Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறாதவடுக்களைப் பேச வரும் சயந்தனின் நாவல்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் முகிழ்த்த நாவலாசிரியர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் நிலையில்தான் இன்னும் இருக்கிறது...இந்த நிலையில் சயந்தனின் ஆறாவடு நாவலுடனான வரவு ஈழத்து இலக்கியத்திற்க்கு புத்துயிர் கொடுக்கும் ஒன்றாக இருக்கும்...சயந்தனின் நாவல் பற்றிய சிறுகுறிப்பை இன்று தமிழ்ப் பேப்பரில் படிக்கக்கிடைத்தது...அதில் அந்த நாவலில் வரும் ஒரு சிறுபகுதியை இணைத்திருந்தார்..என்னடா இது என்னைப்பற்றியே எழுதி இருக்குது எண்டு வியந்தேன்..அந்தக்காலப் பகுதியில் அந்தமண்ணில் இருந்திருந்தால் நீங்கள் எல்லோரும் அப்படித்தான் உணருவீர்கள்...அந்தக் காலப்பகுதியில் அங்கு இல்லாதவர்கள் அந்தக் காலத்தை சயந்தனின் எழுத்துக்களில் சுவாசிப்பீர்கள்..எங்கட மண்ணின்ர தூசியைக் கூடச் சுவாசித்துப் பாக்காதவர்கள் எல்லாம் உலோகங்களாய் எங்கட கதையளை வளைத்துப்போட பாத்து வியந்த நீங்கள் உங்கள் குழந்தைகள் வலியோடு அந்த வாழ்க்கையைப் பதிவு செய்துகொண்டு உங்களிடம் வருகிறார்கள்...தட்டிக் கொடுங்கள்...இலக்கியத்திலும் ஈழம் சளைத்ததல்ல...அந்த இணைப்பு கீழே...

aaravadu-194x300.jpg

தமிழினி வெளியீடாக வெளிவரவிருக்கும் ‘ஆறா வடு’ நாவலுக்கு நாவலாசிரியர் சயந்தன் எழுதிய முன்னுரை:

கடந்துபோன மூன்று தசாப்த காலத்தில் யுத்தத்தால் வதைபட்ட ஈழச் சனங்களின் வாழ்வில் அவ்வப்போது அமைதிக்கால ஒளிக்கீற்றுகள் சட்டென மின்னி மறைந்திருக்கின்றன.

இந்திய ராணுவம் அந்த மண்ணில் போய் இறங்கியபோது அப்படியொரு நம்பிக்கை அந்த மக்களிடத்தில் முகிழ்த்திருந்தது. பதுங்குகுழியற்ற வாழ்வொன்றை பாரதம் தந்துவிடுமென அவர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். முடிவில் நம்பிக்கைகள் சிதைந்தழிந்தன. சனங்களின் முகங்களில் போர் அமிலமாய்த் தெறித்தது.

நீண்டு பத்தாண்டுகளின் பிறகு மற்றுமொரு அமைதிக்கான காலம் ரணில் புலிகள் பேச்சுக்காலத்தின்போது அரும்புவதாக அந்தச் சனங்கள் நம்பினார்கள். பேச்சுவார்த்தையின் தேனிலவுக்காலம் அதீத நம்பிக்கைகளை அவர்களிடத்தில் ஊட்டியிருந்தது. இற்றில் அந்த அமைதியின் முடிவும் முன்னெப்போதும் இல்லாத பெரும் ஊழிக் கொடூரத்தை உருவாக்கிக் கழிந்து போனது.

இப்படியான, 87இல் தொடங்கி 2003 வரையான இந்த இரண்டு ‘அமைதி’க் காலங்களுக்கு இடையே இந்த நாவலின் கதை நகர்கிறது.

இந்நாவலை நான் எழுதிய வேளையில் என்னை ஊக்குவித்து உதவிகள் புரிந்த ‘விருபா’ குமரேசன், இந்நாவலுக்குப் பெயர் சூட்டுவதில் உதவிய கவிஞர் மகுடேசுவரன், வெளியிடும் தமிழினி பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றி.

