சமர்க்கள விரிப்புகள் தரையிறக்கம் அடுத்து, தரையிறக்கத்தின் போது என்வெல்லாம் நடந்தன என்பதை பற்றிப் பார்போம். இது பற்றிய தகவல்கள் யாவும் 'வேருமாகி விழுதுமாகி' என்ற மாலதி படையணியின் வரலாறு கூறும் நூல், 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வரலாறு கூறும் நூல் மற்றும் 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்' என்ற குடாரப்புத் தரையிறக்கத்தில் தொடங்கி சமாதான காலத்தில் யாழ்ப்பாணம்-கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்டு யாழ்ப்பாண நகருக்குள் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் நுழைவது வரையிலான அனைத்து அனுபவங்களையும் ஆவணப்படுத்திய நூல் ஆகியவற்றில் இருந்து எடுத்துள்ளேன். இவற்றை வாசிப்பதன் மூலம் அற்றைய வரலாற்றுச் சிறப்பு மிக்க தரையிறக்கம் எப்படி இருந்தது என்பதை அறிவதோடு, நீங்களும் அத்தரையிறக்கம் நடந்த குடாரப்பில் நிற்பது போன்ற உணர்வினையும் உங்களுக்கு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன், 10/27/2021 முதலாவதாக 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்' என்ற புத்தகத்தில் இருந்து... பக்.: 86-87 சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் முக்கிய பணிகள் தலைவர் அவர்களால் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவை வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதிலேயே நடவடிக்கையின் வெற்றி தங்கியிருந்தது நடவடிக்கையின் முதற்கட்டமாகச் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இரு அணிகள் அதன் துணைத்தளபதி லெப் கேணல் நேசனின் தலைமையில் முன்னரே குடாரப்புவில் தரையிறக்கப்படும். அந்த அணி ஒரு வெற்றிகரமான இரகசிய நகர்வை மேற்கொண்டு ஏ௯ வீதியால் சென்று, மேஜர் கோபித், மேஜர் இலக்கியன் ஆரியோரின் தலைமையிலான இரு அணிகளாகப் பிரிந்து ஆனையிறவை நோக்கியும் யாழ்ப்பாணத்தை நோக்கியும் உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களை அமைத்து எதிரித்தளத்தைப் பிளந்து நிலைகொள்ளும். இந்த ஆரம்பச் செயல்களின் வெற்றிகளிலேயே அடுத்தகட்டங்களின் எதிர்காலம் தங்கிநின்றது. லெப் கேணல் நேசனின் அணிகள் வெற்றிகரமாகத் தம் பணியை முடித்து நிற்க, அடுத்ததாகத் தரையிறக்கப்படும் படைத்தொகுதிகளுடன் தரையிறங்கும் சிறப்புத் தளபதி லெப் கேணல் ராஜசிங்கன் தனது மேஜர் நகுலன், மேஜர் ரோய் ஆகியோரின் அணிகளுடன் நகர்ந்துவந்து இணைப்பை ஏற்படுத்துவர். எல்லாப் படையணிகளையும் இணைத்து கேணல் பால்ராஜ் அவர்கள் கண்டி வீதியிலிருந்து பெருங்கடல் வரையான நீண்ட பகுதியில் எதிரித் தளத்தைப் பிளந்து, உறுதியான, உள்தடுப்பு, வெளித்தடுப்பு அரண்களை அமைத்து, வியூகத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனையிறவுத் தளத்தின் பிரதான வழங்கல் பாதையைத் துண்டித்து, எதிரியின் போர்ப்பலத்தைக் கவர்ந்து சிதறடித்தபடி நிலைமைகளுக்கேற்ப முன்னகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். தலைவர் அவர்களால் இறுதிக்கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆனையிறவுத்தளம் வீழ்த்தப்படும்வரை இத்தாவிற் களத்திற் போரிடவேண்டும். இரண்டாவதாக 'வேருமாகி விழுதுமாகி' என்ற புத்தகத்தில் இருந்து... பக்.: 353- 360 நேரம் அப்போது ஏழரையைத் தாண்டியிருந்தது. இத்தாவில் பகுதிக்குள் நகர்த்தப்படவேண்டிய அணிகள் முதலில் படகேறின. கடற்புலி அணியினர் தமது பணியினை மிகுந்த வேகத்துடன் செய்யத் தொடங்கினர். தர்சாவின் தலைமையிலான எமது படையணி அலை மீது தாவ, ஓங்கியடித்தது அலை. ஆரம்பத்தில் படகேறிய அணிகளுக்குக் கடலின் மாறுதலான போக்கைத்தவிர வேறெந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. எனினும் நேரம் செல்லச் செல்ல படைத் தரப்புக்கு ஐயம் ஏற்பட்டிருக்கவேண்டும்போலும். அந்தப் பகுதியில் கடற்படைப் படகுகள் உலாவத்தொடங்கின. காத்திருந்த கடற்புலிகளின் சண்டைப் படகுகள் அவற்றை மறிப்பதற்காக அத்திசைநோக்கி விரைந்தன. தாக்குதலணிகளை ஏற்றும் படகுகள் தமது வேகத்தை இன்னும் அதிகரித்தன. அவர்களின் செயலில் தெரிந்த வேகம் எம்மையும் விரைவாகச் செயற்படவைத்தது படகேறிப் பழக்கம் அற்றவர்கள்கூடப் பாய்ந்து உள்ளே ஏறினர். தொடர்ந்து ஏற்றுவதும், கொண்டுசென்று தரையிறக்குவதுமாக இருக்க, கடலில் தாக்குதல் தொடங்கியது. "இந்தத் தரையிறக்கிற நடவடிக்கையில் தாக்குதலணிக்குச் சின்னக் கீறல் கூட வரக்கூடாது" என்ற தலைவரின் கண்டிப்பான பணிப்பை நிறைவேற்றுவதற்காகக் கடற்புலி அணியினர் தமது உயிரைக் கொடுக்கவும் தயராகநின்றனர். கடற்படைப் படகு எமது படகுகளுக்கு அருகில் வரமுன்பே, அவற்றுக்குப் போக்குக்காட்டி வேறு திசையில் வலிந்திழுந்துச் சென்று சண்டையிட்டனர் அவர்கள். நெருப்புத் தணல்களாகப் புறப்பட்ட சன்னங்கள் கடலின் இருளைக் கிழித்தன. இரண்டு கடற்படைகளின் மோதலை நேரடியாகக் கண்ட புளுகத்துடன், பயணத்தில் எந்தவித இடையூறும் வந்துவிடக்கூடாது என்ற பயமும் இடையிடையே வந்துபோனது. ஒவ்வொரு தடவை கடற்படைப் படகுகள் மோதுகின்றபோதும் தலைவர் எம்மோடு கதைத்த காட்சிகள் மனதில் நிறைந்து, வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தை மனதுள் விரித்தது. இதுவரை எந்தவிதப் பாதிப்புமின்றித் தாக்குதல் அணிகள் தரையிறங்கிக் கொண்டிருந்தன. தர்சாவின் அணியில் கீர்த்தி, தனுசா ஆகியோரின் பிளாட்டூன்கள் கிட்டத்தட்ட இரவு 10.00 மணியளவில் குடாரப்புப் பகுதியில் தரையிறக்கப்பட்டன. ஒரு போதுமே கடற்பயணத்தில் பழக்கப்படாத போராளிகள் மயங்கிவிழாத குறையாக கடற்கரை மண்ணில் வந்து இறங்கினர். கடுங்குளிரில் நடுங்கி உப்புக் காற்றைச் சுவாசித்தபடி வந்து கரையேறும்போது கடற் தண்ணீருக்குள்ளே வீழ்ந்து முற்றுமுழுதாக நனைந்துவிட்டிருந்தனர். இதற்குள் கரையைநோக்கிக் கடற்படைப் படகுகள் தாக்கத்தொடங்கின. மயக்கத்தோடு இறங்கியவர்கள் கடற்கரை மண்ணிலே வீழ்ந்துபடுத்தனர். நல்ல