பிரபாகரன் தனது இறுதிமூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறார் அவரது கண்மூடித்தனமான அக்கிரமங்களுக்கான தண்டனையினை நாம் வழங்கும் காலம் நெருங்கிவிட்டது -கருணா அம்மான்
ஆக்கம் : வோல்ட்டர் ஜயவர்தின (இலங்கை ராணுவ அரச வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிவரும் , அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் சிங்களவர், அமெரிக்க -இலங்கை கூட்டுறவின் கலிபோர்னியா மாநில ஒருங்கிணைப்பாளர், பிரசித்திபெற்ற வழக்கறிஞரான இவர் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகிறார். இலங்கையில் தமிழருக்கென்று உரிமைகள் வழங்கப்பட்டுவிடக் கூடாதென்று இந்திய ஆக்கிரமிப்பிற்கு முன்பிருந்தே கடுமையாகப் போராடிவந்த இனவாதி, 2020 மே 3 ஆம் திகதி இறந்தார்)
காலம் : இனவழிப்புப் போரின் இறுதிக்காலம்
போராட்டத்தில் ஈடுப்பட்டவரும், இன்று அவருக்கெதிரான ராணுவ நடவடிக்கையில் கணிசமான பங்களிப்பைச் செலுத்தியவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அண்மையில் பத்திரிக்கையாளர் ஒருவருடன் பேசும்போது, " பிரபாகரன் தனது இறுதி மூச்சினை விட்டுக்கொண்டிருக்கிறார், அவர் செய்த மிலேச்சத்தனமான, கண்மூடித்தனமான அக்கிரமங்களுக்கான தண்டனையினை நாம் வழங்கும் காலம் நெருங்கி விட்டது" என்று கூறினார்.
இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் சிங்களச் செய்தியாளரின் பேட்டிக்கு, தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் கருணா பதிலளித்தார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா அம்மான் தொடர்ந்தும் பேசுகையில், " எனது கருத்துக்களுக்கும், அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்திற்கும் கருத்துக்களுக்கும் பிரபாகரன் செவிசாய்க்கவில்லை. நான் அவருடன் வெளிப்படையாகவே முரண்பட்டுக்கொள்வேன். ஆனால், இயக்கத்தில் இருந்த பல மூத்த தளபதிகளுக்கு அந்தத் தைரியம் கிடையாது. பிரபாகரன் கூறும் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்துவிட்டு, அவரின் பின்னால் தமது அதிருப்தியைத் தெரிவிப்பார்கள்" என்று கூறினார்.
அவர் மேலும் பேசுகையில், " முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை தொடர்பாகவும், கண்டி தலதா மாளிகை மீதான குண்டுத்தாக்குதல்தொடர்பாகவும் நான் பிரபாகரனிடம் கேள்வி கேட்டேன். இந்தத் தாக்குதல்கள் புலிகள் மீதான நற்பெயரை உலகளவில் பாதித்துவிட்டதை நீங்கள் உணரவில்லையா என்று கேட்டதற்கு பிரபாகரன் தனக்குத் தெரியாமலேயே இது நடத்தப்பட்டுவிட்டது என்று என்னிடம் கூறினார். ஆனால், பிரபாகரனுக்குத் தெரியாமல் அங்கே எதுவும் நடப்பதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும், அவர் கூறுவது ஒரு முழுப்பொய் என்று நான் தெரிந்திருந்தேன்".
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா மேலும் கூறும்போது, "பிரபாகரனுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தமொன்றில் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திட்டது ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறாகும். புலிகளின் ஆட்பலமும், ஆயுத வளமும் மிகக் கடுமையான வீழ்ச்சியினைக் கண்டிருந்த சமயத்திலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகள் பாரிய நிதிச் சேர்ப்பையும், அதன்மூலம் பெருமளவு ஆயுதங்கலையும், கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் தமது ராணுவத்தையும் வலப்படுத்திக்கொண்டனர்".
"புலிகளின் தலைவர்கள் என்று சூசை, நடேசன், தயா மாஸ்ட்டர் போன்றவர்களை பலர் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் அங்கே தலைவர்களே கிடையாது. இவர்களின் கருத்துக்களைப் பிரபாகரன் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கடற்புலிகளின் தளபதி என்று கூறிக்கொள்ளும் சூசைக்கு தரையில் சண்டையிடுவது எப்படியென்று எதுவுமே தெரியாது. அவரை எவருமே தலைவராக மதிக்கவேண்டிய அவசியம் இல்லை".
"புலிகளின் அரசியல் அலோசகர் அன்டன் பாலசிங்கம் புலிகளின் தலைவர் பிரபாகரனின் முகத்திற்கு நேரே, நானும் கருணா கூறுவதையும் நீ கேட்கப்போவதில்லை, ஒரு பாசிஸ வெறிபிடித்த சர்வாதிகாரியாக நீ செயற்படுகிறாய் என்று கூறினார். இதற்கு முன்னர் பிரபாகரனின் தாந்தோன்றித்தனமான முடிவுகளைக் கேள்விகேட்ட மாத்தயாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நடந்த அநியாயப் படுகொலைகளை நீங்களும் அறிந்திருப்பீர்காள்".