இந்திய சுதந்திரதின விழாவில் விசேட அதிதியாக வரவேற்பளிக்கப்பட்ட அமிர்தலிங்கம்
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுக்களின்போது ஏற்பட்ட தோல்விகளையடுத்தே தமிழ் மக்கள் தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தார்கள் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் அமிர்தலிங்கம். 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் அடிப்படையில் பிரிந்துசெல்வதென்று முடிவெடுத்திருந்தபோதிலும், ஜெயாருடன் பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்வுகாண்பதற்கு தமிழர்கள் தீவிரமாக முயன்று வந்ததாக அவர் கூறினார். ஆயுத அமைப்புக்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் எனும் தீர்வினை ஏற்றுக்கொள்ள தாம் முன்வந்திருந்ததாகவும் அவர் கூறினார். ஆனால், அதிகாரங்களோ, போதிய நிதிவளமோ அற்றநிலையில் மாவட்ட சபைகள் பிரியோசனமற்ற ஒரு தீர்வென்பதை தாம் உணர்ந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.மாவட்ட சபைகளுக்கான அதிகாரத்தையும், நடத்துவதற்கான நிதியையும் கேட்டபோது நாம் தாக்கப்பட்டோம் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்தியாவும், சர்வதேச சமூகமுமே இன்று எம்மைக் காக்கமுடியும் என்று பத்திரிக்கையாளர்களைப் பார்த்துக் கூறினார் அமிர். ஜெயவர்த்தன மீதும் அவரது அரசாங்கத்தின் மீது நாம் வைத்திருந்த நம்பிக்கையினை முழுமையாக இழந்துவிட்டோம். அவர்களுடன் பேசுவதில் இனிப்பயனில்லை. தமிழர்களை அழிக்கவே அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். ஆவணி 14 ஆம் திகதி அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் சம்பந்தனும் இந்திராகாந்தியைச் சென்று சந்தித்தனர். இந்திராவின் ஆலோசகர் கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும், இந்திராவின் செயலாளர் பி. சி. அலெக்ஸாண்டர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர். இலங்கையில் நிலவும் சூழ்நிலை குறித்து இரண்டுமணி நேரம் அவர்கள் பேசினார்கள். பின்னர், தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அத்தீர்வில் இந்தியா வகிக்கப்போகும் பாத்திரம் குறித்தும் பேசப்பட்டது.
தமிழர்களின் பிரச்சினை தொடர்பான சுருக்கமான சரித்திரத்தை இந்திராவுக்கு
விளக்கினார் அமிர். அகிம்சை வழியில் தந்தை செல்வாவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களும் அதன் தோல்வியும் அவருக்கு உணர்த்தப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் வாழ்வதே இன்று அவர்கள் முன்னாலிருக்கும் உடனடித் தேவை என்று அவர் கூறினார். "சுய அதிகாரம் மிக்க சமஷ்ட்டிக் கட்டமைப்பு ஒன்றினையே நாம் கோரினோம். அது மறுக்கப்பட்டதனாலேயே தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்தோம்" என்று அவர் கூறினார்.
தமிழரின் பிரச்சினை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை இந்திரா முன்வைத்தார். இலங்கையைப் பிரிப்பதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர்களிடம் திட்டவட்டமாகக் கூறினார் . ஒன்றுபட்ட இலங்கைக்குள், தனிநாட்டிற்குக் குறைவான சுய ஆட்சி உள்ள பிராந்தியங்கள் எனும் அடிப்படையில் தமிழர்கள் தீர்வொன்றினைக் கோரமுடியும் என்று அவர்களிடம் கூறினார் இந்திரா. "உங்களின் முதலாவது கோரிக்கையான சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வுக்கே செல்லுங்கள், இந்தியா உங்களுக்கு ஆதரவாக நிற்கும்" என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் தெரிவித்தார்.
என்னுடன் பின்னர் பேசிய சம்பந்தன், இலங்கையின் தமிழர் - சிங்களவர் பிணக்கில் இந்தியா எத்தரப்பையும் ஆதரிக்காது என்று இந்திரா தம்மிடம் உறுதிபடக் கூறியதாகச் சொன்னார். சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காதவகையில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றினை வழங்குவது மட்டுமே இந்தியாவால் செய்யக்கூடியதும், செய்யவிரும்புவதும் என்று இந்திரா அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரிடம் கூறியிருக்கிறார். இலங்கையில் சுய கெளரவத்துடனும், பாதுகாப்புடனும் தமிழர்கள் வாழ்வதை உறுதிப்படுத்த தன்னால் முயற்சியெடுக்க முடியும் என்றும் இந்திரா கூறியிருக்கிறார். பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலன்களைப் பாதிக்காத வகையிலேயே இதனைச் செய்யவேண்டியிருக்கும் என்று அவர் இப்பேச்சுக்களின்போது வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.
