Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் இந்தியா மற்றும் சிறிலங்கா: அறிக்கையின் சாரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 10:18 GMT ] [ தி.வண்ணமதி ]

ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையினைப் பெறும் நம்பிக்கையில் இந்தியா இருந்துவரும் நிலையில் அது தான் கொண்டிருக்கும் சனநாயக ஆட்சிப் பண்புகளையும் பல்வேறுபட்ட இனக்குழுமங்களை இணைந்து அரசாளும் திறனையும் அடிப்படையாகக்கொண்டு சிறிலங்கா தொடர்பாக சிறந்ததோரு அணுகுமுறையினை புதுடில்லி கைக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு ஜெனிவாவைத் தளமாகக் கொண்ட 'நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு' [international Crisis Group / 23 Jun 2011] வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் EXECUTIVE SUMMARY [அறிக்கையின் சாரம்] மொழிபெயர்க்கப்பட்டு இங்கே முழுமையாக தரப்படுகின்றது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

சிறிலங்கா மீது நீண்ட பல காலமாகவே காத்திரமான செல்வாக்கினைச் செலுத்தும் நாடுதான் இந்தியா.

ஆனால் இலங்கைத்தீவில் நீடித்து நிலைக்கக்கூடிய அமைதியினை ஏற்படுத்துவதை இலக்காகக்கொண்டு செயற்படவேண்டும் என இந்திய அரசாங்கம் கொள்கை ரீதியில் கொழும்பினைக் ஊக்குவித்துவந்தபோதும் அது பலனெதனையும் தந்துவிடவில்லை.

இந்தியா சிறிலங்காவிற்கு முனைப்புடன் நிதியுதவிகளை வழங்கிவந்தபோதும், போருக்குப் பின்னான சவால்களை வினைத்திறனுடன் கையாண்டு முன்னேற்றத்தினைக் காண்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டது.

அரசாங்கத்தினது செயற்பாடுகள் மற்றும் இராணுவத்தினருக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்குவது அதிகரித்துச்செல்வது என்பன மக்களுக்குப் புதிய துன்பதுயரங்களை ஏற்படுத்துவற்கே வழிசெய்யும்.

இந்த நிலைமை வன்முறைகள் மீண்டும் தலைதூக்கும் அபாயத்தினை அதிகரிக்கும்.

நியாயமான, நீடித்துநிலைக்கக்கூடிய போருக்குப் பின்னான தீர்வுக்கு சிறிலங்காவிற்கு ஆதரவு வழங்குவதற்கும், இன்னொரு சர்வாதிகார, இராணுவ மேலாண்மைகொண்ட அரசாங்கம் தனது அயல்நாடொன்றில் உருவாவதைத் தடுப்பதற்கும், இந்தியாவானது ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயற்படவேண்டிய தருணமிது.

சிறிலங்கா தற்போது பயணிக்கும் பாதை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்ற செய்தியினை குறித்த இந்தத் தரப்புகள் வழங்குவதற்கு இந்தியா துணைநிற்கவேண்டும். தற்போது இராணுவமயப்படுத்தலுக்கு உட்பட்டிருக்கும் நாட்டினது வடக்குப் பகுதியில் வழமைநிலை திரும்பவேண்டும் என்றும், வடக்கிலும் கிழக்கிலும் அனைத்து வகையான நிர்வாகங்களும் பொது நிர்வாகத்திடம் மீண்டும் வழங்கப்படவேண்டும் என்றும் தற்போது நடைமுறையில் இருக்கும் அவசரகாலச் சட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தவேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளமைப்பு தோற்கடிக்கப்பட்டமை முதல் தற்போது வரை புதுடில்லி சிறிலங்காவுடன் கொண்டிருக்கும் உறவானது நான்கு முதன்மையான அம்சங்களைக் கொண்டது.

01. வடக்குக் கிழக்குப் பகுதியில் இடம்பெயர்ந்து வசிக்கும் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல்.

