Jump to content

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2405
  • Joined

  • Last visited

  • Days Won

    49

Everything posted by Kavi arunasalam

  1. அவர் என்னைக் கடந்து போகும் போது, அவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது. நன்றாகத் தெரிந்த முகம் ஆனால் சட்டென்று அவர் யார், அவர் பெயர் என்ன என்பதை மூளை அறிவிக்க மறுத்து விட்டது. ஒருவேளை மூளைக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்கவில்லை என்று அது கோவித்துக் கொண்டதா? தெரியவில்லை. தெரிந்த ஒருவரின் மாமியாரின் அடக்க நிகழ்வு. அங்கிருந்தவர்களில் பலரை எனக்குத் தெரியவில்லை. நாங்கள்தானே பார் எல்லாம் பரந்து வாழ்கிறோம். எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று எப்படித் தெரியும். ஆனால் குறிப்பாக அவரை மட்டும் எனக்குத் தெரிந்திருக்கிறது. என்னைக் கடந்து போகும் போது அவர் என்னைப் பார்த்த பார்வையில் அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது. அவரிடம் போய், “நீங்கள் யார்?” என்று கேட்பது நாகரீகமாக இருக்காது. அப்படிக் கேட்பது ஒருவேளை அவரைக் காயப்படுத்தவும் கூடும். சுற்றி ஒரு கண்ணோட்டம் விட்டதில் நம்ம ஊர் தமிழ்க்கடை முதலாளி தெரிந்தார். ஊரில் மட்டும் அல்ல வெளி இடங்களிலும் அவருக்குப் பலரைத் தெரியும். மெல்ல அவரிடம் நகர்ந்து, “எப்பிடி வியாபாரம் எல்லாம் போகுது?” என்று கதையை ஆரம்பித்தேன். நான் அந்தக் கேள்வியை அவரிடம் கேட்டிருக்கவே கூடாது என்பது உடனேயே விளங்கியது. “நன்றியில்லாத சனம் அண்ணை. நான் கடைக்கு வாடகை கட்டி, வேலையாளுக்கு சம்பளம் குடுத்து, பாங்கிலை லோன் எடுத்து சாமான்களை வேண்டிப் போடுறன். ஆரோ ஒருத்தன் புதுசா வந்தவன், கொலண்டிலை இருந்து வானிலை மீன் கொண்டு வந்து மலிவா விக்கிறான் எண்டு சனங்கள் அவனிட்டை வாங்குதுகள். அதுவும் அவன் எப்ப மீன் கொண்டு வாறான். எந்த இடத்திலை வான் நிக்கும் எண்டு வட்ஸ் அப்பிலிலை மெஸேச்சும் அனுப்பினம்” எவ்வளவோ கேள்விகள் இருக்க ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று என்னையே நான் திட்டிக் கொண்டேன். ஒருவா று அவர் புலம்பல் நின்ற பிறகு, “அதிலை கோடு போட்ட சேர்ட் போட்டுக் கொண்டு நிக்கிறது யார்? என்று முதலாளியிடம் கேட்டேன். “அவரை உங்களுக்குத் தெரியோணுமே. ஹால் நகரத்துக்குப் பொறுப்பா இருந்தவர்” மேற்கொண்டு எனக்கு விளக்கம் தேவைப்படவில்லை. நவம் எனக்கு நன்கு தெரிந்தவர்தான். நாங்கள் நடத்திய கலை நிகழ்ச்சிகளுக்கு நல்ல ஒத்தாசைகள் தந்தவர். இரண்டு தசாப்தங்கள் அவருக்கும் எனக்கும் தொடர்புகள் இல்லாமல் போயிற்று. இருபது வருடங்களில் அவர் இளமையைக் கடந்து வந்துவிட்டார். அவரை அடையாளம் காண முடியாததற்கு எனது வயது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் என்ன? இப்பொழுது தெரிந்து விட்டதுதானே. முதுகில் தட்டிவிட்டு, “நவம், எப்பிடி இருக்கிறீங்கள்?” நவம் என்ற வார்த்தையை கொஞ்சம் அழுத்திச் சொன்னேன். “நான் நினைச்சன் மறந்து போட்டீங்களெண்டு” பழைய கதைகள் பேசிக் கொண்டோம். எனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். சொல்லிவிட்டு, பதிலுக்கு அவர் குடும்பத்தைப் பற்றிக் கேட்டேன். மகனும், மகளும் நல்ல வேலையில் இருப்பதாகச் சொன்னார். “நல்ல இடத்திலை பாக்கிறன். உங்களுக்குத் தெரிஞ்சாக்கள் இருந்தால் சொல்லுங்கோ” “மாப்பிள்ளை தேடுறீங்களோ?” “இல்லை…இல்லை. மகனுக்குப் பொம்பிளை தேடுறன். அவனுக்கு 28 வயசாச்சு…” “இப்ப எல்லாம் எங்கடை பெடியள் தாங்களே தேடிக் கொள்ளுவாங்களே..!” “அதுதான் மகளும் பேசுறாள். பொத்திப் பொத்தி வளத்தீங்கள் இப்ப தேடுங்கோ எண்டிறாள்” “அப்ப உங்கடை மகளுக்குப் பாக்கேல்லையோ?” “அவளுக்கு ஒரு Boy friend இருக்கிறான்…” “பெட்டியை மூடப் போறம் பூக்கள் போட விரும்பினாக்கள் வந்து போடுங்கோ.” ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். “பூ போட்டுட்டு வாறன்” சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
