மட்டக்களப்புச் சிறையுடைப்பு
தமிழ்ப் போராளிகள் இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்குச் செல்கிறார்கள் என்கிற செய்தி இலங்கை இராணுவத்தின் காதுகளுக்கும் எட்டியது. கார்த்திகை மாதம் வரை தமிழ்ப் போராளிகளுக்கு இந்தியா பயிற்சியளித்துவரும் விடயம் இலங்கைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அது தெரியவருமுன்பே ஜெயவர்த்தனவுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் 1983 ஆம் ஆண்டு புரட்டாதி 23 ஆம் திகதி இடம்பெற்ற மட்டக்களப்புச் சிறைச்சாலையுடைப்பு.
ஆடி 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின்போது தப்பிய 19 தமிழ் அரசியல்க் கைதிகளை அரசு ஆடி 28 ஆம் திகதி மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றியிருந்தது. விமானப்படை விமானமொன்றில் மட்டக்களப்பிற்கு இழுத்துச் செல்லப்பட்ட தமிழ்க் கைதிகளை வான் ஒன்றில் ஏற்றி மட்டக்களப்பு விமானப்பட முகாமிலிருந்து மட்டக்களப்பு நகரில் அமைந்திருந்த ஆனைப்பந்தி எனும் இடத்திற்கு பொலீஸார் இழுத்துச் சென்றார்கள். மட்டக்களப்பு வாவியால் சூழப்பட்ட சிறைச்சாலை இப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது.
மட்டக்களப்புச் சிறைச்சாலையில் மேலும் 22 அரசியற்கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு விரிவுரையாளர்களான வரதராஜப் பெருமாள் மற்றும் மகேந்திரராஜா ஆகியோரும் அடக்கம். மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினரால் சத்துருக்கொண்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட கார்ல் மார்க்ஸ் நூற்றாண்டு நினைவுதினத்தில் உரையாற்றுவதற்காக இந்த விரிவுரையாளர்கள் இருவரையும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பியிருந்தது. இந்த விடயம் பொலீஸாருக்குத் தெரியவந்ததையடுத்து நிகழ்வினை ஒழுங்குசெய்தவர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து வருகைதந்திருந்த இரு விரிவுரையாளர்களையும் அது கைதுசெய்து வைத்திருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிவா, மணி, குமார், வடிவேலு, சிறீஸ்கந்தராஜா ஆகிய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களும் அடக்கம். அவ்வமைப்பின் தலைவர் பத்மநாபாவும் இந்த நிகழ்விற்கு வந்திருந்தார். அவர் வந்திருப்பது பொலீஸாருக்கு தெரிந்திருக்காமையினால் அவர் கைதுசெய்யப்படவில்லை.
மட்டக்களப்புச் சிறைச்சாலை உடைக்கப்பட்டபோது அங்கு 41 தமிழ் அரசியற்கைதிகளும் இன்னும் குற்றச்செயல்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 150 கைதிகளும் இருந்தனர். மூவினத்தைச் சேர்ந்த கைதிகளும் அடைத்துவைக்கப்பட்டிருந்த இச்சிறைச்சாலையில் மிகக் கொடூரமான குற்றவாளிகள் சிலரும் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த பரமதேவா என்பவரும் அப்போது சிறைச்சாலயில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்த ஆரம்ப நாட்களில் கைதுசெய்யப்பட்டிருந்தவர் அவர். அவரது தண்டனைக் காலம் விரைவில் முடிவுறும் தறுவாயில் இருந்தபோதும்கூட சிறையுடைப்புக் குழுவினருடன் அவரும் இணைந்துகொண்டார்.
வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகளில் இருந்து உயிர்தப்பி மட்டக்களப்புச் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த 19 தமிழ் அரசியற்கைதிகளிடமிருந்தும் வெலிக்கடையில் நடைபெற்ற படுகொலைகள் தொடர்பான விபரங்களை கேட்டறிந்துகொள்ள உயர் அதிகாரிகள் அடங்கிய பொலீஸ் குழுவொன்று ஆவணி மாதத்தில் அங்கு விஜயம் செய்திருந்தது. ஆனால், இந்த விசாரணைகளை முற்றாகப் புறக்கணிப்பதென்று 19 கைதிகளும் முடிவெடுத்திருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்த அதிகாரிகள் வெலிக்கடையில் நடந்த விடயங்கள் குறித்து அறிய முயன்றனர். ஆனால், பொலீஸ் அதிகாரிகள் மீது தமக்கு நம்பிக்கை சிறிதும் இல்லையென்று கூறிய அவர்கள் விபரங்கள எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த பொலீஸ் அதிகாரிகள் தமது கோபத்தை கைதிகள் மீது காட்ட முயன்றனர்.
பொலீஸ் அதிகாரிகள் சென்றபின்னர் கைதிகளுடன் பேசிய சிறையதிகாரிகள் சிங்களப் பகுதியொன்றில் அதியுயர் பாதுகாப்புக்கொண்ட சிறையொன்று கட்டப்பட்டு வருவதாகவும் வெகுவிரைவில் தமிழ்க் கைதிகளை புதிய சிறைச்சாலைக்கு மாற்றவிருப்பதாகவும் தெரிவித்தனர்.
"எங்களை மீண்டும் சிங்களப் பகுதிக்கு இழுத்துச் சென்று கொல்லவே அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நாம் நினைக்கத் தொடங்கினோம்" என்று சிறையுடைப்பின்போது தப்பிய கைதியொருவர் என்னிடம் கூறினார். சிறையுடைப்பு திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் அங்கிருந்த அனைவராலும் ஒருமித்தே எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
புளொட் அமைப்பின் ராணுவப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தவரும் பின்னர் இலங்கை ராணுவத்தின் கூலிப்படையாகச் செயற்பட்டவருமான மாணிக்கதாசனுடன் அவரது மெய்ப்பாதுகாவலர்கள்
போராளித் தலைவர்களாகக் காணப்பட்ட டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், பனாகொடை மகேஸ்வரன், பரமதேவா ஆகியோர் சிறையுடைப்பு முயற்சிக்குத் தலைமை தாங்கினர்.
சிறையினை உடைத்து அனைவரும் வெளியேறும்வரை ஒன்றிணைந்து செயற்படுவதென்றும் அதன்பின்னர் ஒவ்வொரு குழுவினரும் தத்தமது இடங்களுக்குத் தப்பிச் செல்லமுடியும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
"சிறையுடைப்பினை மிகக் கவனமாகத் திட்டமிட்டோம்" என்று அவர் கூறினார். திட்டத்தின் சாராம்சம் என்னவெனில் சிறையதிகாரியையும் ஏழு காவலர்களையும் மடக்கிப் பிடித்து அவர்களை கதிரைகளுடன் கட்டி, வாய்களுக்குள் துணிபொதிந்து விட்ட பின்னர் சிறையின் முன்வாயிலாலேயே வெளியேறுவது என்பதுதான். சிறைவாயிலின் சாவிகளின் பிரதிகள் சவர்க்காரக் கட்டிகளில் பிரதிசெய்யப்பட்டு தயாரித்துவைக்கப்பட்டிருந்தன. திடமான தேகக் கட்டமைப்பைக் கொண்டிருந்த டக்ளஸ் தேவாநந்தா, மாணிக்கதாசன், மகேஸ்வரன் மற்றும் பரந்தன் ராஜன் ஆகியோர் சிறைக் காவலாளிகளை மடக்கிப் பிடிப்பதென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது எந்த இயக்கத்தையும் சேர்ந்திராத வரதராஜப் பெருமாள் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அழகிரி ஆகியோருக்கு முன்வாயில் திறக்கப்பட முடியாது போகுமிடத்து பின்பகுதியில் உள்ளை சிறைச்சாலைச் சுவரை உடைத்து தயாராக நிற்கும் பணி கொடுக்கப்பட்டது. சிறையதிகாரியினதும், சிறைக் காவலாளிகளினதும் வாய்களைக் கட்டிப்போடும் பணி வைத்தியர் ஜயதிலகராஜாவுக்கும் காந்தியத்தின் டேவிட் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது.