02. சலுகைகளுடன்கூடிய கடனுதவியின் ஊடாக குறிப்பாக நாட்டினது வடக்குப் பகுதியிலும் இதர பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் பெருமெடுப்பிலமைந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளித்தல்.

03. இலங்கைத் தீவினது வடக்குக் கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வினை வழங்குவதன் ஊடாக நாட்டினது இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் வழிமூலத் தீர்வினை எட்டும் வகையில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என வலியுறுத்துதல்.

04. இரண்டு நாடுகளுக்குமிடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகளை ஊக்குவித்தல் என்பனதான் அந்த முதன்மையான அம்சங்கள்.

சிறிலங்கா தொடர்பாக இந்தியாவின் இதுநாள்வரையான அணுகுமுறையானது வரையறுக்கப்பட்ட பலாபலன்களையே பெற்றுக்கொடுத்திருக்கிறது.

வட மாகாணத்தில் அதிகரித்துச்செல்லும் இராணுவமயப்படுத்தல் மற்றும் சிங்களமயப்படுத்தல் என்பன சிறுபான்மைத் தமிழர்களை பாதுகாப்பற்றதொரு நிலைமைக்கு மேலும் மேலும் இட்டுச்செல்கிறது.

அரசியல் ரீதியில் தமிழர்கள் ஒதுக்கி ஓரங்கட்டப்படுவது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினையே பெரிதும் பாதிக்கப்போகிறது. போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக மோசமான உரிமை மீறல்களை விசாரிப்பதற்கோ அன்றி பொறுப்புச்சொல்லும் பொறிமுறை தொடர்பாகப் பேசுவதற்கோ அரசாங்கம் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவித்து வருகிறது.

சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவினது குடும்பத்தினரிடமும் இராணுவத்தினரிடமும் அதிகாரங்கள் குவிந்துகிடப்பதால் சனநாயக ஆட்சி என்பது நாட்டில் பெரும் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டது.

சுதந்திர ஊடகங்கள் மற்றும் அரசியல் எதிராளிகள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன, குற்றவாளிகள் கண்டும் காணாமல் விடப்படுகிறார்கள்.

ஏன் இந்தியாவின் நிதியுதவியின்கீழ் அமைந்த அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பொருளாதார ஒருமைப்பாட்டுத் திட்டங்கள் என்பனவற்றிலும் சிறிலங்கா அரசாங்கம் தேவையற்றவகையில் மூக்கை நுழைக்கிறது.

உதாரணமாக, நாட்டினது வடக்குப் பகுதியில் இந்தியா புதிதாக நிர்மாணிக்கவுள்ள 50,000 வீடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையுடைய வீடுகளின் நிர்மாணப் பணிகளே ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

கொழும்பினது செயற்பாடுகள் தொடர்பாக தாங்கள் வெறுப்படைந்துவிட்டதாக புதுடில்லியிலுள்ள அதிகாரிகள் கூறுகின்றபோதும், அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் மீது காத்திரமான அழுத்தத்தினைப் பிரயோகிப்பதற்குப் புதுடில்லி தயங்குகிறது.

1980களில் தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குவது என்ற இந்தியாவின் தவறான வழிநடத்தலின்பால் அமைந்த கொள்கைதான் சிறிலங்காவினது இனமோதல் விரிவடைவதற்கு வழிசெய்தது.

அத்துடன் 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையினை நடைமுறைப்படுத்துவதற்குகென இந்திய அமைதிப்படையினரைச் சிறிலங்காவிற்கு அனுப்புவது என்ற முடிவெடுக்கப்பட்டது.

ஆனால் விடுதலைப் புலிகள் இந்திய அமைதிப்படையினரை மூர்க்கமுடன் எதிர்துப்போரிட அது பேரழிவினை இந்தியாவிற்குக் கொடுத்தது. பின்னர் 1991ம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியினைப் படுகொலை செய்ததன் ஊடாக விடுதலைப் புலிகள் பழிதீர்த்துக்கொண்டார்கள்.