  2. தொழில்ரீதியாக உங்கள் உடற் கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டுமானால், Anaboleஐ பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது” இப்படிக் குறிப்பிடுகிறார் ஒரு உடற் பயிற்சிக் கூடப் பயிற்சியாளர் ஒருவர். Anaboleஐ பயன்படுத்தினால், தங்களின் வாழ்க்கையை அது சிதைத்துவிடும் என்பதை கண்கூடாகக் கண்டும் சிலர் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தொடர்ந்து அந்தத் தவறை செய்கிறார்கள். உடற்பயிற்சியின் போது தசைக் கட்டமைப்பை (muscle building)வளர்த்துக்கொள்ள Anabole Steroide ஊக்கமருந்தைப் பயன்படுத்துவார்கள். Jo Lindnerம் அதற்கு விதிவிலக்கானவரல்ல. உடற்கட்டமைப்பில், யேர்மனியின் மிக பெரிய நட்சத்திரமாக இருந்தவர் Jo Lindner. அவர் தனது 30ஆவது வயதில் (30.06.2023) மரணிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவருக்கு Instagramஇல் ஒன்பது மில்லியன் பயணியர்கள் இருந்தார்கள்.அதிலும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் தாய்லாந்திலும் அமெரிக்காவிலும் இருந்திருக்கிறார்கள். அவருடைய மரணம், இரத்த நாளங்களில் ஏற்பட்ட வீக்கத்தில் ஏற்பட்ட இரத்தக் கசிவாலேயே(Aneurysma) நடந்தது எனச் சொல்லப்பட்டாலும் அதிகாரபூர்வமான மருத்துவ அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை. “தனக்கு, கொஞ்ச நாட்களாக கழுத்தில் ஒரு வலி இருப்பதாகச் சொன்னான். அன்று மாலை அவன் என்னுடன்தான் இருந்தான். நான்கு மணிக்கு உடற் பயிற்சி செய்யும் நண்பன் ஒருவனைச் சந்திக்க வேண்டும் என்று புறப்பட ஆயத்தமானான். திடீரென என் கையில் சாய்ந்தான். போய்விட்டான். எல்லாமே ஒரு கணத்தில் முடிந்து விட்டது” என்கிறாள் Jo Lindnerஇன் பெண் நண்பியான தாய்லாந்தைச் சேர்ந்த Nicha. மூன்று வருடங்களுக்கு முன்னர் Jo Lindner, தசைக் கட்டமைப்பை வளர்த்துக் கொள்ள மலிவான ஊக்கமருந்தை முதலில் பாவித்ததாகவும் பின்னர் தவறான முறையில் Anaboleஐ பயன்படுத்தி மார்பகத்தின் முலையில் தனக்கு வலி ஏற்பட்டதாகவும் ஆண்குறியில் தளர்வான நிலையை தான் உணர்ந்ததாகவும் YouTube-Videoவில் குறிப்பிட்டிருக்கிறார். “என்னுடைய தலையைவிட எனது கை பெரிதாக இருக்க வேண்டும்” இப்படிச் சொன்னவர் Rich Piana (†46). 2017 இல் மயங்கி விழுந்து, இரண்டு கிழமைகள் கோமாவில் இருந்து இறந்து போனார். Liver King என்று அழைக்கப்பட்டவர் Brian Johnson (45). பச்சையாக ஈரலைச் சாப்பிடுவது போல் புகைப்படங்களில் தன்னைக் காட்டிக் கொண்டவர். தனது உடற்கட்டமைப்புக்கு ஒரு விலங்கின் மூக்கில் இருந்து வால்வரை உண்ணுகிறேன் என்றெல்லாம் ஊடகங்களுக்குக் கதை விட்டவர். முடிவில் எல்லாமே பொய் என்று ஆகிவிட்டது. மாதம் ஒன்றுக்கு 11,000 டொலர் கொடுத்து அவர் ஊக்கமருந்து வாங்கியதற்கான பற்றுச் சீட்டு வெளியாகி Johnson வருடக் கணக்காக ஊக்கமருந்தை உட்கொண்டார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. ரஸ்ஸியாவைச் சேர்ந்த Tereshin (26), Anaboleஐ பயன்படுத்தவில்லை என்கிறார். Bazooka arms என்று பெருமையாக அவர் சொல்லும் தனது கைகளுக்கு வஸலீனை (Vaseline) ஊசி மூலமாகச் செலுத்திக் கொண்டதாகச் சொல்கிறார். இப்படியே போனால் இவர் தனது இரு கைகளையும் இழக்கலாம் அல்லது உயிரைக் கூட விட்டு விடலாம் என்கிறார்கள் அவரது நலன் விரும்பிகள். Ronnie Coleman (59) தான் Anaboleஐ உட்கொண்டதை ஒப்புக் கொள்கிறார். எட்டு வருடங்கள் ஒலிம்பிக் போட்டியில் வென்றவருக்கு இப்பொழுது நடமாட ஒரு சக்கர நாற்காலி தேவைப்படுகிறது. குத்துச் சண்டை வீரர் முகமது அலி (†74)யின் இறுதி வாழ்க்கையும் சோகமாகத்தான் போனது. ஈழத்திலும் உடற்பயிற்சி செய்பவர்கள் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சாண்டோ நிச்சயமாக இருப்பார். எனது ஊரான பருத்தித்துறையில் ஏகப்பட்ட சாண்டோக்கள் இருந்தார்கள். வருடம்தோறும் கடற்கரையில் மேடை அமைத்து ஆணழகன் போட்டி நடத்துவார்கள். ஆண்களின் கட்டான உடல்கள் எண்ணையில் குளித்து மின் வெளிச்சத்தில் ஜொலிக்கும்.. அவர்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க கதிர்காமத்தம்பி மாஸ்ரர், சாண்டோ மணியம், சாண்டோ துரைரத்தினம்,சாண்டோ சிங்கப்பூர் சர்வானந்தம், சாண்டோ துரைசிங்கம் என ஆசான்கள் இருந்தார்கள். பயிற்சி பெற வந்தவர்களில் வசதி உள்ளவர்கள் முட்டை பால் இறைச்சி எனச் சாப்பிட்டார்கள். ஆனால் பொதுவாக பயிற்சி பெற வந்தவர்கள் எல்லோரையும், இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் கட்டாயமாக கடலையை தண்ணீரில் ஊற வைத்து காலையில் அதை பச்சையாகச் சாப்பிடச் சொன்னார்கள். இயற்கையாகக் கிடைப்பதை எல்லாம் விட்டு விட்டு தொலைதூரம் வந்துவிட்டோம்.
