Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து நினைவுகள் : பக்தவத்சல பாரதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து நினைவுகள் : பக்தவத்சல பாரதி

jaffna-4-225x300.jpg

இரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார்.

அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

1

இலங்கையின் சமூக, சமய, மொழி, பண்பாட்டு உருவாக்கம் மிகவும் சிக்கலானது. அதை இனச்சார்பற்ற நிலையில் அறிவுபூர்வமாகவே அணுக வேண்டும். தீவின் பூர்வக் குடிகள் வேடர், நாகர், இயக்கர் ஆகியோரே. அவர்களின் தொடர்ச்சியாகத் தமிழர்கள், சிங்களவர்கள் புதிய இனங்களாக உருவெடுத்தார்கள்.

சிங்களவர்கள் திராவிட மொழிகள் பேசப்படும் தென்னிந்தியாவுக்கு அப்பால் உள்ள வட இந்தியாவிலிருந்து குடியேறியதாகக் கூறுகிறார்கள். சிங்களம் வட இந்தியாவுக்குரிய இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் சொல்கிறார்கள். இவர்கள் சிங்களம் பேசினாலும், திராவிட உறவுமுறையைப் பின் பற்றுகிறார்கள். பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள். கி ஷிலீஷீக்ஷீt பிவீstஷீக்ஷீஹ் ஷீயீ சிமீஹ்றீஷீஸீ எனும் மிகச் சிறந்த நூலை எழுதிய காட்ரிங்டன் என்பவர் “சிங்களவர்கள் வட இந்திய மொழியையும் தென்னிந்தியச் சமூக அமைப்பையும் கொண்டவர்கள்” என்பதை வெகுகாலத்திற்கு முன்பே நன்கு விளங்கப்படுத்தினார்.

இவருக்குப் பின் பலர் சிங்கள மக்களை ஆராய்ந்திருக்கிறார்கள். ஹோகார்ட், ஆரிய பாலா, பியரீஸ், தம்பையா, லீச், யால்மன், ஒபயசேகரா ஆகியோர் சிங்களவருக்கும் திராவிடர்களுக்கும் உள்ள முக்கியமான ஒற்றுமையைச் சுட்டிக்காட்டியுள்ளார்கள். பண்டைக்காலம் தொட்டுச் சிங்களவர்கள் தென்னிந்தியர்கள் பின்பற்றும் மாமன் மகள், அத்தை மகள் ஆகியோரை மணக்கும் முறை மணத்தைக் (cross-cousin marriage) கடைப்பிடிக்கிறார்கள். ஆகவே இந்திய-ஆரிய மொழியைப் பேசினாலும் பௌத்த மதத்தைப் பின்பற்றினாலும் இந்துக்களாகிய தென்னிந்திய மக்களின் உறவுமுறையையே கொண்டிருக்கிறார்கள். மிகச் சில உறவுமுறைச் சொற்களைத் தவிர பெரும்பாலானவை திராவிடச் சொற்களாகவே உள்ளன. புதா, துவா, பானா போன்றவை பாலி மொழிச் சொற்களின் சாயலைக் கொண்டுள்ளன. இவை நவீன இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து வராமல், இடைக்கால இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து வந்தவை என்கிறார் திராவிட உறவுமுறையை ஆராய்ந்த ட்ரவுட்மன். நவீன ஆய்வுகள் பல புதிய கருத்துகளை முன்வைக்கின்றன. அவற்றை முற்சாய்வு ஏதுமின்றித் திறந்த மனத்துடன் அணுக வேண்டும்.

சிங்களவர்களின் பூர்வ வரலாற்றை வாய்மொழி வரலாற்றிலிருந்தும் இனவரலாற்றிலிருந்தும் ஆராய வேண்டிய தேவையுள்ளதை நான் உணர்கிறேன். மகாவம்சத்தில் உள்ள சில குறிப்புகளை வாய்மொழி வழக்காறுகளோடு பொருத்தி ஆராய வேண்டியது காலக் கடமையாகக் கருத வேண்டும். ஒரு வாய்மொழிக் கதையைக் கவனிப்போம். புத்தர் இறந்த அதே நாளில் (கி. மு. ஆறாம் நூற்றாண்டு) விஜயன் தன் சகாக்களுடன் இலங்கையை வந்தடைந்தான். முதலில் அவன் குவேனி என்ற அரக்கியை மணந்தான். பின்னர் அவளைக் கைவிட்டுத் தென்னிந்தியத் தமிழ் இளவரசியை மணந்துகொண்டான். அவளுடன் வந்த தமிழ்ப் பெண்களை அவன் தோழர்கள் மணந்துகொண்டார்கள். இந்தக் கலப்பால் சிங்களவர்கள் உருவானார்கள். இப்படியான வாய்மொழிக் கதைகள் உள்ளன.

வாய்மொழிக் கதைகள் இனவரலாற்று மீட்டுருவாக்கத்திற்கு மிக முக்கியமானவை என்பதை உலகளாவிய நிலையில் பல அறிஞர்கள் வலியுறுத்திவருகின்றனர். இனவரலாற்று அணுகுமுறையில் பல ஆய்வு முறைகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் பார்த்தால் வியஜனும் அவனுடைய சகாக்களும் பின்பற்றும் திராவிட உறவுமுறை அவர்களது பண்டைய தென்னிந்திய உறவைக் காட்டுகிறது. சிங்களவர்கள் வட இந்தியாவிலிருந்து ஒரே இரவில் இலங்கையை வந்தடையவில்லை. தென்னிந்தியாவின் திராவிடப் பண்பாட்டையே உள்வாங்கியிருக்கிறார்கள். தென்னிந்தியா வழியாக மிகவும் மெதுவான புலப்பெயர்வின் மூலமே இலங்கை வந்து சேர்ந்தார்கள். அத்தகைய காலகட்டத்தில் அவர்கள் தென்னிந்தியச் சமூகத்தோடு குறிப்பாக அன்றைய தமிழகப் பௌத்தர்களோடு உறவாடியும் கொண்டு கொடுத்தும் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் பின்பற்றும் திராவிடர்களின் முறைமணமும் உறவுமுறையும் மிக முக்கியமான இனவரலாற்றுச் சான்றுகளாகும். இது மட்டுமல்ல. இன்னும் பல சான்றுகளைப் பண்பாட்டுத் தளத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.

