Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுடில்லி மாநாடு - உண்மையில் நடந்தது என்ன? சி. அ. யோதிலிங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லி மாநாடு - உண்மையில் நடந்தது என்ன?

சி. அ. யோதிலிங்கம்

இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் மனித உரிமைகள் மற்றும் உலக வளர்ச்சிக்கான பாராளுமன்றத்தின் சார்பில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கூட்டிய மாநாடு தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அன்றாட விவகாரங்கள் தொடர்பாக அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒருமித்த முடிவிற்கு வந்தபோதும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து அவர்களால் பெறப்படவில்லை. அன்றாட விவகாரத்திலும் போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்வதற்காக சர்வதேச பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்ற கஜேந்திரகுமார் அணியின் யோசனையை ஏற்றுக்கொள்ள ஏனைய கட்சிகள் தயங்கியபோதும் கஜேந்திரகுமார் அணி இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாம் கையெழுத்திட மாட்டோம் எனக் கூறியதால் பின்னர் அது ஏற்றுக் கொள்ளப்பட்து.

சுதர்சன நாச்சியப்பன் ஏனைய கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் தெரிவித்தபோதும் போர்க் குற்ற விசாரணைக் கோரிக்கை பற்றி வாயே திறக்கவில்லை.

அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் மக்கள் தனியான ஒரு தேசம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அடிப்படையிலேயே அரசியல் தீர்வு இருக்க வேண்டும் என்ற கஜேந்திரகுமார் அணியின் கருத்துக்களை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ளாதினாலேயே மாநாடு தோல்வியில் முடிந்தது.

இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்ததினால் அங்கு தமிழ்க்கட்சிகள் எங்களோடு நிற்கின்றனர் எனக் காட்டிக்கொள்வதற்காவும், இலங்கை இன விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் எழுச்சியைத் திசைதிருப்புவதற்காகவும், இலங்கை அரசினை அச்சுறுத்தி இலங்கையில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காகவுமே இம்மாநாடு நாச்சியப்பனால் ஒழுங்கு செய்யப்பட்டது. இவற்றினை விட வேறும் ஒரு முக்கிய நோக்கம் இருந்தது. அரசியல் தீர்வினை 13 வது திருத்தத்திற்குள் மட்டுப்படுத்திக் கொள்வதே அந்நோக்கமாகும். தமிழ் மக்களின் போராட்ட வளர்ச்சியின் தொடர்ச்சியை ஏற்றக் கொள்ள இந்தியா என்றைக்குமே விரும்பியதில்லை. தமிழ்த் தேசிய அரசியல் இந்தியாவுடன் முரண்படும் மையமும் இதுதான்.

சுதர்சன நாச்சியப்பன் இந்த மாநாட்டினை ஒழுங்கு செய்திருந்த போதும் இந்திய அரசாங்கத்தின் சம்மதம் இல்லாமல் இது நடைபெற்றது எனக் கூறிவிட முடியாது. இராஜதந்திர நெருக்கடிகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக நாச்சியப்பன் மூலம் இந்திய அரசாங்கம் இதனை ஒழுங்கு செய்திருக்கலாம். இதனை இந்திய அரசாங்கத்தின் ஒரு மறைமுக வேலைத்திட்டம் என்றே கூறவேண்டும்.

கஜேந்திரகுமார் அணியின் எதிர்ப்பு காரணமாக இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதால் ஏற்பாட்டுக்குழு அவர்கள் மீது மிகுந்த கடுப்பில் உள்ளது. இக்கடுப்பு காரணமாக மாநாட்டு ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் கையளிக்கப்படாததோடு நாடு திரும்புவதற்கு விமான நிலையம் செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகள்கூட செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் தமது சொந்தச் செலவிலேயே வாகனம் ஒழுங்கு செய்து விமான நிலையம் சென்றனர்.

மாநாடு ஏற்பாட்டுக்குழுவிலும் பார்க்க அதிக கடுப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர். தமது இரட்டை முகமூடியை கஜேந்திரகுமார் அணி கிழித்து எறிந்து விட்டதனால்தான் இந்த கடுப்பு நிலை. மக்கள் மத்தியில் தேசியம், சுயநிர்ணயம் என்பதை உயர்த்திப் பிடிப்பதும் இந்தியாவின் முன்னிலையில் அவற்றை தாம் கைவிட்டதாகக் காட்டிக் கொள்வதும் தான் அந்த இரட்டை நிலை.

