ஓயாத நிழல் யுத்தங்கள் - 2
ஆகஸ்ட் 13 ஆம் திகதி, 1961 பனிப்போர் கதையில் ஓர் முக்கியமான நாள். இந்த தினத்தில் தான் பனிப்போரின் இரு தரப்பினரும் மிக நெருக்கமாக எதிரெதிர் திசைகளில் ஆளணிகளை நிறுத்தி வைத்திருந்த ஒரு புவியியல் எல்லை ஒரு திடப்பொருளாக உருவானது. அந்த எல்லையின் பெயர் "பெர்லின் சுவர்". பெர்லின் சுவரின் கதை, ஆகஸ்ட் 13, 1961 முதல், நவம்பர், 9 1989 வரை நீழும் ஒரு சுவாரசியக் கதை. இந்தச் சுவரின் அரசியல், இராணுவ, மற்றும் சொந்த அனுபவக் கதைகள் இன்னும் எழுதப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
மேற்கும் கிழக்கும்
1945 இல் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வருகிறது. இறுதியாக ஹிற்லரின் மரணத்திற்கு முன்னர், கிழக்கிலிருந்து நாசி ஜேர்மனியை சோவியத் படைகள் ஊடுருவி, ஜேர்மனியின் கிழக்கு மூலையில் அமைந்திருந்த பேர்லினை நிர்மூலமாக்கி விட்டு, மேலும் கிழக்கு நோக்கி முன்னேறியிருந்தன. மேற்கிலிருந்து, பிரிட்டன், அமெரிக்க, பிரெஞ்சுப் படைகள் முன்னேறி மேற்குப் பாதியில் நிலை கொண்டன. இதன் பின்னர், பொற்ஸ்டாம் மகாநாட்டின் முடிவுகளின் படி, ஜேர்மனியின் மேற்கை பிரிட்டனும், அமெரிக்காவும் நிர்வகிக்க, கிழக்கை சோவியத் நாடு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்ற ஏற்பாடு உருவானது. பின்னர், பிரிட்டனின் ஒரு பகுதி, பிரான்சிடம் கையளிக்கப் பட்டதோடு, மேற்கு ஜேர்மனியில் அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சுப் பகுதிகள் உருவாகின. இதில் கவனிக்க வேண்டியது, கிழக்கில், சோவியத் கட்டுப் பாட்டில் ஜேர்மனியின் வரலாற்றுப் புகழ் மிக்க பெர்லின் அமைந்திருந்தது. எனவே, பெர்லினையும் கிழக்கு, மேற்காகப் பாதியாக்கி நிர்வகிக்க ஏற்பாடு. இது 1946 இல் நிகழ்ந்த போது கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் தேசங்களாக உருவாகியிருக்கவில்லை. 1949 இல், கிழக்கு ஜேர்மனி (ஜனநாயக ஜேர்மன் குடியரசு) , மேற்கு ஜேர்மனி (ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு) ஆகிய இரு தேசங்கள் உருவாகின. மேற்கு ஜேர்மனி, மேற்கின் அடியொற்றிய ஜனநாயக ஆட்சி, தேர்தல்கள், நாடாளுமன்றம் என ஒரு ஆட்சி முறையை ஏற்படுத்திக் கொண்டது. கிழக்கு ஜேர்மனி, சோவியத் முறைமையைப் பின்பற்றி கிழக்கு ஜேர்மன் சோசலிசக் கட்சியெனப் படும் ஒரு கட்சியின் கீழ், சோவியத்தின் மறைமுகக் கட்டுப்பாட்டில் ஒரு ஆட்சியை உருவாக்கிக் கொண்டது.
கிழக்கும் மேற்கும் சந்தித்த பெர்லின்
ஏற்கனவே, கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளுக்கிடையே ஒரு கம்பி வேலி வகையிலான எல்லை எழுப்பப் பட்டிருந்தது. இது, தேச எல்லையாக முழு நீளத்திற்கும் இரு நாடுகளையும் பிரித்திருந்தது. கிழக்கு மேற்கு பெர்லினுக்கிடையே எல்லைகள் திடமாக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில், ஒரு வீதியில் வரையப் பட்ட 6 அங்குலத் தடிப்பான ஒரு வெள்ளைக் கோடு தான் கிழக்கு மேற்கு பேர்லின்களைப் பிரித்த எல்லையாக இருந்தது. இதன் விளைவு, இரு தேசங்களுக்குமிடையே, ஜெர்மனியர்கள் சாதாரணமாகப் போய் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் கிழக்கு மேற்குப் பாதிகளிடையே 80 இடங்களில் மக்கள் இரு நகரங்களுக்குமிடையே சென்று வரக்கூடிய நுழைவாயில்கள் இருந்தன.