2

இலங்கையில் மனிதக் குடியேற்றம் பற்றிய ஆய்வொன்றை என்னுடைய நண்பர் சுப்பிரமணியம் விசாகன் செய்துகொண்டிருக்கிறார். இவர் லண்டனில் அருங்காட்சியகத்தில் மானிடவியலாளராகப் பணியாற்றியவர். அந்த ஆய்வு மரபணுவழியில் மேற்கொள்ளப்படும் ஆய்வாகும். இதன்படி சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே இனமூலத்தைக் கொண்டவர்கள். இவர்கள் மொழியாலும் மதத்தாலும் மட்டுமே பிரிந்து நிற்கிறார்கள். இனமூலத்தால் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்கிறார். இத்தகைய ஆய்வுகளை உணர்ச்சிவயப்பட்டு ஒதுக்கிவிட முடியாது.

இன்று தமிழகத்தில் தமிழர்கள் முஸ்லிம்களாகவும் கிறித்தவர்களாகவும் மாறிவிட்டதால் அவர்களுடைய டி. என். ஏ. மாறிவிடுமா என்ன? தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மானிடவியல் ஆய்வுகள் மிக முக்கியமான முடிவைக் கூறுகின்றன. பிள்ளைமார்களுக்கும் பள்ளர்களுக்கும் இடையே உள்ள “சமூக இடைவெளி” மிக நீண்டது. என்றுமே நெருங்காதது. ஆனால் டி.என்.ஏ. ஆய்வின்படி பார்த்தால் இருவருக்குமான “மரபணு இடைவெளி” மிகக் குறைவு. பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் சமூக இடைவெளி மிகவும் அதிகம். ஆனால் டி. என். ஏ. வழியிலான இடைவெளியைப் பார்த்தால் அதிலும்கூடச் சில பிரிவினரிடம் மிகக் குறைவாக உள்ளது. காரணம் இந்தியாவில் பிராமணர்கள் மற்ற சாதியினருடன் ஏராளமான அளவு கலந்துவிட்டனர். “கருப்பு பிராமணர்கள்” அனைவரும் தமிழர்களே. இவர்கள் ஒரு காலகட்டத்தில் பிராமணர்களாகப் பூணூல் போட்டவர்கள். இவ்வாறான சூழலே சிங்களவருக்கும் தமிழர்களுக்கும் நேர்ந்திருக்கும் என்பதை மேலை ஆய்வாளர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். அவற்றையெல்லாம் சுப்பிரமணியம் விசாகன் மிக நன்றாக ஒப்பிட்டுக் காட்டுகிறார். யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு முன் நான் கற்றறிந்த செய்திகள் இவை. அங்குத் தங்கியிருக்கும் காலத்தில் எவற்றையெல்லாம் அறிய வேண்டுமென்ற குறிப்புகளை நான் முன்கூட்டியே விரிவாகத் தயாரித்துக்கொண்டு சென்றேன்.

3

யாழ்ப்பாணச் சமூகம் பற்றியும் பண்பாடு பற்றியும் மானிடவியல் கண் கொண்டு அறிந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய முதன்மையான திட்டமாகும். முதலில் சமூக அமைப்பு குறித்து அறிய விரும்பினேன். அங்கு நான் கண்ட சாதி அமைப்பு சற்று வித்தியாசமானது. தமிழ்நாட்டுச் சாதி முறையோடு அது ஒத்துக் காணப்பட்டாலும் சில தனித்தன்மைகளைக் கொண்டிருந்தது. அங்குப் பிராமண மேலாண்மையில்லை. இது வெளிப்படையானது. யாழ்குடாவில் பிராமணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இணுவிலில் உள்ள அந்தணர்களுக்கான குருகுலத்தை நிர்வகித்துவரும் மகாதேவ குருக்கள் யாழ்ப்பாணத்தில் ஏறக்குறைய 600 பிராமணக் குடும்பங்கள் உள்ளன என்றார். யாழ்ப்பாணத்தில் பிராமணர் மட்டுமே கோயில் பணியில் ஈடுபடுவதில்லை. சைவக் குருமார்களும் கோயில் பூசகர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் கன்னட மரபில் வந்த வீரசைவர்களாகத் தங்களைக் கூறிக்கொள்கின்றனர். பண்டாரங்கள், கைக்குழார்கள் ஆகிய இரண்டு இடைப்பட்ட சாதியாரும் சமஸ்கிருதவயப்பட்டுப் பூசகர்களாக உள்ளனர். இந்நிலையில் ஆதிகாலம் தொடங்கிப் பிராமணர் எண்ணிக்கை யாழ்குடா நாட்டில் அதிகம் வளரவில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகவியல் துறை அங்குள்ள மிக முக்கியமான துறைகளில் ஒன்று. இன்று உலகளாவிய ரீதியில் சமூகவியல் கல்வியின் தேவை அதிகமாகக் காணப்படுவதால், யாழ்ப்பாணத்திலும் மாணவர்கள் அதிகளவில் சமூகவியலைத் தெரிவுசெய்கின்றனர். அங்குள்ள கலைத்திட்டம் உலகளாவிய சமூக அமைப்பு தொடங்கி யாழ்ப்பாணச் சமூகம்வரை கற்பிக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டுள்ளது. வகுப்பறையிலேயே மாணவர்கள்வழி யாழ்ப்பாணச் சமூகத்தைப் பற்றி நிறையத் தெரிந்துகொண்டேன். ஈழத்து அறிவு மரபு தனித்துவமானது, உயர்ந்தது என்பதை மாணவிகளின் புரிதல் திறன்வழி அறிந்துகொண்டேன். தமிழிலேயே உயர்கல்விவரை கற்கின்றனர். பேராசிரியர் என். சண்முகலிங்கன் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட இத்துறை தமிழ் வழிச் செயல்படுவது நமக்கெல் லாம் முன்மாதிரியாகும். அவர் உருவாக்கியுள்ள கலைச்சொற்களும் பாடநூல்களும் ஆய்வுநூல்களும் தமிழால் முடியுமென்ற முழக்கத்தை மெய்ப்பிக்கவல்லவை. மானிடவிய லும்கூட இத்துறையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. பல்துறை அணுகு முறையை வலுப்படுத்தும் சிறந்த முன்மாதிரியான முயற்சியாகும்.

