Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும்

Featured Replies

உலகம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே புலிகளின் விருப்பம்'

எங்களுக்கும் இராஜதந்திரம், புவிசார் அரசியல் பற்றி நன்கு தெரியும்

கா.வே.பாலகுமாரன்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட் அண்மையில் ஆற்றிய உரை தொடர்பாக கடந்த சனிக்கிழமை புலிகள் குரல் வானொலியின் அரசியல் அரங்கம் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது;

விடுதலைப் போராட்டம் என்பது சர்வதேச நிலைப்பாட்டோடு சம்பந்தப்பட்டவை என்பதும் அது தவிர்க்க இயலாதது என்பதும் எல்லோரும் அறிந்ததே.

எங்களுடைய விடுதலைப் போராட்டம் கூட சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலினூடாகத் தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் கரு, அடிப்படை ரீதியான செயற்பாடு குடியேற்றவாத காலத்தில் உருவாக்கப்பட்டு பனிப்போர் காலத்திலே வளர்ச்சியடைந்து தற்போதைய புதிய உலக ஒழுங்குக்குள்ளும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு வித்தியாசத் தன்மையை நீங்கள் பார்க்கலாம். எந்த ஒரு நிலையிலும் நாங்கள் ஒரு பக்கச் சார்பெடுக்காமல் விடுதலைச் சார்போடு செயற்பட்டிருக்கிறோம். ஒரு கால கட்டத்தில் இந்தியச் சார்பாக நாங்கள் செயற்பட்டதாக தோற்றப்பாடு இருந்த போதும் கூட அதுவும் அவ்வாறாக இல்லை என்பது விரைவில் நிரூபிக்கப்பட்டது.

இன்று சர்வதேச சூழ்நிலையில் எங்களது நிலைப்பாடு தெளிவாக வைக்கப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் ஜே.ஆர்., அமெரிக்கா என்பக்கம் என்று சொன்னார். அதன் பின்னர் சந்திரிகா, இந்தியா என்பக்கம் என்று சொன்னார். இப்போது மகிந்தர் தான் யார் பக்கம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் என எல்லோரையும் தன் பக்கம் எனச் சொல்லிக் கொண்டு அந்த முயற்சியில் படுதோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் சில அறிக்கைகள் வெளிவந்துள்ளன. கொழும்பில் உள்ள சில இனவாதப் பத்திரிகைகள் அவற்றை பாராட்டி புகழ்வதையும் நாங்கள் பார்த்துக் கொண்டு வருகிறோம்.

உதாரணமாக, ஐலன்ட் பத்திரிகையின் தலைப்பிலே அமெரிக்க தூதுவரின் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாராட்டும் வரவேற்பும் கொடுக்கப்பட்டிருந்ததை நாம் பார்க்கிறோம். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இது தொடர்பாக அரசியல் எதுவும் பேச விரும்பாத போதும் சில கருத்துகளை முன் வைக்கலாம் என நினைக்கின்றோம்.

அண்மையில், ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசி இங்கு வந்து சென்றதற்குப் பின்னால் அமெரிக்காவின் தூதுவர் ஜெப்ரி லான்ஸ்டெட்டும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திடம் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது என்று அகாசி சொன்னார்.

இலங்கை இராணுவம் நல்ல வலிமையான இராணுவம் என்றும் அதற்கு பாராட்டும் நற்சான்றிதழையும் ஜெப்ரி லான்ஸ்டெட் வெளியிட்டுள்ளார்.

இது என்னவென்று எங்களுக்குப் புரியாததாக இருந்தாலும் கூட அமெரிக்கா சென்று வந்த மங்கள சமரவீரவுக்கு ஒரு ஆறுதல் பரிசாக, இந்த மாதிரியான அறிக்கையை தூதுவர் ஊடாக அமெரிக்க அரசாங்கம் கொடுத்திருக்க முற்பட்டிருக்கக் கூடும் என்று சிலபேர் கருதுகிறார்கள்.

அது எவ்வாறாக இருந்தாலும் அமெரிக்க தூதுவரின் உரையிலேயே இரண்டு வரிகளை நாங்கள் இங்கே கவனத்தில் கொள்கிறோம்.

