Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்'

Featured Replies

'அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்'

இலங்கையின் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் சுமார் 60 பேர் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து தமிழோசையிடம் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், சுமார் 30 அதிகாரிகளால், இந்தக் கைதிகள் கொட்டும் மழையில் நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டதாக தனக்கு முறைப்பாடு செய்யப்பட்டதாகக் கூறினார்.

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் ஞாயிறன்று அனுட்டிக்கப்படும் நிலையில், அதனைக் கூறியே தாம் தாக்கப்பட்டதாக கைதிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.

கால் ஊனமுற்ற கைதிகளின் ஊன்றுகோல்கள் பறிக்கப்பட்டு அவற்றை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகவும் கைதிகள் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தரப்பு மற்றும் அரச தரப்புக் கருத்துக்களைப் பெற உடனடியாக முடியவில்லை.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று தான் கலந்து கொள்ளவிருந்த இரண்டு பொது வைபவங்கள் பாதுகாப்பு தரப்பினரின் தலையீடு காரணமாக நிறுத்தப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்

இன்று விடுதலைப் புலிகளின் மாவீரர்தின நாள் என்பதை பாதுகாப்பு தரப்பினர் ஏற்பாட்டாளர்களிடம் சுட்டிக்காட்டி வைபவங்களை நடத்தக் கூடாது என வற்புறுத்தியதாகவம் அவர் கூறுகின்றார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/11/111127_anurathapuraprisonattack.shtml

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ?

play-button.gif?w=28&h=30இன்று 20.11.2011 அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் இது.

இன்று (27.11.2011) அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் செய்தியின் எழுத்து வடிவம் இது:-

Quote

சிலவேளை எங்கள் மனம் துக்கப்படும். அதாவது யாருக்காக நாங்கள் இவ்வளவு துன்பப்பட்டோமோ அவர்கள் எங்களை ஒதுக்கி விட்டார்களா என்ற கேள்வி எழுவதுண்டு.

நாங்கள் இன்று நவம்பர் 27 மாவீரர் நாளைக் கொண்டாட இருந்தோம் என்று சொல்லித் தான் தேடுதலை மேற்கொண்டார்கள். இச்சோதனை மனிதாபிமான அடிப்படையில் இன்று நடக்கவில்லை. நாங்கள் நீதிமன்றுக்குச் செல்லும் போது அணிந்து செல்லும் ஆடைகள் யாவும் வெளியே எடுத்துப் போடப்பட்டு அதன் மீது நாங்கள் வைத்திருந்த சாப்பாடுகளைக் கொட்டினார்கள்.

2 மணிக்குச் சோதனை ஆரம்பித்த போது வெளியே மழை பெய்ய ஆரம்பித்து இருந்தது. எனவே சோதனையின் போது எம்மை அவர்கள் வெளியேறச் சொன்ன போது கட்டிடத்தின் தாழ்வாரத்தில் நாம் நிற்பதாகச் சொன்னோம். அதற்கு அவர்கள் உங்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் தரமுடியாது இந்த வளாகத்தை விட்டு வெளியே சென்று நிற்குமாறு கூறிக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள். ஆரம்பத்தில் குறைவாக பெய்து கொண்டிருந்த மழை பின்னர் கனதியாகப் பெய்யத் தொடங்க எம்மை உள்ளே விடுமாறு வேண்டினோம்.

ஊன்றுகால்களுடன் நின்றிருந்த சிறைக்கைதிகளைக் காட்டி அவர்களையாவது உள்ளே விடும்படி கேட்க அதற்கு அவர்கள் நீங்கள் செய்ய இருந்த காரியத்திற்கு உங்களிற்கு பாவ இரக்கம் பார்க்கக்கூடாது என்று கூறினார்கள்.

நீண்ட காலமாக இந்தச் சிறையில் இருக்கும் நிலையில் எமக்கு வழிபட ஒரு ஆலயம் இல்லை. எமக்குத் தரப்பட்ட அறையிலேயே நாங்கள் மும்மதத்தையும் பிரதிபலிக்கக்கூடியதாக ஒரு இடத்தை உருவாக்கி இருந்தோம். அவர்கள் முன்பே சொல்லி இருந்தார்கள் அந்த இடத்தை தாங்கள் சோதனை செய்ய மாட்டோம் என்று. ஆனால் இன்று அவ்விடத்தையையும் சோதனை செய்து படங்களையும் சொருபங்களையும் கீழே போட்டு மேசைகளை எல்லாம் வெளியே இழுத்துப் போட்டு விட்டார்கள். இதனைக் கேட்கப் போனபோது சிலரை கழுத்தைப் பிடித்து சுவரோடு தள்ளி விட்டார்கள்.

