காந்தியத்தை அழிக்கத் திட்டம் போட்ட ஜெயாரும், ஏமாற்றப்பட்ட சம்பந்தனும்
திருக்கோணேஸ்வரர் ஆலயம்
60 களுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் திருகோணமலை மாவட்டத்தின் அரச அதிபர்களாக சிங்களவர்களையே நியமித்து வருகின்றன. தமிழ் மாவட்டமான திருகோணமலையினைச் சிங்களமயமாக்குவதற்கு சிங்கள அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவது அவசியம் என்று அரசுகள் கருதிவந்தன. இவ்வாறான அரச அதிபர்களில் ஒரு சிலர் நேர்மையான, பாகுபாடற்ற மனிதர்களாக இருந்தனர். ஆனால், பெரும்பாலான அரச அதிபர்கள் அரசாங்கத்தின் கருவியாகச் செயற்பட்டு திருகோணமலையினைச் சிங்கள மயமாக்கும் அரசின் திட்டத்தினை தமது தலையாய கடமையாகக் கொண்டு நிறைவேற்றி வந்தனர். இந்த இரண்டாம் வகை அரசாங்க அதிபர்களே ஜெயாரின் காலத்தில் திருகோணமலையினை நிர்வகித்து வந்தனர்.
1978 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டுவரை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக ஜயதிஸ்ஸ பண்டாரகொட கடமையாற்றினார்.இவரது காலத்திலேயே திருகோணமலையில் சிங்களமயமாக்கல் துரித கதியில் இடம்பெற்று வந்தது. அரச திணைக்களங்களுக்கென்று மிகப்பெரியளவில் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதோடு, இக்காணிகள் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தார்கள். சுமார் 5000 ஏக்கர்கள் கொண்ட கொழும்பு வீதியுடன் அமைந்திருந்த நீண்ட நிலப்பரப்பு துறைமுக அதிகாரசபையினால் கையகப்படுத்தப்பட்டது. இதைவிட மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் உல்லாசப் பயணத்துறைக்கென்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கென்றும் இன்னும் பிற அரச திணைக்கங்களுக்கென்றும் அரசால் கையகப்படுத்தப்பட்டு வந்தன.
தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னம் ஒன்றின் பின்னணியில் தெரியும் நீலப்பனிக்கைக் குளம்
திருகோணமலைக்கு வடக்காக இருந்த திரியாய் பகுதியில் அரசு திட்டமிட்டிருந்த மரமுந்திரிகைத் திட்டத்தினை ஜெயார் இரத்துச் செய்தமைக்காக தான் அவருக்கு நன்றிகூறியதாக சம்பந்தன் என்னிடம் தெரிவித்திருந்தார். திரியாய்க் கிராமம் மிகத் தொன்மையான தமிழ்க் கிராமம் ஆகும். நீலப்பனிக்கைக்குளம், 1940 ஆம் ஆண்டு புனருத்தாரனம் செய்யப்பட்டபின்னர் இக்குளத்திற்கு அண்மையாக உள்ள கிராமங்களில் நெற்பயிர்ச்செய்கை நடைபெற்று வந்தது. நிர்வாகக் கோளாறு ஒன்றின் காரணமாக இக்காணிகளில் விவசாயம் செய்துவந்த தமிழர்களுக்கான காணி உரிமைப் பத்திரத்தினை அன்றைய நிர்வாகம் வழங்கத் தவறியிருந்தது. 1980 ஆம் ஆண்டு, இப்பகுதிக்கு வந்த திருகோணமலை அரச அதிபர் ஜயதிஸ்ஸ பண்டாரகொட, தமிழ் விவசாயிகளுக்கு இக்காணிகளுக்கான உரிமையாளர் பத்திரம் இன்மையினால் அவர்கள் உடனடியாக இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கட்டளையிட்டதுடன், இப்பகுதியில் 2000 ஏக்கரில் மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறினார்.