  3. யேர்மனியில், சமீபகாலமாகக் காலநிலை ஆர்வலர்களால் ‘கடைசித் தலைமுறை’ என்ற அமைப்பினூடாக வீதிகளில் நடத்தப்படும் போராட்டங்களால், மக்கள் விசனம் அடைந்திருப்பது என்னவோ உண்மைதான். 12.07.2023 புதன்கிழமை Stralsund நகரின் பிரதான வீதியில் கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வீதியை மறித்துப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடந்த வீதியில் வாகனம் செலுத்தி வந்த 41 வயதான பார ஊர்தி ஓட்டுனர் ஒருவர் அங்கே அமைதியை இழந்து, கோபம் கொண்டு செய்த செயல் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது. பார ஊர்தி ஓட்டுனர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி,போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரை வீதியில் இருந்து இழுத்து நடைபாதையில் போட்டுவிட்டு மற்றொருவரை தாக்க முயன்றிருக்கிறார். அவர் தனது கோபத்தின் உச்சமாக தனது வாகனத்தில் ஏறி அதை ஓட்டவும் செய்திருக்கிறார். இதனால் இளைஞன் ஒருவன் ஒரு மீற்றர் தூரத்துக்கு வாகனத்தால் முன் நோக்கித் தள்ளப்பட்டிருந்தான். உடல்ரீதியான தாக்குதல் முயற்சிக்காக ஒரு வழக்கும்,வாகனத்தை தவறாக ஓட்டினார் என்று இன்னுமொரு வழக்கும் ஓட்டுனர் மேல் பதியப்பட்டிருக்கிறது. கடைசித் தலைமுறை உறுப்பினர்கள்,பொதுச் சட்டத்தை மீறியதாகவும், வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்ததாகவும் அவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இன்று இந்த பிரச்சினையை பொலிஸார் Stralsund மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்கிறார்கள். ஓட்டுனர் தனது சாரதிப் பத்திரத்தை இழக்கப் போகிறாரா? இல்லை தக்கவைப்பாரா? என்பது கேள்வி. https://www.ndr.de/nachrichten/mecklenburg-vorpommern/Klimaaktivist-in-Stralsund-angefahren-Gericht-prueft-Fuehrerscheinentzug,letztegeneration374.html
  4. வாழப்போறதே கொஞ்சக் காலம்தான். இதுக்குள்ளே எதற்கு risk? குமாரசாமி உங்கள் இளம் வயதுக்கு உங்களால் முடியும். துணிந்து இறங்குங்கள். தமிழனுக்கு வராது
  5. 118 பக்கங்கள் அடங்கிய குடும்ப வன்முறைகள் பற்றிய அறிக்கை இன்று யேர்மனில் வெளியாகி இருக்கிறது. கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு குடும்ப வன்முறைகள் அதிகரித்திருப்பதை யேர்மனியின் 16 மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தெரிகிறது. யேர்மனி முழுவதிலும் மொத்தமாக 179179 குடும்ப வன்முறைகள் பொலீஸாரினால் பதியப் பட்டிருக்கின்றன. 2021ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு குடும்ப வன்முறை 9.3 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. Nordrhein-Westfalen மாநிலத்தில் 37141 வன்முறைகளும், Baden-Württemberg மாநிலத்தில் 14969 வன்முறைகளும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் வன்முறைகள் குறைந்த மாநிலமாக Bremen(2615) மாநிலம் காணப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் குடும்ப வன்முறையால் காயப்பட்டவர்களது எண்ணிக்கை 26.2 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. வன்முறைகளால் அதிகமாகப் பெண்களே(71வீதம்) பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது. “பதியப்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலேயே தகவல்களைத் தர முடியும். இன்னும் எத்தனையோ சம்பவங்கள் பூட்டிய அறைகளுக்குள் நடந்தேறி இருக்கலாம். பொலீஸிடம் போனால் கொளரவக் குறைச்சல் எனவும் சிலர் நினைத்து பேசாமல்கூட இருந்திருக்கலாம். குடும்ப வன்முறைக் குற்றங்கள் நடக்கும் பட்சத்தில் அவை முறையிடப்படல் வேண்டும். அதனால் குற்றம் செய்தவருக்கு தண்டனை கிடைக்கும். அந்தத் தண்டனையைப் பார்த்து குற்றங்கள் குறைய வாய்ப்புகள் இருக்கின்றன. என யேர்மனியின் உள்துறை அமைச்சர் Nancy Faeser குறிப்பிடுகிறார். ஆகவே ஆண்களே, வாயை மூடிக் கொண்டு உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு இருக்காமல் தைரியமாக வெளியே வந்து சொல்லுங்கள். 11.07.2023
  6. பழைய திரைப்படங்கள் அதுவும் குறிப்பாக எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பார்த்தால், நாயகன் 100 வீதம் நல்லவனாக இருப்பான். வில்லன் செய்த சதியால் வீண்பழி சுமந்து அவன் சிறைக்குப் போவான். படத்தில், “ஓடி வந்து மீட்பதற்கு உண்மைக்கோ கால்கள் இல்லை ஓய்ந்திருந்து கேட்பதற்கு நீதிக்கோ நேரம் இல்லை பார்த்த நிலை சொல்வதற்கு பரமனுக்கோ உருவம் இல்லை பழி சுமந்து செல்வதன்றி இவனுக்கோ பாதை இல்லை..” போன்ற சீர்காழியார் பாடும் ‘கணீர்’ பாடல்களும் இருக்கும். பின்னர் நாயகன் சுற்றவாளி என நிரூபணமாகி, விடுதலையாகி, “தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்” என்று கதை முடியும். யேர்மனியில், கடந்த வெள்ளிக்கிழமை(07.07.2023) ஒரு வழக்கில் கிடைத்த தீர்ப்பு எனக்கு இப்படியான பழைய திரைப்படங்களை நினைவூட்டியது. காலை பத்துமணி, யேர்மனி மூனிச் நகரத்தில் A-101ம் இலக்க நீதிமன்ற மண்டபத்தில் பெண் நீதிபதி எலிசபெத் ஏர்ல் அவர்களின் தீர்ப்புக்காக, பார்வையாளர்கள் காத்திருந்தார்கள். 2008இல், விதவையான 87 வயதான லீசலொற்றே கோர்ரூமை குளியலறைத் தொட்டித் தண்ணிக்குள் அமுக்கி கொலை செய்ததற்காக மன்பிரட் ஹென்டிற்ஸ்கிக்கு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை கிடைத்திருந்தது. மன்பிரட் ஹென்டிற்ஸ்கி குடியிருப்புகளின் மேற்பார்வையாளராக வேலை செய்து கொண்டிருந்தவர். தனித்து வாழ்ந்து கொண்டிருந்த லீசலொற்றே கோர்ரூமை பராமரிக்கும் பகுதி நேர வேலையையும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து கொண்டிருந்தார். 