Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூகோள அரசியல் சதுரங்கம் : சீன-இந்தியப் போர் மூளுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ழத்தில் நடந்து முடிந்த புலிகளின் அழிப்பின் பின் அந்த அழிவு தொடர்பாக பலவாறான கருத்துக்கள் தமிழர் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுள் பல புலிகளின் அணுகுமுறையில் தவறுகளை இனம்காண்பவையாக உள்ளன. உதாரணமாக,

1) புலிகள் அரசியல் ராஜதந்திர நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்காமை

2) ராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை வழங்கியமை

3) கருணாவின் பிளவு

4) தலைவரின் தூரநோக்கற்ற சிந்தனை

5) தக்க தருணத்தில் கெரில்லா போர்முறைக்கு மாறாதமை

6) மரபுப் போர் முறையைக் கைக்கொண்டமை.

போன்ற பல கருத்துக்கள் வெளியிடப்பட்டன. வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாறிவரும் உலக ஒழுங்கு சில இடங்களில் பேசப்பட்டு வந்தாலும், அதன் தாக்கம் அதிகளவில் பேசப்படுவதில்லை.

சமீபத்தில் பூகோள அரசியலை மையப்படுத்தி வெளிவந்த ஒரு கட்டுரை உற்றுநோக்கப்படவேண்டியது. உலகமயமாக்கல் ஆராய்ச்சி மையத்தினால் (Centre for Research on Globalization) வெளியிடப்பட்ட இக்கட்டுரை மாறிவரும் உலக ஒழுங்கின் புதிய வல்லாதிக்கப் போட்டியை ஆய்வு செய்கிறது. இக்கட்டுரையின் பகுதிகள் மொழிமாற்றப்பட்டு கீழே தரப்படுகின்றன.

பூகோள அரசியல் சதுரங்கம் : சீன-இந்தியப் போர் மூளுமா?

எழுதியவர்: மஹ்டி டேரியஸ் நசிமரோயா

மொழிமாற்றம்: டங்ஸ் :D

பாகம் 1:

7453.jpg

1947 இல் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பனிப்போர் காலம் முடியும் வரை இந்தியா எந்த ஒரு அணியிலும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டிருக்கவில்லை. இக்கொள்கையின் விளைவாக உருவானதே அப்போதைய அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். பனிப்போர் முடிவுக்கு வந்தபிறகு இந்தியாவும் தனது அணிசேராக் கொள்கையிலிருந்து வழுவத் தொடங்கிவிட்டது.

இதன்விளைவாக வல்லாதிக்கப் போட்டிக்கான ஆட்டம் ஒன்று மறுபடியும் ஆரம்பமாகியுள்ளது. இம்முறை பிரிட்டன், ரஷ்யாவுக்கிடையேயான போட்டியாக இல்லாமல் வேறு இருவகையான நோக்கங்களை முன்னிலைப் படுத்தி இந்த ஆட்டம் இடம்பெறுகிறது. முதலாவது யுரேசிய அரசியலை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது அதன் சுற்றுவட்டார அரசியலை அடிப்படையாகக் கொண்டது.

யுரேசியாவும் அதன் சுற்றுவட்டாரமும்: இந்தியாவுக்கான போட்டியில்..

யுரேசிய அரசியல் எனும்போது ரஷ்யா, சீனா, ஈரான் முதலானவை இதில் அடங்குகின்றன. அதன் சுற்றுவட்டார சக்திகள் என்பவை யுரேசியாவை பூகோளரீதியாக அண்மித்தவையாகவோ அல்லது பூகோளரீதியில் விலகி இருப்பவையாகவோ உள்ளன. ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இந்த சுற்று வட்டார சக்திக்குள் அடங்குகின்றன. இந்த நாடுகளின் சமூக அரசியல் கொள்கைகளின் விளைவாக, யுரேசிய அரசியல் நாடுகளின் நலன்களுள் ஊடுருவல் செய்வதற்கும், நன்மைகளைத் தமதாக்கிக் கொள்ளவும் இந்நாடுகள் முயற்சிகள் மேற்கொள்கின்றன. இந்த நாடுகளின் கூட்டணியில், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் நீங்கலாக அவுஸ்திரேலியா, கனடா, தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகளும் அடங்குகின்றன.

இந்த வல்லாதிக்கப் போட்டியின் மையமாக அமைந்துள்ள நாடு இந்தியாவாகும். தனது பூகோள அரசியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்தியா ஒரு நடைமுறை சாத்தியமுள்ள சந்தர்ப்பவாத அரசியலை முன்னிறுத்துகிறது. இருந்தும் இந்தியாவின் போக்கு, யுரேசிய சக்திகளுக்கு எதிரான அணியினை நோக்கி மெதுவாக நகர்வதாகவே உள்ளது.

இந்தியாவினது சமீபத்திய அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனுடனான பேச்சுவார்த்தைகளால் வரலாற்றுரீதியில் அணுக்கமாகவிருந்த இந்தியாவின் ஈரானுடனான உறவுகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனாவுடனான உறவைப் பொறுத்தவரையில் மேலோட்டமாக இணக்கமாகத் தோன்றினாலும் உள்ளளவில் பிளவுகளைக் கொண்டதாகவே அமைந்துள்ளது. ரஷ்யாவைப் பொறுத்தமட்டில், ரஷ்ய ஆயுதவிற்பனை ஓங்கியிருந்தாலும், இந்தியாவுடனான உறவுகள் கேள்விக்குறியுடனேயே உள்ளன.

முன்னர் சொன்னதுபோல், இந்தியா வளர்ந்துவரும் யுரேசிய அணிக்கும், ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட அதன் சுற்றுவட்டார அணிக்கும் இடையேயான ஒரு பாதையைத் தேர்ந்து செயல்பட்டு வருகிறது. யுரேசிய அணி என்பது அதன் சுற்றுவட்டார அணியின் தாக்கங்களிலிருந்து விடுபடுவதற்காக ரஷ்யாவினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு அணியாகும். உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கும் இந்த அணி தமக்கு இடையே உள்ள போட்டிகளையும் களையத் தொடங்கியிருக்கிறது.

2003 ஆம் ஆண்டு தொடக்கம், அமெரிக்க, பிரித்தானிய, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு அரசுகளுக்கிடையேயான புரிந்துணர்வு மாற்றமடைந்து வருவதாகவும் தொடர்ச்சியாக ரஷ்ய கூட்டணியால் அவதானிக்கப்பட்டு வருவதாகவும் உள்ளது. அதே நேரத்தில் யுரேசிய கூட்டமைப்பு வலுவடைவதைத் தடுப்பதற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் முயன்று வருகின்றன. இந்தப் போட்டியின் காரணமாக இந்தியாவின் முக்கியத்துவம் இப்போது இன்னும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவை யுரேசிய அணியில் உள்ளடக்கினால் ஏற்படும் சிக்கல்களுள் ஒன்று அந்த அணியின் அங்கத்துவ நாடுகளுக்கிடையே உலக வளங்களைப் பகிர்வது குறித்த போட்டி மனப்பான்மை ஆகும். இதை ஈடுகட்டுவதற்காக யுரேசிய அணிநாடுகளில் சில சுற்று வட்டார நாடுகளுடனும் சிலவற்றுடன் குறித்த விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குகின்றன. இதற்கு உதாரணமாக பாரிஸ் - பேர்லின் - மாஸ்கோ அச்சு என அழைக்கப்பட்ட அணி அமெரிக்க பிரித்தானிய அரசுகளின் ஈராக்குடனான 2003 ஆம் ஆண்டின் வளைகுடாப் போருக்கு எதிராக ஐநாவில் தமது பலத்தைப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டன.

உலக வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் சீனா, இந்தியா ஆகியவற்றின் நிலை என்ன? அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

  • Replies 51
  • Views 9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 2:

இந்தியாவும் அதன் சீனச் சுற்றிவளைப்பும்

இந்தியா சுற்றுவட்டார அணிக்குள் இல்லை. அந்த அணியை அது நம்புவதாகவும் இல்லை. ஆனால், உலக அளவில் ஏற்பட்டுள்ள வளங்களுக்கான போட்டியாலும், சீனாவுடனான கொதிநிலையாலும் அந்த அணியை நோக்கி நகரும் தேவையும் இருக்கிறது. இதனைப் புரிந்துகொண்ட அந்த அணியின் நாடுகள் இச்சூழ்நிலையை தமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள முயல்கின்றன.