திரியாயில் தமிழ் விவசாயிகளை விரட்டிவிட்டு மரமுந்திரிகைத் திட்டம் ஒன்றினை அரசாங்க அதிபர் நடைமுறைப்படுத்தவுள்ளதை அறிந்த சம்பந்தன் உடனடியாகக் கொழும்பிற்குச் சென்று தோட்டப் பயிர்ச்செய்கை கைத்தொழில் அமைச்சர் ஜயவர்தனவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசினார். நெற்பயிற்செய்கை நடக்கும் காணிகளில் மரமுந்திரிகை செய்ய அரச அதிபர் முயற்சிப்பது குறித்து அமைச்சர் அறிந்தபோது திகைப்படைந்தார். மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கைக்கு அதிக நீர் தேவைப்பாடதென்பதுடன் சாதாரண தரையமைப்பே அதற்கு உகந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.
"இந்தத் திட்டத்திற்கான உத்தரவைனை வழங்கியது யார்?" என்று சம்பந்தர் அமைச்சரைக் கேட்டார்.
தன்னை மன்னித்துவிடும்படி கேட்டுக்கொண்ட அமைச்சர், மரமுந்திரிகைத் திட்டத்திற்கான உத்தரவு அதிமேலிடத்திலிருந்தே தனக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார். அதிமேலிடம் என்று அமைச்சர்களும், அதிகாரிகளும் குறிப்பிடுவது ஜனாதிபதி ஜெயாரைத்தான் என்பதை சம்பந்தன் அறிந்தே வைத்திருந்தார்.
"என்னால் எதுவும் செய்யமுடியாது, நீங்கள் பெரிய மனிதரிடம் தான் இதுகுறித்துப் பேச வேண்டும்" என்று அமைச்சர் கைவிரித்து விட்டார்.
ஆகவே, சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்துப் பேசினார். ஜெயாரின் சிந்தனையில் ஏறும்வகையில் சம்பந்தன் அவரிடம் இவ்விடயத்தைப் பற்றி வினவினார், "இப்பகுதியில் வாழ்ந்துவருவது தமிழர்களா சிங்களவர்களா என்பதை விட்டு விடலாம், ஆனால், நெற்பயிர்ச்செய்கைக்காக கிராமக் குளத்திலிருந்து நீர்ப்பாசணம் செய்யப்பட்ட காணிகளில் மரமுந்திரிகையினை பயிர்செய்த முதலாவது ஜனாதிபதி என்கிற பெயர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?" என்று அவரைப் பார்த்துக் கேட்டார் சம்பந்தன்.
இதனையடுத்து மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் உத்தரவினை ஜெயார் வழங்கினார். தனது ஆட்சிக்காலத்தின் ஆரம்பப்பகுதியில் தன்னை ஒரு நீதியான அதிபராகக் காட்ட முனைந்திருந்தார் ஜெயார்.
ஜெயாரிடமிருந்து டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு உத்தரவு ஒன்று வந்திருந்தது. தான் வழங்கும் ஒவ்வொரு பேச்சும் தான் பேசியதுபோல, அதே ஒழுங்கில் அச்சிடப்படவேண்டும் என்பதே அந்த உத்தரவு. இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பத்திரிக்கை ஆசிரியர், "நாம் ஒரு பத்திரிக்கை தான் நடத்துகிறோம், பாராளுமன்றப் பதிவேடு அல்ல" என்று கூறினார். "நீங்கள் பேசிய ஒழுங்கிலேயே நாம் அதனைப் பிரசுரித்தால் உங்கள் பேச்சின் கருப்பொருள் பத்திரிக்கைச் செய்தியின் அடித்தளத்திற்கல்லவா போய்விடும்?" என்று அவர் ஜெயாரிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயார், "எனக்கு செய்தி முக்கியமில்லை, எனது பேச்சு சரித்திரத்தில் இடம்பெறவேண்டும், அவ்வளவுதான்" என்று தீர்க்கமாகக் கூறினார்.
இவ்வாறே எனது நண்பரும், பிரபல நீதிமன்ற செய்தியாளருமான நோர்ட்டன் வீரசிங்க ஜெயாரினால் ஒரு ஜனாதிபதியின் பேச்சினை சேகரிக்கும் நிருபராக ஆக்கப்பட்டார். அவரது வேலையெல்லாம் ஜெயாரின் பேச்சினை அப்படியே எழுதிக்கொள்வது. பின்னர் அதனை ஜெயாரிடம் காட்டி பிரசுரிப்பதற்கான அனுமதியினைப் பெற்றுக்கொள்வது என்பதாகவே இருந்தது. பெரும்பாலான நேரங்களில் ஜெயாரின் பேச்சு பத்திரிக்கையின் அதிகாலை நேர வெளியீட்டில் உள்ளடக்க முடியாது போய்விடும். சிலவேளைகளின் அவரின் பேச்சு மறுநாள் வெளியீட்டிலேயே வந்திருந்தது.
மரமுந்திரிகைத் திட்டத்தை இரத்துச் செய்யும் ஜெயாரின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். காமிணி திசாநாயக்கவுடனான சம்பந்தனின் அனுபவம் வித்தியாசமானது. தமிழரின் பூர்வீக கிராமமான பெரியவிளாங்குளம் பகுதியில் ஐரோப்பிய நாடுகளின் பண உதவியோடு காமிணி திசாநாயக்க மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் "மகாடிவுளுவெவ" என்று சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சிங்களக் குடியேற்றம் ஒன்று நடைபெற ஆரம்பித்திருந்தது. இதனை அறிந்த சம்பந்தன் உடனடியாக இந்தக் குடியேற்றத்தை நிறுத்துமாறு காமிணியிடம் கோரியிருந்தார். சபந்தனின் முன்னால் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகக் கூறிய காமிணி அவர் முன்னாலேயே அத்திட்டத்தினை இரத்துச் செய்யும் உத்தரவினை மகாவலி அபிவிருத்திச் சபைக்கு வழங்கினார். ஆனால், சம்பந்தனை ஏமாற்றிய காமிணி, உடனடியாக திருகோணமலை அரச அதிபரான ஜயதிஸ்ஸ பண்டாரகொடவை தொலைபேசியில் தொடர்புகொண்டு , பெரியவிளாங்குளம் பகுதியை முற்றான சிங்களக் குடியேற்றமாக்கும் திட்டத்தினை துரிதப்படுத்தி, தான் அனுப்பிய இரத்துச் செய்யும் உத்தரவு அரச அதிபருக்குக் கிடைப்பதற்கு முன்னர், திட்டம் பூர்த்தியாக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். பின்னாட்களில் தான் எமாற்றப்பட்டதை சம்பந்தன் அறிந்துகொண்டபோது மனமுடைந்துபோனார். எப்படியான சிங்கள இனவாதிகளுடன் தாம் அரசியல் நடத்தவேண்டி இருக்கிறது என்று என்னிடமும் சலித்துக்கொண்டார்.
ஜெயாருடன் இன்னொரு விடயம் குறித்தும் சம்பந்தன் பேசியிருந்தார். அதுதான் காந்தியம் செயற்பாடுகள் குறித்து சிங்கள, ஆங்கில ஊடகங்கள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டு. சம்பந்தன் ஜெயாரைச் சந்தித்த அதே காலையில் சண்டே ஐலண்ட் பத்திரிக்கையும், தி வீக்கெண்ட் பத்திரிக்கையும் காந்தியம் மீது கடுமையான பிரிவினைவாதக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து செய்திகளைக் காவிவந்திருந்தன. சண்டே ஐலண்ட் பத்திரிக்கையில் எழுதிய பீட்டர் பாலசூரிய காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீது விசாரணை என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தார்.
