நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான்.
நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் பூங்கன்றுகளை ஆசைதீரப் பார்க்கிறேன். எத்தனை தடவைகள் பார்த்தாலும் அலுக்காத பச்சைப் பசேல் எனவும் வண்ணவண்ண நிறங்களுடனும் பூத்துக் குலுங்கும் இந்தச் செடிக்கொடிகளை நாள் முழுதும் பார்த்துக்கொண்டே இருந்தாலும் எனக்குச் சலிப்பதில்லை.
எட்டு ஆண்டுகளுக்கு முன் இதைக் கட்டியபோதும் சரி அதன்பின் சில மாதங்களாக நான் பட்ட மன வேதனையையும் எண்ண இப்போ சிரிப்புத்தான் வருகிறது.
என் நீண்ட நாள் ஆசையான குளிர் காலத்திலும் பூங்கன்றுகள் வளர்ப்பதற்கான கண்ணாடி அறை ஒன்றை அமைப்பது குறித்து கணவருடன் பலநாட்கள் தர்க்கம் செய்தாகிவிட்டது. அந்தாளும் அசையிற மாதிரி இல்லை. நானும் விடுவதாய் இல்லை.
“உதெல்லாம் வீண் செலவு. கொஞ்ச நாள் சும்மா இருக்க உன்னால முடியாது. காசை கரியாக்கிறதெண்டால் முன்னுக்கு நிப்பாய்”
“இருந்தாப்போல செத்திட்டால் என்ர ஆசை நிறைவேறாமல் போயிடுமப்பா”
“நீ ஒண்டைச் செய்ய நினைச்சால் செய்து முடிக்குமட்டும் விடவே மாட்டாய். உப்பிடிச் சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் நிறைவேற்றிக் கொள்”
“நான் என்ன நகை நட்டு வாங்கித் தாங்கோ என்றா கேட்கிறன்”
“என்னவோ செய்து முடி”
அடுத்த நாளே நான் வேலையைத் தொடங்கியாச்சு. சாதாரணமாக எந்தச் சிறிய கட்டட வேலை செய்வதாயினும் கவுன்சிலில் அதற்கான வரைபைக் கொடுத்து சிறிது பணமும் செலுத்தி அதற்கான அனுமதியைப் பெறவேண்டும். சாதாரணமாக மூன்று அடி உயரமும் மூன்று அடி நீளமும் இருந்தால் சரி. சரிவான கூரைக்கு அனுமதி தந்திருக்க, வேலை ஆரம்பிக்க வேலைகளைச் செய்வதற்கு ஒரு தமிழர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டி ருந்தார். சமரில் முழுவதும் திறப்பதுபோல் மடியும் கதவுகள்வரை போட்டாச்சு. கூரை வேலை மட்டுமே மிகுதியாக இருக்க விக்டோரியன் ஸ்டைல் கூரை இன்னும் நன்றாக இருக்கும் அக்கா என்கிறார் அந்தத் தமிழர்.
எனக்கும் ஆசை எட்டிப்பார்க்க கவுன்சிலில் சாய்வான கூரை என்றுதானே கொடுத்துள்ளோம் என்கிறேன். பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சனை இல்லையோ என்கிறார். அந்தக் கிழவன் கொஞ்சம் துவேஷம் தான். ஆனால் கிழவி நல்லது என்கிறேன். அப்ப நான் விக்டோரியன் கூரையே போட்டு விடுறன். ஒரு ஆயிரம் பவுண்டஸ் தான் அதிகம் என்கிறார். அப்ப கவுன்சிலுக்கு அறிவிக்கத் தேவை இல்லையோ என்கிறேன். அவங்களுக்கு அறிவிச்சு திருப்ப பிளான் கீறி காசும் நாளும் விரயம் அக்கா என்கிறார்.
அந்தக் கூரையை எத்தனை பதிவாகப் போட முடியுமோ போடுங்கோ என்கிறேன். அவர்களும் எவ்வளவு பதிவாக்கமுடியுமோ அவ்வளவு பதித்தேதான் போட்டுவிட்டுப் பார்த்தால் மிக அழகாக இருக்க என் கண்ணே பட்டுவிடும்போல் கண்ணாடி அறை ஒளிர்கிறது. எதற்கும் ஒருக்கா அளந்து பார்ப்போம் என்று அலுமினிய அளவுநாடாவை எடுத்து அளந்து பார்க்க மூன்று மீற்றர் இருக்கவேண்டிய உயரம் முப்பது சென்ரிமீற்றர் அதிகமாக இருக்கிறது. என் மகிழ்ச்சி எல்லாம் ஒரு நொடியில் வடிந்துபோக ஒப்பந்தக்காரருக்கு போன் செய்கிறேன்.
