Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    8910
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    87993
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38771
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/17/22 in Posts

  1. பிரபாகரனின் வரலாறு..... பிரபாகரன் சிறுபராயத்தில் மிகவும் விளையாட்டுத்தனமானவராக இருந்தார். தனது மூத்த சகோதரிகளுடன் விளையாட்டாகச் சீண்டுவது அவருக்குப் பிடித்திருந்தது. தான் பார்த்த நகைச்சுவையான படங்களிலிருந்து சில காட்சிகளை நடித்துக் காட்டி தாயாரையும் சகோதரிகளையும் மகிழ்விப்பது அவருக்குப் பிடிக்கும். தான் பார்த்த சிவாஜி கணேசனின் பராசக்தி படத்திலிருந்து சில வசனங்களை பேசிக் காட்டி அவர் ஒருமுறை வீட்டில் நடித்தார். அதேபோல வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் சிவாஜிக்கும் வெள்ளைக்காரத் துரைக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையினையும் அவர் தனக்கே உரித்தான் பாணியில் பேசிக்காட்டி அனைவரையும் மகிழ்வித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தினைத் தழுவி வெளிவந்த பல திரைப்படங்களும், தமிழரின் பாரம்பரியத்தை எடுத்தியம்பிய படங்களையும் அவர் விரும்பிப் பார்த்தார். இவற்றின்மூலமே தமிழர்களும் சுதந்திரம் அடையவேண்டும் என்கிற அவாவும், தமிழ்மீதான பற்றும் தனக்குக் கிடைத்தன என்று அவர் கூறியிருக்கிறார். கட்டப்பொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகிய இருபடங்களும் அவரை வெகுவாகப் பாதித்திருந்தன. இவ்விரு படங்களும் அந்நியரின் அடக்குமுறைக்கெதிரான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினைக் கதையாகக் காண்பித்திருந்தன. இரண்டாவதாக, சிதம்பரனார் நடத்திய கப்பல் நிறுவனம் தொடர்பானது. இதில், அந்நிய ஆக்கிரமிப்பிற்கெதிரான கருவியாக தமிழரின் கப்பலோட்டும் திறன் காட்டப்பட்டிருந்தது, இதுவே பிற்காலத்தில் பிரபாகரனும் கடல்ப்பலத்தில் அதிக ஈடுபாடு செலுத்தக் காரணமாகியிருக்கலாம். இன்று புலிகளுக்கு பல கப்பல்கள் இருக்கின்றன. ராஜராஜ சோழன் படத்தின்மூலம் தமிழரின் கடற்பலம் குறித்த சரித்திரத்தை பிரபாகரன் அறிந்துகொண்டதனாலேயே தனது விடுதலை அமைப்பில் கடற்பிரிவு பலமானதாக இருக்கவேண்டும் என்று செயற்பட்டுவந்தார். தமிழரின் சரித்திரகாலப் பலம் மட்டுமல்லாமல், ஒளவையார் போன்ற படங்கள் மூலம் தமிழரின் இலக்கியத் தொன்மை பற்றியும் பிரபாகரன் அறிந்துவைத்திருந்தார். ஆங்கிலத் திரைப்படங்களில் அவருக்கு கிளின்ட் ஈஸ்ட்வூட் நடித்து வெளியான கெளபாய் திரைப்படங்கள் பிடித்திருந்தன. அவர் போர் தொடர்பான திரைப்படங்களைப் பெரிதும் விரும்பிப் பார்ப்பார். குறிப்பாக விடுதலைப் போராட்டம் ஒன்றுடன் தொடர்புடைய திரைப்படங்கள அவரை மிகவும் கவர்ந்திருந்தன. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றில் அலி எனும் பெண்போராளி உடலில் கட்டிய குண்டுடன் பிரஞ்சு ராணுவ முகாம் ஒன்றிற்குள் பாய்ந்து அதனை அழிப்பதுபோன்று படமாக்கப்பட்டிருந்தது. இக்காட்சி அவரை உற்சாகப்படுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான பல திரைப்படத் தொகுப்புகள் அவரிடம் இருந்தன. தமிழ் நாவல்களின் பொற்காலம் என்று கருதப்படும் 60 களிலும் 70 களிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் ஆகிய தமிழ்நாட்டின் வார சஞ்சிகைகள் தமிழ் சரித்திர நாவல்களைத் தொடராக பிரசுரித்து வந்திருந்தன. சிறுவயதிலிருந்தே நாவல்களைப் படிக்கும் ஆர்வம் கொண்டிருந்த பிரபாகரன் இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்ட தொடர்களை விரும்பிப் படித்து வந்தார். கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அகிலனின் கடல்ப்புறா, கெளசல்யனின் பாமினி பாவைகள், கலியப் பெருமாளின் கல்லுக்குள் ஈரம், ராஜாஜியின் மஹாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகிய நாவல்களை அவர் விரும்பிப் படித்தார். சோழர்களின் கடல்ப் பலத்தையும், அதனைப் பாவித்து அவர்கள் கம்போடியா தாய்லாந்து ஆகிய நாடுகளைக் கைப்பற்றி அரசாண்டதையும் கடல்ப்புறா காவியமாகக் கூறுகிறது. தமிழர்களின் கடற்பலம் சோழர் காலத்திலேயே உச்சத்தினைத் தொட்டிருந்தது. சோழர்கள் தமது பிரதான கட்டளைக் கப்பலுக்கு கடல்ப்புறா என்றே பெயரிட்டிருந்தனர். கல்லுக்குள் ஈரம் எனும் நாவல், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியின் அகிம்சை வழிமுறையிலிருந்து விலகி ஆயுத முறையில் செயற்பட்ட ஒரு குழுவினர் சென்னை ஜோர்ஜ் கோட்டையினைத் தாக்கியதை நாவலாக வரைந்திருந்தது. இவையிரண்டுமே பிரபாகரனின் சிந்தனையில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய செவ்வியில், தமிழரின் சரித்திரகால பேரரசுகளையும் அவர்களது பெருமையினையும் இந்த நாவல்களூடாகவே தான் அறிந்துகொண்டதாகக் கூறியிருந்தார். "எனது மக்கள் இன்று தாம் அகப்பட்டிருக்கும் அடிமைத்தளைகளிலிருந்து விடுதலையாகி , தன்மானத்துடனும், கெளரவத்துடனும், விடுவிக்கப்பட்ட தமது பூர்வீகத் தாயகத்தில் வாழவேண்டும் என்கிற அடங்காத ஆசை இந்த நாவல்களைப் படித்த போதே ஏற்பட்டது. மேலும், எம்மை அடிமைப்படுத்தியவர்களுக்கு எதிராக நாம் ஏன் ஆயுதம் தூக்கக் கூடாது எனும் கேள்வியினையும் இந்த நாவல்கள் எனக்குள் ஏற்படுத்தி விட்டிருந்தன" என்றும் அவர் கூறினார். அவர் மேலும் பேசும்போது, மகாபாரதம் , இராமாயணம் போன்ற நாவல்கள் வாழ்வில் தான் கடைப்பிடிக்கவேண்டிய நன்னெறிகளைக் கற்றுத்தந்ததாகக் கூறியிருந்தார். "பலனை எதிர்பாராது உனது கடமையினைச் செய் என்று பகவத் கீதை சொல்கிறது. இதனை மகாபாரதம் எனும் நாவலைப் படிக்கும்போது நான் உணர்ந்துகொண்டேன். இவ்வாறான மேன்மையான நாவல்களைப் படிக்கும்போது ஒரு மக்கள் கூட்டத்திற்காகத் தனது வாழ்வினை அர்ப்பணிக்கும் எவரும் தமது தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கத்தினை நான் உணர்ந்துகொண்டேன்" என்றும் அவர் கூறினார். மகாபாரத்தத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்துப் பலரும் பல கோணங்களின் தமது கருத்தினைக் கொண்டிருப்பார்கள். ஆனால், பிரபாகரனைப் பொறுத்தவரை கர்ணனின் பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. தியாகத்தின் வரைவிலக்கணமாகத் திகழ்ந்த