சாவகச்சேரி பொலீஸ் நிலையத் தாக்குதல்
சீலன்
இராணுவ புலநாய்வுத்துறையினரின் செயற்பாடுகளை ஜெயார் கடுமையாக விமர்சித்திருந்தபோதிலும், 1981 ஆம் ஆண்டிலிருந்து பிரிகேடியர் சிறில் ரணதுங்கவின் தலைமையின் கீழ் இயங்கிவந்த புலநாய்வுத்துறை திறமையாகவே செயற்பட்டு வந்தது. புலநாய்வுத்துறையினை சீரமைக்க கப்டன் முனசிங்கவை சிறில் ரணதுங்க யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்திருந்தார். கைதுசெய்யப்பட்டிருந்த மூத்த புளொட் உறுப்பினர்கள் மூலம் பெருமளவு தகவல்களை புலநாய்வுத்துறை பெற்றிருந்தது. தமக்குத் தகவல்களை வழங்கும் புளொட் உறுப்பினர்களுடன் மிகவும் சிநேகமாக சிறில் ரணதுங்க நடந்துகொண்டார். ஜெயவர்த்தன யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, மூன்று மூத்த புளொட் உறுப்பினர்களை யாழ் குருநகர் முகாமில் ராணுவம் தடுத்து வைத்திருந்தது. அவர்கள் மூவரும் அன்டன், அரங்கநாயகம், அரபாத் ஆகியோராகும். தாம் பங்கெடுத்த கொலைகள், கிளிநொச்சி மக்கள் வங்கி உட்பட வங்கிக்கொள்ளைகள் பற்றிய பல விபரங்களை இவர்கள் மூவரும் ராணுவத்திற்கு வழங்கியிருந்தனர். தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தின் பூஞ்செடிகளைப் பராமரிப்பதற்கு இவர்கள் மூவரையும் சிறில் ரணதுங்க பாவித்து வந்தார்.
ஐப்பசி 26 ஆம் திகதி, ரணதுங்கவின் பூந்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தருணம் இவர்கள் மதின்மேல் ஏறித் தப்பிச் சென்றிருந்தார்கள். ஆனால், அன்டனும் அரங்கநாயகமும் மூன்று மணிநேரத்தில் பொலீஸாரால் மீண்டும் கைதுசெய்யப்பட்டபோதும்
அரபாத் தப்பிச் சென்றுவிட்டார். அன்றிரவு குருநகர் முகாமில் ராணுவ உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றினை நடத்திவிட்டுக் காலை 5:30 மணியளவில் கலைந்து செல்லும் தறுவாயில் அவர்களுக்குச் செய்தியொன்று வந்திருந்தது. சாவகச்சேரி பொலீஸ் நிலையம் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அச்செய்தி கூறியது.
ஆகவே, அரபாத்தைக் கைதுசெய்யும் தமது எண்ணத்தை அப்போதைக்குத் தள்ளிவைத்துவிட்டு அனைவரும் சாவகச்சேரி நோக்கி விரைந்தார்கள். அவர்கள் அங்கு வந்து சேர்வதற்கிடையில், சீலன் தலைமையில் சாவகச்சேரி பொலீஸ் நிலையம் மீது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தாம் வந்த மினிபஸ்ஸிலேயே தப்பிச் சென்றுவிட்டது புலிகளின் தாக்குதல் அணி. இத்தாக்குதலை விசாரித்த பொலீஸாரும் ராணுவத்தினரும் இத்தாக்குதல் மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டு, வெறும் 15 நிமிடங்களிலேயே திறமையாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். கார்த்திகை 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த உத்தரதேவி ரயிலில் மீசாலையில் ஏறிக்கொண்ட அரபாத்தை பணிமுடிந்து வீடு செல்லும் ராணுவத்தினர் கைதுசெய்தனர். அன்டனும், அரங்கநாயகமும் 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலையின்போது சிறை அதிகாரிகளால் கொல்லப்பட்டனர்.