அது பெரிய பிரச்சனை இல்லை அக்கா. நீங்கள் வீணாப் பயப்படாதைங்கோ என்கிறார். இதுக்கு மிஞ்சி என்ன செய்ய வருவது வரட்டும் என்று நான்கு மாதங்கள் பயத்துடனேயே கழிய குளிரும் குறைந்துகொண்டு வர சிறிது சிறிதாகப் பூங்கன்றுகள் எல்லாம் வைத்து கண்ணாடி அறை மிக அழகாகக் காட்சிதருகிறது. இலைதுளிர் காலமும் வந்துவிட எனக்கு அந்த அறையுள் நிற்பதும் இரசிப்பதுமாக காலம் நகர வெயிலும் எறிக்க ஆரம்பிக்கிறது.
கணவர் கண்ணாடி அறையின் கதவுகளை முழுவதுமாகத் திறந்துவிடுகிறார். அந்தக் கண்ணாடி அறையின் அழகு தோட்டம் முழுதுமே பிரதிபலிக்கிறது. சமையல் செய்தபடியே நான் அவற்றை இரசித்தபடி இருக்க, அங்கு ஒரு சிறிய வட்ட மேசையும் கதிரைகளுமாய் நாம் உணவை அங்கு இருந்து இயற்கையை இரசித்தபடி உண்பதும் மனதுக்கு மகிழ்வாய் இருக்கிறது. வீண் காசு என்ற கணவரே உன்ர ஐடியா நல்லாத்தான் இருக்கு என்று கூற என் மனம் நிறைந்துபோகிறது. பிள்ளைகளும் படங்கள் எடுத்து அம்மாவின் பூங்கன்றுகள் என்று இன்ஸ்ரகிறாமில் படங்கள் போட எனக்குப் பெருமிதமாயும் இருக்கு. பறவைகளும் அணில்களும் போடும் உணவுகளைக் கொத்தி உண்பதும் ஒலி எழுப்புவதுமாக இருக்க அவற்றை இரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கவே பொழுது போய்விட ஆறு மாதங்கள் முடிந்து போயிருந்தது.
ஒருநாள் நானும் கணவரும் மட்டும் மதிய உணவை இரசித்துச் சுவைத்து உண்டு கொண்டு இருக்கிறோம். பக்கத்து வீட்டுக்கு அவர்களின் நண்பர்கள் யாரோ இருவர்கள் வந்திருக்கிறார்கள் போல. பெரிதாக சிரித்துக் கதைப்பது கேட்கிறது. சாதாரணமாக யாருமே வந்து நான் பார்ப்பதில்லை. யாராய் இருக்கும் என்கிறேன் கணவரைப் பார்த்து. நான் என்ன சாத்திரம் தெரிஞ்ச ஆளே. உன்னை மாதிரித்தான் நானும் என்று கணவர் சிரிக்க, அவர்கள் பக்கமிருந்து எமது கண்ணாடி அறையின் பக்கம் ஒரு தடி நீள்கிறது. நான் தான் அதை முதலில் பார்க்கிறேன்.
அங்க பாருங்கோப்பா. எங்கட சுவரை அளக்கினமோ என்கிறேன். அதுகள் என்ன செய்யுதோ. உனக்கு எப்பவும் வீண் பயம் என்றபடி அவர் திரும்பிப் பார்க்க மறுபடி மறுபடி கண்ணாடிச் சுவரில் ஒரு தடியை வைத்துப் பார்ப்பதைக் கணவரும் கண்டுவிடுகிறார். நீ சொன்னது சரிதான். உதுகள் எங்கடை சுவரை அளந்துதான் பார்க்குதுகள். பொறு பார்ப்போம் என்றுவிட ஏன் அளக்கிறீர்கள் என்று அஞ்சலாவிடம் கேட்கட்டா என்கிறேன். பேசாமல் இரு, சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி எண்டதுபோல நீ கேட்கப்போய் பெரிசுபடுத்தாதை என்றுவிட்டு எழுந்துவிட நானும் யோசனையோடு எழுகிறேன்.