இனி யாழ்குடாவின் சாதிமுறைக்கு வருவோம். யாழ்ப்பாணத்தில் “சாதி பதினெட்டு” என்ற ஒரு பொதுவழக்கிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளன. மேல்தட்டில் பிராமணர்கள் சைவக்குருக்கள் இருக்கிறார்கள் என்பது கற்பிதமே. உண்மையில் சமூக அந்தஸ்தில் வெள்ளாளர்களுக்கு இணையாகவே உள்ளனர். எதார்த்தத்தில் வெள்ளாளர்களே ஆதிக்கச் சாதியினர். எண்ணிக்கையிலும் இவர்களே அதிகம். நிலவுரிமையாளர்களான இவர்களுக்குக் கமம் (விவசாயம்) முதன்மைத் தொழில். இவர்களுக்கு அடுத்து கோவியர், திமிலர், முக்குவார், கரையார், பண் டாரம், தச்சர், கொல்லர், தட்டார், கன்னார், சிப்பாச்சாரி, கைக்குழார், நட்டுவர், குயவர், சாண்டார், நளவர், அம்பட்டர், வண்ணார், பறையர், பள்ளர், சக்கிலியர் ஆகிய சாதியினர் முக்கியமானவர்கள்.

மரபான கிராமிய வாழ்வில் கோவியர்கள் வெள்ளாளர் வீடுகளில் வேலைசெய்தவர்கள். கரையார் ஆழ்கடலில் மீன்பிடித்தலையும் முக்குவார் கரையோரத்தில் மீன் பிடித்தலையும் செய்கின்றனர். கைக்குழார் தமிழகச் செங்குந்தர் போன்று நெசவுசெய்துவந்தனர். சாண்டார்கள் எள்ளெண்ணை ஆட்டும் செட்டியார்கள். சிப்பாச்சாரி கோவில் சிலைகள் சிற்பங்கள் செதுக்குபவர்கள். நட்டுவர் கோவில்களிலும் மங்கள நிகழ்ச்சிகளிலும் தவில், நாதஸ்வரம் வாசிப்பவர்கள். நளவர்கள் பனைமரம், தென்னை மரங்களில் கள் இறக்கும் சாணார்கள். யாழ்ப்பாணத்தில் கள் இறக்கும் நளவர்கள் 8 பிரிவினர்களாக உள்ளனர். அஞ்சனன் தாழ்வு நளவர், தேவரிக்குள நளவர், மறவைக்குள நளவர், கற்குள நளவர், வண்ணாங்குள நளவர், வாடை நளவர், சோளம் நளவர், மரமேறிகள் எனச் சாதிக்குள் சாதியாக விளங்குகிறார்கள். பண்டாரங்கள் கோவில்களில் பூமாலை கட்டும் உதவியாளர்கள். கன்னார் பாத்திரங்கள் சீர்செய்பவர்கள்.

சாதிகளின் பெயர்கள் செய்யும் தொழிலுக்கேற்பக் கூடுதல் பெயர்களைக் கொண்டிருக்கின்றன. தச்சர் ஆச்சாரியார் எனவும் அம்பட்டர் பரியாரியார் எனவும் வண்ணார் கட்டாடியார் எனவும் நாளாந்த வழக்கில் கூறப்படுகின்றனர்.

யாழ்ப்பாணச் சாதி அமைப்பில் சாதிக்குள் சாதி எனும் உட்சாதிப் பிரிவுகள் நிறையவே உள்ளன. குடிமைத் தொழிலைச் செய்யும் சேவைச் சாதியார் தாங்கள் சேவை செய்யும் சாதியின் அடிப்படையில் பெயர் பெறுகின்றனர். அம்பட்டரில் “வெள்ளாம் அம்பட்டர்” என்ற பிரிவினர் உண்டு. இவர்கள் வெள்ளாளர், கோவியர், தச்சர், நட்டுவர் போன்ற தம்மில் உயர்சாதியினருக்கு ஊழியம் செய்பவர்கள். “கரையாம் அம்பட்டர்” கரையார் சாதியாருக்கு ஊழியம் செய்கிறார்கள். “சீயாம் அம்பட்டர்” பஞ்சமர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள்.

யாழ்ப்பாணத்திலும் மேல்நோக்கிய சமூகப் பெயர்வு காலவோட்டத்தில் நடந்துள்ளது. “கள்ளர், மறவர், கனத்த அகம்படியார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்” என்ற போக்கு உள்ளது. ஆரம்ப காலத்தில் குடிமைத் தொழில் செய்துவந்த வண்ணார், அம்பட்டர் போன்றோர் கடந்த முப்பது ஆண்டுக் காலப் போர்ச் சூழலாலும் விடுதலைப் புலிகள் அமைப்பின் செல்வாக்காலும் தமக்கென்று ஓர் அமைப்பை உருவாக்கினார்கள். பரம்பரைப் பரம்பரையாகச் செய்துவந்த குடிமைத் தொழில்களான சாவீட்டில் மயிர் இறக்குதல், பூப்பு (சாமர்த்தியம்), பிரசவம், சாவு ஆகிய நிகழ்வுகளில் துடக்குத் துணியகற்றல் போன்ற தொழில் முறைகளிலிருந்து விடுவித்துக்கொள்கிற போக்கை அவதானிக்க முடிந்தது.

கோயிலுக்குப் பூமாலை கட்டி வந்த பண்டாரங்கள் காலப்போக்கில் கோயிலில் உதவியாளர்களாகச் செயற்பட்டுப் பின்னர் கோயில் பூசாரிகளாகத் தங்களை உயர்த்திக்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. தமிழகத்தில் குயவர்கள் அக்கி எழுதுகிறார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் கன்னார் (பாத்திரங்கள் செப்பனிடுவோர்) அக்கி கீறுகிறார்கள்.