சீனாவுடனான முறுகல்நிலை காரணமாக அதனுடன் போருக்குச் செல்லும் ஒரு பார்வையையும் இந்தியா கொண்டுள்ளது. அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்த இரு நாடுகளும் உலக வளங்களைப் பங்கிடுவதில் தமக்குள் போட்டியிடுவதுடன் நில்லாது சமகாலத்தில் சுற்றுவட்டார நாடுகளுடனும் போட்டியில் இருக்கின்றன. அதிக வளங்களை உபயோகிப்பதில் சீனாவைவிட அமெரிக்கா முதலான நாடுகள் முன்னணியில் இருந்தாலும் அவற்றை எதிர்ப்பதை விட சீனாவை ஒதுக்குவது ஒப்பீட்டளவில் இலகுவானதாக இருக்கும் என்பது புதுடில்லியில் இருக்கும் பலரின் கருத்தாகும். இந்த நிலைப்பாடே இந்தியாவின் சீன எதிர்ப்பிற்கும் அடிப்படையாகும்.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவை உள்ளடக்கியல் ஒரு ராணுவக் கட்டமைப்பு சீனாவைச் சுற்றி உருவாக்கப் பட்டுள்ளது. சுற்றுவட்டார அணியின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி புதுடில்லியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், ஜப்பான், அமெரிக்கா, அவுஸ்திரேலியா முதலான நடுகளுடன் ஒரு நான்குமுனைக் கூட்டணையை அமைத்துக்கொண்டு புதுடில்லி செயல்படுகிறது. இந்தக் கூட்டணி ஒரு போர்மூளும் பட்சத்தில் சீனாவின் எல்லைகளைச் சுற்றி ஒரு கடல்தடையை உருவாக்க உதவும் என்பது இந்தியாவின் கணிப்பாகும்.

சீனாவுக்கும் இன்னொரு வல்லரசுக்கும் இடையில் ஒரு போர் மூளுமானால், சீனாவின் எரிபொருள் வழங்கலை தடுப்பது முக்கியமானதாகும். எரிபொருள் வழங்கல் இல்லாது, சீனாவின் ராணுவக் கட்டமைபின் உபயோகம் என்பது கேள்விக்குறியாகிவிடும். இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே, இந்தியா தனது கடற்படையின் பலத்தைப் பெருக்குவதுடன், யுரேசிய எதிர் அணியுடன் இந்து மற்றும் பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் ராணுவ கூட்டு ஒத்துழைப்பு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டளவில் பல விமானம் தாங்கிக் கப்பல்களை களமிறக்கும் முயற்சியிலும் உள்ளது. இரண்டு ஓடுபாதைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்படும் இந்தக் கப்பல்கள் ஒவ்வொன்றும் 30 போர்விமானங்களைக் கொண்டவையாக விளங்கும்.

சீனாவும், ஈரானும் ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் தற்போது தங்கியிருந்து செயற்பட்டு வருகின்றமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. இந்த நேட்டோ என்பது யுரேசிய அணிக்கு எதிரணி நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். சீனாவின் பலவீனமான மேற்கு எல்லையில் இந்த ராணுவக் குவிப்பு ஏற்பட்டுள்ள நிலைமையானது சீனாவுக்கு சாதகமில்லாத நிலையாகும். சீனாவும், ஈரானும் நேட்டோவின் இந்த நடவடிக்கையை மிகுந்த சந்தேகக் கண்கொண்டு நோக்கி வருகின்றன. பலகோணங்களில் யுரேசிய பிராந்தியத்தை சுருக்குவதில் எதிரணி ஈடுபட்டுள்ளது. சீனாவைச் சுற்றிவழைக்கும் இன்னுமொரு முயற்சியாக ரஷ்யாவையும், ஈரானையும் சூழ்ந்து ராணுவத்தள உருவாக்கங்களும், ராணுவ ஒத்துழைப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கு ஆசியாவில் சீனாவுக்கு எதிராக ஏவுகளை தடுப்பு வலயங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இது கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு எதிரான ஏவுகளைத் தளங்கள் அமைக்கப்படுவதை ஒத்ததாகும். அதேபோன்று ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு எமிரேட்டிலும், இஸ்ரேல் மற்றும் துருக்கியிலும் தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 3:

எல்லாப் பக்கங்களுக்கும் விளையாடுவது புதுடில்லியை உச்சத்துக்குக் கொண்டு செல்லுமா?

2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மன்மோகன்சிங் மற்றும் ஜோர்ஜ் புஷ் இடையிலான சந்திப்பும் அதைத் தொடர்ந்த அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தமும் இங்கு கவனிக்கத்தக்கது. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பிளவுபடுத்தி வெற்றிபெறும் அரசியலுக்கு இது நல்ல உதாரணமாக விளங்குகின்றது. இந்தியாவும் இந்த விளையாட்டுக்கு எதிரானதாக இல்லை. தனது பங்குக்கு இந்தியாவும் இந்த விளையாட்டை ஆடி வருகிறது. இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா இடையிலான முத்தரப்பு உச்சிமாநாடு இந்தியாவை யுரேசிய அணியின் பக்கம் முழுமையாக இழுப்பதற்கான ஒரு எதிர்வினையாகும். இவற்றுக்கிடையில், யுரேசியாவிலும், ஆசியாவிலும் எரிவாயு குழாய்கள் அமைக்கும் திட்டத்தையும் அமெரிக்கா எதிர்த்து வருகிறது. ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா மற்றும் சீனா - ரஷ்யா இடையேயான எரிவாய் குழாய்கள் அமைக்கும் பணிகள் போன்றவை அமெரிக்க எதிர்ப்பிற்கு உள்ளான திட்டங்களாகும்.

ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில் அமெரிக்கா, நேட்டோ, அவுஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் ஜப்பானுடனும் இந்தியா ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் 2007 இல் நடைபெற்ற இரு கூட்டு ராணுவப் பயிற்சிகள் இதற்கு நல்ல சான்றுகளாகும். ஒன்று சீனா இந்தியா இடையேயான சிங்டாவோ பகுதியில் இடம்பெற்ற கடற்படை கூட்டுப் பயிற்சி நடவடிக்கையாகும். மற்றையது ஜப்பான், அமெரிக்காவுடனான முத்தரப்பு பசிபிக் கடற்பயிற்சி நடவடிக்கை. இருந்தும் இந்தியா இரு அணிகளுக்கும் இடையில் நடுநிலைமை வகிப்பதாக இல்லை. தனது ஏவுகணை ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதன்மூலம் சீனாவின் உள்நாட்டுப் பிரதேசங்களை குறிவைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

பொதுவில், இந்திய அரசியல் யுரேசிய அரசியலுக்கு எதிரான சக்திகளை நோக்கி நகர்வது தெளிவாகிறது. உதாரணமாக சங்காய் கூட்டமைப்பின் பார்வையாளர் அங்கத்தவர் தரத்திலுள்ள நாடுகளில் இந்தியா மட்டுமே முழு உறுப்பினர் தர உயர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில், நேட்டோவுடனான இந்தியாவின் பிணைப்பும் வலுப்பட்டு வருகிறது. 2007 இல் நடந்த முத்தரப்பு உச்சிமாநாட்டில், சீன, ரஷ்ய நாடுகளால் விடுக்கப்பட்ட ஒரு முக்கிய வேண்டுகோளும் இந்தியாவால் நிராகரிக்கப்பட்டது. அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துழைப்பதை இந்தியா கைவிடவேண்டும் என்பதே அந்தக் கோரிக்கையாகும்.

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 4:

விரிவாக்கப்பட்ட இந்திய ஏவுகணை ஆற்றல்

இதேநேரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளுக்கு ஈடாக தனது ஏவுகணை வல்லமையை விரிவாக்கும் வேலையிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டத்தில் கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணைகள், ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை அடங்கும். இந்த மூன்று வசதிகளும் 2010 அல்லது 2011 ஆம் ஆண்டுவாக்கில் கைகூடும் என இந்திய விஞ்ஞானிகளை மேற்கோள் காட்டி ரைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருக்கிறது.

சீனாவுக்கு அமெரிக்காவின் நேரடி மிரட்டல்

இந்தியாவின் ராணுவ விரிவாக்கம் இரு கட்டங்களைக் கொண்டது. முதலாவது அமெரிக்காவின் சீனக் கொள்கையின் விளைவாக உருவானது. அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கடற்படைத் தளபதி ரிமொதி கீற்றிங் மே 2008 இல் வழங்கிய ஒரு நேர்காணலில் சீனாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல் தளம் தமது நாட்டின் ஆசிய நலன்களுக்கு அச்சுறுத்தலானது எனத் தெரிவித்திருந்தார்.

சீன, ரஷ்ய ஈரானிய இணைவைத் தடுக்கும் நோக்கில் 2004 இல் ஜோர்ஜ் புஷ் இந்தியாவை தனது அணிக்காக களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது எண்பதுகளில் அமெரிக்காவின் ஈராக் ஈரான் குறித்த கொள்கைகளுக்கு ஒத்ததாகும். இறுதியில் ஈரானுக்கும் ஈராக்குக்கும் யுத்தம் மூண்டது குறிப்பிடத் தக்கது.

ஈராக் ஈரான் யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுமே அமெரிக்காவால் எதிரியாகப் பார்க்கப்பட்டன. ஹென்றி கிசிங்கரின் அப்போதைய கூற்றுப்படி ஈரான் ஈராக் இருநாடுகளும் தங்களிடையே சண்டையிட்டு தங்களைப் பலவீனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்காவின் திட்டமாக இருந்தது. இதே தந்திரம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடையேயும் உபயோகிக்கப் படலாம். போருக்கான சாத்தியம் பற்றிய அறிவித்தலும் ஏற்கனவே இந்திய ராணுவத்தால் வெளியிடப்பட்டு விட்டது. ராணுவ விரிவாக்கத்துக்கான இரண்டாவது காரணி இந்தப் போர் பற்றிய சிந்தனையாகும்.

இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை மார்ச் 26, 2009 அன்று இவ்வாறு செய்தி வெளியிட்டது.

"இன்னும் 10 வருடங்களுக்குள் சீனப் படையெடுப்பு ஒன்று நேருமென இந்திய ராணுவம் நம்புகிறது. டிவைன் மேட்ரிக்ஸ் எனும் பெயரில் இந்திய ராணுவத்தின் போர் நடவடிக்கைகளுக்கான ஆணையகம் மேற்கொண்ட ஒரு ஆய்வு, அணுவாயுத வல்லமையுள்ள அயல்நாட்டு எதிரியுடனான ஒரு போருக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று குறிப்பிடுகிறது.

அந்த ஆய்வின்படி இப்பிராந்தியத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சீனா ஒரு நடவடிக்கையைத் தொடங்குவது சாத்தியம் நிறைந்தது ஆகும். அணு ஆயுதப் போருக்கு சாத்தியமில்லாவிட்டாலும், மிகக் குறுகியதும் ஆனால் இந்தியாவுக்கு பெரும் பாதகங்களை விளைவிக்கக் கூடியதுமான ஒரு போராக இது அமையலாம் என்று இந்தப் ஆய்வரங்கில் கலந்துகொண்ட ஒரு அதிகாரி தெரிவித்தார். சீனாவின் இந்த யுத்தம் தகவல்தகர்ப்பு போர்முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது."

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 5:

இந்திய-இஸ்ரேல் பிணைப்பு

2008 ஆம் ஆண்டு தை மாதத்தில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. அந்த மாதம் இஸ்ரேலின் உளவு செயற்கைக் கோள் ஒன்றை இந்தியா விண்ணில் ஏவியது. ஈரான், சிரியா, லெபனான் முதலிய நாடுகளுக்கு எதிரான உளவு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டதே இந்தச் செயற்கைக் கோள் ஆகும்.

செயற்கைக் கோள் திட்டத்தை செயற்படுத்த உதவியதன்மூலம் மத்தியகிழக்கில் அமெரிக்க-இஸ்ரேல் நலன்களுக்கு ஆதரவாகவும் ஈரான் முதலான நாடுகளுக்கு எதிராகவும் செயற்படுவதற்கு இந்தியாவுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பது புலனாகியது. ஈரான் உடனடியாகவே இந்தியாவுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டது. ஈரானின் அழுத்தங்கள் காரணமாக செயற்கைக்கோள் ஏவும் நிகழ்ச்சி நிரல் சிலதடவைகள் மாற்றியமைக்கப் பட்டமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கை உள்நாட்டு அரசியல் மட்டத்தில் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. வெறும் வர்த்தக ரீதியிலான ஒரு ஒத்துழைப்பே இது என்கிற இந்திய அரசின் சமாளிப்பை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுத்தன. ஈரானைப் பகைத்துக் கொள்வதானது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் என அவை எச்சரித்தன. இஸ்ரேல் தனது புதிய செயற்கைக்கோளின் நோக்கம் என்னவென்பதை வெளிப்படையாக அறிவித்தபிறகும் இந்தியா அதை ஏவ உதவியமை இந்தியாவிற்கு இஸ்ரேலின் ராணுவ நலன்களிலும் அக்கறை உண்டென்பதை விளக்கப் போதுமானது.

இந்த செயற்கைக்கோள் ஏவும் திட்டம் இந்திய அரசால் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக செயற்கைக்கோள் ஏவும் நிகழ்ச்சியை நாட்டின் பெருமைக்குரிய ஒரு விடயமாகக் கருதி ஊடகங்களுக்கு செய்திகள் தரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரேல் செயற்கைக் கோள் ஏவும் திட்டத்தைப் பற்றி மூச்சு விடவில்லை. ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை உள்நாட்டில் கண்டனத்துக்கு உள்ளானது.

செயற்கைக்கோளை உருவாக்கிய இஸ்ரேல் விண்வெளி நிறுவனத்துக்கு இந்தியாவில் வர்த்தக தொடர்புகளை உருவாக்கும் எண்ணம் உள்ளது. இந்த நிறுவனமும் இந்தியாவின் டாடா நிறுவனமும் 2008 மாசி மாதம் ராணுவ உபகரணங்களை இணைந்து உருவக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. இது செயற்கைக்கோள் செலுத்தப்பட்டபின் ஒருமாதம் கழிந்த நிலையில் கையெழுத்திடப்பட்டது என்பதில் இருந்து புதிய இஸ்ரேல்-இந்திய பிணைப்புகளை அறிந்துகொள்ளலாம். டாடா நிறுவனத்துக்கு அமெரிக்காவின் போயிங், சிகோர்ஸ்கி நிறுவனங்களுடனும் ஐரோப்பிய விண்வெளி பாதுகாப்பு நிறுவனத்துடனும் ஏற்கனவே வர்த்தக உடன்படிக்கைகள் உள்ளமை கவனிக்கத்தக்கது. இந்த நிறுவனங்கள் எல்லாம் ரஷ்ய உற்பத்தியாளர்களுடன் போட்டியில் இருப்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கான இந்தியாவின் ஆதரவு என்பது உலக அணுசக்தி அரசியலுடனும் கோட்பாடுகளுடனும் தொடர்புபட்டது. 2008 ஆம் ஆண்டு புரட்டாதி மாசம் வியன்னா நகரில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி அமைப்பின் கூட்டமொன்றில் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தையும் உடனடியாக அணுகுண்டு தயாரிக்கும் திட்டங்களைக் கைவிடுமாறு வற்புறுத்தப்பட்டது. இதற்காக நடைபெற்ற ஒரு வாக்கெடுப்பில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுமே இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தன. தீர்மானத்தை ஆதரித்த நாடுகளில் ஈரான் மற்றும் சிரியா ஆகிய மத்தியகிழக்கு நாடுகளும் அடங்கும். ஆனால் இஸ்ரேல் தனது பகை நாடுகளான ஈரானும், சிரியாவும் அணு ஆயுதங்களைத் தயாரித்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்திருந்தது. அமெரிக்கா, கனடா, ஜோர்ஜியா மற்றும் இந்தியா ஆகியவை இஸ்ரேலைத் தவிர்ந்த மற்றைய மத்தியகிழக்கு நாடுகளின் மேல் முட்டுக்கட்டைகள் போடுவதற்கு ஆதரவளித்திருந்தன.

(தொடரும்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் இசைக்கலைஞன்! நீங்கள் ஒரு அரிய முயற்சி செய்துள்ளீர்கள். உலக அரசியலை மிக நுட்பமாக ஆராய்ந்துள்ளீர்கள். அதைவிட மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், வேறொரு மொழியில் இருந்ததை தமிழுக்கு கொனர்ந்துள்ளீர்கள்

இதற்கு தமிழ் கூறும் ந்ல்லுலகின் சார்பில் உங்களுக்கு நன்றிகள். இந்த ஆக்கத்தை படிக்கும் போது உலகில் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது வல்லவனாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.ஒரு நாட்டின் ராஜ தந்திரிகள் உயர்மட்ட உளவாளிகள் மட்டத்தில் பகிரப்பட்டுக்கொண்டிருந்த விடயங்களை சாதாரண மக்களும் படித்திடும் வகையில் இலகுவாக்கியிருக்கிறீர்கள். ஒரு இளையராசா எப்படி இசையை இலகுவாக்கி சாமானியர்களுக்கு எடுத்துச் சென்றாறோ அதே போல் இளையராசாவின் படத்தை அடையாளமாகக் கொண்டுள்ள இசைக்கலைஞனும்

பாரிய ஒரு விடயத்தை யாழ் (இதுவும் இசைக் கருவி தான்) ஊடாகக் கொடுத்துள்ளார். தொடரட்டும் உமது இந்த முயற்சிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இசைக்கலைஞன்! நீங்கள் ஒரு அரிய முயற்சி செய்துள்ளீர்கள். உலக அரசியலை மிக நுட்பமாக ஆராய்ந்துள்ளீர்கள். அதைவிட மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால், வேறொரு மொழியில் இருந்ததை தமிழுக்கு கொனர்ந்துள்ளீர்கள்

இதற்கு தமிழ் கூறும் ந்ல்லுலகின் சார்பில் உங்களுக்கு நன்றிகள். இந்த ஆக்கத்தை படிக்கும் போது உலகில் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது வல்லவனாகவும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.ஒரு நாட்டின் ராஜ தந்திரிகள் உயர்மட்ட உளவாளிகள் மட்டத்தில் பகிரப்பட்டுக்கொண்டிருந்த விடயங்களை சாதாரண மக்களும் படித்திடும் வகையில் இலகுவாக்கியிருக்கிறீர்கள். ஒரு இளையராசா எப்படி இசையை இலகுவாக்கி சாமானியர்களுக்கு எடுத்துச் சென்றாறோ அதே போல் இளையராசாவின் படத்தை அடையாளமாகக் கொண்டுள்ள இசைக்கலைஞனும்

பாரிய ஒரு விடயத்தை யாழ் (இதுவும் இசைக் கருவி தான்) ஊடாகக் கொடுத்துள்ளார். தொடரட்டும் உமது இந்த முயற்சிகள்.

