தளர்த்தப்பட்ட தடைகள்
அல்பிரெட் துரையப்பா கொல்லப்பட்டமை சிங்களவர்களிடையே அதிர்ச்சியினையும், ஆத்திரத்தினையும் ஒருங்கே ஏற்படுத்தியிருந்தது. மிதவாதத் தமிழ்த் தலைமைகளை கடுமையாக விமர்சித்த சிங்களவர்கள் இளைஞர்களின் வன்முறைகளுக்கு பின்னால் இருந்து தூண்டுவது அவர்களே என்று குற்றஞ்சாட்டினர். குற்றப் புலநாய்வுத் துறையிடமிருந்து அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய முன்னணியினரை, குறிப்பாக அமிர்தலிங்கத்தை இந்த வன்முறைகளுக்கு தூபம் போட்டவராகக் குற்றஞ்சாட்டியிருந்தது. இன்னொரு அறிக்கையின்படி, அமிர்தலிங்கமே இந்த வன்முறைக் கும்பல்களுக்கு பொறுப்பாக இருப்பதாகவும், இந்த ஆயுத அமைப்புக்களின் தலைவர்களை அமிர்தலிங்கம் அடிக்கடிச் சந்தித்துக் கலந்துரையாடி வருவதாகவும் கூறியிருந்தது.
ஆனால், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. தமிழ் இளைஞர் பேரவை நாட்களில், பிரபாகரன், குட்டிமணி, தங்கத்துரை, சிறிசபாரட்ணம், சத்தியசீலன், முத்துக்குமாரசாமி மற்றும் வரதராஜப்பெருமாள் ஆகியோர் அமிர்தலிங்கத்தை அடிக்கடி சந்தித்தே வந்திருந்தார்கள். அமிர்தலிங்கம் மீது அவர்களுக்கு ஈர்ப்பு இருந்தது. புரட்சி செய்ய விரும்பும் இளைஞர்களுடன் தொடர்பில் இருக்கும்படி தந்தை செல்வாவே அமிர்தலிங்கத்தைப் பணித்திருந்தார். அமிர்தலிங்கத்தின் மூலம் இளைஞர்களின் கொதிநிலையினைக் கட்டுக்குள் வைத்திருப்பது அல்லது அதற்கு தடுப்பொன்றினைப் போட்டுவைத்திருப்பதே செல்வாவின் நோக்கமாக இருந்தது. ஆனால், இதனைப் புரிந்துகொள்ளாத சிங்கள அரசியல்வாதிகளும், பத்திரிக்கையாளர்களும், பல இடதுசாரிச் சிந்தனையாளர்களும் அமிர்தலிங்கத்தைத் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்து வந்தது நாளடைவில் இந்த இளைஞர் அமைப்புக்கள் மீது அமிர்தலிங்கம் வைத்திருந்த பிடி தளர்ந்துபோகக் காரணமாகியது.
துரையப்பாவின் மரணம் சிறிமாவைப் பொறுத்தவரை மிகப்பெரும் அதிர்ச்சியினை அவருக்கு ஏற்படுத்தி விட்டிருந்தது. ஆகவே, தமிழ் ஆயுதக் குழுக்களுக்கெதிராக கடுமையான பொலீஸ் நடவடிக்கைகளை அவர் முடுக்கி விட்டார். துரையப்பாவின் மரணச்சடங்கின் முன்னர் கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டவேண்டும் என்ற கட்டளை பொலீஸாருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து பொலீஸாரின் கண்காணிப்பிலிருந்துவந்த பல தமிழ் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டு சிறியில் அடைக்கப்பட்டார்கள்.ஆடி 28 முதல் ஆவணி 4 வரையான ஒருவார காலப்பகுதியில் பின்வரும் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பாட்டர்கள்.