4

யாழ்ப்பாணத்தின் ஊர் முறையும் வாழ்விட முறையும் மிகவும் பாரம் பரியமானவை. இங்குப் பல சாதியினர் வாழும் கிராமங்களே அதிகம். கிராமங்கள் பொதுவாக “ஊர்” என்று அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் வாழுமிடம் “சேரி”. இந்த வழக்கு யாழ்ப்பாணத்தில் இல்லை. அங்கெல்லாம் ஊரின் ஒரு பக்கத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினர் இருக்கின்றனர். ஒரு சாதியினர் மட்டும் வாழும் கிராமங்கள் ஆனையிறவின் தெற்குப் பகுதியில் காணப்படுகின்றன. பூகோளம் சார்ந்த வாழ்விடத்தில் சமூகம் சார்ந்த சாதியத்தின் தொடர்ச்சி இன்றும் உள்ளது. இங்குள்ள வீதிகள் அல்லது குறிச்சிகள் அம்பனாக்கடவை, தச்சக்கடவை, செட்டிக் குறிச்சி. செங்குந்தார் வீதி, பண்டாரிக் குளம் எனச் சாதிப் பெயர்களில் உள்ளன.

இங்குள்ள வீடுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. தமிழ் நாட்டுக்காரர்கள் வாழ்வில் ஒரு முறையாவது யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் பார்க்க வேண்டியது அவசியம். தமிழ்ப் பண்பாட்டின் ஆதி மரபைப் பேணிக் காத்து வரும் இவர்களுடைய வாழ்வு முறை மிகவும் அலாதியானது.

வீடுகள் உள்ள காணியானது “வளவு”. பாரம்பரிய வளவுகள் 2 பரப்பு, 4 பரப்பு, 6 பரப்பு என இன்னும் அதிகமாகவும் இருக்கும். இதை நாளாந்த வழக்கில் ‘வீட்டுக் காணி’ என்பார்கள். வளவுக்கு அருகே “தோட்டக் காணி” இருக்கும். இங்குத் தோட்டக்கால் பயிர்களைப் பயிரிடுகிறார்கள். அடுத்தது “வயல் காணி”. இங்குத்தான் பாரம்பரியமான மொட்டக் கறுப்பன் நெல் பயிரிடப்படுகிறது. குத்தரிசி, சிகப் பரிசி, பொங்கலரிசி என அனைத்தும் மொட்டக் கறுப்பன் நெல்லில் இருந்து கிடைக்கின்றன. இந்த அரிசி சிகப்பாகத்தான் இருக்கும். இது ஆறுமாதப் பயிர். இதுவே யாழ்ப்பாணத்தில் விலைகூடிய அரிசி. இலங்கைப் பணத்தில் ரூ. 60 முதல் 120 வரை விற்கிறது. இப்போது குறைந்த காலப் புதிய ரகங்கள் அறிமுகமாகியுள்ளன. புதிய ரக அரிசிகளும் சிகப்பாகவே உள்ளன. வயல் காணியில் எள்ளு, உழுந்து, பயறு, குரக்கன் (சாமை போன்றதொரு தானியம்) போன்ற பயிர்களும் விளைகின்றன. வயல் காணிகளைப் “பரப்பு” என்றே சொல்கிறார்கள். வீட்டுப் பரப்புக்கும் வயல் பரப்புக்குமான அளவு தனித்தனியானது. ஏக்கர் எனும் வழக்கு யாழ்ப்பாணத்தின் நாளாந்த வழக்கில் இன்னும் வரவில்லை.

jaffna-5-300x200.jpg

யாழ்ப்பாணத்தில் வீட்டு அமைப்பு மிகவும் தனித்துவமானது. நான் மாணவர்களுடன் சென்று பார்த்த அராலி, வட்டுக்கோட்டை போன்ற இடங்களில் மரபார்ந்த வீட்டுக் கட்டமைப்பைக் காண முடிந்தது. குறிப்பாகச் சங்கடப்படலை, சுமைதாங்கி, நீர்த்தொட்டி கொண்ட “நாட்சார வீடு” அமைப்பு முறை பிரதானமானது. நாட்சார வீடானது பண்டைய யாழ்ப்பாண மக்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தது. சங்கடப்படலை என்பது வீட்டின் முகப்பில் கட்டப்படும் நிழல் தரும் சாரமாகும். எவரும் இங்குச் சற்று இளைப்பாறலாம். அதன் அருகே சுமைதாங்கியும் நீர்த்தொட்டியும் உள்ளன. இவை வழிப்போக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவுகின்றன.

தஞ்சாவூர் டெல்டா பகுதிபோல் காட்சியளித்த வழுக்கையாறு வழியாக நாங்கள் சென்றபோது “ஆவுரைஞ்சிக் கல்”, “கேணி” இரண்டும் ஆங்காங்கு என் கண்ணில் பட்டன. கேணிகள் அவ்வழியாக வரும் ஆடு, மாடுகளின் தாகத்தைத் தணிக்கின்றன. ஆவுரைஞ்சிக் கல் ஏறக்குறைய 4 அடி உயரமுள்ள உருண்டையான கல்தூண். ஆடு, மாடுகள் உடலை உரைஞ்சிக்கொள்வதற்காக இது நடப்பட்டிருந்தது. விவசாய நாகரிகத்தில் அச்சாணியாக விளங்கிய கால்நடைகளின் மீது யாழ்ப்பாணத் தமிழர்கள் காட்டிவந்த மனிதநேயத்தின் சாட்சிகளாக இவை இன்றும் நிற்கின்றன. ஆப்பிரிக்க நூயர் பழங்குடியினரே கால்நடைகளை மிக அதிகமாக நேசிப்பவர்கள் என்ற இனவரைவியல் கருத்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றவுடன் என்னுள் மாறத் தொடங்கிவிட்டது.

5

இலங்கையில் தமிழர்கள் பிரதேச வாரியாக வேறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறார்கள். இதை வரலாறு நெடுகக் காண முடிகிறது. யாழ்ப்பாணத் தமிழர்கள் தேசவழமைச் சட்டத்தைப் பின்பற்றி வாழ்கிறார்கள். கிழக்கே மட்டக்களப்புத் தமிழர்கள் முக்குவர் சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள். சிங்கள மக்கள் கண்டியச் சட்டத்தைப் பின் பற்றி வாழ்கிறார்கள். தேசவழமைச் சட்டத்தை ஒல்லாந்தர்கள் கி.பி 1707இல் முழுமையான சட்டமுறையாக உருவாக்கினாலும் அது தமிழர்களின் பன்னெடுங்கால வரலாற்றோடு இருந்து வந்த ஒன்று. மரபுவழிப்பட்ட இந்த மூன்று வாழ்வு முறைகளும் மூன்று வெவ்வேறு சமூக அசை வியக்கங்களைக் கொண்டுள்ளன.

