இலங்கையை ஆக்கிரமிக்க இந்திரா காந்தி விரும்பாதது ஏன்?
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் மென்மையான போக்கு தமிழ்நாட்டில் கடுமையான அதிருப்தியைத் தோற்றுவித்து வருவதை இந்திரா உணரத் தலைப்பட்டார். ஆகவே வேறு வழியின்றி ஜெயவர்த்தனவுடன் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுக்க எண்ணிய அவர் ஆவணி 17 ஆம் திகதி மீண்டும் அவரை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். ஜெயாருடன் பேசும்போது இந்தியா ராணுவ ரீதியில் இலங்கையில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருவதாகக் கூறினார். ஆகவே, தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வுகுறித்த பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிப்பதன் மூலமே தமிழ்நாட்டின் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று ஜெயாரிடம் கூறினார் இந்திரா. இதற்காக தனது பிரத்தியேக ஆலோசகரான பார்த்தசாரதியை இலங்கைக்கு அனுப்பிவைப்பதாகவும், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதில் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவர் உதவுவார் என்றும் தெரிவித்தார்.
இந்திராவின் தொலைபேசி அழைப்பு வந்தபோது இலங்கையில் இருந்த இந்தியப் பத்திரிக்கையாளர் ஒருவருக்குச் செவ்வியொன்றினை வழங்கிக்கொண்டிருந்தார் ஜெயார். இந்திரா பார்த்தசாரதியின் பெயரைப் பரிந்துரைத்தபோது தன்னைப் பேட்டி கண்டுகொண்டிருந்த இந்தியப் பத்திரிக்கையாளரைப் பார்த்து, "யார் இந்தப் பார்த்தசாரதி?" என்று ஜெயார் கேட்டார். அவர் 73 வயதுடைய, பிரதமருக்கு வெளிவிவகாரங்கள் தொடர்பாக ஆலோசகராக இருப்பவர் என்றும், அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் ஆணைக்குழுவின் முக்கிய உறுப்பினர் என்றும், சென்னையைத் தளமாகக் கொண்டியங்கும் ஆங்கிலப் பத்திரிக்கையான ஹிந்து குழுமத்தின் குடும்ப உறுப்பினர் என்றும் பதில் வந்தது. மறுநாள் , ஆவணி 18 ஆம் திகதி லோக்சபாவில் பேசிய இந்திரா, "நேற்று, நான் மீண்டும் இலங்கையின் அதிபர் ஜெயவர்த்தனவுடன் தொலைபேசியில் உரையாடினேன். ஜெயவர்த்தனவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு எனது தூதுவரையும் இன்னும் சில அதிகாரிகளையும் அனுப்புவதாக அவரிடம் கூறினேன். எனது கோரிக்கைகளை ஜெயவர்த்தன ஏற்றுக்கொண்டார். அதன்படி, எமது மூத்த இராஜதந்திரியான சிறி ஜி.பார்த்தசாரதி அவர்களை முக்கியமானதும், சிக்கலானதுமான இந்த நடவடிக்கைக்காக வருகிற வாரம் கொழும்பிற்கு அனுப்பிவைக்கவுள்ளேன்" என்று கூறினார்.
கோபாலசாமி பார்த்தசாரதி
தற்போது எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், வங்கதேசப் பிரச்சினையின்போது தனது இராணுவத்தை அனுப்பி அம்மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுத்த இந்திராவை, இலங்கையில் தனது இராணுவத்தை அனுப்பமுடியாமல்த் தடுத்தது எது? என்பதுதான். தனது எதிரியான பாக்கிஸ்த்தானைப் பலவீனப்படுத்த வங்கதேசப் பிணக்கில் இராணுவ ரீதியில் தலையீடு செய்யவேண்டிய தேவை இந்திராவுக்கு இருந்தது. வங்கதேசத்தை விடுவித்ததன் மூலம் ஏக காலத்தில் இந்தியாவின் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வரக்கூடிய இராணுவ தாக்குதல்களை கிழக்கில் நிரந்தரமாகவே தடுத்துவிடக்கூடிய சந்தர்ப்பம் இந்தியவுக்கு இந்தியாவுக்குக் கிடைத்தது. ஆகவேதான் இந்தியா கிழக்கு பாக்கிஸ்த்தானைப் பிரித்தெடுத்து வங்கதேசத்தை உருவாக்க உதவியது. ஆனால், இலங்கையினை ஆக்கிரமிப்பதன் மூலம் இந்தியாவின் தென்பகுதியின் பாதுகாப்புப் பலவீனப்படும் நிலை இருந்தது. ஆகவேதான், இந்திரா அதனை எப்படியாவது தவிர்க்க முடிவெடுத்தார்.
இந்திராவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கை தொடர்பாக பின்வரும் விளக்கத்தினை அவருக்கு வழங்கியிருந்தார்கள்,
"நீங்கள் இலங்கையில் ஈழம் எனும் தனிநாட்டை உருவாக்க உதவினீர்கள் என்றால், இலங்கையில் இரு நாடுகளான சிறிலங்காவும், ஈழமும் இருக்கும். ஈழம் எனும் தமிழ்ப் பிரதேசம் இந்தியாவுக்கு நட்பாக இருந்தாலும், சிறிலங்கா எனும் நாடு இந்தியாவின் நிரந்தர எதிரியாக மாறிவிடும். அதன்பின்னர் இந்தியாவுக்கு எதிரான வெளிநாடுகள் சிறிலங்காவைத் தமது தளமாகப் பாவிப்பதற்கு அது கதவுகளைத் திறந்துவிடும். இது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுருத்தலாக மாறும். இலங்கையில் இந்தியாவுக்கெதிரான நாடுகள் களம் அமைப்பதனைத் தடுக்கவேண்டுமென்றால், இலங்கை ஒருநாடாக இருப்பதிலேயே அது தங்கியிருக்கிறது. ஆகவே, இலங்கை மீது இராணுவ நடவடிக்கை எதனையும் எடுக்கவேண்டாம்" என்று அவர்கள் இந்திராவுக்கு ஆலோசனை வழங்கினர்.