கஜேந்திரகுமார் அணியின் கொள்கை வெளிப்படையானது. நீண்டகாலமாக அவர்கள் இதனை முன்வைத்து வருகின்றனர். கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் அணி வெளியேறுவதற்கும் இந்த கொள்கை நிலைப்பாடுதான் காரணம். தங்களது கொள்கை நிலைப்பாடு இந்தியாவின் அபிலாசைகளோடு பொருந்தாததினால் இந்தியா மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் என அவர்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அழைப்பு வந்த போது அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஒரு பழமை வாய்ந்த கட்சியாக இருப்பதினாலும், தங்கள் செல்வாக்கின் கீழ் எல்லாக் கட்சிகளும் வரவேண்டும் எனக் கருதியும், தமிழ் டயஸ்பொறாவின் கொள்கைகளோடு உடன்பட்ட ஓர் அணியை தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவருதற்காகவும் அழைப்பை அனுப்பியிருக்கலாம். தமிழ்க் காங்கிரஸ் கட்சி கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்ததினாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் இருந்ததினாலும் அது பலவீனமான நிலையில் இருக்கின்றது, எனவே இப்பலவீனம் தங்கள் செல்வாக்கின் கீழ் வருவதை ஊக்குவிக்கும் எனவும் அவர்கள் கருதியிருக்கலாம்.

கஜேந்திரகுமார் போன்ற ஆளுமை மிக்க ஒருவரை வெளியே விடுவது தங்களுக்கு எப்போதும் ஆபத்தானது என்றும் கருதியிருக்கலாம். சென்ற பொதுத்தேர்தலில் கஜேந்திரன், பத்மினி என்போரைத் தவிர்த்துவிட்டு கஜேந்திரகுமாரை உள்ளீர்க்கவே கூட்டமைப்பு விரும்பியிருந்தது. அதற்கான முயற்சிகளையும் செய்திருந்தது. ஆனாலும் தேர்தலில் தோல்வி நிச்சயம் எனத் தெரிந்திருந்தும் கஜேந்திரகுமார் கொள்கையினை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கவில்லை.

இந்தியா போராட்டத்தின் தொடர்ச்சியை நிராகரித்து 13 வது திருத்தத்துடன் தமிழ் அரசியலை வைத்திருக்கவே விரும்பியது. போரின் தோல்வி மக்களின் விரக்தி நிலை என்பவற்றை அதற்காகப் பயன்படுத்தியது. ஆனாலும் தமிழ்த்தேசிய அரசியலின் தொடர்நிலைக்கு எப்போதும் இடமிருக்கும் என்பது அதற்கு நன்றாகத் தெரியும். கஜேந்திரகுமார் வெளியில் நின்றால் அந்த அணிக்கு தலைமை கிடைத்துவிடும் என்பதனாலேயே எப்போதும் அவருக்கு வலைவீசி காத்திருந்தது.

ஆனால் கூட்டமைப்பினருக்கு கஜேந்திரகுமாரின் கறாரான நிலை நன்றாகத் தெரியும். இதனால் தங்களுடைய இரட்டைநிலை அம்பலப்பட்டு விடும் என அஞ்சினர். அவர்களுக்கான அழைப்பு பல்வேறு வகைகளில் சங்கடங்களைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்ப்போமா என்று கூட கூட்டமைப்பினர் யோசித்தனர்.

இந்திய அழைப்பு என்பதால் மாநாட்டில் கலந்து கொள்வதையே சம்பந்தன் விரும்பினார். கஜேந்திரகுமாருடன் கலந்துரையாடி ஒரு பொதுக்கருத்துடன் மாநாட்டிற்கு செல்லுமாறு அவர் சுமந்திரனை வேண்டியிருந்தார். மகனின் திருமணம் காரணமாக மாநாட்டிற்கு அவரினால் செல்ல முடியவில்லை. மாநாட்டில் சங்கடங்கள் வரும் எனக் கருதி அவர் முன்கூட்டியே அதனைத் தவிர்த்திருக்கவும் கூடும்.