தமிழகத்தில் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள தொன்மையைவிட ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள பாரம்பரியம் தமிழர்களின் தொன்மையை நன்கு விளக்குகிறது. தமிழ்ச் சமூகத்தின் தொன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் சேரர் தேசத்தையும் மட்டக்களப்பு, யாழ்குடா நாட்டையும் ஒப்பிட்டு அறிய வேண்டியது மிகவும் அவசியமாகும். மனித குலத்தில் தோன்றிய முதல் சமூக அமைப்பான தாய்வழிச் சமூக முறையை இத்தகைய ஒப்பிட்டு நிலையில்தான் மீட்டுருவாக்கம் செய்ய முடியும். சேர நாட்டில் காணக்கூடிய “மரு மக்கள்தாய முறை” இன்னும் உயிர்ப்புடன் மட்டக்களப்பில் உள்ளது. யாழ்ப்பாணச் சமூகம் இன்று ஆண்மையச் சமூகமாக மாறிவிட்டாலும் தாய்வழிச் சமூகத்தின் கூறுகளைச் சீதனம், முதுசொம் போன்றவை மூலம் காண முடிகிறது. மகளுக்குச் சொத்தைக் கண்டிப்பாகக் கொடுக்கிறார்கள்.

யாழ்குடா நாட்டில் காணப்படும் இத்தகைய குடும்ப அமைப்பில் கொண்டுள்ள உறவுகளை ஆராயும்போது அது சேரர்களின் தாயமுறையிலிருந்து பிரிந்துசென்ற பண்பாட்டுத் தொடர்ச்சியை விளக்குகிறது. பண்டைய சேரர் தேசம் தொடங்கி மட்டக்களப்புவரை உள்ள பண்பாட்டுப் பிரதேசம் தாய்வழிப் பிரதேசமாக இருப்பதை அறிய முடிகிறது.

6

தமிழகத்தில் இன்று நாம் காண முடியாத பண்பாட்டுக் கூறுகளை ஈழத்தில் மட்டுமே காணலாம். யாழ்குடாவில் திருமணத்தின்போது பெரிதும் வெளிப்படுகின்ற ‘சீதனம்’, ‘முதுசொம்’, ‘தேடிய தேட்டம்’ ஆகியவை தமிழ்ச் சமூக மீட்டுருவாக்கத்திற்கு மிகவும் உதவும் பண்பாட்டுக் கூறுகளாகும். சீதனம் என்பது திருமணத்தின்போது மணப்பெண் தன் பெற்றோரிடமிருந்து பெறுகின்ற சொத்தாகும். நகை, ரொக்கம், வீடுவளவு ஆகிய மூன்றும் இதில் முதன்மை பெறுகின்றன. சீதனமாக வீடுவளவு (தோட்டத்துடன்கூடிய வீடு) பெண்ணுக்குக் கொடுப்பதால் ஆண் பிள்ளைகளுக்கு வீடு கிடைப்பதில்லை. அதனால் திருமணத்திற்குப் பின் ஆண்கள் மனைவிக்குக் கிடைக்கும் வீட்டையே வாழ்விடமாகக் கொள்வது மரபு. முதுசொம் என்பது தந்தைவழிச் சொத்தாகும். இதிலும் ஒரு பகுதி பெண்ணுக்குக் கிடைக்கிறது. தேடிய தேட்டமென்பது தந்தை தன் வாழ்நாளில் சுயமாகச் சம்பாதிப்பதாகும். இதிலும் ஒரு பகுதியைத் தன் மகளுக்குக் கொடுக்கிறார். இவ்வாறாகப் பெண்ணின் சமூகப் பெறுமானம் இலங்கைத் தமிழரிடம் உயர்ந்து காணப்படுகிறது. காரணம் தொல் தாய்வழிச் சமூகத்தின் மிச்ச சொச் சங்கள் அங்குப் பேணப்படுகின்றன.

jaffna5-300x200.jpg

யாழ்ப்பாணத்தில் திருமண நடைமுறைகள் பண்பாட்டு ஆய்வாளனாகிய என் கவனத்தை வெகுவாகவே ஈர்த்தன. அவர்களுடைய பாரம்பரிய முறை இன்றும் காணப்படுகிறது. பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பேசி முடித்துச் செய்யும் “ஏற்பாட்டுத் திருமணமே” மிகப் பரவலான முறை. திருமணத்திற்கு முன்னர் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பரிசம்போடுவதோ நிச்சயிப்பதோ இல்லை. ஆனால் பரஸ்பரம் சந்தித்து “சம்பந்தக் கலப்பு” செய்கிறார்கள். தொடக்கத்தில் மாப்பிள்ளை, மணப்பெண்ணைப் பார்ப்பதுகூடப் பொது இடங்களில் தான். இந்திய வம்சாவழியினரிடம் மட்டுமே தமிழக நடைமுறைகள் காணப்படுகின்றன.