1. தங்களுடைய மக்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிறைவேறுவதற்குத் தடையாக இருக்கக் கூடிய தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்கிறார். அவர் எங்களைத் தான் கேட்கிறார்.

2. தங்களுடைய மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் கூடிய முதலீடுகளையும் தொழிற்சாலைகளையும் வாய்ப்புகளையும் புறந்தள்ளும் தலைவர்கள் எவ்வாறானவர்கள் என்றும் ஒரு கேள்வி கேட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருண்மிய சரிவு பற்றி இவ்வாறு அவர் சொல்லியிருக்கக் கூடும். ஏனென்றால் அமெரிக்கா மிக நீண்டகாலமாகவே சொல்லி வருகிறது.... எங்களுடைய அக்கறை பொருண்மிய நலன் பற்றியது தான் என்று. அதனால் அதைப் பற்றி நாங்கள் கதைக்க விரும்பவில்லை.

அவர்கள் இந்த நிலைப்பாட்டுக்கு வரக் காரணம் அண்மையிலே கொழும்பு பங்குச் சந்தை மிகப் பெரிய சரிவை சந்தித்துக் கொண்டு வருகிறது.

அண்மையிலே வெளிவந்த டெய்லி மிரர் பத்திரிகையில் கூட, முழுப் பங்குச் சந்தையின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 15 பில்லியன் அளவுக்குச் சரிந்திருப்பதாக கடந்த திங்கட்கிழமை சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாம் நிச்சயமாக அமெரிக்காவிற்கு ஒரு குழப்பத்தைக் கொடுத்திருக்கக் கூடும்.

அமெரிக்காவின் உலகமயமாக்கல் கொள்கையில் பங்குச் சந்தைகள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்டு அதற்கூடாகவே வணிகங்களை அமெரிக்கா மேற்கொள்வது அறிந்த விடயம். ஆனால், இந்த மாதிரியான சிக்கலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று நினைக்கிறோம்.

அமெரிக்காவின் அறிக்கையும் அதற்கு முன்னால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினது அறிக்கையையும் ஒரு நிலைமையை தோற்றுவிப்பதாக சிங்களம் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை நிலையை எங்களுடைய மக்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

தென்னாசிய பிராந்தியத்தில் தமிழீழச் சிக்கல் தொடர்பாக உலகம் மிகக் குறைந்த கவனத்தையே செலுத்துகிறது என்பது மிகத் தெளிவான செய்தியாக இருக்கிறது.

அதனது புவிசார் அரசியல் மற்றும் பொருண்மிய நலனுக்கு இசைவானதாக கணக்கெடுத்துப் பார்த்தால் உலகத்துக்கு மிகப் பெரிய பாரிய சிக்கல்கள் உலகெங்கும் பரந்து இருக்கிறது. அதைப் பற்றி நாங்கள் சுருக்கமாகப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

ஏனென்றால் இந்த மாதிரியான செய்திகளுக்கூடாக எங்கள் மக்கள் கூட யோசிக்கலாம். உலகம் ஏதோ புலிகளுக்கு எதிராக திரும்புகிறது. எங்களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு உலகம் மாறப் போகிறது என்று அச்சத்தை உருவாக்குவதற்கான ஒரு கருத்தாக இதைப் பார்க்கக் கூடாது என்பதற்காக இதைச் சொல்லுகிறோம்.

இந்த கருத்துகள் சிங்கள மக்களுக்குச் சொல்வதற்காக மிகப் பெரிய மன்றாட்டத்தின் அடிப்படையில் வெளியாகி இருக்கக் கூடும். உண்மையிலே மகிந்தர் இப்படியான அறிக்கைகளையாவது வெளியிடுங்கள் என்று மன்றாடியிருக்கக் கூடும்.

தென்னாசிய பிராந்தியத்தில் தமிழீழச் சிக்கலில் உலகம் பெரிதாகத் தலையிட முடியாது இருக்கிறது. ஏனென்றால் இதைவிட உலகத்திலே இன்று பல்வேறு சிக்கல்கள் தோன்றியிருக்கின்றன.

மிகக் கடைசியாக தோன்றியிருக்கிற பாரிய சிக்கல் ஈரான் பற்றியது.

