உமாவைக் கொல்வதில்லை என்று உறுதியளித்த பிரபாகரன்
அக்காலத்தில் மதுரையில் இயங்கிவந்த சுபாஷ் சந்திரபோஸ் சங்கத்தினர் தமது கூட்டமொன்றிற்கு நெடுமாறன் அவர்களையும் அழைத்திருந்தனர். சந்திரபோஸின் தீவிர அபிமானியாகவிருந்த பிரபாகரனும் நெடுமாறனுடன் இக்கூட்டத்திற்குச் சென்றிருந்தார். கூட்டத்தில் பேசிய பலரும் சுபாஸ் சந்திரபோசையும் அவரது இந்தியத் தேசிய ராணுவத்தையும் புகழ்ந்து பேசியபோது உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். இந்தியத் தேசிய ராணுவத்தின் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மண்டபத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ராணுவ வீரர்கள் அதிகாரிகளுக்குக் கொடுக்கும் ராணுவ வணக்கத்தினை ஒத்த சைகையைச் செய்தபோது பிரபாகரனும் உணர்வுபொங்க எழுந்துநின்றார். கூட்டம் முடிவுற்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் நெடுமாறனுடன் பேசிய பிரபாகரன், தன்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்துச் சென்றதற்காகக் அவருக்கு நன்றி கூறினார். மேலும், "சுபாஸ் சந்திரபோசிற்கு அவரின் வீரர்கள் விசுவாசத்துடன் அளித்த வணக்கத்தைப் போன்று, நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளின் ராணுவ அணிவகுப்பினைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றும் கூறினார்.
தனது ராணுவ வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடும் சுபாஸ் சந்திரபோஸ்
பிந்நாட்களில் பேசிய நெடுமாறன், அன்றைய சுபாஸ் சந்திரபோஸின் நிகழ்வு பிரபாகரனின் வாழ்வில் ஏற்பட்ட மிக முக்கியமான ஒரு திருப்பம் என்று கூறுகிறார். அன்றிலிருந்து புலிகள் இயக்கத்தை இரு ராணுவ வல்லமையாகக் கட்டியெழுப்ப வேண்டும் என்கிற தனது விருப்பத்தினை பிரபாகரன் செயற்படுத்தத் தொடங்கினார். புலிகளின் கொடியினை வடிவமைத்த பிரபாகரன் அவர்களுக்கான சீருடைகளையும் தானே வடிவமைத்தார். பரிசோதனைகள் மூலம் தான் அதுவரையில் பயன்படுத்தி வந்த புலிகளுக்கிடையிலான சங்கேத தொலைத்தொடர்பு முறையினை அவர் மேலும் மெருகூட்டினார். மேலும், தனது போராளிகளுக்கு தொலைத்தொடர்புக் கருவிகளான வோக்கி - டோக்கி களைப் பயன்படுத்தும் பயிற்சிகளையும் வழங்கவேண்டும் என்று தீர்மானித்தார்.
நவீன தொலைத் தொடர்புக் கருவியுடன் தியாக தீபம் - லெப்டினன்ட் கேணல் திலீபன்
தனது இயக்கத்திற்கான நவீன தொடர்பாடல் வலையமைப்பை உருவாக்கும் திட்டத்தினை பிரபாகரன் வகுத்தார்.
அக்காலத்தில் பிரபாகரன் எடுத்த தீர்மானங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது, டெலோ அமைப்பிலிருந்து பிரிந்து சென்று சுயமாக இயங்குவது எனும் தீர்மானமாகும். இதனை, தமிழ்நாட்டில் புலிகளுக்கான தனியான முகாம்களை அமைப்பதிலிருந்து ஆரம்பித்து வைத்தார். தமிழ்நாட்டின் சிறுமலை, பொள்ளாச்சி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் புலிகளுக்கான முகாம்கள் பிரபாகரனால் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களிலேயே புலிகளின் போராளிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உட்பட்ட கெரில்லா ராணுவம் ஒன்று கற்றுக்கொள்ளவேண்டிய அடிப்படை உபாயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்தப் பயிற்சிகளுக்காக ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய ராணுவ அதிகாரிகளை பிரபாகரன் பணிக்கு அமர்த்தினார். இம்முகாம்களுக்கு அடிக்கடி சென்றுவந்த பிரபாகரன் தனது போராளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பயிற்சிகளை மேற்பார்வை செய்து வந்ததோடு, தனது பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.
