தங்கத்துரையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு
அரச பயங்கரவாதினாலும், அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்ட தமிழர்களின் உணர்வுகள் பொங்கியெழுந்துகொண்டிருந்தவேளை, மாசி 17 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நீதிமன்றம் ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் அவ்வுணர்ச்சியைக் கட்டுக்கடங்காத கோபமாக மாற்றிவிட்டிருந்தது. பிரபாகரன் மதுரையை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிக்கொண்டிருந்த வேளை, நீர்வேலி வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா நீதிமன்றில் வரலாற்றைச் சுட்டிக் காட்டி ஆற்றிய வாதத் தொகுப்பில் குறிப்பிட்ட சில விடயங்கள் இலங்கையிலும் வெளிநாட்டிலும் வாழ்ந்துவந்த ஒவ்வொரு தமிழனின் உணர்வினையும் ஆளமான தாக்கத்தினைச் செலுத்தியிருந்தது.
வழக்கறிஞர் நடேசன் சத்தியேந்திரா
உயர் நீதிமன்ற நீதிபதி சி.எல்.டி. மூனெமலி தலைமையில் நடைபெற்ற இந்த வழக்கில் பிரதிவாதிகளாக தங்கத்துரை, குட்டிமணி, தேவன், சிவபாலன் மாஸ்ட்டர், நடேசநாதன் மற்றும் சிறி சபாராட்ணம் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர். ஆனால், சிறி சபாரட்ணம் தலைமறைவாகியிருந்தபடியினால், அவரின்றியே வழக்கு நடைபெற்றது.
வழக்கில் பேசிய சத்தியேந்திரா, "குற்றஞ்சாட்டப்பட்ட எனது கட்சிக்காரர்கள் தொடர்பாக நான் ஒரு விடயத்தை இந்த நீதிமன்றில் வெளிப்படையாகக் கூறவிரும்புகிறேன். எந்தவொரு தனி மனிதனுக்கும் இருக்கும் விலை மதிக்கமுடியாத பொருளான தனது உயிரை, தனது மக்களின் விடுதலைக்காக கொடுக்க முன்வந்திருக்கும் எனது சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர்களின் முன்னால் நான் தாழ்ந்து அடிபணிகிறேன்" என்று உணர்வு மேலிடக் கூறினார்.
மாசி 24 ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள்த்தண்டனையினை வழங்குமுன்னர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பார்த்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று நீதிபதி கேட்டார். தங்கத்துரை தமிழில் உணர்வூர்வமான பேச்சொன்றினை வழங்க அதனை ஆரம்பத்திலிருந்தே நடேசன் சத்தியேந்திரா மொழிபெயர்த்துவந்தார். தங்கத்துரையின் பேச்சு நீண்டு செல்கையில் சத்தியேந்திரா அழத்தொடங்கினார். உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்ட சத்தியேந்திரா, தங்கத்துரையின் பேச்சினை தன்னால் தொடர்ந்தும் மொழிபெயர்க்க முடியாது என்று நீதிபதியினைப் பார்த்துக் கூறினார்.
சத்தியேந்திராவுக்கு இவ்வழக்கில் உதவிபுரிந்த சிவசிதம்பரம் தங்கத்துரையின் மீதிப் பேச்சினைத் தமிழில் மொழிபெயர்த்தார்.
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் நடராஜா தங்கத்துரை - கொழும்பு, மாசி 24, 1983
தமிழர்களின் வரலாறு பற்றியும், சுதந்திரத்தின் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக அரசுகளால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டதையும், தமிழர்களுக்குச் சட்டபூர்வமாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை மிதவாதத் தலைவர்கள் பெற்றுக்கொடுக்கத் தவறியமையும், அரச பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்ததையும் விளக்கப்படுத்திய தங்கத்துரை தனது பேச்சினை பின்வரும் வகையில் நிறைவு செய்தார்.
"நாம் வன்முறையினைக் காதலிப்பவர்கள் அல்ல. மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல. எமது மக்களை விடுவிக்க போராடும் ஒரு இயக்கத்தின் போராளிகள் நாங்கள். எம்மைப் பயங்கரவாதிகள் என்று ஓயாமல் தூற்றிக்கொண்டிருக்கும் அந்த உன்னதமான மனிதர்களுக்கு நாம் ஒன்றைச் சொல்ல விழைகிறோம்".