தப்பிச் செல்வதற்கான நேரத்தை மிகக் கவனமாக அவர்கள் குறித்துக்கொண்டார்கள். சிறைச்சாலையின் முன்வாயிலில் எப்போதுமே ஒரு காவலாளி கடமையில் இருப்பார். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இராணுவ ரோந்து வாகனம் ஒன்று சிறைச்சாலைப் பகுதியைச் சுற்றி வலம்வந்துகொண்டிருக்கும். இதற்கு மேலதிகமாக பொலீஸ் ரோந்து வாகனம் ஒன்றும் இப்பகுதிக்கு வந்துசென்றுகொண்டிருக்கும். ஆகவே வெறும் 7 நிமிட இடைவெளிக்குள் சிறையுடைப்பை நிகழ்த்தித் தப்பிச் செல்லவேண்டும்.
தப்பிச்செல்வதற்கு இரவு வேளையைத் தேர்ந்தெடுத்தார்கள். வீதிகளில் அதிக ஆள் நடமாட்டம் இல்லாமலும் ஆனால் முற்றாக வெறிச்சோடிக் கிடவாமலும் இருப்பதே தப்பிச் செல்வதற்கு ஏதுவானது என்று முடிவெடுத்தார்கள். அதன்படி இரவு 7:25 இலிருந்து 7:32 இற்கிடையில் தப்பிச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது இராணுவ ரோந்தணி கிளம்பிச் சென்று பொலீஸ் ரோந்தணி வருவதற்கிடையில் அவர்கள் தப்பிச் செல்ல வேண்டும்.
ஆயுதங்களைக் கடத்தும் பணி இராணுவப் பயிற்சி பெற்ற போராளிகளிடமே விடப்பட்டது. டக்ளசும் அவரது ஏனைய தோழர்களும் வெளியிலிருந்து தமது சகாக்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் தப்பிச் செல்வதற்கான வாகன ஒழுங்குகளைச் செய்திருந்தனர். அதன்படி மத்திய குழு உறிப்பினரான குணசேகரம் என்பவர் சிறைச்சாலையின் வாயிலுக்கு வெளியே டக்ளஸ் குழுவினரை பொறுப்பெடுக்கும் பொருட்டு நிற்கவைக்கப்பட்டார். மாணிக்கதாசன், பரந்தன் ராஜன், வாமதேவன், பரூக் மற்றும் டேவிட் ஆகியோருக்கு புளொட் அமைப்பு ஆயுதங்களை வழங்கியதுடன் அவர்கள் தப்பிச் செல்லும் ஒழுங்குகளையும் செய்திருந்தது. தமிழ் ஈழ ராணுவம் எனும் அமைப்பின் தலைவரான பனாகொடை மகேஸ்வரன் தானும் தனது இரு தோழர்களான காளி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரும் மட்டக்களப்பு வாவியூடாக படகில் தப்பிச் செல்வதாகக் கூறினார்கள்.
நித்தியானந்தன், அவரது மனைவி நிர்மலா, குருக்களான சின்னராசா, ஜயதிலகராஜா, சிங்கராயர் மற்றும் வைத்தியர் ஜயகுலராஜா ஆகியோர் புலிகளின் அனுதாபிகளாக இருந்தனர். மற்றையவர்களுடன் பேசிய குரு சிங்கராயர் அவர்கள், தான் தப்பிச் செல்ல விரும்பவில்லை என்று கூறினார். அவரது வயதும், உடல்நிலையும் தப்பிச்செல்வதற்கு ஏற்றதாக இருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தப்பிச் சென்றால் தம்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும், ஆகவே தப்பிச்செல்வதில்லை என்கிற முடிவிற்கு அவர் வந்திருந்தார். நித்தியானந்தன் பேசும்போது தானும் தனது மனைவியும் தம்பாட்டில் தப்பிச் செல்வதாகக் கூறினார்.