ஈரானில் உள்ள அணு ஆலைகளிலே மீண்டும் ஐ.நா.வின் அனுமதி இல்லாமல் தங்களுடைய செறிவூட்டப்பட்ட யுரேனியத் தயாரிப்பைத் தொடர்வதற்கான முடிவை ஈரான் எடுத்திருக்கிறது. உலகத்தினுடைய முக்கியமான சகல முடிவுகளையும் புறந்தள்ளி தன்னுடைய தேவைக்காக அணு ஆயுத எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்பதற்காகச் செய்வதாகக் கூறி ஐ.நா.சபையால் முத்திரையிடப்பட்ட பொருட்களை எல்லாம் உடைத்துவிட்டு தன்னுடைய உற்பத்தியை செய்ய முயன்று வருகிறது.

மீண்டும் மத்திய கிழக்கிலே இன்னொரு போர் மேகம் சூழக் கூடிய ஆபத்து ஏற்பட்டு பரபரப்பாக பேசப்படுகிற செய்தியை நாங்கள் பார்க்கிறோம்.

அதற்கு அப்பால் மிக முக்கியமான செய்தி இன்று ஈராக்கில் உள்ள நிலைமை.

ஈராக்கின் இன்றைய நிலைமை குறித்து உலகம் மிகப் பெரிய அதிர்ச்சியும் பரபரப்புமாக நடந்து கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் மெல்ல மெல்ல பயங்கரவாதத்தைப் பயிற்றுவிக்கக் கூடிய ஏற்றுமதி செய்யக் கூடிய பயிற்றுவிக்கும் கல்விநிறுவனமாக மாறிவிட்டது என்பது ஆய்வியல் ரீதியாக இன்று நிருபிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தச் செய்திகள் அண்மையில் எகிப்திய அறிக்கைக்கு ஊடாக வெளியில் வந்தது.

அமெரிக்காவுக்கு எதிரான முழுமையான சர்வதேச பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடிய இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் கைக்கொள்ளக் கூடிய அவர்கள் சொல்கிற சொற்களுக் கூடாக சொல்வதனால் இஸ்லாமியப் போராளிகளைப் பயிற்றுவிக்கக் கூடிய ஒரு தளமாக ஆப்கானை விட ஈராக் மாறிவிட்டது என்று அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வந்திருக்கிறது.

ஈராக்கில் உள்ளது மிகத் திறமான நகர கெரில்லாச் செயற்பாட்டுக்குரிய போராட்டக் களமாக ஈராக் மாறிவிட்டது. இப்படியான களம் ஒன்றைச் செலுத்துவதற்கு ஐரோப்பிய நகரம் ஒன்று மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது என்றும் பதுங்கு வீடுகளில் இருந்து கொண்டு ஆயுதங்களைக் கடத்திச் சென்று பாதுகாப்புப் படையினர் கண்ணுக்கு முன்னாலே வெடிகுண்டுச் சம்பவங்களையும் பல்வேறு முக்கிய பயங்கரவாதச் செயற்பாடுகளையும் நகரத்துக்கு ஊடாக செய்யக் கூடிய நிலை தோன்றியிருப்பதாகவும் அதற்கு ஈராக் ஒரு பொருத்தமான இடமாக மாறிவிட்டதாக சொல்லக் கூடிய அபாயகரமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஈராக்கில் இன்று நாள் தோறும் நடக்கின்ற செய்திகள் எல்லாமே ஈராக் முழுமையாக போராளிக் குழுக்களை ஏற்றுமதி செய்யக் கூடிய பயிற்றுவிக்கக் கூடிய களமாகத் தான் இருக்கிறது.

ஈராக்கில் தலையிட்ட அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் நிலைப்பாடுகளில் மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டு புஷ் மற்றும் பிளயரின் செல்வாக்கு தங்கள் தாயகப் பகுதிகளில் மிக மோசமாக கீழிறங்கி அவர்களது எதிர்காலமே சிக்கலாகி மாறி இருக்கிறது.

இந்த வேளையில் தான் எங்களுடைய பிரச்சினை தொடர்பாக மகிந்தர், அலறிப் பதறிக் கொண்டு திரிவதை அவர்கள் பெரிதாக எண்ணுவதற்கில்லை என்று ஓரளவுக்கு கணிப்பாக நாம் கருதுகிறோம்.

