Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலம் - கவிஞர் சேரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலம் - கவிஞர் சேரன் [ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, 13:37 GMT ] [ புதினப் பணிமனை ] Cheran.jpg

[சென்னையில் இருந்து வெளிவரும் 'காக்கைச் சிறகினிலே..' இலக்கிய மாத இதழில் [மார்ச். 2012] வெளிவந்த கவிஞர் சேரனின் நேர்காணலை அதன் முக்கியத்துவம் கருதி எமது தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.]

‘நீரற்றது கடல்

நிலமற்றது தமிழ்

பேரற்றது உறவு’ என்று மிகச் சிக்கனமான வரிகளில் ஈழத்தில் நடந்த பேரழிவை எடுத்துச் சொல்லும் கவிஞர் சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். ஈழத்தில் நடந்த பல அதிகாரம் சார்ந்த அதிர்வுகளுக்கு எதிர்வினையான எழுத்துச் சாட்சியங்களாக இருக்கின்றன இவருடைய கவிதைகள். தற்போது கனடாவில் உள்ள விண்சர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் சேரன் அண்மையில் சென்னைக்கு வந்திருந்த போது எடுக்கப்பட்ட நேர்காணல் இது. நேர்காண்டவர் - மணா

Cheran-Mana.jpg

கேள்வி: 2009இல் முள்ளி வாய்க்காலில் நடந்த மிகப்பெரிய ஒரு இன அழிப்புக்குப் பிறகு புலம்பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் ஒரு தத்தளிப்பான மனநிலை இருக்கிறது. இதுவரைக்கும் அங்கு நடந்த இனஅழிப்பு பற்றின தகவல்கள் சரிவர வெளிவராத நிலைதான் இருக்கிறது. இன்று வரைக்கும் சரியாக வெளிவரவில்லை. பலவிதமான வதந்திகள் நிலவிக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் ஒரு புலம் பெயர்ந்த தமிழராக இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கவிஞர் சேரன்: 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க் காலில் இடம்பெற்றது இந்த நூற்றாண்டினுடைய முதலாவது இனப்படுகொலை. என்று சொல்வதற்கு எங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் இருக்கத் தேவையில்லை. அந்தக் கடைசி நாட்களில் ஏறத்தாழ ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரத்து ஐநூற்று அறுபது பேர் அளவில்-அவர்கள் என்ன ஆனார்கள் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிய எந்தவிதமான தகவல்களோ விவரங்களோ எங்களுக்குக் கிடையாது. இருக்கக்கூடிய புள்ளிவிவரங்களின்படி நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரிகிறது. இந்தக் கொலை குறுகிய காலகட்டத்தில் நடைபெற்றது.

கேள்வி: நாற்பதாயிரம் பேர் என்ற எண்ணிக்கையை விடக் கூடுதலாகச் சொல்லப்படுகிறதே?

கவிஞர் சேரன்: நாற்பதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் என்பதுதான் சாத்தியமானதொரு தொகை என்று நான் கருதுகிறேன். இதற்கு மிகத் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. 2008 ஆம் ஆண்டளவில் அந்தப் பகுதிகளில் இலங்கையினுடைய வன்னிப்பகுதிகளில் இருந்த மக்கள் தொகை சற்று ஏறத்தாழ மூன்று லட்சத்து முப்பதாயிரம் என்பதை உறுதிப்படுத்தும் கணக்கெடுப்புகளும் மதிப்பீடுகளும் ஏற்கனவே இருந்திருக்கின்றன.

இது ஐக்கிய நாடுகள் அவைக்கும் தெரியும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் தெரியும். இலங்கை அரசாங்கத்துக்கும் தெரியும். நாங்கள் அந்தப் புள்ளிவிவரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதற்குப் பிற்பாடு இந்த இனப்படுகொலை முடிந்த பிறகு இந்த வதை முகாம்களுக்கும் இந்த அகதி முகாம்களுக்கும், தடுப்பு முகாம்களுக்குமான மக்களினுடைய எண்ணிக்கையை நாங்கள் பார்த்தபொழுது இந்த இரண்டு எண்ணிக்கைக்குமிடையே இந்த வித்தியாசமான எண்ணிக்கை தான் ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரத்து அளவான இந்த மக்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது.

இவர்கள் அவ்வளவு பேரும் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. நிறையப்பேர் தப்பி ஓடியிருக்கலாம். நிறையப்பேர் வேறெங்காவது போயிருக்கலாம். காணாமல் போயிருக்கலாம். ஆனால் கட்டாயமாக நிச்சயமாக இந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமுமில்லை. அங்கு அந்த காலகட்டங்களில் நடந்தவற்றை நாங்கள் இனப் படுகொலை என்று சொல்வதற்கு அதுவே ஒரு காரணம்.

ஆனால், அது மட்டுமல்ல, இரண்டாவது முக்கியமான காரணம் என்னவென்று சொன்னால் இதற்கு முன்பாக குறிப்பாக 1948ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு இலங்கையினுடைய சிங்கள பௌத்த தேசியவாத அரசு தொடர்ச்சியாக எடுத்துவந்த நடவடிக்கைகள் எல்லாம் இனத்துவ அழிப்பு, இனத்துவ சுத்திகரிப்பு, தமிழ், தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலையை ஒரே நேரத்தில் அல்ல, மெல்லமெல்ல கட்டங்கட்டமாக செய்துவரக்கூடிய ஒரு நடவடிக்கையாகத் தொடர்ந்து வந்திருக்கிறது.