திருமணத்திற்கு முதல் நாள் “பெண் அழைத்தல்”, “வரவேற்பு” எதுவுமில்லை. முதல் நாள் மண்டபத்தில் கூடுவதுமில்லை. திருமண நாளன்றே பெண் அழைத்தல் உள்ளிட்ட எல்லாச் சடங்குகளும் நடைபெறுகின்றன. மண்டபத்தில் திருமணம் நடைபெறுவது இன்று பெருகிவிட்டாலும், பாரம்பரியமாகப் பெண் வீட்டில் திருமணம் நடை பெறுவதையும் சில இடங்களில் காண முடிகிறது. திருமணச் செலவை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்கின்றனர். மாப்பிள்ளை வீட்டார் மணப் பெண்ணுக்குச் செய்யும் தாலிக் கயிறை 5 பவுன் தொடங்கி 15 பவுன்வரை தங்களுடைய தகுதியைக் காட்டும் வகையில் செய்கிறார்கள். பெண் வீட்டார் மாப்பிள்ளைக்குக் கொடுக்கும் சீதனம் திருமணப் பதிவிற்குப் பின்னர் கொடுக்கப்படும். சீதனம் அதிகம் கொடுக்கும்போது மாப்பிள்ளை வீட்டாரிடம் “எத்தனை பவுனில் தாலிக்கயிறு செய்கிறீர்கள்?” என வலியுறுத்திக் கேட்பார்கள். திருமண நாளன்றே சாந்திமுகூர்த்தம் மாப்பிள்ளை வீட்டில் நடைபெறும். திருமணத்திற்குப் பின் மணமகன் மனைவியின் சீதன வீட்டில் வாழ்வதே மரபான பழக்கமாகும். ஆனால் இன்றைய நவீனத் தொழில்சார் வாழ்வு முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் “வாழ்வு, சாவு” இரண்டிலுமே மிகுந்த தனித்துவங்கள் உண்டு. வாழ்வுச் சடங்குகளில் சில வேறுபாடுகள் என்றால், சாவுச் சடங்குகளிலும் சில கூர்மையான வேறுபாடுகள் உள்ளன. தமிழகத்தில் வசதி படைத்தவர்கள் இறந்தோரின் நினைவாக மாதந்தோறும் அமாவாசை அன்று திதி படைத்துக் காக்கைக்குச் சோறிட்டு இறந்தவர்களை வணங்குகிறார்கள். யாழ்ப்பாணத்திலோ ஆணுக்கு அமாவாசை, பெண்ணுக்குப் பௌர்ணமி ஆகும். குறிப்பாக மாதந்தோறும் வருகின்ற இந்தத் திதிகளை அதிகம் பேர் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் வருடம் தோறும் வருகின்ற ஆடி அமாவாசையில் ஆணின் நினைவாகவும். சித்திரா பௌர்ணமியில் பெண்ணின் நினைவாகவும் திதி கொடுப்பார்கள்.

7

யாழ்ப்பாணத்தில் கோயில்களும் வழிபாட்டு முறைகளும் நீண்ட நெடிய மரபைச் சார்ந்துள்ளன. சைவமே அங்குப் பிரதானம். ஆனால் தொல் சமயக் கூறுகள் பலவற்றைக் காண முடிகிறது. வைரவர் கோவில்கள் இன்றும் பரவலாக உள்ளன. மரத்தடியில் சிறிய கோயில்களாக உள்ளன. வீட்டு வளவுக்குள்ளேயும் சிறிய இடத்தில் வைத்து வைரவரை வழிபட்டுவருகின்றனர். ஆதியில் வைரவர் கோயிலில் சூலம் வைத்து வழிபடும் வழக்கம் அதிகமாக இருந்துள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் இந்துக் கோயில்களுக்குப் பெரும் ஆபத்து இருந்துள்ளது. இக்காலத்தில் சைவசமய வழிபாட்டைப் பாதுகாத்தவை வைரவர் வழிபாடேயாகும். ஏனெனில் அவர்கள் ஊருக்குள் வரும்போது மேலோட்டமாக நட்டு வைத்திருந்த வைரவர் சூலத்தைப் பிடுங்கித் தலைகீழாக வைத்து அதன் அடையாளத்தை மாற்றிவிடுவார்கள். இதனைவிட யாழ்ப்பாணத்தில் வல்லியக்கன் வழிபாடு, அண்ணமார் வழிபாடு, நாக வழிபாடு, மர வழிபாடு போன்றவை தொல்சமயத்தின் தொடர்ச்சியாக இன்றும் உள்ளன. பின்னாளில் தான் அம்மன் வழிபாடு அதிகமானது. துர்க்கை வழிபாடு இலங்கையில் புதிய எழுச்சியாகப் பெண்கள் மத்தியில் உருவான முறையை யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் “இலங்கையில் துர்க்கையின் புது முகம்” எனும் தலைப்பில் ஆராய்ந்துள்ளார்.

தமிழகத்தில் இன்று கண்ணகி வழிபாடு முற்றிலும் இல்லை. அது மாரியம்மன் வழிபாடாக முழுவதும் உருமாறிப்போய் நிற்கிறது. ஆனால் ஈழத்தில் கண்ணகி வழிபாடு உயிர்ப்புடன் இன்றும் காணப்படுகிறது. குறிப்பாக, மட்டக்களப்பில் 30க்கும் மேற்பட்ட கண்ணகி கோயில்கள் இன்றும் உள்ளன. வன்னிவள நாட்டில் கண்ணகி வழிபாடு மிக உன்னதமான வழிபாடாக இருந்திருக்கிறது. முல்லைத்தீவு, புத்தளம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் கண்ணகி வழிபாடு மிக முக்கியமானதாகும். ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் கண்ணகி வழிபாடு சமஸ்கிருத நெறிமுறைக்குள் வந்துவிட்டதை மாணவர்களுடனான களப் பயணத்தின் வழியே அறிந்துகொண்டேன். புங்குடுதீவு கிழக்குக் கண்ணகை அம்மனும் (ஈழத்தில் கண்ணகி அம்மன் கண்ணகை அம்மன் என்றே அழைக்கப்பெறுகிறாள்), புத்தூர் கிழக்குக் கண்ணகை அம்மனும் ராஜராஜேஸ்வரி என்று சமஸ்கிருதமயப்பட்டுவிட்டார்கள். யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயில்களும் சமஸ்கிருத வயப்பட்ட பெயர் மாற்றத்தைப் பெற்றுவிட்டதையும் களப்பயணங்களின் வழியே அறிய முடிந்தது.

யாழ்ப்பாணத்தில் சமஸ்கிருதமயமாக்கம் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வந்துள்ளது. முதலாவது: நாட்டார் தெய்வங்களின் பெயர்களை மாற்றி உயர்நிலைத் தெய்வங்களாக ஆக்குதல். பின்வரும் தெய்வங்களின் பெயர்களை நோக்கினால் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

அண்ணமார் – பிள்ளையார்

விருமர் – பிள்ளையார்

நாச்சிமார் – காமாட்சி அம்மன்

கண்ணகை அம்மன் – ராஜராஜேஸ்வரி

முனி – முனீஸ்வரர் (சிவன்)

வைரவர் – ஞான வைரவர்.

இரண்டாவது: வழிபாட்டு முறைகளில் சொல் வழக்குகளை மாற்றி உயர்நிலைப்படுத்தியதையும் காண முடிந்தது. எடுத்துக்காட்டாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

மடை – பொங்கல்

குளிர்த்தி – பொங்கல்

பொங்கல் – சங்காபிடேகம்.