தனது போராளிகளை சுபாஸ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்திற்கு நிகரான ஒரு போராட்ட அமைப்பாக உருவாக்கும் வேலைகளில் பிரபாகரன் மும்முரமாக ஈடுபட்டு வந்தவேளையில், சென்னையில் தன்னை வந்து சந்திக்குமாறு அமிர்தலிங்கத்திடமிருந்து பிரபாகரனுக்கு அழைப்பொன்று வந்திருந்தது. சென்னையில் அமிர்தலிங்கம் தங்கியிருந்த விடுதியொன்றில் அவரைச் சந்தித்தார் பிரபாகரன். பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே நிலவிவந்த பிரச்சினையினைத் தீர்ப்பதே தனது சென்னை பயணத்தின் முக்கிய நோக்கம் என்று அமிர்தலிங்கம் பிரபாகரனிடம் கூறினார். ஆனால் , அமிர்தலிங்கம் பேசி முடிக்கும் முன்பே மிகக் கோபத்துடன் பேசிய பிரபாகரன் "அது எப்படிச் சாத்தியமாகும்? புலிகள் இயக்கத்தின் கொள்கையினை அவர் மீறிவிட்டார். அதற்கு மேலதிகமாக எனது ஆதரவாளர்களையும் அவர் கொன்றிருக்கிறார்" என்று கூறினார். அமிர்தலிங்கத்தின் மீது அவர் வைத்திருந்த மரியாதையின் நிமித்தம், பெருஞ்சித்திரனார் வீட்டில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொள்ள அவர் இணங்கினார்.
பெருஞ்சித்திரனார்
தனது போராளிகள் மீதும், ஆதரவாளர்கள் மீது பிரபாகரன் வைத்திருந்த பாசமும், அக்கறையும் ஆளமானது. மேலும், தனது போராளிகளையும் ஆதரவாளர்களையும் கொல்பவர்களை ஒருபோதும் அவர் மன்னித்ததில்லை. பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வாரத்தின் பின்னர், 27 வயது நிரம்பிய ப. இறைக்குமரன எனும் தமிழீழ விடுதலைச் செயற்ப்பாட்டாளர் அளவெட்டிப் பகுதியில் 7 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் சுடப்பட்டார். இறைக்குமரன் சுடப்பட்டதை நேரில் கண்ட அவரது நண்பரான 28 வயதுடைய த.உமாகுமரனும் அந்தக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அளவெட்டியின் வயற்பகுதி ஒன்றிலிருந்து இவ்விரு இளைஞர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.
விவசாய அதிகாரியாகப் பணியாற்றிவந்த இறைக்குமரன் தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி எனும் அமைப்பின் செயலாளராகக் கடமையாற்றி வந்தார். இதற்கு முன்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இளைஞர் பிரிவில் சேர்ந்து செயற்பட்டு வந்த அவர், 1976 இல் முன்னணிக்குச் சார்பான பத்திரிக்கையான இளைஞர் குரலின் ஆசிரியராகவும் செயலாற்றியிருந்தார். ஆனால், ஜெயாரின் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஏற்றுக்கொள்வதென்று அமிர்தலிங்கம் எடுத்த முடிவினால் அதிருப்தியடைந்த இறைக்குமரன், முன்னணியிலிருந்து விலகி தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக இயங்கத் தொடங்கினார். இறைக்குமரனினதும், உமாகுமரனினதும் கொலைகளுக்கு பழிவாங்கியே தீரவேண்டும் என்று எண்ணிய போதும் பிரபாகரன், உமாவைக் கொல்வதைத் தவிர்க்க விரும்பினார்.