இவற்றை விட மத்திய ஆசியா என்கிற ஐந்து நாடுகளில் உள்ள வளங்களைச் சுரண்டுவதற்காக அமெரிக்கா படுகிற பாடு. அவைகள் எல்லாம் சோவியத்தின் ஒரு பகுதிகளாக இருந்து பிரிந்து போனவை. இன்று சோவியத் ரஷ்யா தோல்வியுற்ற அந்த சம்பவத்தை 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய வரலாற்றுப் பிறழ்வு, தவறு என்று ரஷ்ய அதிபர் புட்டின் கூறுகிறார்.

அதேவேளை, தஜிஸ்கிஸ்தான், கஜகிஸ்தான் போன்ற இடங்களில் அமெரிக்கா தலையிட்டு கஸ்பியன் கார்டன் என்ற திட்டத்தை முன்வைத்து அந்த இடங்களிலே தங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி சீனாவுக்குத் தடுப்புச் சுவராக உருவாக்கி அந்த இடத்திலே மையப் படைகளை நகர்த்துவதற்கான புதிய திட்டங்களைச் செயற்படுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

அங்கே மிகப் பெரிய குழப்பங்களும் பிரச்சினைகளும் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஜனநாயக ரீதியான செயற்பாட்டை நாங்கள் அமைதியாகக் கொண்டு வர விரும்புகிறோம் என்று அமெரிக்கா சொல்லுகிறது.

இப்படியான ஒரு வித்தியாசமான உலக ஒழுங்கிலே நாம் வாழ்கிறோம். அந்தந்த நாடுகளிலே உள்ள சிக்கல்கள் எல்லாம் ஒரு முக்கியமான நிகழ்ச்சித் திட்டத்துடன் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் எங்களுடைய தமிழீழச் சிக்கலும் உலகத்தின் முன்னிலையில் வந்திருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால், பிராந்திய ரீதியாகக் கூட இந்தியாவின் இரண்டு பிரதான கட்சிகளும் வலுவிழந்து காணப்படுகின்றன.

இந்துத்துவா தீவிரவாதத்தின் வெறியால் பி.ஜே.பி. கட்சி துண்டு துண்டாகச் சிதறிக் கொண்டு இருக்கிறது.

அதேபோல் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியும் மிக வலுவிழந்தே உள்ளது. வட இந்தியாவின் முக்கிய மாநிலங்களான உத்தரப்பிரதேசமோ, பீகாரோ இன்று காங்கிரஸுக்கு மாறானவர்களின் கையில் இருக்கிறது.

தமிழீழச் சிக்கலை முன்னிலைப்படுத்தி மகிந்தர் என்னதான் பாடுபட்டாலும் அதைக் கணக்கிலெடுப்பதற்கான ஒரு புறநிலைச் சூழல் உலகத்தில் கிடையாது. இந்த வருடத்தின் தொடக்கத்திலே இருந்து நீண்டு போகும் இந்த ஆண்டில் உலகம் செயலற்று இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

இப்படியான நிலையில் தவறான ஒரு கோட்பாட்டின் அடிப்படையில், தவறான குழுக்களின் துணையோடு களமிறங்கி தவறான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் மகிந்தர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் சாதகமான சர்வதேச சூழ்நிலையை எமது செயற்பாட்டுக்கூடாக உருவாக்கி இருக்கிறோம் என்று சொல்ல முடியும்.

ஆகவே தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுக்கும் இராஜதந்திரம் தெரியும். நாங்களும் புவிசார் அரசியல் பற்றி அறியமுடியும். எங்களுக்கும் சாதகமான சூழ்நிலை இருப்பது தெளிவான செய்தியாக இருக்கிறது.

1999 ஆம் ஆண்டு ரைம்ஸ் சஞ்சிகையில் ஜோகனா மைக்கேரியல் எழுதிய கட்டுரையில் இதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.

"இலங்கையில் உள்ள தமிழ்ப் புலிகளே! உங்கள் நேரம் இனிமேல்தான் வர இருக்கிறது" என்று எழுதியிருக்கிறார்.

இதைச் சொல்வதற்கான காரணம் தலைநகரான வாஷிங்டனிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் தூரம் முக்கியம்.