28.10.2008 அன்று மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர் லீசலொற்றே கோர்ரூமை வீட்டுக்கு அழைத்து வந்த மன்பிரட்ஹென்டிற்ஸ்கி, அவரது பணத்தைக் கையாட முயன்றிருக்கிறார். இதனால் ஏற்பட்ட தகராறில் லீசலொற்றே கோர்ரூமை தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கி கொன்றிருக்கிறார். இப்படி அப்பொழுது ‘குளியலறைத் தொட்டிக் கொலை’ என பிரபலமாக பேசப்பட்ட வழக்கில் மன்பிரட் ஹென்டிற்ஸ்கிக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. தீர்ப்புக் கிடைத்த நாள் முதலாக மன்பிரட் ஹென்டிற்ஸ்கி, தான் கொலை செய்யவில்லை தன்னை விடுதலை செய்ய வேண்டும் என தனது சட்டத்தரணி மூலம் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்து வந்திருந்தார். மன்பிரட் ஹென்டிற்ஸ்கியின் பல வருட கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கொலை பற்றி ஆய்வு செய்ய வல்லுனர்களைக் கேட்டுக் கொண்டது. “மருத்துவமனையில் இருந்து லீசலொற்றே கோர்ரூமை அழைத்து வந்து வீட்டில் சேர்த்து விட்டு மன்பிரட் ஹென்டிற்ஸ்கி போய்விட்டார். அதன் பின்னர் லீசலொற்றே கோர்ரூம் குளியலறைக்குள் போயிருக்கிறார் அவர் பல தடவைகள் நிலை தவறி வீழ்ந்திருக்கிறார் என்பது அவரது மருத்துவ அறிக்கையில் இருக்கிறது. அன்று தண்ணீர் நிரம்பிய தொட்டியில் ஆடையை கழுவ குனியும் போது அடிக்கடி அவருக்கு வரும் நிலை தடுமாற்றம் அப்பொழுது அவருக்கு வந்திருக்கிறது. தலை தண்ணீருக்குள் முதலில் விழும் வகையில் அவர் தொட்டிக்குள் சரிந்திருக்கிறார். அவரால் எழுந்து கொள்ளக் கூடிய அளவுக்கு பிடிமானங்களோ அவரிடம் பலமோ இல்லாததால் தண்ணீருக்குள் மூழ்கி அவர் இறந்திருக்கிறார். மன்பிரட் ஹென்டிற்ஸ்கி, லீசலொற்றே கோர்ரூமை வீட்டில் விட்டுப் போன இரண்டு மணித்தியாலங்கள் கழித்தே அவர் இறந்துள்ளதாக தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்ட வெப்பநிலையில் இருந்து நிரூபணமாகி இருக்கிறது“ என வல்லுனர்கள் தங்கள் முடிவை நீதிமன்றத்தில் சமர்பித்தார்கள். மன்பிரட் கேட்டுக் கொண்ட கோரிக்கையின் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவை 07.07.2023 வெள்ளிக்கிழமை நீதிபதி காலை10.02க்கு அறிவிக்கத் தொடங்கினார். “மன்பிரட் ஹென்டிற்ஸ்கி இந்தக் கொலையைச் செய்யவில்ல என்பது உறுதியாகிறது. எனவே அவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவிக்கப்படுகிறார். மன்பிரட் ஹென்டிற்ஸ்கியின் 13 வருடங்கள் களவாடப் பட்டிருக்கின்றன. அந்த வருடங்கள் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன. அவர் தனது குடும்பத்தைக் காண வாய்ப்பிருக்கவில்லை. சிறுவர்களாயிருந்த தனது குழந்தைகளைப் பராமரித்து வளர்க்கவோ, தனது வேலையைச் செய்யவோ, உறவினர் நண்பர்களைச் சந்திக்கவோ . அவரால் முடியாதிருந்திருக்கிறது. அவரது இந்த இழப்புக்கள் எதுவுமே ஈடு செய்ய முடியாதவை. ஆனாலும் அவருக்கு இழப்பீடாக நாளொன்றுக்கு 75 யூரோப்படி 4915 நாட்களுக்கு 370,000 யூரோக்கள் நீதி மன்றத்தால் வழங்கப்பட வேண்டும்” நீதி மன்றத்தின் வெளியே, நண்பர்கள் உறவினர்கள் அவர் நலன் விரும்பிகள் எனப் பலர் மத்தியில் கண்கள் கலங்கிய நிலையில் மன்பிரட் ஹென்டிற்ஸ்கி நின்றிருந்தார். பெரிய பூங்கொத்தோடு தன்னைக் காண வந்த தனது மனைவி மரியாவை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டார். “தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது காலத்தில் தோன்றி கைகளை நீட்டிக் காக்கவும் தயங்காது…”
  7. யேர்மனியில் சில காலமாக வெளிநாட்டவர்களது செயல்கள் முகம் சுழிக்க வைக்கின்றன . அதிலும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர்களது நடவடிக்கை அதிகமாக இருக்கிறது. யேர்மனி சாக்சென் மாநிலத்தின் லவுற்றர் பேர்ன்ஸ்பாக் என்ற நகரின் ரெயில் நிலையத்தில் 15 வயதான ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞனால் ரெயில் சாரதி(50) ஒருவர் புதன் கிழமை 07.07.2023 அன்று தாக்கப் பட்டிருக்கிறார். ரெயில் சாரதி தாக்கப்படுவதை, Freie Sachsen என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் பொழுது யேர்மனியில் இப்படியும் நடக்கிறதா என ஆச்சரியப் படவைக்கிறது. புகையிரத நிலைய மேடையில், ஒரு யேர்மனியருடன் ஆப்கானிஸ்தான் இளைஞன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவதை அவதானித்த சாரதி அவர்களைச் சமாதானப் படுத்துவதற்காகப் போயிருக்கிறார். அவரது குறுக்கீட்டை விரும்பாத ஆப்கானிஸ்தான் இளைஞன் அவரை கைகளாலும் கால்களாலும் தாக்கி விட்டு தன்னுடன் கூட வந்தவனுடன் நிலையத்தை விட்டு தப்பி ஓடி விட்டான். பின்னர் அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சாரதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ரெயிலில் இருந்த ஒருவர் நடந்ததை கமாராவில் பதிவு செய்ததால் அந்த ஆப்கானிஸ்தான் இளைஞன் அடையாளம் காணப்பட்டான். பொலிஸார் அவனது வீட்டுக்குச் சென்ற போது அங்கு அவன் இல்லை. https://www.facebook.com/freie.sachsen