சிறிலங்கா மீதான இந்தியாவின் தலையீடு இலங்கைத் தீவின் அனைத்துச் சமூகத்தினரும் இந்தியாவினைச் சந்தேகக்கண்கொண்டு பார்க்கும் நிலைமையினைத் தோற்றுவித்தமையானது இந்தியாவின் நடவடிக்கைகள் அங்கு வரையறுக்கப்படுவதற்கு வழிசெய்தது.

விடுதலைப் புலிகளை இல்லாதொழித்த போரில் புதுடில்லி முதன்மையான பங்கினை வகித்தபோதிலும், தமிழர்களுக்குச் சார்பாகவே இந்தியா செயற்படுகிறது என்றும் நாட்டினைப் பலமிழக்கச் செய்வதற்கோ அன்றி நாட்டைத் துண்டாடுவதற்கோதான் இந்தியர்கள் காத்திருக்கிறார்கள் என்றும் சிங்களவர்கள் பலர் கருதுகிறார்கள்.

மறுவளத்தில், வழங்கிய வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் மீறும் வகையில் குறிப்பாக 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்த போரின் இறுதி நாட்களில் தங்களது உரிமைகளைக் காப்பதற்கும் உயிர்களைப் பாதுகாப்பதற்கும் இந்தியா தவறிவிட்டது என்றே தமிழர்கள் கருதுகிறார்கள்.

சிறிலங்கா அரசாங்கத்தின் மீது காத்திரமான அழுத்தத்தினைப் பிரயோகிப்பதற்கு இந்தியா பின்னடிப்பது குறித்த சில மூலோபாயக் காரணங்களின் பால் அமைந்ததே எனலாம்.

குறிப்பாக, இலங்கைத் தீவு மீது அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கினை இல்லாதுசெய்வதற்கு இந்தியா பெரிதும் விரும்புகிறது. சீனாவின் நிதி மற்றும் அரசியல் ரீதியிலான ஆதரவினை ராஜபக்ச அரசாங்கம் அதிகம் அனுபவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா தொடர்பான இந்தியாவின் அதிகரித்த அரசியல் செயற்பாடுகளுக்கு இலங்கைத் தீவு மீதான அதனது பொருளாதார நலன்கள் பற்றிய வளர்ந்துவரும் கரிசனையும் ஒரு காரணம்.

அனைத்துலக பன்முகக் கட்டமைப்புகள் ஊடாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், ஏனைய அரசாங்கங்களுடன் ஒருங்கிணைந்து நெருங்கிப் பணியாற்றுவதற்கும் புதுடில்லிக்கு இருக்கும் பாரம்பரிய தயக்கமும் சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான இந்தியாவின் திறன் மழுங்கடிக்கப்பட்டிருப்பதற்கு இன்னொரு காரணம்.

குறிப்பாக காமீர் உள்ளிட்ட இந்தியாவிலுள்ள பல்வேறு முரண்பாடுகள் பற்றி அனைத்துலகம் கடுமையாக ஆராயும் நிலையினை தோற்றுவித்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே பன்முகக் கட்டமைப்புக்களுடனும் ஏனைய அரசாங்கங்களுடனும் நெருங்கிப் பணியாற்றுவதற்கு புதுடில்லி தயங்குகிறது.

எது எவ்வாறிருப்பினும் சிறிலங்காவில் முன்னெடுக்கப்படவேண்டிய போருக்குப் பின்னான அடிப்படைக் கட்டமைப்பு மாற்றங்களை நோக்கி இந்தியா பணியாற்றுவதற்கான காத்திரமான காரணம் அதற்கு உள்ளது.

சிறிலங்காவில் வன்முறைசார் ஆயுதக்குழுக்கள் மீண்டும் தலைதூக்குவதையோ அல்லது அனைத்து அதிகாரங்களையும் தன்னகத்தேகொண்ட இராணுவத்துடன் கூடிய சர்வாதிகாரப் பண்புகள்கொண்ட ஆட்சிமுறை ஏற்படுவதையோல தடுப்பதற்கான தெளிவான நலன் இந்தியாவிற்கு இருக்கிறது.

ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையினைப் பெறும் நம்பிக்கையில் இந்தியா இருந்துவரும் நிலையில் அது தான் கொண்டிருக்கும் சனநாயக ஆட்சிப் பண்புகளையும் பல்வேறுபட்ட இனக்குழுமங்களை இணைந்து அரசாளும் திறனையும் அடிப்படையாகக்கொண்டு சிறிலங்கா தொடர்பாக சிறந்ததோரு அணுகுமுறையினை புதுடில்லி கைக்கொள்ளவேண்டும்.

இந்தியாவில் தென்பகுதியில் தனித் தமிழர்களைக் கொண்ட பெரும் தேர்தல் தொகுதி ஒன்று இருப்பதும் இந்த மக்களின் கரிசனைகளை ஏற்று மத்திய அரசாங்கம் செயற்படவேண்டிய நிலையில் இருப்பதன் காரணமாகவும், சிறிலங்கா தொடர்பாக இந்தியா காத்திரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய நிலையினை ஏற்படுத்துகிறது.

சிறிலங்காவில் சிறுபான்மையினரது உரிமைகள் மற்றும் அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றுக்குப் பல பத்தாண்டுகளாகத் தனது ஆதரவினை வழங்கும் இந்தியாவிற்கென்றொரு நற்பெயர் இருக்கிறது.

இந்தியாவின் உதவியுடன் விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கைத்தீவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என அழுத்தக்கொடுக்கவேண்டிய கடப்பாடு புதுடில்லிக்கு உண்டு.

உறுதியான மற்றும் சனநாயகப் பண்புகளைக் கொண்ட சிறிலங்கா உதயமாவதற்கு ஊக்குவிப்பது என்பதில் இந்தியா உறுதியுடன் இருக்கிறதெனில், புதுடில்லி தனது முன்னுரிமைகள் என்ன என்பதை மீளொழுங்குபடுத்துவதோடு சிறிலங்காவில் அரசியல் சீர்திருத்தம் இடம்பெறும் வகையில் தொடர்புடைய சக்திகளுடன் இணைந்து செயற்படவேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள அரசியல்கட்சிகள் தமக்கிருக்கும் பிடியினை ஆதரமாகக்கொண்டு சிறிலங்கா தொடர்பில் புதுடில்லி செயற்படும் நிலையினை ஏற்படுத்தவேண்டும். இதற்காக, அதிக நன்மைகளைத்தரவல்ல அரசியல் பேரங்களைத் தியாகம் செய்யவேண்டிய அபாயம் தமிழ்நாட்டுக் கட்சிகள் எதிர்கொள்ள நேரலாம்.

கடந்த சனவரி 2011 முதல் இடம்பெற்றுவரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களுக்கான இந்தியாவின் ஆதரவு அதிக பலன்களைத் தந்திருக்கிறது.

இந்த ஆதரவினை புதுடில்லி தொடர்ந்தும் வழங்கவேண்டியது அவசியமானது. வினைத்திறன்கொணட அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாகவே தற்போது இந்தியா தனது கவனத்தினைக் குவித்திருப்பதோடு அது தொடர்பாகவே சிறிலங்காவுடன் பேசி வருகிறது.

ஆனால் வடக்குக் கிழக்கில் அதிகரித்திருக்கும் இராணுவப் பிரசன்னத்தினைக் குறைப்பது, அர்த்தமுள்ள சனநாயகக் கட்டமைப்புகளை கட்டியெழுப்புதல் உள்ளிட்டமை தொடர்பாக இந்தியாவின் உடனடிக் கவனம் திரும்பவேண்டும். இதற்கு கீழ்க்காணும் அம்சங்கள் அவசியமானவை:

• இராணுவத்தின் அல்லது மத்திய அரசாங்கத்தின் எந்தவிதமான தலையீடுமின்றி வடக்குக் கிழக்கிற்கான அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்வதோடு அவற்றை மேற்பார்வை செய்யும் வகையில் வடக்குக் கிழக்கு சிவில் நிர்வாகக் கட்டமைப்பு மீண்டும் ஏற்படுத்தப்படவேண்டும்.