அதனுடைய ஒரு உச்சகட்டமாகத்தான் இந்த 2009 மே அன்று நடந்த நிகழ்வுகளையும் இனப்படுகொலைகளையும் நாங்கள் பார்க்க வேண்டும். இதில் மிக முக்கியமான ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இதற்கு முன்பாக நடந்தஏராளமான படுகொலைகளை நாங்கள் சமூகவியலிலும் மானுடவியலிலும் ஜீனோசைட் மசக்கிரேஸ் [Genocide massacres] என்று சொல்வோம். சாதாரணமாக நடந்த படுகொலைகள் அல்ல. அவை திட்டமிடப்பட்டு ஒரு மக்கள் கூட்டத்தை மெல்ல மெல்ல அழிப்பதற்காக கருவறுப்பதற்காக எடுக்கப்பட்ட படுகொலைகள். ஏராளமான படுகொலைகள்.

இத்தகைய படுகொலைகள் 1984ஆம் ஆண்டிலிருந்து 87 ஆம் ஆண்டு வரைக்கும் நடந்த ஏறத்தாழ 47 படுகொலைகளுக்கு நானே சாட்சியமாக இருந்திருக்கிறேன். பத்திரிகை ஒன்றில் பணிபுரிகிற போது அந்தப் படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் படுகொலைகள் நடந்த பிற்பாடு அந்த இடங்களுக்குச் சென்று அதைப்பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இவையெல்லாம் பழிக்குப்பழி வாங்குவதாக அல்லது அந்த மக்களை அந்த இடத்திலிருந்து திட்டமிட்டு வெளியேற்றுவதற்காக எண்ணித் துணிந்து திட்டமிட்டு நடத்தி முடிக்கப்பட்ட படுகொலைகள். இனப்படு கொலைக்குக் காரணமாக இனப் படுகொலைக்கு வித்திடுகின்ற ஒருவகையான படுகொலைகளாக அவை தொடர்ச்சியாக இடம் பெற்று வந்திருக்கின்றன.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல அதனுடைய ஒரு உச்சகட்டமான இந்தப் படுகொலைகள்தான் மே மாதம் 2009இல் அரங்கேறியிருக் கிறது. இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் - அந்தக் கால கட்டங்களில் உண்மையாக என்ன நடந்தது என்பதைப் பற்றித் தெரிந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இன்னும் பலபேர் அவற்றைப் பற்றி சொல்ல முடியாமல், சொல்வதற்கு வாய்ப்பிருந்தும் சொல்வதில் மனவடுவிலும் பயப்பிராந்தியிலும், திகைப்பிலும் ஊறியிருக்கிறார்கள். மெல்லமெல்லத்தான் இந்த விவரங்கள் எங்களுக்குத் தெரிய வருகிறது. ஐக்கிய நாடுகளினுடைய அவை சிறப்பு ஆணைக்குழு வெளியிட்டிருக்கிற அந்த அறிக்கையில் மிகவிரிவான, மிக ஆழமான, மிக பயங்கரமான தகவல்களை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

கேள்வி: அந்த அறிக்கை எந்த அளவுக்கு நம்பகத் தன்மை வாய்ந்தது?

கவிஞர் சேரன் : வாசித்தவன் என்ற முறையில் நான் உங்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்லலாம். அது மிகுந்த பொறுப்புணர்வுடனும் தீவிரமாகவும் விசாரிக்கப்பட்டு அதனுடைய விவரங்களை மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

இரண்டாவதாக அந்த அறிக்கைக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் புகழ்பெற்ற, மிக முக்கியமாக மதிக்கப்படக்கூடிய மனித உரிமை அறிஞர்கள். பக்கச்சார்பற்று நீண்ட காலமாக அவர்கள் பணிபுரிந்தவர்கள். அந்த அறிக்கையைப் பற்றி எனக்கு எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

அந்த அறிக்கையின் முக்கியமான குறிப்புகளில் இந்தக் கடைசிக் காலங்களில் விடுதலைப் புலிகள்மக்களை மனிதக் கேட யங்களாகப் பயன்படுத்தினார்கள் என்று சொல்கிறார்கள். மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன் படுத்துவது என்பது ஒரு சட்டத் துறை சட்டவியல் சார்ந்த ஒரு பயன்பாடு. அதனைப் பயன் படுத்துகிறபோது ஏராளமான இந்த இனப்படுகொலை என்ற சொல்லை சட்டரீதியாகப் பயன்படுத்துகிற மாதிரி இனப்படுகொலைக்குச் சமூகவியல் ரீதியாக, மானுடவியல் ரீதியாக நாங்கள்வித்தியாசமான விளக்கங்களை கொடுக்கலாம்.

ஆனால் இந்த மனிதக் கேடயம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது மிக இறுக்கமான சட்டத்திட்டங்கள் சட்டநுணுக்கங்களின் படிதான் சாத்தியம். அப்படிச் சொல்ல முடியுமா இல்லையா என்பதைப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் இருக்கிறபடியால் இந்த ஐக்கிய நாடுகளினுடைய அந்த அறிக்கையில் அவர்கள்மனிதக் கேடயம் என்ற சொல்லைப் பாவிக்கவில்லை. அந்த அறிக்கையில் அவர்கள் பயன்படுத்துகிற சொல் ‘Human Buffer'. Human Shield] என்ற சொல்லை அவர்கள்பயன்படுத்தவில்லை. அவ்வளவு தூரம் நுணுக்கமாகவும் நிதானமாகவும்தான் அவர்கள் அந்த அறிக்கையை எழுதியிருக்கிறார்கள்.