கர்ண்னனின் பாத்திரம் அவருக்குப் பிடித்திருந்தது போலவே, பீமனின் அடக்கமும், சுயநலமற்ற குணமும் வருக்குப் பிடித்திருந்தன. "தனது உயிரையே கொடுக்க முன்வந்த கர்ணனின் தியாகம் எனக்குப் பிடித்திருந்தது" என்று அவர் கூறினார். ஒழுக்க சீலம் என்பது பிரபாகரனது தனிப்பட்ட வாழ்விலும், அவரால் கட்டியமைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலும் மிக முக்கியமானதாக இருந்தது. தன்னை ஒரு ஒழுக்கமான பாடசாலையின் அதிபராகப் பார்ப்பதாக அவர் ராமிடம் கூறியிருந்தார். "ஒரு பாடசாலையின் அதிபர் கட்டுக்கோப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவாராக இருந்தால், அவரிடம் கல்விகற்கும் பிள்ளைகளும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதோடு, வாழ்விலும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இதை நீங்கள் எங்கும் காணலாம். பல பாடசாலைகளின் மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அப்பாடசாலையின் ஆசிரியர்களும், அதிபரும் சிறந்த ஒழுக்கத்தினைக் கடைப்பிடிப்பதால் தான். அவ்வாறான அதிபர் ஒருவரிடம் கல்விகற்ற பல தலைமுறை மாணவர்கள் வாழ்வில் சிறந்துவிளங்குவதை நீங்கள் பார்க்கலாம். அதே கொள்கையினைத்தான் நாம் எமது இயக்கத்திற்குள்ளும் வளர்த்து வருகிறோம். அதனாலேயே ஒழுக்கம் தொடர்பாக மிகுந்த சிரத்தையெடுத்து வருகிறோம்" என்று அவர் ராமிடம் கூறினார். அதே செவ்வியில் பேசிய பிரபாகரன், தாம் ஒழுக்கத்தினைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதற்கு இரு பிரதான காரணங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார். "முதலாவதாக, புலிகளின் உறுப்பினர் ஒருவர் மக்களுக்காகவே போராட வந்தவர். அவ்வாறான ஒருவர் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஈடுபடுவாராக இருந்தால், அவர் மக்களின் எதிரியாக மாறிவிடுவார். இதனால் நமது போராட்டத்திற்கு மக்கள் தரும் ஆதரவு நாளடைவில் இல்லாமப் போய்விடும். இரண்டாவதாக, சமூகத்தில் ஆயுதங்களுடன் உலாவருபவர்களுக்கு அதீதமான பலமும் அதிகாரமும் கைகளுக்கு வந்துவிடுகிறது. ஆகவே, இவ்வாறான அதிகாரமும் பலமும் போராளிகளை தவிர்க்கமுடியாமல் சர்வாதிகாரிகளாக மாற்றிவிடக்கூடியன" என்று அவர் கூறினார் அவரது குடும்பம் ஆனந்த விகடன் , கல்கி ஆகிய சஞ்சிகைகளை வாங்கியபோது, அயலவர்கள் கலைமகள், குமுதம், கல்க்கண்டு ஆகியவற்றினை வாங்கியிருந்தனர். வீட்டில் செய்யும் வேலைகளுக்காக, சிறு உதவிகளுக்காக கைப்பணமாகத் தனக்குக் கிடைக்கும் சிறியதொகைப் பணத்தினைக் கொண்டு பிரபாகரன் காலைக்கதிர் எனும் மாதாந்த விஞ்ஞான வெளியீட்டையும், மஞ்சரி எனும் மாதாந்த செய்தித் தொகுப்பையும் வாங்கிப் படித்தார். ஊரின் ஓரத்தில் இருந்த சிறிய புத்தகசாலையில் இவற்றை அவர் வாங்கிவந்தார். இயல்பாக சிறுபராயத்திலிருந்து புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த பிரபாகரன், குறிப்பாக சரித்திர நாவல்களையும், சரித்திர நிகழ்வுகளையும், சரித்திர நாயகர்களின் சரிதைகளையும் பெரிதும் விரும்பிப் படித்தார். "புத்தகங்கள் மூலமே நெப்போலியன், அலெக்ஸாண்டர் ஆகியோரின் மகத்தான திறமைகளையும், வெற்றிகளையும் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. புத்தகங்கள் வாயிலாகவே இந்தியச் சுதந்திர போராட்ட வீரர்களான சுபாஸ் சந்திரபோஸ், பகத் சிங், பாலகெங்காதரா திலக் ஆகியோர் பற்றி அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாறான புத்தகங்கள் ஊடாகவே ஒரு புரட்சியாளானாக எனது வாழ்வினை அமைத்துக்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. எனது மனதினுள் உழன்றுகொண்டிருந்த அந்நியருக்கெதிரான விடுதலைப் போராட்டத்தினை வெளியே கொண்டுவந்து அதனை நனவாக்குவதில் இந்தியச் சுதந்திர போராட்ட வரலாறும், நாயகர்களும் பாரிய தாக்கத்தினைச் செய்திருக்கின்றனர்" என்றும் அவர் கூறினார்.
  2. பிரபாகரனின் வரலாறு..... தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்களை அவமானப்படுத்தவும் சிங்களக் காடையர்களை அரசு இறக்கியிருந்தது குறித்து பிரபாகரன் மிகுந்த விசனம் கொண்டிருந்தார். அதேவேளை இந்த திட்டமிட்ட தாக்குதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது, வெறுமனே அகிம்சை ரீதியில் போராடலாம் என்று சொல்லிவந்த தமிழ்த் தலைமைகள் மீதும் அவருக்கு பாரிய அதிருப்தி ஏற்பட்டு வந்தது. ஆனால், அவரது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வழி அவருக்கு அன்று தெரிந்திருக்கவில்லை. அவர் அப்போது சிறுவனாக இருந்தது மட்டுமல்லாமல் அவரது தந்தையார் மிகவும் கண்டிப்பானவராகவும் இருந்தார். தனது சிறுவர்பராய வாழ்வு குறித்து இந்து ராமிடம் பிரபாகரன் பின்வருமாறு பகிர்ந்துகொண்டார், "சிறுபராயம் முதலே மிகவும் கண்டிப்பான முறையிலேயே நான் வளர்க்கப்பட்டேன். வெளியாருடன் அதிகம் நான் பழகுவதற்கு வீட்டில் அனுமதி இருக்கவில்லை. பெண்பிள்ளைகளைக் கண்டால் இயல்பாகவே நான் கூச்சப்படுவேன். நேர்மையினையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பதென்பது வீட்டில் கட்டாயமாக இருந்தது. எனது தந்தையார் எமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். தனது பிள்ளைகள் ஒழுக்கத்தில் சிறந்து வளரவேண்டும் என்பதற்காக வெற்றிலை போடுவது கூடத் தவறென்று அவர் கருதிவந்தார். அவரிடமிருந்தே நான் பல நற்பண்புகளைக் கற்றுக்கொண்டேன். அவர் அரச உத்தியோகத்தில் இருந்தார். மாவட்ட காணி அதிகாரியாக பணிபுரிந்த அவர் நேர்மையாகத் தனது கடமையைச் செய்துவந்தார். அவர் வீதியால் நடந்துசெல்லும்போது வீதியில் முளைத்திருக்கும் சிறு புற்கூட பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருப்பார் என்று அயலவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவரது மகனான நான் இப்படி இருக்கிறேன்......எனது செயல்களை விமர்சிக்கும்போது கூட, இப்படியொரு தகப்பனுக்கு இப்படியொரு மகனா என்று வியந்து அவர் பேசியதையும் நான் கேட்டிருக்கிறேன். அவர் கண்டிப்பானவர்தான், இருந்தாலும் மிகவும் மென்மையான உள்ளத்தையும், மற்றையவர்களின் கருத்துக்களை செவிமடுத்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும் கொண்டிருந்தார். என்னை ஒழுக்கத்தில் கண்டிப்புடன் வளர்த்தபோதும்கூட, ஒருகட்டத்தில் என்னைத் தனது நண்பனாகவே நடத்திவந்தார். எனக்கு அவ்வப்போது அறிவுரைகளைக் கூறிவந்தாலும், என்னுடன் பல விடயங்கள் குறித்து அலசுவது அவருக்குப் பிடித்திருந்தது" என்று கூறினார். அவரது தாயாரும், மூத்த சகோதரிகளும் அவரைச் செல்லமாக "தம்பி" என்றே அழைத்து வந்தனர். 