சாவகச்சேரி பொலீஸ் நிலையம் இரு மாடிகளைக் கொண்டது. சாவகச்சேரியூடாகச் செல்லும் பிரதான வீதியான கண்டி வீதியில் இப்பொலீஸ் நிலையம் அமைந்திருந்தது. 1981 ஆம் ஆண்டு ஆடி 27 ஆம் திகதி ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையம் புளொட் அமைப்பினரால் தாக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணத்திலிருந்த அனைத்து பொலீஸ் நிலையங்களுக்கும் இரவு பகலாகக் காவல் போடப்பட்டிருந்தது. ஐப்பசி 27 ஆம் திகதி இரவு இரு கொன்ஸ்டபிள்களான கருனநாதனும், கந்தையாவும் காவலுக்கு நின்றார்கள். அவர்கள் இருவரிடமும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளே இருந்தன.
ரிப்பீட்டர் ரக துப்பாக்கி
இத்தாக்குதலுக்கான திட்டத்தினை சீலன் மிகவும் திறமையாக வகுத்திருந்தார். இப்பொலீஸ் நிலையத்திற்கு இருமுறை சென்றிருந்த சீலன், பொலீஸ் நிலையத்தின் உள்ளமைப்பையும், கட்டிடங்களின் விபரங்களையும் அவதானித்திருந்தார். பொலீஸ் நிலையத்தில் பணிபுரிந்துவந்த சிவிலியன் ஒருவரின் ஊடாக ஆயுதங்களையும் தொலைத்தொடர்புக் கருவிகளையும் பாதுகாப்பாக வைக்கும் பகுதிபற்றிய விபரங்களையும் அவர் அறிந்துகொண்டார்.
சந்தோசமும் புலேந்திரனும்
"தாக்குதலுக்கான எமது இலக்கு நோக்கி நாம் செல்லுமுன், பொலீஸ் நிலையம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். எமது தாக்குதல் அணியை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்ட நாம், ஒவ்வொரு பிரிவுக்கும் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவரச் செய்துமுடித்தோம். எனக்கும் சங்கருக்கும் வழங்கப்பட்ட பணி பொலீஸார் தங்கியிருக்கும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதிக்குச் சென்று அங்கிருக்கும் பொலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்துவது" என்று இத்தாக்குதலில் பங்குகொண்டவரும் எனது ஊரான அரியாலையினைச் சொந்த இடமாகவும் கொண்டவருமான சந்தோசம் என்னிடம் கூறினார். அவரது தந்தையாரான கணபதிப்பிள்ளை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர்.
சீலனும் ரகுவும் இணைந்து ஒரு அணியை உருவாக்கினார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி, காவலுக்கு நிற்கும் பொலீஸார் மீது தாக்குதல் நடத்துவது, முதலாவது மாடியில் இருக்கும் தொலைத் தொடர்புக் கருவிகளை அழிப்பது பின்னர் பொலீஸாரின் உறங்கும் விடுதியில் இருக்கும் பொலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்துவது. சந்தோசமும் சங்கரும் பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் பொலீஸாரின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பஷீர் காக்கவுக்கும், மாத்தையாவுக்கும் கொடுக்கப்பட்ட பணி, பொலீஸ் நிலையத்தின் ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து அங்கிருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றுவது. புலேந்திரனுக்கும் அருணாவுக்கும் வழங்கப்பட்ட பணி, கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும், காயப்பட்ட போராளிகளையும் வாகனத்திற்குக் கொண்டுவருவது.
"நாங்கள் அனைவரும் நன்கு பராமரிக்கப்பட்ட இயந்திரம் ஒன்றைப்போல் ஒருங்கிணைந்து இயங்கினோம்" என்று சந்தோசம் கூறினார்.