இரண்டாவதாக ஆதாரங்கள் கிடைக்கக்கூடிய ஏராளமான போர்க்குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைக்கப் பட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் இருக்கின்றன. அவை மேலும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டுமென்று அந்த அறிக்கை சொல்கிறது.

எனவே எங்களுக்கு என்ன தெரியவருகிறது என்று சொன்னால் மே 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இந்த இனப்படு கொலை பற்றி இன்னும் மேலும் முழு விவரங்களும் எங்களுக்குத் தெரிய வேண்டும். அவை பற்றிய ஒரு விசாரணைக்குழு தேவை யென்றுதான் இந்த அறிக்கை சொல்கிறது. அது அப்படியான ஒரு ஆணைக்குழு இருந்தால் மட்டும்தான் எங்களுக்கு இன்னும் மேலதிகமான விடயங்கள் வெளியில் தெரிய வரும், அதுவும் சர்வதேச தளத்தில்.

ஆனால் தமிழ்ச் சூழலைப் பார்க்கிறபோது எங்களுக்கு இந்தப் படுகொலையில் தப்பி வெளியில் வந்தவர்கள், அந்த நேரத்தில் அங்கிருந்தவர்களின் ஏராளமான வாய்மொழி வாக்குமூலங்கள், அவர்களுடைய சில நினைவுப் பகுதிகள், அவர்களுடைய எழுத்துகள், இலக்கியப் படைப்புகள், மெல்ல மெல்ல இப்போது எங்களுக்குக் கிடைக்கின்றன. இத்தகைய பதிவுகள் இப்போதுதான் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கின்றன. இவற்றைத் தொகுத்துப் பார்க்கிற பொழுது ஒரு விடயம் மட்டும் எங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிகிறது. அது என்னவென்று சொன்னால் இந்த நூற்றாண்டினுடைய முதலாவதான மிக முக்கியப் படுகொலைகள். இந்த இனப்படுகொலைகள் இப்படி நடக்கப் போகிறதென்று சர்வதேச நாடுகளுக்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள்அவைக்கும் தெரிந்திருக்கிறது.

ஐக்கிய நாடுகளினுடைய அவை மனித உரிமைகளுக்குப் பொறுப்பாக இருக்கக்கூடிய மிக முக்கியமான ஓர் அலுவலர். ஜோன் ஹோம்ஸ் என்று அவருக்குப் பெயர். அவர் இரண்டு தரம் இலங்கையில் சொல்லியிருக்கிறார். "ஒரு 'Blood Bath' அதாவது ஏராளமான பொது மக்களை குருதியில் குளிப்பாட்டுகிற நிகழ்வு அல்லது ஏராளமான பேர் கொன்றழிக்கப்படக்கூடிய ஒரு நிகழ்வு நடைபெறப்போகிறது. நீங்கள்அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று இரண்டு தரம் அவர் சொன்ன பிறகும்கூட உலகநாடுகளும் ஐக்கிய நாடுகள்அவையும் அவற்றைக் கருத்தில் எடுக்க வில்லை.

இதேமாதிரியான ஒருநிலைதான் ருவாண்டாவிலும். இனப்படுகொலை அங்கு நடந்து கொண்டிருக்கிற பொழுது அங்கே ‘இனப்படுகொலை நடக் கிறது உதவி செய்யுங்கள்’ என்று கனடாவிலிருந்து சென்றிருந்த ஒரு ராணுவத்தளபதி திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதை ஏற்கவில்லை. அந்த நேரத்தில் கிளிண்டன் அதிபராக இருந்தார். அது நடந்துகொண்டிருக்கிற பொழுது அவர் அதை ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கான மிக முக்கியமான காரணம் என்ன என்று சொன்னால் ஒன்று இப்போது இருக்கக் கூடிய இந்த சர்வதேச அரசியல் அமைப்பு, சர்வதேச ஒழுங் கமைப்பு, சர்வதேச நிறுவனங்கள். அது ஐக்கிய நாடுகள்அவையாக இருக்கட்டும், உலக வங்கியாக இருக்கட்டும், அல்லது உலக நிதி நிறுவனமாக இருக்கட்டும், இந்த எல்லா நிறுவனங்களும் எல்லா அமைப்பும், எல்லா சர்வதேச ஒழுங்கும் - ஏற்கனவே உருவாகி இருக்கின்ற இந்த 193 நாடுகள் Nations State என்று சொல்வார்கள்-அந்த நாடுகளுக்கும் அந்த நாடுகளினுடைய நலன்களைப் பேணு வதற்காகவும்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஈழத்தமிழ் மக்கள், குர்திஸ் மக்கள், பாலஸ்தீன மக்கள் போன்றவர்கள் இத்தகைய இந்த நாடுகள் Nations State நாடுகள் அரசுகள் அந்தக் கட்டுப்பாட்டுக்குள்அந்தக் கூட்டுக்குள் வராதபடியால் அவர்கள்ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களாக பல்வேறு இடங்களில் சிதறி இருக்கிறார்கள்.