"மட்டக்களப்பில் சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் தொண்டு நிறுவனமான ரெட்பாணாவின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஜெயவர்த்தனா தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நம்பகமாகத் தெரியவந்திருக்கிறது. அமைச்சர் K. W. தேவநாயகத்தின் குற்றச்சாட்டொன்றினை அடிப்படையாக வைத்தே ஜனாதிபதி இந்த விசாரணையினை மேற்கொள்ளவுள்ளார். மட்டக்களப்பில் ரெட்பாணாவும், வடக்கில் காந்தியமும் செய்துவரும் பல நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சந்தேகம் கொண்டிருப்பதாகவும், இதனாலேயே அரசாங்கத்தை அவர் எச்சரித்தார் என்றும் தெரியவருகிறது. காந்தியத்தின் செயற்பாடுகளை அமைச்சர் தேவநாயகம் சந்தேகிப்பதால், அந்த அமைப்பின் செயற்பாடுகள் குறித்த விரிவான அறிக்கையொன்றினை அவரது சமூக நலன் அமைச்சு ஜனாதிபதிக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது" என்பதே ஐலண்ட் பத்திரிக்கையின் செய்தியாகும்.
இதேவகையான செய்தியையே தி வீக்கெண்ட் பத்திரிக்கையில் ரனில் வீரசிங்கவும் ஜெனிபர் ஹென்றிக்ஸும் எழுதியிருந்தார்கள்.
"காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் தேவநாயகம் உயர் மட்ட அமைச்சர் கூட்டத்தில் எழுப்பிய சந்தேகங்களையடுத்து இவ்விரு அமைப்புக்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பமாகவிருப்பதாக நம்பகமாகத் தெரியவருகிறது. ஸ்கண்டிநேவிய நாடுகளின் பண உதவியுடன் செயற்பட்டுவரும் இந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் குறித்து திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் அமைச்சும், சமூக சேவைகள் அமைச்சும் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன" என்பதே அந்தச் செய்தியாகும்.
சிங்கள அரசில் அமைச்சராகவிருந்த தேவநாயகம்
என்னிடம் மேலும் பேசிய சம்பந்தன், காந்தியம் மற்றும் ரெட்பாணா அமைப்புக்கள் மீதான விசாரணைபற்றி தான் அறிந்துகொண்டவுடன் அமைச்சர் தேவநாயகத்துடன் தான் உடனடியாகத் தொடர்புகொண்டு ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று வினவியதாகவும், அதற்குப் பதிலளித்த அமைச்சர் தேவநாயகம், இந்த அமைப்புக்கள் குறித்து தான் எந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் பேசியதில்லையென்றும், ஆனால் தனது பெயரைப் பாவிப்பதன்மூலம் இச்செய்திக்கும் உத்தியோகபூர்வ அந்தஸ்த்தினைக் கொடுக்க சிலர் முயல்வதாகவும் கூறியதோடு இச்செய்தி உண்மையாக இருக்கலாம், ஏனென்றால் ஜனாதிபதி ஜெயவர்த்தனவே இந்த விசாரணைகள் நடக்கவேண்டும் என்று விரும்புவதாகவும் கூறினாராம்.
"நான் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடன் பேசும்போது காந்தியத்தை முற்றாக நசுக்கிவிடும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது என்று கூறினேன். பட்டிணியினாலும், ஏழ்மையினாலும் வாடும் மக்களுக்கு காந்தியம் சிறப்பான தொண்டினை ஆற்றி, அவர்களை கெளரவத்துடன் வாழ வழி வகுத்து வருகிறது. என்னுடன் வந்து காந்தியம் செய்துவரும் தொண்டினை ஜெயார் பார்க்கவேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதற்குப் பதிலளித்த ஜெயார், நீங்கள் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் நான் வந்து பார்க்கவேண்டிய தேவையில்லை என்று கூறி எனது கோரிக்கையினை அவர் மறுத்துவிட்டார்" என்று சம்பந்தன் என்னிடம் கூறினார்.
காந்தியத்தின் செயற்பாடுகளைத் தன்னுடன் வந்து பார்வையிடுமாறு தான் கேட்டுக்கொண்ட கோரிக்கையினை ஜெயார் நிராகரித்தபோதே காந்தியத்தை அழிக்க அவர் உறுதிபூண்டுவிட்டார் என்பதை தான் அறிந்துகொண்டதாக சம்பந்தன் என்னிடம் கூறினார். பின்னாட்களில் நடந்த சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்தின என்றும் சம்பந்தன் கூறினார்.