1994 இல் வெளிச்சம் சஞ்சிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தனது சிறுபராய வாழ்வு குறித்து பசுமையான நினைவுகளை மீட்டிருந்தார் பிரபாகரன். "வீட்டில் நான் அனைவரினதும் செல்லப்பிள்ளையாக, விரும்பப்பட்டவனாக இருந்தேன். எனக்காக பல கட்டுப்பாடுகள் வீட்டில் அவ்வப்போது தளர்த்தப்பட்டு வந்தன. அயலில் உள்ளவர்களே எனக்கு விளையாட்டுத் துணையாகிப் போனார்கள். எனது வீட்டிற்குள்ளும், எனது அயலவர்களின் வீட்டிற்குள்ளும் எனது உலகம் சுருங்கிப் போனது. தனிமையான அந்தச் சிறிய வீட்டிற்குள்ளேயே எனது சிறுபராயம் கழிந்தது" என்று அவர் கூறினார். பிரபாகரனின் வீட்டு அயலவர்கள் அவரது சிறுபராயம் தொடர்பாக மிகவும் பாசத்துடன் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அவர்களுக்காக அவர் ஓடியோடி வேலைகள் செய்து கொடுத்திருக்கிறார். தனது பேரனாரின் நினைவுதின அன்னதானச் சடங்குகளின்பொழுது பிரபாகரன் தானே முன்னின்று பல வேலைகளைச் செய்வது வழமை. அன்னதானத்திற்குச் சமூகமளிக்கமுடியாமற்போன அயலவர்களுக்கு பிரபாகரனே உணவுப் பொட்டலங்களிக் கொண்டுபோய் விநியோகித்துவருவார். அதேபோல வீட்டில் நடக்கும் விசேட நிகழ்வுகளின்போது தாயார் பார்வதியம்மாள் சமைக்கும் சுவையான தின்பண்டங்களை மகிழ்வுடன் அயலவர்களுக்குக் பகிர்ந்துகொடுப்பது பிரபாகரனுக்கு அலாதி பிரியம். கோயிலில் நடக்கும் பூஜைகளின்பின்னர் தனது உறவுகளுக்கும், அயலவர்களுக்கும் பிரசாதத்தினைக் கொண்டுவந்துகொடுப்பதும் அவருக்குப் பிடித்தமான இன்னொரு விடயம். பிரபாகரனின் வரலாறு..... பிரபாகரனின் விருந்தோம்பல் வன்னிக் காட்டில் அவர் தனது தோழர்களுடன் ஒளிந்திருந்தபோதும் அவரை விட்டு விலகவில்லை. வன்னியில் அவரது வீட்டில் சமைக்கப்படும் விசேட உணவுவகைகள் அவரது நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். விடுதலை வேட்கை எனும் தான் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனின் வீட்டிலிருந்து தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட விசேட உணவுவைகைகள் குறித்து அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார். அவர் மேலும் அதுகுறித்து எழுதும்போது, பிரபாகரனுக்குக் கோழிக்கறி என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறுகிறார். தான் மரக்கறி வகைகளை மட்டுமே உண்டுவந்தபோதும், தனது கணவரான அன்டன் பாலசிங்கம் பிரபாகரனின் வீட்டுக் கோழிக்கறியை மிகவும் விரும்பிச் சாப்பிடுவார் என்று மேலும் அடேல் குறிப்பிட்டிருக்கிறார். மிகச்சிறந்த கெரில்லா ராணுவத்தின் தலைவராக பிரபாகரன் இருந்தபோதும், தனக்குப் பிடித்தமான மரக்கறி உணவுகளை அவர் விதம் விதமாக தயாரித்து அனுப்புவதில் ஆர்வம் கொண்டிருந்தார் என்று அடேல் தொடர்ந்து எழுதுகிறார். பிரபாகரனின் உறவினர்களும், அயலவர்களும் அவரது தாயார் மிகச் சிறந்த ஒரு சமையல்க் காரர் என்று கூறுகின்றனர். அவரிடமிருந்தே விதம் விதமாகச் சமைக்கும் கலையினை பிரபாகரன் கற்றிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். பார்வதியம்மாளும், வேலுப்பிள்ளையும் 2003 இல் தமிழ்நாட்டில் தாம் தங்கியிருந்த திருச்சி வீட்டிலிருந்து சுமார் 19 வருடங்களுக்குப் பின்னர் நாடு திரும்பியிருந்தனர். 2002 இல் வேலுப்பிள்ளை மாரடைப்பால் அவஸ்த்தைப்பட்டிருந்தார். ஆகவே அவரைப் பராமரித்துக்கொள்வதற்கு கனடாவிலிருந்து பிரபாகரனின் சகோதரி வினோதினியும் கணவர் ராஜேந்திரனும் வந்து அவர்களுடன் தங்கியிருந்தனர். சமைப்பதில் பிரபாகரனுக்கும் அவரது சகோதரி வினோதினிக்கும் இடையில் எப்போதுமே ஒரு போட்டியிருக்கும். ஆனால் மூத்த சகோதரி ஜெகதீஸ்வரியோ இப்போட்டியில் கலந்துகொள்வதில்லை. தனது தம்பி சமையலில் சிறந்தவன் என்று விட்டுக் கொடுத்து ஒதுங்குவதில் அவர் பெருமைப்பட்டுக்கொள்வார். என்னால் தம்பியுடன் ஒருபோதுமே போட்டி போட முடியாது, அவன் எப்போதுமே எனக்குச் செல்லத் தம்பிதான் என்று அவரது சகோதரன் மனோகரன் கூறுவார். பிரபாகரன் ஒரு உணவுப் பிரியர். அசைவ உணவுகளென்றால் அவருக்குப் பிடித்துப் போகும். அதிலும் கோழிக்கறி அவருக்கு மிகவும் பிடித்தது. ஆனால், தற்போது அவருக்கு சீன உணவுவகைகளும் பிடிக்கிறதாம் என்று அடேல் கூறுகிறார். தனது போராளிகளுக்கு உணவைச் சிறந்த முறையில் தயாரிப்பதிலும், அதனை சுவைத்து உண்பதிலும் உள்ள நுணுக்கங்களை அவர் கற்றுத்தந்திருக்கிறார். அவரது போராளிகளில் ஒருவர் பிரபாகரனுடனான உணவுதொடர்பான சம்பாஷணை குறித்து விடுதலைப் புலிகள் சஞ்சிகையில் பின்வருமாறு எழுதுகிறார். "முல்லைத்தீவுக் காட்டிற்குள் நாம் முகாமிட்டிருந்த பகுதியை நெருங்கி இந்திய ராணுவம் முற்றுகை ஒன்றினைப் போட்டிருந்தது. உண்பதற்கு கெளப்பியைத் தவிர வேறு எதுவும் எம்மிடம் இருக்கவில்லை. நாம் கெளப்பியைத் திறந்த பானையில் வைத்து அவித்துக்கொண்டிருந்தோம். அடுப்பிலிருந்து பானையினை இறக்கும்போது, கை தவறி பானை சறுக்கிவிட, சிறிது கெளப்பி நிலத்தில் சிந்திவிட்டது". "நான் பயந்துவிட்டேன். யாராவது கண்டால், தண்டனையாக ஒருவாரம் முழுதும் சமைக்கும்படி ஆகிவிடும். ஆகவே நான் அவசர அவசரமாக மண்ணினால் சிந்தப்பட்ட கெளப்பியை மூடி மறைத்துவிட்டேன். ஆனால், தலைவர் அதனைப் பார்த்துவிட்டார். பிள்ளை என்று என்னை அழைத்த தலைவர், ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டார். அது எனது மதிய உணவுக்குப் போதுமானதே என்று கேட்டுக்கொண்டே நிலத்தில் சிந்தியதைப் பொறுக்கிக் கழுவத் தொடங்கினார். தனது கைகளிலிருந்த கெளப்பிய உண்டுகொண்டே, ஆறினாப் பிறகு மற்றவங்களுக்கும் கொடு என்று கூறிச் சென்றுவிட்டார். தலைவரைப் பொறுத்தவரை உணவு எப்போதுமே சுத்தமானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும், அத்துடன் எதுவுமே வீணாக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருப்பார்" என்று அவர் தனது அனுபவத்தைப் பகிர்கிறார்.