இப்படி ஒடுக்கப்படும் தேசிய இனமாக பல்வேறு இடங்களில் சிதறி வாழுகின்ற மக்களுக்கு இப்போது இருக்கக்கூடிய இந்த சர்வதேச ஒழுங்கிலும், அமைப்பிலும் எந்த வகையான அடிப்படை நியாயமும் கிடைக்கப்போவதில்லை. இது ஒரு மிக முக்கியமான காரணம். இந்த எல்லா நிறுவனங்களும் அரசாங்கங்களின் சார்பாக இருக்கின்றன. இலங்கை அரசாங்கத்துக்கு கொஞ்சநாள் நேரம் கொடுப்போம் என்று சொல்வார்கள். அதற்குள் அவர்கள் மேலே வரட்டும் பிறகு இன்னும் கொஞ்சநாள் நாங்கள் கொடுப்போம் என்று சொல்வார்கள். எல்லா அரசாங்கங்களும் சேர்ந்து உருவாக்கிய அமைப்புகள்தானே இது. இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம் இப்பொழுது இருக்கக்கூடிய இந்தச் சர்வதேச ஒழுங்கு முறை ஆட்சியையும் மேலாதிக்கத்தையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிற இந்த மேற்குலக நாடுகளும், பிறகு இப்பொழுது சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற உருவாகி வருகின்ற மேலாதிக்கம் பெற்ற நாடுகளும், அவர்கள் இந்த அடிப்படை உரிமைகள், மானுட உரிமைகள், இனப்படுகொலைகள் போன்ற விடயங்கள்பற்றி ஒரு சீரான முறையில் எல்லா நாடுகளுக்கும் பொருந்தியதாக அவர்கள் பயன்படுத்தவில்லை.

தங்களுடைய அரசியல் பொருளாதார நலன்களுக்கு வாய்ப்பாகவும் உதவியாகவும் இருக்கிறபொழுது மட்டுமே அவர்கள்அவற்றை முன்னெடுக்கிறார்கள். தங்க ளுடைய சொந்த நலனுக்கும் அரசியல் நலனுக்கும் பொருளாதார நலனுக்கும் குந்தகமாக இருக்கிறபொழுது அவர்கள்அதைப்பற்றிப் பேசுவதில்லை. எனவே இந்த அடிப்படை உலக விழுமியங்களான அடிப்படை உரிமைகள், மனிதஉரிமைகள், இனப்படுகொலைகளுக்கு எதிராக இருத்தல் போன்ற இந்தத் தார்மீகம் சார்ந்த அறக்கோட் பாடுகளுக்கு இந்த எல்லா நாடு களுமே - ஐக்கிய நாடுகள்அவை மனித உரிமைகள்பட்டயத்தில் கையெழுத்து வைத்திருந்தாலும் இவை பிரிக்கப்படமுடியாத உரிமைகள் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் - இவற்றை எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் ஒரே சமச்சீராக அமல்படுத்த வேண்டுமென்று தெரிந்திருந்தாலும் - தங்களுடைய சொந்த நலன் கருதி அவர்கள்அதை தெரிவு செய்து தங்களுக்கு ஏற்ற மாதிரி சொல்கிறார்கள்.

சிரியாவில் நடந்ததைப் பற்றி இப்போது ஏராளமாகச் சத்தம் போடுகிறார்கள். அதைவிட மிக மோசமான படுகொலைகள் இலங்கை வன்னியில் நடந்திருக்கிறது. அந்தநேரம் அதைப்பற்றி ஒருவர்கூட பேசவில்லை. ஐக்கிய நாடுகள் இப்போது சிரியாவில் 5000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். ஆக இலங்கையில் கொல்லப்பட்டிருக்கிறபோது ஏராளமான பேர் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் பேர் என்று சாட்டிலைட் ஆதாரங்களோடு இருந்தபோதும் அவர்கள்அதைப்பற்றிச் சொல்லத் தயங்கினார்கள். இத்தகைய அரசியல், இந்தத் தெரிவு அரசியல் இன்றைய சர்வதேச ஒழுங்கினுடைய அடிப்படையாக இருக்கிறது. இத்தகைய நிலை நீடிக்கும் வரைக்கும் இந்த அமைப்புக்குள் ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு தீர்வை கண்டு கொள்வது என்பது சாத்தியமில்லை. நாங்கள்வேறு புதுவழிகளைப் பற்றித்தான் யோசிக்க வேண்டும்.

avavindan_2012-1.jpg

கேள்வி: இலங்கையில் நடந்த இனப்படுகொலையை இனப்படுகொலையாக ஏற்றுக்கொள்வதில் சர்வதேச நாடுகளுக்கு என்ன தயக்கமிருக் கிறது? அதை மறைப்பதற்கான அடிப்படைக் காரணமாக எதைக் கருதுகிறீர்கள்?

கவிஞர் சேரன் : இது ஒரு மிக முக்கியமான ஆனால் சிக்கலான கேள்வி. உங்களுக்குத் தெரியும் ஆர்மீனிய மக்களை துருக்கி அரசாங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பு இனப்படுகொலை செய்தது. அது ஒரு இனப் படுகொலை என்று சில நாடுகள் ஏற்றுக்கொண்டிருக் கின்றன. ஆனால் அதை ஒரு ‘இனப் படுகொலையாக’ அங்கீகரிக்க வேண்டுமென்று கொண்டு வரக்கூடிய எல்லாத் தீர்மானங்களுக்கும் பல நாடுகள் எதிராக இருக்கின்றன அமெரிக்கா உட்பட.

