துரோகத்தின் நாட்காட்டி : நாள் 13, சித்திரை 2004
"மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவை காண முடியவில்லை - புலிகளின் தளபதிகள் கருத்து"
கருணா துணை ராணுவக் குழுவுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் புலிகளின் தளபதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து முகாம்களும் கைப்பற்றப்பட்டு, முழுமையான தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த முகாம்கள் எங்கிலும் கருணாவைக் காணமுடியவில்லை என்றும் அறிவித்திருக்கிறார்கள். "மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் ஆயுதக் களஞ்சியங்களை நாம் முற்றாக மீட்டுள்ளோம், ஒரு மோட்டார் செலுத்தியும் சில தானியங்கித் துப்பாக்கிகளும் காணாமல்ப் போயிருக்கின்றன. வெடிமருந்துகள் மற்றும் ரவைக்களஞ்சியங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன" என்றும் தெரிவித்தார்கள். மேலும், புலிகளின் பிரதான முகாமான மீனகத்தில் பல வாகனங்கள் தப்பியோடிய கருணா துணைராணுவக் குழுவினரால் தீவைத்துக் கொழுத்தப்பட்டிருக்கின்றன.
"இந்த முகாம்களைப் பார்க்கும்போது, கருணாவும் அவரது அடியாட்களும் அவசரத்தில் வெளியேறி ஓடியிருப்பது தெரிகிறது. அரைகுறையாக நிரப்பப்பட்ட வாகனங்கள் மற்றும் கடைசிநேர பொதிகட்டல்களைப் பார்க்கும்போது எமது விசேட படையணிகளின் தாக்குதலை அவர் எதிர்பார்த்திருக்கவில்லையென்பதும், அவருக்குப் போதுமான கால அவகாசத்தினை எமது தாக்குதல் அணிகள் கொடுத்திருக்கவில்லையென்பதும் புலனாகிறது. அத்துடன், அவரது கட்டளைகளை ஏற்கமறுத்த பல அணிகள் எம்முடன் தொடர்புகொண்டது போராளிகள் மேலான தனது கட்டுப்பாட்டை அவர் முற்றாக இழந்துவிட்டாரென்பதையும் தெளிவாக்குகிறது".
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்கு விசுவாசமாக இருந்த நீலன் எனும் போராளியைக் கைதுசெய்து சித்திரவதைப்படுத்தியிருந்த கருணா, ஈற்றில் அவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மீட்கப்பட்ட போராளிகள் கூறினர்.
" பெண்டுகல்ச்சேனை பகுதிமக்கள் எம்மிடம் கூறும்போது, கருணாவும் அவரது அடிவருடிகளும் இரு வாகனங்களில் வாலைச்சேனை - பொலொன்னறுவை வீதியிலுள்ள நாலாம் முச்சந்தி நோக்கி விரைந்ததாக கூறுகிறார்கள்" என்று தரவைப் பகுதியைக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த விசேட தளபதியொருவர் கூறினார்.
ஆப்ப்குதிக் காடுகளைச் சல்லடைபோட்டுத் தேடிய புலிகளின் அணிகள் கருணாவையோ அல்லது அவரது அடிவருடிகளையோ காண முடியவில்லை என்றும் அவர் கூறினர்.
கருணாவும் அவரது அடிவருடிகளும் கல்லிச்சை - வடமுனைக் காடுகளினுள் பதுங்கியிருப்பதாக வந்த செய்திகளை மறுத்த அத்தளபதி, "நாம் அக்காடுகளை அங்குலம் அங்குலமாகச் சல்லடை போட்டு தேடிவிட்டோம், அவர் அங்கு இல்லை" என்று கூறினார்.
புலிகளின் கிழக்குப் பிராந்திய தகவல்களின்படி கருணாவின் இரு தளபதிகளான ஜிம் கெலித் தாத்தா, ரொபேட் மற்றும் பேச்சாளர் வரதன், நிதிப்பொறுப்பாளர் குஹனேஸ், விசாலகன் அணிப்பொறுப்பாளர் ஜீவேந்திரன், மட்டக்களப்பு பெண்போராளிகளின் தளபதி நிலவினி, கிழக்கு மாகாண அரச சார்பற்ற நிறுவனங்களின் மேற்பார்வையாளர் துரை, டீடோர் பொறுப்பாளர் துரை, நெருங்கிய சகா இலங்கேஸ் மற்றும் ஐந்து மெய்ப்பாதுகாவலர்கள் ஆகியோரே தரவைப் பகுதியிலிருந்து ஞாயிறு இரவு தப்பியோடியுள்ளதாக கூறியிருக்கின்றனர்.
இதேவேளை கருணாவினால் கிழக்கு மாகாண அரசியல்த்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விசு புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, வார இறுதியில் இணைந்துகொள்வதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.