Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசிய அரசியல் டக்ளஸ் எதிர்ப்பு அரசியலாக முடங்கிவிடக் கூடாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய அரசியல் டக்ளஸ் எதிர்ப்பு அரசியலாக முடங்கிவிடக் கூடாது!

தமிழ் சாணக்கியன்

சிவில் சமூகத்தினரது பகிரங்க அறிக்கைக்குத் திரு.சம்பந்தன் அவர்கள் வெளிப்படையாகப் பேச முடியாது, கூட்டம் போட்டு பேசலாம் என்கிறார். ஆனால் அவரது புலம் பெயர்ப் பிரதிநிதிகளோ, கையெழுத்திட்டவர்கள் ஈ.பி.டி.பி சார்பு என்றும் அரச சார்பு என்றும் வசைபாடுகின்றனர். (திரு நக்கீரனது எதிர்வினை பொங்குதமிழ் இணையத்தளத்திலும் திரு சம்பந்தனது எதிர்வினை தேசம்நெட் இணையத்தளத்திலும் வெளிவந்திருந்தது) திரு நக்கீரன் த.தே.கூ வினது கனடா பிரதிநிதி என்றும் திரு ஐ.தி.சம்பந்தன் இவர்களது இலண்டன் பிரதிநிதி என்றும் பரவலாக அறியப்படுகின்றது. இவர்கள் இருவரும் தம்மோடு சம்பந்தப்பட்டவர்கள் அல்ல என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே.கூ) வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அல்லாவிடில் இவர்களது கூற்றுக்களை த.தே.கூ, சிவில் சமூகத்தினர் மீது தொடுத்திருகின்ற மறைமுக வன்முறையாகவே கருத வேண்டியுள்ளது.

தமது உயிரையும் பொருட்படுத்தாது தாயகத்தில் இருந்து கொண்டு (நக்கீரன், இலண்டன் சம்பந்தன் போன்று அல்லாது) இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார்கள் என்பதற்குத் துளியளவு கூட மரியாதை இல்லாமல் எதிர்வினை ஆற்றி இருக்கின்றனர் இலண்டன் சம்பந்தனும் நக்கீரனும். அடிப்படை அரசியல் அறம் தானும் இல்லை இவர்களுக்கு. இந்த வருத்தம் இருந்தாலும் இந்தக் கட்டுரைக்கு பலரும் அளித்திருக்கும் முக்கியத்துவம் காரணமாக இந்த எதிர்வினையை ஆற்ற வேண்டி உள்ளது. (யாழ்ப்பாண உதயனும் தனது இணையத்தளத்தில் பிரதான முக்கியத்துவம் அளித்து நக்கீரனது கட்டுரையை பிரசுரித்திருந்தது. தமது அச்சுப் பத்திரிகையில் இக்கட்டுரையை போடும் துணிச்சல் உதயனுக்கு இருக்கவில்லை. தி.இளங்குமரன் நக்கீரனது எதிர்வினைக்கு ஏற்கனவே நல்லதொரு பதிலை வழங்கி இருந்தார். பொங்குதமிழ் இதனைப் பிரசுரித்திருந்தது. இளங்குமரனது எதிர்வினைக்கு மேலதிகமாக எனது இந்தக் கட்டுரையைக் கருதி கொள்ளலாம்).

எதிர்வினையாற்றல் என்பதற்கு அப்பால் சிவில் சமூகத்தவர்களது அறிக்கையை நியாயமான முறையில் வாசித்து சந்தேகம் வெளியிட்டுள்ளவர்களோடும் இந்தக் கட்டுரை மூலமாக சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

பேராயர் ராயப்பு ஜோசப் மகிந்த சார்பானவரா?

பேராயர் ராயப்பு ஜோசெப்பை மகிந்த சார்பு என்று திரு.நக்கீரன் சொல்லுவது வேடிக்கையாக இருக்கின்றது. பேராயர் ராயப்பு ஜோசப் 1,46,679 வன்னி மக்கள் இறுதி போரின் போது கொல்லபட்டார்கள் என துணிச்சலாக LLRC ஆணைக்குழுவிற்கு சாட்சியம் அளித்திருந்தார். (http://genocidesrila...ithin-year.html )- பேராயர் ஜோசெப் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் 2006 இல் வரையப்பட்ட இக்கட்டுரையைப் பார்க்க: http://www.defence.l...me=20060703_04. வெளிப்படையாக இந்தளவுக்கு எந்தவொரு த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினராவது பேசியிருக்கிறார்களா? இப்படிச் சொல்வதில் என்ன மகிந்த சார்புத் தன்மை இருக்க முடியும்?