  8. நீதிமன்றம் அமைதியாக இருந்தது. கமராக்களின் கிளிக் கிளிக் சத்தங்களுடன் காலில் மாட்டப்பட்டிருந்த சங்கிலியின் சத்தம் மட்டும் இப்போது மன்றில் கேட்கத் தொடங்கியது. தனது முகத்தை நீல நிறக் கோப்பினால் மூடியபடி, குற்றவாளி என்று கருதப்பட்டவன் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். சிவப்பு நிற உடை அணிந்திருந்த சிறிய தோற்றம் கொண்ட அந்த இளைஞனை புகைப்படம் எடுப்பவர்கள் சூழ்ந்திருந்தனர். அவனருகே அவனது சட்டத்தரணி அமர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் இருக்கைகள் நிரம்பி இருந்தன. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் நிருபர்களாக இருந்தார்கள் என்பதைச் சொல்லும் விதமாக பலரது கைகளில் கணினிகள் இருந்தன. யேர்மனி இல்லர்கியார்ஸ் நகரில் நடந்த கொலையின் தீர்ப்பை அறிந்து கொள்ளவே அவர்கள் வந்திருந்தார்கள். ஒருமாத காலமாக நடந்த வழக்கின் முடிவு அறிவிக்கப்பட இருப்பதால் பல யேர்மனியர்களின் கவனம் இந்த வழக்கின் மேலே இருந்தது. எரித்திரியா நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரிய 27 வயதான இளைஞன் 2022ந் திகதி மார்கழி மாதம் 5ந் திகதி பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகள் இருவரை கத்தியால் தாக்கி அதில் ஏஸ் என்ற மாணவியைக் கொலை செய்ததுதான் வழக்கு. எழுந்து நின்ற பார்வையாளர்கள் மத்தியில் நீதிபதி வொல்ப்கங் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “குற்றம் சாட்டப்பட்டவர் தனது நாட்டுக்குச் சென்று ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பி இருந்தார். ஆனால் அவருக்கான அனுமதியை வெளிநாட்டவர்களுக்கான அலுவலகம் வழங்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் விரக்தியினால் கார்த்திகை 2022இல் இருந்து வேலைக்குச் செல்லவில்லை. அவர் மற்றவர்களுடன் உரையாடியது மற்றும் அவரது தனது அறையில் சுவர்களில் அவர் எழுதிய வாசகங்களான, “ பெண் இல்லை எனில் வாழ்வு இல்லை”, “யேர்மனியர்கள் ஊத்தையானவர்கள்”, ”தண்டனை” போன்ற வாசகங்கள் பழிவாங்கும் அவரது எண்ணத்தை வெளிப்படுத்துகின்றன. சம்பவம் நடந்த அன்று, வெளிநாட்டவர் அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை கத்தியால் குத்துவதுதான் அவரது எண்ணம் என்றும் வழியில் இரண்டு மாணவிகளை கண்டதும் தனது முடிவை மாற்றி அவர்களைத் தாக்கியதாகவும் விசாரணைகளில் தெளிவாகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் மாணவிகளை இடைமறித்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு கத்தியை எடுத்து தாக்கியிருக்கிறார். முதலில் தாக்குதலுக்குள்ளான மாணவி(13)ஓட ஆரம்பிக்க, திகைத்து நின்ற ஏஸின்(14) மேல் அவர் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்.குறைந்தது 19 தடவைகள் அவர் ஏஸை கத்தியால் குத்தி இருக்கிறார். கத்தியால் குத்தப்பபட்ட ஏஸ் இறந்திருக்கிறார். கொலையையும் கொலைக்கான முயற்சியையும் தற்செயலானதாகக் கருத இங்கு இடமில்லை. ஒரு பழிவாங்கும் நிலையும் கொலைக்கான திட்டமிடலும் உறுதி செய்யப் பட்டிருப்பதால் குற்றம் செய்தவருக்கு இடை நிறுத்தம் செய்ய முடியாத ஆயுள் தண்டனை வழங்கப் படுகிறது” நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை யேர்மனியர் பலர் வரவேற்று இருக்கிறார்கள். யேர்மனியில் ஆயுள் தண்டனை என்பது 15 வருடங்கள் அளவில் வரும். தீர்ப்பின்படி எந்தக் காரணம் கொண்டும் இடையில் அவன் விடுதலை செய்யப்படுவது சாத்தியமில்லை. தண்டனைக் காலம் முடிந்த பின்னும் அவனுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப் பட்டால் மட்டுமே அவனால் வெளியே வரமுடியும். ஆனால் அப்படி விடுதலையானால் அவன் நாடு கடத்தப் படுவானா என்பது பற்றிய தெளிவும் இல்லை. “பெண் இல்லை எனில் வாழ்வு இல்லை” என்றவன் எப்படி 15 வருடங்களை சிறையில் கழிக்கப் போகிறான் என்பது கேள்வி.
  9. சனிக்கிழமை ஆடு அடிக்கிறம் பங்கு வேணுமோ?’ என்ற கேள்விகள் அப்போது இருக்கும். இப்படித்தான் சிறு வயதில் எனக்கு ஆட்டிறைச்சி அறிமுகமானது. சந்தைக்குப் போய் பொருட்கள் வாங்கும் வயதுப் பக்குவம் எனக்கு வந்த போது, பருத்தித்துறை மீன் சந்தையில் உள்ள இடது புறமுள்ள கடையில் ஆட்டிறைச்சி கிலோ மூன்று ரூபாவும் சந்தை வாசலுக்கு நேர் எதிரே இருந்த கடையில் மாட்டிறைச்சி ஒரு ரூபாவும் என்று விற்றுக் கொண்டிருந்தன . பருத்தித்துறைக் கடையில் இறைச்சி வாங்குவதாக இருந்தால் ஆட்களைப் பார்த்துத்தான் இறைச்சி தருவார்கள். ஒவ்வொரு தடவையும் இறைச்சி வாங்கிக் கொண்டு போய் வீட்டில் கொடுத்தால், “உன்னை ஏமாத்தி சவ்வுகளையும் எலும்புகளையும் போட்டுத் தந்திருக்கிறான்” என்ற விமர்சனம்தான் மிஞ்சும். ஊரில் யாராவது ஆடு அடிக்கிறார்கள் என்றால் அது அபூர்வமாகத்தான் இருக்கும். அல்லது தீபாவளியாக இருக்கும். இந்த நிலையில்தான் குசவெட்டி என்ற இடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆடு அடிக்கிறார்கள் என்ற அரிய தகவல் எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு பருத்தித்துறையை விட்டு மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த குசவெட்டி எனக்கு ஆட்டிறைச்சி வாங்கும் தளமாக மாறிப்போனது. குசவெட்டியில் சனிக்கிழமை வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஆடுகள் சாகும். கடையின் பின்புறம் வைத்து ஆடுகளை மூச்சடைக்க வைத்து கொன்று உரித்து அந்த இடத்திலேய பங்கு போட்டு விற்பார்கள். ஒரு பங்கு 10 ரூபா. பங்கு இறைச்சிக்குள் சின்னச் சின்ன துண்டுகளாக ஈரலும் கிட்னியும் மின்னிக் கொண்டிருக்கும். சமைத்த பின்னர் அவை சாப்பிடக் கிடைத்தால் அன்று அது ஒரு பெரிய அதிர்ஸ்டம். புலம் பெயர்ந்து வந்த பின்னர் இன்னும் எங்களவர்கள் மத்தியில் ‘பங்கு இறைச்சி’ கலாச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அங்கே வெள்ளாடு இங்கே செம்மறி ஆடு. ஊரில் அப்பொழுதெல்லாம் ஒருவரை வையும் போது ‘செம்மறி’ என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டது. புலம் பெயர்ந்த பின்னர் அந்த வார்த்தை கெட்ட வார்த்தைகள் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது போல் தெரிகிறது. யேர்மனியில் சனிக்கிழமை என்றில்லாமல் ஞாயிறு தவிர்ந்து மற்றைய எல்லா நாட்களிலும் சுப்பர் மார்க்கெற், அல்லது மசூதிகளில் இருக்கும் கடைகளுக்குப் போனால் ஆட்டிறைச்சி வாங்க முடியும். அதுவும் இறைச்சியில் எந்தப் பகுதி வேண்டுமோ அதைத் தனியாக வாங்க முடியும். சமீப காலமாக யேர்மனியில் ரஸ்ஸியக் கடைகளிலும் ஆட்டிறைச்சியை நான் காண்கிறேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது குடும்பத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார். வருவதற்கு முன்னரே, “ கவி, இடியப்பமும் ஆட்டிறைச்சிக் கறியும் எண்டால் என்ரை மனுசிக்கு நல்ல விருப்பம்” என்று என்ன சமைக்க வேண்டும் என்பதை பூடகமாக எனக்குத் தெரிவித்திருந்தார். சாப்பிடும் போதே கேட்டார், ” நல்ல இறைச்சி. பெரிசா சவ்வுகள் இல்லை. வெள்ளாடோ?” “செம்மறி” “நாங்கள் வாங்கக்க கனக்க சவ்வுகளும் எலும்புகளும் வருது. இனி குமாரிட்டை இறைச்சி வாங்கக் கூடாது” அவர் இருக்கும் நகரத்தில் கடை வைத்திருக்கும் குமார், சனிக்கிழமைகளில் பங்கு இறைச்சி போடுகிறார். சுகாதாரச் சீர்கேடாக இறைச்சி விற்றார் என சுகாதாரப் பரிசோதகரிடம் இரண்டு மூன்று தடவைகள் குமார் பிடிபட்டும் இருக்கிறார். ஆனால் என்னவோ எங்களால் பங்கு இறைச்சியை மட்டும் கைவிட முடியவில்லை. கவி அருணாசலம்
  10. “25 யூன் 2021இல் சோமாலியாவைச் சேர்ந்த அப்டிரஹ்மான் (26) யேர்மனியில் வான் என்ற இடத்தில் ஹோங்ஸ் ஆசிய சிற்றுண்டிக்கு அருகே மூன்று பெண்களை கத்தியால் குத்தியதும் பின்னர் பொதுமக்கள் அவனை மடக்கிப் பிடித்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது நடந்தது போல் ஒரு அசம்பாவிதம் இப்பொழுது நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது” இப்படிச் சொல்கிறார் 62 வயது நிரம்பிய வியட்னாம் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட வான் லோங் கொங். 30ந் திகதி யூன், ஒரு சிரிய நாட்டைச் சேர்ந்த இளைஞன் கையில் கத்தியுடன் நகரத்தில் நடமாடியதை அடுத்து பொது மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அந்த இளைஞனை கைது செய்வதற்கும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் பொலிஸார் வந்திருந்தார்கள். மதியம் 1.40க்கு ஆசிய சிற்றுண்டிச் சாலைக்கு முன்னால், ஆபிரிக்க நாட்டவர் அணியும் வெள்ளை நிற உடை அணிந்திருந்த அந்த இளைஞனுக்குச் சற்றுத் தள்ளி பொலிஸார் நின்று கொண்டிருந்தனர். பொலிஸார் தன்னை நெருங்க விடாமல், அந்த இளைஞன் தன் கையில் உள்ள பையை சுழற்றி வீசிக் கொண்டிருந்தான். திடீரென அந்த இளைஞனுக்குப் பின்னால் சிற்றுண்டிக் கடையின் கதவைத் திறந்து கொண்டு வந்த வான் லோங் கொங் அந்த இளைஞனை மல்யுத்த வீரர்கள் மடக்கிப் பிடிப்பது போல் பிடித்துத் தரையில் சாய்க்க முயல, வான் லோங் கொங்குக்கு உதவ மூன்று பொலிஸார் ஓடி வந்து அந்த இளைஞனை அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். “நான் சிறுவயதில் இருந்தே டேக்வாண்டோ பயிற்சி செய்து வருகிறேன். நான் பயப்படவில்லை, ஆனால் மோசமான நிகழ்வொன்று நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று விரும்பினேன்." என்று கூறும் வான் லாங் ஹோங் 40 ஆண்டுகளாக ஜெர்மனியில் வசித்து வருகிறார். கடந்த ஐந்து வருடங்களாகத்தான் அவர் அந்த ஆசிய சிற்றுண்டி நிலையத்தில் சமையல் வேலை பார்த்து வருகிறார். கைது செய்யப்பட்ட சிரிய நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதான அந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். நடந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வூர்ஸ்பர்க் நகர குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அந்தச் சிற்றுண்டி நிறுவனத்ததுக்கு நல்ல மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பலர் அங்கு வந்து உணவருந்த விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். பத்திரிகைகள் இவர்தான் “உண்மையான ஹீரோ” என்று வான் லாங் ஹோங்கைப் பாராட்டி எழுதிக் கொண்டிருக்கின்றன. https://www.google.de/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=&ved=2ahUKEwiK1NDKrfX_AhUpQ_EDHTZ_CmMQvOMEKAB6BAgOEAE&url=https://www.focus.de/panorama/bedrohliche-szenen-im-video-imbiss-mitarbeiter-ueberwaeltigt-messer-angreifer-in-wuerzburg_id_198122934.html&usg=AOvVaw3_4Eq4cV9Uo6mfljZdc29G&opi=89978449
  11. யேர்மனியப் பத்திரிகைகளிலும் இந்த யானையைப் பற்றிய செய்தி வந்திருக்கிறது. அவர்கள் யானையின் பெயர் சாக் சூரின்(Sak Surin) என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நீண்ட இழுபறியான இராஜதந்திரப் பேச்சுவாலர்த்தைகளுக்குப் பிறகு சிறிலங்காவில் இருந்து, தவறாகப் பயன் படுத்திய யானை மீண்டும் தனது தாய் நாடான தாய்லாந்தைப் பத்திரமாக வந்தடைந்திருக்கிறது. அது இப்பொழுது ஒரு சிறப்பு நிலையத்தில் வைத்து பராமரிக்கப் படுகின்றது என ‘பாங்கொக் போஸ்ற்’ திங்கட்கிழமை செய்தி வெளியிட்டிருக்கிறது. மாதக் கணக்கான பயண ஆயத்தங்களுக்குப் பின்னர், தனது நீண்ட தந்தங்கள் மூலம் பெரிதும் அறியப்பட்ட 29 வயதான சாக் சூரின் ரஸ்ய போக்குவரத்து விமானம் மூலம் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து சியாங் மாய்க்கு வந்தது.. 2001இல் தாய்லாந்து அரசு சிறிலங்காவுக்கு அந்த யானையை அன்பளிப்பு செய்திருந்தது. முன்னர் சிலொன் என்று அழைக்கப்பட்ட அங்கே, பாகனால் அந்த யானை கடுமையாக வேலை வாங்கப் பட்டதுடன் தவறாகவும் பயன்படுத்தப்பட்டது.