சம்பந்தனின் யோசனைப்படி, சுமந்திரன் கஜேந்திரகுமார் அணியுடன் பேசுவதற்கு முற்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் குருபரனின் உதவியை நாடி பேசும் விருப்பத்தை தெரிவித்தார். குருபரன், கஜேந்திரகுமாரிடம் இவ் விருப்பத்தை தெரிவித்தபோது, நான் பேசுவதற்கு தயார், ஆனால் பேச்சுகளுக்கு சாட்சியம் இருக்கவேண்டும். எனவே நடுநிலையாளர் முன்னிலையிலேயே பேச விரும்புகின்றேன் எனக் குறிப்பிட்டார். குருபரனால் நடுநிலையாளர் குழு ஒன்றினை ஒழுங்கு செய்ய கால அவகாசம் இருக்கவில்லை. அதனால் குருபரனே நடுநிலையாளராக இருக்க கொழும்பில் 21ம் திகதி இரவு 9.30 மணிக்கு பேச்சு நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின் போது கஜேந்திரகுமார், தமிழ் மக்களின் இறைமை அரசியல் தீர்விற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். எனவே தமிழ் மக்கள் ஒரு தனியான தேசம், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்ற அடிப்படையிலேயே அரசியல் தீர்வு இருக்க வேண்டும் என்ற தனது கொள்கை நிலைப்பாட்டை உறுதியாக முன்வைத்தார். இதற்குக் குறைந்த எந்த ஓர் அரசியல் தீர்வையும் தாம் ஏற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார். இத்தகைய ஒரு தீர்வு இல்லாமல் சிங்களக் குடியேற்றம் போன்ற ஆபத்துக்களையும் தவிர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டார். நீண்ட விவாதத்தின் பின்னர் கஜேந்திரகுமாரின் கருத்துக்களை சுமந்திரன் ஏற்றுக்கொண்டார். மாநாட்டில் தாங்கள் ஒருமித்து இக்கருத்துக்களை முன்வைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. எதிர்காலத்தில் இணைந்து வேலை செய்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

மாநாட்டின் முதல் நாள் அன்றாட விவகாரங்கள் பற்றியே பேசப்பட்டன. போர்க்குற்ற விசாரணை தொடர்பாக சில மாறுபட்ட கருத்துக்கள் இருந்த போதும் இறுதியில் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அதில் கையொப்பமிட்டனர். தீர்மானங்களின் பிரதியும் ஏற்பாட்டுக் குழுத்தலைவர் நாச்சியப்பனிடம் கையளிக்கப்பட்டது. உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்குதல், இராணுவ நிர்வாகத்தை அகற்றுதல், கைதிகளை விடுதலை செய்தல், தமிழ்நாடு அகதிகளை மீள் குடியேற்றம் செய்தல், நில ஆக்கிரமிப்பினை நிறுத்துதல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் என்பன அத் தீர்மானங்களில் உள்ளடங்கியிருந்தன.

முதல் நாள் இரவு 7.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் கஜேந்திரகுமார் அணியைச் சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்தினர். அதிலும் கஜேந்திரகுமார் அணி தமது நிலைப்பாட்டினை உறுதியாகத் தெரிவித்தது. தேசியம், சுயநிர்ணயம் என்ற சொற்களை நீக்க முடியாதா? என கூட்டமைப்பினர் கேட்டனர். இச் சொற்கள் வலுவான அரசியல் அர்த்தங்களைக் கொண்டவை. எனவே அவற்றை நீக்க முடியாது என கஜேந்திரகுமார் தெரிவித்தார். இறுதியில் இக்கருத்துக்களையே முன்வைப்பது என மீண்டும் இணக்கம் காணப்பட்டது.

இரண்டாம் நாள் காலை மாநாடு ஆரம்பித்த போது அரசியல் தீர்வின் அடிப்படை தொடர்பான விவாதம் நடைபெற்றது. பலத்த விவாதங்களின் பின்னர் தேசியம், சுயநிர்ணயம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை உள்ளடக்கிய அறிக்கையினை தயாரிக்கும் பொறுப்பு சுமந்திரனிடமும், கஜேந்திரகுமாரிடமும் வழங்கப்பட்டது. அவர்கள் அறிக்கையைத் தயாரித்த பின் அது சபையில் வாசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அறிக்கையில், தேசம் சுயநிர்ணயம் குறித்த வாசகங்கள் இறுதிப் பந்தியில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. 'இலங்கைத் தீவிலுள்ள தமிழ் மக்கள் தனியொரு இனமான தமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்களை ஒரு தனித்துவமான தேசம் எனவும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர் எனவும் அங்கீகரிப்பது இன்றியமையாததொன்று என்பது எங்கள் வலுவான கருத்தாகும். அவ்வாறானதொரு சூழ்நிலையில் மட்டுமே இலங்கை அரசுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் அர்த்தமுள்ளதாக அமையமுடியும். ஆதலால் தமிழ்த்தேசம் முன்வைக்கும் இந்த உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறும் ஒரே நாட்டினுள் எட்டப்படத்தக்க எந்தவொரு தீர்வுக்கும் இதுவே அடிப்படையாக அமையுமென இடித்துரைக்குமாறும் நாங்கள் இந்திய நாட்டிடமும் அனைத்து சமூகத்திடமும் விண்ணப்பம் செய்கின்றோம்.'