சயந்தன்

www.sayantha.com

ஆறாவடு நாவலிலிருந்து ஒரு பகுதி:

சிவராசனால் தீர்மானமான முடிவுக்கு வரமுடியவில்லை. சனங்கள் கிளாலிப் பக்கமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். அவரது மனதிற்குள் பெரும் பிரளயமே நடந்துகொண்டிருந்தது. மட்டுவிலிலும், சாவகச்சேரியிலும் சனங்கள் இராணுவத்திடம் அகப்பட்டிருந்தார்கள். அவர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இல்லை சனங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள் என்றும் இளம் பெண்களைத் தனியே பிரித்து எடுக்கிறார்கள் என்றும் ஒவ்வொருமாதிரிக் கதைக்கிறார்கள்.

சிவராசனின் குடும்பம் எழுதுமட்டுவாளில் ஒரு சேர்ச்சில் தங்கியிருந்தது. அவருக்கு மூன்றும் குமர்ப்பிள்ளைகள். அதுதான் அவரை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அவர்களோடு யாழ்ப்பாணம் திரும்புவதை அவரால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. ஆமி கொடிகாமத்திற்கும் வந்துவிட்டதாய்ச் செய்தி வந்தபோது அவர் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது.

“அழகு, நீ பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வன்னிக்குப் போ… நான் யாழ்ப்பாணம் போறன்…” என்று மனைவியிடம் சொன்னார். அழகு தலையில் கை வைத்து ஒப்பாரி வைக்கத் தொடங்கினாள்.

“என்ன புசத்திறியள் நீங்கள்… எனக்கு வன்னியில ஆரைத் தெரியுமெண்டு போறது… மூண்டு குமருகளை வைச்சு நான் அங்கை என்னத்தைச் செய்யிறது. நீங்களும் வாறதெண்டா வாங்கோ வன்னிக்குப் போவம். இல்லாட்டி ஆமிக்காரனிட்டைத் தப்பியொட்டினா யாழ்ப்பாணம் போவம். இனி அந்தக் கடவுள் விட்ட வழி.”

மூன்று பிள்ளைகளும் மிரண்டு போயிருந்தார்கள். மூத்தவள் தீபா ஏற்கனவே நவாலி சேர்ச்சில், புக்காரா அடியில் அகப்பட்டு அருந்தப்பில் உயிர் தப்பியிருந்தாள். அந்தக் காயத் தழும்புகள் இப்பொழுதும் முகத்தில் இருந்தன. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு குண்டுச் சத்தம் கேட்டாலோ விமானங்களின் இரைச்சலைக் கேட்டாலோ அவளது முகம் இருண்டு விடும். இப்பொழுதும் அப்பிடித்தான், துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. ஆனையிறவில் இருந்து ஆட்லறிகள் இவர்களைக் கடந்துபோய் வெடித்தன. அவள் தன்பாட்டில் காதுகளைப் பொத்திக்கொண்டு நிலத்தில் விழுந்து கிடந்து குளறுவதும் மரங்களுக்குப் பின்னால் ஒளிவதுமாக அந்தரித்துத் திரிந்தாள்.

இப்படியொரு அவலம் தனக்கு நேரும் என்று சிவராசன் கனவிலும் நினைத்ததில்லை. யாழ்ப்பாணத்தை விட்டு வேறு பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவிப்பு வந்தபோது அவரின் குடும்பம் இரவுச் சாப்பாட்டை முடித்துத் தூங்குவதற்கு ஆயத்தமாயிருந்தது. சிவராசனின் அம்மா ஒரு பாரிசவாத நோயாளி. நடக்கவோ சைக்கிளில் ஏறி உட்காரவோ முடியாதவர். எண்பத்தியிரண்டு வயதிலிருந்த அவர் படுத்த படுக்கையிலேயே நாட்களைக் கடத்தினார். ஒவ்வொரு நாளும் மருந்துகளை எடுக்க வேண்டியிருந்தது.

இடம்பெயரச் சொன்னபோது நாளைக்கே சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தில் பெரும் தாக்குதலைத் தொடுத்து மக்களைச் சிறைப்பிடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதன் சதிவலையில் இருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் காப்பாற்ற இரவோடு இரவாக யாழ்ப்பாணத்தைக் கடக்கும்படியும் சொல்லப்பட்டிருந்தது.

