துரோகத்தின் நாட்காட்டி : நாள் 29, பங்குனி 2007
கருணா துணைராணுவக் குழுவுக்கான ஆதரவுக்காக இலங்கை அரசாங்கத்தினைச் சாடும் மனிதவுரிமைக் காண்காணிப்பகம்
கருணா துணைராணுவக் குழுவினரால் கடத்தப்படும் பிள்ளைகள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து அவர்களை மீட்டுத்தருவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தாலும்கூட, அவை எவற்றையும் அது செய்யவில்லையென்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடியுள்ளது.
"சிறார்களை தனது குழுவினுள் கட்டாயப்படுத்தி இணைத்து யுத்தத்தில் கருணா பாவித்துவருவது இலங்கை அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் தான் என்பது தற்போது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது " என்று மனிதவுரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான தலைவர் பிரட் அடம்ஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறார். "கருணா குழு இலங்கை அரசாங்கத்துக்காக இந்த மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுகிறது. கொழும்பு அரசாங்கம் புலிகளுக்கெதிரான தனது போரில் சிறார்களை பலவந்தமாக இணைப்பதிலிருந்து விலகிக்கொள்ளவேண்டிய தருணம் வந்திருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
இவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி ,"மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழு எனும் துணை ராணுவக்குழுவின் அலுவலகங்கள் முகாம்களுக்கு வெளியே சிறுவர்கள் தானியங்கித் துப்பாக்கிகளோடு காவல்கடமையில் ஈடுபட்டிருப்பதை நாம் பார்த்தோம். இலங்கை ராணுவத்தினரும், பொலிஸாரும் இதுபற்றி எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காது இச்சிறார்களைக் கடந்து செல்கின்றனர்" என்று கூறப்பட்டிருக்கிறது.
"ஒரு சிறுவன், கையில் தானியங்கித் துப்பாக்கியோடு துணைராணுவக்குழுவின் தலைவரான கருணாவின் ஊரான கிரானில், அவரது அலுவலகத்திற்கு முன்னால் நிற்கக் கண்டோம். மேலும் வாழைச்சேனை, முறக்கோட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் ராணுவ முகாம்களுக்கு முன்னால் அமைக்கப்பட்டிருக்கும் கருணா குழுவின் முகாம்களுக்கு முன்னால் மேலும் சிறுவர்கள் ஆயுதங்களோடு காவற்கடமையில் ஈடுபட்டிருப்பதையும் நாம் கண்டோம். தமது முகாம் வாயிலில் சிறுவர்கள ஆயுதங்களோடு காவல்கடமையில் இருப்பதைக் கண்டும் இலங்கை ராணுவமோ பொலிஸாரோ எதுவித நடவடிக்கையினையும் எடுக்காது பேசாமலிருப்பது கூறும் ஒரே விடயம் இந்த உரிமை மீறல் அவர்களின் ஆசீருடனுன், ஆதவுடனும்தான் நடைபெறுகிறதென்பதைத்தான். ஆகவே இலங்கை அரசாங்கம் இதுகுறித்து தாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கூறுவதை எம்மால் நம்பமுடியாமல் இருக்கிறது" என்று மேலும் அடம்ஸ் அவர்கள் கூறினார்.
"இலங்கை அரசாங்கத்திற்காக கருணா சிறுவர்களைக் கடத்துவது இப்போது வெளிப்படையாகிவிட்டது. கடத்தப்பட்ட தமது பிள்ளைகளை விடுவிக்குமாறு பெற்றோர் கருணா குழுவினரிடம் கேட்டபோது இக்கடத்தல்கள் பற்றி முறையிட்டால் கொல்லப்படுவீர்கள் என்றும், அவர்களைப் புலிகள் கடத்தினார்கள் என்று வெளியே போய்ச் சொல்லுங்கள் என்றும் அவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள்" என்று அறிக்கை மேலும் கூறுகிறது.