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், எதிர்பாராத விதமாக இடைநடுவில் நாச்சியப்பன் மாநாட்டிற்கு வந்தார். யாராவது இவ்வாறான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தகவல் கொடுத்திருக்க கூடும். நாச்சியப்பனிடம் தீர்மானத்தின் பிரதி கொடுக்கப்பட்டது. அவர் கடைசிப் பந்தியை எடுத்து விடுமாறு குறிப்பிட்டார். எந்த அரசியல் தீர்வும் 13 வது திருத்தத்தின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இத்தனைக்கும் தொடக்கவுரையில் நான் எந்தவித நிர்ப்பந்தமும் தரமாட்டேன். நீங்கள் சுதந்திரமாக விவாதித்து ஒருமித்த தீர்மானத்திற்கு வாருங்கள். நான் அதை ஏற்கின்றேன் என்றே கூறிவிட்டுச் சென்றிருந்தார். நான் மாநாட்டில் இருப்பது உங்கள் சுதந்திரமான விவாதத்திற்கு தடையாக இருக்கும். அதனால் இருக்க விரும்பவில்லை என்றும் கூறிச் சென்றார். ஆனால் பின்னர் தீர்மானம் இந்தியாவின் விருப்பத்திற்கு மாறாக அமைந்துள்ளது என்று தெரிந்தவுடன் நிபந்தனையை விதிக்கத் தொடங்கினார். நாச்சியப்பனின் நிபந்தனையுடன் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.

மாநாட்டிற்கு வந்த கட்சிகளில் தமிழ் காங்கிரஸ் கட்சி தவிர்ந்த ஏனைய எல்லாக் கட்சிகளும் இந்திய சார்பானவை. பொருள், பாதுகாப்பு, சலுகைகள் போன்ற நலன்களுக்காக இந்தியாவில் தங்கியிருப்பவை. நாச்சியப்பனின் நிபந்தனையை தட்டிக்கழிப்பது அவர்களின் அன்றாட இருப்பினை பாதிப்புக்குள்ளாக்கும் என்பதால் தேசம், சுயநிர்ணயம் என்ற சொற்பதங்களை எதிர்க்கத் தொடங்கின.

ஆனந்த சங்கரி, இப்பந்தியை நீக்காவிட்டால் தான் கையெழுத்திட மாட்டேன் என்று குறிப்பிட்டார். அவருடன் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா அணி), ஈ.என்.டி.எல்.எவ் என்பனவும் இணைந்து கொண்டன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மதில் மேல் பூனையாக ஆதரவும் தெரிவிக்காமல் எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தது. ஆனந்த சங்கரி தேசம், சுயநிர்ணயம் என்பவையெல்லாம் தனி நாட்டிற்குரியவை அதனை ஏற்க முடியாது என கர்ச்சித்தார். அப்போது கஜேந்திரகுமார் ஆனந்தசங்கரியிடம், நீங்கள் தலைமை வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாப்பு என்ன கூறுகின்றது எனக் கேட்டார். 'அதெல்லாம் பழைய கதை. இப்போ அதனை ஏற்க முடியாது' என ஆனந்தசங்கரி பதில் அளித்தார். 'அப்போ தற்போதைக்கு ஏற்ற மாதிரி ஏன் யாப்பினை இன்னமும் மாற்றவில்லை' எனக் கேட்டதற்கு ஆனந்த சங்கரியிடமிருந்து பதில் வரவில்லை.