சிவராசன் தன் மூன்று பிள்ளைகளைப் பற்றியே நினைத்தார். அதற்குக் காரணமிருந்தது. அவர் இயக்க ஆதரவாளராகச் செயற்பட்டிருந்தார். இயக்கத்தின் தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும் அவர் இயங்கியிருந்தார். அவரது நாடகங்களில் ஊருக்குள் புகுந்த சிங்கள இராணுவத்தினர் முதலில் பெண்களைத் தேடித் தேடிப் பிடித்து ஸ்கிரீனுக்குப் பின்னால் இழுத்துச் சென்றார்கள். அதற்குப் பிறகு வீறிடும் பெண் குரல்களால் அவர் அரங்கினை நிறையச் செய்தார். தெருக்கூத்துகளில் பச்சை உடையணிந்த ஆமிக்காரர்கள் பூதங்கள் வருவதைப் போல கைகளை வீசி கால்களை உதைத்து வந்து இளைஞர்களின் தலைகளைச் சீவி எறிந்தார்கள். நீண்ட கூரிய வாள்களால் அவர்களின் நெஞ்சைக் குத்திக் கிழித்தார்கள்.

அப்படியானவருக்கு தானும் பிள்ளைகளும் வெளியேறாதிருப்பது தற்கொலைக்குச் சமமானது என்பது புரிந்திருந்தது. ஆகக்குறைந்தது காலை வரை சமாளிக்க முடிந்தால் விடிந்ததும் அவரது பாரிசவாத அம்மாவினையும் வெளியேற்ற முயற்சிக்கலாம் என்று அவர் நம்பினார். பிள்ளைகளிடம் உடுப்புகள், காணி வீட்டு உறுதிகள், நகைகளை எடுத்துப் பத்திரப்படுத்தச் சொல்லிவிட்டு றோட்டுக்கு வந்தார்.

சனங்கள் சைக்கிளில் கட்டிய மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிக்கொண்டிருந்தனர். “எட்டி நடவணை” என்றும் “கெதியில வா” என்றும் குரல்கள் ஒலித்தபடியிருந்தன. இருட்டில் யாரோ சிவராசனை அழைத்தார்கள். “சிவராசண்ணை, நல்லூரடிக்கு ஆமி வந்திட்டானாம். சனங்கள் அரியாலைக்கால வெளியில போகுதுகள். பொம்பிளைப் பிள்ளைகளை வைச்சிருக்கிறனியள். கெதியா வெளிக்கிடுங்கோ.”

சிவராசன் வீட்டுக்கு ஓடிவந்தார். “பிள்ளையள் வெளிக்கிடுங்கோ… அழகு, அரிசிமாவும் கொஞ்சம் தண்ணியும் எடுத்துக் கட்டு. தீபா, நீ ஆஷாவை ஏத்து. சோபா தன்ரை சைக்கிள்ளை வரட்டும்” என்றவர் அம்மா படுக்கும் கட்டிலருகே வந்தார். மருந்து டப்பாக்களையும் பெரிய ஐந்து க்ளாஸ்களில் தண்ணீரையும் நிரப்பி அம்மாவின் கை எட்டும் தூரத்தில் வைத்தார். அரிக்கன் லாம்புக்குள் கொஞ்ச மண்ணெண்ணெய் விட்டு வெளிச்சத்தைத் தூண்டிவைத்து “அம்மா” என்றார்.

“ம்…” என்ற முனகல் மட்டும் கேட்டது. அம்மா கண்களைத் திறந்திருந்தார்.

“எணை, இதில மருந்தும் தண்ணியும் இருக்கு. நான் இவளவையைக் கொண்டுபோய் சாவகச்சேரிப் பக்கமா விட்டுட்டு விடியுறதுக்குள்ளை வந்திடுவன்.” அம்மா கை நீட்டி சிவராசனின் கைகளைப் பற்றிக்கொண்டார். “நீ போட்டு வா, பிள்ளையள் பவுத்திரம். ஒரு இரவுதானே… நான் இருப்பன்… சலத்துக்கு அந்தச் சட்டியை வைச்சிட்டுப் போ.. ”

