Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிநிலம்: போராடும் ஈழத்துச் சனங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன் - 9 JUNE, 2011

ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் ஈழத்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமையும் அரசின் ஆக்கிரமிப்பு நிலையும் சேர்த்து ஈழத்து மக்களை நிலமற்ற வாழ்வுக்குள் தள்ளியிருக்கிறது. கொடும் போரால் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசு ஈழத்து மக்களின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் தன் ஆக்கிரமிப்புக் கனவைத் திணித்துவருகிறது. இத்தனை அழிவுகளின் பிறகும் தம் வாழ் நிலத்திற்காகப் போராட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஈழத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. போர் முடிந்த பின்னர் மிகவும் கவர்ச்சிகரமானதாக முன்வைக்கப்பட்ட மீள்குடியேற்றம் என்னும் வார்த்தையில்தான் இந்த நிலப் பிரச்சினை அடங்கியிருக்கிறது. எல்லாத் துயரங்களின் பிறகும் தலைமுறைகளுக்காகவும் சந்ததிகளுக்காகவும் வாழ வேண்டும் என்னும் தவிர்க்க இயலாத கனவுடன் திரும்பும் மக்களை நில ஆக்கிரமிப்புக் கடுமையாக அச்சுறுத்துகிறது. ஆக்கிரமிக்கப்படுவதற்கான பெருங்குறிக்கு உள்ளான ஈழத்து மக்களின் நிலத்தில் பல வகையில் அபாயங்கள் பெருகியிருக்கின்றன.

கிளிநொச்சியில் உள்ள சாந்தபுரம் என்னும் கிராமத்தை அந்த மக்களிடம் கையளிக்கப் படைகள் மறுத்துவந்தன. தடுப்பு முகாமிலிருந்த மக்கள் கிளிநொச்சியில் உள்ள மத்தியக் கல்லூரி என்னும் பாட சாலைக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அந்தப் பாடசாலையில் சுமார் மூன்று மாதங்களுக்கு மேல் தங்கவைக்கப்பட்ட பிறகும் அவர்கள் தம் சொந்தக் கிராமத்திற்குச் செல்லவிடாமல் தடுத்துவைக்கப்பட்டார்கள். தங்கள் நிலத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள். அவர்களின் நிலங்கள்மீது இராணுவப் பாது காப்பிடப்பட்டிருந்தது. பாடசாலையிலிருந்து எங்கு வேண்டுமானாலும் வெளியேறிச் செல்லலாம். ஆனால் காணிகளுக்குள் பிரவேசிக்க முடியாது என இராணுவம் கண்டிப்பாக அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

நிலம் மறுக்கப்பட்டால் தீக் குளிப்போம் என்றார்கள் சாந்தபுரம் மக்கள். காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலங்கள் தங்களுக்கு வேண்டும் எனவும் கூடார வாழ்க்கையை எதுவரை வாழ்வது எனவும் கேள்வி எழுப்பினார்கள். நான்காம் ஈழப் போரில் தமிழர்கள் தோற்றுவிட்டார்கள். முள்வேலி வாழ்க்கை அவர்களை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாதவர்களாய் மாற்றியிருக்கிறது, அவர்கள் சோர்ந்திருக்கிறார்கள் என்னும் கருத்தைச் சாந்தபுரம் மக்களே முதன்முதலில் முறியடித்தவர்கள். எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்னும் வார்த்தைகள் தெளிவாகவும் வலிமையானதாகவும் அவர்களிடமிருந்து வந்தன. தம் நிலத்திற்காக அவர்கள் அஞ்சாமல் தொடர்ந்து குரலெழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

அவலமும் ஏமாற்றங்களும் வீழ்ச்சியும் நிறைந்த ஈழ மண்ணில் சாந்தபுரம் மக்களிடமிருந்து நிலத்திற்காக எழுந்த குரல்கள் நம்பிக்கையை அளித்தன. நிலத்தின் மீதான உரிமை குறித்த விழிப்பை இது ஈழ மக்களுக்கு ஏற்படுத்தியது. இறுதியில் சாந்தபுரம் மக்களின் அரையாண்டுப் போராட்டம் முடிவுக்கு வந்தது. மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிக்க முடியாமல் அவர்களின் காணிநிலங்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