தொழிற் சங்கங்களைச் சேர்ந்தோர் ஈ.பி.டி.பியை சேர்ந்தவர்கள் என்று கூறுவது அவர்களை அவமானப்படுத்துவது. ஒரு மேட்டுக்குடி மனநிலையில் இருந்து நக்கீரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பது போல் தெரிகின்றது. அவரை தாயகத்திற்கு மீள வருமாறு வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன். இவர் ஈ.பி.டி.பி என்று சொல்லும் நபர்களை இவர் வந்து கண்டு பேசலாம். அதன் பின்னர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம்.

இலண்டன் சம்பந்தன் அவர்கள் கையெழுத்திட்டுள்ள பேராசிரியர்களை ஈ.பி.டி.பி சார்பானவர்கள் என்று சொல்லுவது நேர்மையாகவும் பொது அறத்தின் பாற்பட்டு செயற்படும் இந்தக் கல்விமான்களுக்கு சம்பந்தன் செய்திருக்கக்கூடிய மிகப் பெரிய அநியாயம். பல்கலைகழக நிர்வாகத்தில், துணைவேந்தர் நியமனத்தில் ஈ.பி.டி.பி செல்வாக்கு இருப்பது உண்மை. அதற்காக முழுப் பல்கலைக்கழக சமூகத்தையும் மலினப்படுத்துவது அபத்தமானது. கையெழுத்திட்டுள்ள பேராசிரியர்கள் அனைவருமே பல்கலைக்கழகத்தின் புலமைத்துவ சுயாட்சிக்காக (academic autonomy) இன்றுவரை போராடி வருபவர்கள். அப்படியானவர்களே இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அதற்காகப் பல பதவிகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே நன்கு தெரிந்த செய்தி இது.

கஜேந்திரகுமார் தொடர்பு

பேராசிரியர் சிற்றம்பலம் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உப-தலைவர். அவர் இந்த மகஜரில் கையெழுத்திட்டுள்ளார். முன்னாள் பேராயர் ஜெபநேசனும் நீண்டநாள் தமிழரசுக் கட்சி ஆதரவாளர். கையெழுத்திட்டவர்களில் பெரும்பாலானோர் த.தே.கூக்கு கடந்த தேர்தல்கள் அனைத்திலும் வாக்களித்தவர்கள். திரு நக்கீரன், சம்பந்தன் ஆகியோர் இவர்களையும் கஜேந்திரகுமார் ஆதரவாளர்கள் என்கிறார்களா? புதுடெல்லி கூட்டத்தில் திரு கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் சரியான நிலைப்பாடு எடுத்தார்கள் என்றுகூட இந்த பகிரங்க அறிக்கையில் குறிப்பிடப்படாததை அவதானிக்கலாம். மறைமுகமாகவேனும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்துவிடக்கூடாது என்பதில் இவ்வறிக்கையை வரைந்தவர்கள் கவனமாக இருந்தார்கள் என்பது இதிலிருந்து தெளிவு. இது ஒருபுறமிருக்க, கட்சி கடந்து தமிழர் நலம் பற்றி பேசுவதாக இருந்தால் தேசியம், சுயநிர்ணயம் பற்றி சிவில் சமூகத்தினர் பேசுவது தொடர்பில் என்ன ஆட்சேபனை இருக்க முடியும்? இதைப் பற்றி கஜேந்திரகுமார் மட்டுமே கதைக்கிறார் என்பதற்காக இந்த அரசியல் அவருடைய தனியுடமையாக கருதப்படுவது சரியா?

டக்ளஸ் மாகாண சபையை கைப்பற்றிவிடும் அபாயம்

சிவில் சமூகத்தினர் தமது பகிரங்க அறிக்கையில் 'தமிழ்த் தேசிய விரோத சக்திகள் அல்லது அரச சார்பு சக்திகள் மாகாண சபையைக் கைப்பற்றுவதைத் தடுக்க நாம் வேறுமாற்று உபாயங்கள் தொடர்பில் சிந்திக்கலாம். இவை தொடர்பில் த.தே.கூ. மக்களோடு கலந்தாலோசிக்க வேண்டும்' என வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள். நக்கீரன் மாகாண சபையை ஏன் த.தே.கூ ஏற்ற்றுக் கொள்ளக் கூடாது என்ற தர்க்க நியாயங்களுக்கு பதில் அளிக்கவில்லை. டக்ளஸ் வந்து விடுவாரோ என்பது தான் இவரது அச்சம். டக்ளஸ் என்ன செய்வார், என்ன செய்ய மாட்டார் என்பதை வைத்து நாம் எமது அரசியலை தீர்மானிப்போமாயின், காய் நகர்த்துகின்ற போக்கானது எங்களது அரசியல் வங்குரோத்துத் தன்மையே காட்டுகின்றது.