  3. அவரது கல்வி தானாகவே பல விடயங்களை அவர் கற்றறிந்து கொண்டாலும்கூட, அவர் மற்றையவர்களைப்போலவே பாடசாலைக் கல்வியினை முறைப்படி கற்றவர்தான். அவரது ஆரம்பக் கல்வி ஆலடிப் பள்ளிக்கூடம் என்றழைக்கப்படும் ஆலடி சிவகுரு வித்தியாலயத்திலே தொடங்கியது. அவர் தனது உயர்கல்வியினை வல்வை சிதம்பராக் கல்லூரியில்யில் பத்தாம் வகுப்பு வரைதொடர்ந்தார், ஆனாலும் இந்த வகுப்பில் நடக்கும் சாதாரணதரப் பொதுப்பரீட்சையில் அவர் பங்கெடுக்கவில்லை. பாடசாலையில் மிகவும் கலகலப்பாக இருந்த பிரபாகரன் பாணந்துறையில் சைவப் பூசகர் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக மிகுந்த வருத்தம் அடைந்திருந்ததாக அவரது பாடசாலை நண்பர்கள் நினைவுகூர்ந்தனர். தற்போது கொழும்பில் செல்வந்த வர்த்தகராக இருக்கும் பிரபாகரனின் பள்ளிக்கால நண்பர் ஒருவர் இச்சம்பவம் பற்றிக் கூறுகையில், "அதுபற்றிப் பேசும்போதெல்லாம் அவரது கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன்" என்று கூறுகிறார். வீட்டில் தனது தகப்பனாரோடு தான் பேசும் அரசியல் சார்ந்த விடயங்களை தனது பள்ளி நண்பர்களோடு பகிர்ந்துகொள்ள பிரபாகரன் தவறுவதில்லை. பாடசாலையிலிருந்து வீடு வரும்வழியில் அவருக்கென்று ஒரு பொழுதுபோக்கு இருந்தது. அதுதான் கவணில் கல்லுவைத்து இலக்கு நோக்கி எறிவது. மாம்பழங்களையும், விளாம்பழங்களையும் அவர் கவனால் சுட்டு வீழ்த்துவதில் கைதேர்ந்தவராக இருந்தார். தனது நண்பர்களிடம் கல்லொன்றை மேலே எறியச் சொல்லிவிட்டு அதனை கவனால் இலக்குவைத்து எறிந்து பழகுவார். அவ்வப்போது சில அணில்களும் அவரது கவனுக்கு இரையாகியிருக்கின்றன. வல்வை சிதம்பராக் கல்லூரியில் அவருக்குக் கல்விகற்பித்த பல ஆசிரியர்கள் அவர் பற்றிக் கூறும்போது அவர் வகுப்பில் சராசரி மாணவனாகவே கல்வியில் விளங்கியதாகக் கூறினார்கள். தான் கற்கும் புத்தகக் கல்வியினை விட அரசியலிலேயே அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதை தாம் அவதானித்ததாக அவர்கள் கூறுகிறார்கள். தனது மகனை கட்டிட பொறியியலாளனாக உருவாக்க நினைத்த வேலுப்பிள்ளைக்கு பிரபாகரனின் பாடசாலைக் கல்வியின் தரம் கவலையினை ஏற்படுத்தியிருந்தது. அதனால், அவரின் கல்வியறிவினை மேம்படுத்த வல்வை கல்வியியல் நிறுவனம் எனப்படும் தனியாருக்குச் சொந்தமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். 8 ஆம் வகுப்பில் கல்விகற்ற வந்த அவருக்கு அப்போது 14 வயது. அங்கேதான் பிரபாகரனுக்கு வேணுகோபால் எனும் ஆசிரியரின் சிநேகம் கிடைத்தது. சமஷ்ட்டிக் கட்சியின் இளைஞர் பிரிவின் அங்கத்தவராக இருந்த வேணுகோபால், பிரபாகரனுக்குத் தமிழ் சொல்லித் தந்தார். அடிக்கடி அரசியல் பேசும் வேணுகோபாலுக்கு ஒரு கவலை இருந்தது. அதுதான் சமஷ்ட்டிக் கட்சியினரின் அரச எதிர்ப்பு என்பது உயிர்ப்புடன் இல்லையென்பது. அக்காலத்தில் சமஷ்ட்டிக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவருடன் சேர்ந்து வேணுகோபால் சுயாட்சிக் கழகம் எனும் தீவிர சுயாட்சிக் கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார். இவர்களது தீவிர அரசியல் கண்ணோட்டத்தினால் சம்ஷ்ட்டிக் கட்சியிலிருந்து வேணுகோபாலும் அவரது நண்பரும் விலக்கப்பட்டிருந்தார்கள். தனது தமிழ் ஆசானான வேணுகோபால் தனது அரசியல் வாழ்வில் பெருமளவு தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்ததாக பிரபாகரன் ஒருமுறை கூறியிருந்தார். "ஆயுதப் போராட்டமே தமிழருக்கான ஒரே தீர்வு எனும் நம்பிக்கையினை என்னில் முதன்முதலில் ஏற்படுத்தியவர் எனது ஆசிரியர் வேணுகோபால் தான். எனது கிராமம் ஒவ்வொருநாளும் ராணுவ அழுத்தத்தினைச் சந்தித்து வந்தது. உலகின் பல நாடுகளிலும் சுதந்திரத்திற்காகப் போராடிவரும் மக்கள் கூட்டங்கள் பற்றி என்னுடன் பேசும் அவர், பாராளுமன்ற அரசியலினால் எதனையும் சாதிக்க முடியாது எனும் கருத்தினை தீவிரமாக முன்வைத்து வந்தார். 14 வயது நிரம்பிய எனக்கும் நாமும் எம்மை தயார்ப்படுத்திக்கொண்டு திருப்பித் தாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அத்துடன், தமிழர்களுக்கென்று தனியான நாடு நிச்சயம் எமக்கு வேண்டும் என்கிற உணர்வும் அப்போதிருந்து எனக்கு ஏற்பட்டிருந்தது". தனது தீர்மானத்தில் உறுதியான பிரபாகரன் தமிழர்கள் திருப்பித் தாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்று பிரபாகரன் கொண்டிருந்த கருத்தினை வேணுகோபால் ஆசிரியரின் பாராளுமன்ற அரசியலால் தமிழருக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்கிற கருத்து மேலும் உறுதிப்படுத்தியிருந்தது. 