நிலமற்ற குழந்தைகள் நிறைந்த பொன்னகர் கிராமத்தின் நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டன. சாந்தபுரத்தைத் தொடர்ந்து சில நாட்களில் இந்தக் கிராமத்தின் நிலப் பிரச்சினையும் வெளிச்சத்துக்கு வந்தது. போராளிகளால் உருவாக்கப்பட்ட கிராமம் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் காலம் காலமாகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவல வாழ்வை நில ஆக்கிரமிப்பாளர்கள் மோசமாக்குகிறார்கள். எங்கள் பிள்ளைகள் வாழ நிலத்திற்கு எங்கே செல்வோம் என்னும் வலிமையான குரல்கள் பொன்னகர் மக்களிடமிருந்து எழத் தொடங்கின. நிலமில்லாத எதிர்கால வாழ்வு குறித்த அச்சத்தைக் குழந்தைகள் பிரதிபலித்தார்கள். பெற்றோர்களின் முன்பாக நிலமில்லாத துயரத்தை வெளிப்படுத்தி நிலத்தைக் கோரும் குழந்தைகளாக அவர்கள் முன் நகர்ந்தார்கள்.

மக்கள் காணிகளுக்குள் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்டார்கள். காணிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. காவலாளிகளும் கடமையில் அமர்த்தப்பட்டார்கள். பொன்னகர் மக்கள் விரக்தியின் எல்லைக்குச் சென்றார்கள். வாழ முடியாத தறப்பாள் கூடாரங்கள் அவர்களை எழுச்சிகொள்ள வைத்தன. நிலம் மறுக்கப்படும் அபாயம் அவர்களைத் தங்கள் பூர்வீக நிலங்களுக்குள் நுழையத் தூண்டியது. எதிர்பாராத நாள் ஒன்றில் பொன்னகர் மக்கள் தங்கள் காணிநிலங்களுக்குள் புகுந்தார்கள். தறப்பாள்களைக் கூரையில்லாத கட்டடங்களில் போர்த்திக்கொண்டிருந்தபோது படையினர் கடும் எச்சரிக்கைகளுடன் மக்களை வெளியே இழுத்துவந்தார்கள். அவர்களை அச்சுறுத்திய படையினர் இந்தக் காணிநிலம் உங்களுக்குக் கிடைக்காது என உறுதியாக அவர்களுக்குச் சொன்னார்கள். இதற்கு மேல் என்ன செய்வது என்பதை அறியாமல் கலங்கி நின்ற பொன்னகர் மக்கள் வெறும் கைகளுடன் வெளியேற்றப்பட்டார்கள். சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதைவிட வேறு என்ன துயரம் அவர்களுக்கு இருக்க முடியும்?

மழையாலும் வெயிலாலும் அல்லல்படும் இரத்தினபுரம் மக்களின் கதையும் மிக அவலமானது. கிளிநொச்சியின் ஆதிக்கிராமங்களில் இரத்தினபுரமும் ஒன்று. ஆறுகளாலும் மரங்களாலும் சூழப்பட்ட குளிர்ச்சியான கிராமமான இரத்தினபுரத்தில் அறுபதாண்டுகளுக்கு மேலாக அந்த மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களிடமிருந்து அவர்களின் பூர்வீகக் காணிநிலங்களைப் பறிக்கும் நடவடிக்கையும் நன்கு திட்டமிடப்பட்டுத் தொடங்கப்பட்டது. இந்த மக்கள் தம் நிலம் தமக்கு வேண்டும் என்றும் காலம் காலமாகத் தாங்கள் வாழ்ந்துவந்த நிலத்திலேயே தொடர்ந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்தனர். அதனால் இந்த மக்களுக்கு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மறுக்கப்பட்டன. வீடு அமைத்துத் தராவிட்டாலும் நிலத்தைவிட்டுப் பெயர்ந்து செல்ல மாட்டோம் என அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். நிலம் தேவை என்றால் வீடில்லை என அதிகாரிகள் பேரம் பேசினார்கள்.

ஒரு வீடு என்பது எப்படி இருக்கும் என்பதை அறியாதவர்களாகவும் இதுதான் வீடு எனவும் இது தான் வாழ்வு எனவும் இதுதான் விதி எனவும் இரத்தினபுரம் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். யுத்தத்திற்குப் பல தடவைகள் முகம் கொடுத்துப் பலமுறை இடம் பெயர்ந்த கிளிநொச்சி நகரத்திற்கு மிக அருகில் நகரத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கிற ஒரு கிராமத்தில் இந்த அநீதி நடந்துகொண்டிருக்கிறது என்றால் மீள்குடியேற்றம் என்னும் மாயைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்?