கோவை மகேசன் அப்போது நோய்வாய்ப்பட்டிருந்ததோடு வைத்தியர் தர்மலிங்கத்தின் வயது அவரைத் தப்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏனையவர்களைப் போல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினால் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக அவசரகால நிலைமைச் சட்டத்தினூடாகவே கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மிக விரைவில் விடுதலை செய்யப்படும் நிலையிலும் இருந்தார்கள். ஆகவே அவர்களும் தப்பிச் செல்வதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தனர். குரு சிங்கராயர், கோவை மகேசன், வைத்தியர் தர்மலிங்கம் ஆகியோர் 1983 ஆம் ஆண்டு கார்த்திகை மாத முற்பகுதியில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
மிகச் சிறியளவிலான ஆயுதங்களையே சிறைச்சாலைக்குள் அவர்களால் கடத்திவர முடிந்திருந்தது. ஆகவே ரப்பரால் உருவாக்கப்பட்ட காலணிகளில் கைத்துப்பாக்கிகள் போல வெட்டி அவற்றினைக்கொண்டே சிறைக் காவலர்களையும் ஏனைய கைதிகளையும் அச்சுருத்துவது என்று முடிவாகியது. பனாகொடை மகேஸ்வரன் இந்தப் பணியைப் பொறுப்பெடுத்தார்.
"தப்பிச் செல்ல நாம் குறித்துக்கொண்ட நிமிடம் வரையும் நாம் கடவுளை வேண்டிக்கொண்டோம். தப்பிச் செல்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முதல் எங்கள் அனைவரையும் சந்தித்த குரு சிங்கராயர் எம்மை ஆசீர்வதித்ததுடன் எமது முயற்சி வெற்றியளிக்கவும் வாழ்த்தினார் " என்று என்னுடன் பேசியவர் கூறினார்.
இரவு 7 மணியளவில் சிறைக்காவலாளி அந்தோணிப்பிள்ளை கைதிகளுக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வந்தார். வழமையாக மாலை வேளைகளில் மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர் அப்போதுதான் சிறிது மதுவை அருந்திவிட்டு உற்சாகமான மனநிலையில் பழைய சினிமாப் பாடல் ஒன்றினைப் பாடிக்கொண்டு வந்தார்.
"எப்பிடி இருக்கிறியள் தம்பிகள்?" என்று கேட்டுக்கொண்டே அவர் வந்தார்.
அவரைத் திடீரென்று பிடித்துக்கொண்ட பரந்தன் ராஜன் உடனேயே அவரைக் கட்டினார். டேவிட் அவரது வாயைத் துணிகளால் கட்டிப்போட்டார். ஆறடி உயரமும், சிறந்த உடல்வாகுவும் கொண்ட பனாகொடை மகேஸ்வரன் சிறையதிகாரியையும் காவலர்களையும் தாக்கி அவர்களைப் பிடித்துக்கொண்டார். இதனையடுத்து சிறைக்கதிகள் வரிசையாக சிறைவாயிலுக்குச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றார்கள்.
பின்புற சுவரை இடித்துக்கொண்டிருந்த வரதராஜப் பெருமாளும் அழகிரியும் திடீரென்று சிறை நிசப்தமானதையடுத்து சிறையின் முன்வாயிலிக்குச் சென்று பார்த்தபோது அது திறந்துகிடந்தது. வாயிலூடாக வெளியே ஓடிய அவர்கள் சிறையின் பின்புறம் நோக்கி வெளிவீதியால் ஓடினார்கள். வாவியின் கரைக்கு அவர்கள் சென்றபோது மகேஸ்வரனையும் அவரது தோழர்களையும் ஏற்றிக்கொண்டு படகொன்று வாவியூடாக வெளியேறுவதை கண்ணுற்றார்கள். இவர்கள் கூக்குரலிட ஆரம்பிக்க, சென்றுகொண்டிருந்த படகு திரும்பிவந்து இவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றது.