"எமது பிள்ளைகளை புலிகளே கடத்தினார்கள் என்று கூறும்படி இலங்கை ராணுவமும் பொலிஸாரும் எம்மைக் கட்டாயப்படுத்தினார்கள் என்று கருணாவினால் கடத்தப்பட்ட பிள்ளைகளின் பேற்றோர்கள் கூறியிருக்கின்றனர். இது, இலங்கை அரசாங்கம் கருணாவுக்கு ஆதரவாக செயற்படுகிறதென்பதை வெளிப்படையாக்குகிறது. ஆயுதம் தரித்த கருணா துணைப்படையினர் இலங்கை ராணுவத்தினருடன் சேர்ந்து உலாவருவது கிழக்கில் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த மாதம் கருணா குழுவின் முக்கியஸ்த்தர் ஜெயம் ராணுவ கவச வாகனத்தின் மீதிருந்து வாழைச்சேனைப் பகுதியில் வலம் வந்ததும், கருணா துணைப்படையினர் பொலீஸாரின் வாகனங்களில் ரோந்துவருவதும் இப்போது பரவலாக நடக்கிறது".
"மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர்கள் வடமேற்கே அமைந்திருக்கும் வெலிக்கந்தைப் பகுதியில் குறைந்தது 5 முகாம்களை கருணா குழு இயக்கிவருகிறது. இதே பகுதியில் இலங்கை ராணுவத்தின் 23 ஆம் படைப்பிரிவு தனது தலைமை முகாமினைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இப்பகுதி 100% ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, கிழக்கின் பிரதான நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையும் இப்பகுதியூடாகவே பயணிக்கிறது. முதுகல பகுதியில் அமைந்திருக்கும் கருணா முகாம் ராணுவ முகாமின் ஒரு எல்லையில் அமைக்கப்பட்டிருக்கிறது".
"கருணா குழுவினரின் கடத்தல்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ராணுவத்தினர் மீதான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவோம் என்று ஜனாதிபதி மகிந்த எம்மிடம் பலமுறை வாக்குறுதியளித்தபோதும் கூட, இதுவரை அவர் இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லையென்பது கருணா குழு இன்றுவரை நடத்திவரும் சட்டவிரோத கடத்தல்கள், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் சுட்டிக் காட்டுகின்றன".
http://srilankamuslims.lk/wp-content/uploads/2015/06/ltte1.png2_1.png
"தம்மிடம் ஆதாரங்கள் இல்லாமல் விசாரணைகளை ஆரம்பிக்க முடியாது என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்குத்தேவையான ஆதாரங்கள் அவர்களின் கண்முன்னே, அவர்களின் ராணுவத்தினராலேயே நடத்தப்படுகின்றன. நாம் சேகரித்துவைத்திருக்கும் ஆதாரங்களுக்கு மேலதிகமாக, அவர்களின் பொலிஸாரிடம் வழங்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கூட இருக்கின்றன".
கடந்த ஜனவரி மாதத்தில் கருணா குழுவினரால நடத்தப்பட்ட கடத்தல்கள் தொடர்பான 100 பக்க அறிக்கையொன்றினை இச்சபை அரசிடம் கையளித்திருந்தது. தனிப்பட்ட சம்பவங்கள், வாக்குமூலங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றின் உதவியோடு கருணா குழு எவ்வாறு அரச ஆதரவுடன் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறார்களைக் கடத்துவது, கட்டாய ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்துவது, முகாம்களை அமைப்பது, சிறார்களை பலவந்தப்படுத்தி போரிற்கு இழுத்துச் செல்வது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறதென்பதை ஆதாரத்துடன் வழங்கியிருந்தது.
யுனிசெப் அமைப்பின் அறிக்கைப்படி மார்கழி 2006 இலிருந்து மாசி 2007 வரை குறைந்தது 45 சிறுவர்களை கருணா குழு பலவந்தமாகக் கடத்திச் சென்று ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருப்பது தெரியவருகிறது. இவர்களில் மூவர் உள்ளக இடப்பெயர்வு முகாம்களிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
“ ஆனால், கடத்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இதைக் காட்டிலும் பலமடங்கு அதிகமானது. ஏனென்றால், தமது பிள்ளைகளைக் கடத்தியதுபற்றி முறைப்பாடு செய்யுமிடத்து கொல்லப்படுவீர்கள் என்று பல பெற்றோர்கள் கருணாவினால் பயமுருத்தப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், 17 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களைக் கருணா கடத்திச் சென்றது குறித்து யுனிசெப் கணக்கில் எடுக்கவில்லை" என்று மனிதவுரிமைக் கண்காணிப்பகம் மேலும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.