எந்த நாளில் வேண்டுமானாலும் அவர்கள் சோதனையைச் செய்திருக்கலாம். ஆனால் இன்றைய நாளில் நாங்கள் ஏதாவது செய்து விடுவோமோ என்று அஞ்சியே இன்று சோதனை நடவடிக்கையைச் செய்தார்கள். எங்களுக்கு எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். யாரும் எங்களை வந்து பார்த்துச் செல்வதில்லை. அமைச்சுக்களில் இருந்தோ அல்லது மனித உரிமை அமைப்புக்களில் இருந்தோ யாரும் வருவதில்லை. பெரும் அடக்குமுறைகளுக்குள்ளேயே நாம் சிறையிருக்கின்றோம்.

இது இன்று மட்டுமல்ல. தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. 40 பேர் இருக்க வேண்டிய இடத்தில் நாங்கள் 50 பேர் இருக்கின்றோம். இங்கே இருப்பவர்கள் யாவருக்கும் குடும்பச் சுமை உள்ளது.

முன்பு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் அதற்கு ஆதரவளித்தவர்களும் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டவர்களும் இங்கே இருக்கின்றார்கள். எல்லோருக்கும் குடும்பக் கஸ்டம் இருக்கின்றது. சிலருக்குத் தாய் தகப்பன் இறந்து விட்டார்கள் சகோதரர்கள் இறந்து விட்டார்கள். கால் கை இழந்த பின்னர் உறவுகளால் ஒதுக்கப்பட்டு வேண்டப்படாதவர்களாகவும் பலர் இங்கே இருக்கின்றார்கள்.

சாப்பாட்டுப் பிரச்சனை உள்ளது. எங்களுக்கு வருகின்ற சாப்பாட்டை நாங்கள் பகிர்ந்து சாப்பிடுவதால் இது பெரிதாகத் தெரிவதில்லை. அடிப்படைத் தேவைகளைப் பொறுத்தவரை முக்கால்வாசிப் பேருக்கு உடுப்புக்கள் தேவை. மருந்து என்று சொல்லும் போது உரிய நோய்க்கு உரிய மருந்து எடுக்க முடியாது. சிறை வைத்தியசாலைக்குச் சென்றால் பனடோலும் பிறிற்ரோனும் தான் தருவார்கள். இவை இரண்டையும் குடித்த பின்னர் எமக்கு உறக்கம் வந்துவிடும் பின்னர் எமது நோயை நாம் உணரமுடியாமல் இருக்கும் என்பதால்.

வழக்குகளைப் பொறுத்த வரை சிலருக்கு வழக்குகள் வந்துள்ளன. சிலருக்கு இல்லை. மனித உரிமை வழக்குகளைப் பொறுத்த வரை சட்டத்தரணிகள் ஆர்வம் காட்டுவதில்லை. சட்டத்தரணிகளுக்கு வழக்கிற்கான பணம் கொடுக்கவும் வழியில்லை. நான் இங்கு வந்து 5 வரடங்கள் ஆகின்றது. எனக்குரிய சட்டத்தரணியை ஒழுங்கு செய்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. மனித உரிமை அமைப்புத் தான் வழக்கை நடத்துகின்றது. அவர்கள் வழக்கை நடத்துவதால் நாங்கள் சட்டத்தரணியை அமர்த்தியிருந்தாலும் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. அநேகமாக எல்லோருடைய வழக்கும் அப்படித்தான் உள்ளது.

சிலர் நேரடியாகவே சட்டத்தரணியிடம் பணம் கொடுத்து வழக்கை நடத்துகின்றனர். சில பேருடைய வழக்கு நிலுவையில் உள்ளது. சட்டமா திணைக்களத்தில் இருந்து முடிவு வராது. நீதிமன்ற இழுத்தடிப்பு மிக அதிகம். இது எப்படி என்றால் இன்று நீதவான் வழக்கில் இருந்தால் வழக்கில் அரசதரப்பு சட்டத்தரணி வரமாட்டார் அல்லது எமக்குச் சாட்சி சொல்ல இருந்தவர் வரமாட்டார். அல்லது எமது தரப்புச் சட்டத்தரணி வரமாட்டார். நீதவானுக்கும் இது தெரியும். யாரும் எங்கள் வழக்கை விரைவாக முடித்துக் கொடுப்பதில் அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை.