கே. சிவானந்தன், ஏ. மகேந்திரா, நமசிவாயம் ஆனந்தவிநாயகம், சோமசுந்தரம் சேனாதிராஜா, எம். சின்னையா குவேந்திரராஜா, ஏ. மயில்வாகனம் ராஜகுலசூரியர், ஆனந்தப் பூபதி பாலவடிவேற்கரசன், சிவராமலிங்கம் சூரியகுமார், தம்பித்துரை முத்துக்குமாரசாமி, ஆசீர்வாதம் தாசன், கே.சுந்தரம்பிள்ளை சபாரட்ணம், அண்ணாமலை வரதராஜா, எஸ். அப்பாத்துரை நித்தியானந்தன், சிதம்பரம் புஷ்ப்பராஜா, ராமலிங்கம் கலேந்திரன், பொன்னுத்துரை சற்குணலிங்கம், டி. ஜீவராஜா, குருகுலசிங்கம், எம். பாலரட்ணம், பி. வீரவாகு, கே. உதர்சன், கே. சிவஜெயம், தம்பிப்பிள்ளை சந்ததியார், அமிர்தலிங்கம் ஆனந்தகுமார், வைத்திலிங்கம் சிறிதரன் மற்றும் சிலரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்களுள் அடக்கம். ஆனால், இவர்களுள் எவருமே துரையப்பாவின் கொலைபற்றி அறிந்திருக்கவில்லை. இவர்கள் எவருக்குமே புதிய தமிழ்ப் புலிகள் அமைப்புப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும், இவர்கள் கைதுசெய்யப்பட்ட நிக்ழவினை, கொலையாளிகளைப் பிடித்துவிட்டோம் என்று சிங்கள பத்திரிக்கைகள் கொண்டாடின.
ஆனால், துரையப்பாவின் கொலையுடன் தொடர்புபட்டிருந்த ஒரு சிலர் ஆவணி மற்றும் புரட்டாதி மாதங்களின் இறுதிப்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். அதுகூட தமிழ் இளைஞர் பேரவையின் கீழ்மட்ட உறுப்பினர்களைத் தேடித்தேடி பொலீஸார் கைதுசெய்துவந்தபோதே நடைபெற்றது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சிலரின் பெயர் விபரங்கள் வருமாறு,
வி. சதாசிவம் சதானந்தசிவம், சோமு குலசிங்கம், செல்வரட்ணம் செல்வகுமார், ரட்ணபாலா, கொகா சந்திரன், ராஜேந்திரம் ஜெயராஜா, விஸ்வஜோதி ரட்ணம், பி. கலபதி, எஸ்.லோகனாதன், ஆறுமுகம் கிருபாகரன், ரஞ்சன், வாரித்தம்பி சிவராஜா, முத்துத்தம்பி வசந்தகுமார் மற்றும் மேரி அல்போன்ஸ் ஆகியோர்.
இவர்களுள், ஆறுமுகம் கிருபாகரன் ஆவணி 21 ஆம் திகதியும், கலபதி புரட்டாதி 19 இலும் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளை எதிர்நோக்கியபோது இவர்கள் தமக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாவற்றையும் பொலீஸாரிடம் கூறிவிட்டனர். இவர்கள் மூலமே புதிய தமிழ்ப் புலிகள் எனும் அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும், அவ்வமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றியும் வெளியுலகத்திற்குத் தெரியவேண்டி வந்தது.