இன்று ஆப்கானை, துருக்கியை அண்டிய ஆசிய ஐரோப்பிய பகுதிகள், கிழக்கு ஆசிய பகுதிகள் தொடர்பான சிக்கல்கள் எல்லாவற்றையும் முன்னிலைப்படுத்தி நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னால் நிச்சயமாக எங்களைப் பொறுத்தவரையில் இந்த சர்வதேசத்தின் தலையீடு என்பது ஒரு அளவிலே தான் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க முடியும் என்பது தவிர்க்க இயலாத நியதி.

அதன் காரணமாகத்தான் மகிந்தர் போன்றவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டுக் கருத்துகளைச் சொன்னாலும் கூட அந்தக் கருத்துகள் எடுபடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.

ஆகவே உலகம் எம் பக்கம் என்று நாம் சொல்லவில்லை. உண்மையின் பக்கம் உலகம் நிற்க வேண்டும் என்று விரும்புகிறோம். உண்மையின் பக்கம் நிற்காவிட்டாலும் இந்த பிராந்தியத்திலே நிற்க வேண்டிய அவசியம் என்ன என்று உலகம் தேட வேண்டிய நிலையில்தான் இருக்கிறது.

எங்களுடைய விடுதலைப் போராட்டத்தினது செயற்பாடு காரணமாக, எங்களுடைய கருத்துகளுக்கூடாக நாங்கள் செயற்படும்போது எங்களுடைய மக்களுடைய கருத்துகளை முன்னிலைப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது.

அந்த வகையில் மூதூரிலே நடந்த தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டின் கடைசியான வரிகளை உங்களுக்கு இங்கே நான் முன்வைக்க விரும்புகிறேன்.

"இனியும் என்ன யோசிக்க இருக்கிறது? ஒன்றுமே இல்லை. ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டியதுதான். அதுதான் சாவுக்குள் வாழ்வை நுழைப்பது என்பது. சாவென்பது எமக்கு வீரச்சாவாக அமைய வேண்டும். வீழ்ந்தவர் நினைவுடன் வீறாக எழுந்து எமது மக்களின் வாழ்வுக்காக எமது மண்ணையும் எமது இருப்பையும் காப்போம்" என்று அந்தத் தொடர் அற்புதமாக எழுதப்பட்டு இருக்கிறது.

இதில் உள்ள செய்தி என்னவெனில் "சாவுக்குள் வாழ்வை நாங்கள் நுழைக்கிறோம்?" இதைத்தான் நாங்கள் உலகுக்குச் சொல்லுகிறோம்.

நாங்கள் எந்தப் பயங்கரவாதச் செயலையும் செய்யவுமில்லை. எவருக்கும் எதிராக நாங்கள் போரைத் தொடங்கவும் இல்லை. நாங்கள் எங்கள் சாவிலிருந்து எங்களைக் காப்பதற்காக வாழ்வை அதற்குள் அமைப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம் அல்லாமல் வேறு எதுவும் கிடையாது என்பதை அமெரிக்கா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் உணர வேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக கோருகிறோம்.

thinakural

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க பயனுடைய ஆக்கத்தை இணைத்திருகிருக்கிறீர்கள் நர்மதா..

மிக்க நன்றி....

தொடர்க இப்பணியையும்.....

தமிழர் தேசத்தின் "நீதிக்கான போராட்டம்"

சர்வதேச வியாபகம் மேலும்மேலும் காணும்வேளையில், திரு.கா.வே.பாலகுமாரன் அவர்களின் அறிவுத் தளத்தை ஈர்க்கும் இக்கருத்து,பன்னாட்டு அரசியலில் பண்பட்ட "காய் நகர்த்தல்கள்" ஐயும்,போராட்ட சர்வதேசக் "களத் திறப்புகள்" ஐயும் மென்மேலும் "அழுத்தி உரைக்கும்" சத்திய வரிகள்;

சாத்தியமாக்க எம்மாலனா பன்முகப் பணிகளை

மெருகேற்றி மேலும் தொடர்வோம்...

"நான் பெரிது நீ பெரிது என்றில்லாமல் நாடு பெரிது என்று செய்யற்படுங்கள்" என்ற "வரலாற்று வரிகளை" உணர்வுடன் உள்வாங்கி ஒரே அணியில் வீறுடன் , விவேகத்துடன் செயலாற்றுவோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.