சிவராசனும் அழகுவும் பிள்ளைகளும் வீதிக்கு வந்தார்கள். அவர் தன் அம்மாவிடம் திரும்பி வருவதாகச் சொன்ன விடியற்காலை அவர்கள் அரியாலையில் நின்றனர். வானம் தூறிக்கொண்டிருந்தது. ஒரு அடி எடுத்து வைப்பதற்கு அவர்களுக்கு நிமிடங்கள் செலவானது. நாள் முழுதும் நடந்தார்கள். இரவு நடுச்சாமம் தாண்டியபிறகு சாவகச்சேரியில் பஸ் ஸ்ரான்ட் ஒன்றுக்குள் இடம் பிடித்து பிள்ளைகளைப் படுக்கவைத்துவிட்டு சிவராசன் திரும்பவும் ஊருக்குப் புறப்பட்டார். சைக்கிளை ஓடிச் செல்ல முடியவில்லை. சனங்கள் இப்பொழுதும் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தார்கள். இறங்கி சைக்கிளை உருட்டிச்செல்ல ஆரம்பித்தார். அடுத்தநாள் காலை கைதடிப் பாலத்தில் வைத்து சிவராசனை இயக்கம் மறித்து “அங்காலே போகமுடியாது” என்றது.

“என்ரை அம்மா அங்கை தனியக் கிடக்கிறா.. அவவைப் போய்க் கூட்டியரவேணும். என்னை விடுங்கோ… வயசு போன நடக்கமாட்டாத மனிசி அவ…”

“போனா வரமுடியாமப் போகும். ஆமி கிட்ட நெருங்கிட்டான். கடும் சண்டை நடக்குது. நீங்கள் திரும்பிப் போங்கோ.”

சிவராசனுக்கு விம்மி அழுகை வந்தது. றோட்டோரமாக குந்தியிருந்து அழத்தொடங்கினார். இயக்கப் பெடியனொருவன் அருகில் வந்தான். “எதுக்கும் நீங்கள் உங்கடை வீட்டு முகவரியைத் தாங்கோ… உங்கடை ஏரியாப்பக்கம் நிக்கிற எங்கடை ரீமுக்கு அறிவிக்கிறம். அவையளாலை கண்டுபிடிக்க முடிஞ்சால் கடலால உங்கடை அம்மாவை எடுக்கலாம்.”

வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து முகவரியை அவன் நீட்டிய கொப்பியில் விபரமாக எழுதிக் கொடுத்தார். கேணியடிக்குப் போனால், கேணியடிக்கு நேரே போகிற ஒழுங்கையில் இரண்டாவதாக இன்னொரு குச்சொழுங்கை பிரிகிறது. அதில் இரண்டாவது ஓட்டு வீடு. முன்னாலே கிடுகில் வேய்ந்த தாவாரம். அம்மா வெளிவிறாந்தையில் படுத்திருப்பா.

அப்படியே தனது முகவரியையும் அவர் எழுதினார் பருத்தித்துறை வழி பஸ் ஸ்ரான்ட், சாவகச்சேரி சந்தி.

அதற்குப் பிறகு காணுகிற தெரிந்த இயக்க ஆட்களிடமெல்லாம் அம்மாவைப் பற்றி சிவராசன் விசாரித்துத் திரிந்தார். யாழ்ப்பாணத்தில் தனித்துவிடப்பட்ட வயதுபோன ஒன்றிரண்டு பேரை இயக்கம் அழைத்து வந்திருக்கிறது என்ற கதை பரவியிருந்தது. கல்வியங்காட்டில் ஒரு வயதான பாட்டியை வெளிநாட்டிலிருந்த அவரின் பிள்ளைகள் வேலையாளை அமர்த்திப் பார்த்து வந்திருக்கிறார்கள். அன்றைக்கு இரவு பாட்டியை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு வேலையாள் வெளியேறிவிட, பாட்டி உள்ளே இருந்து நாள் ஓயாமல் கத்தியிருக்கிறார். அந்தப் பக்கங்களில் நின்ற இயக்கம் கதவை உடைத்து அவரை மீட்டு கொழும்புத்துறையில் படகில் ஏற்றி கச்சாயில் கொண்டுவந்து இறக்கியது. பேப்பரில் பாட்டியின் படத்துடன் வெளியான அறிவிப்பொன்றில் உறவினர்கள் தொடர்பு கொள்ளும்படி கேட்கப்பட்டிருந்தது. அப்படி அம்மாவின் படமும் பேப்பரில் வருமென்று சிவராசன் எல்லாப் பேப்பர்களையும் விடாமல் படித்தார். அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தூர்ந்து போனது.

சில உள் கிராமங்களில் சனங்கள் முழுவதுமாக வெளியேறிவிடாமல் ஒன்றிரண்டு பேர் அங்கேயே தங்கிவிட்டதாக சிவராசன் கேள்விப்பட்டிருந்தார். அவரது ஊரிலும் அப்படி யாரேனும் தங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் அம்மாவைக் கவனித்துக் கொள்ளக்கூடும் என்றும் அவரது அடிமனதிற்குத் தோன்றியது. அப்படியொரு நம்பிக்கையில் அவரால் நாட்களைக் கடத்த முடிந்தது.