இனப்படுகொலை நடந்தது என்று அதை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டால் அதற்குப் பிற்பாடு சில தொடர் நடவடிக்கைகள்இருக்கின்றன. அந்த மக்களுக்கான தீர்வு, அந்த மக்களுக்கான அறம் சார்ந்த அவர்களுடைய பிரச்சினை தொடர்பாக என்ன கொடுக்கிறோம். அவர்கள்நாடற்றவர்களாக இருந்தால் அவர்களுக்கு நாடு உருவாக்கிக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய ஏராளமான இது தொடர்பான நிகழ்வுகளும் அரசியல் ஏற்பாடுகளும் தேவை. அதற்கு இவர்கள் பொறுப்பாக இருக்க வேண்டும். அது ஒரு காரணம் இந்த இனப்படுகொலையை அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளாததற்கு.

இரண்டாவது காரணம் இந்த சர்வதேச சட்டமும் சர்வதேச நீதித்துறையும் [international Humanitary International Law] உருவாகி வளர்ந்து வருகின்ற துறை. இதற்கு நீண்டகால வரலாறு கிடையாது. உங்களுக்குத் தெரியும் சர்வதேச நீதிமன்றம் International Criminal Cour அமைக்கப்பட்டு கொஞ்ச ஆண்டுகள்தான் ஆகின்றன. அது இப்போதுதான் சிலசில வழக்குகளை விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. அதனுடைய சட்டமுறைகள், சட்டக்கோட்பாடுகள்எல்லாம் மெல்லமெல்லத்தான் இப்போது வளர்ந்துகொண்டிருக்கின்றன.

இனப்படுகொலை பற்றிய இந்த சர்வதேச சட்டங்களுக்கூடான அந்த வரைவிலக்கணம் நியாயப்பாடு எல்லாம் 48க்குப் பிறகு வந்ததுதான். அது மிக இறுக்கமான சில வரைவிலக்கணங்களைக் கொண்டிருக்கிறது. அது இந்தச் சர்வதேசச் சட்டம் சார்ந்த ஒருவகையான நியாயப்பாடு.

ஆனால், சர்வதேச சட்ட வாதங்களால் அல்லாமல் ஒரு இலக்கிய வாதியாக, ஒரு கவிஞ னாக, ஒரு சமூகவியலாளனாக, மானுடவியலாளனாக இருந்து பார்க்கிறபொழுது இந்த இனப் படுகொலை என்பதை அவ்வளவு இலகுவாக ஒருசின்ன சட்டகத்துக்குள் அடக்கி வரைவிலக்கணம் செய்துவிட முடியாது. அது மிகச் சிக்கலான சமூக, அரசியல், வரலாறு பண்பாடு சார்ந்த ஒருவகையான சம்பவம். அப்படிப் பார்க்கிறபொழுது மே 2009 வன்னியில் நடைபெற்றது நிச்சயமாக பண்பாடு சார்ந்து, அரசியல் சார்ந்து பயங்கர வீச்சு சார்ந்து ஒரு இனப்படுகொலை என்பதை மிகத் தயக்கமில்லாமல் என்னால் வாதிட முடியும்.

ஆக இது ஒரு இனப்படுகொலை என்று ஏற்றுக்கொண்டால் இனப்படுகொலை நடந்த பிறகு ருவாண்டாவிலே, துருக்கியிலே அவர்கள் என்ன செய்தார்களோ அதே மாதிரியான ஒரு தீர்வையும், அதே மாதிரியான ஒரு அறம் சார்ந்த பாதுகாப்பையும் அரசியல் உரிமைகளையும் அவர்கள் இலங்கையிலும் வழங்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவர்கள் தயாராயில்லை. அதனால்தான் இந்த விடயத்தில் அவர்கள் முற்றுமுதலாக தங்களை ஈடுபடுத்திக்கொள்வதற்கு மறுக்கிறார்கள். இது ஒரு அடிப்படையான காரணம். இந்தக் காரணத்தை அனைவரும் மிகத் திருத்தமாக புரிந்துகொள்ள வேண்டும்.

கேள்வி: அந்த அறிக்கை யில் பலவிதமான சிபாரிசுகள்அதாவது இலங்கை அரசு ஈழத் தமிழர்களை மீள்குடியமர்த்துவதற்கு சொல்லப்பட்டிருக்கிறது. இன்று வரை இலங்கை அரசு எதையுமே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லையே?

கவிஞர் சேரன் : இலங்கை அரசாங்கம் இந்த ஐக்கிய நாடுகள் அவையினுடைய சிறப்புப் பிரதிநிதிகளினுடைய இந்த அறிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அதை ஐக்கிய நாடுகளினுடைய அறிக்கை என்று கருதவில்லை. அவர்கள் அதை தாரிஸ்மன் அறிக்கை என்றுதான் சொல்கிறார்கள். தாரிஸ்மன் என்றவர்தான் அந்த வல்லுநர் குழுவுக்குத் தலைவராக இருந்தார். எனவே இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமென்று நாங்கள்எதிர்பார்க்க முடியாது.

இந்த அறிக்கையை மட்டுமல்ல, அவர்கள்இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தான் உருவாக்கிய Lessons Learnt and Reconcilation Commission (கற்றுக் கொண்ட பாடங்கள்மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு) LLRC அந்த ஆணைக்குழு கொடுத்த அறிக்கையையே அவர்கள்ஏற்றுக்கொள்வார்களா என்பதே மிகமிகச் சந்தேகம்.

