உறுதிசெய்யப்பட்ட மக்கள் ஆணை
வட்டுக்கோட்டைத் தீர்மானம்
பிரபாகரன் தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஸ்த்தாபித்து சரியாக 9 நாட்களின் பின்னர் தமிழர் ஐக்கிய முன்னணி தனது தேசிய மாநாட்டினை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை, பண்ணாகத்தில் நடத்தியது. 1975 ஆம் ஆண்டு, மாசி மாதம் 6 ஆம் திகதி காங்கேசந்துறை இடைத்தேர்தலில் தந்தை செல்வாவுக்கு மக்கள் வழங்கிய ஆணையான தமிழருக்கான தனிநாடு எனும் முடிவினை, தமிழர் ஐக்கிய முன்னணியினர் 1976 ஆம் ஆண்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் உறுதிப்படுத்தினர்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் பின்வருமாறு பிரகடணம் செய்திருந்தது,
"இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் உலகில் அனைத்து தேசங்களுக்கும் இருக்கும் உரிமையான சுயநிர்ணய உரிமையினைப் பாவித்து தமிழ் ஈழம் எனும் சோசலிச, மதச்சார்பற்ற, இறையாண்மையுள்ள, சுதந்திரமான தனிநாட்டினை உருவாக்குவோம்".
சுமார் 21 பந்திகளைக் கொண்ட நீண்ட தீர்மானத்தின்படி தமிழர்கள் தனிநாட்டிற்குத் தேவையான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதால் தனிநாட்டினை அமைப்பதற்கான உரிமையுடையவர்கள் என்று கூறியிருந்தது
1976 ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டை பண்ணாகத்தில் தனது வருடாந்த மாநாட்டினை நடத்திய தமிழர் ஐக்கிய முன்னணி இத்தால் பிரகடணம் செய்வது யாதெனில், இலங்கைத் தமிழராகிய நாம் எமது மேன்மையான மொழியினையும், மதங்களையும், கலாசாரத் தொன்மையினையும், சுதந்திரமான தேச வரலாற்றையும் கொண்டு நமக்கே உரித்தான பூர்வீகத் தாயகத்தில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகிறோம் என்றும், அந்நியரின் ஆயுதரீதியிலான ஆக்கிரமிப்பிற்கான காலம் வரைக்கும் நமது தாயகத்தில் நம்மை நாமே ஆண்டு வந்தோம் என்றும், எமது தேசம் சிங்கள தேசத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தேசம் என்றும் பிரகடணம் செய்வதோடு, 1972 ஆம் ஆண்டின் குடியரசு யாப்பின் மூலம் தமிழர்களாகிய எம்மை புதிய காலணித்துவம் ஆளும்வர்க்கமான சிங்களவர்கள் அடிமைப்படுத்த முயல்வதையும், தமது அதிகாரத்தினைப் பாவித்து தமிழ் தேசத்திற்கு உரித்தான தாயகப் பரப்பு, தமிழ் மொழி, பிரஜாவுரிமை, பொருளாதார வாழ்வு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு ஆகியவற்றில் தமிழரை வஞ்சித்து வருவதையும் இத்தால் முழு உலகிற்கும் கூறிக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும்
தந்தை செல்வா அவர்கள் தீர்மானத்தினை முன்மொழிய, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் உறுப்பினரான சிவசிதம்பரம் தீர்மானத்தினை வழிமொழிந்தார். மாநாட்டில் பேசிய செல்வா, பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழருக்கான நீதியான தீர்வினைப் பெற்றிட அயராது உழைத்தவன் என்கிற ரீதியில் தான் இத்தீர்மானத்தினை சமர்ப்பிக்கும் தகுதியைப் பெற்றிருப்பதாகக் கூறினார். அதேவேளை,
"நான் தோற்றுவிட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்ட்டி முறையிலான தீர்வின் அடிப்படையில் 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல அரசியல் தீர்வுகளை சிங்களத் தலைவர்களிடம் முன்வைத்து வந்திருக்கிறேன். ஆனால், அவை எல்லாவற்றையும் அவர்கள் நிராகரித்து விட்டார்கள். இரு ஒப்பந்தங்கள் ஊடாகவும், பல தொடர்ச்சியான ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் மூலமாகவும் அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படைகளை நான் இட முயன்றேன். அதுகூட தோல்வியில் முடிவடைந்துவிட்டது. நமக்கு முன்னால் இப்போது இருக்கும் ஒரே தெரிவு இலங்கையிலிருந்து பிரிந்துசென்று எமக்கான தனிநாட்டினை உருவாக்கிக்கொள்வது மட்டும்தான்" என்றும் அவர் கூறினார்
தந்தை செல்வா அவர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். இரு பிரதம மந்திரிகளுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் குறித்து அவர் பேசினார். முதலாவதாக S W R D பண்டாரநாயக்காவுடன் 1957 இல் ஒரு ஒப்பந்தத்தினை அவர் கைச்சாத்திட்டிருந்தார். தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கான முக்கியமான மூன்று விடயங்களை அது கொண்டிருந்தது. அவையாவன,
1. சிங்கள மொழிக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ மொழி அந்தஸ்த்தினைப் பாதிக்காத வண்ணம் தமிழ் மொழிக்கு தேசிய மொழி எனும் அந்தஸ்த்தினை வழங்குதல். வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு தமிழ் மொழியினைப் பாவிப்பது.
