கண்ணிவெடி யுத்தம்
போராளிகளின் தாக்குதல்களின் மும்முரம் அரசாங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் வட கிழக்கில் அதிகரித்துவரும் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் என்கிற தலைப்பில் செய்திவெளியிட்டிருந்தது. மேலும், யாழ்ப்பாணம் செல்லும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் தமது பயணங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவ்வறிக்கை கேட்டுக்கொண்டது. யாழ்ப்பாணத்திற்கு மரக்கறிகளையும், தேங்காய்களையும் எடுத்துச் சென்ற பாரவூர்தியொன்று பயங்கரவாதிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி சாரதியும், நடத்துனரும் கொல்லப்பட்டதாக அவ்வறிக்கை கூறியிருந்தது.
ஆவணியின் இறுதிப்பகுதியில் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல்கள் இராணுவத்தினருக்கு அச்சுருத்தலாகவும், சவாலாகவும் மாறியிருந்தன. ஆகவே, இதற்கு முகம் கொடுப்பதற்காக கண்ணிவெடிகளில் இருந்து இராணுவத்தினருக்குப் பாதுகாப்பு வழங்கக் கூடிய கவச வாகனங்களை தென்னாபிரிக்காவிலிருந்து அரசு கொள்வனவு செய்தது. இதற்கு மேலதிகமாக இராணுவ ரோந்துகளுக்கு முன்னர் வீதிகளை சோதனை செய்து, கண்ணிவெடிகளை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றும் நடவடிக்கைகளிலும் அரசு இறங்கியது. போராளிகளின் கண்ணிவெடித் தாக்குதல்களும், இராணுவத்தினரின் காப்பு நடவடிக்கைகளும் இருதரப்பினரதும் புத்திசாதுரியங்களுக்கிடையிலான போட்டியாக மாறியது. ஆவணி 24 ஆம் திகதி நடைபெற்ற இரு சம்பவங்கள் அக்காலத்தில் நிலவிய சூழ்நிலையினை விளக்கப் போதுமானவை.
கண்ணிவெடிகளுக்குத் தாக்குப்பிடிக்கும் பவள் கவச வாகனத்தைப் புரட்டிப் போட்ட புலிகள்
முதலாவது சம்பவம் கரவெட்டி மேற்கில் இருக்கும் கல்லுவம் மண்டான் பகுதியில் நடைபெற்றது. இப்பகுதியினூடாகச் செல்லும் பிரதான வீதியில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவலை வழங்கியவர்களே புலிகள்தான். ஆகவே, இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் அப்பகுதிக்குச் சென்று தமது தேடுதலை ஆரம்பித்தனர். கண்ணிவெடி அகற்றும் பிரிவுக்குப் பாதுகாப்பாக இன்னொரு தொகுதி இராணுவத்தினர் தென்னாபிரிக்க பவள் கவச வாகனங்களில் வந்திருந்தனர். கண்ணிவெடி புதைக்கப்பட்ட பகுதியின் மேலாக கவச வாகனம் ஏறியபோது குண்டு வெடிக்கவைக்கப்பட்டது. பவள் வாகனம் குடைசாய உள்ளிருந்த 8 இராணுவத்தினர் அவ்விடத்தில் பலியானார்கள்.
அதே நாளன்று நீர்வேலிப் பகுதியில் இவ்வாறான கண்ணிவெடி அகற்றும் பிரிவொன்றின்மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
புரட்டாதி மாதமளவில் தமது கண்ணிவெடித் தாக்குதல் திறமையினை புலிகள் நன்கு வெளிப்படுத்தியிருந்தனர். இம்மாதத்தின் முதலாம் திகதி வடமாராட்சி திக்கம் பகுதியில் அவர்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஐந்து பொலீஸ் கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்க பொலீஸார் நடத்திய தாக்குதல்களில் அப்பகுதியில் பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதோடு வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீவைக்கப்பட்டது.
இருநாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 3 ஆம் திகதி வடமராட்சி, கிழக்குப் பருத்தித்துறைப் பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த எட்டு மீனவர்களை ரோந்துவந்த கடற்படையினர் சுட்டுக் கொன்றனர்.