இதனையடுத்து இந்திரா அரசியல் விவகார ஆணைக்குழு, அரசியல்க் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் தனது ஆலோசகர்கள் வழங்கிய அறிவுருத்தல்கள் தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடல்கள் மற்றும் இவற்றின் மூலமான முடிவுகள் குறித்து அரசியல் ஆய்வாளரான கலாநிதி பாபனி சென் குப்தா கூறுகையில் "இவையே இந்திராவின் போதனைகள் அல்லது பிராந்தியப் பாதுகாப்புக் குறித்த இந்திராவின் போதனைகள்" என்று நாளடைவில் அழைக்கப்படலாயின என்று கூறுகிறார்.
குப்தா மேலும் கூறுகையில்,
தென்னாசியாவின் நாடொன்றில் இடம்பெறும் உள்நாட்டு விவாகரங்கள் எதிலும் தலையிடுவதில்லை எனும் கொள்கையினையே இந்தியா கொண்டிருக்கிறது. மேலும், வேறு நாடுகளும் இன்னொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா எதிர்க்கிறது. இந்தியாவின் நலன்களுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் வகையில் இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிலாவது வெளிநாடொன்று தலையிடுமாக இருந்தால் இந்தியா அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை. ஆகவே, இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் சென்று இப்பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாடும் வெளிநாடொன்றில் இராணுவ உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் இந்தியா சகித்துக்கொள்ளாது.
ஆனால், தென்னாசியாவில் உள்ள எந்தவொரு நாடாவது உள்நாட்டில் நடக்கும் தீவிரமான பிணக்கொன்றினைத் தீர்ப்பதற்காகவோ அல்லது மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்குச் சவால்விடும் வகையிலான கிளர்ச்சியை அடக்கவோ தன்னைச் சுற்றியிருக்கும் தென்னாசிய நாடுகளிடமிருந்து, குறிப்பாக இந்தியாவிடமிருந்து உதவியினைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறான சூழ்நிலைகளின்போது குறிப்பிட்ட அந்த நாட்டின் அரசாங்கம்,இந்தியாவைத் தவிர்த்து பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளிடம் உதவியினைக் கோருவது இந்தியாவிற்கு எதிரான, அதன் நலன்களுக்குப் பாதகத்தினை விளைவிக்கும் செயற்பாடுகளாக இந்தியாவினால் கருதப்படும்.
இந்தியா இலங்கை விவகாரத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் ஈடுபடாமைக்கான காரணம், அப்பிராந்தியத்தில் இலங்கை இராணுவ உதவிகோரிய நாடுகள், இலங்கையில் தலையிடக்கூடாதென்றும், தானும் தலையிடப்போவதில்லையென்றும் கூறியிருந்தது. இந்தியாவின் கோரிக்கையினை மீறி எவராவது தலையிட்டால் இந்தியா அதனைப் பொறுத்துக்கொள்ளாது என்றும் மிரட்டியிருந்தது. ஆகவேதான், பேச்சுவார்த்தைகளுக்கான நல்லெண்ண உதவிகளைத்தவிர வேறு எதனையும் தமிழர்களுக்குச் செய்வதற்கு இந்தியா முன்வரவில்லை.
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் (1990) கொழும்பில் நடைபெற்ற வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான கருத்தரங்கில் பேசப்பட்ட ஒரு விடயம் குறித்து இங்கே குறிப்பிட விரும்புகிறேன் . ஜெயவர்த்தன அரசாங்கத்தின் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் முயற்சிகளை எதிர்கட்சித் தலைவரான அநுர பண்டாரநாயக்க கடுமையாக விமர்சித்திருந்தார். "நீங்கள் ஆயுதங்களைக் கேட்டீர்கள், ஆனால் எதனையுமே உங்களால் பெற்றுக்கொள்ளமுடியவில்லை" என்று அவர் கூறினார். இடைமறித்த அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி, "ஆம், நாங்கள் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா எமது முயற்சிகளை முட்டுக்கட்டை போட்டு முறியடித்துவிட்டது. நாம் ஆயுதங்களைக் கேட்ட நாடுகளைத் தொடர்புகொண்ட இந்தியா, "நாம் இலங்கையை ஆக்கிரமிக்கப்போவதில்லை, ஆகவே நீங்கள் அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை" என்று கூறியிருந்தது. இந்திய ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளவே ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயன்றோம், ஆனால் இந்தியா எம்மை ஆக்கிரமிக்கப்போவதில்லையென்று எமக்கு தெரிந்ததன் பின்னர் அந்த நாடுகளிலிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லாமல்ப் போய்விட்டது" என்று கூறினார்.
1983 ஆம் ஆண்டின் ஜூலை இனக்கலவரங்களே தமிழரின் விடுதலைப் போராட்டத்திலும், இலங்கையின் சரித்திரத்திலும் முக்கிய திருப்பங்களாக இருந்தன. அதேபோல, ஆவணி மாதத்தின் முதல் 17 நாட்களும் எதிர்காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் அனுபவிக்கக் கூடிய சுதந்திரத்தின் அளவைத் தீர்மானித்தன என்று கூற முடியும். இந்தச் சுதந்திரம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையினால் கட்டுப்படுத்தப்பட்டது மட்டுமன்றி, இந்திராவின் போதனைகளின் அடிப்படையில் தமிழர்களுக்கான தீர்வாக இந்தியா முன்னெடுத்த செயற்பாடுகளாலும் தீர்மானிக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை.