மீள்குடியேற்றப் பிரதியமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சிறிலங்கா அரசின் யுத்த வெற்றிக்கு எவ்வாறு பங்களித்தார் என்பதனையும் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவரே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தனர். அதாவது விநாயகமூர்த்தி முரளிதரன் தனது இனத்தையும் தன் இனமக்களுக்கான விடுதலைப் போராட்டத்தையும் எப்படிக் காட்டிக் கொடுத்தார் என்ற விளக்கத்தையே அந்த அதிகாரி கொடுத்திருந்தார்.

ஆனால் எவை எப்படி இருந்தும் இந்தப் போர் அனுபவ மகாநாடு சிறிலங்கா அரசுக்கு கசப்பான அனுபவங்களைக் கொண்ட மகாநாடாகவே இருந்தது.

சிறிலங்கா அரசின் காலம் கடந்த ஞானம்

இது இவ்வாறிருக்க இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினர் போர்க் குற்றங்களை இழைத்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயகசூரிய அதிரடியாகத் அறிவித்துள்ளார்.

.

ஒரு சில குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை முன்னெடுக்க இராணுவம் என்றைக்கும் தயாராகவே உள்ளது. எதையும் நாம் மூடி மறைக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இவையெல்லாம் சிறிலங்கா அரசின் காலம் கடந்த ஞானமா அல்லது பதட்டத்தில் எதைப்பேசுவது என தெரியாது என உளறினாரா என்று பார்க்க வேண்டும்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அமைக்கப்படுவதற்கு முன்னரே இவ்வாறானதொரு கருத்தை விருப்பத்தை அரசு தரப்புத் தெரிவித்திருந்தால் அது சில வேளைகளில் அரசுக்குச் சாதகமாக அமைந்திருக்கலாம். ஆனால் இன்று தலைக்கு மேல் வெள்ளம் போன நிலையில் சிறிலங்கா அரசினதோ அல்லது படை தரப்பினரினதோ விசாரணைக் குழுக்களை நிச்சயமாக சர்வதேசம் ஏற்றுக் கொள்ளமாட்டாது.

காலத்தை நீடித்து காலத்தைக் கடத்தும் ஆணைக்குழு

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக் குழு ஒன்றினை அமைத்துக் காலத்தைக் கடத்தி பம்மாத்துக் காட்டிக் கொண்டிருப்பது பரகசியமான விடயமே. விசாரணை, சாட்சியப் பதிவு என்று கூறிக் காலத்தை நீடித்துக் காலத்தையே கடத்தி வருவதனையும் எவரும் எளிதில் புரிந்து கொள்வர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது போன்றே இப்போது சிறிலங்கா இராணுவத் தளபதி கூறும் விசாரணைகளும் நிச்சயம் அமையும். அனைத்தும் சமகால சமாளிப்பே.

ஆக மொத்தத்தில் வன்னி யுத்தத்தை வெற்றி கொண்டவுடன் உள்ளுரில் தங்களை ராஜாக்களாகவும் சர்வதேசத்தில் தங்களைச் சண்டியர்களாகவும் காட்டிக் கொண்ட அரசு இன்று விழி பிதுங்கி வழி தெரியாது நிற்கிறது.

ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டதன் இரண்டாவது யுத்த வெற்றிக் கொணடாட்டத்துக்கு அரசு எப்போது தயாரானதோ அப்போதிருந்தே சிறிலங்கா அரசுக்கு அட்டமத்துச்; சனியன் பிடித்து விட்டது என்பது மட்டும் உண்மை. இதனை எந்த வேப்பிலைப் பேய்களாலும் ஓட்டி விட முடியாது. கட்டுநாயக்கவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அதன் எதிரொலிகளையும் நாம் இதற்குள் உள்ளடக்கலாம். உப்புத் தின்றவன் நிச்சயம் தண்ணி குடித்தே தீரவேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற்றே ஆக வேண்டும்.

கொழும்பிலிருந்த சித்தன்….

www.eelanatham.net

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.