பன்னிரண்டு
முதன் முதல் கீரிமலைக் கடற்கரைக்கு குளிப்பதற்கு என்று போனால் கடற்கரை முழுதும் பழுப்பு நிறமாக ஊத்தையாக இருக்க” உந்தக் கடலுக்கை சரியான கல்லு, நீங்கள் கேணீக்கை தான் குளிக்கவேண்டும் “ என்றார்எம்மைக் கவனித்துக்கொண்டு நின்ற ஒருவர். மகளும் நானும் சென்று கேணியைப் பார்த்தால் ஒரு நான்கு இளம் பெண்கள் விளையாடிக்கொண்டு இருக்கினம். அதற்குள் சென்று வடிவாக நீந்த முடியாது என்று தெரிந்துவிட காங்கேசன் துறைக்கே போகலாம் என்று முடிவெடுக்கிறோம். முன்னர் கீரிமலையில் ஒரு மடம் இருந்தது. நாம் சிறுவர்களாய் இருந்த நாட்தொட்டு வெளிநாடு வரும்வரை ஆண்டில் ஒரு தடவை கீரிமலைக்குப் போவோம். அந்த மடத்தில் நன்னீர் கிணறும் உண்டு. அங்கு சென்று குளித்து, மடத்தில் அசுவாசமாக இருந்து உண்டு குடித்து மகிழ்ந்து வருவோம். இப்ப அந்த மடம் இடிபாடுகளுடன் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எம்மூரைச் சேர்ந்த ஆறு திருமுருகன் என்பவர் பெரிய மண்டபம் ஒன்றும், வயோதிபர்களுக்காக மடம் ஒன்றும் வெளிநாட்டவர் போனால் கூடத் தங்குவதற்கு வசதியாக மண்டபத்துடன் கூடிய அறைகளும் கட்டியுள்ளார். மறு பக்கம் ஒரு சிறு கோவில். அதில் ஒரு இளம் ஐயர் நின்றுகொண்டு வாங்கோ, அரிச்சனை செய்துவிட்டுப் போங்கோ என்கிறார். நாம் போகவில்லை. நகுலேச்சுரம் என்று சொல்லப்படும் இலங்கையின் ஐந்து ஈச்சரங்களில் ஒன்றான அது புதுப்பிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகிறது. நாம் உள்ளே செல்ல யாரும் கோவிலின் உள்ளே இல்லை. மூலஸ்தானம் பூட்டப்பட்டு இருக்க நாம், சுற்றிக் கும்பிட்டுவிட்டு வெளியே வருகிறோம். அங்கிருந்து பஸ்சில் போவதற்காக பஸ்ராண்டுக்குப் போனால் அரை மணி செல்லும் பஸ் வெளிக்கிட என்கிறார் காத்திருந்த ஒருவர்.
கண்ணில் அம்மாச்சி உணவகம் பட அங்கு சென்றுவிட்டுச் செல்வோம் என்கிறேன். அந்தப் பகுதிகளிலோ அல்லது காங்கேசன் துறையிலோ அதுபோல உணவகம் இல்லாததால் மனிசன் ஓம் என்று சம்மதிக்கிறார். நாம் உள்ளே செல்ல கொஞ்ச சிங்களச் சனம் இருந்து உணவு உண்கிறது. நாம் வடைக்கும் தேனீருக்கும் ஓடர் கொடுத்துவிட்டு சென்று அமர்கிறோம். கிளிநொச்சி மற்றும் கோண்டாவிலில் இருக்கும் அம்மாச்சியில் நாம் தான் வாங்கிக்கொண்டு சென்று அமர வேண்டும். இது நன்றாக சுத்தமாக இருக்கு. சுத்தம் செய்வதற்கு என்று ஒரு பெண் முண் பகுதியில் நிற்கிறார். நாம் ஓடர் செய்தபோது வடை சுட்டுத் தருகிறோம். போய் இருங்கள் என்று சொன்னதனால் வந்து இருந்தோம்.
சிறிது நேரத்தில் ஒரு சுற்றுலாப் பயணிகளுடன் பஸ் வந்து நிற்க தப தப என எல்லோரும் உள்ளே வருகின்றனர். உள்ளே போதிய இடம் இல்லாததால் சிலர் திரும்பவும் பஸ்சுக்குள் போகின்றனர். பத்து நிமிடமாகியும் எமக்கு வடையோ தேநீரோ வரவில்லை. பிறகு வந்தவர்கள் சுற்றி நின்று ஓடர் செய்வதும் வாங்கிச் சென்று சென்று உண்பதுமாக இருக்க போய் கேளுங்கப்பா என்கிறேன். வரும் தானே பொறு என்று கூறிவிட்டு பார்த்துக்கொண்டிருக்க கடுப்பாகி நான் எழுந்து சென்று, தங்கச்சி வடையும் தேனீரும் கேட்டனாங்கள் இன்னும் வரேல்லை என்கிறேன். அந்தப் பெண் என்னை கவனிக்காததுபோல் நின்று அவர்களுக்கே கொடுத்துக்கொண்டு நிற்க, நான் திரும்பி வந்து எழும்புங்கோ போவம் என்கிறேன். கொஞ்சம் பொறுமையாய் இரன் என்று மனிசன் சொல்லி வெளியே நின்ற பெண்ணைப் பார்க்கிறார். அந்தப் பெண் நாம் வந்ததையும் இத்தனைநேரம் இருந்ததையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார். உடனே பொறுங்கோ நான் எடுத்துக்கொண்டு வாறன் என்று கூறி ஐந்து நிமிடத்தில் எமக்கு வடையும் தேனீரும் கொண்டுவந்து தர நான் நன்றி என்கிறேன்.