பின்னர் எதிர்த்த கட்சிகள் இறுதிப் பந்தியிலுள்ள தேசம், சுயநிர்ணயம் என்பவற்றை மாற்றி புதிய அறிக்கை ஒன்றினை தயாரித்து முன்வைத்தன. இணைப்பாளராக இருந்த சட்டத்தரணி நாகராஜா, இவரும் இந்திய சார்பானவர், தேசம், சுயநிர்ணயம் உள்ளடக்கிய முதலாவது அறிக்கையினைத் தூக்கிக் காட்டி இதனை ஆதரிப்பவர்கள் யார் எனக் கேட்டார். தமிழ்க் காங்கிரஸ் கட்சியைத் தவிர எவரும் ஆதரிக்கவில்லை. பின்னர் இரண்டாவது அறிக்கையினை தூக்கிகாட்டி, இதனை ஆதரிப்பவர்கள் யார் எனக் கேட்டார். தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர அனைத்து கட்சிகளும் கைகளை உயர்த்தின. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இரண்டு அறிக்கைக்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய அமைப்பாக இருப்பதனால் இந்த இரண்டு அறிக்கையில் எதனை ஏற்பது என்பது தொடர்பாக திட்டவட்டமான கருத்தினைத் தெரிக்க வேண்டும் எனக் கஜேந்திரகுமார் அணியினர் கேட்டனர். அதற்கு இங்கே ஒருமித்த கருத்து இல்லாததினால் தாங்கள் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூட்டமைப்பினர் பதில் அளித்தனர்.

பெரும்பான்மை இரண்டாவது அணிக்கு சார்பாக இருந்ததினால் கஜேந்திரகுமார் அணி விட்டுக்கொடுக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது. கூட்டமைப்பினர் ஒவ்வொருவராக வந்து விட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்தினர். அதற்கு கஜேந்திரகுமார் இணங்கவில்லை. இது கொள்கைப் பிரச்சனையாக உள்ளமையினால் எந்தவித விட்டுக் கொடுப்புகளுக்கும் இடமில்லை என திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். இறுதியில் எந்தவித தீர்மானமும் இல்லாமல் மாநாடு முடிவடைந்தது. அரசியல் தீர்வு தொடர்பாக முடிவெடுக்கப்படாததினால் மாலை இந்திய வெளிநாட்டமைச்சர் ஜே. கிருஸ்ணாவை சந்திக்கும் நிகழ்வும் இரத்துச் செய்யப்பட்டது.

மாலை, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமிழ்க் கட்சிகளைச் சந்தித்தனர். அவர்களிடமும் கஜேந்திரகுமார் அணி தேசம், சுயநிர்ணயம் என்பன அரசியல் தீர்வின் அடிப்படையாக இருக்கவேண்டும் என வலியுறுத்தினர். மாநாடு தோல்வியில் முடிந்தமைக்கு இதுவே காரணம் என்றும் குறிப்பிட்டனர்.

கஜேந்திரகுமார் அணியினர் நாடுதிரும்ப முன் மீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரைச் சந்தித்து எங்களுடைய கருத்துக்களுடன் உங்களுக்கு முரண்பாடுகள் இல்லைத்தானே! எனவே கொழும்பில் இணைந்து அறிக்கை விடுவோம் எனக் கேட்டனர். அதற்கு கூட்டமைப்பினர் இணங்கவில்லை. இதனால் கொழும்பு திரும்பிய பின் தமிழ்காங்கிரஸ் கட்சி சார்பில் கஜேந்திரகுமார் தேசம், சுயநிர்ணயம் அடங்கிய முதலாவது அறிக்கையினை வெளியிட்டார்.

இவைதான் மாநாட்டின் உண்மைக் கதை.

நான் முன்னர் கூறியதுபோல தோல்விக்கான மையக் காரணம், தமிழ்த்தேசிய அரசியலின் தொடர்ச்சியைப் பின்பற்றுவதா? இல்லையா? என்பதுதான். இந்தியா இத் தொடர்ச்சி பின்பற்றப்படுவதை விரும்பவில்லை. இதனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட இந்திய சார்பு கட்சிகள் இந்தியாவின் விருப்ப அளவிற்கு ஏற்ப அரசியலை நடாத்த விரும்புகின்றன.

ஆனால் உண்மையில் தேசம், சுயநிர்ணயம் என்பன தமிழ் மக்களின் அரசியலில் ஆழமாக இருப்பவை. ஒரு தேசமாக இருந்தமையினால் தான் தமிழ்மக்கள் போருக்கு பின்னர் கூட ஆளும்கட்சி அபிவிருத்தி அரசியல் என ஆர்ப்பரித்த போதும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். இதனால்தான் தமிழ்மக்களின் ஆதரவினைப் பெற்றவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறமுடியாது. சிங்கள மக்களிடம் ஆதரவு உள்ளவர் தமிழ் மக்களிடம் செல்வாக்கு பெறமுடியாது என்ற நிலை நிலவுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா தோல்வியடைந்தமைக்கு காரணம், தமிழ்தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரித்தமைதான். அதேபோல டக்ளசும். பிள்ளையானும். கருணாவும். தமிழ்மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறமுடியாமைக்கு காரணம் அரசாங்கத்தை அவர்கள் ஆதரிப்பதுதான். மகிந்தர் அரசு இனப்படுகொலையை நடாத்தியமைக்கும் காரணம் தமிழ்மக்கள் ஒரு தேசமாக இருந்தமைதான்.

ஒரு மக்கள் கூட்டம் தொடர்ச்சியாக தம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி தம்மைத்தாமே ஆள்கின்ற நிலை வருகின்ற போது அவர்கள் தேசம் என்ற நிலைக்கு உயர்கின்றனர். தமிழ்மக்களும் 60 வருடகால போராட்டத்தினூடாக இந்நிலைக்கு உயர்ந்தனர். புலிகளின் காலத்தில் ஒரு நடைமுறை அரச நிர்வாகமும் இருந்தது.

இந்த உண்மைகளையெல்லாம் நிராகரித்து தமிழ்மக்களை ஒரு சிறுபான்மைக் கூட்டமாக்க இந்தியா முயல்கின்றது. அதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட இந்திய சார்பு கட்சிகள் துணைபோகின்றன. டக்ளசும் பிள்ளையானும் மகிந்தரின் விருப்பத்தின் அளவிற்கேற்ப அரசியல் செய்ய விரும்புகின்றனர். இந்திய சார்பு கட்சிகள், இந்தியாவின் விருப்பத்தின் அளவிற்கேற்ப அரசியல் செய்ய விரும்புகின்றன. தமிழ் மக்களின் விருப்பத்திற்கும் அளவிற்கும் ஏற்ப அரசியல் செய்யத்தான் இவர்கள் தயாராக இல்லை

இந்திய காங்கிரஸ் அரசாங்கம் மட்டும் இந்தியா அல்ல. காங்கிரஸ் கட்சியைத் தவிர இரு தேசக் கோட்பாட்டை ஏனைய கட்சிகள் அனைத்தும் ஆதரிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட்கட்சி இருதேசக் கோட்பாட்டினை ஒரு அரசியல் தீர்வாக மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றது. மேற்குலகமும் பிரிவினைக்கு எதிராக இருக்கின்றதே தவிர, இருதேசக் கோட்பாட்டிற்கு எதிராக இல்லை. சமாதான காலத்தில் இருதேசக் கோட்பாட்டை ஏற்க அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் இந்தியா தான் அதற்கு தடையாக இருந்தது.

தமிழ் மக்களின் அரசியல் தளங்கள் இன்று மூன்றாக உள்ளன. தாயகம், புலம், தமிழகம் என்பவையே அத்தளங்களாகும். புலமும், தமிழகமும் தமிழ்த்தேசம் - சுயநிர்ணயம் என்பவற்றில் மிக உறுதியாக உள்ளன. தாயகத்தில் மட்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்திய சார்பு அரசியலை நடாத்துவதற்காக இதன் எதிர்த்தளத்தில் உள்ளது. ஆனாலும் மக்களிடம் இதனைக் கூறுவதில்லை. மக்கள் மத்தியில் முன்னர் கூறியது போல தேசம், சுயநிர்ணயம் என்பவற்றையே முழக்கமாக வைக்கின்றது. மறுபக்கத்தில் இந்தியாவிடம் அவற்றையெல்லாம் கைவிட்டதாக கூறி மண்டியிடுகின்றது.

இந்த இரட்டை நிலைப்பாடுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கொள்கையென்றால் அது தமிழ் மக்களிடம் நீண்ட காலம் நிலைத்திருக்கப் போவதில்லை

http://www.ponguthamil.com/paarvai/paarvaicontent.asp?sectionid=2&contentid={9081115F-9C3E-4940-8AEC-0289573FBADE}

தமிழ் மக்களின் அரசியல் தளங்கள் இன்று மூன்றாக உள்ளன. தாயகம், புலம், தமிழகம் என்பவையே அத்தளங்களாகும். புலமும், தமிழகமும் தமிழ்த்தேசம் - சுயநிர்ணயம் என்பவற்றில் மிக உறுதியாக உள்ளன. தாயகத்தில் மட்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்திய சார்பு அரசியலை நடாத்துவதற்காக இதன் எதிர்த்தளத்தில் உள்ளது. ஆனாலும் மக்களிடம் இதனைக் கூறுவதில்லை. மக்கள் மத்தியில் முன்னர் கூறியது போல தேசம், சுயநிர்ணயம் என்பவற்றையே முழக்கமாக வைக்கின்றது. மறுபக்கத்தில் இந்தியாவிடம் அவற்றையெல்லாம் கைவிட்டதாக கூறி மண்டியிடுகின்றது.

இந்த இரட்டை நிலைப்பாடுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கொள்கையென்றால் அது தமிழ் மக்களிடம் நீண்ட காலம் நிலைத்திருக்கப் போவதில்லை.

இந்த எழுத்தாளர் இவ்வாறு எழுதியிருப்பினும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி இதுவரை இறுக்கமாக உள்ளது ஒரு கேள்வியை எழுப்புகின்றது.

இந்தியாவுக்கு அடிபணியும் கூட்டமைப்பு இந்தியாவின் தூண்டுதலால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியதா? இல்லை இந்தியாவை மீறி அது விலகியதா?

எதுவானாலும் விலகியது நல்லது என்பதே தாயக, தமிழக மற்றும் புலம்பெயர் உறவுகளில் அதிகமானோரின் எண்ணமாக உள்ளது.

மாவை, சிறிதரன் ஆகியோரின் அண்மைய லண்டன் வருகை த தே கூட்டமைப்புக்கு லண்டனில் ஒரு அலுவலகம் திறப்பதற்கான நாடி பிடிக்கும் முயற்ச்சி, மேற்குலகம் புலம்பெயர் அமைப்புக்களையும் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறது ஆனால் அதனை இந்தியா விரும்பவைல்லை.தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலம் பெயர் தேசங்களிலும் அலுவலகங்களைத் திறக்க இந்தியா பணித்துள்ளது.இரட்டை முகத்தோடு எவ்வளவு நாளுக்குத் தான் இவர்கள் அரசியல் செய்ய முடியும்.முன்னர் கூட்டணியும் மக்களிடம் இதற்காகத் தான் அம்பலப்பட்டது.அனுபவங்களில் இருந்து மாவை போன்றோர் கற்க வேண்டும்.இந்தியாவின் கனவு இன்னொரு பகற்கனவாகவே ஆகும். நாம் காங்கிரசை பதவியில் இருந்து அகற்றாமல் இதனை மாற்ற முடியாது.யார் யார் காங்கிரசுக்கு எதிரிகளோ அவர்கள் எல்லோருடனும் தமிழ் நாட்டு உறவுகளுடன் சேர்ந்து வேலை செய்ய வேணும்.காங்கிரசை வேரறுக்காமல் ஒன்றும் நடவாது.

இந்த எழுத்தாளர் இவ்வாறு எழுதியிருப்பினும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகி இதுவரை இறுக்கமாக உள்ளது ஒரு கேள்வியை எழுப்புகின்றது.

இந்தியாவுக்கு அடிபணியும் கூட்டமைப்பு இந்தியாவின் தூண்டுதலால் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியதா? இல்லை இந்தியாவை மீறி அது விலகியதா?

அகூதா! நீங்கள் கேட்ட மிக முக்கியமான கேள்வி. அது அரசியல் நகர்வுகளை துல்லியமாக கண்காணிப்பதைக் காட்டுகிறது.

சிலவாரங்களின் முன்னர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் எம்மவர் சிலர் நட்புரீதியா மேற்கொண்ட ஒரு கலந்துரையாடலின் போது, சம்பந்தர் தெளிவாகக் கூறியது, "இலங்கை அரசு தற்போது இந்தியா சொல்வதைக் கேட்பதில்லை, அதனால் தான் பேச்சுவார்த்தையை இடை நிறுத்தினோம்" என்பதையே. 1 மணிநேரத்துக்கு மேலாக நடந்த இக் கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்டதால் அதனை இரண்டு தடவை நான் கேட்டுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.