சாவகச்சேரி பஸ் ஸ்ரான்டில் இருந்து சிவராசன் குடும்பம் எழுதுமட்டுவாளில் ஒரு சேர்ச்சுக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள். சேர்ச்சில் மொத்தம் பன்னிரண்டு குடும்பங்கள் தங்கியிருந்தன. அவர்களில் ஏழு குடும்பம் வன்னிக்குப் போயிருந்தது. மற்றவர்கள் இனி என்ன ஆனாலும் ஒரு அடி தன்னும் நகர்வதில்லை என்று சொன்னார்கள். இன்று காலை சாவகச்சேரிக்கு இராணுவம் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டபோது ஆண்டவன் உயிரோடு விட்டுவைத்தால் யாழ்ப்பாணத்திற்கே திரும்பி விடப்போவதாக அவர்கள் சொன்னார்கள். சிவராசனால்தான் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

இந்த மூன்று பெண்பிள்ளைகளையும் தான் பெற்றிருக்கக் கூடாது என்ற ஒரு நினைப்பு அவருக்குள் ஓடி மறைந்த அடுத்த வினாடி “வெளிக்கிடுங்கோ கிளாலிக்கு” என்றார் அவர். அழகுவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். தீபா ஆஷாவை சைக்கிளில் ஏற்றிக்கொள்ள, சோபா தனியாக வந்தாள். ரோட்டில் ஏறினார்கள். கிளாலிப் பக்கமாக சுப்பர்சொனிக் விமானங்கள் காதுகளைச் செவிடாக்கி இரைந்தன. தீபா சைக்கிளில் இருந்து குதிப்பதும் மரங்களுக்குள் விழுந்து பதுங்கி ஒளிப்பதுமாக இருந்தாள். கொஞ்சத்தூரத்தில் சனங்கள் எதிர்த்திசையில் ஓடிவந்தார்கள்.

“கிளாலிப் பாதை மூடியாச்சு. கடைசியாப் போன வள்ளத்தை கடலில வைச்சே அடிச்சுக் கவிட்டுட்டாங்கள்” என்று இளைஞன் ஒருவன் கத்தியபடி ஓடினான்.

“இயக்கம் சனங்களைக் கிளாலிக்கரையில நிக்கவேண்டாம் எண்டும் திரும்பி ஊருக்குப் போகச் சொல்லியும் சொல்லிட்டு போயிட்டுது.”

“என்ரை… ஐயோ… நாங்கள் இடையில மாறுப்பட்டுட்டம், முதல் போட்டில என்ரை அவர் ஏறினவர். இங்காலை நான் போட் ஏறத்துக்கு முதல் திரும்பிப் போகச் சொல்லிப்போட்டினம். இவர்ற்றை வள்ளம் வெளிக்கிட்டாப்பிறகுதான் கடலுக்கை ஆமி அடிச்சது. எனக்கெண்டால் என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல…”

சிவராசன் நடக்கிறது நடக்கட்டும் என்று சைக்கிளைத் திருப்பினார். அவர் அழகுவிடம் சைக்கிளைக் கொடுத்து ஆஷாவை ஏற்றி உருட்டச் சொன்னார். தீபாவைத் தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டார். கொடிகாமம் சந்திவரை அவர்கள் நடந்து வந்தார்கள். சந்தியில் சனங்களின் வரிசை நீண்டிருந்தது. கடைசித் தொங்கலில் நின்ற சிவராசன் அவரது நாடகங்களிலும் தெருக்கூத்துகளிலும் வருவதைப் போன்ற பச்சை உடையும் சட்டித்தொப்பியும் அணிந்த ஒரிஜினல் ஆமிக்காரன் ஒருவனை மிகக்கிட்டத்தில் பார்த்தார். தீபா சைக்கிள் ஹான்டிலை இறுக்கினாள். இராணுவம் அவர்களின் பெயர்களையும் முகவரியையும் பதிவு செய்தது.

“பொண்ணுக்கு எத்தனை வயசு?”