இதே நேரத்தில் இன்னு மொரு முக்கியமான விடயத்தை யும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். இனப்படுகொலை போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் எல்லாம் மே 2009இல் நடந்திருக்கிறது. அவை பற்றிய விசாரணைகளை எல்லாம் சர்வதேசச் சமூகம் முன்னெடுத்துச் செல்லட்டும். அது ஒருபக்கம் போகும். ஆனால் அந்த நடவடிக்கைகள் எல்லாம் ஈழத்தமிழ் மக்களினுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு தரும் என்பது அல்ல. அது வேறு. இது வேறு.

இந்த அறிக்கையை வாசித்தவர்களுக்குத் தெரியும். இந்தப் பிரச்சினையினுடைய தோற்றத்தை - தமிழ்மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்கிறது. ஆனால், இவ்வளவு நடந்த பிற்பாடு ஈழத்தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை என்ன அரசியலை கொடுக்க வேண்டும். அதற்கு சர்வதேசச் சமூகம் என்ன மாதிரியான அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஒரு சொல்லும் அங்கு இருக்காது. இந்த யுத்த குற்றங்களைச் சர்வதேச அரங்கத்தில் கொண்டுவந்து அதை விசாரித்து அதற்குத் தண்டனை வழங்குவது தங்களுடைய அரசியல் தளம் என்று கருதுகிறார்கள். ஆனால் ஈழத் தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினை, அவர்களுடைய சுயநிர்ணய உரிமை, அவர்களுக்கான தனியான ஒரு உரிய தீர்வு, அவர்கள்ஏற்றுக் கொள்ளக்கூடிய, அவர்கள் கௌரவத்துடனும் தன்மானத்துடனும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய தீர்வைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இதனுடைய மையம் அது அல்ல என்பதை நாங்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்.

இந்தப் போர்க்குற்றங்களைப் பற்றிய அறிக்கை ஈழத் தமிழ் மக்களினுடைய சிக்கலை சர்வதேச அரசுகளுடைய பல்வேறுபட்ட மட்டங்களில் கொண்டுசெல்வதற்கு துணை செய்யுமே தவிர, ஆற்றைக் கடப்பதற்கான தோணியாகவும் துடுப்பாகவும் நாங்கள்அதைக் கருத முடியாது.

கேள்வி: இந்த இனப்படு கொலை ஏற்படுத்தியிருக்கும் மனஅழுத்தத்திலிருந்து எவ்வளவு தூரம் ஈழமக்கள்கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் -அந்தத் துயரத்திலிருந்து மீண்டிருக்கிறார்கள்?

கவிஞர் சேரன் : இது ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உங்களுக்குத் தெரியும் கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் நான் ஈழத்தமிழர் என்று குறிப்பிடவில்லை. தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராடி பல ஆயிரக்கணக்கில் மடிந்து தமிழ்மக்கள் இனப்படுகொலையைச்

சந்தித்த நிகழ்வு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நடந்திருக்கிறது.

சங்க காலத்தில் தமிழ்மன்னர்கள் சண்டை பிடித்ததைப் பார்க்கிறோம். ஒரு ஆயுதம் தாங்கிய படை அணிகளை உருவாக்கி ஒடுக்குபவர்களுக்கு எதிராக தமிழர்கள்போராடிய ஒரு வரலாறு, எவ்வளவு ஆயிரக்கணக்காகக் கொல்லப்பட்டு செத்த வரலாறு, தமிழர்களுக்கு இப்போதுதான் நடந்திருக்கிறது.

இவ்வளவு காலத்திற்குப் பிறகு இதனுடைய அலை ஈழத் தமிழர் களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் எல்லாத் தமிழர்களையும் பாதித்திருக்கிறது. அது பல்வேறு தளங்களில் அந்தப் பாதிப்பு இருக்கிறது. இந்தப் பாதிப்பு உளம் சார்ந்த பாதிப்பு மட்டும் அல்ல. அரசியல் ரீதியான பாதிப்பும்தான். தமிழ்நாட்டில் நீங்கள் இதை வடிவாகப் பார்க்கலாம். அந்தப் பாதிப்பு இருக்கிறது. அது எப்படி வெளிப்படுகிறது என்பது வேறு.

ஆனால் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் இவ்வளவு கால அநியாயங்கள், தொடர்ச்சியாக முப்பது ஆண்டு களாக இந்தப் படுகொலைகளையும், அழிவுகளையும் இழப்புகளையும் இருப்பினுடைய இழப்பு, இழப்பினுடைய இருப்பு என்று அனைத்தையும் சந்தித்த பிற்பாடு, கடைசியாக நடந்த படுகொலைகள் ஏற்படுத்தியிருக்கும் வடுவிலிருந்து அவர்கள்வெளியேற இன்னும் நீண்ட காலம் பிடிக்கும். அவர்கள் இலங்கையில் வாழ்பவராக இருந்தாலும் சரிதான், புலம்பெயர்ந்து வாழ்பவராக இருந்தாலும் சரிதான்.

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். அந்த மே மாதத் தில் மட்டும் என்னுடைய நண்பர்களும் உறவினர்களுமாக கிட்டத்தட்ட நூறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த நூறு பேருக்கான இறுதிச் சடங்கு நடத்த முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் பெரும்பாலானவர்களின் உடல்கள்கிடைக்கவில்லை. 20, 30 பேருடைய இறுதிச்சடங்கு உடல் கிடைக்காமல் கனடாவில்தான் இறுதிக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு நான் போயிருந்தேன்.