எனவே, கிழக்கில் இருந்து மேற்கிற்குள் நுழைய விரும்பும் பெரும்பாலானோர், கண்காணிப்புகள் குறைந்த பெர்லின் எல்லைகளின் வழியாகவே பயணம் செய்யலாயினர். கிழக்கு ஐரோப்பாவினூடாக மேற்கினுள் நுழையும் வெளிநாட்டு அகதிகளுக்கும் கூட இதுவே சிறந்த வழியாக விளங்கியது.
மக்களை இழந்த கிழக்கு ஜேர்மனி
மத்திய பெர்லினில் (Berlin Mitte) கிழக்கு - மேற்கு பெர்லின்களிடையேயான எல்லையின் 2008 ஆம் ஆண்டுத் தோற்றம். கிழக்கு பேர்லின் பக்கமிருந்து எடுக்கப் பட்ட படத்தில் தெரியும் அகற்றப் பட்ட கட்டிடம் முன்னாள் கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம். பின்னணியில், மேற்கு பெர்லின் பக்கம் தெரிவது Berlin Dom எனப்படும் பெர்லின் பேராலயம் (Berlin Cathedral) (படம்: சொந்த ஆவணம் 2008).
கிழக்கு ஜேர்மனி, சோவியத் கோட்பாட்டை அடியொற்றி உருவாக்கிய ஒரு கட்சி ஆட்சி முறை விரைவிலேயே அந்த நாட்டின் பொருளாதார, சமூக நிலைமைகளில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. வயதான கிழக்கு ஜேர்மனியர்கள் ஓரளவுக்கு சோசலிசத்தை, எளிமையான வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு உயிரோடிருக்கக் கற்றுக் கொண்டனர். ஆனால், இளம் கிழக்கு ஜேர்மனியர்களுக்கு இந்த எல்லைகள் வகுத்த வாழ்க்கை தேங்கிய குட்டையில் இருப்பது போன்ற ஒரு நிலையாகத் தெரிந்தது. இதனால், கணிசமான எண்ணிக்கையில் இளம் கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனி நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருந்தார்கள். 1951 இல், கிழக்கு ஜேர்மன் அரசு மேற்கு நோக்கிப் பயணம் செய்வோருக்கு பயண அனுமதி முறையொன்றைக் கொண்டு வந்தது. இதன் பிறகும், இளம் சந்ததி மேற்கு நோக்கி இடம் பெயர்வதைத் தடுக்க இயலவில்லை. 1951 முதல் 1961 வரையான 10 ஆண்டுகளில் மட்டும் 2 மில்லியன் வரையான கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனி நோக்கி இடம்பெயர்ந்தனர் - அவர்களுள் அரைவாசிப்பேர் 25 வயதுக்குட்பட்ட இளையோர் என ஒரு கணக்கெடுப்புச் சொல்கிறது. இந்த மேற்கு நோக்கிய இடம்பெயர்வு, கிழக்கில் பாரிய பொருளாதாரத் தேக்க நிலையையும், சனத்தொகை வளராத தேக்க நிலையையும் உருவாக்கியது தான், பெர்லின் சுவரை கிழக்கு ஜேர்மனி எழுப்பக் காரணமாக இருந்தது. ஆனால், இதை 1951 இன் பயண அனுமதி போலச் செய்யாமல், இரகசியமாக ஒரே இரவில் செய்தால் தான் மக்கள் எல்லையைப் பிய்த்துக் கொண்டு ஓடிவிடாமல் தடுக்கலாம் என கிழக்கு ஜேர்மன் அரசு உணர்ந்திருந்தது.
ஒபரேசன் றோஸ்
இந்த இரகசிய சுவர் எழுப்பல் நடவடிக்கைக்கு இடப்பட்ட பெயர் ஒபரேசன் றோஸ்! மிகவும் இரகசியமாக, மக்களுக்கு எந்த முன் சமிக்ஞையும் தராமல் திட்டமிடப் பட்ட இந்த நடவடிக்கைக்குத் தலைவராக எரிக் ஹெனேக்கர் இருந்தார் (இவர் பின்னர் கிழக்கு ஜேர்மன் தலைவராகவும் பதவி வகித்தவர்). மேற்கின் உளவு நிறுவனங்கள் கூட இது நடப்பதற்கு இரு நாட்கள் முன்னதாகத் தான் ஏதோ பெரிய திட்டம் இருப்பதை அறிந்து கொண்டிருந்தனர். ஒபரேசன் றோஸ், ஆகஸ்ட் 13 நள்ளிரவில் ஆரம்பமான போது, முதல் நடவடிக்கையாக இரு பெர்லின் பாதிகளுக்குமிடையிலான நிலக்கீழ் (U-bahn), தரைமேல் (S-bahn) ரயில்கள் உடனே நிறுத்தப் பட்டன - இதுவே மக்கள் ஏதோ நடக்கிறதென முதலில் உணர்ந்த தருணமாக இருந்தது. சடுதியாகவே கிழக்கு ஜேர்மன் எல்லைக் காவல் பொலிசின் பாதுகாப்போடு, பாரிய இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உயரமான கம்பி வேலிகள் கிழக்கு மேற்கு எல்லையில் எழுப்பப் பட்டன. இந்தக் கம்பி வேலிகள் அடுத்த ஒரு வாரத்தில் கொங்க்ரீட் சுவர்களால் பலம் பெற்றன. நூற்றுக் கணக்கான வீதிகள் கிழக்கு மேற்கு எல்லையில் மூடப் பட, பெர்லினில் இருந்த 80 எல்லைக் கடவைகள் 3 ஆக ஒரே இரவில் குறுக்கப் பட்டன. ஒபரேசன் றோஸ் வெற்றி, கிழக்கு பெர்லினில் இருந்து கிழக்கு ஜேர்மனியர் யாரும் மேற்கிற்கு நினைத்த வாக்கில் போக முடியாத சுவர் எழுந்து விட்டது.
ஜேர்மன் மக்கள் என்ன செய்தார்கள்?
தடாலடியாக நிகழ்ந்த இந்த நடவடிக்கைக்கு, கிழக்கு ஜேர்மன் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் பெரிதாக வரவில்லை. அதற்கான அவகாசமும் இருக்கவில்லை. ஆனால், மேற்கு பெர்லின் வாசிகள், எல்லைப் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்து தம் எதிர்ப்பைக் காட்டினர். அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சுப் படைகள் -குறிப்பாக இவர்கள் இராணுவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர்- எந்த துலங்கலையும் காட்டாமல், மேற்கு பெர்லின் மக்களைக் கட்டுப் படுத்த மட்டும் செய்தனர். கிழக்கு ஜேர்மன் படையினருக்கு மேற்கின் திசை நோக்கி ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட தீர்க்கக் கூடாதென கடுமையான உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. ஆனாலும், பின்னரங்கில், சோவியத் படையின் தாங்கிகள் நின்றதையும் மேற்கின் உளவுப் பிரிவு பதற்றத்தோடு அவதானித்துக் கொண்டிருந்தது. ஆனால், முள் வேலிகள் எழ ஆரம்பித்ததுமே, இது ஒரு மேற்கு நோக்கிய சோவியத் ஆக்கிரமிப்பு அல்ல என அமெரிக்கத் தரப்பு விளங்கிக் கொண்டதால், பதற்றம் தணிந்தது.
ஆனால், கிழக்கு பேர்லின் மக்கள் முன்னரை விட தீவிரமாக இப்போது மேற்கு பெர்லினை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். பெர்லின் சுவர் சில பகுதிகளில் வீடுகளின் கொல்லைப் புறச் சுவராகவே தெரியும் அளவுக்கு குடிமனைகளுக்கு நெருக்கமாகச் சென்றிருக்கிறது. இந்த இடங்களில் சில கிழக்கு பெர்லின் வாசிகள், சாளரங்கள் வழியாகக் குதித்து மேற்கு பெர்லினுக்குள் தப்பியோடிய சம்பவங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில், இத்தகைய சுவருக்கு அண்மைய வீடுகளின் கீழ் தளத்தை கிழக்கு ஜெர்மன் பொலிசார் முற்றாக சீல் வைத்து, மேல் தளத்தை மட்டும் விட்டு வைத்திருந்தனர். மக்கள், மேல் தளச் சாளரத்தின் வழியே மெத்தை, தலையணைகள் என்பவற்றை மேற்கு பெர்லின் பக்கம் எறிந்து, அவற்றின் மேல் குதித்து தப்ப முயன்ற சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. வெளிப்படையாக இல்லாமல், தப்பியோடுவோரை வேறு வழிகளில் தடுத்து நிறுத்த முடியாத பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவும் வழங்கப் பட்டிருந்தது. பெர்லின் சுவர் இருந்த காலப்பகுதி முழுவதும், 170 பேர் வரை கிழக்கு ஜேர்மன் எல்லைப் பொலிசாரினால் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர். ஆனாலும், மக்கள் தப்பியோடுவதும், சுரங்கப் பாதைகள் அமைத்து கிழக்கிலிருந்து மேற்கிற்கு ஆட்களைக் கடத்துவதும் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதனால், மேற்கு ஜேர்மனியின் சனத்தொகையும் (அதனால் பொருளாதாரமும்) வளர, கிழக்கு ஜேர்மனியின் சனத்தொகை 1951 முதல் 1989 வரை வளராமல் தேங்கியது.
மேற்கு அணியின் துலங்கல் என்னவாக இருந்தது?
1987 ஜூன் 12: மேற்கு பெர்லினில் றொனால்ட் றீகன் உரை. பின்னணியில் பெர்லின் சுவரும், அதன் பின்னால் பெர்லினில் பிரபலமான ப்றண்டன்பேர்க் வாயிலும் (Brandenburg Tor) தெரிகின்றன. (பட உதவி, நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம்).
மேற்கு ஜேர்மனி, கிழக்கிலிருந்து வரும் ஜேர்மனியர்களை அதிக அலட்டலில்லாமல் உள்வாங்கிக் கொண்டது. வருவோரில் பெரும்பாலானோர் வேலை செய்யக் கூடிய, மூளைசாலிகளாக இருந்தனர், எனவே மேற்கிற்கு இது ஒரு வரப்பிரசாதம். மேற்கு ஜேர்மனி திடீரென சோவியத் தாங்கிகளால் ஆக்கிரமிக்கப் படுமோ என்ற உசார் நிலையில் இருந்த அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சு அணிக்கு, பெர்லின் சுவர் சிறிது நிம்மதியைக் கொடுத்தது. ஆனாலும், பெர்லினுக்கு வெளியே இருக்கும் எல்லை வழியாக சோவியத் தாங்கிகள் நுழைவதை எதுவும் தடுக்க முடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும். இதற்கு ஒரே வழியாக, மேற்கில் நேட்டோவின் இருப்பை பலப்படுத்துவதும். பெர்லினை முழுவதும் கைவிட்டு விடாமல் இருப்பதுமே வழிகளென மேற்கு அணி உணர்ந்திருந்தது. பெர்லினை இராணுவங்களற்ற சூனியப் பிரதேசமாக மாற்ற வேண்டுமென்ற சோவியத் தரப்பு வாதங்களையும் மேற்கு ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒரே இரவில் எழுந்து, ஒரே இரவில் வீழ்ந்த சுவர்
பெர்லின் சுவரின் எச்சங்கள் இன்றும் பெர்லின் நகரின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இங்கே பேருந்துச் சாளரத்தினூடு தெரிவது பெர்லின் இந்திய தூதுவராலயத்திற்கு அருகில் காணப்படும் பெர்லின் சுவரின் எச்சம் (படம்: சொந்த ஆவணம், 2008).