தமது காணிநிலங்கள் அபகரிக்கப்படும் அபாயத்தை உணர்ந்த முறிகண்டி மக்கள் அவற்றைப் பெற்றுத்தருமாறு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் வந்திருந்தபோதும் அவரிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. முறிகண்டிப் பகுதி மக்கள் தடுப்பு முகாம்களில் அவல வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில் அவர்களின் காணிநிலங்களைச் சிங்களக் குடியேற்றங்களுக்காக அரசு பாவிக்கும் அபாயம் உருவாகியிருக்கிறது. முறிகண்டியை அண்டிய பகுதிகளில் ஏ-9 பாதையிலிருந்து காட்டுப்பாதை நோக்கிப் பெரும் வழிகளை உருவாக்கி அவற்றைச் செப்பனிடும் பணியில் அரசப் படைகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் மக்களை மேலும் அச்சத்திற்குள் தள்ளியிருக்கிறது. முறிகண்டி முதல் கொக்காவில், மாங்குளம்வரை நில அபகரிப்பு அபாயங்கள் இருப்பது மக்களை அச்சுறுத்துகின்றன.

ஈழ நிலத்தின் அடையாளங்களைச் சிதைக்க அரச மரங்கள் இருந்த இடங்களிலெல்லாம் புத்தர் சிலைகள் அரசப்படைகளால் நடப்படுகின்றன. கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும் பெரும்பெரும் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஈழத்தின் நகரங்களை பௌத்த நகரங்களாக, சிங்கள நகரங்களாக மாற்ற அவை முயல்கின்றன. படையினர் அரச மரங்களைத் தண்­ர் ஊற்றி வளர்க்கின்றனர். வன்னியில் மட்டுமன்றி வடக்குக் கிழக்கு முழுவதும் இப்படிப் புத்தர் சிலைகள் நடப்பட்டுள்ளன. தமிழ் ஈழ நிலம் என்ற பிரக்ஞையைச் சிதைக்க வன்னி முழுவதிலும் இது நடந்திருக்கிறது. புத்தர் சிலைகளும் சிங்கள எழுத்துக்களும் ஈழத்து மக்களின் வாழ் நிலத்தைக் கொள்ளையடிக்கும் நீண்டகாலத் திட்டத்தைக்கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி நகரத்தில் உள்ள முக்கியச் சந்தியான டிப்போ சந்தியில் சிங்களப் பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பழங்காலத் தோற்றம் கொண்ட கற்களைக் கொண்டுவந்து சிறிய மதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. அவை மிக நீண்ட காலமாகக் கிளிநொச்சியில் இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளிலிருந்து வரும் பிரயாணிகளிடம் அவை சிங்கள மன்னர்களால் எழுப்பப்பட்ட பழங்காலச் சுவர்கள் என்று இராணுவம் சொல்கிறது.

புத்தர் சிலைகளுடனும் சிங்கள எழுத்துக்களுடனும் தமிழர் நிலத்தைக் குறிவைக்கும் மற்றொரு அபாயமாக இராணுவ நினைவுத் தூபிகளும் சேர்ந்திருக்கின்றன. கிளிநொச்சி நகரத்திலும் ஆனையிறவிலும் புதுமாத்தளனிலும் இப்படிப்பட்ட இராணுவ நினைவுத் தூபிகளை அரசின் கட்டளைக்கு இணங்க இராணுவத்தினர் அமைத்துள்ளனர். கிளிநொச்சியில் தமிழீழக் கனவு தகரும் தூபியும் ஆனையிறவில் நிலத்திலிருந்து கைகளை நீட்டி இலங்கையை ஏந்தும் படைகளும் அதே இடத்தில் போராளிகளின் போர்த்தாங்கியில் சிங்களப் படையினனின் கதையும் புதுமாத்தளனில் மிகப் பெரிய இராணுவத்தினன் பெருந்துப்பாக்கியை ஏந்தும் உருவமும் நடப்பட்டுள்ளது. சதா காலத்திற்கும் தமிழர்களின் நிலம் சிங்கள இராணுவத்தால் வீழ்த்தப்பட்டதையும் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதையும் சிங்கள இராணுவ வெறியுடன் சொல்வதற்காக இந்த நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதைப் போலவே கிளிநொச்சியில் கிளிநொச்சியின் வீழ்ச்சியை அடையாளப்படுத்திப் பாதுகாக்க வீழ்த்தப்பட்ட தண்ணீ­ர் தாங்கியைத் தொல் சின்னமாக அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே அமைத்துள்ளார்.