அப்போது எனக்கு மட்டுமே இவ்வளவு நடந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் மற்றவர்களைப் பார்க்கலாம். ஏராளமானவர்களைப் பார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால் இந்த இனப்படுகொலையால் பாதிக்கப் படாத ஒரு ஈழத்தமிழரைக்கூடப் பார்க்க முடியாது. இது இந்த நூற்றாண்டினுடைய மிகப்பெரிய அவலம். ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுடைய உளவியலிலும், தமிழர்களுடைய அரசியலிலும், தமிழர்களுடைய வாழ்க்கையிலும் ஏற்பட்ட மிக மோசமான அவலமும் தாக்கமும் இதுதான். இதனுடைய விளைவுகள் மெல்ல மெல்ல எங்களுக்குத் தெரியவருகிறது. இன்னும் ஒரு பத்து ஆண்டுகள்கழித்துத்தான் இதனுடைய விளைவு எப்படி என்று எங்களுக்குத் தெரிய வரும்.

Cheran.jpg

கேள்வி: இலங்கையில் எந்த அளவுக்கு தமிழர்களைக் குடியமர்த்துவதற்கான வேலைகள் நடந்திருக்கின்றன.

கவிஞர் சேரன் : இலங்கையினுடைய வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில், இலங்கையில் இருக்கும் தமிழர்கள்வாழ்க்கையைப் பொறுத்தவரை இப்பொழுது அது ஒரு ராணுவ ஆட்சியின் கீழ் இருக்கிறது. அங்கு அவர்களுக்கு எந்த வகையான அடிப்படை உரிமையும் கிடையாது. அங்கு ராணுவம்தான் ஆட்சி நடத்துகிறது. பேரளவுக்கு சிவில் நிர்வாகம் இருந்தாலும் ராணுவத்தினுடைய ஆட்சிதான் இருக்கிறது. ஒவ்வொரு பத்துப் பேருக்கும் ஒரு படைவீரர். இப்படி வடக்கில் நடக்கிறது. ஒவ்வொரு எட்டுப்பேருக்கும் ஒரு படைவீரர் என்று வன்னிப் பகுதியில் இருக்கிறார்கள். ஒவ்வொரு பதினோரு பேருக்கும் ஒரு படைவீரர் என்று கிழக்கு மாகாணத்தில் இருக்கிறார்கள்.

இவ்வளவு தூரம் ராணுவ மயப்பட்ட ஒரு பிரதேசத்தை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் காஷ்மீரில் மட்டும்தான் பார்க்கலாம். வேறு எந்த இடங்களிலும் இவ்வளவு தூரம் ராணுவ மயப்பட்டதை நீங்கள்பார்க்க முடியாது. அவர்களுக்கான எந்த அரசியல் உரிமையும் கிடையாது. பேச்சுரிமையும் கிடையாது. எழுத்துரிமையும் கிடையாது. அரசியல் ரீதியாக தங்களுடைய கோரிக்கைகளை அவர்கள்முன்வைக்க முடியாது. இறந்தவர்களுக்காக ஒழுங்காக இறுதிச் சடங்கை நடத்தக்கூட அவர்களால் முடியாது. இந்தச் சூழ்நிலையிலிருந்து நாங்கள் அவர்களிடமிருந்து பெரிய அரசியலை எதிர்பார்க்கத் தேவையில்லை. ஆனால் இந்த ஒடுக்கு முறையும் இந்தக் கோபமும் மெல்லமெல்ல அங்கு பொங்கி வருகிறது. அது என்ன வடிவம் எடுக்கும் என்பதைப் பற்றி எங்களுக்கு இப்போது தெளிவாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது.

ஆனால் ஒரு விடயத்தை மட்டும் குறிப்பிடலாம். சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நகரம் எரிக்கப்பட்டது. அந்தக் கால கட்டம் மிகமுக்கியமான ஒரு காலகட்டம். தமிழ்ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் உருவாகி முளைவிட்ட காலம். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள்அந்தப் போராட்டத்திற்கு மிகுந்த வேகம் சேர்த்தன.

சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடு இலங்கையில் நடந்த ஆயுதப் போராட்டம் பல்வேறு சக்திகளாக - வெளிநாட்டு சக்திகள் சீனா, ரஷ்யா, இந்தியா உள்பட பல்வேறுபட்ட நாடுகளின் துணையுடன் முறியடிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் போராட்டம் முறியடிக்கப்படவில்லை. எனவே இன்னும் அடுத்த 20 ஆண்டுகளுக்குள்இதே மாதிரியான உணர்ச்சி திரும்பி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இந்த வாய்ப்புகளை எவ்வளவு தூரம் தூர தரிசனத்தோடும், அறம் சார்ந்தும் ஈழத்தமிழ் மக்கள்சார்பில் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். கடந்த முப்பது ஆண்டுகளிலும் இந்த போராட்டத்தினுடைய சாதகமான அம்சங்கள் என்ன? பாதகமான அம்சங்கள் என்ன? அறம் சார்ந்து நாங்கள் செய்த தவறுகள் என்ன? பொது எதிரிக்கு எதிராகச் சாத்தியமான எல்லா நேர்சக்திகளையும் ஒன்றிணைப்பதில்நாங்கள் வெற்றியடைந்திருக்கிறோமா? ஒரு பன்முகப்பாங்கான கட்சிகளுக்குள்ளேயே ஜனநாயகத்தைப் பேணக்கூடிய ஒரு அறம் சார்ந்த முறைகளை நாங்கள்செய்திருக்கிறோமா? இந்த வகையான சுய விமர்சனத்தை, கேள்விகளை எழுப்பி நாங்கள்அவற்றினிலிருந்து சரியான முறையிலே பதிலையும் ஆய்வுநிமித்தம் நாங்கள்தீர்மானித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள்பேச வேண்டியிருக்கிறது.

