முதலாம் ஈழ யுத்தம்
1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் தமிழரின் தாயக விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. சென்னையில் பேசிய பிரபாகரன் இதுவரை காலமும் தாக்கிவிட்டு ஒளிந்துகொள்ளும் முறையில் இருந்து நிலையான போர்புரியும் கெரில்லாக்களாக தாம் மாற முடிவெடுத்திருப்பதாகக் கூறியதுடன், ஏனைய அமைப்புக்களையும் தம்முடன் இணைந்து பொது எதிரிக்கெதிராகப் போராடி தாயகத்தையும் மக்களையும் காத்துக்கொள்ள உதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரகடனத்தோடு தனது அமைப்பின் ஆயுதப் போராட்டத்தை இன்னொரு படிநிலைக்கு உயர்த்திவிட்டிருந்த பிரபாகரன் அதற்கான தலைமையினையும் வழங்கினார். அக்காலத்தில் இருந்த போராளித் தலைவர்களில் பிரபாகரனே இவ்வகை படிநிலை மாற்றத்தினை முதன்முதலாக கைக்கொண்டவர் என்பது முக்கியமானது. மேலும், இந்த அறிவிப்போடு முதலாவது ஈழப்போர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.
முதலாவது ஈழப்போர் 1984 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதி பொலிகண்டியை அண்டிய கடலில் , வல்வெட்டித்துறைக்கு அருகாமையில் இடம்பெற்ற கடற்சமருடன் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகு தனது ரேடரில் தெரிந்த புலிகளின் படகு நோக்கித் துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தது. புலிகளும் திருப்பித் தாக்கினார்கள். சிறிதுநேரம் மட்டுமே நடைபெற்ற தீவிரச் சண்டையில் ஆறு கடற்படையினர் புலிகளால் கொல்லப்பட்டதுடன் இன்னும் சிலர் காயமடைந்தனர். சீனாவில் தயாரிக்கப்பட்ட இன்னொரு பீரங்கிப்படகில் இருந்த 9 கடற்படையினர், சேதமடைந்த படகில் கிடந்த கொல்லப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். புலிகளின் படகில் பயணம் செய்த நான்கு போராளிகளும் காயமேதும் இன்றித் தப்பித்ததோடு, படகும் பாதுகாக்கப்பட்டது.
புலிகளுடனான தனது முதலாவது கடற்சமரிலேயே கடுமையான இழப்புக்களைக் கடற்படை சந்தித்தது. இது அவர்களைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையாக மாறியது. அதுலத் முதலி கொதித்துப்போனார். மறுநாள் காலை பொலீஸாரும் இராணுவமும் இணைந்து வல்வெட்டித்துறைப் பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதேவேளை பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறை மீது கடற்படையும் இராணுவமும் இணைந்து கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர். வல்வெட்டித்துறைக் கடற்கரைப்பகுதி தமது கண்காணிப்பிற்குட்பட்ட பகுதி என்று கடற்படையால் அறிவிக்கப்பட்டது. கரையில் கட்டப்பட்டிருந்த மீனவர்களின் குடிசைகள் பீரங்கிப் பாடகிலிருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் தீப்பிடித்து எரிய, வீதியால் வந்த கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குத் தீமூட்டினர். சுமார் 5000 பொதுமக்கள் ஊரைவிட்டு வெளியேறி அருகிலிருந்த பாடசாலையினுள் தஞ்சமடைந்திருந்தனர். நூற்றிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினராலும், கடற்படையினராலும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களுள் குழந்தைகளும் முதியவர்களும் அடங்கும்.
வல்வெட்டித்துறைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொலீஸாரும் இராணுவத்தினரும், அவ்வூரில் இருந்த உடல்வலுக் கொண்ட ஆண்கள் அனைவரையும் திறந்த வெளியொன்றில் கூடுமாறு கட்டளையிட்டனர். குறைந்தது 300 ஆண்கள் அவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். குழுக்களாகச் சென்ற இராணுவத்தினர் அருகில் இருந்த கிராமங்களுக்குள் சென்று கண்களில் பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதுடன் வீடுகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்தனர்.
இராஜாங்க அமைச்சகத்தின் பேச்சாளர் டக்ளஸ் லியனகே பத்திரிக்கையாளர்களின் மாநாட்டில் பேசும்போது சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இன்னும் 300 பயங்கரவாதிகளைத் தாம் கைதுசெய்திருப்பதாகவும் கூறினார். இதுதொடர்பாக டெயிலி நியூஸ் வெளியிட்ட செய்தியின் முதலாவது பந்தி பின்வருமாறு கூறியது,
"வல்வெட்டித்துறைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொலீஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 300 பயங்கரவாதச் சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளனர் என்று கொழும்பிற்குக் கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல பயங்கரவாதிகள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது....."
அன்றைய நாள் நகர்ந்தபொழுது வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற படுகொலைகள், கைதுகள், சொத்தழிப்புக்கள் குறித்த தகவல்கள் யாழ்க்குடாநாடெங்கும் பரவியது. யாழ்ப்பாணத்தில் கடுமையான பதற்றம் நிலவியதோடு, கடற்சமரில் கொல்லப்பட்ட கடற்படையினரின் உடல்கள் இராணுவத்தால் மீட்கப்பட்டு பலாலியூடாக கொழும்பிற்கு எடுத்துசெல்லப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. கவச வாகனங்களில் வலம்வந்த இராணுவத்தினர் யாழ் வைத்தியசாலைக்கு எதிர்ப்புறமாக இருந்த கட்டடங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கித் தாக்குதல்களை நடத்திக்கொண்டு சென்றனர். பின்னர் அவ்வாகனம் யாழ்ச் சந்தைப்பகுதி நோக்கி நகர்ந்தபடி தாக்குதல் நடத்தியவேளை புலிகள் அதனை நோக்கி கிர்னேட்டுக்களாலும், பெற்றொல்க் குண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர். புலிகளோடு இணைந்த பொதுமக்கள் கற்களாலும் ஏனைய பொருட்களாலும் கவசவாகனம் மீது எறியத் தொடங்கினர். உள்ளிருந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இந்தச் சண்டை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. முடிவில் கவச வாகனத்திற்குச் சேதம் ஏற்பட்டதுடன் ஒரு இராணுவத்தினரும் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து யாழ்நகர் முழுவதும் குண்டுத் தாக்குதல்களால் அதிர்ந்தது. பல பொதுமக்கள் இராணுவத்தால் சகட்டுமேனிக்குக் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். மிகப்பழமையானதும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான யாழ்நகரம் முதலாவது ஈழப்போரின் சண்டையினை அன்று தரிசித்தது.
லியனகேயின் அலுவலகம் விடுத்த பத்திரிக்கையாளருக்கான குறிப்பில் யாழ்ப்பாணத்தில் பலர் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. கொல்லப்பட்ட அனைவருமே பயங்கரவாதிகள் என்று அவ்வறிக்கை கூறியதுடன், இராணுவத்தினருடனும், பொலீஸாருடனுமான மோதல்களில் இவர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் கூறியது.
அன்று இரவாகியதும், யாழ்ப்பாண நகரில் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் பிறப்பித்தது. இராணுவத்தினரும் பொலீஸாரும் குழுக்களாக யாழ்நகரப்பகுதிகளிலும், கிராமங்களிலும் வலம் வந்தனர். அன்றிரவு முழுவதும் பொதுமக்களைக் கொன்றதுடன், சொத்துக்களுக்கும் தீமூட்டியபடி அவர்கள் வலம்வந்தனர். யாழ்ப்பாணம் பலாலி வீதியின் இருமரங்கிலும் இருந்த பெரும்பாலான கடைகளும், சில வீடுகளும் இராணுவத்தால் எரிக்கப்பட்டன. பலாலிக்கு அருகில் அமைந்திருந்த அச்சுவேலிக் கிராமம் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டது. அங்கிருந்த பல கடைகளும் வீடுகளும் இராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்டன. எரிக்கப்பட்ட வீடுகளில் மல்லாகம் நீதிமன்ற நீதிபதியின் வீடும் அடங்கும். அவ்வீட்டின் முன்னால் காவலுக்கு நின்ற பொலீஸாரை கலைத்துவிட்டே இராணுவத்தினர் அதற்குத் தீமூட்டினர்.
புலிகள் பதில்த் தாக்குதலில் இறங்கினர். அன்றிரவு, ஆவணி 5 ஆம் திகதி, வல்வெட்டித்துறைக்கு அண்மையாக இருக்கும் நெடியகாடு எனும் பகுதியூடாக ரோந்துவந்த பொலீஸ் இராணுவ கூட்டு அணிமீது தாக்குதல் நடத்தினர். அன்று பின்னேரம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையம் மீதும் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர். அன்றிரவு முழுவதும் முதலாவது ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. 1987 ஆம் ஆண்டு ஆடியில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்வரை இப்போர் தொடர்ந்து நடைபெற்றது.
நெடியக்காடு எனும்பகுதியில் வீதியின் ஓரத்தில் பாரிய கண்ணிவெடி ஒன்றினைப் புதைத்த புலிகள், வீதியின் இருமருங்கிலும் பதுங்கியிருந்தவாறு இரவுநேர பொலீஸ் - இராணுவ கூட்டு ரோந்து அணியின் வருகையினை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். இந்த ரோந்து அணியில் மூன்று கவச வாகனங்கள், ஒரு ஜீப் வண்டி ஒரு ட்ரக் வண்டி என்று ஐந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் மீது கண்ணிவெடித் தாக்குதலை நடத்திவிட்டு ஏனையவற்றின்மீது துப்பாக்கித் தாக்குதலை புலிகள் நடத்த ஆரம்பித்தனர். எட்டு பொலீஸ் அதிரடிப்படையினரும் அவர்களின் தளபதியான உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் சிறீ ஜயசுந்தரவும் அவ்விடத்தில் பலியானார்கள்.
ஒட்டுசுட்டானில், இருள் சூழ்ந்த மாலை வேளையில் மாத்தையா தலைமையில் 60 புலிகள் இரு குழுக்களாகப் பிரிந்து நிலையெடுத்துக் காத்திருந்தனர். சுமார் 50 பொலீஸார் தங்கியிருந்த இருமாடிக் கட்டத்தின் பிற்பகுதிக்கு புலிகளின் குழுவொன்று சென்றது. இக்கட்டத்தில் இருந்த பொலீஸாரில் 30 பேர் இஸ்ரேலியக் கமாண்டோக்களினால் பயிற்றப்பட்ட கெரில்லா எதிர்ப்பு அதிரடிப்படை வீரர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மற்றைய குழு முகாமின் முற்பகுதியில் இருந்து தாக்குதலை ஆரம்பித்தது. கட்டடத்திற்குள் இருந்த பொலீஸார் முகாமினைக் காத்துக்கொள்ள முகாமின் முன்புறம் நோக்கி ஓடினர்.
அப்போது முகாமின் பிற்பகுதியில் நிலையெடுத்திருந்த இரண்டாவது குழு முகாமிற்குள் நுழைந்துகொண்டது. உள்ளே நுழைந்தவுடன் கிர்னேட்டுக்களை வீசியும், குண்டுகளை வெடிக்கவைத்தும் தாக்குதல் நடத்தி பொலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடையுமாறு கோரியது. பொலீஸார் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, தப்பியோடினர். புலிகள் ஆயுதங்களைக் கைப்பற்றிக்கொண்டதுடன், கட்டடத்தையும் குண்டுவைத்து தகர்த்துவிட்டுச் சென்றனர். புலிகளால் எடுத்துச் செல்லப்பட்ட ஆயுதங்களில் நான்கு இயந்திரத் துப்பாக்கிகள், மூன்று 0.303 ரைபிள்கள், நான்கு ரிப்பீட்டர் ரைபிள்கள்,இரண்டு 0.38 கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் என்பன அடங்கும். கொல்லப்பட்ட எட்டு பொலீஸ் கமாண்டோக்களில் பொலீஸ் பரிசோதகர் கணேமுல்லையும் ஒருவர்.