மூன்று: படையல் மரபிலும் சமஸ்கிருதமயம் வளர்ந்துவிட்டதைக் களாய்வில் அறிய முடிந்தது. யாழ்ப்பாணத்து மாரியம்மன் கோவில்களில் முன்னர் உயிர்ப்பலி இடுதல், மீன், மாமிசம், குடிவகை போன்றவை படைக்கப்பட்டன. 1980களுக்குப் பிறகு இவை படிப்படியாகக் குறைந்து பொங்கலிடுதல், மடைபரவுதல், குளிர்த்தி செய்தல் என மாற்றம் பெற்றன. பிற்காலத்தில்தான் சிவாகம முறைப்படி ஆலயங்களில் பிரதிஷ்டை செய்வதும் மகோற்சவம் செய்வதும் நீர்க்கஞ்சி, பொங்கல், குளிர்த்தி செய்வது போன்ற மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் இன்றும் சில கோயில்களில் மிருகப் பலி நடைபெறுகிறது.

கோயில் திருவிழாக்களில் காத்தவராயன் கூத்து, கோவலன் கண்ணகி காதை, வசந்தன் கூத்து, காமன் கூத்து, இந்திர விழா போன்ற நிகழ்த்து கலைகள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பு, வன்னிப் பிரதேசக் கோயில்களிலும் நடைபெறுகின்றன. பங்குனி, சித்திரை, வைகாசி மாத விழாக்களில் இவை சிறப்பாக நடை பெறுகின்றன. எனினும் ஆரம்பக் காலங்களில் விடிய விடிய இடம்பெற்ற இக்கூத்து வழிபாடுகள் இன்று சுருக்கமாக நடைபெறுகின்றன. இந்தக் கூத்து ஆற்றுகையுடன் தொடர்புடையவர்களை ‘அண்ணாவியார்’ என்று மக்கள் அழைக்கின்றனர். இத்தகைய வழக்கத்தைத் தமிழகத்தில் அதிகம் காண முடியவில்லை.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பள்ளி மாணவர்களுக்கான ‘தமிழ்த் தினப் போட்டிகளில்’ இக்கூத்துகள் இன்றும் போட்டிக்கான கலையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று இவற்றை நிகழ்த்துகின்றனர். சுன்னாகம் ஸ்கந்தரோதயாக் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களுடன் நேரில் கலந்துரையாடியபோது இதை அறிய முடிந்தது. இத்தகைய மரபுத் தொடர்ச்சி அங்கிருப்பது கண்டு எனக்குப் பெருமையாக இருந்தது.

சுன்னாகம், இணுவில், வடமராட்சி, நயினாத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்களுடன் நான் நேரில் சென்று வந்த பிறகு யாழ்ப்பாணப் பகுதிக்குரிய வழிபாட்டு மரபு குறித்து அறிய முற்பட்டேன். இங்குள்ள வழிபாட்டு மரபும் மற்ற பண்பாட்டுக் கூறுகளைப் போலவே அதன் தனித்துவத்தைக் காட்டுவதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் சாதிக்கு ஒரு தெய்வம் எனும் நிலையில் சாதித் தெய்வங்கள் (குலதெய்வங்கள்) இருக்கின்றன. பள்ளர்கள் அண்ணமாரை வழிபடுகின்றனர். பறையர் வல்லியக்கனைக் கும்பிடுகின்றனர். வண்ணார் பெரிய தம்பிரானை வணங்குகின்றனர். குயவர், பண்டாரம் இருவரும் பிள்ளையாரை வழிபடுகின்றனர். தட்டார் நாச்சிமாரை வழிபடுகின்றனர். கொல்லர், நட்டுவர், தச்சர் ஆகிய மூவரும் காளி அம்மனை வழிபடுகின்றனர். தச்சர் குறிப்பாக புது வீடு கட்டினால் ‘தச்சன் காளிப் பொங்கல்’ பொங்குகின்றனர். பிரா மணர்கள், சைவக் குருக்கள், வெள்ளாளர் ஆகியோர் சிவன், முருகன், விஷ்ணு, துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களை வணங்குகின்றனர்.

நாங்கள் சென்று வந்த பகுதிகளில் குயவர், பண்டாரம் இருவருக்கும் பிள்ளையார் குலதெய்வமாக இருந்தாலும் மற்ற சாதியார் பிள்ளையாருக்குத் தனிக் கோவில் கட்டி வழிபடுகின்றனர். இதனால் பிள்ளையார் அச்சாதிப் பெயராலேயே அழைக்கப்படுகின்றார். ‘குசவப் பிள்ளையார்’, ‘கோவியப் பிள்ளையார்’, ‘வெள்ளாளப் பிள்ளையார்’, ‘பண்டாரப் பிள்ளையார்’, ‘தச்சப் பிள்ளையார்’ எனச் சாதிவயப்பட்ட பிள்ளையார்களைக் காண முடிந்தது.

சாதிய வழிபாட்டு முறைகளில் செல்வச் சந்நிதி முருகன் கோவில் வழிபாட்டு முறை தனித்துவமானது. சமூகவியல் மாணவர்களுடன் தொண்டமனாறுக்குத் தனிப் பேருந்தில் போய் இறங்கியதும் வாய் கட்டிய பூசாரிகளை அங்குள்ள செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் பார்த்தோம். இவர்கள் மரபுவழி வந்த கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வாய் கட்டியே பூசைசெய்தார்கள். அதாவது மந்திரங்கள் இங்கு முதன்மை பெற்றிருக்கவில்லை. இவர்களை யாழ்ப்பாணத்தில் ‘கப்புறாளை’ என்று சிறப்பாகச் சொல்வார்கள். இவ்வாறு வாய் கட்டிப் பூசைசெய்யும் முறை இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் உள்ள ‘மண்டூர் கந்தசுவாமி’ கோவிலும் கதிர்காமத்திலும் உண்டு.