தமிழ்நாட்டில் உமா மகேஸ்வரன் தங்கியிருந்த பெருஞ்சித்திரனாரின் வீட்டினைக் கண்காணிக்க சில போராளிகளை பிரபாகரன் நிறுத்தியிருந்தார். புலிகளின் போராளிகள் தனது வீட்டிற்கருகில் நடமாடித் திரிவதை அவதானித்த பெருஞ்சித்திரனார், சுமார் ஒன்றரை மாதங்களுக்கு உமாவை வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்று பணித்திருந்தார். உமாவின் பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்திருந்த பெருஞ்சித்திரனார் உமாவைக் கொல்லவேண்டாம் என்று பிரபாகரனிடம் கேட்கும்படி அமிர்தலிங்கத்தை வேண்டியிருந்தார்.
பெருஞ்சித்திரனாரின் வீட்டிற்கு தனது மெய்ப்பாதுகாவலர்கள் இருவருடன் பிரபாகரன் சென்றார். உமாவுடன் கைகொடுப்பதை அவர் தவிர்த்துவிட்டார். உமாவுடனான பிரச்சினையைத் தீர்க்குமாறு அமிர்தலிங்கம் பிரபாகரனைப் பார்த்து மன்றாட்டமாகக் கேட்டார். ஆனால், பிரபாகரன் தனது முடிவில் உறுதியாக நின்றார். எவர்மீதும் தனக்கு எந்த வெறுப்பும் இல்லையென்று பிரபாகரன் அங்கு கூறினார். இயக்கத்தின் கொள்கைகளை எவரும் மீறுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறினார். இக்கூட்டத்தில் எவரினதும் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறுவதை பிரபாகரன் முற்றாகத் தவிர்த்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், "உமாதான் இப்போது உங்களின் இயக்கத்தில் இல்லையே?" என்று பிரபாகரனைப் பார்த்துக் கேட்டார்.
அமிரைப் பார்த்துப் பேசிய பிரபாகரன், "இயக்கத்தை விட்டு வெளியேறுவது மட்டுமே போதுமானது அல்ல. இயக்கத்தை விட்டு வெளியேறியவர்கள், விடுதலைப் போராட்டத்தில் இருந்தும் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும். இயக்கத்தின் விதிகளின்படி, போட்டியாக இன்னொரு அமைப்பைத் தொடங்குவதும் குற்றமே. இயக்கத்தின் யாப்பும், கொள்கையும் கூறுவது அதையே. எவரும் இதற்கு விதிவிலக்கில்லை. இதை எவராவது மீற விரும்பினால், மரணத்தை விரும்பி அழைக்கிறார்கள் என்று பொருள்" என்று மிகவும் தீர்க்கமாகக் கூறினார்.
இதைக் கேட்டதும் பெருஞ்சித்திரனார் மிகுந்த வருத்தமடைந்தார்.
"இப்படிப் பேசாதீர்கள். நீங்கள் புலிகள் இயக்கத்தை உருவாக்கியது உண்மைதான். ஆனால், உங்களுடன் நின்று, இயக்கத்திற்கான தொடர்பாடல் வேலைகளைச் செய்ததும், இன்று புலிகள் இயக்கம் பற்றி உலகம் அறிந்துகொள்ளவும் உதவியது உமாதான்" என்று பெருஞ்சித்திரனார் பிரபாகரனைப் பார்த்துக் கூறினார்.
முன்னர், தனது வீட்டிற்கு வந்த பிரபாகரனும், உமா மகேஸ்வரனும் தமது அன்றாடச் செலவுகளுக்கு சிறுதொகைப் பணத்தினை அவ்வப்போது பெற்றுச் சென்றதை பெருஞ்சித்திரனார் பிரபாகரனுக்கு நினைவுபடுத்தினார். பெருஞ்சித்திரனாரின் வீட்டிலேயே புலிகள் இயக்கம் பணத்தினை சேமித்து வைத்திருந்தது. புலிகளின் பணத்தினைப் பத்திரமாகப் பாதுகாத்து வைப்பதே பெருஞ்சித்திரனாரின் பணியாக இருந்தது. "இப்போது ஒருவரையொருவர் கொல்லப்போவதாக மிரட்டுகிறீர்களா? அதைச் செய்யவேண்டாம்" என்று பிரபாகரனைப் பார்த்துக் கூறினார் பெருஞ்சித்திரனார்.
