நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கமைத்து நடத்தப்பட்ட தமிழினக்கொலை - ஜூலை 83
திங்கட்கிழமை காலை, தமிழ் உட்டகவியலாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டு "தூய்மையாக்கப்பட்ட" 20 வீடுகளில் எனது வீடும் ஒன்று. அவற்றில் மூன்று வீடுகள் அரச பத்திரிக்கையான டெயிலி நியூஸில் வேலை பார்த்த தமிழர்களது. நான் அப்பத்திரிக்கையுன் துணை ஆசிரியர், கே நடராஜா என்பவர் விளம்பரங்களுக்கான ஆசிரியர், ப. பாலசிங்கம் அவர்கள் பிராந்திய ஆசிரியர். தினகரன் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவகுருநாதன், வீரகேசரி பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர். சிவப்பிரகாசம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் பொன்மணி குலசிங்கம் ஆகியோரது வீடுகளும் அன்று காலை எரியூட்டப்பட்டன. இந்த வீடுகள் அனைத்தும் கொழும்பின் வெவ்வேறு இடங்களில் அமைந்திருந்தபோதும், அவை யாவுமே ஒரேநேரத்தில் எரிக்கப்பட்டன. காலை 11:30 முதல் மதியம் 12:30 வரையான ஒரு மணிநேரத்தில் இவை அனைத்தும் இலக்குவைக்கப்பட்டு எரிக்கப்பட்டிருந்தன.
இவர்கள் மட்டுமல்லாமல் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வியாபார உரிமையாளர்கள் ஆகிய தமிழர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. தமிழர்களின் வியாபாரங்களை, அவர்களின் பொருளாதாரத்தை, அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை இலக்குவைத்து நன்கு திட்டமிட்ட ரீதியில் இத்தாக்குதல்கள் நடத்துப்பட்டுவருவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள்.
மொன்டேகு ஜயவிக்கிரம 2001
மேலும், இத்தாக்குதல்களை அரசாங்கத்தின் மிக உயர் பதவியில் உள்ளவர்களே திட்டமிட்டு நடத்துவதை தமிழர்கள் உணர்ந்துகொண்டார்கள். திருநெல்வேலியில் சிங்கள ராணுவத்தின் மீதான புலிகளின் தாக்குதலுக்குப் பழிவாங்கலாகவே சிங்கள மக்கள் தன்னிச்சையாக இத்தாக்குதல்களை நடத்திவருகிறார்கள் என்ற அரசாங்கத்தின் நியாயப்படுத்தல்களை தமிழர்கள் முற்றாகப் புறக்கணித்தார்கள். திருநெல்வேலித் தாக்குதலை அரசாங்கம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த, நன்கு ஒருங்கமைக்கப்பட்ட தமிழர் மீதான தாக்குதலுக்கான சாட்டாகப் பாவித்ததே அன்றி அதுவே காரணம் அல்ல என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தில் பெருந்தோட்டத் தொழில்த்துறை அமைச்சராக கடமையாற்றிய மொன்டேகு ஜயவிக்கிரமவின் வீட்டிற்கு அயலில் வசித்துவந்தவர் எனது நண்பர். ஜயவிக்கிரம அந்த வார இறுதி முழுவதும் தனது மலையகத்து வாசஸ்த்தலத்தில் தங்கிவிட்டு திங்கட்கிழமை பிற்பகலே கொழும்பிற்குத் திரும்பியிருந்தார். தனது அயலில் இருந்த தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் உடனே செயலில் இறங்கினார். தனது அயலில் வசித்துவந்த தமிழர்களுடன் பேசிய ஜயவிக்கிரம, "ஜெயார் தனது வேட்டைநாய்களை தமிழர்கள் மீது ஏவிவிட்டிருக்கிறார், அவற்றினை இனிமேல் மீள அழைப்பது இயலாத காரியம்" என்று கூறினார்.