நன்றிகள் பிரியந்தன்..! என்னால் முடிந்ததை செய்கிறேன்.

தொடர் முடிந்த பிறகு, ஈழத்து நிலைமையை இந்த பூகோள அரசியல் மாற்றத்துடன் இணைத்து ஒரு கருத்துப் பகிர்வை நாம் எல்லோரும் மேற்கொள்வோம். அதற்கு உங்கள் எல்லோரின் பங்களிப்பும் மிக அவசியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 6:

பலமடைந்துவரும் புதுடில்லியின் அமெரிக்க, நேட்டோ, இஸ்ரேல் உறவுகள்

ராணுவ அகராதியில், அமெரிக்க - இந்திய- இஸ்ரேலிய அச்சு என்று ஒன்று உள்ளது. இதன் அடிப்படையில், அமெரிக்கா, நேட்டோ மற்றும் இஸ்ரேல் உடனான புதுடில்லியின் தந்திரோபாய ரீதியிலான பிணைப்புகள் தற்போது வலுப்பட்டு வருகின்றன. அமெரிக்கா, இஸ்ரேலுடனான இந்த உறவு இந்தியாவில் பல அரசியல் கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பூகோள தந்திரோபாய அரசியலின் முதன்மைக் காரணி சீனாவைக் கட்டுப்படுத்துதல் ஆகும். இரண்டாவதாக, மத்திய ஆசியாவில் ரஷ்யாவின் செல்வாக்கை மட்டுப்படுத்துதல் என்று சொல்லலாம். இதன்மூலம் இப்பிராந்தியத்தின் எரிசக்தி வளங்களை அமெரிக்காவும் இந்தியாவும் முதன்மையாகப் பங்கிட்டுக்கொள்ள முடியும். இத்திட்டத்தில், இந்தியாவை சீனாவுக்கெதிரான ஒரு சரிநிகர் எதிர் சக்தியாக அமெரிக்கா கணிக்கிறது. ஈரானை தனிமைப்படுத்துவதிலும், இந்தியாவை அது முன்னர் உபயோகித்திருக்கிறது.

இஸ்ரேலைப் பொறுத்தவரையில், அது இந்தியாவை தனது அகண்ட சுற்றுவட்டாரத்துக்குள் அடங்கும் ஒரு நாடாகக் கருதுகிறது. தனது பழைய நண்பனான ஈரானில் 1979 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சியுடன் இஸ்ரேலுக்கு தனது சுற்றுவட்டத்தை பெரிதாக்க வேண்டிய சூழ்நிலை தோன்றிவிட்டது. காரணம், புரட்சியின் பின்னதான ஈரானிய அரசு இஸ்ரேலுடன் பகைமைப் போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கியமையாகும். இதன் தொடர்ச்சியில், இஸ்ரேலினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியல், அரபுநாடுகளுக்கும், ஈரானுக்கும் சேர்த்தே எதிரானதாக அமைந்தது. இஸ்ரேலுக்கு இந்தியா, ஜோர்ஜியா, அசர்பைஜான் மற்றும் துருக்கியுடனான நல்லுறவு எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இந்தப் புதிய அரசியலை விளங்கிக் கொள்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அதேபோல, இந்தியாவும், நேட்டோவும் ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியா குறித்து ஒரேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில், இப்பிரதேசங்கள் அதன் சுற்றுவட்டாரம். மேலும் மத்திய ஆசியாவின் எரிபொருள் நலன்கள் மீது சீனா காட்டிவரும் ஆர்வமும் இந்தியாவையும் நேட்டோவையும் விசனமடையச் செய்கின்றன. இக்காரணங்களால், இவ்விரு சக்திகளும் ஒரு அணியாகச் சேர்ந்து செயற்பட முனைகின்றன. அத்துடன் இந்தியாவை தனது சர்வதேச ராணுவப் பங்காளனாகவும் நேட்டோ கருதுகிறது. பாகிஸ்தான் விவகாரங்களைக் கையாள்வதற்கும்கூட இந்திய நேட்டோ கூட்டுறவு உபயோகமுள்ளதாகக் கருதப்படுகிறது.

(தொடரும்)

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ உங்கள் அரசியல் அலசலை

எல்லாம் சரியாத்தான் இருக்கு... ஆனால் நாங்கள் சரி இல்லையே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ உங்கள் அரசியல் அலசலை

நன்றி புத்தன்...!

எல்லாம் சரியாத்தான் இருக்கு... ஆனால் நாங்கள் சரி இல்லையே...

கொஞ்சம் பொறுங்கோ தயா.. கட்டுரை முடிந்தபிறகு அலசவேண்டி இருக்கும்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 7:

"அகண்ட தெற்காசியா" திட்டமும் இந்தியாவின் சுற்றுவட்டாரச் சிந்தனைகளும்

பழைய ஈரானிய மொழியில், இந்து என்பது சிந்து சமவெளிக்கு அப்பால் இருப்பவை என்றும் இந்துஸ்தான் என்பது சிந்துசமவெளிக்கு அப்பால் உள்ள பிரதேசம் எனவும் பொருள்படும். ஆகவே இந்துஸ்தான் என்கிற பதத்தை சிந்துசமவெளியைச் சுற்றியுள்ள பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தலாம். இந்தியாவின் மேற்குப்புற எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பிரதேசம் பாகிஸ்தானை உள்ளடக்கியது. மேலும் அப்பிரதேசத்தை அகட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள பழைய சோவியத் யூனியனின் நாடுகளையும் உள்ளடக்கியதாகக் கொள்ளலாம். உண்மையில் இந்துஸ்தான் எனும் பதம் பாகிஸ்தானைத் தாண்டிய பிரதேசங்களுக்குப் பொருந்தாவிட்டாலும், இந்திய புத்திஜீவிகள் மட்டத்தில் அவர்களின் பூகோள அரசியல் சிந்தனையின் அடிப்படையில் இப்பதம் மிகவும் பொருத்தமான ஒன்றே. இதன்காரணமாக இந்துஸ்தான் எனும் பதம் இங்கே பாகிஸ்தானுக்கு அப்பால் உள்ள பிரதேசங்களையும் குறிக்கும் வகையில் இங்கே பயன்படவிருக்கிறது.

பழைய சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், இந்துஸ்தான் என்பது இந்தியாவின் புதிய சுற்றுவட்டாரம் ஆகிவிட்டது. இதை மனதில் கொண்டே, இந்தியா தனது முதல் வெளிநாட்டு ராணுவத்தளத்தை தசிகிஸ்தானில் உள்ள ஐனியில் அமைத்தது. தசிகிஸ்தான் பழைய சோவியத் யூனியனில் ஒரு அங்கமாக இருந்த பிரதேசம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மத்திய ஆசியா குறித்து அமெரிக்காவும், இந்தியாவும் ஒரேவிதமான எண்ணப்படுகளைக் கொண்டுள்ளன. அதன் வெளிப்பாடாக, மத்திய ஆசியா எனும் சொற்பிரயோகத்துக்குப் பதிலாக அகண்ட தெற்காசியா எனும் பதத்தைப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறது அமெரிக்க அரசு. இதன்படி, அகண்ட தெற்காசியா என்பது தெற்காசியாவின் ஒரு பகுதியாக, அதாவது இந்தியத் துணைக்கண்டத்துக்குள் வரும் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் பின்னுள்ள திட்டம் என்னவென்றால், மத்திய ஆசியாவில் இருக்கும் பழைய சோவியத் யூனியனின் அங்கத்துவ நாடுகளை, இந்தியா எனும் நல்ல காவலாளியின் துணையுடன் அமெரிக்காவின் சுற்றுவட்டாரத்துக்குள் கொண்டுவருவது ஆகும்.