சி.என்.அண்ணாத்துரையுடன் ராமசாமிப் பெரியார்
மேலும் பேசிய பருஞ்சித்திரனார், ராமசாமிப் பெரியார் மணியம்மையை மணந்தபோது, திராவிட முன்னேற்றக்கழகத்தை அமைத்தவரான அண்ணாத்துரை கூறியதை நினைவுபடுத்தினார். "இருகட்சிகளாக இருந்தபோது, இருகுழல்த் துப்பாக்கியாக இயங்கலாம் என்று அன்று அண்ணாத்துரை கூறியதுபோல, நீங்களும் இயங்கலாம்" என்று அவர் கூறினார்.
பெருஞ்சித்திரனார் கூறியதை வழிமொழிந்த அமிர்தலிங்கம், "ஐயா கூறுவதன்படியே செய்யுங்கள்" என்று அவர்கள் இருவரையும் பார்த்துக் கூறினார்.
பின்னாட்களில் பிரபாகரனின் தீவிர அபிமானியாக மாறிப்போன பெருஞ்சித்திரனார் என்னுடன் ஒருமுறை பேசும்போது, அன்று தனது வீட்டில் இடம்பெற்ற கூட்டம் ஓரளவு பலனை அடைந்ததாகக் கூறினார். தானும், அமிர்தலிங்கமும் இணைந்து, பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் ஒருவரையொருவர் கொல்வதில்லை எனூம் உறுதிப்பாட்டை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்ததாகக் கூறினார்.
" தான் கொடுத்த வாக்குறுதியை பிரபாகரன் இறுதிவரை கடைப்பிடித்து வந்தது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனது வீட்டைச் சுற்றி தான் நிறுத்தியிருந்த தனது போராளிகளை அவர் விலக்கிக் கொண்டார். அதற்குப் பின்னர் உமாவைக் கொல்ல அவர் ஒருபோதும் எத்தனிக்கவில்லை. எனது நன்றியை தெரிவிக்க பிரபாகரனை நான் சந்திக்க முடியாது போனமைக்காக வருந்துகிறேன்" என்று பெருஞ்சித்திரனார் கூறினார். அதன் பிறகு, அவர் இறக்கும்வரை பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை.
உமா மகேஸ்வரனைத் தான் கொல்லாமல் இருப்பதற்கு, பிரபாகரன் ஒரு நிபந்தனையினை விதித்தார். அதாவது, உமா மகேஸ்வரன் தனது அமைப்பை நடத்தலாம், ஆனால் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராக உரிமைகோர முடியாது என்று கூறினார்.
ஏழுமாதங்கள் வரை பிணையில் தமிழ்நாட்டில் தங்கியிருந்த பிரபாகரன், 1983 ஆம் ஆண்டு, மாசி மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்பதை பொலீஸார் நன்கு அறிந்தே இருந்தனர். ஆனாலும், அறிக்கையினைச் சமர்பிப்பதற்காக அவர் தங்கியிருந்ததாகக் கருதப்பட்ட பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி வீடுகளை அவர்கள் சோதனையிட்டனர்.
பிரபாகரன் அன்று யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிச் செல்வதற்கான காரணம் ஒன்று இருந்தது. தான் மனதில் வரைந்துவைத்திருந்த சுபாஸ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய ராணுவத்தைப்போன்ற இலட்சிய உறுதியும், தியாக மனப்பான்மையும் கொண்ட கெரில்லா ராணுவம் ஒன்றை உருவாக்குவதே அது.