என்னுடைய முக்கியமான ஒரு கேள்வி என்னவென்றால் இத்தகைய காய்தல் உவத்தல் அற்ற ஒரு சுய பரிசீலனைக்கும், ஒரு சுயவிமர்சனத்துக்கும், ஆத்மரீதியான ஒரு அறம் சார்ந்த ஒரு புதிய கேள்விகளை முன்னெடுப்பதற்கும் எங்களுடைய சமூகமும், எங்களுடைய அரசியல் தலைவர்களும், எங்களுடைய அறிவாளிகளும், எங்களுடைய எழுத்தாளர்களும், கலைஞர்களும், தயாராக இருக்கிறார்களா என்பதுதான்!...”

[தொடர்ச்சி அடுத்த இதழில்]

தொகுப்பு : பாலாஜி,

படங்கள்: நோயல் கார்க்கி

Vaigarai.jpgஈழத்தமிழினமும் ஈழப்போராட்டமும் சர்வதேச வலைப்பின்னல் நெருக்கடிக்குள் சிக்குப்பட்டிருக்கிற நிலையில் சர்வதேச அரசுகளும் அவைசார்ந்த நடைமுறைகளும் ஈழப்போராட்டத்துக்கும் பல்லாயிரக்கணக்கான ஈடுஇணையற்ற உயிரிழப்புகளுக்கும் வழங்கிடும் மதிப்பும் அங்கீகாரமும் என்ன என்பதை மிக ஆழமாகவும் நுட்பமாகவும் இப்பேட்டி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

எழுத்தாளர் ஒன்றுகூடலுக்காக ஜெய்ப்பூர் செல்லும் வழியில், புத்தகக்காட்சி நாட்களில் சென்னையில் தங்கியிருந்த சேரனை, சமூகப் பொறுப்புணர்வு மிக்க பத்திரிகையாளர் மணா பேட்டி கண்டார்.

சேரன், மஹாகவியின் மகன். உடன்பிறந்த சகோதரி ஒளவையும் கவிஞர். சோழனும் பாண்டியனும் சகோதரர்கள். இசைக்கலை உணர்வை குடும்பப்பாரம்பரியத்தினூடாக எய்தப்பெற்றவர். ஈழப்போராட்டம் வார்த்தெடுத்த முதல்வரிசைக் கவிஞர்களில் முக்கியமானவர்.

கூர்மைமிகுந்த அறிவுத்துறையாளர். இதழாளர். இதழ்வடிவமைப்பாளர், ஓவிய ஈடுபாட்டாளர், மொழிபெயர்ப்பாளர், ஆவணப்படைப்பாளி, நாடக இயக்குநர், இலக்கிய உலக ராஜதந்திரி, தமிழ்ப்படைப்பு சார்ந்து உலகப் படைப்பாளிகள் மத்தியில் சரிசமமாய் விவாதிக்கும் தர்க்கநெறியாளர்.

தமிழின் நவீனப்படைப்பாளிகளோடு நெருக்கமான நட்புப்பூண்டிருப் பவர். அனைத்துக்கும் மேலாக மனித உரிமைப் போராளி.

இந்த ஒரு காரணத்தினாலேயே சிறிலங்கா அரசின் சினத்துக்கும் பகைமைக்கும் ஆளானவர். தாய் இறப்புக்குக் கூட தாயக மண்ணில் காலடி எடுத்து வைக்கமுடியாமல் தடுக்கப்பட்டவர். இன்றும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பவர்.

ஈழப்போராட்டம் எழுச்சிபெற்ற எண்பதுகளின் காலகட்டத்தில் சேரனின் கவிதைத் தொகுப்புகளான யமன், இரண்டாவது சூரியோதயம் பெரும் உந்துவிசையாகத் திகழ்ந்தன.

எப்போதாவது நேரவேண்டிய மரணம் 24 மணிநேர முழுநாள்வாழ்வையும் துரத்தும்போது சேரன் பங்களிப்போடு வெளிவந்த ‘மரணத்துள்வாழ்வோம்’ தொகுப்பு சாவுக்கே அறைகூவல் விடுத்தது.

ஏறத்தாழ இருபத்தேழு ஆண்டுகளுக்குமுன் சென்னையில் நடைபெற்ற ஈழ ஆதரவு உலக இளைஞர் மாணவர் ஆதரவு மாநாட்டிற்கு வருகைதந்த சேரனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஈழப்போராட்ட உணர்வு ஓர்மையில் உருவான வீரசந்தானம், ஓவியங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டபோது ‘முகில்களின் மீது நெருப்பு’ என்ற இவரது கவிதை வரியே தலைப்பாக அமைந்தது.

போராட்ட காலத்தில் கருத்துக்களோடு ஒத்து போகாமல் ஒதுங்கி இருந்தாலும் இன்றைய நிலையில் மீண்டும் வசை பாடாமல் உண்மையை சொலவதே சிறந்த கலைஞன்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.