இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிங்கள ”ஸ்ரீ”யும் தமிழ் ”ஸ்ரீ”யும் January 29, 2026 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழரசுக் கட்சி தலைமையில் போராட்டம் வெடித்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் பலமான அடித்தளமாக அமைந்தது. ஆனால் அதே தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தை, மக்கள் பலத்தை ஆட்டம் காண வைக்கப் போகின்றது—–” கே.பாலா தமிழரசுக்கட்சியின் தலைவராக பொதுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீதரனை சட்ட சதியினால் அப்பதவியை ஏற்கவிடாது தடுத்தவர்கள் தற்போது அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளதன் மூலம் ஸ்ரீதரனுக்கு எதிரான தமது ”பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியை பறிப்பது, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பது, தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்குவது”என்ற 3 சதிகளில் ஒன்றை சகுனித்தனமாக அரங்கேற்றியுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக என்று சிவஞானம் ஸ்ரீதரன் வாக்கெடுப்பு மூலம் பொதுக்குழுவினால் தெரிவுசெய்யப்பட்டாரோ அன்று அவருக்கு பிடித்த ”சனி” இன்றுவரை அவரை விடாது துரத்தி வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஸ்ரீதரன் ஆதரித்தமையை சாட்டாக வைத்து ”ஸ்ரீதரன் கட்சிக்கு கட்டுப்படவில்லை, தலைமையின் முடிவுக்கு முரணாக செயற்படுகின்றார் ஆகவே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்ற சதியை முன்னெடுத்தனர்.ஆனால் அது வெற்றிபெறவில்லை. அடுத்ததாக ஸ்ரீதரனை பாராளுமன்றத் தேர்தலில் எப்படியாவது தோற்கடித்து அவரின் மக்கள் செல்வாக்கை இல்லாமல் செய்து அதன்மூலம் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டமிட்டு ”ஸ்ரீதரன் மதுபானசாலைக்கான அனுமதிகளை ரணில் அரசிடமிருந்து அரசியல் இலஞ்சமாக பெற்றுள்ளார்”என்ற குற்றச்சாட்டை பாராளுமன்றத்தேர்தலின்போது தீவிர பிரசாரமாக முன்னெடுத்தனர். ஆனால் ஸ்ரீதரனின் வெற்றியை தடுப்பதற்கு பதிலாக அவர்களே தேர்தலில் மண்கவ்வினர். சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனாக சற்று மாற்று யோசித்தவர்கள் ஸ்ரீதரனுக்கு எதிராக சிங்களவர்களை பயன்படுத்தத் தொடங்கினர். இவர்களின் பின்னணியில் ஸ்ரீதரன் சட்டத்துக்கு முரணாக சொத்துக்கள் வைத்திருப்பதாக சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த என்பவர் குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்தனர் .அந்த முறைப்பாட்டை உடனடியாக விசாரணை செய்து உண்மையை வெளிப்படுத்துமாறு ஸ்ரீதரனும் வலியுறுத்தியபோதும் சில மாதங்கள் கடந்தும் அந்த முறைப்பாடு கிடப்பில்தான் கிடக்கின்றது. அதன் தொடர்ச்சியாக அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள ஸ்ரீதரன் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவுள்ள ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக அரசு நியமிக்க ஆதரவாக வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை சிங்கள இனவாத எம்.பி.க்களான சாமர சம்பத் தசாநாயக்க ,தயாசிறி ஜயசேகர ஆகியோர் மூலமாக பாராளுமன்றத்தில் முன் வைக்க வைத்து அதனைப்பயன்படுத்தி கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீதரனிடம் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு விளக்கம் கோரியதுடன் அரசியலமைப்பு பேரவையிலிருந்து ஸ்ரீதரன் உடனடியாக விலக வேண்டுமெனவும் பணித்தது. ஆனால் ”அரசியலமைப்பு பேரவை ஒரு சுயாதீனமான பேரவை .இதில் எந்தவிதமான அரசிய தலையீடும் கட்சி செல்வாக்கும் இருக்க முடியாது. இதில் எனது கட்சியின் செல்வாக்குகளை நான் பிரயோகிக்க முடியாது இந்த சபை மூலம் கட்சி சார்பு அரசியலும் செய்ய முடியாது. செய்யக்கூடாது அரசியலமைப்பு பேரவையில் எனது பங்களிப்பும் வாக்களிப்பும் மனச் சாட்சியின் படியானவை. அத்துடன் அரசியலமைப்பு பேரவைக்கு நான் எனது கட்சியின் அரசியல் குழு அல்லது மத்திய செயற்குழுவால் பெயர் குறித்து நியமிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எனது கட்சியின் அரசியல்குழுவிலுள்ள சிலரின் தனிப்பட்ட அரசியல் விரோதங்களுக்காகவும் நிகழ்ச்சி நிரலுக்காகவும் நான் பதவி விலக முடியாது”என ஸ்ரீதரன் உறுதியாக கூறிவிட்டார் இவ்வாறான நிலையில்தான் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஏற்றுக்கொள்ள