பாகிஸ்தானை உற்றுநோக்கும்போது, இந்தியா, அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கு அந்த நாடு குறித்து ஒரேமாதிரியான நிலைப்பாடே உள்ளது. அதாவது அந்த நாட்டை பலப்பிரயோகத்தின்மூலம் அடக்கி வைத்திருப்பது என்பதாகும். இதற்குக் காரணம் ஈரானிலோ அல்லது சீனா மற்றும் ரஷ்யாவை உள்ளடக்கிய யுரேசியாவிலோ ஒரு யுத்தம் மூளுமானால், பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பாகிஸ்தான் அமெரிக்காவின் கைப்பாவையாகவோ, அல்லது அமெரிக்காவால் கையாளப்படக்கூடிய வகையிலுள்ள ஒரு நாடாகவோ இனிமேலும் இருக்கப் போவதில்லை. ராணுவப்புரட்சியை சந்திக்கக்கூடிய பாகிஸ்தான் எனும் ஒரு அணு ஆயுதநாடு, இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கும், ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளுக்கும், இஸ்ரேலுக்கும் என்றும் ஆபத்து விளைவிப்பதாகும். பாகிஸ்தானில் அத்தகைய ஒரு நிலை வராமல் தடுப்பதில் இந்தியா, அமெரிக்கா, நேட்டோ, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு அக்கறை உள்ளது. இதன்காரணமாகவே பாகிஸ்தானைப் பிளவுபடுத்தி பரஸ்பர ஒற்றுமை இல்லாத பல தேசங்களை உருவாக்கும் எண்ணத்தை நேட்டோ கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அணுசக்தி மையங்களை தனது நாட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டிய தேவையை அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்டிருப்பதும், பாகிஸ்தானை கைக்குள் கொண்டுவர எடுக்கப்படும் ஒரு முயற்சியாகும். பாகிஸ்தானை கையகப் படுத்துவது இந்தியாவின் நலன்களுக்கும் மிகவும் உகந்ததே. பல இந்தியர்களின் பார்வையில் 1947 இல் இந்தியாவால் இழக்கப்பட்ட பகுதியே பாகிஸ்தான் என்பதுவாகும்.

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 8:

இந்தியப் பெருங்கடல் படைக்குவிப்பும் இலங்கை உள்நாட்டுப் போரின் பூகோள அரசியலும்

யுரேசியாவின் தெற்கு எல்லை இந்தியப் பெருங்கடல் ஆகும். பெரும் சர்வதேச வல்லாதிக்கப் போட்டிக்கு முகம் கொடுக்கும் ஒரு கடற்பிராந்தியமாக இப்பெருங்கடல் பகுதி அமைந்துள்ளது. இங்கு நிலவும் போட்டிக்கான களங்களில் ஒன்று இலங்கை ஆகும். இதன் காரணமாக ஆபிரிக்கக் கரையோரம் தொடங்கி, அரபிக் கடல் ஊடாக, கிழக்கே ஒசானிய தீவுக்கூட்டம் வரை கடற்படை வளங்கள் குவிக்கப்பட்டுள்ளன. இப்படைக் குவிப்பில் இந்தியாவின் பங்கு கணிசமானது.

அதிகமான படைக்குவிப்பை மேற்கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோவைத் தவிர ஈரான், இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இப்பிராந்தியத்தில் தமது கடற்படை வளங்களைக் குவித்துள்ளனன. அத்துடன் சீனாவும் இந்தியாவும் அதிக அளவிலான நீர்மூழ்கிக் கப்பல்களை இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல் பிரதேசத்தில் களமிறக்குவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. யுரேசியாவைச் சூழ்ந்த கடல் முற்றுகையும், சீனாவின் கடற்படை விரிவாக்கமுமே அமெரிக்கக் கடற்படை சீனாவின் கடற்பிராந்தியத்தில் மீண்டும் மீண்டும் ஊடுருவல் செய்வதற்கும், அங்கு உளவு வேலைகளில் ஈடுபடுவதற்கும் முதன்மைக் காரணிகள் ஆகும்.

அரேபிய தீபகற்பம், ஓமான் வளைகுடா மற்றும் ஏடன் வளைகுடா முதல் செங்கடல் வரையான பிரதேசத்தில் நேட்டோ, அமெரிக்கா மற்றும் அவர்களின் கூட்டணிக்குச் சொந்தமான பெருமளவிலான கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள கப்பல் போக்குவரத்தை இப்படைகளால் எந்தக் கணத்திலும் நிறுத்த முடியும்.

கடற்கொள்ளையரால் இப்பகுதியில் நிறைந்துள்ள ஆபத்துக்களும் இந்த ராணுவமயமாக்கலில் பெரும்பங்கு வகிக்கிறது. ராணுவமயமாக்கலை நியாயப் படுத்துவதற்கு இந்தக் கடற்கொள்ளையரும் ஒருவகையில் துணை போகின்றனர். கடற்கொள்ளையர் பிரச்சினை பூதாகரமான பிறகு ஏடன் வளைகுடா பகுதியிலும் ஆபிரிக்காவின் கொம்பு எனப்படும் சோமாலியாவை அண்டிய கடற்பகுதியிலும் ரஷ்ய, சீன மற்றும் ஈரானிய கடற்படைகளும் எதிரணிக்குப் போட்டியாக களமிறக்கப் பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டில் இருந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் சிதையத் தொடங்கிவிட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளை வைத்து இலங்கையைப் பிரிக்க முயன்றதாக இலங்கை முன்பு இந்தியாமேல் குற்றம் சாட்டியிருந்தது. இதில் பெரும்பாலான நகர்வுகள் யுரேசிய மற்றும் எதிரணியின் பூகோள அரசியல் போட்டியின் காரணமாக உருவானவையாகும்.

இதன் அடிப்படையில், சீனாவின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதுவது மட்டுமல்லாது அமெரிக்கக் கூட்டணிக்கு ஆதரவாகவும் இந்தியா செயற்பட்டு வருகிறது. யுரேசியாவிலோ அல்லது இந்தியா மற்றும் சீனாவின் இடையிலோ ஒரு போர்ச்சூழல் ஏற்படுமானால் இலங்கை அண்டிய கடற்பகுதிகள் சீன ராணுவத்துக்கும், சீன எரிபொருள் வழங்கல் பாதுகாப்புக்கும் இன்றியமையாததாகும். இதனைக் கருத்தில் கொண்டே இலங்கையும் ஷங்காய் கூட்டமைப்பில் (Shanghai Corporation Organization) உரைநிலை உறுப்பினராக (Dialogue Partner) ரஷ்யா, சீனா மற்றும் கூட்டணி நாடுகளின் ஆதரவுடன் இணைந்து கொண்டுள்ளது. ஷங்காய் கூட்டமைப்பில் இணைந்ததுடன் இலங்கை நின்றுவிடவில்லை. தனது நாட்டில் இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முனையிலும், இந்தியாவுக்கு அண்மித்த ஒரு பகுதியிலும் சீனாவை வரவழைத்து உபசரித்துள்ளது. இச்செயல் புதுடில்லியுடன் மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 9:

ஆயுத உற்பத்தியாளர்களும், அணுவாயுதப் போட்டியும்

பனிப்போர் முடிவடைந்த காலத்தில் இருந்தே இந்தியாவிலிருந்து ரஷ்ய ஆயுத உற்பத்தியளர்களை வெளியேற்றுவதற்கு முயற்சிகள் தொடங்கிவிட்டன. இதில் ஈடுபட்டவர்கள் பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ராணுவ தளபாட விற்பனையாளர்கள் ஆவர். இந்தியாவுக்கான ஆயுத விற்பனையில், ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இருந்திருக்கின்றன. இப்போட்டியில் மற்றவர்களைவிட முன்னணியில் இருக்க ரஷ்ய உற்பத்தியாளர்களும் கடும் போட்டியில் உள்ளனர்.

இதன் தொடர்பில், புதுடில்லியிலுள்ள சக்திவாய்ந்தவர்கள் மத்தியில் ரஷ்யாவின் எதிரணிக்கான ஆதரவு மிகுந்து காணப்படுகிறது. இஸ்ரேலுக்கும் இந்தியாவின் ஆயுதச் சந்தை மிகவும் முக்கியமான ஒன்றகும். 1993 இல் தென்னாபிரிக்க இனவெறி வீழ்ச்சியுற்றதால் இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதி வர்த்தகத்தில் வெற்றிடம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்தியச் சந்தையில் கால்பதித்த இஸ்ரேல் ஆயுத உற்பத்தியாளர்கள் அங்கு பிரான்சை முந்திக்கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இவற்றுக்கிடையில், பிரான்ஸ் இந்தியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் 2006 மற்றும் 2008 இல் கையெழுத்திடப் பட்டன. 2005 இல் அமெரிக்காவுடன் அத்தகைய ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 10:

இந்தியா - பிரேசில் - தென் ஆபிரிக்கா (IBSA): பெருங்கூட்டணியா அல்லது மாற்றுக்கூட்டணியா?