"நூற்றுக்கணக்கான தமிழர்கள் இரத்த வெள்ளத்தில் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டபோது பயங்கரவாதம் குறித்து நீங்கள் அச்சம் கொள்ளவில்லையா? இனவாதிகள் தமது வெறுப்பினை இந்த நாடு முழுவதும் காட்டுத்தீயைப் போல பரப்பியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? அப்பாவித் தமிழ்ப்பெண்கள் உங்களால் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டபோது உங்களுக்கு பயங்கரவாதம் குறித்த பயம் ஏற்படவில்லையா? எமது கலாசாரப் பொக்கிஷங்களை நீங்கள் எரியூட்டியபோது உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையா? 1977 ஆம் ஆண்டில் மட்டும் 400 தமிழர்கள் பலியிடப்பட்டு, அவர்களின் இரத்தத்தில் வானம் செந்நிறமாகியபோது பயங்கரவாதத்தினை நீங்கள் கண்டுகொள்ளவில்லையா?"
"ஆக, தமிழ் ஈழத்தில் ஒரு சில பொலீஸ் காடையர்கள் கொல்லப்பட்டபோதும் சில லட்சம் ரூபாய்கள் வங்கிகளில் கொள்ளையிடப்பட்டபோதும் மட்டும்தான் பயங்கரவாதம் உங்களின் முகத்தில் அறைந்ததோ?"
"ஆனால் என்னுடைய வேண்டுதல் என்னவென்றால், அதிகார வெறிபிடித்த சிங்கள அரசியல்வாதிகள் விதைத்த வினையினை அப்பாவிச் சிங்கள மக்கள் அறுவடை செய்யக் கூடாது என்பதுதான். நாம் அனுபவிக்கும் இன்னல்கள் எல்லாம் ஆண்டவன் எங்களைப் புனிதப்படுத்த அருளிய வரங்கள் என்று நான் நினைக்கிறேன். இறுதி வெற்றி எமதே!"
இறுதி வெற்றி எமதே என்று தங்கத்துரை எதிர்வுகூறியபடி தனது பேச்சினை முடித்தபோது நானும் நீதிமன்றத்தில் இருந்தேன். அப்பாவிச் சிங்கள மக்கள் அதிகார வெறி பிடித்த சிங்கள அரசியல்வாதிகளின் செயலினால் பழிவாங்கப்பட்டு விடக்கூடாது என்று வேண்டுகிறேன் என்று அவர் கூறியபோது என்னால் அழுகையினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த அனைத்துத் தமிழர்களும் அழுதார்கள். தங்கத்துரை எம் அனைவரையும் உணர்வுகளால் இணைத்துவிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், இலங்கையிலும், வெளிநாட்டிலும் வாழும் தமிழர்களையும் அவர் உணர்வால் ஒன்றிணைத்தார். தமிழர்கள் உணர்வுரீதியாக ஒருங்கிணைவதை அவர் அன்று உறுதிப்படுத்திக்கொண்டார்.
தங்கத்துரையின் உரையின் இறுதிப்பகுதியை, குறிப்பாக அவரது உரையின் இறுதி வாக்கியத்தை மேற்கோள் காட்டித் தமிழ்ப் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டதுடன், அந்தப் பேச்சு தமிழ் மக்கள் மேல் எவ்வகையான தாக்கத்தினைச் செலுத்தப்போகின்றது என்பது பற்றிய ஆசிரியத் தலையங்கங்களையும் வெளியிட்டிருந்தன. ஆனால், ஆங்கிலப் பத்திரிக்கைகள் தங்கத்துரையின் பேச்சினை முற்றாக இருட்டடிப்புச் செய்திருந்ததுடன், தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தமிழ்ப் பயங்கரவாதத்தினை எவ்வாறு முடிவிற்குக் கொண்டுவரப்போகின்றது என்பது பற்றி எதிர்வுகூறியிருந்தன. சிங்களப் பத்திரிக்கைகளோ ஒரு படி மேலே சென்று, தங்கத்துரைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆரவாரத்துடன் வரவேற்றது மட்டுமன்றி, தமிழ்ப் பயங்கரவாதிகளைக் கைதுசெய்த பொலீஸாரையும், இராணுவத்தினரையும் வானளவப் புகழ்ந்து தள்ளியிருந்தன. தங்கத்துரையின் அன்றைய பேச்சு மொத்தத் தமிழ்ச் சமூகத்தின் மீதும், இலங்கை அரசியலின் எதிர்காலம் மீதும் செலுத்தவிருக்கும் தாக்கத்தினை சிங்கள ஊடகவியலாளர்கள் அன்று கண்டுகொள்ளத் தவறியிருந்தனர். இலங்கையின் இனப்பிரச்சினையில் இரு தரப்புக்கள் இருக்கின்றனர் என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறியிருந்தனர்.
ஒருபக்கச் சார்பாக செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததன் மூலம் தமது தலைவர்களால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வந்த குற்றங்களைத் தூண்டிவிட்டதுடன், அவற்றினை ஆதரித்தும் அவர்கள் எழுதி வந்தனர்.