கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல்த் தலைவர்கள்
மக்களைப் போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தும் முகமாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான அமிர்தலிங்கம், வி.என்.நவரட்ணம், கே.பி.ரட்ணம், கே.துரைரட்ணம் , எம்.சிவசிதம்பரம் ஆகியோர் வைகாசி 21 ஆம் திகதி யாழ்ப்பாண பேரூந்து நிலையத்தில் கூடி மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததோடு, மறுநாள் நடைபெறவிருந்த குடியரசு தின நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர். பன்னாலையிலிருந்த அவரது வீட்டிற்கு அமிர்தலிங்கத்தை அழைத்துச் சென்ற பொலீஸார் அவரது வீட்டைச் சோதனை செய்தனர்.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேசியப் பிரச்சினையாகக் காட்டிய பிரதமர் சிறிமாவும் அவரது அரசாங்கமும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தனிநாட்டினை உருவாக்க முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். வைகாசி 23 ஆம் திகது தம்புள்ளை மகாவித்தியாலயத்தில் சிங்களவர்களிடம் பேசிய சிறிமா சமஷ்ட்டிக் கட்சியினர் பல்லாண்டுகளாக தனிநாட்டிற்காகப் பிரச்சாரம் செய்துவருவதாகவும் நாட்டில் ஒற்றுமையின்மையினை ஏற்படுத்த முயன்றுவருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நாட்டின் குடியரசு யாப்பினைக் காக்கவும், நாட்டின் அமைதியினைக் காக்கவும் மிகக்கடுமையான நடவடிக்கைகளை தான் எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஜி ஜி பொன்னம்பலம்
தமிழரிடையே பிரிவினையினை உண்டாக்க நினைத்த அரசாங்கம், சிவசிதம்பரத்தை விடுதலை செய்ததுடன், ஏனைய தமிழ்த் தலைவர்களை உயர் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தியது. மேலும், தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு தலைவர்களையும் ஜூரிகளின் முன்னால் நிறுத்துவதைத் தவிர்த்து மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நிறுத்தி விசாரிக்கத் தீர்மானித்தது. இது, தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கான தமது ஆதரவினைக் காட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் குடியரசு யாப்பின் நியாயத்தன்மையினைக் கேள்விகேட்கும் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த நான்கு தமிழ் தலைவர்களுக்கு ஆதரவாக வாதாட ராணியின் ஆணை பெற்ற வழக்கறிஞர் ஜி ஜி பொன்னம்பலம் உட்பட 61 வழக்கறிஞர்கள் முன்வந்தார்கள்.
தமது பிரதான ஆட்சேபணையாக அவசரகாலச் சட்டத்தினை தவறானது என்று வாதாடிய வழக்கறிஞர்கள் குடியரசு யாப்பின் அடிப்படையில் நான்கு தலைவர்களும் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவது செல்லுபடியற்றது என்று வாதாடியதோடு, அவர்கள் நால்வர் மீதும் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவும் கூறினர்.
"சட்டத்திற்குப் புறம்பான குடியரசு யாப்பின் அடிப்படையில் இந்த வழக்கு பதியப்பட்டிருப்பதால் எனது கட்சிக்காரர்கள் எந்தவிதத்திலும் குற்றமற்றவர்கள் என்று கூறுகிறேன்" என்று வாதிட்டார் ஜி ஜி பொன்னம்பலம் .
அவசரகாலச் சட்டத்தினை குடியரசு யாப்பில் அரசு குறிப்பிட்ட விதத்தில் இருந்த தவறினைப் பயன்படுத்தியே பொன்னம்பலம் இந்த வழக்கு தவறானது என்று வாதிட்டார். வைகாசி 22 வரை அமுலில் இருந்த சோல்பரி யாப்பின்பிரகாரம் ஆளுநரே அவசரகால நிலையினைப் பிரகடனப்படுத்த முடியும். ஆனால், குடியரசு யாப்பின்படி பிரதமர் இதனைச் செய்ய முடியும் என்று இருந்தது. சோல்பரி யாப்பின் இறுதிநாளும், குடியரசு யாப்பின் ஆரம்பநாளும் ஒரே நாளான வைகாசி 22 ஆக குறிப்பிடப்பட்டிருந்தமையினால், இக்கைதுகள் செல்லுபடியற்றதாகிவிடும் என்று பொன்னம்பலம் மிகவும் திறமையாக வாதாடியிருந்தார். ஆகவே, அவசரகாலச் சட்டத்தினைப் பாவித்து வைகாசி 22 இற்கு முன்னர் கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படியவேண்டியவர்கள் என்கிற நிலை உருவாகியது.