மறுத்த காரணத்தினால் அவரின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியை மீளப்பெற கட்சி தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். அரசியல்குழு அவர்மீது நம்பிக்கை வைத்து ஏகமனதாக பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியை அவருக்கு வழங்கியது. அரசியல் குழு இரண்டு தடவைகள் அவர் பாராளுமன்ற அரசியல் பேரவையிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தது. தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையினை ஏற்றுக்கொள்ள ஸ்ரீதரன் மறுத்ததன் காரணத்தினால் அரசியல் குழுவினால் வழங்கப்பட்ட நியமனத்தினை மீளப்பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் முக்கிய குற்றச்சாட்டு நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார்”என்பதாகவே உள்ளது.அதாவது தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு ஸ்ரீதரன் ஆதரவாக வாக்களித்து விட்டார். இதன் மூலம் தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக ஸ்ரீதரன் செயற்பட்டு விட்டார் என்பதே தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் முக்கிய குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு நியாயம் என்றால் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவிடம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. இலங்கை இராணுவத் தளபதியாகவிருந்து தமிழ் மக்களுக்கு எதிரான இறுதிப்போரை வழிநடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை இனப்படுகொலை செய்ததன் முக்கிய சூத்திரதாரியான ஜெனரல் சரத்பொன்சேகா 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியபோது சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக் கட்சி பகிரங்க வேண்டுகோள் விடுத்ததுடன் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரசாரங்களும் மேற்கொண்டதுடன் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக வாக்களித்ததும் எந்த வகையில் நியாயம்? அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலின் மூலம் சபைகளில் ஆட்சியமைக்க தமிழினத் துரோகி என தமிழ் மக்களினால் அடையாளப்படுத்தப்படும் இராணுவ துணைக்குழுவாக செயற்பட்ட, நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் ,யுவதிகள் படுகொலை செய்யப்பட, காணாமல் போக காரணமாகவிருந்த,மனிதப் படு கொலையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கிலுள்ள அலுவலகம் தேடிச்சென்று தமிழரசுக்கட்சியின் தலைமை,அதாவது பதில் தலைவரான சிவஞானம் ஈ,.பி. டி.பி.யின் காலடியில் மண்டியிட்டது குற்றமில்லையா? சில சபைகளில் அவரின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது குற்றமில்லையா? 2017 ஜனவரியில் சுமந்திரனைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டி இலங்கை புலனாய்வுப் பிரிவினர் சிலரைக் கைது செய்தனர்.இதனைத்தொடர்ந்து சுமந்திரனுக்கு விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவரது வீடு,அலுவலகம், வாகனம் என அனைத்திலும் விசேட அதிரடிப்படையினரே நிறைந்திருந்தனர். சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் தனது சொந்த தொகுதிக்கு செல்லும்போதுகூட அதிரடிப்படையினர் புடைசூழவே சென்றார். ஸ்ரீதரன் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு அதுவும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கப்படாத ஒருவருக்கு ஆதரவளித்தது குற்றமென்றால் சுமந்திரன் தமிழினப் படுகொலையாளிகளின் ஒரு தரப்பான விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வடக்கில் வலம் வந்தது குற்றமில்லையா? அது அரசாக வழங்கிய பாதுகாப்பு என்று கூறினாலும் அதனை வேண்டாம் என மறுக்கும் உரிமை சுமந்திரனுக்கு இருந்தது.ஏன் மறுக்கவில்லை ? நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக்கட்சிகளினதும் தமிழ் பொது அமைப்புகளினதும் ஆதரவுடன் தமிழ் பொது வேட்பாளராக தமிழின உணர்வாளரும் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தருமான அரியநேத்திரன் களமிறங்கிய போது தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக அரிய நேத்திரனை தோற்கடித்தே தீருவோம்.சஜித் பிரேமதாசாவை வெற்றிபெற வைப்போம் என தமிழரசுக்கட்சியின் தற்போதைய பதில் பொது செயலாளர் பொது வெளியில் சூளுரைத்ததுடன் சொன்னதையும் செய்தார். தமிழ் தேசிய உணர்வாளரான அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் ,சஜித் பிரேமதாசவுக்கு வாக்களியுங்கள் என தமிழ் மக்களின் விருப்புக்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?