இங்கு இருக்கும் யாவருமே உழைக்கக்கூடிய வயதில் இருப்பவர்கள் தான். பெற்றோர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் ஒன்றில் மிகவும் வயதானவர்களாக இருப்பார்கள் அல்லது இறந்து இருப்பார்கள். சகோதரர்களை எடுத்துக் கொண்டால் ஒன்றில் மிகவும் வயதில் குறைந்து இருப்பார்கள் அல்லது வயது வந்தவர்களாக இருந்தால் இன்றுள்ள நிலையில் ஒன்றில் சிறையில் இருப்பார்கள் அல்லது இராணுவத்திற்குப் பயந்து ஓடிக் கொண்டு இருப்பார்கள்.

அநேகமானவர்களின் குடும்பங்கள் அன்றாடம் உழைத்து அரை வயிறு கால் வயிறு உண்பவர்கள் தான். இப்படிப் பல பிரச்சனைகள் வார்த்தையால் சொல்ல முடியாது. யாருக்குச் சொல்லிப் புரிய வைப்பது.

இப்பிரச்சனைகளைத் தீர்க்க புலம்பெயர்ந்த மக்கள் தான் அக்கறை எடுக்க வேண்டும். இந்த நிலையிலும் நாங்கள் ஒரே இனம் என்ற உணர்வோடு தான் இங்கே இருக்கின்றோம். இன்னும் எத்தினை வருடமானாலும் நாங்கள் உள்ளே இருந்தாலும் பிரச்சனை இல்லை என்ற உணர்வோடு தான் இன்றும் இருக்கின்றோம். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஆனால் எங்கள் மனமும் உணர்வும் எப்பவும் இப்படியேதான் இருக்கும்.

சிலவேளை எங்கள் மனம் துக்கப்படும். அதாவது யாருக்காக நாங்கள் இவ்வளவு துன்பப்பட்டோமோ அவர்கள் எங்களை ஒதுக்கி விட்டார்களா என்ற கேள்வி எழுவதுண்டு. இன்றும் நாங்கள் அவர்களை ஒதுக்கி வைக்கப்போறதில்லை.

இலங்கையில் சரணடையாமல் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்துப் பிடிபட்ட 800க்கு மேற்பட்ட அரசியல் கைதிகள் இருக்கின்றார்கள். இவ்வாறான எங்களுக்கு எமது மக்களோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்போ எமக்காகக் கதைத்தாகத் தெரியவில்லை. நாங்கள் வெளியே வர வேண்டும் என்றால் கட்டாயம் எங்களின் வழக்கு முடிய வேண்டும். வழக்கு முடிய வேண்டும் என்றால் எங்களின் உறவுகள் அதற்கு உதவ வேண்டும் என்பதே எங்களின் ஆவலாக உள்ளது.

எங்கள் கைதிகளின் எதிர்பார்ப்பு எங்கள் மக்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் எங்களுக்கு உதவி செய்து எம்மை விடுவிப்பார்கள் என்பது தான். ஆனால் அந்த உதவி எந்தக் கால கட்டத்திற்குள் வந்து சேரும் என்று தெரியாது.

(அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து அங்கு வாடு(ழு)ம் சிறைக்கைதி ஒருவரின் வாக்குமூலம்)

உதவ விரும்புகிற உறவுகள் தொடர்பு கொள்ள :-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

(முக்கிய குறிப்பு :- இச்செய்தியை தங்கள் இணையங்களில் வெளியிட விரும்புவோர் இக்கடிதம் வெளியாகிற எமது தளத்தின் மூலத்தைக் குறிப்பிட்டு வெளியிடுமாறு வேண்டுகிறோம். மூலத்தை மறைத்து இக்கடிதத்தை பிரதிபண்ணி வெளியிடும் ஊடகங்கள் இணையங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதனைத் தாழ்மையுடன் அறியத்தருகிறோம்)

...

  • தொடங்கியவர்

உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்தனர் அநுராதபுர தமிழ்க் கைதிகள்

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியிருப்பதாக தனக்கு கைதிகளின் பெற்றோர் தெரிவித்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலாளர் குமரகுருபரன் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்..

நேற்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகள் பலர் சிறைக் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் அச்சம்பவத்தினை திரிவுபடுத்தி, மாவீரர்தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டமையை தவிர்க்க முற்பட்டபோதே கைதிகளை தாக்க நேர்ந்ததாக செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர். உண்மையில் அப்பாவிச் சிறைக்கைதிகள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இன்று உங்களுக்கு விஷேட சாப்பாடு தருகிறோம் என்று கூறி, தமிழ்க் கைதிகளை அழைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் சிறைக் காவலர்கள்.

