ஜெயார் தமிழருக்கு வழங்கிய இறுதித் தீர்வு - தொடரும் ஜூலை 83 இனக்கொலை
நள்ளிரவு வேளை நெருங்கிக்கொண்டிருந்தது. எமது செய்திப்பிரிவிற்கு வந்துகொண்டிருந்த அறிக்கைகள் மிகவும் கவலையளித்தன. பொரள்ளையில் ஆரம்பித்த தமிழருக்கெதிரான இனவன்முறைகள் கொழும்பில் தமிழர்கள் கணிசமானளவில் வாழ்ந்து வந்த பகுதிகளான மரதானை, தெமட்டகொடை, திம்பிரிகஸ்யாயை, கிருலப்பொனை ஆகிய பகுதிகளுக்கும் பரவிவிட்டிருந்தன.
எனது இரு மகன்கள் குறித்தும் எனக்குக் கவலை ஏற்படலாயிற்று. வீட்டில் அவர்கள் தனியாக இருந்தனர். எனது மனைவி நைஜீரியாவுக்கு கல்விச்சேவை ஒன்றிற்காக அவ்வேளை சென்றிருந்தார், மகள் யாழ்ப்பாணம் வைத்திய பீடத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்தார். நான் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியபோது மூத்த மகன் பேசினார். வீட்டின் அருகில் அசம்பாவிதம் எதனையும் பார்க்க முடியவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். அதிகாலை 1 மணிக்கு லேக் ஹவுஸின் போக்குவரத்துப் பிரிவிற்குச் சென்ற நான் என்னை வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடும்படி அங்கிருந்த சாரதிகளைக் கேட்டேன். "தமிழர்களைக் கொன்று எரித்துக்கொண்டிருக்கிறார்கள், இந்தவேளையில் நீங்கள் எங்கும் போகவேண்டாம்" என்று கூறி என்னைச் செல்லவிடாமல்த் தடுத்தனர். ஆரியரட்ண எனது நிலையினைக் கண்டு என்னை ஏற்றிச்செல்ல ஒப்புக்கொண்டார். தெகிவளை நோக்கி காலி வீதியூடாக சென்றுகொண்டிருந்தவேளை அசம்பாவிதங்களை நான் காணவில்லை, தெகிவளை அமைதியாக இருந்தது.
காலை 5 மணியிருக்கும், எனது சிங்கள நண்பர் ஒருவர் எனக்குத் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவர். "சபா, உங்களின் பிள்ளைகளை இன்று பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம், காலை 9 மணிக்கு முதல் பாதுகாப்பான பகுதியொன்றிற்குச் சென்றுவிடுங்கள்" என்று என்னை எச்சரித்தார்.
"ஊரடங்குச் சட்டத்தினைப் பிறப்பித்து விட்டார்களா?" என்று அவரிடம் கேட்டேன். "இன்னும் இல்லை"என்று அவர் பதிலளித்தார்.
"ஏன், நேற்று இரவு ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்போவதாக பொலீஸார் கூறினார்களே?" என்று நான் மீண்டும் கேட்டேன். எரிச்சலடைந்த அவர், "என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம், சொன்னதை மட்டும் செய்யுங்கள்" என்று சறுக்கென்று கூறினார்.
எங்களுடன் பேசிய பொலீஸ் அதிகாரிகள் தாம் ஜனாதிபதியிடம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்தும்படி வலியுறுத்தப் போவதாகவே கூறியிருந்தனர். ஆனால் ஜனாதிபதியோ, "ஊரடங்கினை அமுல்ப்படுத்துவது பற்றி ஆறுதலாகச் சிந்திக்கலாம்" என்று தன்னைச் சந்திக்க வந்திருந்த பொலீஸ் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். ஆனால் ஊரடங்குச் சட்டத்தினை ஜெயார் அமுல்ப்படுத்தவில்லை.
ரொனி டி மெல் 2002
என்னுடன் பின்னர் பேசிய நிதியமைச்சர் ரொனி டி மெல், ஜனாதிபதியிடம் ஊரடங்குச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறியிருந்தார். தன்னுடன் பேசுகையில் ஜெயார் ஊரடங்கினை அமுல்ப்படுத்தும் உத்தேசத்தில்த்தான் இருந்தார் என்று கூறினார்.