தமிழ் தேசிய உணர்வாளருக்கு எதிராகவும் சிங்கள இனவாதி ஒருவருக்கு ஆதரவாகவும் தமிழரசுக்கட்சியின் தலைமை செயற்பட்டது குற்றமில்லையா? ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கான வாக்கெடுப்புக்கு பின்னர் வேறு ஒரு தெரிவுக்கான வாக்கெடுப்பு அரசியலைப்பு பேரவையில் நடந்தபோது அதில் ஸ்ரீதரன் வாக்களிக்கவில்லை. இதனையும் வாக்களிக்காது விட்டது மூலம் ஸ்ரீதரன் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார் என்று தமிழரசின் சில பிரகிருதிகள் ஸ்ரீதரனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தனர்.அநுரகுமார அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றபோது தமிழரசுக்கட்சி வாக்களிக்கவில்லை.அப்படியானால் அநுரகுமார அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழரசுக்கட்சி மறைமுகமாக ஆதரவளித்ததா? இது மட்டுமா ஸ்ரீதரன் ஓய்வுபெற்ற சிங்கள இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஆதரவாக அரசிலமைப்பு பேரவையில் வாக்களித்து விட்டார் என்பதற்காக கொதித்தெழுந்து அவரது பாராளுமன்றகுழுத் தலைவர் பதவியை பறிப்பதில் முன்னின்ற இருவரில் ஒருவர் தனது மருமகளாகவும் சம்பந்தியாகவும் சிங்களக் குடும்பத்துடன் இணைந்துள்ளார். மைத்திரிபால சிறிசேன தலைவராக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் முக்கிய பதவியில் இருந்தவரும் பின்னர் அங்கிருந்து மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவுக்கு தாவி தேர்தலில் போட்டியிட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழரசுக்குள் பின்கதவால் நுழைந்தவருமான இன்னொருவரோ தனது வருங்கால மனைவியாக, தற்போதைய காதலியாக ஒரு சிங்களப் பெண்ணுடன் தொடர்பில் இருக்கின்றதாக தகவல்கள் உள்ளபோதும் தற்போது அதனை வெளிக்காட்டாமல் இருக்கின்றார். இவர்கள்தான் ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ அதிகாரி ஒருவருக்கு ஸ்ரீதரன் வாக்களித்துவிட்டதாக ”தமிழ் தேசிய உணர்வோடு” குமுறுகின்றனர் எனவே தற்போது அரசியலமைப்பு பேரவையில் ஸ்ரீதரன் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிக்கு வாக்களித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி தமது உள்வீட்டு அரசியல் எதிரியான ஸ்ரீதரனை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அந்தப் பதவியைக் கைப்பற்றுவதுடன் தமிழரசுக்கட்சியிலிருந்து ஸ்ரீதரனை வெளியேற்றும் சதியே முன்னெடுக்கப்படுகின்றது. , 1957 இல், தனிச் சிங்களச் சட்டம் அமுலான பின்னர், இலங்கையில் வாகனத் இலக்கத் தகடுகளில் சிங்கள “ஸ்ரீ” எழுத்தைப் பயன்படுத்தியதற்கு எதிராகத் தமிழர் தரப்பில் போராட்டங்கள் வெடித்தன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலேயே இப்போராட்டம் தீவிரமடைந்து சிங்கள “ஸ்ரீ” எழுத்து கறுப்பு மை பூசப்பட்டு, தமிழ் “ஸ்ரீ” யாக மாற்றப்பட்டது. தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ் தேசியப்பற்றை வெளிப்படுத்திய இந்த போராட்டமே தமிழரசுக்கட்சியின் வளர்ச்சிக்கும் இருப்புக்கும் தமிழ் மக்களின் பேராதரவுக்கும் பலமான அடித்தளமாக அமைந்து தமிழரசுக்கட்சியை தமிழ் தேசிய இனத்தின் தாய்க் கட்சியாக மாற்றியது . தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் வெளியேற்றங்கள்,உறுப்புரிமை நீக்கங்கள், பழிவாங்கல்கள், பதவி பறிப்புக்கள்,சதிகள்.தமிழரசுக்கட்சியை மிகவும் பலவீனப்படுத்தி,தமிழ் மக்கள் வெறுத்து ஒதுக்கும் ஒரு கட்சியாக மாற்றி வருகின்றது.இதற்கு உதாரணமாக அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் தமிழரசுக்கட்சி அடைந்த படுதோல்வியையும் அதன்பின்னர் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பரிதாப நிலையையும் எடுத்துக் கொள்ளமுடியும். இவ்வாறானதொரு நிலையில் இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் தமிழரசுக்கட்சி தற்போது தமது கட்சியிலுள்ள மக்கள் பலமான தமிழ் ”ஸ்ரீ ”க்கு (ஸ்ரீதரனுக்கு)எதிராக முன்னெடுக்கும் சதி தமிழரசுக் கட்சியின் அடித் தளத்தைஆட்டம் காண வைப்பதுடன் , தற்போதுள்ள கொஞ்ச நஞ்ச மக்கள் பலத்தை அடியோடு இல்லாமல் செய்யும் என்பது மட்டும் உண்மை. https://uthayannews.ca/2026/01/29/இலங்கைத்-தமிழரசுக்-கட்ச-2/