2. வடக்கிற்கு ஒரு பிராந்தியசபையும், கிழக்கிற்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பிராந்தியசபைகளையும் உருவாக்குவது. மாகாண எல்லைகளுக்கு அப்பாற்சென்று இந்த பிராந்தியங்களை ஒன்றிணைப்பது.
3. குடியேற்றத்திட்டங்களை பிராந்திய சபைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது. இக்குடியேற்றங்களில் அமர்த்தப்படுவோர் மற்றும் இக்குடியேற்றத்திட்டங்களில் பணிக்கு அமர்த்தப்படுவோர் ஆகியவற்றை பிராந்திய சபைகளே தீர்மானிப்பது. என்பனவே அந்த மூன்று முக்கிய பகுதிகளாகும்.
பண்டாரநாயக்கா - செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தினை பெளத்த துறவிகளினதும், சிங்கள அரசியல்வாதிகளினது அழுத்தத்திற்கு அடிபணிந்த பண்டாரநாயக்க சில காலத்திலேயே கிழித்தெறிந்துவிட்டார்.
இரண்டாவது ஒப்பந்தம் சேனநாயக்க - செல்வா ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. செல்வா அவர்கள் டட்லியுடன் 1965 ஆம் ஆண்டு இதனைக் கைச்சாத்திட்டார். பண்டாரநாயக்காவுடனான ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களே இந்த ஒப்பந்தத்தினதும் அடிப்படையாக அமைந்திருந்தன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தந்தை செல்வா அவர்கள் இரு விடயங்களை வெளிப்படையாகக் கூறியிருந்தார். அதாவது, தமிழ் மொழியினை வடக்குக் கிழக்கில் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிப்பதனை சிங்களவர்கள் விரும்பியிருக்கவில்லை. மேலும் குடியேற்றத்திட்டங்களில் குடியேற்றப்படுபவர்கள் தொடர்பான நடைமுறையும் அவர்களைப்பொறுத்தவரை பிரச்சினையாகப் பார்க்கப்பட்டது.
டட்லியுடனான செல்வாவின் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
1. வடக்குக் கிழக்கில் தமிழ் மொழியே நிர்வாகத்திற்கும், ஆவணப் பதிவிற்கும் பாவிக்கப்படும். அத்துடன் நீதிமன்றச் செயற்பாடுகளும் தமிழ் மொழியில் இடம்பெறுவதோடு, நீதிமன்ற செயற்பாடுகளின் ஆவணங்களும் தமிழில் பதியப்படும்.
2. வடக்குக் கிழக்கு மாகாணங்களில் குடியேற்றப்படும் மக்கள் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் குடியமர்த்தப்படுவார்கள்,
அ) முதலாவதாக, அந்த மாவட்டங்களில் காணியற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
ஆ) அடுத்தபடியாக அம்மாவட்டத்தில் வதியும் தமிழ் பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இ) மூன்றாவதாக, இலங்கையில் வாழும் ஏனைய மக்களுக்கு, குறிப்பாக இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு இக்காணிகள் வழங்கப்படும்.
S J V செல்வனாயகம்
வட்டுக்கோட்டை மாநாட்டில் தந்தை செல்வா பேசும்போது, பண்டாவுடனான அவரது ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விடயங்களை எதிர்கட்சியை ஆட்சியில் அமர்த்தியாவது பெற்றுக்கொள்ள முடியும் என்கிற எதிர்பார்ப்பில் அவர்களுடன் ஒத்துழைத்துப் பணியாற்றுவது எனும் தனது கொள்கையும் தவறானது என்று அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். 1960 இல் டட்லியின் ஐக்கிய தேசியக் கட்சியரசை தோற்கடித்து, சுதந்திரக் கட்சியை மீண்டும் பதவிக்குக் கொண்டுவருவதன் மூலம் மீண்டும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று செல்வா நினைத்தார். ஆனால், செல்வாவின் ஆதரவுடன் 1960 இல் ஆட்சிக்கு வந்த சுதந்திரக் கட்சி அவரை மீண்டுமொரு முறை ஏமாற்றியிருந்தது. அதுமட்டுமல்லாமல், சிங்கள இனவாதியாக தன்னை வெளிப்படுத்திய பண்டாரநாயக்கா, மிகக் கடுமையான தனிச் சிங்களச் சட்டத்தினையும் உருவாக்கினார். இதன் பிறகு 1965 இல், பண்டாரநாயக்காவின் அரசை பதவியிலிருந்து அகற்றி டட்லியை மீண்டும் பதவியில் அமர்த்துவதன் மூலம் டட்லியுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தலாம் என்று செல்வா நம்பியிருந்தபோதும், டட்லி மறுபடியும் அவரையும் தமிழ் மக்களையும் ஏமாற்றினார்.