ஜூலை இனக்கொலை நடந்துகொண்டிருந்த நாட்களில் ஜெயாரின் ஆலோசகர் ஜெயரட்ணம் வில்சன் கொழும்பிலேயே இருந்தார். அவர் லங்கா கார்டியன் பத்திரிக்கையில் இதுகுறித்து எழுதியிருந்தார்.
"அன்று நள்ளிரவு ஜெயாருடன் ஊரடங்குச் சட்டத்தினை அமுல்ல்படுத்துமாறு தொலைபேசியூடாக வேண்டிக்கொண்டேன். ஆனால், ஊரடங்கினை அமுல்ப்படுத்துவது குறித்து பேச மறுத்துவிட்டார். வீட்டிலேயே இருங்கள், வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு தொலைபேசியைத் துண்டித்துவிட்டார்" என்று வில்சன் எழுதுகிறார்.
எனது சிங்கள நண்பர் கூறியதன்படியே நடக்க நான் முடிவெடுத்தேன். வீட்டில் அன்று காலையுணவை உட்கொண்டோம். எனது மகன்களிடம் சில உடைகளையும் புத்தகங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனது மூத்த மகன் அவ்வருடம் ஆவணி உயர்தரப் பரீட்சைக்கும் இளைய மகன் அவ்வருடம் மார்கழியில் இடம்பெறவிருந்த சாதாரண தரப் பரீட்சைக்கும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். எமது வீட்டுத் திறப்பினை அயல்வீட்டுச் சிங்களப் பெண்ணிடம் கொடுத்துவிட்டு, கலவரங்கள் அடங்கியபின்னர் வந்து சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு வந்தேன். காலை 8 மணியளவில் பம்பலப்பிட்டி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில், காஸ்ட்டல் வீதியில் அமைந்திருந்த எனது மருமகனின் வீட்டிற்கு வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு சென்றோம்.
போகும் வழியில் பம்பலப்பிட்டி சென் பீட்டர்ஸ் கல்லூரி இயங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன், நகரின் அநேகமான பாடசாலைகள் இயங்குவதாகவே எனக்குச் சொல்லப்பட்டது. கடைகள் திறந்திருந்தன, வீதியில் போக்குவரத்தும் வழமைபோன்றே காணப்பட்டது. காலை 10 மணியளவில் மதிய உணவை வாங்கிவர மகனை அனுப்பினேன். அவரும் உணவினை வாங்கிக்கொண்டு வந்தார், மீண்டும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன என்கிற செய்தி எமக்குக் கிட்டியது. மகன் வீட்டிற்கு வரும் வழியில் பலர் கடைகளைப் பூட்டிக்கொண்டிருப்பதைக் கண்டதாகவும், காலி வீதியில் உள்ள தமிழர்களின் கடைகளை இலக்குவைத்து ஆயுதம் தரித்த சிங்களவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். காலி வீதி முடிவடையும் இடமான காலி முகத் திடலில் இருந்தே தாக்குதல்கள் ஆரம்பித்திருந்தன.
காலை 10:30 மணியிருக்கும், எனது மருமகனின் வீட்டில் தங்கியிருந்து கொழும்பில் வேலை பார்த்து வந்த துரைரட்ணம் மிகுந்த பதற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தார். மிகுந்த வேடிக்கையாகவே எப்போதும் பேசும் அவரை அவ்வளவு பதற்றமாக அதற்கு முன்னர் நான் பார்த்ததில்லை. தமிழர்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு வந்த சிங்களக் காடையர்கள் பம்பலப்பிட்டிச் சந்தியை அடைந்தபோது தான் அப்பகுதியில் இருந்ததாகக் கூறினார் அவர். அப்பகுதியிலிருந்த தமிழருக்குச் சொந்தமான கடைகளை உடைத்துச் சூறையாடிவிட்டு பின்னர் அவற்றிற்குத் தீவைத்ததை தான் கண்டதாகக் கூறினார். அப்பகுதியில் அவரைப்போலவே வந்திருந்த தமிழர்களை அந்தச் சிங்களக் காடையர்கள் தெருவுக்கு இழுத்துவந்து அடித்துக்கொண்டிருந்தார்கள். அவர் தெய்வாதீனமாக காடையர்களின் கண்களில் படாமல் தப்பி வீடு வந்து சேர்ந்திருந்தார்.