• நீண்ட பல காலமாக தாமதப்படுத்தப்பட்டுவரும் வட மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடாத்தப்படவேண்டும்.

• 'புனர்வாழ்வு' முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் உள்ளிட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்பினைக் கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டிருபவர்களது பெயர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் போன்ற விபரங்களை உடனடியாக வெளியிடவேண்டும்.

• உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பொதுமக்களின் நிலங்களிலிருந்து அவர்கள் வெளியேறவேண்டும்.

• அரச சார்பற்ற நிறுவனங்களதும் அரசியல் மற்றும் மனிதாபிமானச் செயற்பாட்டளர்களதும் செயற்பாடுகளுக்கு தற்போதிருக்கும் அனைத்துவகையான தடைகளும் அகற்றப்படவேண்டும்.

நாட்டினது வடக்குப் பகுதியில் தான் முன்னெடுத்துவரும் அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா மிகுந்த அவதானத்துடன் கண்காணிக்கவேண்டும். வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் பங்கெடுப்பதற்கு உள்ளூர் மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படவேண்டும் என இதர கொடைவழங்கும் தரப்புகளுடன் இணைந்து இந்தியா வலியுறுத்தவேண்டும்.

வடக்கில் தான் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளின் ஊடாகவும் கால ஓட்டத்தில் மாகாணசபையின் ஊடாகவும் முன்னெடுக்கவேண்டும் என இந்தியா வலியுறுத்தவேண்டும்.

இத்தகைய அம்சங்களைச் சாத்தியமாக்குவதற்கு ஏதுவாக யப்பான், மேற்கினது கொடை வழங்கும் நாடுகள் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி வங்கிகளுடன் கூட்டிணைந்து இந்தியா செயற்படவேண்டியிருக்கும்.

இவ்வாறாக இணைந்து பணியாற்றும்போது ராஜபக்ச அரசாங்கத்தின் மீது செல்வாக்குச் செலுத்துவதற்குத் தேவையான அரசியல் மற்றும் நிதி ரீதியிலான பிடி இந்தக் கொடை வழங்கும் தரப்புகளுக்கு வந்து சேரும்.

போருக்குப் பின்னான அபிவிருத்தி நடவடிக்கைகளில் எட்டப்படும் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் வடக்குக் கிழக்கில் இராணுவப்பிரசன்னத்தினைக் குறைப்பதற்கான மற்றும் அவசரகால மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டங்களைத் தளர்த்துவதற்கான அழுத்தத்தினைக் கொடுப்பதற்கு ஏதுவாக கொடைவழங்கும் நாடுகளின் மாநாடு நடாத்தப்படவேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தவேண்டும்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையின் முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையையும் இந்தியா வெளிப்படையாக நியுயோர்க்கிலும் ஜெனிவாவிலும் கொழும்பிலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அத்துடன் 2009 போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சுதந்திரமான அனைத்துலக விசாரணைகள் நடாத்தப்படுவதற்கு ஆதரவளிக்கவேண்டும்.

அதேநேரம் பொறுப்புச்சொல்லும் செயன்முறை பற்றி சிறிலங்கா அரசாங்கம் தானே செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டிய தேவை பற்றி கொழும்புக்கு இந்தியா வெளிப்படையாகவே காத்திரமான செய்தியினை அனுப்பவேண்டும்.

1980களில் இந்திய அமைதிப்படையினர் சிறிலங்காவில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிகள் உள்ளிட்ட நாட்டினது அனைத்துச் சமூகங்களும் எதிர்கொண்ட குற்றங்கள் மற்றும் அநீதிகள் தொடர்பாக ஆராய்வதற்காக உண்மை அறியும் ஆணைக்குழு ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் இந்தியா பணியாற்றவேண்டும்.