14 வயதே நிரம்பியிருந்த பிரபாகரன் எனும் அந்தச் சிறுவன் ஆயுதப் போராட்டத்திலும், தனிநாட்டிற்கான தேவையிலும் மேலும் மேலும் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார். திரு வேணுகோபால் இருவகையான கருத்தாடல்களை முன்வைத்தார். முதலாவது, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தனியான தேசம் ஒன்றிற்கு சொந்தக்காரர்கள். ஒரு தனியான தேசம் ஒன்றிற்கான சகல இலக்கணங்களையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். தனித்துவமான அடையாளம், தனித்துவமான மொழி, மதம், கலாசாரம், வரலாறு, பண்பாடு, தனியான பூர்வீகத் தாயகம் மற்றும் இவையெல்லாவற்றிற்கும் மேலாக தமது அடையாளத்தை எப்பாடு பட்டாவது காத்துக்கொள்ளவேண்டும் என்கிற அணையாத அவா ஆகியன தமிழர்கள் தமக்கான தேசம் ஒன்றிற்கு உரித்துடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக அவர் வாதிட்டார். தமது அடையாளத்தை எவ்விலை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே சரித்திர காலத்திலிருந்து அவர்களின் தாயகம் மீது நடத்தப்பட்ட பல சிங்களப் படையெடுப்புக்களை அவர்கள் தோற்கடித்து வந்ததுடன், அவற்றிற்கான முயற்சிகளையும் முளையிலேயே கிள்ளி எறிந்தும் வந்திருந்தனர். சில சமயங்களில் தெற்கிலிருந்து தமிழர் தாயகம் மீது மேற்கொள்ளப்பட்ட பல சிங்கள படையெடுப்புக்களை தோற்கடித்து தெற்குநோக்கியும் தமது தாயகத்தை சற்றே விரிவுபடுத்தியும் இருந்தனர். வேணுகோபால் முன்வைத்த இரண்டாவது கருதுகோள், பாராளுமன்ற அரசியலினை நம்பி அன்றைய தமிழ்த் தலைமை முன்னெடுத்துவரும் எந்த நடவடிக்கையும் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரப்போவதில்லை என்பதனால், தமிழருக்கு இருக்கும் ஒரே தெரிவு ஆயுதப் போராட்டமே என்பதுதான். தனது மாணவர்களிடையே பேசும்போது வேணுகோபால் ஒரு விடயத்தினை அடிக்கடி முன்வைத்து வந்தார். அதாவது, பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில், ஒற்றையாட்சிக் கோட்பாட்டினைப் பாவிப்பதன் மூலம் எண்ணிக்கையில் பெரும்பான்மயான இனம் தனது நிலையினை ஸ்த்திரப்படுத்தி ஏனைய சிறுபான்மையினங்களை அடக்கியாண்டு அடிமைப்படுத்தி விடும் என்றும், இதற்கு இலங்கையே சிறந்த உதாரணம் என்றும் கூறிவந்தார். தமிழரின் நிலங்களை பலாத்காரமாக வல்வளைத்து அவற்றில் தனது இனமக்களை குடியேற்றிய சிங்கள அரசுகள், அப்பகுதியின் தேர்தல் வாக்கு பலத்தைத் தமக்குச் சார்பானதாகவும் மாற்றிக்கொண்டனர். பாராளுமன்றத்தில் உள்வாங்கப்படும் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையினைத் திட்டமிட்டுக் குறைப்பதன்மூலம், அரசாட்சியில் தமிழரின் பங்களிப்பைக் குறைப்பதே இதன் நோக்கமாக இருந்தது. அத்துடன், சுமார் 10 லட்சம் மலையகத் தமிழரின் வாக்குரிமையினைப் பறித்ததன் மூலம் அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியதோடு, அரசியல் அநாதைகளாகவும் மாற்றிவிட்டிருந்தனர். இதற்கு மேலதிகமாக, சிங்களம் ஒன்றே ஆட்சி மொழி என்று சட்டம் கொண்டுவந்ததோடு, தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைச் சிதைத்து, அரச உத்தியோகஸ்த்தர்களாக வர விரும்பின் தமிழர்கள் கட்டாயம் சிங்கள மொழியினைக் கற்கவேண்டும் எனும் சட்டத்தையும் கொண்டுவந்தனர். எதிர்பார்த்ததைப்போலவே உத்தியோகபூர்வ மொழிச் சட்டம், வேலைவாய்ப்பில் பாரபட்சம் ஆகிய இனவாத நடவடிக்கைகளை தமிழர்கள் முழுமூச்சாக எதிர்த்தனர். தமிழரின் அகிம்சை ரீதியிலான போராட்டங்களை அரசு ஒருங்கமைக்கப்பட்ட சிங்களக் காடையர் கூட்டங்களைக் கொண்டும், அரச ராணுவத்தினரைப் பாவித்தும் ஆயுதமுனையில் மிகவும் மூர்க்கத்தனமாக அடக்கி வந்தது. தமிழர்களால் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட காலிமுகத்திடல் சத்தியாக் கிரக நடவடிக்கையினை அரச ஆதரவுபெற்ற சிங்களக் காடையர்களை அனுப்பி கலைத்தததுடன், தமிழர்கள் இனிமேல் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை, குறிப்பாக தலைநகர் கொழும்பில் செய்வதற்கான எண்ணங்களையும் முற்றாகவே அடித்து நொறுக்கியிருந்தது. அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் எந்தவொரு பிற்கால ஜனநாயக ஆர்ப்பாட்டமும் மிகவும் மூர்க்கத்தனமாக சிங்கள அரசுகளால் அடக்கப்படும் எனும் எச்சரிக்கையினையும் இந்த அராஜகம் மூலம் சிங்கள அரசு விடுத்திருந்தது. சமாதான முறையில் பொதுமக்கள் அரசியல் நோக்கத்திற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியாது எனும் பிரகடனத்தை 1961 ஆம் ஆண்டிலிருந்து மேலும் 5 வருடங்களுக்கு அப்போதைய அரசு நீடித்தது. இந்தச் சட்டம் தமிழரின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கும் கொண்டுவரப்பட்டதுடன், இந்தச் சட்டத்தை நிலைநாட்டவென பெருமளவு சிங்கள ராணுவமும் தமிழரின் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்படது. இதே வருடத்தில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் தனிச்சிங்களச் சட்டத்திற்கெதிராக அமைதிவழிப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார். தமிழர் தாயகத்தில் ஐந்து அரச கச்சேரிகளுக்கு தமிழ் அதிகாரிகள் சிங்கள மொழியில் தமது அலுவல்களைச் செய்வதற்குச் செல்வதனைத் தடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட செயலகங்களுக்கு முன்னால் தந்தை செல்வா தலைமையிலான சமஷ்ட்டிக் கட்சியினர் வாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அவசர காலச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திய சிங்கள அரசு, ஊரடங்கு உத்தரவினையும் பிரயோகித்தது. அவசர காலச் சட்டத்தின் அதிகாரங்களைப் பாவித்து இந்த அமைதிவழி ஆர்ப்பாட்டங்களை ராணுவத்தைக் கொண்டு மிகவும் கொடூரமாக அடக்கிய அரசு, பல தமிழ் அரசியல்த் தலைவர்களையும் சிறையில் அடைத்தது. 