கதிர்காமத்தில் இன்றும் வேட்டுவ மரபில் வந்தவர்கள் பூசைசெய்யும் முறையும் காணப்படுவதைச் சமூகவியல் பேராசிரியர்கள் எனக்குச் சொன்னார்கள். கதிர்காம முருகன் கோவில் தங்களுக்குச் சொந்தமென இப்போது சிங்களவர்கள் முனைகின்றனர். முருகன் பெயரைச் சிங்கள மரபிற்கேற்ப ‘கதரகம தெய்யோ’ எனப் புதுத் தொன்மத்தை உருவாக்கியுள்ளனர். கண்டியில் உள்ள முருகனைப் பௌத்த வர்த்தகர்கள் கதரகம தெய்யோ என்றே வழிபடுகின்றனர். கண்ணகி பத்தினித் தெய்யோ என்றும் பிள்ளையார் கணபதி தெய்யோ என்றும் இன்னும் பல இந்துக் கடவுள்களைப் பௌத்த மயப்படுத்தி வழிபடுவதன் வரலாற்றையும் இங்கு இடம்பெற்ற ஆய்வுகளின் வழி அறிந்துகொண்டேன்.

இவற்றைவிடப் பராராச சேகரப் பிள்ளையார், செகராசசேகரப் பிள்ளையார், நல்லூர் கந்தசுவாமி கோவில், வீரமாகாளியம்மன் போன்ற கோயில்கள் யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்களின் வரலாற்றுடன் தொடர்புகொண்டுள்ளன. மேலும், நகுலேஸ்வரம் சிவன் கோவில், மாவிட்டபுரம் முருகன் கோவில் தென்னிந்திய மன்னர்களின் வரலாற்றுக் கதைகளுடன் இணைந்தனவாக இன்றும் வழிபடப்பட்டுவருகின்றன என்பதையும் விரிவாக அறிந்துகொண்டேன்.

8

jaffna6-1-300x200.jpg

யாழ்குடா நாடு தொல்லியல் சான்றுகள் நிறைந்த பகுதியாகும். திராவிட நாகரிகத்தின் மிக முக்கியமான சான்றுகள் இங்கிருப்பதைக் கந்தரோடைக்குச் சென்றபோது அறிந்துகொள்ள முடிந்தது. கந்தரோடை யாழ்குடா நாட்டின் சுன்னாகப் பிரதேசத்தில் உள்ளது. இது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே அண்ணளவாக 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய திராவிடர்கள் கந்தரோடையில் வாழ்ந்ததற்கான சான்றுகள் வெகுவாகவே கிடைக்கின்றன. கந்தரோடையில் கிடைத்த நாணயங்கள் தென்னிந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே இருந்த வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்புகளைக் காட்டுகின்றன. கிரேக்க உரோம நாடுகளுடன் கந்தரோடை கொண்டிருந்த தொடர்பையும் அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த கந்தரோடையை இப்போது சிங்களமயமாக்கும் வகையில் ‘கத்துறு கொட’ என்று அழைக்க முயல்வது நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது.

9

நான் யாழ்ப்பாணத்திற்குப் போன காலம் போர் முடிந்து பரபரப்பாக இருந்த நேரம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான் தங்கியிருந்தபோது மாணவர்களுடன் பல வேளைகளில் கலந்துரையாடினேன். அவர்கள் போர் இடம்பெற்ற காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமக்குப் பல்வேறு வகையில் உதவிவருவதைக் குறிப்பிட்டனர். குறிப்பாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குதல், வெளிநாட்டிலிருந்து வந்த உதவித் தொகைகளைப் பகிர்ந்தளித்தல், அகதி முகாம்களிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் கல்வியைத் தொடராது இடைநிறுத்திய மாணவர்களை அங்கிருந்து வெளியே எடுத்து விசேட வகுப்புகள் நடத்துதல் போன்ற இன்னோரன்ன சேவைகள் அனைத்தையும் நேரில் கண்டபோது நான் நெகிழ்ந்துபோனேன். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சண்முகலிங்கன் தாயும் தந்தையுமாய் நின்று இரவு பகல் பாராமல் இம்மாணவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதை நேரில் பார்த்தேன். யாழ் பல்கலைக்கழகம் சமூகத்தின் பல்கலைக்கழகமாகப் புதிய பரிமாணம் பெற்றிருந்ததையும் கண்டேன்.

இன்னொருபுறம் யாழ்ப்பாணத்தின் நினைவுகள் தமிழ்ப் பண்பாட்டின் நீண்ட நெடிய அறுபடாத மரபை நம்முன் கொண்டுவருகின்றன. யாழ் நகரமும் சரி, யாழ்குடா நாடும் சரி பழமை மாறாமல் பண்பாட்டைப் பேணிவரும் பிரதேசமாகக் காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது கலைவரலாற்றுத் துறையினர் ஏற்பாடுசெய்திருந்த ‘குத்து விளக்குக் கண்காட்சி’யைத் தொடங்கிவைக்குமாறு அழைத்தார்கள். உண்மையிலேயே வியந்துபோனேன். எத்தனை விளக்குகள், எத்தகைய மரபு. கண்காட்சியில் பனங்காய் பணியாரம் செய்து வழங்கினார்கள். நிகழ்வில் மரபைக் காட்டும் அம்சங்களே நிறைந்திருந்தன.

யாழ்ப்பாணத்தில் இன்று நாம் காணுகின்ற நவீனத்துவம் பண்பாட்டு மரபைப் பெரிதும் அழித்துவிடவில்லை என்பதையும் நான் நுட்பமாக உணர்ந்துகொண்டேன். ஆனால் ஒரு சோகம் என்னைவிட்டு நீங்கவில்லை. யாழப்பாணத்தின் பெரும்பகுதி மக்கள் கனடாவிற்கும் பிற மேலை நாடுகளுக்கும் புலம்பெயர்ந்துவிட்டார்கள். இதன் விளைவாக ஆரம்ப காலத்தில 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்த யாழ்ப்பாணப் பிரதேசத்தில் தற்போது 5 லட்சம் மக்கள்தாம் வாழ்கின்றார்கள் என்று பத்திரிகையின் வாயிலாக அறிந்தபோது என் மனம் வெதும்பியது. இது யாழ்ப்பாண மக்களின் வாழ்வுரிமையுடன் தொடர்புபட்ட கல்வி, பொருளாதாரம், அரசியல் பங்கேற்பில் தாக்கம் செலுத்துமானால் பாரிய மாற்றங்கள் நிகழக்கூடும்.

நன்றி : காலச்சுவடு

http://inioru.com/?p=25253

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.