றோயல் கல்லூரி, கொழும்பு
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான தனது சந்திப்பு ரகசியாமக இருக்கவேண்டும் என்று ஜெயவர்த்தனா விரும்பினார். ஆகவே கொழும்பு றோயல் கல்லூரிக்கு முன்னால் அமைந்திருந்த தனது தொடர்மாடி வீட்டிற்கு தோசை விருந்தொன்றிற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரையும், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் தொண்டைமான் அழைத்திருந்தார்.
ஜெயவர்த்தனா, எம் டி பண்டா மற்றும் எஸ்மொண்ட் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியையும், அமிர்தலிங்கம் , சிவசிதம்பரம் மற்றும் கதிரவேற்பிள்ளை ஆகியோர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினையும் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட்டால் சிறிமாவின் அரசாங்கத்தினை வீழ்த்த முடியும் என்று தொண்டைமான் கூறவும் அங்கிருந்த அனைவரும் அதனை ஆமோதித்தனர்.
"ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைக் காத்திட வேண்டும்" என்று ஜெயவர்த்தனா கூறினார்.
இதற்குப் பதிலளித்த கதிரவேற்பிள்ளை, "ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியிருக்கிறது, அதனைக் காப்பாற்றும் உங்களின் முயற்சிக்கு நாம் ஆதரவாய் இருப்போம்" என்று கூறினார்.
இதனால் மகிழ்ந்த ஜெயவர்த்தனா, "நாங்கள் இருவரும் ஒரே ஆவர்த்தனத்தில் பேசுகிறோம்" என்று கூறினார். பின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களைப்பார்த்து, "நான் பதவியேற்றதும் எந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார் ஜே ஆர். அப்போது தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்னவென்பதை இரு பகுதியினரும் ஆராய்ந்தார்கள். அதன்படி பின்வரும் பிரச்சினைகள் அவர்களால் அடையாளம் காணப்பட்டன.
தமிழ் மொழியின் பாவனை
தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியிருப்புக்களை நிறுத்துவது
வேலைவாய்ப்பு
பல்கலைக்கழக அனுமதி
இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமைப் பிரச்சினை
தந்தை செல்வா கைக்கொண்ட அணுகுமுறைக்கும் அமிர்தலிங்கம் கைக்கொண்ட அணுகுமுறைக்கும் இடையே பாரிய வேறுபாடு இருந்தது. செல்வா அவர்கள் 1957 இல் பண்டாரநாயக்காவுடன் பேசும்போதும், 1977 இல் சிறிமாவுடன் பேசும்போதும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வொன்றைப்பற்றியே அவர் பேசினார். தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்காது ஆனால், தமிழ்மக்கள் எதிர்கொண்டு நிற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளைப்பற்றி அவர் பேசினார். இதன்படி பண்டாரநாயக்காவுடன் சமஷ்ட்டி அலகு அடிப்படையிலான தீர்வு பற்றியும், சிறிமாவுடன் தனிநாட்டுக்கான அமைப்புப் பற்றியும் அவர் பேசியிருந்தார். ஆனால், அமிர்தலிங்கமோ தனிநாட்டிற்கான தேவை பற்றி ஒருபோதும் ஜெயவர்த்தனாவுடன் பேசியதில்லை, மாறாக பிரச்சினைகளைத் தீர்ப்பது பற்றி மட்டுமே அவர் பேசினார்.
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்
தொண்டைமானின் இல்லத்தில் அன்று நடந்த சம்பாஷணைகளில் ஒரேயொரு முறை மட்டுமே தனிநாடு எனும் பதம் பாவிக்கப்பட்டது. அதுகூட ஜெயவர்த்தனாவினாலேயே கூறப்பட்டது. அனைவரும் இந்திய கோப்பிப் பாணத்தை அருந்திவிட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அமிர்தலிங்கத்தைப் பார்த்து பின்வருமாறு கூறினார் ஜெயவர்த்தனா, " நீங்கள் தனிநாட்டிற்கான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எனக்குத் தேவையானதெல்லாம் நீங்கள் 15 ஆசனங்களை வெல்வது மட்டும் தான். அப்படி வென்றால் மட்டுமே என்னால் அரசாங்கம் ஒன்றினை அமைக்க முடியும்" என்று கூறினார்.
தனிநாட்டிற்கான தேவையினை அந்தச் சந்திப்பில் முன்வைப்பதில் அமிர்தலிங்கம் தோல்விகண்டிருந்தாலும் கூட, ஐக்கிய தேசியக் கட்சி தமிழருக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவைப்பதில் வெற்றி கண்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவை தமது 1977 ஆம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனங்களில் தமிழருக்குப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டிருந்ததுடன், அவற்றுக்குத் தீர்வு காணவேண்டிய அவசியம் பற்றியும் கூறியிருந்தன. தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை, அவர்கள் சிங்களவரைக் காட்டிலும் அதிக சலுகைகளை அனுபவிக்கிறார்கள், தாம் அனுபவிக்கும் சலுகைகளைத் தொடர்ச்சியாக தக்கவைக்கவே கூக்குரலிட்டு வருகிறார்கள் என்று உலகின் முன் பிரச்சாரம் செய்துவந்த சிங்களவர்களின் கடும்போக்கில் இது பாரிய திருப்பம் என்றால் அது மிகையில்லை.