டக்ளஸ் 15 வருடங்களுக்கு மேலாக அமைச்சராக இருக்கிறார். அவர் சொல்வதை எப்போதாவது சர்வதேச சமூகம் ஒரு பொருட்டாக எடுத்திருக்கிறதா? சர்வதேச சமூகத்தால் அவர் தமிழ் மக்களின் பிரதிநிதியாக எப்போதாவது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளாரா? அமைச்சராக இருந்து கொண்டு அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. முதலமைச்சரானாலும் அதே கதிதான். ஆனால் இதனையும் தவிர்க்க வேண்டுமென்றே சிவில் சமூகம் சொல்கின்றது. அதற்காகத் தான் மாற்று உபாயங்களைப் பற்றி சிந்திக்கலாம் என்கின்றனர். நாற்காலிகளில் அக்கறை இன்றி எமது சமூகத்தின் முன்னேற்றத்திலேயே அக்கறை உண்மையில் உண்டெனில் ஏன் மாற்று வழிகளைத் தேடுவதற்கு த.தே.கூ பின்னடிக்கின்றது?

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் வித்தியாசம் உண்டு என்று விளங்கி கொள்கின்ற, அரசியல் பகுத்தறிவை பாவிக்கக் கூடிய மனநிலையில் திரு நக்கீரன் அவர்கள் இல்லை. கண்மூடித்தனமான தமிழரசுக் கட்சி விசுவாசம் இவர்களது கண்களை மறைக்கிறது. மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு 'மாகாண அரசாங்கத்தை' பொறுப்பெடுத்துக்கொண்டார்கள் என்ற செய்தியால் ஏற்படக் கூடிய பாதிப்பை அறிக்கை சுட்டி காட்டுகின்றது. நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதால் தமிழர்கள் தீர்வை பெற்றுக்கொண்டு விட்டார்கள் என்று கூற முடியாது. ஆனால் இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 13 ஆவது திருத்தத்தை தீர்வுக்கான அடிப்படையாக ஏற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தும் சூழ்நிலையில் மாகாண அரசாங்கத்தை பொறுப்பேற்றுக் கொண்டால் அது அரசியல் தீர்வொன்றை ஏற்றுக் கொண்டதாகி விடும் என்றே அறிக்கை வாதிடுகின்றது. நிதானமாக வாசித்துப் பார்க்கும் மனநிலை நக்கீரன், சம்பந்தன் போன்றவர்களுக்கு வேண்டும். ஆழமற்ற, மேம்போக்கான அரசியல் செய்பவர்கள் இவர்கள்.

நடைமுறை அரசியல் என்பது என்ன, எது?

தீர்மானங்கள், ஆணை என்பது வேறு நடைமுறை அரசியல் என்பது வேறு என்கிறார் நக்கீரன். மக்களுக்கு முன்னாள் தேசியம், சுயநிர்ணயம் என்று முழங்கி தள்ளுவது. ஆனால் நடைமுறையில் வேறோர் அரசியல் செய்வது சரி என்கிறார். சுருக்கமாகச் சொன்னால் மக்களிடம் வாக்கு வாங்கத்தான் தேசியம் சுய நிர்ணயம். புது டில்லியில் அது தேவையில்லை, கொழும்புக்கும் தேவையில்லை. உண்மையை சொல்லி அரசியல் செய்ய வேண்டும். த.தே.கூ. தேசியம், சுயநிர்ணயம் என்பதைக் கைவிட்டுத்தான் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு தேவை ஏற்படின் விளங்கப்படுத்த வேண்டும். அரசியலில் நேர்மை வேண்டும். தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழம் என்று சொல்லிவிட்டு மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்கும் அரசியலை மீளச் செய்ய முடியாது. செய்யவிடக் கூடாது

சிவில் சமூகத்தினது பகிரங்க கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் வீரகேசரிக்கு கடந்த சனிக்கிழமை (17-12-2011) வழங்கிய பேட்டியிலும் நடைமுறைச் சாத்திய அரசியலைப் பற்றியே தெரிவித்திருந்தார். (த.தே.கூ தலைவர் திரு சம்பந்தன் அவர்களும் பேராயருக்கு எழுதிய கடிதத்தில் நடைமுறை அரசியலைப் பற்றிப் பேசுகிறார்). அந்தப் பேட்டியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை நிலைப்பாடு சரி எனத் தான் கருதினாலும் அவர்களது கொள்கை நிலைப்பாட்டை மக்கள் கடந்த தேர்தலில் நிராகரித்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனையே நக்கீரனும் கூறுகின்றார்.