approved-ibsalogo.png

பூகோள அரசியலில் நடுநிலையில் நிற்கக்கூடிய நாடுகள் இணைந்த முத்தரப்புக் கூட்டணி ஒன்று சிலகாலத்தின் முன் தோற்றம் பெற்றது. இதில் அங்கத்துவம் பெறும் நாடுகள் இந்தியா -பிரேசில் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகியவையாகும். தீர்க்கமற்றதும், உரைநிலையிலுள்ளதுமான இந்தக் கூட்டணியை சீனா, வெனெசுவேலா மற்றும் பொலிவியன் கூட்டம் என அழைக்கப்படும் அதைச் சூழ்ந்த நாடுகள், ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் அணிக்கு எதிராக உபயோகிக்க அமெரிக்கா முயன்று வருகிறது. உண்மையில் இந்தப் புதிய கூட்டணி, உலக அளவில் வளர்ந்துவரும் இரண்டாம் நிலைக் கூட்டணி ஆகும். இந்த அணி தோற்றம்பெற்ற காலத்தில், உலகின் வல்லாதிக்கக் சக்திகளிடமும், வேறு அணிகளிடமும் இருந்து நலன்களைப் பெற்றுக்கொள்ள அமைக்கப்பட்ட ஒரு பெருங்கூட்டணி போலவே இது தோற்றமளித்தது. எந்த வகையிலும் ஏற்கனவே இருக்கும் வல்லாதிக்க சக்திகளுக்கு ஒரு மாற்றாக இவை தோற்றமளிக்கவில்லை. இவ்வாறாக, உலக அளவில் கூட்டணிகள், மாற்றுக் கூட்டணிகள், அணிதாவுதல், ஒன்றுக்கொன்று குறுக்கிடும் அணிகள் என ஒரு புதிய வலையமைப்பு தற்போது தோற்றம்பெற்று வருகிறது. இந்த நிலை, முதலாம் உலகப் போர் முடிவுற்ற காலத்தில், ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் நிலவிய சூழ்நிலைக்கு ஒப்பானதாகும்.

325px-Triplealliance.png

அக்காலகட்டத்தில் ஜேர்மனி, ஒஸ்த்ரியா - ஹங்கேரி, மற்றும் இத்தாலி இடையே ஒரு முத்தரப்பு கூட்டணி இருந்துவந்தது. அதில் இத்தாலி மட்டும் இரகசியமான முறையில், பிரித்தானியா - பிரான்ஸ் - ரஷ்யா இடையேயான கூட்டணியுடன் பேரம்பேசியும், சில உறுதிமொழிகளை வாங்கிக் கொண்டும் அந்த அணியின் பக்கம் சாய முடிவெடுத்தது. ஆனால் இறுதியில் அந்த உறுதிமொழிகள் பிரித்தானியா மற்றும் பிரான்சினால் காற்றில் பறக்கவிடப்பட்டன என்பது வேறு விடயம்.

இதைப்போலவே இந்தியாவும் தமக்கு வழங்கிய உறுதிமொழிகளை மதிக்காமல் இத்தாலியைப் போன்று கபடத்தனமாக நடந்துகொள்ளலாம் என்கிற எண்ணம் மொஸ்கோ, பெய்ஜிங், தெஹ்ரானில் சில வட்டாரங்களில் நிலவுகிறது. ஷங்காய் கூட்டமைப்பில் முழு உறுப்பினராக ஆனால்கூட இந்தியா மாற்று அணிக்காக செயல்படும் சாத்தியக்கூறு இருப்பதாகவே சந்தேகிக்கப் படுகிறது.

வெளிப்படையாகக் கூறினால், அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மனி, சீனா, ஈரான், வெனெசுவெலா மற்றும் ரஷ்யா இடையே நிலவும் குழப்பமான இந்த முறுகல்நிலையின் வாயிலாக, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பலனடைந்து வருகின்றன. குழப்பமான ஒரு முறுகல்நிலை என்று இங்கே குறிப்பிடுவதன் காரணம் ஆங்கில - அமெரிக்க அணியும், பிரெஞ்ச் - ஜேர்மனி அணியும் இரு உப அணிகளாக செயற்படுவதுடன், அவ்வப்போது பரஸ்பர எதிர் அணிகளுடன் இணைந்தும் செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையை ஈரான், வெனெசுவெலா, ரஷ்யா, சீனா இடையிலும் காணலாம். யுரேசியாவில், ரஷ்யா சிலசமயங்களில் ஈரானுடன் இணைந்தும், சிலசமயங்களில் சீனாவுடன் இணைந்தும் செயற்படுகிறது. அதேபோன்று சீனாவும் சிலசமயங்களில் ஈரானுடன் அனிசேர்ந்து இணையாகச் செயற்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆனாலும் யுரேசியாவைப் பொறுத்தமட்டில் இவ்வாறு பிரிந்து நின்று சோடிகளாக செயற்படும் தன்மை படிப்படியாகக் குறைந்து வருகிறது என்றே கூறவேண்டும். சீனா, ரஷ்யா, ஈரானிடையே வளர்ந்துவரும் அணுக்கமான ஒரு உறவுநிலையே இதற்குக் காரணமாகும்.

கொசொவோ விடுதலையடைந்த சமயத்தில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவற்றின் நடவடிக்கையில் இருந்து தனியாக அணிசேர்ந்து செயற்படும் தன்மையினைப் புரிந்துகொள்ளலாம். அப்போது இந்திய பிரேசில் வெளிவிவகார அமைச்சர்களான பிரணாப் முகர்ஜியும், செல்சோ அமோரிமும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், கொசொவோ விடுதலை குறித்த சட்ட விளைவுகளை ஆராய்ந்து வருவதாகவும், நிலைமைகளை மேலும் பொறுத்திருந்து அவதானிக்கப் போவதாகவும் அறிவித்தனர்.

(தொடரும்)

நல்ல முயற்சி டங்குவார். தொடருங்கோ, முடியவிட்டி கதைப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி டங்குவார். தொடருங்கோ, முடியவிட்டி கதைப்போம்.

தங்கள் கருத்துக்கு நன்றி ஈசன்..! நிச்சயம் செய்வோம்..!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 11:

மேட்டுக்குடிப் பண்பியல்: இந்திய மேட்டுக்குடியின் நிலை என்ன?

2009-04-02 அன்று லண்டனில் நடைபெற்ற G-20 மாநாட்டில், இந்தியா இனிமேல் உலகப் பொருளாதாரத்தில், தற்போது உள்ளதைக்காட்டிலும் இன்னும் அதிக பங்களிக்கும் என அறிவிக்கப்பட்டது. சர்வதேச மட்டத்தில் நடக்கும் பல ஆய்வுகளில், உலகப் பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் ஒரு சக்தியாக இந்தியாவைக் குறிப்பிடுவதற்கு "சூரியனில் இந்தியாவுக்கான ஒரு இடம்" எனும் சொற்பதம் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இங்கு இச்சொற்பதம் இந்தியா எனும் ஒரு நாட்டையோ அல்லது அந்நாட்டின் பொதுமக்கள் அபிலாசைகளையோ குறிப்பது அல்ல. மாறாக, இந்தியாவை ஆளுகின்ற மற்றும் பொருளாதார வன்மையுள்ள பிரிவினர்களை, அதாவது மேட்டுக்குடிவர்க்கத்தையும், உலகப் பொருளாதாரத்திலும், அதனூடாக அனைத்துலக மேட்டுக்குடிவர்க்கத்திலும் அவர்களுக்கான ஒரு இடத்தையும் குறிக்கிறது. இந்தச் சிறுபிரிவே மீதமுள்ள பெரும்பான்மையினருக்கான முடிவுகளையும் தீர்மானிக்கிறது.

இதன் ஒரு பகுதியாக, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் மேட்டுக்குடிக்கான ஒரு இடம் எனும் நோக்கில் இந்தியா செயற்பட்டுவருகிறது. அனைத்துலகத் தளத்தில், பின்னிப்பிணைந்த இயங்குதளம் (Interlocking Directorship) என்னும் உத்தியின் ஊடாக இது முயற்சிக்கப்பட்டு வருகிறது. பின்னிப்பிணைந்த இயங்குதளம் என்பது ஒரு நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளவர்கள் இன்னொரு நிறுவனத்திலும் இயக்குநர்களாக இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். இது மேட்டுக்குடி வர்க்கத்தில் வெகுசாதாரணமாகக் காணப்படும் ஒரு நிலையாகும். நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தமது மேட்டுக்குடியினரிடையே வைத்திருப்பதற்குப் இது உதவுகிறது. இத்தகைய பின்னிப்பிணைந்த இயங்குதளமே உலக அளவில் மேட்டுக்குடியினரை ஒன்றிணைப்பதற்கும், கூட்டுமுயற்சிக்கான உந்து தளமுமாக விளங்குகிறது.