இந்தியாவின் இந்த பரிந்துரைகளை உடனடியாகவே ஏற்றுக்கொண்ட அமிர்தலிங்கம், வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்பட்டாலே போதும் என்று இந்திராவிடம் தெரிவித்தார். தமிழர்களின் அபிலாஷைகள் என்று தந்தை செல்வாவின் சமஷ்ட்டிக் கட்சியினால் அறியப்பட்ட விடயங்களை 1956 ஆம் ஆண்டு திருகோணமலையில் நடைபெற்ற சமஷ்ட்டிக் கட்சியின் மாநாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறிய அமிர்தலிங்கம் அதுகுறித்து இந்திராவுக்கு விளங்கப்படுத்தினார்,
தமிழர்களுக்கான தேசம், தமிழர்களுக்கான தாயகம், சுயநிர்ணய உரிமை மற்றும் குடியுரிமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தமிழர்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் விளங்கப்படுத்தினார்.
பின்னர் ஜெயார் தூதனுப்பிய ஹெக்டர் ஜயவர்த்தனவுடனான தனது பேச்சுக்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடம் விளங்கப்படுத்தினார் இந்திரா. மாவட்ட அபிவிருத்திச் சபைகளைப் பலப்படுத்த ஜெயவர்த்தன இணங்கியிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார் அவர். ஆனால், இத்திட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானது அல்ல என்று ஹெக்டரிடம் ஏற்கனவே இந்திரா தெரிவித்திருந்தார். அதனையடுத்து ஏனைய தீர்வுகள் குறித்து ஆராய ஜெயார் இணங்குவதாக இந்திராவிற்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே மீண்டும் அனைத்துக் கட்சி மாநாடொன்றினைக் கூட்டப்போவதாக ஜெயார் அறிவித்திருந்தார். இதன் பின்னணியில், ஜெயார் உத்தேசித்திருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறீர்களா என்று அமிர் தலைமையிலான தூதுக்குழுவினரைப் பார்த்துக் கேட்டார் இந்திரா.
இதற்குப் பதிலளித்த அமிர்தலிங்கம், மன்னாரில் நடைபெற்ற த.ஐ.வி. மு யினரின் வருடாந்த மாநாட்டில் இலங்கையரசாங்கத்துடன் இனிமேல் பேசுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டதாகக் கூறினார். எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக அவர் ஒவ்வொரு முறையும் கூறுவார், ஆனால் அவற்றினை ஒருபோதுமே அவர் நடைமுறைப்படுத்த மாட்டார் என்று ஜெயார் குறித்து இந்திராவிடம் கூறினார் அமிர்தலிங்கம். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவுடன் 11 மாதங்களாகத் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைகளை ஜெயவர்த்தன எப்படி தனக்குச் சார்பாகக் கையாண்டார் எனும் விடயத்தை இந்திராவுக்குத் தெரியப்படுத்தினார் அமிர்.
"கடந்த காலத்தில் இலங்கையரசுடன் செய்துகொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் அனைத்தையும் அவர்கள் கைவிட்டு விட்டதால், அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையினை நாம் முற்றாக இழந்துவிட்டோம்" என்று அமிர் கூறினார். பதிலளித்த இந்திரா, தானும் ஜெயவர்த்தனவை நம்புவதில்லை என்று தெரிவித்தார். ஆனால், பேச்சுவார்த்தைகளுக்காக ஜெயார் விடுக்கும் அழைப்பினை தமிழர்கள் தவறவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். "நான் முன்னர் கூறியதுபோல, இப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை மேசையினூடாகவே எட்டப்பட முடியும்" என்று மீண்டும் கூறினார் இந்திரா. இந்திராவின் நிலைப்பாட்டைப் பாராட்டிய அமிர்தலிங்கம், பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்கான இணக்கத்தினைத் தெரிவித்தார்.
அமிர்தலிங்கத்தின் திடீர் மனமாற்றத்தையும், பேச்சுக்களில் கலந்துகொள்ளும் இணக்கத்தையும் இந்திரா பாராட்டினார். மறுநாளான ஆவணி 15 இல் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் சிறப்பு அதிதியாக அமிர்தலிங்கத்தை அழைத்தார் இந்திரா. இந்தியாவின் செங்கோட்டைக்கு கெளரவமாக அழைத்துச் செல்லப்பட்ட அமிர்தலிங்கம், வெளிநாட்டு அரச அதிபர்களுக்கு இணையான வவேற்பினையும், உபசரிப்பையும் பெற்றுக்கொண்டார். அங்கு கலந்துகொண்ட அரச அதிபர்களில் அமிர்தலிங்கம் மட்டுமே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். செங்கோட்டையிலிருந்து இந்திய நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்திரா இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக சிங்களவர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கடுமையாகக் கண்டித்தார். அது ஒரு இனக்கொலை என்று அவர் வர்ணித்தார். தமிழர்கள் சுயகெளரவத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ இந்தியா உதவும் என்றும் கூறினார்.