கிழக்கு ஐரோப்பாவின் மீது சோவியத்தின் செல்வாக்கு படிப்படியாக பலவீனமடைந்து வந்து கொண்டிருந்தது. 1946 முதல், கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகளில் மக்கள் எதிர்ப்பு உள்ளூர் கம்யூனிச ஆட்சிகளுக்கெதிராக எழுந்த போதெல்லாம், சோவியத் தாங்கிகள் தெருவில் இறங்கி மக்களை எதிர் கொள்வதே வழமையாக இருந்தது. கிழக்கு ஜேர்மனியில் கூட ஒரு தொழிலாளர் புரட்சி ஆர்ப்பாட்டம் இப்படித் தான் சோவியத் உதவியுடன் அடக்கப் பட்டது. ஆனால், 1985 இல் மிகையில் கொர்பசேவ் சோவியத் நாட்டின் தலைமையை ஏற்றது முதல் சில மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தார். இதனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஒரு கட்சி ஆட்சிக்கெதிராக புதிய கட்சிகளும், அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. போலந்தில், லெக் வலெசா தலைமையில் உருவான "ஒற்றுமை இயக்கம் – Solidarity Movement" இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கிழக்கு ஐரோப்பாவை மேற்கிலிருந்து பிரித்து வைத்திருந்த "இரும்புத் திரை" (Iron Curtain- இந்தச் சொற்பதத்தை முதலில் பாவித்தவர் வின்ஸ்ரன் சேர்ச்சில்) மீது, சிறு ஓட்டைகள் விழ ஆரம்பித்தன. நவம்பர் 1989 இல் பெர்லின் சுவர் தாரை தப்பட்டைகளோடு வீழந்தமை தான் செய்திகளில் பெரிதாக பிரபலமானது. ஆனால், அதே ஆண்டு ஏப்ரலில், அதிக ஊடக வெளிச்சமில்லாமல், ஹங்கேரி, ஆஸ்திரியாவின் எல்லையில் தான் எழுப்பி வைத்திருந்த மின்சார வேலியை அகற்றியது. ஹங்கேரியில் கம்யூனிச ஆட்சி ஈடாட்டம் கண்ட பின்னர் இந்த மாற்றம்.
யார் பெர்லின் சுவரைத் தகர்த்தது?
படிப்படியான கிழக்கு ஐரோப்பிய மாற்றங்களோடு, அமெரிக்காவின் தலைமையில் மேற்கு அணி செயல்படுத்திய அழுத்தங்களும் பெர்லின் சுவரைத் தகர்த்தன என்பதே சரியானது. 1987 இல் பெர்லின் சுவருக்கு அண்மையான ப்றண்டன்பேர்க் வாயிலுக்கருகில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு உரையை ஆற்றிய அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகன் “Mr. President, tear down this wall!” என்று (கொர்பச்சேவ் நோக்கி) பகிரங்க அழைப்பு விடுத்தது ஒரு பிரபலமான நிகழ்வு.
இரு ஆண்டுகள் கழித்து, நவம்பர் 9, 1989 இல் ஒரு கிழக்கு ஜேர்மன் அதிகாரி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் " கிழக்கு, மேற்கு பேர்லின் வாசிகள் தடையின்றிப் பயணிக்கலாம்” என்ற தொனியிலான ஒரு அறிவித்தலை விடுத்த சில மணித்துளிகளில், ஆயிரக்கணக்கான கிழக்கு பேர்லின் வாசிகள் பெர்லின் சுவரை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். அன்றிரவு 11 மணிக்கு கிழக்கு ஜேர்மன் எல்லைக்காவலர்கள் தடுப்புகளின்றி மக்கள் மேற்கினுள் நுழைய அனுமதிக்க ஆரம்பித்தார்கள். 11.30 மணிக்கு சகல பெர்லின் எல்லைக் கடவைகளும் திறக்கப் பட்டன. பெர்லின் வாசிகள் சில இடங்களில், சுவரை அகற்ற ஆரம்பித்தார்கள். அடுத்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2 மில்லியன் கிழக்கு ஜேர்மன் வாசிகள் திறந்த பெர்லின் சுவரினூடாகப் பயணித்து மேற்கு ஜேர்மனியில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள் என ரைம்ஸ் இதழ் சொல்கிறது.
விளைவுகள் எவை?
பெர்லின் சுவர் அகற்றப் பட்டவுடனேயே கிழக்கும் மேற்கும் ஒன்று சேர்ந்து விடவில்லை, அது 1990 ஒக்ரோபரில் சோவியத் - மேற்கு அணிக்கிடையிலான பேச்சு வார்த்தைகளின் பின்னர் நிகழ்ந்தது. ஆனால், இரு ஜேர்மனிகளும் சேர்ந்தமை, சோவியத் ஒன்றியம் என்ற கம்யூனிச நாட்டின் சவப்பெட்டி மீது அடிக்கப் பட்ட முதல் பெரிய ஆணி என்று சொல்லலாம். இதையடுத்து நிகழ்ந்த சம்பவங்கள், சோவியத் ஒன்றியத்தை உள்ளிருந்தே நொருங்க வைத்த காரணிகளாகத் தொடர்ந்து, 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் முற்றாக இல்லாமல் போனது.
-மேலும் வரும்