அடுத்துவந்த ஒவ்வொருநாளும் எனக்கு நிம்மதி இன்றிக் கழிய சரியாக ஒரு மாதத்தின் பின் ஒருநாள் கவுன்சிலில் இருந்து நான் எதிர்பார்த்த கடிதம் வந்திருக்க படபடப்புடன் கடிதத்தை உடைக்கிறேன். நீங்கள் கவுன்சிலில் தந்த பிளானில் இல்லாத விக்டோரியன் ஸ்ரையில் கண்ணாடி அறையைக் கட்டியுள்ளதாக எமக்கு முறைப்பாடு வந்துள்ளது. வருகிற வெள்ளி கவுன்சிலில் இருந்து ஒருவர் அதைப் பார்க்க வருவார் என்று போட்டிருக்க, எனக்குக் கோபம், அவமானம், ஏமாற்றம் எல்லாம் ஒன்றாக எழுகின்றன. மனிசனுக்கு போன் செய்கிறேன்.
“அண்டைக்கே சொன்னனான். உதுகளின்ர குணத்துக்கு வளவுக்குள்ள வந்த ஆமையை அடிச்சுச் சாப்பிடாட்டிலும் எங்கேயாவது கொண்டுபோய் விட்டிருக்கவேணும். நீயும் மேளும் தடுத்திட்டியள்”
“ஆமையின்ர பாவம் எங்களுக்கு எதுக்கப்பா? எப்பிடி உதுகளுக்கு நாங்கள் சாய்வான கூரைக்குத்தான் குடுத்தனாங்கள் எண்டு தெரிஞ்சது?”
“நாங்கள் கட்ட முதலே கவுன்சில் அவர்களுக்கும் கடிதம் போடும்”
“அப்ப முதலே உவை எங்களுக்குச் சொல்லி இருக்கலாம் தானே”
“அவை உன்ர சொந்தக்காரரே. சரி வீட்டை வந்து கதைக்கிறன்”
என்றபடி கணவரின் போன் நிறுத்தப்பட யோசனையோடு நானும் போனை வைக்கிறேன். .
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது நினைவில் வருகிறது. பக்கத்து வீட்டார் ஒரு ஆமையை வளர்க்கின்றனர். நாம் வந்தநாள் முதல் சமரில் பகலில் அவர்கள் பின் வீட்டுத் தோட்டத்தில் அங்கும் இங்குமாய் திரியும் இரவில் அதைப் பின் வளவில் உள்ள கட்டடத்தின் உள்ளே விட்டு அடைத்துவிடுவார்கள். ஆனால் அந்த கட்டட அமைப்பு எப்படி இருக்கு என்று பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தாலும் இதுவரை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததே இல்லை.
ஒருநாள் பக்கத்து வீட்டு ஆமை எங்கள் வளவுக்குள் வந்துவிட்டது. இந்தப் பத்து ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. மகள் கண்டுவிட்டு கணவரைக் கூப்பிட்டுக் காட்ட கணவர் அதைக் கையில் எடுத்து இரண்டு கிலோ இருக்கும் போல. கறி வைத்தால் எப்பிடி இருக்கும் என்கிறார் கணவர். நானும் மகளும் ஒரே நேரத்தில் உங்களுக்கு விசரா என்கிறோம். கிழவன்ர கொழுப்புக்கு உதுதான் செய்யவேணும் என்கிறார் மீண்டும்.
கடைசிவரை உதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று நான் கூற லபக் என்று மகள் ஆமையைக் கணவரின் கைகளிலிருந்து வாங்கி விடுவவிடுவென்று கொண்டுசென்று அவர்களிடம் கொடுத்துவிட்டு வருகிறாள். அடுத்தநாள் என்னைக் காணும்போது இரண்டு மூன்று தடவை ஆமையைக் கொடுத்ததற்கு அஞ்சலா என்னிடம் நன்றி கூற எனக்கே ஒருமாதிரியாகிப்போகிறது.
************
கவுன்சில்க் கடிதம் வந்த அடுத்தடுத்த நாட்கள் வெளியே செல்லும்போது அஞ்சலாவையோ கணவனையோ கண்டும் காணாமல் செல்லவாரம்பிக்கிறேன். கணவனும் யாருக்கும் எதுவுமே சொல்வதில்லை என்று கூற நான் வணக்கம் சொல்கிறனான் என்கிறாள் மகள். அதற்கு நான் எதுவும் கூறாது அமைதி காக்கிறேன். நீங்கள் அவர்களைக் கோபித்து என்ன பயன். முதலே சரியாகச் செய்திருக்க வேண்டும். அவர்கள் இந்த நாட்டவர். நாம் வெளிநாட்டவர். சட்டதிட்டத்துக்கு அமையச் சரியாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன குற்றம் அம்மா என்கிறாள். என்னிடம் அதற்குப் பதில் இல்லைத்தான்.