இந்தியாவில் மண்ணின் மைந்தர்களான மேட்டுக்குடி வர்க்கம் என்பது எப்போதுமே இருந்து வந்துள்ளது. பிரித்தானிய ஆட்சி நடைபெற்று வந்த காலப்பகுதியில், இவர்கள் அந்த அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டவர்கள் ஆவர். கனேடிய அரசியல் பொருளாதார நிபுணரான வொலஸ் கிளமென்ற் அவர்களின் கூற்றுப்படி, இவர்களை தரகர் மேட்டுக்குடி (Comprador Elites) என அழைக்கலாம். தரகர் மேட்டுக்குடி என்பது அந்நிய மேட்டுக்குடியின் (Foreign Elites) நலன்களை நிறைவேற்றும் ஒரு குழுமம் ஆகும். இக்குடியின் நிகழ்கால உதாரணமாக "பெப்சி இந்தியா" போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய நிர்வாக அதிகாரிகளைச் சொல்லலாம்.

இந்த மேட்டுக்குடியின் ஆதரவின்றி பிரித்தானியரால் இந்தியாவை ஆட்சி செய்வது முடியாத காரியமாக இருந்தது. எனவே இவர்கள் பிரித்தானியர்களால் அவர்களது சாம்ராஜ்யத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டும், பிரித்தானியப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டும், அந்த நாகரிகத்துள் உள்வாங்கப்பட்டும் நன்கு கவனிக்கப்பட்டார்கள். இவர்களது ஒத்துழைப்புக்குக் கூலியாக தகுந்த சன்மானங்களும் வழங்கப்பட்டன. இந்த இரு பிரிவினர்களுக்கும் இடையில் இருந்துவந்த உறவானது இறுக்கமானதாக இருந்தது. இந்திய மேட்டுக்குடியினரே பிரித்தானிய ஆட்சிக்கு ஆதரவாளர்களாகவும் இந்திய விடுதலைப்போருக்கு எதிரிகளாகவும் இருந்துவந்தவர்கள். இவர்கள் எப்போது பிரித்தானியாவினால் உதாசீனப்படுத்தப்பட்டார்களோ அப்போதே இந்திய விடுதலைப்போர் வீரியம் அடைந்தது.

nehru_edwina_mountbatten_0704111.jpg

இந்தியா விடுதலையடைந்த கையோடு பல தரகர் மேட்டுக்குடியினர் உள்ளூர் மேட்டுக்குடியினர் ஆகினர். அதனூடாக அவர்கள் தமது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொள்பவர்களாகவும், இந்தியாவில் பிரித்தானியரின் நலன்களை பேணாதவர்களாகவும் ஆகினர். சிறிது காலத்துக்கு இந்திய மற்றும் பிரித்தானிய மேட்டுக்குடியினரிடையே இறுக்கமான சூழ்நிலை நிலவிவந்தது. ஆனாலும் உள்ளூர் மேட்டுக்குடியினரில் சிலர் பிரித்தானியாவுடன் உடன்பாடுகளையும், சில விட்டுக்கொடுப்புக்களையும் செய்துகொள்ளத் தயங்கவில்லை.

கால ஓட்டத்தில், உலகப் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியன் உடைந்தது. அண்டைநாடான சீனா முதலாளித்துவத்தை அரவணைத்தது. உலகில் ஒற்றை வல்லாதிக்கம் மேலோங்கியது. இச்சமயத்தில் பல்வேறுபட்ட மேட்டுக்குடிகளிடையே மேலும் இணக்கமான செயற்பாடுகள் ஆரம்பித்தன. இந்திய உள்ளூர் மேட்டுக்குடிவாசிகளும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய உயர்குழுக்கழும் கூட்டுச் சேர்ந்தன. தரகர் நிலை மேட்டுக்குடியும் இவற்றுக்கு உதவியது. 1990 முதல் அரச கட்டுப்பாட்டில் இருந்த நிதி மேலாண்மையில் தனியார் நிறுவனங்கள் நுழைந்ததும், பல தனியார் வங்கிகளும் வெளிநாட்டு வங்கிகளும் இந்தியாவில் கால்பதித்ததும் இதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த மாற்றங்களாகும்.

(தொடரும்)

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 12:

மன்மோகன் சிங்கின் வருகை: பொருளாதாரத்தின் போர்வையில் தந்திரோபாய மாற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியா?

manmohan-singh.jpg

அணிசேராக் கொள்கையிலிருந்து விலகி தந்திரோபாயக் கூட்டுக்களை மேற்கொண்ட இந்தியாவின் செயலானது இந்தியாவில் மறைமுகமாக நடந்த ஒரு ஆட்சி மாற்றத்துடனும் அதனுடன் கூடிய பொருளாதாரக் கொள்கை மாற்றத்துடனும் பெரிதும் தொடர்புபட்டது. 1991 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மாற்றங்கள் நிறைந்த ஒரு ஆண்டாகும். ஜோர்ஜ் புஷ் சீனியர் புதிய உலக ஒழுங்கு நடைமுறைக்கு வருவதை அறிவித்ததும், வளைகுடாப் போர் நடந்ததும், சோவியத் யூனியனின் வீழ்ச்சி இடம்பெற்றதும் இந்த ஆண்டில்தான்.

1991 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதிவரை முக்கியமான பெயராக இருந்து வருவது மன்மோகன் சிங். ஒக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்ற இவர் தற்போதைய இந்தியப் பிரதமர் ஆவார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் அதிகாரியுமாவார். மேலும் சர்வதேச நாணய நிதியத்திற்கான இந்தியாவின் துணை அதிகாரி, இணை அதிகாரி (1976-1980, 1982-1985), இந்தியாவுக்கான மாற்று ஆளுநர், ஆளுநர் (1991-1995) ஆகிய பதவிகளை வகித்தவராவார். இவற்றுள் பல பதவிகள் இந்திய அரசிலும், மந்திரிசபையிலும் அவர் அங்கம் வகித்த அதே காலப்பகுதியில் வகித்திருந்த பதவிகளாகும். இந்திய மத்திய வங்கியின் ஆளுநராக மன்மோகன்சிங் பதவி வகித்ததும் (1982-1985) சர்வதேச நாணய நிதியத்தின் பதவியை தக்க வைத்திருந்த ஒரு காலப் பகுதியிலேயே இடம்பெற்றது.

0311_172048.gif

1991 இல், இந்தியப் பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மறுசீரமைத்தவர்களில் ஒருவர் மன்மோகன் சிங். அதே ஆண்டில் அப்போதைய பிரதம மந்திரி நரசிம்மராவால் மன்மோகன் சிங் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார சீரழிவின்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் இந்த நரசிம்மராவ். பொருளாதார மறுசீரமைப்பின்போது இந்தியா கிட்டத்தட்ட ஒரு வங்குரோத்து நிலைக்குச் சென்றது. பொதுச்சொத்துக்கள் பல உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் தனியார் நிறுவனங்களைச் சென்றடைந்தன. நாட்டைப் பொருளாதாரத் தன்னிறைவை நோக்கிச் செலுத்தும் கொள்கைகள் கைவிடப்பட்டு, பரந்துபட்ட தனியார்மயமாக்கல் எங்கும் வியாபித்தது. தூரநோக்கில் இந்தியாவின் வறுமையை ஒழிக்கும் திட்டமும், வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் திட்டமும் கைவிடப்பட்டு பொருளாதார தாராளமயமாக்கல் முன்னிறுத்தப்பட்டது. பசுமைப் புரட்சி எனும் போர்வையின்கீழ் இந்திய விவசாயத்துறை அந்நிய நிறுவனங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் முன்னர், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் பொருளாதாரச் சீரழிவை உருவாக்கியவர் மன்மோகன்சிங் ஆவார். இவரது கொள்கைகள் இந்திய அரசை அந்நியச் செலாவணிக் கையிருப்பு இல்லாத ஒரு நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. சர்வதேச நாணய நிதியத்தின் இக்கொள்கைகளால் இந்தியா அதன் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது. அக்காலப்பகுதியில், அரசு ஊழியர்களின் முறையீடுகள் பலவற்றின்மூலம் இக்கொள்கைகள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டமை வெளிச்சத்துக்கு வந்தது. நிதிப் பத்திரங்களில் பயன்படுத்தப்பட்ட பிரித்தானிய வகையில் அல்லாத அமெரிக்க ஆங்கிலம், அதன் இலக்கணம், எழுதிய முறைகள் என்பன அந்த ஊழியர்களின் விசனத்துக்கு உள்ளாகின. புதிய பொருளாதாரக் கொள்கைகளின்மூலம் தேசிய சொத்துக்களும், வளங்களும் இங்கிலாந்து வங்கி போன்ற வெளியார் கைகளுக்குச் சென்றன. இந்திய நிதி மேலாண்மை வெளிநாட்டினரால் கட்டுப்படுத்தப்படும் நிலைமை தோன்றியது. இதன்பின்னர், பொருளாதார தாராளமயமாக்கலுக்கு உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக நரசிம்மராவ் ஆட்சி 1996 இல் வீழ்ச்சியுற்றது.