சீருடையணிந்த பொலீஸார் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க தமிழர்களின் கடைகளைச் சூறையாடும் சிங்களக் காடையர்கள்
துரைரட்ணம் மேலும் தான் கண்ட காட்சிகளைப் பதிவுசெய்யும்போது, ட்ரக் ஒன்றில் வந்திறங்கிய இரு வாட்டசாட்டமான சிங்களவர்கள் வீதியில் குதித்து தமிழர்களின் கடைகளை உடைக்கத் தொடங்கினர். அவர்களைப் பார்க்கும்போது இராணுவத்திலோ அல்லது பொலீஸிலோ பயிற்சியெடுத்தவர்கள் போலக் கணப்பட்டனர். அவர்களின் கைகளில் ஒரு பெயர்ப் பட்டியல் இருந்தது. ஒவ்வொரு கடையினையும் உடைக்குமுன்னர் அக்கடைகளின் பெயர்ப்பலகையில் இருந்த பெயர்களைத் தாம் கொண்டுவந்திருந்த பெயர்ப் பட்டியலுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தபின்பே உடைக்க ஆரம்பித்தனர். இந்த இரு ஆயுததாரிகளில் ஒருவரின் கையில் கோடரியும் மற்றையவரின் கையில் அலவாங்கும் காணப்பட்டன. கோடரியை வைத்திருந்த சிங்களக் காடையன் முதலில் கோடரியின் பின்புறத்தால் கடையின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டினை உடைக்க, அலவாங்கினை வைத்திருந்தவன் கதவிடுக்கினுள் அதனை செருகி கதவுகளை அகலத் திறந்துவிட்டான். அதன்பின்னர் அவர்களோடு வந்திருந்த மீதிச் சிங்களக் காடையர்கள் கடையினுள் புகுந்து அதனைச் சூறையாடினர். ஒரு கடை முற்றாகச் சூறையாடப்பட்ட பின்னர் அடுத்த கடைக்குச் சென்றது அக்காடையர் கூட்டம். இப்படியே அவ்வீதியெங்கும் இருந்த தமிழருக்குச் சொந்தமான கடைகள் உடைத்துச் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டன. சிங்கள் கட்டட உரிமையாளர்களுக்குச் சொந்தமான கடைகளில் நடத்தப்பட்டு வந்த தமிழரின் வியாபாரங்கள் சூறையாடப்பட்டதுடன், அக்கடைகள் அமைந்திருந்த கட்டடங்களை எரிக்காது விட்டுச் சென்றது காடையர் குழு.
துரைரட்ணம் தொடர்ந்தும் அப்பகுதியில் நிற்க விரும்பவில்லை. தமிழர் ஒருவரை வீதியில் துரத்தித் துரைத்தி சிங்களவர்கள் தாக்குவதைக் கண்டதும் துரைரட்ணம் வேகமாக நடக்க ஆரம்பித்தார். சில நிமிடங்களின் பின்னர் நாம் அன்று தங்கியிருந்த பம்பலப்பிட்டி வீட்டின் அருகில், காலி வீதியில் ஏதோ களேபரம் நடக்கும் சத்தம் கேட்டது. யன்னலின் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த எனது மகன்கள் பிள்ளையார் கோயிலைச் சுற்றியிருந்த கடைகள் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறினர். அப்பகுதியில் தங்கியிருந்த இரு இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். நன்கு பயிற்றப்பட்ட சிங்களக் காடையர்கள் கோயில்ப் பகுதியை அடைந்தபோது அந்த இரு தமிழ் இளைஞர்களும் அங்கே நின்றிருக்கிறார்கள். அப்பகுதியில் இருந்த தமிழரின் கடைகளும் அதேவகையில் இரு பயிற்றப்பட்ட ராணுவ வீரர்களால் உடைக்கப்பட, பின்னால் வந்த சிங்களக் காடையர் கூட்டம் கடைகளைச் சூறையாடிவிட்டு ஆர்ப்பரித்தவாறே அவற்றிற்குத் தீமூட்டிக்கொண்டிருந்தது. தம்முடன் கொண்டுவந்திருந்த பெற்றோலினைக் கடைகள் மீது ஊற்றிவிட்டு சிகெரெட்டைப் பற்றவைக்கும் லைட்டர்களைப் பற்றவைத்து கடைகளினுள் எறிந்தது சிங்களக் காடைக் கூட்டம். அக்கடையும், கட்டடமும் தமிழர் ஒருவருக்குச் சொந்தமானது.