இந்நிலையிலேயே தங்களுக்கு நிகழ்ந்த அநீதியினை -சம்பந்தப்பட்டவர்கள் தட்டிக் கேட்கும்வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் அறிவித்துள்ளனர்.

அப்பாவி சிறுபான்மையினர் மீது அரசின் அதிகாரிகள் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதால் நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. முதலில் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற இதுபோன்ற கீழ்த்தரமான அரச அதிகாரிகளை அரசு தண்டிக்க வேண்டும். இல்லையேல் நல்லிணக்கம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லாது போய்விடும் என்று குறிப்பிட்டார்.

கைதிகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம் குறித்து சிறைச்சாலைகள் புணர்வாழ்வு அமைச்சின் இணைப்புச் செயலருக்கு அறிவித்திருக்கிறேன். இவ்விடயத்தினை அமைச்சின் மூலமாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர் எனக்கு தெரிவித்தார் என்றும் குமரகுருபரன் மேலும் கூறினார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/31643-2011-11-28-11-36-11.html

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

[ உலகத் தமிழ் செய்திகள் ] - [ Nov 28, 2011 13:47:17 GMT ]

சிறைச்சாலை அதிகாரிகளினால் தமிழ் அரசியல் கைதிகள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.தமிழ் அரசில் கைதிகள் மீதான இவ்வாறன தாக்குதல்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாடு படுபாதாளத்துக்குள் தள்ளப்படும் நிலை ஏற்படலாம் என்றும் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

தமிழ் மக்களை இராணுவம் ஒருபுறம் ஆட்டிப் படைக்கும் அதேவேளை, மறுபுறம் தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் வாட்டி வதைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகின்றார். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஐக்கியம் என்பவற்றைப் பற்றிப் பேசும் அரசு இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டால் ஐக்கியம் எப்படி சாத்தியப்படும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அமைச்சரிடம் முறையிட அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவருடன் அழைப்பை ஏற்படுத்த முடியாமல் போனதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். எனினும் இந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிமின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்: உலகத் தமிழ் செய்திகள்

  • தொடங்கியவர்

அனுராதபுரம் சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தை ஒளிப்பதிவு செய்து வெளிநாடுகளுக்குஅனுப்பிய சம்பவம் குறித்து விசாரணை

அனுராதபுரம் சிறைச்சாலையில், தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவத்தை அதி நவீன தொழிற்நுட்பத்துடன் கூடிய தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் குறித்து, உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் பீ. டப்ளியூ. கொடிப்பிலி நேற்று (28) அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை சிறையதிகாரிகள் கட்டி வைத்து தாக்குவது போன்ற காட்சிகள், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப்புலி சந்தேக நபர்களான இந்த அரசியல் கைதிகள், கடந்த 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 19 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில், 4 தொலைபேசிகள் 3 ஜி தொழிற்நுட்பத்தை கொண்டவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் அதிகாரிகளின் தேடுதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தம்மை சிறையதிகாரிகள் சித்தரவதைக்கு உட்படுத்துக்கின்றனர் என வெளிகாட்டும் வகையில், வீடியோ காட்சிகள் அனுப்பபட்;டுள்ளதாக அதிகாரிகளுக்கு அறிய கிடைத்துள்ளதாக சிறைச்சாரல தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் செய்மதி தொழிற்நுட்பத்தின் ஊடாக கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி, இந்த வீடியோ காட்சிகளை அனுப்பியுள்ளனர் எனவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த தொலைபேசிகளை கண்டுபிடிக்க விசேட தேடுதல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்: உலகத் தமிழ் செய்திகள்

  • தொடங்கியவர்

அனைத்து சிறைச்சாலைகளிலும் உண்ணாவிரதப் போராட்டம்

நாட்டில் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை சிறைக் கைதிகள் கொண்டாடவிருப்பதாகத் தகவல் பரவியதையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள் கடந்த 27ஆம் திகதியன்று தாக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போது சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை தம்மீதான குற்றச்சாட்டுக்கள் பொய் எனத் தெரிவித்துள்ள கைதிகள், முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் கெனடி அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு கைதிகளைச் சந்தித்த போதும் அது தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

http://www.alaikal.com/news/?p=89438

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.