தந்தை செல்வாவின் முன்னாள் வாகனச் சாரதியும் பின்னர் ஆயுத அமைப்பொன்றில் இணைந்துகொண்டவருமான வாமதேவவாவைக் கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை நாடிய பொலீஸார் 100,000 ரூபாய்களை பரிசுத் தொகையாக அறிவித்திருந்தனர். கைதுசெய்யப்பட்டபின் மட்டக்களப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு நிர்மலா நித்தியானந்தன் தடுத்துவைக்கப்பட்டிருந்த அறையினை உடைக்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தப்பிச் செல்லும் அவசரத்தில் அவர் அதனை மறந்துவிட்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் போராளிகள் காட்டுப்பகுதியொன்றின் ஒற்றையடிப் பாதைக்கு வாகனம் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறிது தூரம் அப்பாதை வழியே ஒன்றாகச் சென்ற அவர்கள் பின்னர் தத்தமது அமைப்புக்கள் ஒழுங்குசெய்திருந்த படகுகள் தரித்துநின்ற கரைகளை நோக்கிச் சென்று அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர்.
புலிகளின் அனுதாபிகளான நித்தியானந்தன், குருவானவர்களான சின்னராசா, ஜயதிலகராஜா மற்றும் ஜயகுலராஜா ஆகியோர் சிறைச்சாலையின் பிற்பகுதிக்குச் சென்றனர். பரமதேவாவும் அவர்களுடன் இணைந்துகொண்டார். சுமார் 600 மீட்டர்கள் தூரத்தில் அமைந்திருந்த மாந்தீவை படகொன்றில் ஏறிச் சென்றடைந்தனர். அவர்கள் சென்ற திசைநோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது அவர்களுக்குத் தெரிந்தது. அந்த இருட்டில் அவர்கள் முதலைக்குடா நோக்கி வேகமாக ஓடினர். அங்கிருந்து உழவு இயந்திரம் ஒன்றினை எடுத்துக்கொண்ட அவர்கள் திருக்கோவில் நோக்கி அதனை ஓட்டிச் சென்றனர். மறைவிடம் ஒன்றில் அங்கு தங்கிய பின்னர் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர்.
பனாகொடை மகேஸ்வரனுக்கு வேறு திட்டம் இருந்தது. அவர் மட்டக்களப்பிலேயே இருக்க விரும்பினார். போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க விரும்பிய அவர் ஏதாவது புதுமையாகச் செய்யவேண்டும் என்று எண்ணினார். மட்டக்களப்புப் பகுதி அவருக்குப் பரீட்சயமில்லாதபோதும் மறைவிடம் ஒன்றைத் தேடி ஒளிந்துகொண்டார். யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அவர் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்றிருந்தார். சில மாதங்களின் பின்னர் அவர் அதிரடி நடவடிக்கை ஒன்றைச் செய்திருந்தார். காத்தான்குடியில் இருந்த வங்கியொன்றைக் கொள்ளையிட்டு அங்கிருந்த 35 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தினை எடுத்துச் சென்றார். அக்காலத்தில் அதுவே அதிகளவு பணம் களவாடப்பட்ட நிகழ்வாக இருந்தது.
"தமிழர்களின் வரலாற்றில் திகிலான அத்தியாயம்" என்று டேவிட் அவர்களால் குறிப்பிடப்பட்ட இந்தச் சிறையுடைப்பு அங்கிருந்த ஏனைய கைதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது. தமிழ் அரசியற்கைதிகள் தப்பிச் சென்றதையும், வாயிலின் இரும்புக் கதவுகள் அகலத் திறந்து கிடந்ததையும் கண்ணுற்ற அவர்களும் தப்பிச் சென்றார்கள்.
பொலீஸாரின் ரோந்தணி வழமைபோல 7:32 மணிக்கு சிறைச்சாலைக்கு வந்தபோது அது வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. உடனடியாக பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தரை, நீர், ஆகாய வழியாக பாரிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு நகரிலிருந்து தப்பிச் செல்ல முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்த சில கைதிகளை, குறிப்பாக சிங்களக் கைதிகளை பொலீஸார் பின்னர் மீளப் பிடித்து கொண்டனர்.