29 சிறி 7309 எனும் இலக்கத் தகடுடைய மிட்சுபிஷி ரோசா மினி பஸ்ஸை அருணாவும் புலேந்திரனும் ஒழுங்குசெய்திருந்தார்கள். ஐப்பசி 25 ஆம் திகதி கோப்பாயில் வசித்துவந்த பஸ் ஓட்டுநரான தவராஜாவைச் சந்தித்துப் பேசிய அவர்கள், ஐப்பசி 27 ஆம் திகதி தில்லையம்பலம் கோயிலிக்குச் செல்வதற்காக பஸ் ஒன்று தேவைப்படுவதாகக் கூறியதுடன், முற்பணமாக 100 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு இருபாலையில் இருக்கும் வீடொன்றிற்கு தம்மை வந்து ஏற்றும்படியும் கூறிவிட்டுச் சென்றார்கள்.
தாக்குதல் நடைபெற்ற மறுநாள் இராணுவ புலநாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தவராஜா பேசும்போது, தன்னிடம் வந்து பஸ்ஸை ஒழுங்குசெய்தவர்கள் கூறியபடி இருபாலையில் இருந்த வீடொன்றிற்கு தானும் தனது உதவியாளர்களும் சென்றபோது, அங்கிருந்த இளைஞர்கள் தம்மை இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைத்துவைத்ததாகக் கூறினார். மேலும், அவர்களின் கண்களைக் கட்டிய புலிகள், அன்றிரவு கோப்பாய்ப் பகுதிக்கு அழைத்துச் சென்று வீதியில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார்.
சாவகச்சேரித் தாக்குதலுக்காக எட்டுப் புலிகள் பயணமானார்கள். சீலன், மாத்தையா, அருணா, சங்கர், புலேந்திரன், ரகு, சந்தோசம் மற்றும் பஷீர் காக்கா ஆகிய எண்மருமே அவர்களாவர். அவர்களிடம் ஒரு எஸ் எம் ஜி துப்பாக்கியும், ஒரு ஜி 3 துப்பாக்கியும், ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கியும், இரு சுழற்துப்பாக்கிகளும் சில கைய்யெறிகுண்டுகளும் மாத்திரமே இருந்தன.
எஸ் எம் ஜி துப்பாக்கி
ஜி 3 துப்பாக்கி
காலை 5:30 மணியளவில் அவர்கள் பயணம் செய்த மின்பஸ் சாவகச்சேரி பொலீஸ் நிலையப் பகுதியை அடைந்தது. பொலீஸ் நிலையத்தின் முன்னால் பஸ் வந்ததும், தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. பஸ்ஸிலிருந்து குதித்த சீலனும் ரகுவும் காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள்கள் மீது தாக்குதல் நடத்தினர். கருனநந்தன் அவ்விடத்திலேயே விழுந்து உயிர்விட்டார். ஆனால், சில மீட்டர்கள் பின்னால் ஓடிச்சென்ற கந்தையா, முழங்காலில் இருந்து தனது ரிப்பீட்டர் துப்பாக்கியால் புலிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார். ஆனால், அவரை முந்தி ஓடிச்சென்ற புலிகளின் உறுப்பினர் ஒருவர் அவர்பக்கம் திரும்பி அவரைச் சுட்டுக் கொன்றார்.
சீலனும், ரகுவும் பொலீஸ் நிலையத்தின் முதலாவது மாடிக்கு ஓடிச் சென்றார்கள். அங்கிருந்த தொலைத் தொடர்புக் கருவிகளை அவர்கள் அழித்தார்கள். பின்னர், மாடியில் இருந்த பொலீஸாரின் தூங்கும் அறைக்குச் சென்றார்கள். அவ்வேளை அங்கு 6 பொலீஸார் இருந்திருக்கிறார்கள். கட்டிலின் கீழே ஒளித்திருந்த பொலீஸ் சாரதி திலகரத்னமீது சீலன் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
தாக்குதல் ஆரம்பமானதையடுத்து மாடியிலிருந்து குதித்துத் தப்பிச்செல்ல கொன்ஸ்டபிள் ஜயதிலக்க முயன்றபோது, அவரது கால் முறிந்தது. இன்னொருவர் தனது கட்டிலின் கீழே ஒளிந்துகொண்டதால் புலிகளின் பார்வையிலிருந்து தப்பிவிட்டார். தன்னுடன் சுழற்துப்பாக்கியொன்றை வைத்திருந்த கொன்ஸ்டபிள் வீரக்கோன் கதவொன்றின் பின்னால் மறைந்து நிலையெடுத்துக்கொண்டு சீலனும் ரகுவும் மாடியில் இருந்து கீழிறங்கும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார். அவர்கள் இருவர் மீதும் சூடு வீழ்ந்தது. சீலனின் முழங்காலினூடாக சன்னம் பாய அவர் கீழே விழுந்தார். ரகுவின் வலது கையில் சன்னம் பட்டு எலும்பு முறிந்தது.
பொலீஸ் நிலையத்தின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட பொலீஸாரின் விடுதி நோக்கி ஓடிச்சென்ற சந்தோசமும், சங்கரும், ஆயுத அறையைக் காப்பற்ற பொலீஸார் வராது தடுத்தனர். ஆனால், அவர்கள் பொலீஸார் மீது தாக்குதல் நடத்தை எத்தனிக்கவில்லை. அங்கிருந்த பொலீஸார் தாக்குதல் ஆரம்பமானதையடுத்து அங்கேயே ஒளிந்துவிட்டார்கள். ஆயுதவறையினை உடைத்த மாத்தையாவும் பஷீர் காக்காவும் அங்கிருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டனர். சீலன் மீதும் ரகு மீதும் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்படுவதையும், அவர்கள் இருவரும் அலறுவதையும் கேட்ட அருணாவும் புலேந்திரனும் அவர்களுக்கு உதவுவதற்காக அவர்கள் நோக்கி ஓடிச் சென்றனர். கீழே வீழ்ந்திருந்த சீலனை அருணா மினிபஸ்ஸிற்குக் கொண்டுவர, மறைந்திருந்து வீரக்கோன் மீண்டும் தாக்க, புலேந்திரனின் தோற்பட்டையில் சூடுபட்டது.
காலைவேளையில் நடத்தப்பட்ட துணிகரமான இத்தாக்குதலில் மூன்று பொலீஸார் கொல்லப்பட்டனர். உடுவிலைச் சேர்ந்த கருனநாதன், மிருசுவில்லைச் சேர்ந்த கந்தையா, கேகாலையைச் சேர்ந்த திலகரத்ன ஆகியோரே அந்த மூவரும் ஆகும். மேலும் இத்தாக்குதலில் சார்ஜன்ட்கந்தையா, கொன்ஸ்டபிள் ஜயதிலக்க மற்றும் சிவில் பணியாளர் கந்தையா செல்வம் ஆகியோரும் காயப்பட்டனர். இவர்களுள் சிவில் பணியாளரான கந்தையா செல்வம் பின்னர் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டார்.
.303 ரைபிள்
0.38 சுழற்துப்பாக்கி
இத்தாக்குதலின்போது புலிகள் இரு உப இயந்திரத் துப்பாக்கிகளையும், ஒரு 0.38 சுழற்துப்பாக்கியையும், ஒன்பது 0.303 ரைபிள்களையும், 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகளையும் கைப்பற்றிச் சென்றனர். மொத்தத் தாக்குதலுமே 15 நிமிடத்தில் முடிக்கப்பட்டதோடு, புலிகள் தாம் வந்த மினி பஸ்ஸிலேயே மீசாலை நோக்கித் தப்பிச் சென்றனர். பின்னர், அந்த மினிபஸ் கைவிடப்பட்ட நிலையில் நவாலிப் பகுதியில் பொலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.