ஜயவர்த்தனவின் அமைச்சர்களும், அவர்களின் அடியாட்களும் கொழும்பு நகர் முழுவதிலும் தமது காடையர்களை வழிநடத்தி தமிழர்கள் மீதான தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியிருந்தனர். தொழில்த்துறை அமைச்சர் சிறில் மத்தியூ தனது காடையர்களை கொழும்பு கோட்டைப்பகுதியில் அமைந்திருந்த தமிழர்களின் கடைகளைச் சூறையாடி எரிக்கும் நடவடிக்கைகளில் தலைமை தாங்கியிருந்தார். பிரேமதாசாவும் அவரது அடியாட்களும், கோட்டைப்பகுதி நடைபாதை வியாபாரிகளை அழைத்துக்கொண்டு வாழைத்தோட்டப் பகுதியில் இருந்த தமிழர்களின் வியாபார நிலையங்களையும், வீடுகளையும் எரித்துக்கொண்டு வந்தனர். கொழும்பு நகர மேயர் தனது மாநகர தொழிலாளர்களையும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபையின் அங்கத்தவர்களையும் அழைத்துக்கொண்டு மரதானைப் பகுதியிலிருந்த தமிழர்களின் சொத்துக்களை எரித்துக்கொண்டிருக்க, முஸ்லீமான போக்குவரத்து அமைச்சர் எம். எச். மொகம்மட் தனது அடியாட்களை பொரள்ளைப் பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளையும் கடைகளையும் எரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தினார். மாவட்ட அமைச்சர் மல்லிமாராச்சி கொழும்பு வடக்கிலிருந்த தமிழர்களின் வீடுகளை எரிக்க, உதவியமைச்சர் அநுர பஸ்டியான் கொழும்பு தெற்கில் தமிழர்கள் மீது தாக்குதல்களை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார்.
எமக்கு உதவியளிக்குமாறு நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவேளை மன்னாரைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் எமது வீடு நோக்கி ஓடிவந்து எமதருகில் மயங்கிக் கீழே சரிந்தார். மயக்கம் தெளிந்து அவர் பேசும்போது, தானும், நண்பரும் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது வெறிபிடித்த சிங்களவர்களின் கூட்டம் ஒன்று தம்மைத் துரத்த ஆரம்பித்தது என்று கூறினார். "நாங்கள் ஓடத் தொடங்கினோம், ஆனால் எனது நண்பனை அவர்கள் பிடித்துக்கொண்டார்கள். நான் கட்டடம் ஒன்றின் பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதை அவதானிக்கத் தொடங்கினேன். எனது நண்பரை இரும்புக் கம்பிகளால் அவர்கள் அவ்விடத்திலேயே அடித்துக் கொன்றார்கள். பின்னர் பழைய டயர் ஒன்றினை இழுத்துவந்து, அதன்மீது எனது நண்பனை தூக்கி எறிந்தார்கள். பெற்றோலினை நண்பன் மீது ஊற்றிப் பற்றவைத்தார்கள்" என்று அழுகையுடன் கூறினார். அவரால் அந்த கொடூரமான அனுபவத்தினை மறக்கமுடியவில்லை. பின்னாட்களில் அவர் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதனை அறிந்துகொண்டேன்.
மறுநாள், செவ்வாய்க்கிழமை நாம் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த இன்னொரு நண்பரான குமாரசாமியின் அனுபவம் வித்தியாசமானது. தெகிவளை, ரட்ணகார பிளேஸ் இல் அமைந்திருந்த அவரது வீட்டைச் சிங்களவர்கள் சூழ்ந்துகொண்டபோது அவர் தனது அறையிலேயே இருந்திருக்கிறார். அவரைப் பிடித்துக்கொண்ட சிங்களவர்கள் வீதிக்கு இழுத்துவந்து அங்கே இருக்குமாறு பணித்திருக்கிறார்கள். சிலர் அவரைத் தாக்கியபோது அருகிலிருந்த சிலர் அவரைத் தாக்கவேண்டாம் என்று மறித்திருக்கிறார்கள். குமாரசாமியை என்ன செய்வது என்பதுபற்றி அவர்களுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஒருபகுதியினர் அவரை உயிருடன் தீயிட்டுக் கொழுத்திவிடலாம் என்று கூறினர். அதன்படி இரு சிங்கள இளைஞர்கள் அருகிலிருந்து பெற்றோல் நிலையத்திற்குச் செல்ல, மீதிச் சிங்களவர்கள் அவர் தப்பிவிடாதவாறு சுற்றிக் காவல் நின்றுகொண்டனர்.
அங்கே நின்ற ஒரு சிங்கள இளைஞன், குமாரசாமியின் முகத்தினருகில் குனிந்து, அவரின் காதில், "மடையா, ஏன் இப்படி குந்தியிருக்கிறாய்? எழும்பி ஓடு" என்று ரகசியாமக் கூறியிருக்கிறார். அந்தச் சிங்கள இளைஞன் கூறியதன்படியே குமாரசாமி எழுந்து ஓடத் தொடங்கினார். வீதியின் முகப்பில் நின்றுகொண்டிருந்த பொலீஸ் கொன்ஸ்டபிள் ஒருவரிடம் அவர் அடைக்கலமாக, அவரோ குமாரசாமியை அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தார். மறுநாள் அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.
வீதியில் செல்லும் வாகனங்களை மறித்துத் தமிழர்களைத் தேடும் சிங்களக் காடையர்கள் - தமிழினக்கொலை ஜூலை 83