இந்த விசாரணையின் இரண்டாவது ஆட்சேபணைப் பகுதியில் வாதாடிய திருச்செல்வம் குடியரசு யாப்பின்படி அமைக்கப்பட்ட இந்த நீதிமன்ற வழக்கு செல்லுப்படியற்றது என்று வாதாடினார். அவர் தனது வாதத்தினை இரு முனைகளூடாக முன்வைத்தார். முதலாவதாக சோல்பரி யாப்பு சிறு மாற்றங்களைச் செய்யவே அனுமதியளித்திருந்ததுடன், முற்றான யாப்பு மாற்றத்திற்கு ஆங்கீகாரம் வழங்கியிருக்கவில்லை என்று கூறினார். ஆனால், எதிர்த்து வழக்காடிய அரசு தரப்பு வழக்கறிஞர் சிவா பசுபதி, நடைமுறை அரசான ஐக்கிய முன்னணி மக்களிடமிருந்து யாப்பில் பெருமளவு மாற்றங்களைக் கொண்டுவரும் ஆணையினைப் பெற்றிருப்பதாக வாதாடினார். இதற்குப் பதிலளித்து வாதாடிய திருச்செல்வம், யாப்பினை மாற்றுவதென்பது கைதுசெய்யப்பட்ட தலைவர்களின் போராட்ட நோக்கங்களில் ஒன்றாக இருக்கவில்லை என்று கூறினார்.
திருச்செல்வம் முன்வைத்த இரண்டாவது வாதம் முக்கியமானது. அரசாங்கம் கூறுவதுபோல அரசியலமைப்பினை முற்றாக மாற்றுவதற்கு மக்களின் ஆணையினைப் பெற்றிருக்கிறது என்று எடுத்துக்கொண்டாலும்கூட, அது தனியே சிங்கள மக்களின் ஆணை மட்டுமே அன்றி, தமிழ் மக்களின் ஆணை அல்ல என்று அவர் கூறினார். மேலும் தமிழ்மக்கள் தனிநாட்டிற்கான தேவையினை உணரத் தொடங்கிவிட்டதாகவும் 1956 ஆம் ஆண்டிலிருந்து சமஷ்ட்டி முறையிலான தீர்வொன்றிற்காக அவர்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருவதாகவும் அவர் கூறினார்.
பொன்னம்பலம் முன்வைத்த முதலாவது வாதத்தினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் அவசரகாலச் சட்டம் வைகாசி 22 உடன் முடிவிற்கு வரவேண்டும் என்றும், கைதுசெய்யப்பட்ட அரசியல்த் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் கூறியது. இதே தீர்மானத்தில், குடியரசு யாப்பின் நியாயத்தன்மைபற்றிய கேள்விகளை அது நிராகரித்திருந்தது. நீதியற்ற குடியரசு யாப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றத்திற்கு அந்த யாப்பின் நியாயத்தன்மைபற்றி விசாரிக்கும் உரிமை இல்லை என்று அது கூறியது.
யாப்பினைக் கேள்விகேட்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என்று நழுவியதன் மூலம் தமிழர்களின் நலன்களைக் காக்கும் தேவையோ அல்லது அதிகாரமோ இலங்கையின் நீதித்துறைக்குக் கிடையாது என்பது அம்பலமாகியது. ஆனால், இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அரச தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்மூல இலங்கையின் சட்டத்துறை தொடர்பாக தமிழர்கள் தவறான கருத்தினைக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதனால், இத்தீர்ப்பு மாற்றப்படவேண்டும் என்று முறையிட்டிருந்தார். மேலும், அவசர காலச் சட்டத்தினைப் பயன்படுத்தி இலங்கையின் காவல்த்துறையும், இராணுவமும் வடக்கில் பல கிளர்ச்சியடக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதால், இத்தீர்ப்பின்மூலம் இச்செயற்பாடுகள் பாதிப்படையலாம் என்றும் வாதிட்டார். அதன்படி நீதியரசர் விக்டர் தென்னாக்கோன் தலைமையில் கூடிய ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உச்ச நீதிமன்றக் குழு, உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்து அரசுக்குச் சார்பாக தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கு மாசி 1977 ஆம் ஆண்டுவரை நடைபெற்று வந்தது. இதனால் விடுதலைப் போராட்டம்பற்றிய எண்ணத்தினையே தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் முற்றாக மறந்துவிட்டிருந்தனர். ஆனால், ஆயுத அமைப்புக்கள் போராட்டம் தொடர்பாக தொடர்ச்சியாகச் செயற்பட்ட வண்ணமே இருந்தனர். வட்டுக்கோட்டைத்தீர்மானம் தொடர்பாக அவர்கள் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தனர். போராட்டத்தை ஆரம்பிப்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். இதற்கான ஆயத்த வேலைகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். பணத்தினைச் சேர்த்தல், ஆயுதங்களைச் சேகரித்தல், போராளிகளைச் சேர்த்தல், பயிற்சியளித்தல் என்று பல முனைகளில் அவர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.