1961 ஆம் ஆண்டு திருகோண்மலையில் சத்தியாக் கிரகத்தில் ஈடுபடும் தந்தை செல்வா, தம்பையா ஏகாம்பரம், ராஜவரோதியம் ஆகியோர். பாராளுமன்றத்திற்கு வெளியேயான அமைதிவழி ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் உரிமை தமிழ் மக்களிடமிருந்து முற்றாகப் பறிக்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்றம் ஊடாக தமிழர்கள் தமக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற கனவும் சிங்களவர்களால் மிகவும் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்களால் இருவேறு சிங்கள அரச தலைவர்களின் சம்மதத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் அவர்களாலேயே கிழித்தெறியப்பட்டது. 1957 இல் செல்வாவுடன் பண்டாரநாயக்கா செய்துகொண்ட ஒப்பந்தம், தனது வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெளத்த துறவிகளுக்குப் பயந்து முற்றாகக் கைவிடப்பட்டது. இதன் அடையாளமாக பெளத்த துறவிகளின் முன்னிலையில் தான் செல்வாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலத்தை பண்டா சிறு சிறு துண்டுகளாகக் கிழித்தெறிந்து, பெளத்த துறவிகளுக்கான தனது விசுவாசத்தைக் காட்டிக்கொண்டார். அவ்வாறே, 1965 இல் செல்வாவுடன் டட்லி சேனநாயக்க செய்துகொண்ட ஒப்பந்தமும் கிழித்தெறியப்பட்டது. 3 வருடங்கள் ஆகியும் ஏன் ஒப்பந்தத்தில் நீங்கள் ஒத்துக்கொண்ட விடயங்களை இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என்று தந்தை செல்வா டட்லியிடம் கேட்டபோது, "பெளத்த துறவிகளின் எதிர்ப்பினை மீறி இந்த ஒப்பந்தத்தினை என்னால் நடைமுறைப்படுத்த முடியாது" என்று மிகச் சாதாரணமாக டட்லி கூறினார். பாராளுமன்ற ஆசனங்களை வைத்துக்கொண்டு சிங்கள அரசுகளை பதவியில் அமர்த்தியும், தேவைப்படின் பதவியிலிருந்து அகற்றியும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்று தந்தை செல்வா முன்னெடுத்த எந்தச் சதுரங்க ஆட்டமும் வெற்றியளிக்கவில்லை. 1960 இல் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்துகொண்ட செல்வா அவர்கள், டட்லியின் அரசை வீட்டிற்கு அனுப்புவதன் மூலம் சுதந்திரக் கட்சியின் தலைமையில் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுவிடலாம், அவர்களின் அவலங்களைத் தீர்த்துவிடலாம் என்று நம்பினார். ஆனால், ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சியின் புதிய பிரதமர் சிறிமா, ஒப்பந்தத்தில் கூறப்பட்ட எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார். அத்துடன் நின்றுவிடாமல், தனிச்சிங்களச் சட்டத்தை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்போவதாக சூளுரைத்தார். 1965 இல் கட்சி மாறிய தந்தை செல்வா, டட்லி சேனநாயக்க மீண்டும் ஆட்சியமைக்க உதவினார். ஆனால், மீண்டுமொருமுறை அவர் சிங்களத் தலைவர்களால் எம்மாற்றப்ப்ட்டுப் போனார். இந்த அரசியல் ரீதியான தமிழரின் நடவடிக்கைகளின் படு தோல்வியினை அடிக்கடி விமர்சித்து வந்த வேணுகோபால், பாராளுமன்ற அரசியலோ, அமைதிவழி ஆர்ப்பாட்டங்களோ தமிழரின் அவலங்களுக்கு ஒருபோதுமே தீர்வாக அமையப் போவதில்லை என்று தனது மாணவர்களிடம் கூறிவந்தார். "பாராளுமன்ற ஜனநாயகத்தின்மூலம் உலகின் எந்தவொரு இனச் சிக்கலும் இதுவரை கெளரவமாகத் தீர்த்து வைக்கப்படவில்லை. ஆயுதப் போராட்டங்களின் மூலமே இனப்பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது, பாராளுமன்றம் மூலமான அரசியல்ச் செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றிபெற்றிருக்கவில்லை" என்று கூறிவந்திருந்தார் வேணுகோபால்.
  4. இரண்டும் சூடானால் பிரச்சனை🤣
  5. உயரவாகு கனகா பாலன் ” நிலைக்கதவுப் பிள்ளையாருக்கு இந்தக் கண்ணியை வைத்து விடு “ சாமந்தியை நீட்டுகிறாள் அம்மா “லா.சா. ரா தி.ஜா கி.ரா வை வாசித்து நாளாகிவிட்டதாம்” பரணிலிருக்கும் புத்தகத்தை கீழிறக்கச் சொல்கிறார் அப்பா மாதமொரு முறை முகப்புக் காற்றாடித் துடைத்தெடுக்க பழுதடைந்த மின்பல்புகளை ஏணியின்றி எளிதில் பொருத்த அழுக்குப்பாசியடைந்த மொட்டைமாடி நீர்த்தொட்டியினுள் வெளுப்புக் காரமிட்டு தேய்த்துக் கழுவிவிடவும் தேடப்படுகிறேன் ஆயத்த உடை அளவு பொருந்தாமை பாதணிகளின் நீட்டுப் பத்தாமை முழங்கால் இடிக்கும் முன்னிருக்கையென ஒன்றிரெண்டு இம்சைகள் எனக்கு மட்டும்தான் உதவிக்கு நேர்ந்துவிட்டதுபோல் என் உயரவாகு எத்தனை தோதாயிருக்கிறது பிறருக்கு. https://solvanam.com/2022/12/11/உயரவாகு/ கவிதையில் பயன்படுத்திய படத்தில் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் பக்கத்தில் நிற்கும் உயரமான போராளி யார்?
  6. என்ஜினுக்கும், எஞ்சினியருக்கும்... என்ன வித்தியாசம்? 🤣
  7. மீண்டும் தொடர்வதற்கு நன்றி @ரஞ்சித். இந்தத் தொடரை ஆங்கிலத்தில் சங்கம் இணையத்தில் பல வருடங்களுக்கு முன்னர் படித்திருந்தேன். தமிழில் கட்டாயம் இருக்கவேண்டிய முக்கியமான ஆவணம்.
  8. பிரபாகரனின் வரலாறு .......... சுவற்றில் பல சைவக் கடவுள்களின் படங்களோடு ஒரு சில இந்தியர்களின் படங்களும் தொங்கும். நேருவும் காந்தியும் தவறாமல் அங்கே இருக்க சைவ சிந்தனையாளர் விவேகானந்தரின் படமும் வேலுப்பிள்ளையால் கொழுவப்பட்டிருந்தது. பிரபாகரனும் தனது பங்கிற்கு இருவரின் படங்களை அங்கே பதிவிட்டிருந்தார். அகிம்சை வழியை விடவும் ஆயுத ரீதியிலான எதிர்ப்பினால் மட்டுமே ஆங்கிலேய ஆதிக்கத்தினை இந்தியாவிலிருந்து விரட்ட முடியும் என்றும் நம்பிய சுபாஸ் சந்திரபோஸினதும் பகத் சிங்கினதும் படங்களே அவை. யாழ்ப்பாண அரசர் காலத்தில் வல்வெட்டித்துறை மிகவும் சுறுசுறுப்பானதும், பிரபல்யமானதுமான துறைமுகமாக இயங்கி வந்தது. ஆனால், போர்த்துக்கேய, ஒல்லாந்தர் காலத்தின் பின்னர் அத்துறைமுகத்தின் பயன்பாடும் முக்கியத்துவமும் குறைவடையத் தொடங்கியதுடன், பின்னர் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாகச் செயலிழந்துபோனது. ஆனாலும், கப்பலோட்டுவதுவதில் மிகவும் தீரர்களான வல்வெட்டித்துறையின் மைந்தர்கள் ஆங்கிலேயரின் அடக்குமுறையினையும் மீறி கப்பலோட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்ததனால் ஆங்கிலேயர்களால் "கடத்தல்க்காரர்கள்" என்று அழைக்கப்பட்டனர். இதனால் ஆங்கிலேயக் காவலர்களுடனும், பிற்காலத்தில் ஆட்சியில் அமர்ந்த சிங்களப் பேரினவாதிகளினால் இறக்கிவிடப்பட்ட காவல்த்துறை மற்றும் ராணுவத்தினருடனும் அவ்வப்போது வல்வெட்டித்துறையின் மைந்தர்கள் மோதவேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 10,000 பேர்கொண்ட வல்வெட்டித்துறைத் தமிழர்கள் மிகவும் நெருக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தார்கள். கடத்தல்க் காரர்களைத் தேடுகிறோம் என்கிற போர்வையில் சிங்கள காவல்த்துறையும் ராணுவமும் வல்வெட்டித்துறை மக்களை ஆரம்பத்திலிருந்தே துன்புறுத்தி வந்ததனால், அம்மக்கள் ராணுவத்தின்மீதும் காவல்த்துறை மீதும் கடுமையான அதிருப்தியைக் கொண்டிருந்தனர். வல்வெட்டித்துறையை கடத்தல்க்காரர்களின் சொர்க்கபுரி என்று சிலர் ஒரு காலத்தில் அழைத்ததுண்டு. சோசலிச இலங்கைக் குடியரசில் கிடைக்காத பல பொருட்கள் வல்வெட்டித்துறையில் தாராளமாகக் கிடைத்ததே இதற்குக் காரணம் என்றால் மிகையில்லை. கப்பலோட்டத்தில் மிகச் சிறந்து விளங்கிய வல்வையின் மைந்தர்கள் பல கடற்கொந்தளிப்புக்களை எதிர்கொண்டு மியன்மார், தாய்லாந்து, இந்தியா என்று பல நாடுகளுக்குச் சென்று பல பொருட்களைக் கொண்டுவந்து சேர்த்ததுடன், செல்வத்துடனும் விளங்கினர். தமது கடுமையான கடற்பயணங்களின்போது அவ்வப்போது கரையோரக் காவல்த்துஇறையுடன் சமர்புரியும் சந்தர்ப்பங்களும் அவர்களுக்கு அமைந்திருந்தன.
  9. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே.......! 😍
  10. நானும் எனது சந்ததிகளும் ஓரளவிற்கு இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து விட்டோம். எதிர்கால சந்ததியை நினைக்கும் போதுதான் கவலையாக உள்ளது. இணைப்பிற்கு நன்றி ராசவன்னியர் .
  11. உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பதற்கு, தமிழர்களில் ஒரு பிரதான பிரிவினரை இன்னொரு சட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் மூலம் தன்பக்கம் இழுத்துக்கொண்டார். அதுதான் இந்திய - பாக்கிஸ்த்தான் பிரஜைகளுக்கான பிரஜாவுரிமைச் சட்டம். இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொள்வதற்கான தகமைகள் குறித்து இச்சட்டம் விவரித்திருந்தது. ஜி ஜி பொன்னம்பலம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவராக இருந்த ஜி ஜி பொன்னம்பலம் அவர்களுக்கு தொழிற்துரை மற்றும் மீன்வள அமைச்சர் பதவி வழங்கப்பட்டதுடன் அவரும் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டார். அவருடன் சேர்ந்து இன்னும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணைந்துகொண்டனர். அரசுடன் இணைந்து புதிதாகக் கொண்டுவரப்பட்ட இந்திய - பாக்கிஸ்த்தானிய பிரஜைகளும், இலங்கையில் வதிபவர்களுக்குமான இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக இவர்கள் வக்களித்ததோடு, இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின்மூலம் தாம் இழந்த பிரஜாவுரிமையினை மீளவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இவர்கள் வாதாடினர். ஆனால், புதிய சட்டம் மிகக் கடுமையான நிபந்தனைகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. திருமணம் முடித்த ஒரு விண்ணப்பதாரி 1939 தை 1 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும், திருமணம் ஆகாத விண்ணப்பதாரியொருவர் 1936, தை 1 ஆம் திகதியிலிருந்து 10 வருடங்கள் தொடர்ச்சியாக இலங்கையில் வசித்திருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் கூறியது. அதுமட்டுமல்லாமல், இலங்கையில் வசிப்பதற்கு இவர்கள் தேவையானளவு பணத்தையோ வளங்களையோ கொண்டிருத்தல் அவசியம் என்றும் இது கூறியது. தொடர்ச்சியாக இலங்கையில் வதிதல் எனும் சொற்பதத்தின் மூலம், தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நாட்களுக்கு பயணம் செய்த இந்தியத் தமிழர்கள் இச்சட்டத்தின் மூலம் பிரஜாவுரிமையினை பெறமுடியாதவர்களாக ஆக்கப்பட்டனர். இச்சட்டத்தினையடுத்து மொத்த இந்தியத் தமிழச் சமூகமுமே, கிட்டத்தட்ட 975,000 தமிழர்கள் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இவர்கள் அனைவரையும் இந்தியா மீள அழைத்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை பிடிவாதம் பிடித்தது. ஆனால், இந்தியா இந்த வேண்டுகோளினை தொடர்ந்தும் உதாசீனம் செய்துகொண்டு வந்தது. பின்னர் இலங்கையின் பிரதமராக வந்த சிறிமா இந்தியாவின் பிரதமர்களான சாஸ்த்திரியுடன் 1964 இலும், இந்திரா காந்தியுடன் 1974 இலும் இரு வேறு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டதன் மூலம் 525,000 இந்தியத் தமிழர்களை இந்தியா மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். மீதமாக இருந்தவர்களில் சுமார் 300,000 இந்தியத் தமிழர்களுக்கு வேண்டாவெறுப்பாக இலங்கை பிரஜாவுரிமையினை வழங்கியது. இரண்டாவது ஒப்பந்தத்தின்படி மீதமாகவிருந்த 150,000 தமிழர்களை சரிசமமாக இலங்கையும் இந்தியாவும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் முடிவிற்கு நாடுகளும் இணங்கிக்கொண்டன. இந்தியா சுமார் 600,000 இந்தியத் தமிழர்கள் மீளவும் இந்தியாவுக்குத் திரும்ப விண்ணப்பிக்க முடியும் என்று அழைத்தபோதும்கூட, 504,000 இந்தியத் தமிழர்கள் மட்டுமே இந்த அழைப்பினை ஏற்று மீள இந்தியா திரும்ப விண்ணப்பித்தனர். ஆனால், 1983 ஆண்டு யூலைக் கலவரத்தினால் இந்தியா திரும்பும் நோக்கத்துடன் இருந்த 84,000 தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கையிலேயே வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையில் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ள முடியாமலும், இந்தியாவுக்கு மீளத் திரும்ப முடியாமலும் இலங்கையில் வசித்துவந்த இந்தியத் தமிழர்களுக்கான பிரஜாவுரிமையினைப் பெற்றுக்கொடுப்பதில் தொண்டைமான் வெற்றிகண்டார். இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கை என்றால் அது மிகையில்லை. இதன்மூலம் பிரஜாவுரிமைப் பிரச்சினை முடிவிற்கு கொண்டுவரப்பட்டதோடு, இந்தியத் தமிழர்களில் கிட்டத்தட்ட பாதியளவுக்கும் சற்று அதிமானவர்கள் இலங்கையின் பிரஜைகளாகும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் இன்று முக்கிய சக்தியாக மலையகத்தில் உருவெடுத்திருப்பதோடு தமது அடையாளத்தினைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான அரசியல்க் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நிலைக்கும் உயரும் வாய்ப்பிருக்கின்றது.
  12. அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தின் அடிப்படையே நான் இதுவரை எழுதிய மூன்று வாழ்க்கை வரலாறுகளினதும் கருப்பொருளாக இருந்தது. அதுவே நான் இன்று எழுதும் பிரபாகரன் எனும் ஆளுமையின் வாழ்க்கைச் சரித்திரனதும் மூலமாக இருக்கிறது. அத்துடன் தமிழர்கள் தமது தாயகத்தைக் காக்கத் தவறுவதும், தமது சனத்தொகையினை வளர்ப்பதில் தவறுவதும், தமது மொழியின் இருப்பினைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறுவதும், இன்னும் குறிப்பாகச் சொன்னால் தமது அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறுவதும் அவர்களின் இருப்பையே முற்றான ஆபத்தில் தள்ளிவிடும் என்பதையே இவ் வாழ்க்கைச் சரித்திரங்களின் மூலம் பதிவிட்டு வருகிறேன். மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு, நேர்த்தியாகச் செயற்படுத்தப்பட்டுவரும் முற்றான இனவழிப்பிற்குள் தமிழினம் இன்று உட்பட்டு வருகிறது. அரச ஆதரவுடன் நடந்துவரும் திட்டமிட்ட நிலக்கொள்ளைகள் மூலம் தமிழினம் தனக்குரிய தாயகத்தினை சிறிது சிறிதாக இழந்துவருகிறது. மலையகத் தமிழரின் வாக்குரிமைகளை மறுத்துவிட்டதன் மூலம் அவர்களின் சனத்தொகை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன் தனிச் சிங்களச் சட்டம் மூலம் அவர்களை கற்பதிலிருந்தும் தடுத்துவிட்டிருக்கிறது. இதற்கு மேலதிகமாக ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டினை தாரக மந்திரமாக வரைந்துகொண்டதன் மூலம் சிங்கள அரசுகள் அவர்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இறுதியாக, திட்டமிட்ட ரீதியில் அரசின் பின்புலத்துடன் அவர்கள் மேல் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டு வரும் வன்முறைகளின் மூலம் அவர்கள் உயிர்வாழ்தலுக்கான அடிப்படை உரிமையினைக் கூட இழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள இனவாதத்தின் கோட்டையென்று கருதப்படும் லேக்ஹவுஸ் பத்திரிக்கையில் நான் செய்தியாளராகக் கடைமையாற்றிய காலத்தில் இக்கதைபற்றி எழுத விரும்பியிருந்தேன். 1957 இல் நான் சாதாரண பத்திரிகையாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பதிப்பான தினகரனில் இணைந்துகொண்டதிலிருந்து 1997 இல் அந்நிறுவனத்தில் ஆங்கிலப் பதிப்பிற்கான மூத்த உப ஆசிரியராக பதவியிலிருந்து ஓய்வுபெறும்வரை எமது இனப்பிரச்சினை குறித்த பல முக்கிய நிகழ்வுகளை நான் பதிவுசெய்து வந்ததோடு, தமிழருக்கெதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த பல முக்கிய சிங்களத் தலைவர்களுடனும் எனக்கு நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்திருந்தது. செளமியமூர்த்தி தொண்டைமான் முதலாவது வாழ்க்கைச் சரித்திரம், நட்பிற்காக தொண்டைமானுக்காக எழுதப்பட்டது. மலையகத் தமிழர்களின் தலைவரான அவருக்கும் எனக்கும் சுமார் 41 வருடங்களாக நெருங்கிய நட்பு இருந்துவந்தது. 1988 கார்த்திகை மாதத்தில் தனது சரிதை பற்றி எழுதுமாறு அவர் என்னை அழைத்திருந்தார். அவர் விரும்பியவாறே அவரின் சரிதையும் என்னால் எழுதப்பட்டு அடுத்தவருடமே பிரசுரிக்கவும் பட்டது. சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் என்னை மீளவும் அழைத்த அவர், தனது சரிதைபற்றிய தகவல்களை மேலும் விரிவாக்கும்படி என்னிடம் கேட்டுக்கொள்ளவே, அவருக்காக அதனையும் நான் செய்தேன். அவர் இறப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னரே மேம்படுத்தலின் பிரதி வெளிவந்தது. பின்னர் இணையப் பத்திரிக்கையான ஏசியன் ட்ரிபியூனில் இச்சரித்திரம் ஒரு தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. தொண்டைமான் அவர்களின் சரிதையினை நான் எழுதியபோது, வேண்டுமென்றே இரு முக்கிய விடயங்களை எழுதுவதை நான் தவிர்த்திருந்தேன். தமிழர்களின் நல்வாழ்வில் அவர் கொண்டிருந்த அக்கறை தொடர்பாகவும், சிங்களவர்களால் தனது அரசியல் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சி எடுத்திருந்த சில நடவடிக்கைகள் தொடர்பாகவும் நான் எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன். முதலாவது சம்பவம் 1986 ஆம் ஆண்டு மார்கழி முதலாம் திகதி நடந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த டொலர் மற்றுன் கென்ட் பாம் எனப்படும் சிங்களக் குடியேற்றங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தியிருந்தார்கள். தாக்குதல் நடந்த அன்று கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அவரது கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அலுவலக உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் நான் நுழைந்தேன். "நீங்கள் செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைப்பார்து கேட்டார் தொண்டைமான். அவரது கேள்வியை நான் அவ்வளவாகச் சட்டை செய்யாதது போலக் காட்டிக்கொண்டிருக்க, அவரோ, "சிங்கள அரசு எல்லாவற்றிற்கு மேலானது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர்களை விடப் பலமானவர்களும் இருக்கிறார்கள். பிரபாகரன் அவர்களுக்கொரு பாடத்தினைப் புகட்டியிருக்கிறார்" என்று அவர் முடித்தார். இரு சிங்களக் குடியேற்றங்கள் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டு, பல சிங்களவர்கள் கொல்லப்பட்டிருந்தபோதும்கூட, இத்தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் தொண்டைமானுக்கு இருந்தன. 1979 ஆம் ஆண்டு, தொண்டைமான் அவர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்த பல்லாயிரக்கணக்கான மலையகத் தொழிலாளர்கள் மீது அரசும் குண்டர்களும் சேர்ந்து நடத்திய தாக்குதல்களில் அடித்து விரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மலையகத் தமிழர்களைக் குடியேற்றி மீள்வாழ்வளிப்பதற்காகவே கென்ட் மற்றும் டொலர் பாம் எனப்படும் விவசாயப் பண்ணைகளை தமிழ்த் தன்னார்வ அமைப்புக்கள் ஆரம்பித்து நடத்தி வந்தன. ஆனால், 1986 ஆம் ஆண்டு ராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடவடிக்கைகள் மூலம் அப்பகுதியில் வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அடித்து விரட்டிவிட்டு அப்பகுதிகளை தெற்கில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்குமான திறந்த வெளிச் சிறைச்சாலைகளாக அந்நாட்களில் காணி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சராகவிருந்த காமிணி திசாநாயக்கா மாற்றியிருந்தார். தனது மக்கள் தமது வாழிடங்களிலுருந்து விரட்டப்பட்டதற்கும், அவ்விடங்கள் ராணுவத்தினரின் உதவியுடன் சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டதற்கும் தனது கடுமையான கண்டனத்தினை தொண்டைமான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தபோதும்கூட, அவை எதுவுமே சிங்கள் அரசினால் கண்டுகொள்ளப்படவில்லை. ஆகவே, தன்னால் செய்ய முடியாது போனதை பிரபாகரன் செய்தது அவருக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்திருந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.