காலமாக எல்லாச் சன்னங்களுமே தலைக்கு மேலே விரிந்திருந்த தென்னைகளை உரசிப் பறந்தன. இப்போது வெவ்வேறு பக்கங்களில் கடற்சமர் வலுத்திருந்தது. சமரணிகள் பயணம் செய்த படகுகளில் கடற்தாக்குதலுக்குரிய ஆயுதங்கள் எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக எம்மைச்சூழ சண்டைப் படகுகள் நின்றன. நேரம் கிட்டத்தட்ட ஒரு மணியை அண்மிக்க கேணல் விதுசாவை ஏற்றிய படகு புறப்பட்டது. ஆர்.பி.யீ. போராளிகள் உட்பட கிட்டத்தட்ட 30 பேர் அதில் பயணம் செய்தனர். புறப்பட்டுச் சற்று நேரத்திலேயே, "இப்ப படகு எதுக்கு நேரே போகுது?" "இப்ப வெற்றிலைக்கேணி தாண்டிற்றம்" "கரையிலிருந்து எவ்வளவு உயரத்தில போய்க்கொண்டிருக்கிறம்?" "இரண்டு கடல்மைல் உயரத்தில போறம். இப்ப மருதங்கேணிக்கு நேரே போறம். அடுத்தது தாழையடி." இப்படியே படகினுள் கலகலப்பான உரையாடல் நடந்துகொண்டிருக்க, நடுக்கடலில் கடும் எதிர்ப்பு உண்டானது. தூரத்தே இருந்து தாக்கியபடியே வந்த கடற்படைப் படகு எமது படகை அண்மித்தது. மேலால் சீறிப் பறந்தன சன்னங்கள். 'சடார்' என்ற ஓசையுடன் கையில் பட்ட காயத்தின் வேகத்தில் படகுக்கு வெளியே தலை தொங்கக் கிடந்தார் கப்டன் தண்ணிலா. அவரை வேகமாக இழுத்தெடுக்கவும், "ஒரு எஞ்சின் பழுதாய்ப்போட்டுது. இனி வேகமாய்ப் போக ஏலாது. கெதியாய் அறிவியுங்கோ" படகோட்டிய போராளி சொன்னார். அந்த சன்னம் இயந்திரத்தின் பணியையும் தடைசெய்திருந்தது. 'இனி முடிஞ்சுதா கதை. நேவிக்காரன் துரத்தி துரத்தி அடிக்கப்போறான்' என நினைத்துக்கொண்டு எமது ஆயுதங்களைத் தயார்ப்படுத்தவும், கடற்படைப் படகைநோக்கித் தாக்கியபடி கடற்புலிப் படகு ஒன்று முன்னேறியது. பிறகு இரண்டையுமே காணவில்லைப் போலிருந்தது. சிறிது நேரத்தில் எம்மிலிருந்து அதிக தூரத்தில் இரு படகுகளுக்குமிடையே சண்டை நடந்தது. அதேநேரம் இன்னுமொரு தாக்குதலணிப் படகு வந்து எமது படகைக்கட்டி இழுத்துக்கொண்டு விரைந்தது. தொடர்ந்து கடற்படையினர் வருவதும், சண்டைப் படகுகள் மறிப்பதுமாக ஒரு விளையாட்டுப்போன்று கடற் பயணம் நடந்துகொண்டிருந்தது. திடீரெனக் கடற்படைப் படகு ஒன்று அருகில் வருவது போன்று இருந்தது. பின்னர் ஒன்றையும் காணவில்லை. இருள்நேரத்தில் நுரைத்து எழும் அலைகளை அண்டிய பகுதி கடும் இருட்டாகத் தெரிய, அது எமது கண்களுக்குப் படகுபோலத் தெரிந்தது போலும். மனம் நிம்மதி அடைந்தது. இப்போது குடாரப்பை அண்மித்துக் கொண்டிருந்தோம். தூரத்தே பெரும் கடற்சமர் நடந்துகொண்டிருக்க, எமது படகு கரையை நோக்கித் திரும்பியது. இடையில் காற்றுப் படகுகள் நிற்க, அதற்குள் தாவினோம். சில நிமிடங்களிலேயே கரையில் இறங்கியதும் எங்காவது கீழே இருக்கவேண்டும்போல் இருந்தது. ஆகக் கூடுதலாக மயக்கமுற்றவர்கள் மண்வெட்டிகளை வைத்துவிட்டு அதன்மேல் சாய்ந்தார்கள். கும் கும் என அருகில் உள்ள தென்னந்தோப்பினுள் வீழ்ந்த எறிகணைகள் எம்மை அங்கு இருக்கவிடவில்லை. கரையில் நின்ற கேணல் பால்ராஜ் ஏற்கனவே