  12. தண்ணீரில் முதலை இருந்தால் அதன் கால்கள் தண்ணீருக்குள்தான் இருக்கும். ஆனால் சூப்புக்குள் இருக்கும் போது முதலையின் கால் வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றது. சூப்புக்குள் முதலை எப்படி வந்தது என்று பார்க்கிறீர்களா? தைவானில் அது சாத்தியமாயிற்று. மூங்கில் தளிர், பன்றி இறைச்சி, பேபி சோளம், கரட், காடை முட்டை, கறுப்புக் காளான், எலிமிச்சை எல்லாவற்றுடனும் முதலைக்காலும் சேர்த்துத் தரப்படும் ஒரு சூப் தைவானில் இப்பொழுது கிடைக்கிறது. அருவருப்பாக இருக்கிறதா? அப்படி ஒன்றும் இல்லை. வாடிக்கையாளர்கள் விரும்பி உண்ணும் உணவாக அது இருக்கிறது என இந்தச் சூப்பை தயாரிக்கும் விடுதி உரிமையாளர் சொல்கிறார். “முதலை இறைச்சி கொஞ்சம் இறப்பர் தன்மை உடையது ஆனால் கோழி இறைச்சியை விட மென்மையானது. இதைத் தயாரிக்க நீண்ட நேரம் தேவைப்படுகிறது. முதலையின் காலை நன்றாகச் சுத்தம் செய்து பின்னர் அற்கஹோல், இஞ்சி, உள்ளி, வெங்காயத்தாள் ஆகியவற்றுடன் ஊறவைக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து இரண்டு மணித்தியாலங்கள் சமைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவிக்கிறார். முதலைக்கால் சூப்பைத் தயாரிக்க அதிக நேரம் எடுப்பதாலும் முதலைக்கால் கிடைப்பது அரிதாக இருப்பதாலும் தனது விடுதியில் நாளுக்கு இரண்டு சூப்புகள் மட்டுமே தயாரிக்க முடிகிறது என அவர் மேலும் சொல்கிறார். சூப்பின் விலை அதிகம் என்றில்லை. வெறும் 44 யூரோக்கள் மட்டுமே. தைவானுக்குப் போனால் GODZILLA RAMEN சூப் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். https://www.youtube.com/watch?v=_GZiREoAwqU
  13. நீதிபதி என்னவோ இங்கே சொல்லியிரிக்கிறார்
  14. இரண்டு பேரும் டிறேஷ்டனில் எந்தப் பக்கம் நின்றீர்களோ தெரியவில்லை. ஒருவேளை வீட்டில் உசாராகித் தடை போட்டு விட்டார்களோ தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று linkஐ அனுப்பி இருக்கிறேன். https://www.bild.de/video/clip/dresden-regional/nippel-alarm-in-dresden-oben-ohne-demo-durch-die-innenstadt-84533294.bild.html
  15. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம்தான் ரோமில் உள்ள கொலோசியம். கடந்த வெள்ளிக்கிழமை (30.06.2023) அங்கு வந்த ஒரு இளைஞன் ஒருவனுக்கு அந்தப் பழைய காலத்து பிரபலமான கட்டிடத்தைப் பார்த்ததும் ஒரு விசித்திரமான ஆசை வந்தது. பழமை வாய்ந்த அந்தக் கட்டிடத்தின் கல்லில் தனது பெயரையும் தனது காதலியின் பெயரையும் எழுத வேண்டும் என்பதே அவனது ஆசையாக இருந்தது. தன்னிடம் இருந்த திறப்பினால் பழமையான அந்தக் கட்டிடத்தின் ஒரு கல்லில் கிறுக்க ஆரம்பித்தான். இளைஞன் கல்லில் ஏதோ கிறுக்குவதை இன்னும் ஒரு சுற்றுலாப் பயணி கண்டு, அதை வீடியோவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். பதிவு செய்தவருக்கும் அவசரம் போல், அந்த வீடியோவை அவர் சில நிமிடங்களுக்குள் சமூகவலைத் தளங்களில் பரவ விட அது இத்தாலி கலாச்சார மந்திரி கெனாரோ சங்கியுலியானோ பார்வைக்கும் வந்து சேர்ந்தது. உலகப் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பாதுக்காக்கப்பட வேண்டிய ஒரு புராதன கட்டிடத்தில் கிறுக்குவது அநாகரிகமும் அவமதிப்பானதுமாகும் என அவர் tweeter இல் பதிய, பிரச்சினை கிளம்ப ஆரம்பித்து விட்டது. பழமை வாய்ந்த கொலோசியமில் கிறுக்கியதற்காக அந்த இளைஞனிடம் இருந்து பல ஆயிரம் யூரோக்கள் வரை தண்டனையாக அறவிடப்படலாம் அல்லது குறைந்தது ஐந்து வருடங்களாவது சிறைத்தண்டனை கிடைக்கலாம் என கருத்துகள் வர ஆரம்பித்திருக்கின்றன. எது எப்படியோ அந்த இளைஞன் எழுதிய “Ivan+Hayley” பெயர்கள் அங்கே கல்லில் இருக்கத்தான் போகின்றன. ஆனால் இந்த அமளியில் அவனின் காதலி Hayley அவனுடன் இருப்பாளா?
  16. கடலில் விழுந்த சிறுவனையும் அவனைக் காப்பாற்ற கடலில் குதித்த தாயையும் வெற்றிகரமாக மீட்டு அவர்களை சுவீடன் Karlskrona மருத்துவமனையில் NATOவில் பயிற்சி மேற்கொண்டிருந்த யேர்மனிய படைவீரர்கள் நேற்று சேர்த்திருந்தார்கள். ஆனால் மருத்துவமனையில், போலந்து நாட்டைச் சேர்ந்த தாயும்(38) மகனும்(7) இறந்து விட்டதாக சோகமான செய்தி இன்று (30.06.2023) மதியம் வந்திருக்கிறது.