“பதினாறு… மற்றவக்கு பதின்னாலு… கடைசிக்கு பத்து…”

“ம்..ம்… ” அவன் ஒரு மாதிரியாக ம் கொட்டினான். பிறகு வீட்டுக்குப் போகலாம் என்றான். சிவராசண்ணை மனதிற்குள் ‘தெய்வமே’ என்றார்.

ஆறு மாதத்தில் றோட்டுகளும் ஒழுங்கைகளும் வளவுகளும் அடையாளமே தெரியாமல் மாறியிருந்தன. சருகுகளும் கஞ்சல்களும் குவிந்துபோய்க் கிடந்தன. வீட்டைக் கண்டதும் பொலபொலவென்று கண்ணீர் வந்தது. சிவராசன் படலையடியில் சைக்கிளைப் போட்டுவிட்டு அம்மா என்று கத்திக்கொண்டு கட்டில் அருகே ஓடினார். வளவிற்குள் ஒரு வித்தியாசமான மணம் பரவியிருந்தது. வெளி விறாந்தைக் கட்டிலில் இன்னமும் ஊனம் வடிந்துகொண்டிருந்த எலும்புக் கூடொன்று நீட்டி நிமிர்ந்து கிடந்தது. அருகில் சில மருந்து டப்பாக்களும் தண்ணீர் இல்லாத ஐந்து பெரிய க்ளாஸ்களும் இருந்தன. கட்டிலில் புழுக்கள் நெளிந்தன.

http://www.tamilpaper.net/?p=5128

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தா உனக்கு தேவையில்லாத வேலை இது :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தந்தையின் ஆதங்கம், அங்கலாய்ப்பு, இயலாமை, தவிப்பு எல்லாவற்றையும் மிகவும் தத்ரூபமாக எழுதியிருக்கின்றார், சயந்தன்!

எவ்வளவு கொடுமைகளை எமதினம் அனுபவித்திருக்கின்றது என எண்ணுகையில், இதயத்தின் துடிப்பு உச்ச நிலையை அடைகின்றது!

பெண்களை வெறும் நுகர்வுப் பொருட்களாகவே இராணுவமும், ஏன் எமதினத்தில் பிறந்தவர்கள் கூடப் பார்க்கும், பரிதாப நிலை கூட இன்று வரை மாறவில்லை!

எல்லாவற்றையும் துறந்த புத்தனின் மதம் எங்கே? அந்த மதத்தின் காவலர்கள் என்று கூறித் திரியும் இந்த நாய்கள் எங்கே?

தொடர்பு காண நினைக்கின்றேன்! தொடுக்க முடியவில்லை!

நல்ல ஒரு இணைப்புக்கு நன்றிகள், சுபேஸ்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சுபேஸ் மற்றும் புங்கையூரான்..

சாத்திரி.. ஏனய்யா...

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ........மீண்டும் ஒருதாயக அவலம் நினைவுகளில் ...

.இப்படிதான் நம்மூரிலும் ஒரு அம்மம்மா .இறந்து காணப்பட , .பின்னர் இயக்க பிள்ளைகள் அடக்கம் செய்தார்கள்.

Edited by நிலாமதி

நன்றிகளுடன் பாராட்டுக்களும் சயந்தன்! எழுத்துப்பணி தொடரட்டும்!

வாழ்த்துக்கள். நிச்சயமாக தங்கள் புத்தகத்தினை கையில் பெறுவேன். முழுவதும் வாசித்துவிட்டு சொல்கின்றேன். :)

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறாவடு நாவல் - சில குறிப்புக்கள்

தமிழ்நாட்டில் புத்தக கண்காட்சியில் ஆறாவடுநாவல் வெளியானது. அதனையொட்டிய சில குறிப்புக்களை இங்கு பதிகிறேன்.

1.விமர்சனக் குறிப்பு ஒன்று

http://www.twitlonger.com/show/f93o3v

2.புதியதலைமுறை இதழில் வெளியான குறிப்பிடத்தகுந்த 10 புத்தகங்கள் வரிசை..

http://www.puthiyathalaimurai.com/this-week/457

3.எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இம்முறை கண்காட்சியில் 10 புத்தகங்களை விகடனில் பரிந்துரைத்திருந்தார்.

http://news.vikatan.com/index.php?nid=6000

4.கற்றது தமிழ் இயக்குனர் ராம் கண்காட்சியில் 10 புத்தகங்களை விகடனில் பரிந்துரைத்திருந்தார்

http://news.vikatan.com/index.php?nid=6032

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.