நகர்ந்த அணியுடன் தொலைத்தொடர்புக் கருவியில் கதைத்தபடி நின்றார், தரையிறங்கிய கேணல் விதுசாவுடன் அப்போதைய நிலைமைபற்றிக் கதைத்துவிட்டு, அவர் இத்தாவில்நோக்கி நகரத்தொடங்க, எமது அணிகள் நாகர்கோயில் பகுதியை நோக்கியதான வெளிப்பாதுகாப்புக்கு நகர்த்தப்பட்டன. அவர்களுடன் ஒரு ஆண் போராளி புவிசார் நிலைகாண் முறைமையுடன் நிலையமைக்கப்படும் இடங்களைப் பதிவுசெய்தபடியே நகர்ந்தார். "தரையிறக்க நடவடிக்கையின் போது எங்களுடைய .50 கலிபர்கள் இரண்டையும் மாலதி படையணியுடன் விடும்படி தலைவர் அவர்கள் சொல்லிவிட்டார். பெருங்கடற் பரப்பருகே மாலதி படையணி நிற்கப் போவதால் அவர்களுக்கு அவை தேவை என்று அவர் குறிப்பிட்டார். எனவே தரையிறங்க முன்பே .50 கலிபர்களை அவர்களோடு விட்டுவிட்டோம்" என்று அந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றார் கேணல் துர்க்கா. கேணல் விதுசா வந்த படகு பழுதடைந்ததால் அதனைக் கட்டி இழுத்துவந்த படகு காயமடைந்த போராளியுடன் திரும்பிப் போய்க்கொண்டிருந்தது. தாக்குதலணிகள் இன்னும் முழுமையாக வந்துசேராத நிலையில் கடற்சமர் பலமடையத் தொடங்கியிருந்தது. தாம் கடும் தாக்குதலுக்கு மத்தியில் வந்துகொண்டிருயப்பதாக கேணல் விதுசாவுக்கு அறிவித்தார் சாந்தகுமாரி. அறிவித்த அந்தக் கணத்திலயே நடுக்கடலில் படகு ஒன்று தீப்பற்றத்தொடங்கியது. "சேரா-01 மெயின், சேரா-01 மெயின்" அந்த தொடர்புக் கருவிக்குமே தொடர்பு கிடைக்கலை, எல்லோர் மனதிலும் இடி விழுந்தது. சாந்தகுமாரியுடன் ஒரு பிளாட்டுன். ஏற்க முடியுமா? கடல் நடுவில் கண்ணெதிரே எம் தோழிகளைச் சாவிழுங்கிய துயரத்தில் முழ்கிப்போனோம். எதுவும் செய்யமுடியாத நிலையில் சோகம் இதயத்தைப் பிழிந்து, கணப்பொழுதுக்குள் எல்லாமே முடிந்துவிட்டதான உணர்வு, அவர்களது பணியை யார் செய்வார்? ஒவ்வொருவருக்கும் ஆளை மிஞ்சிய பணிகளல்லவா காத்திருந்தன. எல்லாவற்றுக்கும் விடையாக சாந்தகுமாரியின் குரலைச் சுமந்துவந்தது காற்று. "மெயின் சேரா-01, எங்களுக்குப் பிரச்சனை இல்லை. முதல் அடிவேண்டின போட்தான் இப்ப எரியுது" விடயம் சங்கேத மொழியில் வந்துசேர்ந்தது. "அது விதுசாக்கா வந்த போட்தான்" எல்லோர் வாய்களும் உரத்துச் சொல்லிக்கொள்ள எல்லோரின் மனதுக்குள்ளும் கடவுள்கள் வந்துபோயினர். சற்று நேரத்தில் சாந்தகுமாரியின் அணி தரையிறங்க குதூகலம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. வேகமாக அவரவர் இடங்களுக்கு அணிகளை அனுப்பிய விதுசா, நாகர்கோயில் பக்க நிலைகளிலிருந்து 100 மீட்டரில் தனது கட்டளைப் பீடத்தை அமைத்தார். இதுவரை நேரமும் தரையிறங்கும் அணிகளுக்கான பாதுகாப்பில் ஈடுபட்ட தனுசாவின் அணி கொம்பனி மேலாளர் தர்சாவுடன் தொண்டைமானாறு நீரேரியை நோக்கி மணல் வீதியூடாக நகரத்தொடங்கியது. நாகர்கோயில் பகுதியிலிருந்து பருத்தித்துறை செல்லும் பழுதடைந்த தார் வீதியைக் கடந்து, ஆள் உயரப் புற்களை விலக்கியபடி நீருக்குள் கால் வைத்தனர். அடுத்து தரையிறங்கிய