எம் வீட்டுக்கு பின்னால் உள்ள எத்தனையோ வீடுகளுக்கு நாம் கட்டியதிலும் உயர்வான நான்கு மீற்றர் உயரக் கண்ணாடி அறைகள் கூடக் கட்டப்பட்டிருக்க இந்தக் கேவலம் கெட்டதுகள் எரிச்சலில் கவுன்சிலுக்குச் சொல்லியிருக்குதுகள் என்று மனதுள் பொருமியபடி அடுத்த வாரத்துக்காகக் காத்திருக்கிறேன்.
ஒரு வாரத்தின் பின் வந்த கவுன்சில் பொறியியலாளர் நீங்கள் கூரையை மாற்றவே வேண்டும். உயரத்தைக் கண்டும் காணாமல் விட்டுவிடுகிறேன். ஆனால் எல்லாம் சரி என்ற பத்திரத்தை என்னால் வழங்க முடியாது என்கிறார். இந்தளவோடு விட்டாரே என மனதில் நிம்மதி ஏற்பட வேறுவழியின்றிக் கூரை மாற்றிய செலவு 1500 பவுண்டஸ் நட்டமாகியதுதான் மிச்சம் என்று கணவர் புறுபுறுத்ததை கேட்டும் கேளாதாவளாய் இருக்க மட்டுமே முடிந்தது. மாற்றிய கூரையைப் பார்க்கும் நேரம் எல்லாம் பக்கத்து வீட்டின் மேல் வரும் கோபம் மாறாமலே ஒரு ஆண்டு ஓடிப்போக வேலை முடிந்து ஒருநாள் வந்து இறங்கும்போது பக்கத்து வீட்டின் முன் ஆம்புலன்ஸ் நிற்க என்னவாக இருக்கும்என்று யோசித்தபடி உள்ளே செல்கிறேன்.
அடுத்தநாள் மாலை கடைக்குச் செல்வதற்காக வெளியே சென்றபோது வழியில் அஞ்சலா வந்துகொண்டிருப்பது தெரிய நானாகவே வணக்கம் என்றுவிட்டு யாருக்கு என்ன பிரச்சனை? நீ ஓகே தானே என்கிறேன். அஞ்சலாவின் முகம் சோர்ந்து போய் இருக்கிறது. மார்க்குக்கு நேற்று காட் அற்றாக் வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவர்கள். இன்று கண் திறந்துவிட்டார். ஆனால் ஒரு காலும் கையும் இயல்பாக இல்லை என்கிறார்.
அவருடன் ஆறுதலாகக் கதைத்துவிட்டு வந்தாலும் நீ எனக்குச் செய்ததுக்கு வேணும் என்று என் மனம் எண்ண, அற்ப மகிழ்ச்சிகூட எட்டிப்பார்க்கிறது. அதன்பின் எப்போதாவது மார்க்கை பிரத்தியேக வாகனம் வந்து அழைத்துப்போகும். அதுதவிர வெளியே அவரைக் காணவே இல்லை. ஆனாலும் அஞ்சலாவை சுகம் கேட்பதை நான் நிறுத்தவில்லை.
நாம் முதல் முதல் அந்த வீட்டுக்கு வரும்போதே வீட்டின் வாசலுக்கு அண்மையில் மிகப் பெரிய ஊசி இலை இன மரம் ஒன்று நீண்டு நெடிதாய் வளர்ந்திருந்தது. பார்ப்பதற்கு அழகாய் இருந்ததுதான். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இதை ஏன் வைத்தார்கள் என்னும் அளவு அதன் கிளைகள் வாசல் கதவைத் திறக்க முடியாதபடி பெரிதாகிக் கொண்டிருந்தன. நாம் கதவைத் திறந்து உள்ளே செல்லாது அந்த மரத்தை வெட்டுவோமா என்று கதைத்துக்கொண்டு நிற்க, பக்கத்து வீட்டு வெள்ளைக்காரர் ஒரு அறுபது வயதாவது இருக்கும் வணக்கம் என்கிறார்.
நாமும் வணக்கம் சொல்லி முடிய நீங்கள் தான் இங்கு குடிவருக்கிறீர்களா என்கிறார். ஓம் என்று என் கணவர் தலையாட்ட வாடகைக்கு இருக்கப்போகிறீர்களா என்கிறார் மீண்டும். இல்லை இதை நாம் வாங்கிவிட்டோம். எமது சொந்த வீடு என்று கூறி முடிய முதலே இந்தமரத்தை வெட்டிவிடுங்கள். இதன் வேர் என் வீட்டு அத்திவாரத்தையும் வெடிக்கச் செய்துவிடும் என்கிறார். என்னடா இது வந்து வீட்டுக்குள் செல்லவே இல்லை. இந்த மனிதன் மரத்தை வெட்டச் சொல்கிறதே என்கிறேன்.
நீயும் வெட்டுவது பற்றிக் கதைத்தாய் தானே. பிறகெதற்கு கிழவனைக் குறை சொல்கிறாய் என்று கணவர் என்னை கடிந்துவிட்டு வெட்டத்தான் வேண்டும். நாம் இன்றுதான் வந்திருக்கிறோம். நிறைய வேலைகளிருக்கு. முடிந்தபிறகு பார்ப்போம் என்று கூறி உள்ளே செல்கிறோம். ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை. கதவின் அழைப்பு மணி அடிக்க யார் என்று பார்த்தால் பக்கத்துவீடுக்காரர் மரம் அரியும் வாள் ஒன்றுடன் நிற்கிறார். நான் கீழே உள்ள கிளைகளை வெட்டிவிடுகிறேன் மிகுதியை நீங்கள் வெட்டுங்கள் என்று சிரித்தபடி கூற, சரி வெட்டுங்கள் என்கிறார் கணவர்.
நாம் உள்ளே சென்று வேறு விடயங்களைக் கதைத்துவிட்டு வந்து பார்த்தால் மரத்தின் அரைவாசிக் கிளைகள் வெட்டப்பட்டு எம் வீட்டின் முற்றத்தில் குவிக்கப்பட்டிருக்க இனி நீங்கள் வெட்டுங்கள் என்று கூறி வாளையும் எம்மிடம் தந்துவிட்டு அவர் உள்ளே போக, நானும் கணவரும் சேர்ந்து மிகுதியை வெட்டிக் குவித்துவிட்டோம். பக்கத்து வீட்டுக் கணவன் மனைவி இருவரும் வெளியே வந்து இப்போதுதான் வீட்டைப் பார்க்க நன்றாக இருக்கு என்று முகமெல்லாம் பல்லாய் கூறிவிட்டுச் செல்ல நாமும் நல்லதொரு சனம் பக்கத்தில என்று மகிழ்ந்துதான் போனோம். அந்தமரத்தின் கிளைகளை அகற்ற நான்கு தடவை காரில் கொண்டுசெல்லவேண்டி இருந்தது வேறு கதை.
அதன் பின் எம்மைக் கண்டால் ஒரு வணக்கம் சொல்வதோடு சரி. அவர்களுக்கு ஏதும் எம் உணவு செய்துகொண்டுபோய் கொடுப்போமா என்கிறேன் கணவரிடம். நாங்கள் குடுக்க, அவை தர எதுக்கு உதெல்லாம் பேசாமல் இரு என்று கணவர் சொன்னது எனக்கும் சரியாகவே படுகிறது. அதன்பின் ஐந்து ஆண்டுகள் வணக்கம் சொல்வதுடனேயே கழிகிறது. நத்தார் தினத்துக்கு இரு வாரத்துக்கு முன்னர் வாழ்த்து மடல் போட, நாமும் திருப்ப அவர்களுக்குப் போடுவதுடன் எங்கள் உறவு நிறைவடைந்துவிடும்.
மூன்று பிள்ளைகளுடன் இருந்த எமக்கு சமையலறை மிகச் சிறிதாக இருக்க வீட்டைப் பின்புறமாக நீட்டுவதற்கு ஆலோசித்து அந்த வேலைகளில் இறங்க, சைனீஸ் வேலையாட்கள் கூறிய பொருட்களை கடைகளில் ஓடர் செய்ய, அவர்கள் வாகனங்களில் கொண்டுவந்து இறக்குகின்றனர். மரக் குற்றிகள், நீளமான பலகைகள் என்பன வந்து இறங்குகின்றன. அவர்கள் நடைபாதையில் அவற்றை இறக்கி வைக்கின்றனர். சில பலகைகள் ஆறு மீற்றர் நீளம் கொண்டவை, அவை பக்கத்து வீட்டு வாசலைக் கடந்து நிற்கின்றன.
இன்னும் சிறிது நேரத்தில் வேலையாட்கள் வந்துவிடுவார்கள். அதன்பின் அவர்கள் இறக்கியவற்றை உள்ளே கொண்டு செல்வார்கள். “நாங்கள் அதை எடுத்துக்கொண்டு போய் உள்ளே வைப்போமா” என்று கணவரைக் கேட்கிறேன். “நீ உன்ர அலுவலைப் பார். அவங்கள் தூக்கி வைப்பாங்கள்” என்று கணவர் சொல்லி முடிக்குமுன்னரே எங்கள் அழைப்புமணி கோபத்துடன் அழுத்துப்பட கணவர் சென்று கதவைத் திறக்க, பக்கத்து வீட்டு மனிதர் தன் வளவில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நிற்கிறார்.
“நீயா மணியை அழுத்தினாய்”
“ஓம் நான் தான். நீ உடனடியாக உந்தப் பலகைகளை எடு. எனக்கு இடைஞ்சலாக இருக்கு”
“உனக்கென்ன இடைஞ்சல்? உன் வீட்டுக்குள்ளா வைத்திருக்கிறோம்”
“என் வாசல் வரை வந்திருக்கு. நான் வெளியே செல்லவேண்டும்”
“உனக்கு அவசரம் என்றால் கடந்து செல். இன்னும் 10 நிமிடங்களில் வேலையாட்கள் வந்து தூக்குவார்கள்”
“நான் போலீசுக்கு போன் செய்யப் போகிறேன்”
“தாராளமாகச் செய்”
கணவர் கதவை அடித்துச் சாத்திவிட்டு வருகிறார்.
“என்னப்பா பிரச்சனை”
“பக்கத்து வீட்டுக் கிழடு சரியான துவேஷம். மரங்கள் தனக்கு இடைஞ்சலாம். உடனே தூக்கு என்கிறது”
“அதுக்குத்தான் நான் முதலே நாங்கள் தூக்குவம் என்றனான்”
“நீ உன்ர அலுவலைப் பார். அவர் போலீசுக்கு அடிக்கமாட்டார். எங்களை வெருட்டுறார்”
“இத்தனை ஆண்டுகளாய் இருக்கிறம். ஒரு சத்தம் கூடப் போட்டதில்லை. அடிமனதில் நாங்கள் கறுப்பர் எண்டது உதுகளுக்கு இருக்கு. அதின்ர வெளிப்பாடுதான் இது”
“சரியப்பா டென்ஷன் ஆகாமல் பெல் அடிக்குது. திரும்பக் கிழவன்தானோ தெரியேல்லை. போய் கதவைத் திறவுங்கோ”
அடுத்தநாள் காலை நான் வேலைக்குச் செல்ல வெளியே வர, நான் எப்ப வருவேன் என்று பார்த்துக்கொண்டு இருந்ததுபோல் பக்கத்துவீட்டுப் பெண் கதவைத் திறந்து வணக்கம் என்கிறார். அவருக்கும் வயது ஒரு ஐம்பத்தைந்து அறுபது இருக்கலாம். குறை நினைக்காதை டியர். என் கணவர் கொஞ்சம் முசுடு. நேற்று அப்படிக் கதைத்துவிட்டார். மன்னித்துக்கொள் என்கிறார். எனக்கு உடனே மனது இளகிப்போக அதனால் என்ன. நாம் எதுவும் நினைக்கவில்லை என்று கூற அஞ்சலாவின் முகம் மலர்ந்துபோக நான் பாய் என்றுவிட்டுக் காரில் ஏறுகிறேன்.
அதன்பின் என் கணவர் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் எதுவும் சொல்வதில்லை. ஆனால் என்னை கண்டால் அவர் வணக்கம் சொல்ல நானும் சொல்வேன். அஞ்சலாவைக் கண்டால் மட்டும் நின்று கதைபேன். அவவும் நானும் பிள்ளைகளின் படிப்பு என் வேலை இப்படி இரண்டு மூன்று விடயங்களைக் கதைத்துவிட்டு போய்விடுவோம்.
நாம் மூன்று பிள்ளைகள் என்பதால் வாரத்தில் இரு நாட்கள் உடைகளைத் துவைத்துக் காயவிடுவோம். கோடை காலங்களில் வெளியே போட்டால் அன்றே காய்ந்துவிடும். குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே இரண்டு நாட்கள் எடுக்கும். கொடி முழுவதும் எம் ஆடைக்களால் நிரம்பி வழியும். ஆனால் அவர்கள் வீட்டில் இரண்டு மூன்று ஆடைகளே காயப்போட்டிருக்கும். பணத்தை ஏன் இப்படிமிச்சம் பிடிக்கின்றனர். வெள்ளைகள் வாழ்வை நன்றாகத்தானே அனுபவிக்கின்றனர். இவர்கள் மட்டும் ஏன் இப்படி என்று எண்ணிக்கொள்வதோடு சரி. கேட்பதற்கு முடியவில்லை.
நாம் ஒருதடவை நானும் கணவரும் கிரேக்கத்துக்குச் சென்று வந்தபோது எம்மைக் கண்ட அஞ்சலா “ஓ விடுமுறைக்குச் சென்று வருகிறீர்களா” என்றுமட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அடுத்த நாள் என்னைக் கண்டபோது எங்கே சென்றீர்கள்? என்றார். நான் கிரேக்கம் என்றதும் வாயைப் பிளந்தபடி பயமின்றிப் போய் வந்தீர்களா என்றார்.
நீங்கள் அங்கு சென்றிருக்கிறீர்களா? மிக அழகிய இடம். எந்தப் பயமும் இல்லை என்கிறேன். நான் லண்டன் நகருக்கே இதுவரை சென்றதில்லை. என் கணவருக்கு எங்கு செல்வதும் பிடிக்காது என்றுகூற எனக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. கோடை மாரி குளிர் வெயில் என்று காலங்கள் எத்தனை விரைவாகச் சென்றுவிட்டன.
***********************************
நாம் லண்டன் வந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதை நம்பத்தான் முடியாமல் இருக்கு. பதினெட்டு ஆண்டுகளா என்னும் மலைப்போடு பல யுகங்கள் ஆகிவிட்டதான ஆயாசமும் சேர்ந்துகொள்கிறது. இத்தனை ஆண்டுகளில் பக்கத்து வீட்டுக்கு ஒருநாள் கூட நாங்கள் போக முடியவில்லையே என்னும் ஆதங்கம் மனதில் ஏற்படுகிறது. சில நண்பர்கள் அயல் நாட்டுப் பக்கத்து வீட்டாரைப் பற்றிச் சொல்லும்போது எமக்கும் ஒரு நல்ல நட்பான பக்கத்து வீடு அமைந்திருக்கலாமோ என்னும் எண்ணம் எழும். நாம் மட்டும் எல்லோரோடும் நட்போடுதான் பழகினோமா என்னும் கேள்வியும் கூடவே எழும். பிடித்தவர்களுடன் மட்டும்தானே நெருக்கமாகினோம். எமது பக்கத்து வீட்டாருக்கும் எமக்கும் நல்ல பொருத்தங்கள் இல்லைபோல என நானே என்னை ஆற்றிகொள்கிறேன்.
ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று வெள்ளை இனத்தவர் வந்துபோக ஏதும் விசேடமாக இருக்குமோ என்று எண்ணியபடி செல்கிறேன். மூன்றாவது வீட்டில் வசிக்கும் ஆபிரிக்கப் பெண்மணி எப்பவாவது கண்டால் நின்று கதைப்பார். அன்று கண்டவுடன் மார்க் எப்படி இறந்தார் என்று கேட்கிறார். இறந்துவிட்டாரா? எனக்கு இதுவரை தெரியாதே என்கிறேன். நேற்று இரவு நான் வேலை முடிந்து வந்தபோது அம்புலன்சில் ஏற்றினார்கள். முகத்தை மூடியிருந்தது. அதனால்தான் கேட்டேன் என்கிறார்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஊரில் என்றால் ஒருவர் இறந்தால் அடுத்தமணியே அனைவருக்கும் தெரிந்துவிடும். பக்கத்து வீட்டில் இருந்தும் எனக்குத் தெரியவில்லை என்பது வெட்கமாகவும் குற்றஉணர்வாகவும் இருக்க கணவருக்குப்போன் செய்கிறேன். கணவர் போனை எடுக்கவில்லை.
அஞ்சலாவின் வீட்டுக் கதவைத் தட்ட அவரே வந்து திறக்கிறார்.
“நான் மார்க் பற்றிக் கேள்விப்பட்டேன்”
“ஓ நேற்று மாலை இறந்துவிட்டார். இரவு ஏழு மணிவரை வீட்டில் வைத்திருந்தோம். அதன்பின் கொண்டுசென்றுவிட்டார்கள்”
“ஏலாமல் இருந்தாரா”
“ஆறு மாதங்கள் படுத்த படுக்கைதான். ஒரு நர்ஸ் வந்து பார்த்துவவிட்டுச் செல்வார். எனக்கு அவரை கோமில் கொண்டுபோய் விட விருப்பம் இல்லை. என் பிள்ளைகள் பலதடவை சொன்னார்கள்”
“உனக்குப் பிள்ளைகள் இருக்கின்றார்களா??”
“ஓம் இரண்டு ஆண் பிள்ளைகள். ஒருவன் திருமணமாகி மான்சஸ்ரரில் இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறான். மற்றவன் திருமணம் செய்யவில்லை. அவனும் தூரத்தில்த்தான்.”
“நான் அவர்களை ஒருநாளும் கண்டதில்லையே”
“அவர்களுக்கு எங்கே நேரம். கடைசி மகன் அப்பப்ப வந்துவிட்டுப் போவான். அவனுக்கும் தகப்பனுக்கும் சரிவாராது”
“அவர்கள் வந்திருக்கிறார்களா?”
“இல்லை நாளைதான் வருவார்கள்”
“தனியாகத்தான் வீட்டில் இருக்கிறாயா? யாரும் துணைக்கு இல்லையா?”
“இல்லை எனக்குப் பழகிவிட்டது”
“உனக்கு உணவு ஏதும் கொண்டுவந்து தரட்டுமா??”
“வேண்டாம், வேண்டாம். என்னிடம் உணவு இருக்கிறது”
“ஏதும் தேவை என்றால் என்னைக் கூப்பிடு”
“நன்றி தேவை என்றால் அழைக்கிறேன்”
வீட்டுக்கு வந்தபின் மனதில் எதுவோ அடைத்ததுபோல் இருக்க அஞ்சலா என்னை வீட்டுக்குள் வா என்று அழைக்காததும் மனதை எதுவோ செய்ய மனிசிக்கும் என்ன பிரச்சனையோ என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.
ஒரு வாரத்தின் பின் மார்க்கின் மரண வீடுக்கு நானும் கணவரும் சென்றிருந்தோம். எல்லோருடனும் கை குலுக்கிய பிள்ளைகள் எம்முடனும் அடுத்த வீட்டு ஆபிரிக்கப் பெண்ணிடமும் கை குலுக்காததை கவனித்தபின் மனதில் சிறிது ஆசுவாசம் ஏற்பட்டதுதான்.
ஒரு மாதம் செல்ல மீண்டும் இலைதளிர் காலத்தில் கடைசி மகன் தாயுடன் வசிக்க வந்துவிட பக்கத்து வீட்டில் பேச்சும் சிரிப்புமாக அஞ்சலாவின் வாழ்கை மாறியிருந்தது. கொடிகளில் விதவிதமாக அழகிய ஆடைகள் காய்ந்தன. எழுபத்தைந்து வயதான முகத்தில் ஒரு பளபளப்பும் மலர்ச்சியும் தெரிந்தன.
கிழவியைப் பாத்தியே. விதவிதமாய் உடுப்புப் போடுது என்று கணவர் நக்கலாகக் கூற எனக்குக் கோபம் வருக்கிறது. அந்தக் கிழவன் சரியான அடக்குமுறையாளனாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்பவாவது அந்த மனிசி தன் ஆசைப்படி வாழட்டுமன். உங்களுக்கு அதில் என்ன நட்டம் என்கிறேன்.
கடந்தவருடம் இலங்கை சென்று ஆறு மாதங்களின் பின் தான் நான் திரும்பி வந்தேன். அடுத்தநாள் நான் வெளியே செல்ல என்னைக் கண்ட அஞ்சலா “ஓ டியர் உன்னை இத்தனை நாள் நான் காணவில்லை. எங்கே சென்றாய், உனக்கு ஏதும் ஆகிவிட்டதோ என்று நான் பயந்துவிட்டேன்” என்றபடி கட்டியணைக்க நான் திக்குமுக்காடிப்போய் பேச்சற்று நிற்கிறேன்.