நாட்டினது அனைத்துச் சமூகங்களும் எதிர்கொண்ட துன்ப துயரங்களை ஏற்றுக்கொள்வது நீடித்து நிலைக்கக்கூடிய அமைதியினை ஏற்படுத்துவதற்கு அவசியமானதொன்று.

அதிகாரப்பரவலாக்கம் மற்றும் சிறுபான்மைத் தமிழர்கள் தமக்கான உரிமைகளைப் பெறுவதை உறுதிப்படுத்துவது போன்ற விடயங்களில் மாத்திரம் தங்களது கவனத்தினைக் குவிக்காது இந்தியா தனது அரசியல் நிகழ்ச்சிநிரலை விரிவுபடுத்தவேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தின் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் சர்வாதிகார ஆட்சிப்பண்பு, அதிகாரங்கள் அனைத்தும் மையப்படுத்தப்படும் நிலைமை மாற்றும் மாற்றுக் கருத்துடையவர்களின் குரலை அடைக்கும் பாங்கு போன்ற அம்சங்களில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படாமல் அர்தமுள்ள அதிகாரப் பகிர்வு எதுவுமே சாத்தியமாகப் போவதில்லை. அத்துடன் இந்த நிலைமை மீண்டுமொரு மோதல் நிலை இந்தப் பிராந்தியத்தில் உருவாவதற்கே வழிசெய்யும்.

அமைதியான மற்றும் அரசியல் உறுதிப்பாடுகொண்ட சிறிலங்காவினை உருவாக்குவது என்ற இந்தியாவின் நெடுநாள் எண்ணம் மெய்ப்படவேண்டுமெனில் தவறிழைத்தவர்கள் தண்டிக்காமல் விடப்படும் நிலை மாறவேண்டும் என்ற, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சனநாயக விரோதச் செயல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும் என்ற காத்திரமான செய்தி கொழும்புக்கு வழங்கப்படவேண்டும்.

சிறிலங்காவினது சமூகங்களைப் பாதிக்கும் வகையிலமையும் அரசியல் கரிசனைகளைப் புதுடில்லி வெளிப்படுத்துவது சிங்களவர்கள் இந்தியாவினைச் சந்தேகக் கண்கொண்டுபார்க்கும் நிலைமையினைத் தோற்றுவிக்கக்கூடும்.

இது சிங்களவர்கள் கொழும்பு அரசாங்கத்தின் கரத்தினைப் மேலும் பலப்படுத்துவதற்கே வழிசெய்யும். இதற்கு அதிக நாளெடுக்கலாம், ஆனால் இந்தியா சிறிலங்கா தொடர்பில் தான் ஆற்றவேண்டிய பணியினை உடனே ஆரம்பிக்கவேண்டும்.

*Asia Report N°206 23 Jun 2011 EXECUTIVE SUMMARY

http://www.puthinappalakai.com/view.php?20110625104145

[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 10:18 GMT ] [ தி.வண்ணமதி ]

ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையினைப் பெறும் நம்பிக்கையில் இந்தியா இருந்துவரும் நிலையில் அது தான் கொண்டிருக்கும் சனநாயக ஆட்சிப் பண்புகளையும் பல்வேறுபட்ட இனக்குழுமங்களை இணைந்து அரசாளும் திறனையும் அடிப்படையாகக்கொண்டு சிறிலங்கா தொடர்பாக சிறந்ததோரு அணுகுமுறையினை புதுடில்லி கைக்கொள்ளவேண்டும்.

இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட முழு உதவிகளையும் (ஆயுதம், ஆள்) ஒரு பயங்கரவாதக் கும்பலுக்கு, போலி சனநாயகக் காட்டுமிராண்டிக் கும்பலுக்கு

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை எந்த அடிப்படையில் கொடுப்பார்கள்.

காட்டுத் தர்ப்பார் நடக்கும் சபையில் இனப் படுகொலையாளர்களுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.