வடை கோபத்தில் கூட மிகச் சுவையாக இருக்கிறது. தேனீரும் தான். வேறு ஏதும் வேணுமா என்றும் கேட்க, மோதகமும் கடலை வடையும் உளுந்து வடையும் போண்டாவும் ஆறு ஆறு பார்சல் தர முடியுமா என்று கேட்க இருங்கோ கட்டிக்கொண்டு வாறன் என்று செல்லிவிட்டுச் செல்கிறார். ஒரு பத்து நிமிடங்களில் பார்சலையும் கையால் எழுதிய பில்லையும் கொண்டு வர நான் எழுந்து பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இந்தாங்கோ நீங்கள் வச்சுக்கொள்ளுங்கோ என்று ஆயிரம் ரூபாய்த் தாளைக் கொடுக்க வேண்டாம் என்று மறுக்கிறார். நான் அவர் மறுக்க மறுக்க அவர் பொக்கற்றில் வைத்துவிட்டு நீங்கள் செய்தது பெரிய உதவி என்றுவிட்டு வர, கெதியா ஓடிவா பஸ் வெளிக்கிடுதுபோல என்றபடி ஓடிச் சென்று மனிசன் மறிக்க நானும் மகளும் அவர் பின் ஏறுகிறோம். பஸ்சில் நான்குபேரே இருக்க நாம் முன்பக்கம் சென்று அமர்கிறோம். எங்கும் வெறிச்சோடி வீடுவாசல்கள் பெரிதாக இல்லாமல் இருக்கு.
காங்கேசன்துறை கடற்கரை முன்னர் 2017,19 களில் சென்றபோது நன்றாகச் சுத்தமாக இருந்தது. இப்ப சிறிது பொலிதீன், பெட்டிகள் என்று ஆங்காங்கே குப்பைகள் சேரத் தொடங்கிவிட்டன. வாரநாட்களில் சென்றால் ஆட்கள் நடமாட்டமே இன்றி இரண்டு மணிநேரம் தனியாகவே நாம் மட்டும் நீந்திவிட்டு வந்தோம். ஒரு சனிக்கிழமை சென்றால் எம்மவர்கள் குடும்பம் குடும்பமாக, நண்பர்கள் கூட்டம், ஆண்களும் பெண்களும் ஒருபுறம் திருவிழாவுக்கு வந்ததுபோல் அத்தனை சனம். சிலர் பட்டம்கூட விட்டுக்கொண்டு நின்றனர். அன்று ஆட்களைப் பார்ப்பதும் அவர்களின் கூத்துக்களைப் பார்ப்பதிலுமே நேரம் போய்விட்டது. ஆட்கள் சாய்ந்து இருப்பதற்கு வசதியாக பெரிதாக எதுவும் இல்லை. கடைகளும் நிறைய இல்லை. இருக்கும் இரு கடைகளும் சிங்களவர்களே வைத்திருக்கின்றனர் என்றார் ஒருவர். வெயில் மட்டும் சொல்லி முடியாது. மற்றப்படி நீந்துவதற்கு ஏற்ற கடற்கரை. அங்கு பயணிகள் விடுதிகூட இருக்கு.ராஜபக்க்ஷவின் என்று கேள்வி.
கசூரினா கடற்கரையில் கிழமை நாட்களில் பெரிதாக ஆட்கள் இல்லை. உள்ளே போனால் மட்டுமே நன்றாக நீந்தலாம். ஒரு ஐம்பது நூறு மீற்றர் வரை முழங்காலளவு தண்ணீர்தான். ஒருநாள் வான் பிடித்துக்கொண்டு இருபது பேர் போய் வந்தோம். வானுக்கு 10000 ரூபாய். உணவுகள் வீட்டிலிருந்தே செய்துகொண்டு போனோம். எனக்குக் கடையில் வாங்கும் உணவுகள் பிடிப்பதே இல்லை. அதனால் ஆட்டிறைச்சிக் கறி, சம்பல் சொதியுடன் இடியப்பமும் அவித்து பாணும் வாங்கிச் சென்றோம். முதல் நாள் நானும் மச்சாளும் பிள்ளைகளும் சேர்ந்து ரோள்ஸ் செய்ததில் கடினமாக இருக்கவில்லை. ஃபிரிஜ் இல் வைத்துவிட்டு கலை எழுந்து பொரித்து, ஆக யூஸ், மிக்சர், தண்ணீர் மட்டுமே வெளியில் வாங்கியது. திரும்ப வரும்போது எல்லாமே காலி. உறவுகளுடன் கூடி மகிழ்ந்து உண்டது என்பது எமக்கு மனதுக்கு அத்தனை மகிழ்வைத் தந்தது. இடையில் பண்ணாகத்தில் நிறுத்தி கடையில் ஐஸ்கிரீம், யூஸ் என வாங்கிக் குடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.