பிரபாகரனால் தமக்கு வழங்கப்பட்டிருந்த கட்டளைகளான "உங்களின் வீடுகளில் உறங்கவேண்டாம், எப்போதுமே ஒரு ஆயுதத்தினை உங்களுடன் வைத்திருங்கள்" என்பனவற்றைக் கடைப்பிடிக்கத் தவறியமையே கிருபாகரனும் கலபதியும் பொலீஸாரிடம் அகப்படவேண்டிய நிலைமையினை ஏற்படுத்தியிருந்தது. அவர்களைத் தேடி பொலீஸார் வந்தபோது அவர்கள் தமது வீடுகளில் ஆயுதம் ஏதுமின்றி காணப்பட்டார்கள். ஆனால், இதற்கு அவர்களால் கூறப்பட்ட காரணம் இயக்கத்திடம் அன்று இருந்தது வெறும் இரண்டு கைத்துப்பாக்கிகளே என்றும், அதனாலேயே தம்மால் ஆயுதம் ஒன்றினை வைத்திருக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. இயக்கத்திலிருந்த இரு துப்பாகிகளில் ஒன்றினை பிரபாகரனும், மற்றையதை பற்குணராஜாவும் வைத்திருந்தனர். தன்னிடமிருந்த துருப்பிடித்த துப்பாக்கியின் மூலமே துரையப்பாவை பிரபாகரன் சுட்டிருந்தார். ஆனால், துப்பாக்கிகள் இல்லாவிட்டாலும்கூட கத்தி, மிளகாய்த்தூள் போன்றவற்றை தனது போராளிகள் எப்படிப் பயன்படுத்துவது என்று பிரபாகரன் அவர்களுக்குப் பயிற்சியளித்திருந்தார். குறைந்தது சமையலறைக் கத்தியையாவது உங்களுடன் வைத்திருங்கள் என்று தனது போராளிகளுக்கு அவர் சொல்லியிருந்தார்.
துரையப்பாவைச் சுட்டுவிட்டு அவரது காரில் நீர்வேலிவரை பயணித்த பிரபாகரனும் அவரது தோழர்களும், காரினை நீர்வேலியில் கைவிட்டு விட்டு ஒவ்வொரு திக்கில் சென்றார்கள். பிரபாகரன் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று அன்றிரவு அங்கு தான் தூங்கவிரும்புவதாகக் கேட்டார். அவரது நண்பருக்கோ துரையாப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதல் அப்போது தெரிந்திருக்கவில்லை. பிரபாகரன் கூட துரையப்பாவின் கொலைபற்றி நண்பரிடம் மூச்சுவிடவில்லை. தனது காற்சட்டையிலிருந்த கைத்துப்பாக்கியினை எடுத்து தலையணையின் கீழ்வைத்துக்கொண்டே அவர் உறங்கிப் போனார். காலையில் நண்பர் கண்விழித்துப் பார்க்கும்போது பிரபாகரன் எழுந்து போயிருந்தது தெரிந்தது. சிறிதுநேரத்தின் பின்னர் அப்பகுதியெங்கும் துரையப்பாவின் கொலைபற்றி மக்கள் பேசத் தொடங்கினர். அக்கொலை தமிழரின் அண்மைய சரித்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது அரசியற் கொலை என்பதுடன், அது இலங்கையின் வரலாற்றையும் புதிய பாதையில் பயணிக்கவைத்தது.
பிரபாகரனுக்கு தனது திட்டங்கள் பற்றியோ, நடவடிக்கைகள் பற்றியோ இரகசியம் பேணும் இயல்பு இருந்தது. அவைகுறித்து சிறிய தகவல்கள் கசிவதைக்கூட அவர் விரும்பவில்லை. மேலும், தனது பாதுகாப்புக் குறித்தும் அவர் மிகுந்த கவனம் எடுத்திருந்தார். துரையப்பாவின் கொலையினையடுத்து தனது மூன்று தோழர்களுக்கும் தெரிந்திருந்த தனது மறைவிடங்களுக்கு மீண்டும் போவதை அவர் தவிர்த்து வந்தார். தனது தோழர்கள் பொலீஸாரால் கைதுசெய்யப்படுமிடத்து, சித்திரவதைகளின்போது அவர்கள் தனது மறைவிடங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்று நம்பிய பிரபாகரன் அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தே வந்தார். சில நண்பர்கள் அவரை மீண்டும் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்லுமாறு வேண்டிக்கொண்டனர். ஆனால் அவர் அதற்கு விரும்பவில்லை. தப்பியோடுவதற்கான தருணம் இதுவல்ல என்று அவர் தனது தோழர்களிடம் கூறினார். யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து துரையப்பாவின் கொலையினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அரசியற் சூழ்நிலையினை தமக்குச் சாதகமாகப் பாவிக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறினார் பிரபாகரன்.