எந்த கருத்தை, கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறாரோ அதே கொள்கையோடு தமக்கு எந்த முரண்பாடும் இல்லை என்று கூறியே த.தே.கூ கடந்த தேர்தலில் போட்டியிட்டமையை அவர் மறந்திருக்கக்கூடாது. சென்றமுறை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தாம் பிரிந்து வந்தமைக்கான காரணத்தை கொள்கை வித்தியாசம் என்று சொல்லி வர, அதற்கு அன்று, அதனைத் தேர்தலில் எதிர் கொள்வதற்காக, தமக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் எந்தக் கொள்கை வித்தியாசம் இல்லை என மேடைக்கு மேடை த.தே.கூ வினர் சொல்லி வந்தனர் (அவர்களது பத்திரிக்கை விளம்பரங்களும் மேடைப் பேச்சுகளும் இதற்கு சாட்சி).

இப்படியான தளம்பல்களைத் தொடர்ந்து சர்வ சாதரணமாக செய்து விடலாம் என்று த.தே.கூ நம்புவது தான் எந்த விமர்சனத்தையும் அவர்கள் சர்வசாதரணமாக தள்ளி வைக்கக் கூடியதாக இருப்பதற்கான காரணம். ஒற்றுமை என்ற பெயரில் எந்த தேர்தலையும் சந்திக்கலாம், மக்கள் என்ன நடந்தாலும் வாக்களிப்பார்கள் என்ற த.தே.கூ வினது சிந்தனைக்கு முதன் முதலாக உண்மையான ஒரு சவாலை சிவில் சமூகத்தினர் விடுத்திருக்கிறார்கள். உன்னதமான சனநாயக அழுத்தம் இது. த.தே.கூ வேண்டுமென்றால் இதனை ஒரு பலமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் இதுவரை தமது பதில்களில் சிவில் சமூகத்தினது இம்முயற்சியை எதிர்மறையாகவே பார்த்துள்ளமை உண்மையிலே வருந்தத்தக்கது.

ஒரு ஒடுக்குமுறைச் சூழலில் நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றிச் சிந்திப்போமேனின் அந்த அடக்குமுறைக்கு அடிபணிந்தவர்கள் ஆகி விடுவோம். அதற்காக நாம் கனவரசியல் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. த.தே.கூ பேசும் நடைமுறை அரசியலால் எமது மக்களின் நாளாந்த, நிலவுகைப் பிரச்சனைகளுக்குத் தானும் தீர்வுகாண முடியாது. 13ஆவது திருத்தமும் இதற்கான வெளியை வழங்கவில்லை. இப்போது த.தே.கூ நடாத்தி வரும் பேச்சுவார்த்தைகளும் அதனை வழங்கவில்லை (சரணடைந்தவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று சொல்வதாக 3 முறை சொல்லி ஏமாந்த கதையும், நாவாந்துறை மக்களுக்கு எதிராக சோடிக்கப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதாகச் சொல்லி பெறாத கதையையும் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்). மாறாக பேச்சுவார்த்தைகள் நடக்க நடக்க எமது நிலங்கள் பறிபோகின்றன. எமக்கெதிராக சொல்லொண்ண துயரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

சிக்கலான பேச்சுவார்த்தைகள் பேசிமுடிக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதை இந்தக் கட்டுரையாளரோ சிவில் சமூகமோ அறியாமல் இல்லை. ஆனால் ஏதேனும் அடிப்படையான ஒரு சில சாதகமான சமிக்ஞைகளாவது அரசாங்கத்திடமிருந்து வராதபோது தொடர்ந்து பேசி என்ன பயன்? பேச்சிலிருந்து விலகி இருந்து இப்பேச்சுவார்த்தையில் பலனில்லை என்பதை சர்வதேசத்திற்கு விளங்கப்படுத்த வேண்டும். 'சர்வதேசத்திற்கு விளங்கப்படுத்த முடியாது. அவர்கள் சொன்னபடிதான் பேச வேண்டும்' என்றால் அது பூகோள அரசியலை நாங்கள் வாசிப்பதில் உள்ள குறைபாடு. இலங்கையில் தலையிடவேண்டிய தேவை சர்வதேசத்திற்கு உண்டு. அதற்குத் தமிழர்கள் தேவைப்படுகிறார்கள். சர்வதேசம் எங்களை பயன்படுத்துகின்றது. அவர்களை நாங்கள் ஏன் பயன்படுத்த முடியாது கூடாது?