1976 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆயுத அமைப்புக்களைச் சேர்ந்த இளைஞர்களைத் தேடுவதை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். இளைஞர் அமைப்புக்களை அடியோடு அழித்துவிடுங்கள் என்று அமைச்சர் செல்லையா குமாரசூரியர் பொலீஸார் மீது அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்தார். வெள்ளவத்தையில் அமைந்திருந்த தனது வீட்டில் குமாரசூரியர், பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பத்மனாதன் ஆகியோருடன் பல ரகசிய திட்டமிடும் கூட்டங்களை நடத்தியிருந்தார். தமது நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதை ஆயுத அமைப்புக்களின் இளைஞர்கள் உணரத் தலைப்பட்டனர். பிரபாகரனும் தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றவேண்டியிருந்தது. ஆகவே, பொலீஸ் வலையமைப்பினை அழிக்கவேண்டிய தேவை இளைஞர்களுக்கு ஏற்பட்டது.
பிரபாகரன் எப்படியாவது ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்துவிட வேண்டும் என்று விரும்பியிருந்தார். அமிர்தலிங்கத்தையும், நவரட்ணத்தையும் அவர் தொடர்ச்சியாக சந்தித்து போராட்டத்தினை முன்னெடுக்கும்படி கேட்டுவந்தாலும்கூட, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போராட்டம் பற்றி உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார். ஆகவே, தனது அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஆயுதப் போராட்டத்திற்கு தயார்ப்படுத்தி வைத்திருந்தார். இதன் முதற்கட்டமாக இருவிடயங்களைச் செய்ய அவர் தீர்மானித்தார்.
முதலாவது பொலீஸ் அதிகாரிகள் பஸ்த்தியாம்பிள்ளை மற்றும் பதமனாதன் ஆகியோரால் பின்னப்பட்டிருக்கும் உளவாளிகளின் வலையினை அழிப்பது. இரண்டாவது, துரையப்பாவின் கொலையினை விசாரிக்கும் பொலீஸ் அதிகாரிகளைக் கொல்வது மற்றும் இளைஞர் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வரும் அதிகாரிகளைக் கொல்வது.
பொலீஸாருக்குத் தகவல் வழங்கும் உளவாளிகளையும், விசாரிக்கும் அதிகாரிகளையும் பற்றிய தகவல்களைச் சேகரிக்க தனது அமைப்பில் உளவுப் பிரிவொன்றை அவர் உருவாக்கினார். தனது போராளிகளுக்கான பயிற்சிகளின்போது உளவுத்தகவல்களைச் சேகரிக்கும் விதத்தினையும் அவர் கற்றுக்கொடுத்தார். புதிதாக இணையும் போராளிகள் தாக்குதல் அமைப்புக்களில் சேர்க்கப்படுமுன்னர் உளவுத்தலகவல்களைச் சேகரிப்பதில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
பொலீஸாருக்குத் தகவல் கொடுக்கும் உளவாளிகளில் பிரபாகரன் முதலாவதாகக் கொல்லத் தீர்மானித்தவரின் பெயர் என். நடராஜா. இவர் உரும்பிராய் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை நடாத்தி வந்ததுடன், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வந்தார். இவரை பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், போராளி சிவகுமாரன் பற்றிய தகவல்களை பொலீஸாருக்கு வழங்கியது இவரே. தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலவாது கொலை அதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. பிரபாகரன் தனது அமைப்பின் இரு உறுப்பினர்களை இந்த நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். நடராஜாவின் வீட்டிற்குச் சென்ற அந்த உறுப்பினர்கள் இருவரும் அவரை வெளியே வரும்படி அழைத்து அங்கேயே சுட்டுக் கொன்றனர்.
இந்த நடவடிக்கையே 1977 ஆம் ஆண்டில் தமிழ் மக்களை விடுதலை வேட்கை நோக்கி நகர்த்தியதுடன், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தமிழ் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு தமிழீழத்தை அமைப்பதற்கான ஆணையினை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கினர்.