இஸ்ரேலிய பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களின் ஆலோசனைகள் மூலமாகவும், வெளிநாட்டு இராணுவ உதவிகள் மூலமாகவும் போராளிகளின் ஆயுதச் செயற்பாட்டினை வடக்கிற்குள் மட்டுப்படுத்திவிடலாம் என்று பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி நம்பிவந்தார். ஆனால், அவரின் நம்பிக்கையினைச் சிதைக்கும் விதமாக புரட்டாதி 10 ஆம் திகதி புலிகள் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் விஸ்த்தரித்துக்கொண்டனர். புரட்டாதி 11 ஆம் திகதி வர்த்தக அமைச்சின் பத்திரிக்கையாளர் மாநாட்டில் பேசிய லலித், பயங்கரவாதம் கிழக்கிற்கும் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். "கிழக்கிற்கான பாதைகளை நாம் மூடிவருகிறோம். இதற்காக வடக்குக் கிழக்கு எல்லையோரங்களில் சிங்களக் கிராமங்களை நாம் உருவாக்கி வருகிறோம்" என்று அவர் கூறினார்.
இராணுவமயப்படுத்தப்பட்ட எல்லையோர சிங்களக் குடியேற்றங்களை இலக்குவைத்த புலிகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் லலித் அதுலத் முதலியின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்டுவரும் இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மீது தமது பார்வையைத் திருப்பினர் புலிகள். பாலஸ்த்தீனத்தில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுவரும் இஸ்ரேலிய அரசின் திட்டத்தினைனை நகலாகக் கொண்ட இராணுவமயமாக்கப்பட்ட இவ்வகைச் சிங்களக் குடியேற்றங்கள் திருகோணமலை முதல் முல்லைதீவு வரையான கரையோரப்பகுதிகளிலும், 1950 களில் அமைக்கப்பட்ட சிங்களைக் குடியேற்றமான பதவியாவுக்கும் பாரம்பரிய தமிழ்க் கிராமமான நெடுங்கேணிக்கும் இடையே தமிழ்ப் பிரதேசங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினை ஊடறுத்து அமைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே அமைக்கப்பட்ட சிங்கள மீனவக் குடியேற்றங்களான கொக்கிளாய் நாயாறு ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் விவாசாயக் குடியேற்றக்கிராமமான பதவியாவின் விஸ்த்தரிப்பாகவும் இவை உருவாக்கப்பட்டு வந்தன. இக்குடியேற்றங்களில் அமர்த்தப்பட்ட சிங்களவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் ஆயுதங்களும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டன.
செம்மலைத் தாக்குதல்
மாத்தையா தலைமையிலான 16 போராளிகள் அடங்கிய புலிகளின் அணியொன்று, முல்லைத்தீவு - கொக்கிளாய் வீதியில், முல்லைத்தீவு நகரிலிருந்து பத்துக் கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருக்கும் செம்மலைக் கிராமத்தில் கண்ணிவெடியொன்றைப் புதைத்துவிட்டு இராணுவத்தினரின் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காலை 10:15 மணிக்கு ஜீப் வண்டி முன்னல் வர பின்னால் இரு ட்ரக்குகளில் இராணுவத்தினர் அப்பகுதிநோக்கி வந்துகொண்டிருந்தனர். முன்னால் வந்துகொண்டிருந்த ஜீப் வண்டி தம்மைக் கடக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்த புலிகளின் அணி, நடுவில் வந்துகொண்டிருந்த ட்ரக்கினை இலக்குவைத்து கண்ணிவெடியை இயக்கியது. ட்ரக் கண்ணிவெடியில் வெடித்துச் சிதற பின்னால் வந்த இரண்டாவது ட்ரக் வண்டியில் இருந்த இராணுவத்தினர் வெளியே குதித்துத் தாக்குதலில் ஈடுபட, புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சமர் மூண்டது. ஒருகட்டத்தில் தாக்குதலை முடித்துக்கொண்டு புலிகளின் அணி பின்வாங்கிச் சென்றது.
இந்தச் சண்டையில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட மேலும் மூவர் காயமடைந்தனர். முல்லைத்தீவு முகாமிலிருந்து வந்த மேலதிக இராணுவத்தினர் அப்பகுதியை சல்லடை போட்டுத் தேடினர். இச்சண்டையில் நான்கு பயங்கரவாதிகளைத் தாம் கொன்றுவிட்டதாக கொழும்பில் அரசாங்கம் கோரியபோதும், புலிகள் அதனை மறுத்திருந்தனர். மேலதிக இராணுவத்தினர் அப்பகுதிக்கு வருமுன்னரே தமது அணி அப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாக அவர்கள் அறிவித்தனர்.
கொக்கிளாயில் இராணுவத்தின்மேல் நடத்தப்பட்ட தாக்குதல் அப்பகுதியில் அரச ஆதரவுடன் குடியேறியிருந்த சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. சிலர் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்பிச் செல்லத் தொடங்கினர். ஆனாலும், அப்பகுதியில் தான் முன்னெடுத்து வந்த இராணுவமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றத்தை விஸ்த்தரிப்பதில் இருந்து அரசாங்கம் சிறிதும் பின்வாங்க விரும்பவில்லை.