  17. இரண்டு பேரும் இருக்கச் சந்தர்ப்பம் இல்லை.
  18. “அதிகமான மக்கள் குறிப்பாக மேற்குலக நாட்டைச் சேர்ந்தவர்கள், ஒரு முக்கியமான வேலையை தவறாகச் செய்து கொண்டு வருகிறார்கள்” இப்படி சமூக வலைத்தளத்தினூடாகச் சொல்லி அதற்கான விளக்கங்களையும் தந்திருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வைத்திய நிபுணர். பிரிட்டிஷ் சுகாதாரத் திணைக்களத்தில் சத்திரச் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றும் வைத்தியர் கரண் ராஜன், தரை மட்டத்தில் உள்ள கழிப்பறையில்தான் உண்மையில் அற்புதமான ஒரு குவியலைக் காண முடியும் என்றும் இந்த நிலை சீனா முதல் பாகிஸ்தான் வரையிலான ஆசிய நாடுகளில்தான் இருக்கிறது என்றும் கூறுகிறார். குந்தி இருப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம் , ஆனால் இது மிக வேகமாக மலத்தை வெளியேற்ற உகந்தது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட உதாரணமாக இது மூல நோய் ஏற்படும் அபாயத்தைக் கூடத் தடுக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மலம் கழிக்க இருக்கும் போது நீங்கள் இருக்கும் கோணங்களில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் வயிறு மற்றும் தொடைகளுக்கு இடையே உள்ள கோணம் முடிந்தளவுக்கு குறைந்தளவாக இருப்பது நல்லது. குந்தி இருக்கும் போது மலக்குடல் தசை தளர்வடைவதால் மலம் கழிப்பது எளிதாக்கப்படுகிறது. மேலும் மலம் கழிக்கும் நிலையில் முன்னோக்கி சாய்ந்து தொடை மற்றும் உடற்பகுதிக்கு இடையே உள்ள கோணத்தை குறைப்பது உகந்தது எனக் குறிப்பிடும் வைத்திய நிபுணர் கரண் ராஜன், இப்பொழுது நடைமுறையில் இருக்கும், இருக்கையில் இருந்த வண்ணம் மலம் கழிக்கும் முறையைக் கடைப்பிடிப்பவர்கள், தங்கள் இடுப்புக்கு மேலே முழங்கால் வரும் வகையில் உயரமானதொரு பொருளை வைத்து அதில் கால்களை வைத்தபடி அமர்ந்தால் மலம் கழிப்பது இலகுவாகும் என்றும் பரிந்துரைக்கிறார். https://www.instagram.com/reel/CrWTK6ooabG/?igshid=NTc4MTIwNjQ2YQ==
  19. வியாழக்கிழமை(29.06.2023) மதிய நேரம், சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் பால்ரிக் கடலில் Stena Spirit கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. கடல் நீர் 18 பாகை செல்சியஸாக இருந்தது. அந்தக் கப்பலில் இருந்த ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கப்பலில் இருந்து தவறிக் கடலில் விழுந்து விட்டான். இதை அவதானித்த அவனின் தாய் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த செக்கனே மகனை க் காப்பாற்றுவதற்காக தானும் கடலில் குதித்து விட்டாள். கடலில் இருந்த கடல் நீர் நடுவே இருவரும் காணாமல் போய்விட்டனர். அமெரிக்கக் கரையோரக் காவல் பணியில் இருந்த NATO தகவல் அறிந்து தங்கள் விமானங்கள் மூலம் தேடுதல்களை ஆரம்பித்தார்கள். Stena Sprit நிறுவனத்தின் மீட்புப் படகுகளும், உலங்கு வானூர்திகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் பட்டன. சிறிது நேரத்தின் பின்னர் சிறுவன் மீட்புப் படகினாலும் தாய் உலங்கு வானூர்தி மூலமாகவும் கண்டு பிடிக்கப் பட்டார்கள். ஆனால் இருவருமே மூர்ச்சையாகி சுயநினைவை இழந்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் அவசர மருத்துவ உதவி வழங்கப் பட்டு இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள்.
  20. அது நடந்தது அமெரிக்காவில் புளோரிடாவில் ஒரு நீதிமன்றத்தின் மையத்தில். அதுவும் வழக்கு நடந்து கொண்டிருந்த போது. Joseph Zieler குனிந்து தனது சட்டத்தரணியின் காதில் ஏதோ சொல்வதற்கு எத்தனித்தார். யாருமே எதிர்பார்க்கவில்லை அதுவும் நீதிமன்றில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று. கைகளில் விலங்கிடப்பட்டிருந்த நிலையிலும் Joseph Zieler தனது முழங்கையினால் சட்டத்தரணி Kevin Shirleyஇன் முகத்தின் நடுவில் தாக்கினார். சுற்றி நின்ற பாதுகாவலர்கள் Joseph Zielerஐ உடனடியாக மடக்கிப் பிடித்துக் கொண்டார்கள். சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கொடூரமான குற்றம் பரிந்தார் என 61 வயதான Joseph Zielerக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 1990ஆம் ஆண்டு 11 வயதான Robin Cornellஐயும் அவரது பராமரிப்பாளரான Lisa Story (32) ஐயும் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றத்துக்காகவே அவருக்கு அந்த மரண தண்டனை வழங்கப்பட்டது. 1990இல் குற்றம் நடந்திருந்த போதிலும் பொலிஸாரால் அப்போது குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. குற்றம் நடந்த இடத்தில் படுக்கையின் விரிப்பில் இருந்த விந்தணு மூலம் பெறப்பட்ட டீஎன்ஏ Joseph Zielerஇன் டீஎன்ஏ உடன் ஒத்துப்போக 2016இல் அவர் கைது செய்யப்பட்டார். இரட்டைக் கொலையை தான் செய்யவில்லை என்றும் அப்போது தான் வேறு மாநிலத்தில் இருந்ததாகவும் அவர் வைத்த வாதம் பொய்யென்று நீதிமன்றால் நிரூபிக்கப் பட்டு அவர் குற்றவாளி எனக் கண்டு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டது. 33 வருடங்களுக்குப் பின்னர் நீதி கிடைத்திருக்கிறது என நீதி மன்றத்தில் Robin Cornellயின் தாயும் உறவினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். https://www.youtube.com/watch?v=8U8a28DCaCk ‘குசா’ என்னும் சட்டத்தரணி குமாரசாமி போன்றவர்கள் தங்கள் கட்சிக்கார்ர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இதை இணைத்திருக்கிறேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.