முல்லைத்தீவில் போர் மிகத் தீவிரமாக நடந்த இடங்களான புதுக்குடியிருப்பு முதல் முள்ளிவாய்க்கால் வரை எந்தப் பகுதிக்கும் மக்கள் இன்னும் மீள்குடியமர அனுமதிக்கப்படவில்லை. போர் நடந்த இடங்கள் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கந்தலாய்ப் பகுதி முழுமையாகச் சிங்கள பூமியாக்கப்பட்டுள்ளது. முன்பு தமிழர்கள் தனித்து வாழ்ந்த அந்தப் பிரதேசம் வன்முறை மூலம் அவர்களைத் துரத்தி அகற்றிவிட்டு இன்று தனிச் சிங்கள பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. திருமங்கலாய் என்னும் கிராமத்தை 'ஸ்ரீமங்களபுர' எனவும் முதலிக்குளம் என்னும் கிராமம் 'மொரவெள' எனவும் குமரேசன் கடவை என்னும் பிரதேசம் 'கோமரன்கடவல' எனவும் சிங்களப் பெயர்களுடன் சிங்களக் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. சேருவில, பதவிசிறிபுர போன்ற சிங்களக் கிராமங்களும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. 1920முதல் திருமலையில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இலங்கையை ஆளும் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் ஒவ்வொருவரும் திருமலை என்னும் தமிழர் தலை நிலத்தில் திட்டமிட்ட வகையில் சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவித்து வந்திருக்கிறார்கள்.

திருகோணமலையின் சம்பூர் மக்களது நிலை மிகவும் துயரமானது. நிலக்கரி அனல்மின் நிலையம் அமைப்பதற்காக அந்த மக்கள் காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக நிலத்திலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார்கள். இப்போது மூதூரில் பட்டித்திடல், கிளிவெட்டி, தில்லங்கேணி, மணற் சேனை முதலிய இடங்களில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறிய காணி ஒன்றுக்குள் தகரங்களால் சுற்றிக்கட்டப்பட்ட அறைகளுக்குள் அவர்களின் வாழ்க்கை நடக்கிறது.

பாடசாலைகளும் அலுவலகங்களும் இடம்பெயர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த மக்களின் வாழ்நிலமான சம்பூரை இராணுவப் பாதுகாப்பு வலயமாக அரசு அறிவித்துவிட்டு அரசுக்காகவும் இராணுவத்திற்காகவும் மக்கள் காணிகளைத் தியாகம் செய்ய வேண்டும் என்கிறது.

யாழ்ப்பாணத்தில் இத்தாவில் முதல் பலாலி, கீரிமலைவரை பல இடங்களில் மக்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இத்தாவில், முகமாலை, நாகர்கோவில், மிருசுவில், பலாலி, அரியாலையின் சில பகுதிகள், வலிகாமம் வடக்கில் மாவிட்டபுரம், மயிலிட்டி, கட்டுவன், தெல்லிப்பழை போன்ற பல இடங்கள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் புகையிரத வழித்தடங்களிலும் உறவினர் வீடுகளிலும் அகதிகளாக வாழ்கிறார்கள். இருபத்தொரு வருடங்கள் இந்த மக்கள் அகதிகளாக அலைந்துகொண்டிருக்க அவர்களின் பூர்வீக நிலங்களில் இராணுவ முகாம்களை அமைத்து அதற்கான பாதுகாப்புகளைப் படைகள் பலப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் புகையிரத வழித்தடங்களில் கூடாரங்களை அமைத்து வாழ்கிறார்கள்.