இப்போது என்ன செய்யலாம்?

கொழும்பில் பேசுவதுதான் த.தே.கூ இன்றைய நிலையில் செய்யக்கூடிய அரசியல் என்ற சிந்தனை தவறானது. தமிழர் தாயகத்தில் த.தே.கூ ஆழமான அரசியல் கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமக்கென ஒரு துறையைத் தெரிவு செய்து அத்துறையில் தமிழ் சமூகதிற்குள்ளிருந்து ஆளணி வசதியை - தகைமை விருத்திக்கான (capacity building) நடவடிக்கைகளில் கவனத்தை செலுத்த வேண்டும். அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு விஞ்ஞான பூர்வமான மாற்றுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். குறிப்பாக இவற்றிக்கு நிதி வசதி ஏற்படுத்தித்தரும் சர்வதேச நாடுகளுக்கு எமது திட்டங்களை மாற்றுத் திட்டங்களாக முன்வைக்க வேண்டும்.

தமிழர் தம்மைத் தாமே ஆட்சி செய்யக்கூடிய வல்லமை உள்ளவர்கள் என்பதை உலகுக்கு நடைமுறையில் காட்ட வேண்டும். தமிழ் சட்டத்தரணிகளைத் திரட்டி சரணடைந்த போராளிகள் தொடர்பிலும் அரசியல் கைதிகள் தொடர்பிலும் பெருமெடுப்பிலான வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சி (mass litigation) ஒன்றை எடுத்து நீதித்துறையை திக்குமுக்காடச் செய்ய வேண்டும். இதற்கு சிவில் சமூகத்தவர்களிடமிருந்து ஆதரவைப் பெற்றுத்தர முடியும். எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கு வலுவூட்டும் வகையில் புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து நிதிபெற்று நீண்டகாலத் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இவற்றுக்கு மாகாண சபை தேவையில்லை. அரசுக் கட்டமைப்புக்கு வெளியிலிருந்து அரசை சவால் விடும் வகையில் இவற்றைச் செய்யலாம். போராட்ட வடிவங்கள் மாற வேண்டும். செய்ததே செய்து மாற்றத்தை எதிர்பார்க்கக் கூடாது. இவற்றை எல்லாம் செயற்படுத்துவதற்கு கட்சிக்குள் இளைஞர்களை ஒன்றுகூட்ட வேண்டும். 'இராணுவம் தடுக்கும்', 'அரசாங்கம் செய்ய விடாது' என்று பதில் வரலாம். எவ்வளவு காலம்தான் சொல்லிக் கொண்டு இருக்கப் போகிறோம்? துணிச்சலாக, தனிப்பட்ட ரீதியில் பாதிப்பு வந்தாலும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க இன்று எமது பாராளுமன்ற உறுப்பினர்களை முன்பைப் போல் எளிதில் கொன்று குவிக்க முடியாது. யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிக்கு, வன்னிக்கு 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் கைகோர்த்து நடைப் பிரயாணம் செய்ய வேண்டும், அந்த மக்களைச் சந்திக்க வேண்டும். உங்களோடு இருக்கிறோம் என்ற உணர்வை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் மத்தியில் வாழ வேண்டும். அப்பகுதிகளிலேயே மக்களோடு மக்களாக வாழ்ந்து இராணுவ ஆட்சியை சவால் விடுக்க வேண்டும்.

இவ்வளவற்றையும் இந்த தமிழ் சாணக்கியன் தாயகத்திற்குள் இருந்து கொண்டே சொல்கிறான். இதில் எதுவுமே நடைமுறை சாத்தியம் இல்லை என்று கூறலாம். இப்படியே நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால் கடவுள் கூடத் தமிழரை காப்பாற்ற முன்வரமாட்டார்.

http://www.pongutham...31-2bcafd4d8cc8

  • கருத்துக்கள உறவுகள்

எனது பின்னூட்டத்தை அகற்றியதற்க்கு நன்றி. இனிமேல் தொல்லை தரமாட்டேன்

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.