இந்தியப் பயிற்சி
1983 ஆம் ஆண்டு புரட்டாதி மாதமளவில் சென்னையி முழுதும் ஈழத் தமிழ் இளைஞர்களால் நிரம்பி வழியத் தொடங்கியது. அவர்களைத் தொகுதி தொகுதியாக பஸ்வண்டிகளில் ஏற்றி தில்லிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள் ரோ அதிகாரிகள்.
"அது ஒரு களைப்பு மிகுந்த நீண்ட தூரப் பயணம்" என்று அரியாலையைச் சேர்ந்த நிருபன் எனும் இளைஞர் என்னுடன் சில வருடங்களுக்கு முன்னர் பேசும்போது குறிப்பிட்டிருந்தார். டெலோ அமைப்பின் முதலாவது தொகுதிப் பயிற்சிப் பாசறையின் உறுப்பினரான அவர் தற்போது ஐரோப்பாவில் வசித்து வருகிறார். டெலோ அமைப்பே இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட முதலாவது அமைப்பென்பதும் குறிப்பிடத் தக்கது.
சுமார் 2,000 கிலோமீட்டர்கள் தூரத்தினைக் கடக்க தமது பஸ்வண்டிக்கு மூன்று நாட்கள் எடுத்ததாக அவர் கூறினார். தில்லியைச் சுற்றிப்பார்த்தபடியே தமது பயணத்தைத் தொடர அவர்கள் கேட்டுக்கொண்டபோது அதற்கும் அனுமதி வழங்கப்பட்டதாம்.
"இடங்களைச் சுற்றிக் காட்ட எம்மை அழைத்துச் சென்றார்கள். ஆனால் எம்மை எவருடனும் பேச அவர்கள் அனுமதிக்கவில்லை" என்று நிருபன் கூறினார். தில்லியிலிருந்து பயிற்சி முகாமுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தப் பயிற்சித் திட்டம் என்பது ஒரு இரகசியாமான நடவடிக்கை என்று அவர்களுக்குக் கூறப்பட்டிருந்தது.
"எமது மூன்றரை மாத கால பயிற்சியை முடித்துக்கொண்டு நாம் மீன்டும் சென்னைக் கொண்டுவரப்பட்டபோதுதான் நாம் பயிற்றப்பட்ட இடம் டெஹெரா டன் எனும் பகுதி என்பது எமக்குத் தெரியவந்தது. பயிற்சி முழுதுவதும் எம்மை முகாமிற்கு வெளியே செல்ல அவர்கள் அனுமதியளிக்கவில்லை".
அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றின் மலைப்பாங்கான நிலப்பகுதியில் நடத்தப்பட்டு வந்த அந்தப் பயிற்சி முகாம் வெளியுலகிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது.
"அது ஒரு அழகான இடம். நாம் அங்கு தங்கியிருந்த நாட்களை மகிழ்வுடன் களித்தோம். ஆனால் அங்கு நிலவிய காலநிலை மட்டுமே எமக்குப் பிரச்சினையாக இருந்தது" என்று அவர் கூறினார்.
முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்ட முதலாவது நாள் கடுங்குளிராகக் காணப்பட்டதாகக் கூறும் நிருபன் தனக்கு வழங்கப்பட்ட தடிப்பான கம்பளத்தினால்க் கூட அக்குளிரைச் சமாளிக்க முடியவில்லை என்று கூறுகிறார். பயிற்சிமுகாமிற்கு அழைத்துவரப்பட்டு, பதியப்பட்ட பின்னர் ஒவ்வொரு போராளிக்கும் இரு போர்வைகளும், படுக்கை விருப்பித் துணியும், மடித்துவைக்கக்கூடிய கட்டிலும் வழங்கப்பட்டது. "மிகக்கடுமையான குளிரைக் கொண்ட பிரதேசம்" என்று நிருபன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். ஆனால், ஒருவார காலத்தின் பின்னர் குளிருக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டார்கள்.
"பின்னர் குளிருக்கு எம்மைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்" என்று அவர் கூறினார். ஆனால், வட இந்திய உணவை உட்கொள்வது கடிணமாகவே தென்பட்டது. சப்பத்தி, நாண், பூரி என்பவற்றுடன் உருளைக்கிழங்கு, முட்டை அல்லது ஆட்டுக்கறி அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. இடையிடையே கோழிக்கறியும் வழங்கப்பட்டிருந்ததது. எப்போதாவது ஒருமுறைதான் சோறும் மீன்கறியும் முகாமில் கிடைத்தது.
"அவர்களின் உணவில் சுவையே இருக்கவில்லை. அவர்கள் மிளகாய்த்தூள் பாவிப்பதேயில்லை" என்று நிருபன் தொடர்ந்தார். "சூடான, சுவையான உணவையே நாம் எதிர்ப்பார்த்தோம்" என்று அவர் மேலும் கூறினார்.
ஈழப் போராளி அமைப்புக்களில் டெலோவே அதிகளவு போராளிகளை அன்று கொண்டிருந்ததது. சுமார் 350 போராளிகளை பயிற்சிக்காக இந்தியாவுக்கு அது அனுப்பியது. அடுத்துவந்த சிலவாரங்களில் ஏனைய அமைப்புக்கள் அனுப்பிய போராளிகளின் எண்ணிக்கைகள் டெலோ அமைப்பினரோடு ஒப்பிடும்போது குறைவானவையாகவே காணப்பட்டன. ஈரோஸ் அமைப்பு 200 போராளிகளையும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு 100 போராளிகளையும், புளொட் அமைப்பு 70 போராளிகளையும், புலிகள் 50 போராளிகளையும் பயிற்சிக்காக அனுப்பிவைத்திருந்தனர். பின்னர் வந்த மாதங்களில் மேலும் சில தொகுதிப் போராளிகளை அமைப்புக்கள் அனுப்பி வைத்திருந்தன. இந்தியாவின் பயிற்சித் திட்டத்திலிருந்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்ள இயக்கங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது.
டெலோவினால் அனுப்பப்பட்ட தொகுதிப் போராளிகளுக்கு சிறீ சபாரட்ணமும், ஈரோஸ் போராளிகளுக்கு பாலக்குமாரும், ஈ.பி.ஆர்.எல்.எப் தொகுதிக்கு டக்ளஸ் தேவானந்தாவும், புளொட் போராளிகளுக்கு உமா மகேஸ்வரனும், புலிகளின் போராளிகளுக்கு பொன்னமான் என்று அழைக்கப்பட்ட குகனும் தலைமை தாங்கியிருந்தார்கள். உமா மகேஸ்வரனுக்கும் டக்ளஸ் தேவாநந்தாவிற்கும் லெபனானில் அவர்கள் பெற்றுக்கொண்ட பயிற்சியினைப் புதுப்பிக்கும் நிகழ்வாக இந்தியப் பயிற்சி அமைந்திருந்தது.