தெருக்களில் உள்ள கட்டுக்களில் விளையாடும் குழந்தைகளும் உறங்கும் முதியவர்களுமாக அவலக் காட்சிகளால் நிரம்பியதாக இருக்கிறது அவர்களது வாழ்க்கை. நிலமற்று ஈழ மக்கள் தவித்துக்கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் எங்களுக்குக் காணிகள் உண்டு எனச் சொல்லிக்கொண்டு சிங்கள மக்கள் வந்திருக்கிறார்கள். நிலமற்ற தமிழ் மக்கள் வாழ்ந்த அதே புகையிரத வழியில் வந்திறங்கினார்கள். நன்கு திட்டமிட்ட வகையில் யாழ் நிலத்தில் குடியேற அவர்கள் வந்திருந்தமை ஈழத்து மக்களை மேலும் அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் உள்ளாக்கியது. சமகாலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அந்தச் சம்பவம் எதிர்காலம் பற்றிய அச்சத்தை அதிகரித்திருக்கிறது.

ஒரு போராட்டத்தின் அடிப்படையில் நிலம் முக்கியமானது. ஈழத்தில் நிலத்திற்காகவே போராட்டம் நடக்கிறது. "எங்கள் நிலம் எமக்கு வேண்டும், எங்கள் நிலமே எமக்கு வேண்டும்" என்னும் ஈழத் தமிழர்களின் நிலப் பிரக்ஞையை இன்று இப்படிப் பல விதமான அபாயங்கள் சுற்றி வளைத்திருக்கின்றன. ஈழத்தின் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட இரண்டாண்டுக்குள் ஈழத் தமிழ் நிலம் எத்தனை அபாயங்களை எதிர்கொண்டுவிட்டது? இனத்திற்கு மொழியும் நிலமும் அவசியம். இலங்கை அரசு இனத்தை அழிக்க நிலத்தை ஆக்கிரமித்து மொழியைச் சிதைக்கப் பார்க்கிறது. ஒரு பிரக்ஞை உள்ள இனத்தின் வாழ்வு, ஒரு பூர்வீகமான இனத்தின் வாழ்வு, ஒரு வரலாறு கொண்ட இனத்தின் வாழ்வு, அதன் விளை நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்படும்போது மிகப் பெரிய வலியெடுகிறது. இரத்தமும் சதையும் சிதறுகிறது. இந்தச் சவால்களிலிருந்துதான் இன்று ஈழ மக்களால் ஈழப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ஈழத்தமிழர்களின் நிலத்தை இலங்கை அரசும் அதன் படைகளும் முக்கிய இலக்காகக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன. இனமும் மொழியும் நிலமும் அழிக்கப்படுகிறபோதுதான் போராட்டம் உருவாகிறது. நிலமற்ற வாழ்வு ஈழத்தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் போராடும் அவசியத்தை ஏற்படுத்துகிறது. வாழ்நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் கொள்ளையடிக்கும்பொழுது அதை எதிர்த்துப் போராடி வாழ வேண்டியது ஈழத்து மக்களின் இன்றைய நிர்ப்பந்தமாக இருக்கிறது. ஈழப்போராட்டம் என்பது இரண்டு இனங்களுக்கிடையிலான முரண்பாடு என்பதுடன் இரண்டு நிலங்களுக்கான முரண்பாடாகவும் நீடித்த நிலையில் இனத்தையும் மொழியையும் மீட்பதுடன் அதனிலும் முக்கியமாக நிலத்தையும் மீட்கும் போராட்டமாகவே நடைபெற்று வருகிறது.

நன்றி: காலச்சுவடு

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த போது மந்தகதியில் நடைபெற்ற குடியேற்றங்கள் இன்று அசுர கதியில் நடைபெறுகிறது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் வாதிகள் இடைக்கிடை குரல் கொடுத்த போதும் இனவாத மகிந்த அரசு தமது கொள்கையில் உறுதியாகவே உள்ளார்கள்.இன்னும் பத்து வருடத்துக்குள் தமிழர் நிலம் முழுவதும் அபகரிக்கப்பட்டு விடும். நிலங்களை இழந்த மக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் போராட முடியாது. இராணுவம் கொண்டு அடக்கப்படுவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள்.

மேற்படி நிலங்களை இழந்த மக்கள் ஐ.நா வுக்கு தொடர்ந்து கடிதங்கள், தொலை நகல்களை அனுப்புவதுடன் அங்கு வரும் ஒன்றிரண்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை சாடை மாடையாகவாவது கூறிவிடவேண்டும்.(இராணுவ கழுகுகளின் பார்வையில் இருந்து தப்புவது கடினமாகையால்).இப்படியான கட்டுரைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் இடப்படவேண்டும்.

தீபச்செல்வனுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.