கீர்த்தியின் பிளாட்டூன், தரையிறங்கிக்கொண்டிருக்கும் ஏனைய அணிகளின் பாதுபாப்புக்காகக் கொம்பனியின் கட்டளை அதிகாரி லக்சனாவுடன் செம்பியன்பற்றுப் பகுதியில் தயாராக நிற்க, மற்றைய அணிகள் தத்தமது திசைகளைநோக்கி நகரத்தொடங்கின. அது இருள் கலையாத நேரம். மக்களின் குடியிருப்புக்கள் எங்கே என்று தெரியாதநிலையில் எமக்கு வாய்ப்பான இடங்களிலே வேகவேகமாக நிலை அமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. பொழுது புலர்ந்தால் சண்டை தொடங்கும் என்பது நிச்சயம். அதனால் அமைதியாகப் பணிகள் அரங்கேறின. மெல்லிய குளிர் காற்று மேனியை வருட, மண்வெட்டி மண்ணில் ஆழமாக இறங்கியது. சிறிய வாளியும் கையில் நாலைந்து குவளைகளுமாக சிவப்பு உடையணிந்த ஒரு சிறிய உருவம் திடீரென அங்கே தோன்றியது. எல்லோர் விழிகளும் அங்கேயே நிலைத்தன. பற்றைகளை விலக்கியபடி எம்மைநோக்கி வந்து கொண்டிருந்தது ஓர் அன்னை. எனினும் எங்கள் இராணுவ உணர்வு எச்சரிக்கை செய்தது. அப்பாலே உற்றுப் பார்த்தோம். எதையுமே காணவில்லை. புன்னகையுடன் வந்த அன்னை தேநீரைக் குவளைகளில் ஊற்றி எம்மிடம் நீட்டினார். வீட்டில் விடியற்காலை குளிருக்குள் படிப்பதற்காக எம்மை எழுப்பிவிட்டபின்னர், சுடச் சுடத் தேநீரைத் தயாரித்துத் தரும் எங்கள் அம்மாவின் பரிவும் கனிவும் அவர் பார்வையில் இருந்தது. வீட்டிலே 'நன்றாகப் படிக்கவேண்டும்' என்பதற்காக அம்மா தேநீரைத் தந்தார். இந்த அம்மா, நன்றாகச் சண்டை பிடிக்கவேண்டும் என்பதற்காக இந்தத் தேநீரைத் தந்திருப்பாரா? எதுவாக இருந்தாலும் ஐதீகக் கதைகளில் வருகின்ற அமுதம்கூட அந்த அன்னையின் தேநீருக்கு ஈடாகாது என்பதுமட்டும் உண்மை. தேநீரை அருந்துகின்றபோது எல்லோர் விழிகளிலும் நீர் திரையிட்டது. சாந்தகுமாரியின் கொம்பனி மாமுனைக் கடற்கரை தொடக்கம் நீரேரிக்கரைவரை நிலையெடுத்திருந்தது. நேரம் ஏழரையைத் தாண்டியிருக்கும். மக்கள் நடமாடத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தத்தமது வேலைகளுக்காகப் புறப்பட்டவேளைதான் போராளிகள் அங்கு நிற்பதைப் புரிந்துகொண்டனர். வீதியால் விற்பனைக்குப் பாண் கொண்டுவந்த தந்தையொருவர் திகைத்துப்போனார். "எப்...ப பிள்ளையள் வந்தனீங்கள்?" ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் தடுமாறிக்கொண்டு நின்ற ஐயாவிடம் "விடியத்தான் ஐயா வந்தனாங்கள். நீங்கள் அங்கால போக ஏலாது. சண்டை தொடங்கப்போகுது. திரும்பிப் பாதுகாப்பான இடங்களுக்குப் போங்கோ" என்று சொல்ல 'நீங்கள் வந்ததே காணும் பிள்ளைகள்’ என்ற எண்ணப் பார்வையுடன் பெட்டியோடு பாணை இறக்கி எம்மிடம் தந்துவிட்டுப் போய்விட்டார். அள்ளி அள்ளி வெளியில் எறிந்தாலும், மீளவும் பள்ளத்தைநோக்கி வழிந்து விழுகின்ற மணலுடன் போட்டி போட்டு அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளில் இருந்தவாறு பகை இருக்கும் திசைநோக்கிச் சுடுகலன்களுக்கு ஏற்றவாறு நிலைகளைச் சரிபார்த்துக்கொண்டு இருந்தோம். ******