1991 இல் நடந்த பொருளாதாரக் கொள்கை மாற்றத்துடன் அரசியல் கொள்கை மாற்றத்துக்கான பாதையும் திறக்கப்பட்டது. வைகாசி 22, 2004 இல், சர்வதேச நாணய நிதியத்தின் புதுடில்லிக்கான கையாளாகிய மன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அச்சமயத்தில், அணிசேரா நாடுகள் கூட்டமைப்பிலிருந்து விலகும் முடிவு, ஈரானின் சர்வதேச அணுசக்தி விவகாரங்கள், ப்ரிமகோவ் சித்தாந்தத்தைச் செயற்படுத்தும் ரஷ்யாவின் குறிக்கோள் போன்ற விடயங்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தன.

(தொடரும்)

இந்

த மேட்டுக்குடியின் ஆதரவின்றி பிரித்தானியரால் இந்தியாவை ஆட்சி செய்வது முடியாத காரியமாக இருந்தது. எனவே இவர்கள் பிரித்தானியர்களால் அவர்களது சாம்ராஜ்யத்துக்குள் உள்ளிழுக்கப்பட்டும், பிரித்தானியப் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டும், அந்த நாகரிகத்துள் உள்வாங்கப்பட்டும் நன்கு கவனிக்கப்பட்டார்கள். இவர்களது ஒத்துழைப்புக்குக் கூலியாக தகுந்த சன்மானங்களும் வழங்கப்பட்டன

அதாவது சிறிலங்காஆட்சியாளருக்கு , மேட்டுகுடியான டக்கிளசு மாதிரி என்று சொல்லுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது சிறிலங்காஆட்சியாளருக்கு , மேட்டுகுடியான டக்கிளசு மாதிரி என்று சொல்லுங்கோ

சேர். பொன். ராமநாதன் போன்றவர்கள் இலங்கையில் மேட்டுக்குடி வகையில் அடங்குவார்கள் என நினைக்கிறேன்..! ஆனால் டக்கி குறூப்பையும் நேரு, ராமநாதன் குறுப்புடன் ஒப்பிட்டது கொஞ்சம் ஓவர் ஜில்..! :)

சேர். பொன். ராமநாதன் போன்றவர்கள் இலங்கையில் மேட்டுக்குடி வகையில் அடங்குவார்கள் என நினைக்கிறேன்..! ஆனால் டக்கி குறூப்பையும் நேரு, ராமநாதன் குறுப்புடன் ஒப்பிட்டது கொஞ்சம் ஓவர் ஜில்..! :)

அது கொஞ்சம் ஒவர் தான்.

ஆயுதப்போராட்டம் வந்த பின்பு போராட வெளிக்கிட்ட நடுத்தரவர்க்க குடிகளை,கீழ்தரவர்க்க(பொருளாதார அடிப்படையில்) குடிகளை ஆட்சியாளர்கள் தங்கள் வசப்படுத்தினதும் அதைமாதிரிதானே

கருனா,பிள்ளையான்,டக்கிளஸ்,.......தொடர்கதை தெரியாமல் போனவை பல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 13:

இந்தியாவும் யுரேசிய நாகரிகங்களிடையேயான மோதல் எனும் புனைகதையும்

இந்தியாவில் பலமட்டங்களில் லண்டனுடனான காலனியாதிக்க பிணைப்புகள் இன்னும் வலுவாக உள்ளன. குறைந்தபட்சம் இந்திய மேட்டுக்குடியினர் மட்டத்தில் தாங்கள் இயல்பாக ஆங்கில - அமெரிக்க வர்க்கத்துடன் தொடர்புபட்டவர்கள் எனும் எண்ணம் உள்ளது. இத்தகைய கருத்தியலுக்கு இந்தியாவின் சாதிக்கட்டமைப்பும், ஆரியக் கோட்பாடும் கூட காரணங்களாகக் கூறப்படுகிறது. ஹன்ரிங்ரனின் நாகரிகங்களிடையேயான மோதல் கோட்பாடு மற்றும் மேக்கிண்டரின் பூகோள அரசியல் மக்கட்கூற்று வடிவம் ஆகிய காரணிகளும் இத்தகைய கருத்தியலுக்குக் காரணங்களாகக் கூறப்படுகிறது. எது எவ்வாறெனினும், வளங்களுக்கான போட்டி, குடியியல் மற்றும் பொருளாதாரத்துக்கான போட்டி ஆகியவற்றால் சீனாவும் இந்தியாவும் யுத்தத்துக்குள் செல்வது தவிர்க்கமுடியாதது ஆகும்.

ஹன்ரிங்ரனின் சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளபடி, இந்திய நாகரிகத்துக்கும் சீன மற்றும் இஸ்லாமிய நாகரிகங்களுக்கும் இடையேயான ஒற்றுமைக்கோ அல்லது வேற்றுமைக்கோ இப்பிரதேசத்தின் புவியியல் அமைப்புதான் முக்கிய காரணியா? அப்படிக் கூறிவிடமுடியாது. ஏனெனில், வரலாற்றுரீதியில், இந்திய மற்றும் சீன நாகரிகங்களிடையே நூற்றாண்டுக்கணக்கில் மோதல்கள் இருந்ததில்லை. பெரும்பாலும் அவை தமக்குள் அமைதியாகவே இருந்தன. அதுபோன்றதொரு நிலைமையே, இஸ்லாமிய நாகரிகத்துடனும் காணப்பட்டது. ஆகையால் இத்தகைய கோட்பாடு இப்பிரதேசத்தைப் பொறுத்தமட்டில் ஆழமற்றது எனக் கூறலாம்.

S.%20Huntington%20-%20Clash%20of%20Civilizations%20Chart%20(1996).jpg

இரு நாகரிகங்களோ அல்லது சமூகங்களோ தமக்குள் தொடர்பில் இருக்கும்போது காலப்போக்கில் இனமோதலே அவற்றுக்கான இயல்பான முடிவாக இருக்கும் எனக் கூறிவிட முடியாது. அவற்றின் தொடர்புக்கு ஆரம்பத்தில் பரஸ்பர வர்த்தகமே பெரிதும் காரணியாக அமைகிறது. அந்த வர்த்தகம் பொருளாதார நல்ன்களை மையப்படுத்தும்போது மோதலுக்கான சூழ்நிலை உருவாகிறது. நாகரிகங்களிடையேயான மோதல் எனும் கோட்பாட்டை அந்நிய சக்திகள் உபயோகிக்கக் காரணம் பொருளாதாரம் மீதான கட்டுப்பாட்டைப் தம்வசத்தில் வைத்திருத்தல் ஆகும். ஆங்கில - அமெரிக்க தந்திரோபாயத்தையும், அவற்ரின் செயற்பாடுகளையும் உற்றுநோக்கினால் இவற்றைப் புரிந்துகொள்ளலாம்.

வரலாற்றுரீதியில், இந்த நாகரிகங்களிடையேயான மோதல் எனும் சித்தாந்தத்தை உற்றுநோக்கினால், அதிலுள்ள தவறை விளங்கிக்கொள்ள முடியும். இந்தியா, சீன, இஸ்லாமிய இனக்கூறுகள் பல இடங்களில் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்சினை, ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் இந்தியாவின் முஸ்லிம் அல்லாதவர்க்கும் இடையேயான பிரச்சினை அல்ல. பிரித்தானிய ஆட்சி வரும்வரை இந்துக்களும் முஸ்லிம்களும் வேறு இனங்களும் பெருமளவில் ஒற்றுமையுடன்தான் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்திருக்கின்றன. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் வெறுப்புணர்வு என்பது செயற்கையாகக் கட்டியெழுப்பப் பட்டது. வெளிநாட்டு சக்திகளும் உள்ளூர் மேட்டுக்குடிவாசிகளும் இணைந்து பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த சமூகங்களைப் பிளந்து தம் கட்டுக்குள் வைத்துக்கொண்டன.

(தொடரும்)

நல்ல பயனுள்ள விடயம் இசைக்கலைஞன்(டங்கு). தொடருங்கள்....! தங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துச் சொல்வதைவிட "நன்றி" சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். நிறைய விடயங்களை வித்தியாசமான கோணத்தில் பார்க்கவும் சிந்திக்கவும் இவ்வாறான ஆக்கங்கள் பெரிதும் உதவும். ஒரு வரி விடாமல் வாசிக்கின்றேன்.பாராட்டுக்கள் இசைக்கலைஞன்.

நன்றிகள் & வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள விடயம் இசைக்கலைஞன்(டங்கு). தொடருங்கள்....! தங்களது இந்த முயற்சிக்கு வாழ்த்துச் சொல்வதைவிட "நன்றி" சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும். நிறைய விடயங்களை வித்தியாசமான கோணத்தில் பார்க்கவும் சிந்திக்கவும் இவ்வாறான ஆக்கங்கள் பெரிதும் உதவும். ஒரு வரி விடாமல் வாசிக்கின்றேன்.பாராட்டுக்கள் இசைக்கலைஞன்.

நன்றிகள் & வாழ்த்துக்கள் :)

தங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றிகள் பருத்தியன்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.